வெற்றிலையின் பாரம்பரியம்

ஆதிகாலந்தொட்டு வெற்றிலை, பாக்கு தமிழர் பண்பாட்டோடு இணைந்ததொரு அத்தியாவசியப் பொருளாக இருந்துவருகிறது. தெய்வ வழிபாடு, திருமணம், காதுகுத்து, திருவிழா, பண்டிகை என அனைத்து நிகழ்ச்சிகளிலும் மங்கலப் பொருளாக முக்கியமான இடத்தைப் பெறுவது வெற்றிலை, பாக்கு. தமிழர்தம் அக வாழ்வில் மகிழ்வுக்குரிய தருணங்களில் அன்பை வெளிப்படுத்தும் குறியீடாக – ஆரோக்கியத்தைப் பேணும் அருமருந்தாக அன்றாட வாழ்வில் அற்புதத்தை உண்டாக்கும் பச்சிலை, வெற்றிலை. இத்தனைக்கும் இந்த வெற்றிலையின் பிறந்தகம் நம் இந்தியா அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றாசிரியர் பி.டி.சீனிவாச ஐயங்கார், “வெற்றிலை இந்தியாவின் பூர்வீக பயிர்வகை கிடையாது. இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று. இது மலேயா நாட்டிலிருந்து தமிழகம் வந்திருக்கலாம்’ என்று கூறியுள்ளது கருத்தில் கொள்ளத்தக்கது. நீலகண்ட சாஸ்திரியார் , “வெற்றிலை, பாக்குப் போடும் பழக்கம் தமிழர்களிடையே சங்க காலத்துக்குப் பின் தோன்றியதாக இருக்கலாம்” என்று கூறியுள்ளார் (தென்னிந்திய வரலாறு, பக்.213). ஆனால், சங்க இலக்கியங்களில் வெற்றிலை, பாக்கு பற்றிய குறிப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன.
“நீடு கொடி இலையினர் கோடு சுடு நூற்றினர்” (401) என்கிறது பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக் காஞ்சி. அதாவது வெற்றிலை சுண்ணாம்பு வணிகர்கள் மதுரை நகரில் இருந்துள்ளனர் என்கிறது.
“எண்பேராயம்” என்பது பண்டைய தமிழகத்தில் அரசர்களுடன் இருக்கும் எண் வகை நபர்களைக் குறிக்கிறது. எண்பேராயம் என்பதனைத் தொல்காப்பியம் எட்டுவகை நுதலிய அவையம் எனக் குறிப்பிடுகிறது. இது வாகைத் திணையின் முப்பது துறைகளில் ஒன்று. தமிழ்நாட்டு மன்னர்கள் நல்லாட்சி புரிய உதவியாக இருந்தவர்களை ஐம்பெருங்குழு என்றும், எண்பேராயம் என்றும் பகுத்துக் காட்டுவது வழக்கம். மதுரைக்காஞ்சி என்னும் நூல் நாற்பெருங்குழு என்று ஒன்றினைக் குறிப்பிடுகிறது.
.இந்தக் குழுவில் வெற்றிலை, பாக்கு வைத்திருக்கும் ஒருவரும் அடங்குவர். “எண்பேராயம்’ என்பதற்கு விளக்கம் எழுதிய சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் “சந்து பூக்கச் சாடை பாக்கிலை கஞ்சுக நெய் ஆய்ந்த விவரெண் மராயத்தார்” (இந்திர விழவூரெடுத்த காதை-157) என்று எண்வகை நபர்களைக் குறிப்பிடுகிறார். இதில், “பாக்கிலை’ வைத்திருப்போரும் ஒருவர். இவரை “அடைப்பைக்காரன்’ என்று குறிப்பிடுவர். அந்த வகையில் வெற்றிலை, பாக்கு பழந்தமிழர் காலத்திலேயே பழக்கத்தில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.
