மாண்டூக்ய உபநிஷத்து – எளிய விளக்கம் – 3
ஒரு அரிசோனன்
… ஆழ்உறக்கநிலையில் அப்பரம்பொருளுடன் ஒன்றிவிடுகிறோம்.
அப்பொழுது நமக்கு எதுவும் தேவைப்படுவது இல்லை. அளவிட இயலாத ஆனந்த நிலையில் இருக்கிறோம்.
அந்த ஆழ்ந்த உறக்க நிலையில் கிடைக்கும் ஆனந்தத்தை ஆயிரம்கோடி பொற்காசுகளாலும் அடைய இயலாது. உறக்கம் வராமல் விழித்திருக்க நம்மால் இயலுமா? ஆயிரம் கோடி பொற்காசுகள் தருகிறேன், ஒரு ஆண்டு உறங்காமல் இரு என்றால் இருக்க இயலுமா? அந்த ஆழ் உறக்க நிலையில் நாம் இறைவனுடன் ஒன்றுகிறோம். இறைவனாகவே ஆகிவிடுகிறோம்…
— 7
நாந்த:ப்ரக்ஞம் ந ப3ஹிஷ்ப்ரக்ஞம் நோப4யத:ப்ரக்ஞம் ந ப்ரக்ஞானக4னம் ந ப்ரக்ஞம் நாப்ரக்ஞம் |
அத்3ருஷ்டமவ்யவஹார்யமக்ராஹ்யமலக்ஷணமசிந்த்யமவ்யபதே3ஸ்யமேகாத்மப்ரத்யயஸாரம் பிரபன்ஜோபஸ’மம் ஸா’ந்தம் சிவமத்3வைதம் சதுர்த்த2ம் மந்யந்தே ஸ ஆத்மா ஸ விக்ஞேய: ||
— 7
உள்ளறிவு உள்ளவனும் அல்ல, வெளியறிவு உள்ளவனும் அல்ல, இடைப்பட்ட அறிவுள்ளவும் அல்ல, அறிவுக்குவியலானவனும் அல்ல, விழிப்புணர்வுடையவனும் அல்ல, விழிப்புணர்வு இல்லாதவனுமல்லன்.
காணமுடியாதவன், செயல்களுக்கு அடங்காதவன், பிடிக்கமுடியாதவன், ஊகித்தறியமுடியாதவன், நினைத்துப்பார்க்க இயலாதவன், விளக்கமுடியாதவன், ஒரே ஆத்ம நுண்ணறிவின் உட்பொருளானவன், அண்டமே அடங்கும் தன்மையன், அமைதியானவன், மங்களமானவன், இருமையற்றவன், நான்காவதாகக் கருதப் படுபவன், அவனே ஆத்மன், அவனே அறியத் தகுந்தவன்.
–– 7
பதவுரை: சதுர்த்த2ம் – நான்காம் பகுதியான [துரீயன்]; நாந்த:ப்ரக்ஞம் – உள்ளுணர்வு அற்றவன்; ந ப3ஹிஷ்ப்ரக்ஞம் – வெளி உணர்வு அற்றவன்; நோப4யத:ப்ரக்ஞம் – இடைப்பட்ட நிலை உணர்வுகளும் இல்லாதவன்; ந ப்ரக்ஞானக4னம் – அறிவுக் குவியில்களும் அல்லன்; ந ப்ரக்ஞம் – அறிபவனு அல்லன்; ந அப்ரக்ஞம் – அறியாதவனும் அல்லன்.
அத்3ருஷ்டம் – காண முடியாதவன்; அவ்யவஹார்யம் – வெளிச் செயல்களால் [அறிபவன்] அல்லன்; அக்ராஹ்யம் – பிடியில் அடங்காத[வண்ணம் நழுவிச் செல்ப]வன்; அலக்ஷணம் – ஊகித்து அறியமுடியாத[அளவுக்கு உயர்ந்திருப்ப]வன்; அசிந்த்யம் – நினைத்துப்பார்க்க முடியாதவன்; அவ்யபதே3ஸ்யம் – [சொற்களால்] விளக்க முடியாதவன்; ஏக ஆத்ம ப்ரத்யய ஸாரம் – ஒரே ஆத்ம நுண்ணறிவின் உட்பொருளானவன் பிரபஞ்ச உபஸ’மம் – அண்டத்தையே [தன்னுள் அடக்கி] ஒடுக்குபவன்; ஸா’ந்தம் – அமைதியே உருவானவன்; சிவம் – மங்களமானவன்; அத்3வைதம் – இருமை நிலையற்றவன் [என்று]; ஸ ஆத்மா – அந்த ஆத்மன்; மந்யந்தே – கருதப்படுகிறான்; ஸ விக்ஞேய: – அவன் அறியத் தகுந்தவன்.
