மகளிர் உரிமைத் தொகையை என்ன செய்யலாம்?
அண்ணாகண்ணன்
மகளிர் உரிமைத் தொகையாக, 1.31 கோடிப் பேருக்குத் தலா 5 ஆயிரம் என்ற அளவில் ரூ.6550 கோடியைத் தமிழக அரசு விடுவித்துள்ளது. இது பணப் புழக்கத்தை அதிகரிக்கும் என நம்புகிறார்கள். இதே போன்று, மாதந்தோறும் தலா ஆயிரம் ரூபாய் என்ற அளவில் ரூ.1310 கோடியை அரசு விடுவித்து வருகிறது.
பெண்கள் அன்றாடச் செலவுகளுக்கு இதைச் செலவிடாமல், வேறு வழிகளில் செலவிட்டால் அவர்கள் அதிக லாபம் ஈட்ட வாய்ப்பு உண்டு. இந்தப் பணத்தைக் கொண்டு என்ன செய்யலாம்? எப்படிச் செலவிடலாம்? இதோ என் யோசனைகள்.
தமிழ்நாடு மகளிர் கழகம் என்ற அமைப்பினை உருவாக்கி, இந்த 1.31 கோடிப் பேரும் அதில் சேர வேண்டும். இவர்கள் அனைவரும் தங்களுக்குள் தலைவர், செயலர், பொருளாளர் உள்ளிட்டோரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மகளிர் அனைவரின் பெயர், முகவரி, கல்வித் தகுதி, தொழில் உள்ளிட்ட விவரங்களைத் தொகுக்க வேண்டும். இவர்களைத் தொழில் அடிப்படையில், ஊர் அடிப்படையில், கல்வித் தகுதி / திறன் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு குழுவையும் ஒருவர் வழிநடத்த வேண்டும்.
இந்தக் குழுக்கள் மாதந்தோறும் சந்தித்துத் தங்கள் தேவைகள், சிக்கல்கள், சவால்கள் ஆகியவற்றைப் பற்றிக் கலந்துரையாட வேண்டும். இந்தச் சிக்கல்களுக்கு அந்தக் குழுவிலேயே தீர்வு கிடைத்தால் நல்லது. கிடைக்காவிட்டால், இதர குழுக்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டும். ஒருவேளை, தங்கள் அமைப்பிற்குள் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், வெளியிலிருந்து ஆலோசனைகளைப் பெறலாம்.
இந்த அமைப்பு, தொழில்முனைவுப் பிரிவு ஒன்றையும் உருவாக்க வேண்டும். அதை ஆதரிக்க, நிதி முதலீட்டுப் பிரிவையும் தொடங்க வேண்டும். தொழில்முனைவில் ஆர்வம் கொண்ட பெண்கள் அதில் சேர வேண்டும். தாங்கள் எந்தத் தொழில் தொடங்க விரும்புகிறோம், அதில் தங்களுக்கு என்ன திறமை இருக்கிறது, எவ்வளவு முதலீடு தேவை, எப்போது திருப்பிச் செலுத்த முடியும் என எடுத்துரைக்க வேண்டும் (Investment Pitch).
நிதி முதலீட்டுப் பிரிவில், வாய்ப்புள்ள, ஆர்வமுள்ள பெண்கள், தங்கள் சேமிப்பையும் உரிமைத் தொகையையும் முதலீடு செய்ய வேண்டும். இவர்களின் பிரதிநிதிகள், உரிய தொழில்முனைவுத் திட்டங்களில் ஆராய்ந்து முதலீடு செய்வார்கள். இதன் மூலம், அந்தத் தொழில்களில் இவர்கள் முதலீட்டாளர்களாக, பங்குதாரர்களாக மாறுவார்கள். இது ஒரே நேரத்தில் தொழில்முனைவோர், முதலீட்டாளர் ஆகிய இருவருக்கும் பயன் அளிக்கும்.
இதற்குத் துணையாக, வேலை தேடும் பெண்களுக்காகச் செயல் மகளிர் என்ற அமைப்பினை உருவாக்க வேண்டும். தொழில்முனைவோர் தங்களுக்குத் தேவையான பணியாளர்களை, விநியோகஸ்தர்களை இந்தச் செயல் மகளிர் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கலாம்.
தொழில்முனைவோர் உருவாக்கும் பொருள்களை, சேவைகளை இதர மகளிருக்குத் தள்ளுபடி விலையில் வழங்கலாம். இது விற்பனை வலையமைப்பாக உருவெடுக்கும். பொருள்களை உருவாக்குவது, விற்பது, விநியோகிப்பது, கொண்டு சேர்ப்பது ஆகிய அனைத்திலும் பெண்களை ஈடுபடுத்தலாம். இதன் மூலம் இந்த நிதி, பல்கிப் பெருகும். முதலீட்டாளர் அனைவருக்கும் லாபம் கிடைக்கும். தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியும் பெருகும்.
எதிர்காலத்தில் இந்தப் பெண்கள் தங்களுக்குள் கூடிப் பேசி, உள்ளாட்சித் தேர்தல் முதல் பாராளுமன்றத் தேர்தல் வரை போட்டியிடவும் செய்யலாம். தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து, இவற்றை நிறைவேற்றினால் மட்டுமே வாக்களிப்போம் என வலியுறுத்தலாம்.
தங்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்த நினைக்கும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக மாற்றுச் சக்தியாகப் பெண்கள் உருவெடுக்கலாம். அதிகாரத்தை வென்றெடுக்கலாம். தங்களுக்குத் தேவையான தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், கல்வி, அரசியல் உள்ளிட்ட அனைத்தையும் தாங்களே தீர்மானிக்கலாம். அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், தமிழ்நாட்டில் ஆட்சியையே பிடிக்கலாம்.
தமிழ்நாட்டு மகளிர், இதைக் குறித்துச் சிந்திக்க வேண்டுகிறேன்.