மதுரைக்கு வரும் கோவலனும் கண்ணகியும் புறஞ்சேரியில் மாதரி என்னும் இடையர் குலப் பெண்ணின் வீட்டில் தங்கியிருந்தனர். அன்று அந்த இரவில் உணவு உண்டபின் அன்புக் கணவன் கோவலனுக்கு அருமை மனைவி, கண்ணகி வெற்றிலைப் பாக்கு மடித்துக் கொடுக்கிறாள். விதிவசத்தால் அவர்கள் இருவரும் இணைந்து இன்பமாக இருந்த இறுதி நாள் அதுதான். இதனை இளங்கோவடிகள்,
“உண்டு இனி திருந்த உயர்பே ராளற்
அம்மென் திரைலோடு அடைக்காயீத்த
மையீரோதியை வருகெனப் பொருந்தி”
(கொலைக்களக்காதை-54-56)
வெற்றிலைச் சுருள்: “அம் மென் திரையலொடு அடைக் காய் ஈத்த மை ஈர் ஓதியை” (சில:16:55-6). 2. வெற்றிலைக் கொடி: “நறிய தாம்பூல வல்லி ….. இலைக் கொடிப் பேர் திரையல் மெல் இலையும் ஆகும்” (நிக.சூ:4:37).
“பாசிலை சுருட்டி மைந்தன் கொடுகிய” (பா-1987). – சீவக சிந்தாமணி
“அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும் என்று அழுங்கும்” (காட்சிப்படலம்-15) – கம்ப இராமாயணம்
“பெருக்கத் தின்றீர், தாம்பூலம் பிழைக்கச் செய்தீர்…(585) – கலிங்கத்துப்பரணி
“உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்” என்கிறார் நம்மாழ்வார் திருவாய்மொழியில் (6-7),
தமிழ் மக்கள் வாழ்வில் வெற்றிலைக்குச் சிறப்பான இடமுண்டு. பூக்கள், வாழைப் பழம், தேங்காய், சந்தனம், கரும்பு, தென்னங்கீற்று, தென்னம்பாளை, இளநீர்க்குலை, மஞ்சள் போன்றவை எவ்வாறு நன்மங்கலப் பொருட்களாகப் பார்க்கப்படுகின்றனவோ அவ்வாறே வெற்றிலையும் ஒரு மங்கலச் சின்னமாக கருதப்படுகிறது. முக்கியமான பல்வேறு சடங்குகளுக்கு “வெற்றிலை மாற்றும்” வழமை தொன்றுதொட்டு வருவதும் கண்கூடு. திருமணச் சடங்குகளில் தாம்பூலம் என்பது பல வகையில் முக்கியத்துவம் பெறக்கூடியது.
“இந்தியாவுக்கு ஐரோப்பிவிலிருந்து வருவதற்குக் கடல்வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டையில் முதன்முறையாக வந்திறங்கியதும், கடற்கரையில் கண்ட காட்சிகளைத் தம் பயணக் குறிப்புகளாக எழுதி வைத்திருக்கிறார். இம்மண்ணில் வாழும் மக்கள் எந்நேரமும் ஒரு பச்சை இலையை வாயிலிட்டு மென்றபடியே இருப்பதாக எழுதியிருக்கிறார். வாஸ்கோடகாமா கூறிய அந்தப் பச்சை இலை வெற்றிலைதான். வெற்றிலை போடும் பழக்கம் நம்மிடையே தொன்று தொட்டே வழக்கத்தில் இருந்திருக்கிறது.
வெற்றிலை என்பது கொடியிலை ஆகும். அந்தக் கொடியில் பூவோ காயோ பழமோ… எதுவுமே வளராது. வெறும் இலைகளாகவே இருக்கும். அதனால் இலையும் வெற்றிலை ஆனது. தாம்பூலம், திரையல், அடகு முதலான வேறு பெயர்களும் வெற்றிலைக்கு உள்ளன. உண்ணத் தகுந்த கீரைகளும் இலைகளும் அடகு எனப்படுவதால் வெற்றிலைக்கும் அப்பெயர் உண்டு.
ஆரோக்கிய குறிப்புகளிலும் தொன்றுதொட்டு வெற்றிலை பயன்பாடு இருந்து வருவதை பாட்டி வைத்திய முறைகளிலிருந்து அறிய முடிகின்றது. கொடிய தேளின் நஞ்சையும் முறிக்க வல்லது வெற்றிலை என்ற வழமையும் இருந்து வருகிறது.