விளக்கம்: என்ன இப்படிக் குழப்பம் செய்யப்படுகிறது? முன்னால் ஆத்மனின் மூன்று பகுதிகள் என்று சொல்லி — வெளி உணர்வு, உள்ளுணர்வு, எல்லாம் அறிந்தவன் என்று சொல்லிக்கொண்டே வந்து – இப்பொழுது அதுவுமில்லை, இதுவுமில்லை, அறிவாளி, அதுவும் அல்ல, நினைத்துப் பார்க்க இயலாதவன் காணமுடியாதவன் என்றும் சொல்லி — முன்சொல்லிய மூன்று பகுதிகளும் இல்லாத பகுதியே நான்காம் பகுதி என்று குழப்பினால் — நாங்கள் என்ன, எப்படிப் புரிந்து கொள்வது என்பதுதான் அனைவரின் மனதிலும் எழும்பும் கேள்வி. அது நியாயமானதுகூட.
ஆதி சங்கரரும் இதே கேள்வியை எழுப்பியே விளக்கத்தையும் அளிக்கிறார் அதை என் புரிதலின்படி பகர்கிறேன்…
… இருட்டான இடம். நாம் நடந்து செல்லும்போது எதோ ஒன்று சுருண்டு படுத்திருக்கிறது. இது இலேசாகவும் ஆடுகிறது. உடனே நாம் அதிர்ந்து போகிறோம். இவ்வளவு பெரிய பாம்பு நமது வழியில் சுருண்டு படுத்துக்கிடப்பதோடு மட்டுமல்லாது தலையையும் இளசாக ஆட்டுகிறதே!
நா உலர்கிறது, மதி மயங்குகிறது, அச்சம் நம்மைச் சூழ்கிறது. “பாம்பு! பாம்பு!” என்று பதறுகிறோம்.
நம் அருகில் உள்ள ஒருவர், “இல்லை, இல்லை! அது ஒரு மாலை! நீங்கள் தலை என்று நினைப்பது மாலையின் கீழ்ப்பகுதியில் உள்ள பூப்பந்து!” என்கிறார்.
இதற்கிடையில், “பாம்பா! எங்கு?” என்றபடி வருகிறாள் ஒரு மூதாட்டி. அவள் கையில் ஒரு விளக்கு இருக்கிறது.
“பா.. பா.. பாட்டி! அதோ!” என்று பாம்பு இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டுகிறோம்.
இலேசாக வீசும் காற்றில் விளக்கின் சுடர் அணைந்து போகாதவாறு பிடித்துக்கொண்டிருந்த கையை எடுக்கிறாள் மூதாட்டி. அங்கே இருப்பது..
… நம்மையும் அறியாமல் நம் உதடுகள் பிரிந்து சிரிப்பு வெலிவருகிறது. அங்கு இருப்பது பாம்பல்ல! சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் கயிறு. பாம்பின் தலையென்று நாம் நினைத்து கயிற்றில் போடப்பட்டிருந்த முடிச்சு. முடிச்சு உள்ள அந்த நுனி காற்றில் ஆடவே, அதை பாம்பு தலையை ஆட்டுகிறது என்று தவறாக எடையிட்டிருக்கிறோம், நாம்!
ஆக, மூதாட்டியின் விளக்கு ஒளி இல்லாவிட்டால், அது பாம்பாகத்தானே நம் கண்ணில் பட்டுக்கொண்டிருக்கும்!
கயிற்றைப் பாம்பாக நினைத்தது நமது வெளி அறிவு. மூதாட்டியின் விளக்கின் ஒளி என்ற ஞானம் நம் மன இருட்டை அகற்றியவுடன் உண்மை தெரிகிறது.
