நான் அறிந்த சிலம்பு – 169
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை
தவத்தோர் தரும் அடைக்கலப் பொருளினால் வரும் இன்பம் பற்றிக் கவுந்தி அடிகள் மாதரிக்கு உரைத்தல்
தவத்தோர் தரும் அடைக்கலமானது
எளிமையாகச் சிறியதாகத் தோன்றினாலும்
அது பேரின்பம் தரும்
அதை நான் விவரிக்கிறேன்
நீ கேட்பாயாக!
தோட்டங்கள் பல உள்ள
காவிரிப்பூம்பட்டினத்திற்குள்
மலர்கள் விரிந்த அசோக மரத்தின்
பொதுத்தன்மை நீங்கிய நிழலிடத்தில்
நோன்பிருக்கும் பலரும்
ஒன்றுசேர்ந்து அமைத்திட்ட
ஒளிபொருந்திய காந்தக்கல்
மேடை ஒன்று இருக்கும்
அதன்மேல் எழுந்தருளி
அறவுரைகள் கூறும்
சாரணர் முன்பாக…
வானவில் போன்ற ஒளிதரும்
வண்ணமேனியை உடையவனாய்,
பூமாலைகள் மணிமாலைகள் அணிந்தவனாய்,
பொன் அணிகளும் பூண்டவனாய்,
இவ்வுலக மக்கள் யாரும் காணாதவனாய்,
தேவர் மட்டுமே கண்டு தொழும்
தெய்வத்தின் வடிவம் உடையவனாய்த்
தேவமகன் ஒருவன் வந்து நின்றான்.
அவனுடைய ஒருபாகத்துக் கை
கரிய விரல்களை உடைய
குரங்கின் கை போலக் காணப்பட்டது.
உலக நோன்பிகள் சாரணரை வணங்கி
“இவ்விடத்தில் இத்தேவன்
வருகை தந்தது எதற்காக?”எனக் கேட்க,
சாரணர் தலைவனும் பின்வருமாறு கூறலானான்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 149 – 162
படத்துக்கு நன்றி: கூகுள்