இரண்டு வெற்றிலையோடு ஒன்பது மிளகையும் சேர்த்து, ஒன்றாக மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி, தேங்காய்த் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேளின் விடம் உடனே முறியும் என்கிறார்கள்.
சர்க்கரை நோயினால் அவதிப்படுபவர்கள், இரண்டு வெற்றிலையுடன், வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க விட்டு, தண்ணீரின் அளவு கால் லிட்டர் ஆகக் குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து மூன்று வேளை உணவுக்கு முன்பு அருந்தினால் குணமாவதாகக் கூறப்படுகிறது. குறைந்தபட்சம் சக்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள்ளாகவாவது இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்படுமாம்.
உணவுக்குப்பின் வெற்றிலையை அளவாக உபயோகிக்க உண்ட உணவு செரிமாணமாகும் என்பது பரம்பரையாக வழக்கத்தில் உள்ளது.
சப்பானியர்களின் பாரம்பரிய விருந்துகளில் தேநீர் திருவிழா என்ற கொண்டாட்டம் உறுதியாக இருக்கும். அதேபோன்று தமிழர்களின் திருமணம், சடங்குகள், சம்பிரதாயங்களுக்குப் பிறகான விருந்தில், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இவைகளைச் சேர்த்து, உறவினர்களுடன் கூடியிருந்து, அமர்ந்து இன்னுரையுடன், கேலி, கிண்டல், நக்கல்,நையாண்டி என்ற ஆனந்தமாக சூழலுடன் அவைகளை இரசனையோடு மென்று உண்ணுவதும் ஒரு கலையாகக் காட்சியளிக்கும். தற்காலங்களில் வெற்றிலையுடன் வாசனைப் பாக்குகள், உலர்ந்த பழங்கள் என சிலவற்றை சேர்த்து ‘பீடா’ என்ற பெயரில் நவீனமாக்கிக் கொண்டாலும் இன்றும் வெற்றிலை போடும் வழமை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
வெற்றிலை போடுவதும், அதனை மடித்துக் கொடுப்பதிலும் கூட ஒரு கலையுணர்வையும், அறிவியல், ஆரோக்கிய ஞானத்தையும் ஊட்டுபவன் தமிழன் என்பதை உணர முடிகின்றது. பெரிய விருந்தோ அல்லது இல்லத்தில் அமைதியாக அமர்ந்து அருந்திய பின்போ, மேலை நாட்டவர்களுக்கு ‘டெசர்ட்’ என்று சொல்லக்கூடிய இனிப்பு வகைகள் அல்லது பனிக்கூழ் உண்ணும் வழமை இருந்து வருகிறது. ஆனால் நம் தமிழர்கள் பாரம்பரியமாக தாம்பூலம் வழங்கும் வழமையேக் கொண்டிருக்கிறார்கள்.
வெற்றிலையின் பின்புறம் இருக்கும், சற்றே புடைத்த நரம்புகளை நீக்கிவிட்டு, அதில் நல்ல சுத்தமான சுண்ணாம்பை குறிப்பிட்ட அளவில் சமமாகத் தடவ வேண்டும். வெற்றிலை, பாக்குடன் சுண்ணாம்பு அளவாகச் சேரும்போது அதுவே உண்ணத்தக்கதாக மாறிவிடுகிறது; உடலுக்குச் சுண்ணாம்பு சத்தும் தேவையானதொன்று. இதனால் பற்கள் வலுவடைகிறது என்ற நம்பிக்கையும் உள்ளது.
ஒரிசாவில் சில பகுதிகளில் பெண்கள் குழந்தைகள் பிறக்காமல் தடுக்கச் சிறிது வெற்றிலை வேரையும், மிளகையும் சம அளவு வைத்து அரைத்து 40 நாட்கள் சாப்பிட்டு வருகிறார்கள். இது ஒரு சிறந்த கருத்தடை மருந்தாகச் செயல்படுவதாக நம்புகிறார்கள்.
வெற்றிலை வாயிலிட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். இனிமையும் கூடும் என்ற நம்பிக்கையும் இருந்து வருகின்றது. எனவேதான் இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் எண்ணத் தோன்றுகின்றது.