எனவே, பாம்பும், மாலையும் கயிறும் ஒன்றுதான். அதைப் பாம்பாகவும், மாலையாகவும், கயிறாகவும் பார்ப்பது நமது பார்வையின் கோணங்களே! இன்னும் கூர்ந்து கவனித்தால், அங்கு சிதறிக்கிடக்கும் தேங்காய் நார்களால் பின்னப்பட்டதே அந்தக் கயிறு என்றும் அறிவோம். அப்படியானால் தேங்காய் நாரும், கயிறும் ஒரே பொருளின் இரண்டு தோற்றங்கள்தானே!
அதைத்தான் வேதமும், “தத்துவம் அஸி! அதாவது, அது நீயாக இருக்கிறாய்!” என்று எடுத்துரைக்கிறது.
துரீயன் நான்காம் பகுதியில் சொல்லப்படும்படி இல்லாவிட்டால், வேதங்கள் சொல்வதெல்லாம் [தத்வமஸ்ஸி] என்பது பொருளற்றதாக அல்லவா ஆகிவிடும்!
கயிறு பாம்பாகவும், முடிச்சு தலையாகவும், காற்றில் அது ஆடுவது பாம்பின் அசைவுபோலத் தோற்றமளிப்பதும், அதுவே இன்னொருவர் கண்ணுக்கு மாலையாகத் தோன்றுவதும் அவரவர் அறிவுக்குத் தகுந்த மயக்கம்தானே!
அதுபோலத்தான் ஆத்மனும் விழிப்பு, கனவு, ஆழ்உறக்க நிலைக்குத் தகுந்தவாறு தோற்றத்தைத் தருகிறான்.
பாட்டியின் விளக்கு ஒளி இருவிதப்பட்ட தோற்றங்கள் [பாம்பு, மாலை] தானாக அழிந்தொழிந்துபோவது போல, துரீய நிலையில் ஆத்மனின் மற்ற மூன்று தோற்றங்களும் தானாகவே மறைந்துபோகின்றன. துரீய நிலையில் [அந்நிலையை அடைந்தவுடன்] வேறெந்த அறிவோ, முயற்சியோ தேவைப்படுவதில்லை — ஏனெனில் அனைத்தும் தெளிவாகி விடுகிறது.
இத் துரீய நிலை பற்றி அடுத்துக் காண்போம்…
… இருப்பினும் ஐயம் எழுகிறது.
“பாம்பு, மாலை, கயிறு, தேங்காய் நார் எல்லாம் ஒன்றே என்று சொல்லிவிடலாம்; ஆயினும் ஆழ்ந்த உறக்கத்தில் நாம் அறிந்த எல்லாம் மறைந்து போகின்றனவே! அப்படியென்றால் ஆழ் உறக்கநிலைக்கான ப்ராக்ஞனைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே! ஆழ்உறக்கநிலையை யார் அறிவார்?” என்ற கேள்வி வைக்கப்படுகிறது.
இல்லவே இல்லை என்கிறார் ஆதி சங்கரர். எப்படி? ஒரு சிறிய உதாரணத்துடன் விளக்குவோம்.
தொலைகாட்சி அலறிக்கொண்டிருக்கிறது. குழந்தைகள் விளையாட்டில் ஒருவரோடொருவர் அடித்துக்கொண்டு உரக்க ஒலி எழுப்புகிறார்கள். வீட்டில் இருப்பவர்கள் உரக்கப் பேசிக்கொண்டிறிருக்கிறார்கள்.
இதை எவற்றையும் பொருட்படுத்தாது கனவற்ற ஆழ்உறக்க நிலையில் ஒருவர் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்கிறார். இப்படி பேரிரைச்சலில் சோஃபாவில் உறங்குகிறாரே, படுக்கையில் படுத்து நிம்மதியாக உறங்கட்டும் என்று கரிசனத்துடன் எழுப்புகிறாள் அவரது மனைவி.
“இந்த இரைச்சலில் எப்படி உங்களால் நிம்மதியாகத் தூங்க முடிகிறது? படுக்கையில் போய்ப் படுங்கள்!” என்று அன்புடன் கடிந்துகொள்கிறாள்.
“நான் அசந்து, ஆனந்தமாகத் தூங்கிவிட்டேன். இகலோகமோ, பரலோகமோ, எதுவுமே எனக்குத் தெரியவில்லை.” என்று பதில் வருகிறது.
தன்னுணர்வு இல்லாவிட்டால் — தன்னைச் சுற்றி நடப்பது எதுவும் தெரியாமலும், உறங்கும்போது தான் என்ற உணர்வு இல்லாமல் இருந்தும் — ஆழ்ந்து தூங்கினோம் என்று எப்படி உணரமுடியும்? அந்தத் தன்னுணர்வு – ஆத்மனின் மூன்றாம் பகுதியான ப்ராக்ஞன்தானே – அந்த “ஆழ்ந்து உறங்கினேன்” என்ற முடிவை, ஒரு சாட்சியாக இருந்து கூறமுடியும்!
ஆனால் நான்காம் பகுதியான துரியனை அப்படி உணர முடியாது. அங்கு நான் என்ற உணர்வே இல்லை. அதனால்தான் அவர் காண முடியாதவன், எண்ணங்களால், நாம் வெளியுலகில் கண்டு அறிந்து, செயல்களால் உணர்ந்து அறியமுடியாதவன் [அவ்வியவஹார்யம்], வாதங்கள் மூலமோ, கல்வி மூலமோ அறிய இயலாதவன். அதே ஆத்மன்தான் விழித்திருக்கும்போது வைச்வாநரனாகவும், கனவுலகில் ஒளிபொருந்திய தைஜஸனாகவும், ஆழ் உறக்கத்தில் எண்ணக்குவியலான, அனைத்தையும் அறிந்த ப்ராக்ஞனாகவும், எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட துரீயனாக [ஒரே பரம்பொருளின் – பரமாத்வாவின் — பிரம்மனின் {பிரம்மா அல்ல} — பொழிப்பாக, கருத்துரையாக, சாரமாக இருக்கிறான் [ஏக ஆத்ம ப்ரத்யய ஸாரம்]. இது மறை கூறும், “அஹம் ஏவ ப்ரஹ்மன்; ப்ரஹ்ம ப்ராஹ்மைவ அஹமஸ்மி [நானே பரம்பொருள்; பரம்பொருளுக்கும் பரம்பொருளாக நான் இருக்கிறேன்]” கூற்றை உறுதி செய்கிறது.
எல்லாவிதமான பண்புகளும், குணங்களும், கற்பிதங்களும், ஆத்மனின் மூன்று நிலைகளும், அவற்றின் “உணர்வுகளின் நிலைப்பாடுகளும்” துரீய நிலையில் மறுக்கப்படுவதால், துரீயனிடம் புலன்களால் உணரத்தக்க அனைத்தும் முடிவுறுகின்றன. அதைத்தான் நிர்குணப் பிரம்மம் என்று ஆன்றோர் சொல்கிறார்கள்.
இந்நிலை அமைதியானது [சாந்தம்], இந்நிலை மங்கலமானது [சிவம்],
இந்நிலை உண்டு, இல்லை, இடைப்பட்டது என்ற நிலைகள் எதுவும் இல்லாததால் “இரண்டற்றது [அத்துவைதம்] என்று பகரப்படுகிறது.
அதனாலேயே இந்நிலை நான்காம் நிலை [துரீய, சதுர்த்த] என்று அறியப்படுகிறது. இந்நிலை மற்ற மூன்று தோற்ற {தோற்றம் அளிக்கும்] நிலைகளிலிருந்து தனித்தன்மை வாய்ந்தது. இதுவே ஆத்மன் [பரமாத்மா]!
இப்படிப்பட்ட ஆத்மனை, பரம்பொருளை, பிரம்மனை அறியவேண்டும் என்று நிறைவு செய்கிறது.
அடுத்து என்ன?
— 8
சேஅயமாத்மாஅத்4யக்ஷரமோங்காரோ அதி4மாத்ரம் பாதா3 மாத்ரா மாத்ராஸ்’ச பாதா3 அகார உகாரோ மகார இதி ||
— 8
அந்த ஆத்மனே ஒரு அழிவற்றதே [சொல்லே] ஓங்காரம், அதன் மூலப்பொருளே [தனித்தனி எழுத்துக்களே] கால்கள்; அகாரம் உகாரம் மகாரமேன்னும் எழுத்துக்களே கால்கள்.
–8
பதவுரை: அயம் – இந்த[இப்படிப்பட்ட]; ஸ: – அவன்; ஆத்மா – ஆத்மன்; அத்4யக்ஷரம் – மேற்சொன்ன அழிவற்ற [சொல்லான]; அதி4மாத்ரம் – மேற்சொன்ன எழுத்துக்களான; ஓங்காரம் – ஓம் என்னும் ஒலி; மாத்ரா பாதா3: – எழுத்துக்களே பாதங்கள்; அகார உகார மகார இதி – அ, உ, ம் என்னும் ஒலிகளான ; மாத்ராஸ்’ச – எழுத்துக்களும் ; பாதா:3 – கால்கள்.
விளக்கம்: இப்பொழுது ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்கும் ஆத்மனுக்கும் உள்ள தொடர்பு சுட்டப்படுகிறது. நான்கு பகுதிகளாகத் தோன்றும், பிரிக்கவே முடியாத {அத்துவைதமான], ஆத்மாவே ஓங்காரம், அது அ, உ, ம என்ற மூன்று எழுத்துகளை உடையது. இந்த எழுத்துக்களே அதன் கால்கள். என்று முடிக்கிறது.
அதாவது ஓம் எனப்படும், அ, உ, ம் அடங்கிய சொல்லே ஆத்மன், அதுவே பரம்பொருள் என்று ஓங்காரத்தின் நிலைப்பாட்டையும், அது என்ன என்பதையும் சுருக்கமாகச் சொல்கிறது. ஓம் எந்த எழுத்துக்களைத் தனது கால்களாகக் கொண்டிருக்கிறது என்றும் காட்டுகிறது…
… ஓம் என்னும் இந்தப் பிரணவ மந்திரத்திற்கு ஏன் இவ்வளவு சிறப்பு என்பதைக் கண்ணுறுவோம்.
ஓம் என்னும் இந்த மந்திரமே மற்றபிற மந்திரங்களுக்கு மூலமாகும். இதுதான் எதற்கும் தோற்றுவாய். இதை வடமொழியில் பீ3ஜ[விதை] மந்திரம் என்று சொல்வார்கள். இது வேதங்களாயினும், தந்திரங்களாயினும் சரி, அனைத்துக்கும் மூலமானது.
ஆன்மீகத்திற்கு வருமுன் அறிவியல்கொண்டு ஓம் ஏன் அனைத்துக்கும் மூலமாக அமைகிறது என்று எண்ணிப்பார்ப்போம்.
‘அ’ என்ற ஒலியை எழுப்புவதற்கு நமது வயிற்றிலிருந்து எழும் ‘உதானன்’ என்னும் காற்று, கழுத்தை அடைந்தவுடன் வாய் மெல்லத் திறக்கிறது. உதானனான காற்று சிறிது வெளியேறியவுடன் ‘அ’ என்ற ஒலி பிறக்கிறது. அதுவே முதல் ஒலி. அதைத்தான் மாண்டூக்கிய உபநிஷத்து ஓங்காரத்தின் முதல் கால் என்று இயம்புகிறது.
முயற்சியுள் அஆ அங்காப் புடைய – (நன்னூல்: பா 76)
அடுத்தபடியாக ‘உ’ என்ற ஒலியை உன்னிப்பாகக் கவனிப்போம். அதற்கும் வயிற்றிலிருந்து வரும் காற்று உதடுகள் குவிந்து வாய் வழியாக வெளியேறுவதனால் அவ்வொலி பிறக்கிறது.
உ ஊ ஒ ஓ ஔ இதழ் குவிவே – (நன்னூல்: பா 78)
‘ம்’ என்ற ஒலி எழும்போது வாய் திறப்பதில்லை; மாறாக மூடிக்கொள்கிறது. தலையில் ஒருவித அதிர்வு உண்டாகிறது. அது ஒங்காரத்தின் மூன்றாவது கால் ஆகிறது.
மீ கீழிதழுறப் பம்மப் பிறக்கும் – (நன்னூல்: பா 81)
‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்னும் குறள் கூறுவதுபோல எந்த ஒரு மொழியை எடுத்துக் கொண்டாலும், அதனை ஒலிக்கும் முதல் முயற்சிக்கு நமது உயிர்க்காற்றான உதானன் நமது வயிற்றிலிருந்து வெளியேறி, திறந்த வாயின் மூலம் வெளிவருவதாலே ‘அ’ பிறக்கிறது. ‘அ’ வுக்கும் ‘உ’வுக்கும், ‘ம்’மிற்கும் இடைப்பட்ட ஒலிகளே எந்த ஒரு மொழியின் ஒலிகளாக இருக்க இயலும்.
‘ம்’ என்று வாயை மூடியபின் ஒலிகள் இல்லை. ஒலிகள் இல்லையேல் மொழிகள் இல்லை. மொழிகள் இல்லையேல் கருத்துப் பரிமாற்றம் இல்லை. கருத்துப் பரிமாற்றம் இல்லையேல் எந்தச் செயல்பாடும் இல்லை.
இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல, விலங்குகளுக்கு மட்டுமல்ல, இவ்வண்டத்தில் இயங்கும் எதற்கும் பொதுவானதே. இயந்திரங்கள் இயங்கும்போது எழும் ஒலி, சக்கரங்கள் சுழலும்போது எழும் ‘ம்’ என்ற பேரொலி, எப்படிப்பட்ட மொழியில் இருந்து பேசினாலும் தூரத்தில் இருந்து கேட்கும்போது இரைச்சலாகக் காதில் விழும் ஒலி ‘ம்’ ஆகத்தான் இருக்கும்.
புயற்காற்று சுழற்றி அடிக்கும்போது நாம் கேட்கும் ‘உய்’ என்ற ஒளியின் முதலெழுத்து ‘உ’.
தனிமையில் அமர்ந்து நாம் நம்மைச் சுற்றிக் கேட்கும் ஒலி ஓங்காரத்தின் முடிவாகவே இருக்கும்.
அதற்கும் மேலே சென்று உள்ளினால், ஓம் என்பது ஒரு ஒலியோ, மொழிகளின் சுருக்கமான வடிவமோ, எல்லா மந்திரங்களிக்கும் மூலமோ மட்டும் அல்ல, இதற்கும் மேலான ஒன்று. அது தனித்து நிற்பது, தானாக இருப்பது, அது இயலுலக அண்டத்தின் அதிர்வாகும் [cosmic vibration].
நாம் எதையும், எவற்றையும், அனைத்தையும் பெயரிட்டே அழைக்கிறோம். இறைவனுக்கும் பலவிதமான பெயர்களைச் சூட்டியே துதித்து வழிபடுகிறோம்.
அதுபோலவே ஓம் என்னும் சொல்லும், இறைவனின் பெயரைப்போலவே, இறைவனை விளக்குகிறது. அதன் தனித் தன்மையால் இறைவனை ஆழ்ந்து நினைக்க, தியானம் செய்ய சக்திகொடுக்கிறது.
உபநிஷத்தின் முதலில் ‘ஓம்’தான் எல்லாம் — அதுவே ஆனது, ஆக்குவது, ஆகப்போவது எல்லாமே, –முக்காலத்தையும் கடந்தது — ஓம்தான் இறைவன் [பரம்பொருள், பிரம்மம்] என்று சொல்லப்பட்ட்டது. எனவே ஓம் பரம்பொருளின் பெயர் என்று அறியப்பட்டது.
பின்னர் பரம்பொருளான இறைவனே ஆத்மன் என்றுரைத்து, ஆத்மன் நான்கு பகுதிகளாக இருக்கிறான் என்றும், அவை என்னென்னவென்றும் விளக்கப்பட்டது. ஓம்தான் ஆத்மன் என்று பொருள்கொண்டதால், ஆத்மனைப் பற்றிய விளக்கம் தரப்பட்டது.
இப்பொழுது ஓம் என்பதைச் சொல்லாக எடுத்துக் கொண்டு அந்தச் சொல்லின் வடிவம் எந்த எழுத்துக்களால் ஆகியது எனக் காட்டப்பட்டது.
மிகவும் உள்ளி அறியும் உண்மைகளை — ஒன்றன்மேல் ஒன்றாக மூடிமறைக்கும் புலனறிவாலும் நனவு, கனவு, ஆழ்உறக்க நிலைகளால் ஏற்படும் மயக்கத்தாலும் உள்ள இயலாது என்ற காரணத்தாலேயே ஓம் என்று அழிவற்ற ஒன்றை மட்டுமே யாவுங்கடந்த மெய்மையின் வடிவமாக உள்ளவேண்டும் என்று உரைக்கப்படுகிறது…
— 9
ஜாக்ரிதஸ்தா2னோ வைஸ்’வாநரோஅகார: ப்ரத2மா மாத்ரா ஆப்தேராதி3மத்வாத்3வாப்வாப்னோதி ஹ வை ஸர்வான் காமானாதி3ஸ்ச ப4வதி ய ஏவம் வேத ||
— 9
[எங்கும்] நிறைந்திருப்பதாலும், முதலிலிருப்பதாலும், விழித்திருக்கும் நிலையிலுள்ள வைஸ்வாநரனே முதலெழுத்தான [ஒலியான] அகாரமாகிறான். எவன் இதை அறிகிறானோ அவன் எல்லா விருப்பங்களையும் அடைந்து, முதன்மையானவன் ஆகிறான்.
– 9
பதவுரை: ஆப்தே: – [எங்கும்] நிறைந்திருப்பதாலும்;; ஆதிமத்வாது3 – முதன்மையாக இருப்பதாலும்; ப்ரதமா மாத்ரா – முதல் ஒலியான [எழுத்தான]; அகார: – ஆகாரமாக [அ என்னும் ஒலியாக]; ஜாக்ரிதஸ்தா2ன; – விழிப்பு நிலையிலிருக்கும்; வைஸ்வாநர: – ஓவைஸ்வாநரன் [ஆகிறான்]; ய:: – எவன்; ஏவம் வேத – இவ்வாறு அறிகிறானோ; ஸர்வானு காமானு – அனைத்து விருப்பங்களையும்; ஹ வை ஆப்நோதி – நிச்சயம் அடைகிறான்; ஆதி3ஸ்’ச – முதன்மையானவனும்; ப4வதி – ஆகிறான்..
விளக்கம்: ஓம் என்னும் மந்திரத்தின் முதல் ஒலியான ‘அ’வுக்கும் ஆத்மனின் முதல் பகுதிக்கும் உள்ள தொடர்பு இங்கு சொல்லப்படுகிறது. உபநிஷத்தின் மூன்றாவது சொற்றொடரில் ஆத்மனின் முதல் பகுதியான – விழித்திருக்கும் — அதாவது நனவு நிலையில் செயல்படும் வைஸ்வாநரனே ‘அ’ என்னும் ஒலி என்று தெரிவிக்கப்படுகிறது.
எதனால்?
‘அ’காரம் ஓமின் முதல் எழுத்து. வைஸ்வாநரன் ஆத்மனின் முதல் பகுதி.
அதுசரி, முதல் எழுத்து, முதல் பகுதி என்பதெல்லாம் சரிதான். இதைத்தவிர வேறென்ன விளக்கம் எனற கேள்வி நமது மனத்தில் எழுகிறது.
உடனே அதற்கு விடை கொடுக்கப்படுகிறது:
எங்கும் நிறைந்திருப்பதாலும் என்பதே அது.
அது எப்படி?
நாம் [ஆத்மன்] விழித்திருக்கும்போது எங்கும் நிறைந்திருக்கும் இவ்வண்டம் நமக்குப் புலப்படுகிறது. எல்லா அறிவுகளும் நமது ஐம்பொறிகளாலும் [கண், காதும், மூக்கு, வாய், தொடும் உணர்வைத்தரும் உடற்பகுதி], ஐம்புலன்களாலும் [பார்வை, கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல்] நமக்கு வந்து சேருகின்றன. தனி மனிதராக நம்மால் இவை அனைத்தையும் அறிந்துகொள்ள இயலாவிட்டாலும், அண்டத்தில் இங்கேங்கெனாதாடி எங்கும் பரவி இருக்கும் திட, திரவ காற்றுப் பொருள்களாக இருக்கும் அனைத்தையும், பலகோடி, நூறுகோடி உயிரினங்களாக இருந்து அறிந்து கொள்கிறோம்.
மேலும், ஒலியே அறிவு. அந்த ஒலி மொழியாகப் பரிணமிக்கிறது. மொழி தோன்றுவதற்குக் காரணமாக நாம் வாயைத் திறக்கும்போது முதலில் கிளம்பும் ஒலி ‘அ’ தான். அதுதான் முதல் உயிர் ஒலி, முதல் உயிரெழுத்து. அதைத்தான் வள்ளுவர் பெருமான் “அகர முதல எழுத்தெல்லாம்” என்று திருக்குறளைத் துவங்குகிறார்.
காளிதாசனும் “சொல்லும் பொருளும்போல இணைந்திருப்பவர்கள் [வாக3ர்த்தா2விவ சம்ப்ருக்த்தௌ]” என்று இறைவனையும், இறைவியையும் வணங்கித் தனது ரகுவம்ச மகாகாவியத்தைத் துவங்குகிறான்.
இப்படிச் சொன்னவுடனேயே இதை எவன் அறிகிறானோ, அவன் எல்லா விருப்பங்களையும், முதன்மை நிலையையும் அடைகிறான் என்றும் உபநிஷத்து சொல்கிறதே, இப்பொழுது நாம் அகாரம்தான் வைஸ்வாநரன் என்று அறிந்துகொண்டோமே. நமது விருப்பங்கள் நிறைவேறுமா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?
இப்படிக் கேட்பதும், “நிலத்தை தோண்டினால் தண்ணீர் கிடைக்கும், அதை அறிபவனுக்கு எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்!”.என்று எழுதியிருப்பதைப் படித்துவிட்டு, “எங்கே செல்வம்?” என்று கேட்பதைப் போலத்தான்.
குழப்பமாக இருக்கிறதா? இதில் குழப்பம் எதுவும் இல்லை.
நிலத்தைத் தோண்டினால் தண்ணீர் கிடைக்கும். எனவே, முதலில் எங்கு தோண்டினால் தண்ணீர் நிறையக் கிடைக்கும் என்று அறியவேண்டும். அதற்குப் பிறகு தோண்டுவது எப்படி, அதற்கு என்ன கருவிகள் தேவை, எவ்வளவு ஆழம் தோண்டவேண்டும், தோண்டியபிறகு கிடைக்கும் தண்ணீரை எப்படி வெளிக்கொணர்வது, அதை எப்படிச் சேமிப்பது, அதனால் எவற்றை விளைவிக்கலாம் என்று தெரிந்துகொள்ளவேண்டும்.
அதன் பிறகும் தண்ணீரின் இதர பல பயன்களை அறிந்து அதற்கேற்பப் பயன் படுத்தினால், பயிர்கள் விளையும், விடுகளைக் கட்டத் தண்ணீர் பயன்படும், நாம் உணவு சமைக்கத் தண்ணீர் உதவும் என்று பலப்பல விஷயங்களைத் தெரிந்து அதன்படி செயல்படுத்தினால் எல்லாச் செல்வங்களையும் அடையலாம்.
அதைப்போலத்தான், அகரத்தை அறிபவன் அனைத்து விருப்பங்களையும் அடையலாம் எனபது.
நமது விருப்பத்தை அடைய, அதற்கான வழிகளை என்னவேண்டும்; எண்ணத்தை வெளியிட, அதை மற்றவர்கள் மூலமோ, இணைந்தோ செயல்படுத்த மொழி வேண்டும். மொழிதான் ஒரு குமுகத்தின் இணைப்புப் பாலம். குமுகம் மட்டுமல்ல, செயல்படும் அனைத்தின் இணைப்புப் பாலமும் கூட. மொழி ஒளியாகத்தானே வெளிவருகிறது!
அந்த ஒலியின் முதல் ‘அ’தானே!
அந்த ‘அ’காரமே மிகச் சுருக்கமாக ‘அ’காரத்தை அறிந்தவன், விஸ்வாநரன் என்று சொல்லப்படும், விழித்திருக்கும் நிலையில் உள்ள ஆத்மனின் முதல் பகுதியை அறிந்தவன், அதற்கேற்பச் செயல்பட்டால் [நனவு நிலையில்] விருப்பப்பட்டதை அடையலாம் என்று பூடகமாகச் சொல்லுகிறது உபநிஷத்து…
***