மாண்டூக்கிய உபநிஷத்து — எளிய விளக்கம் – 2

1

ஒரு அரிசோனன்

ஆத்மன் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறான், எல்லாமே ஆத்மா ஆத்மன்தான் என்பது —  வேதங்களில் குறிப்படப்படும் “அஹம் ஏவ ப்ரஹ்மன் [நானே பரம்பொருள்]” என்பதை அடிப்படையாகக் கொள்கிறது.

அனைத்தையும் தன்னிலிருந்து நீக்கிப் பார்க்கும் உணர்வு விழித்திருக்கும் நிலைக்கே உரித்தானது என்று நிறுவுகிறது.

இனி அது எவ்வாறு கூறப்படுகிறது என்பதைக்கண்ணுறுவோம்…

MMU 4

ஸ்வப்னஸ்தா4னோ அந்தப்ப்ரக்ஞ: ஸப்தாங்க ஏகோநவிம்சதிமுக2: ப்ரவிவிக்தபு4க் தைஜஸோ த்3விதீய: பாத3:                                                                                                           — 4

 கனவுநிலையில் உள்ளறிவானவன், ஏழுறுப்புகளும், பத்தொன்பது வாய்களுமுள்ளவனும்.  நுட்பப்பொருள்களை விரும்பும் தைஜஸன் இரண்டாம் பகுதியாகிறான்.                          — 4

பதவுரை: தைஜஸ: – தைஜஸன் [என்ற]; த்3விதீய: பாத3: –  இரண்டாம் பகுதியானவன்; ஸ்வப்னஸ்தான: – கனவில் நிலைபெற்றவன்; அந்த: ப்ரக்ஞ: – உள்ளுணர்வானவன்; ஸப்தாங்க: – ஏழு உறுப்புகளால் ஆனவன்; ஏகோநவிம்ஸதிமுக2: – பத்தொன்பது வாய்கள் படைத்தவன்; ப்ரவிவிக்தபு4க் – நுண்ணுணர்வால் அறியப்படும் பொருள்களை அனுபவிப்பவன்.

விளக்கம்:  ஆத்மனின் இரண்டாம் பகுதிக்கு தைஜஸன், அதாவது ஒளிமயமானவன் என்ற பெயர் இடப்பட்டுள்ளது. ஏன் என்னும் கேள்வி எழுமுன்னரே அவன் உள்ளுணர்வானவன் என்று விடையும் கொடுக்கப்படுகிறது

Vaiswanaran

விழித்துக்கொண்டிருக்கும்போது நாம் வெளி உறுப்புக்களான கண், காது, மூக்கு போன்றவாய்களால் பார்த்து, கேட்டு, நுகர்ந்து அறிகிறோம் —  நமக்குள் இருக்கும் ஆத்மன் அறிகிறான்.  உறங்கும்போது, வெளியுறுப்புக்கள் வேலை செய்வதில்லை.  வெளியுறுப்புக்கள் மூலம் அறிந்துகொண்ட விஷயங்கள் நுண்ணறிவாகக் கனவுலகில் காணப்படுகின்றன.

எனவே, கனவுலகில் ஆத்மன் அனுபவிப்பது எல்லாமே நுண்ணறிவால்தான்.

உதாரணமாக, கனவில் ஒருவன் பயணிக்கலாம்.  ஒரு வினாடிக்குள் அவன் உலகத்தின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்குச் சென்றுவிடலாம்.  நனவுலகில் கற்பனையாக இருக்கும் அது, கனவுகில் ஒரு நிஜம்போலத் தோற்றமளிக்கிறது.

நனவுலகில் வெளி உறுப்புகள் மூலம் உள்ளப்படும் அனைத்தும் கனவுலகில் நுண்ணுர்வாக உள்ளப்படுகின்றன.  ஆயினும் உடல் எந்த மாற்றத்திற்கோ உட்படுவதில்லை.  கனவில் நம்மை ஒரு மிருகம் கடித்துக் குதறலாம், ஆனால் உடலில் எந்த வலியும் ஏற்படுவதில்லை.  வெளியுலகில் நடக்கும் அனைத்தையும் ஆத்மன் கனவுலகிலும் அனுபவிக்க இயலுவதால், நனவுலகில் சொல்லப்பட்ட அத்தனை உறுப்புகளும், வாய்களும் தைஜஸனுக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கனவில் காண்பது அனைத்தும் மனத்திலாயே காணப்படுகிறது, கேட்கப்படுகிறது, உணரப்படுகிறது.  அவை வெளி உலகத்தின் பதிவுகளே!

தைஜஸன் —  அதாவது, ஒளிமயமானவன் என்று ஏன் அழைக்கப்படுகிறான்?

அவன் சாட்சியாக அனைத்தையும் அறிதல் திடப்பொருள்களாக அல்ல – ஒளிரும் வடிவங்களாகவே.  வைஸ்வாநரன் வெளியில் காணும் திடப்பொருள்களால் அறிந்தால், தைஜஸன் எண்ணங்களாகவும், பதிவுகளாகவுமே அறிகிறான்.

ஆதலால் அவனது அனுபவங்கள் நுட்பமாக, சூட்சுமமாகவே இருக்கின்றன.

ஆத்மனின் மற்ற இரண்டு நிலைகள் என்ன?  அவன் எப்படி அறிகிறான்?  எப்படி உணர்கிறான், எதை, எப்படி அனுபவிக்கிறான்?

அதை அடுத்த சுலோகம் சொல்கிறது…

MMU 5

யத்ர ஸுப்தோ ந கஞ்சன காமம் காம்யதே ந கஞ்சன ஸ்வபனம் பஸ்யதி  தத்ஸுஷுப்தம் ஸுஷுப்தஸ்தா2ன ஏகீபூ4த: ப்ரக்ஞானக4ன ஏவாநந்த3மயோ ஹ்யானன்த3பு4க் சேதோமுக2: ப்ராக்ஞஸ்த்ரீதீய: பாத3:                                                                                                     — 5

எங்கு தன்னறிவில்லாதவன் [உறங்குபவன்] ஒரு விருப்பத்தையும் விரும்புவதில்லையோ, ஒரு கனவையும் காண்பதில்லையோ, அது ஆழ்ந்த உறக்கநிலை [சுஷுப்தி ஆகிறது].  ஆழ்உறக்கநிலையில் [இருக்கும் ஆத்மன்] ஒன்றாகவே ஆனவனாகவும், அறிவின் குவியலாகவும், ஆனந்தமே உருவாகவும், ஆனந்தத்தை அனுபவிப்பவனாகவும், அறிவே முகமாவும் [கனவுக்கும் நினைவுக்கும் பாலமாக], அறிவாளியாகவும் மூன்றாம் பகுதியாகவும் இருக்கிறான்.                                                               — 5

பதவுரை: யத்ர – எங்கு;  ஸுப்த:[ஆழ்ந்து உறங்கும்] தன் நினைவு இல்லாதவன்;  காமம் கஞ்சன ந காமயதே – ஆசைப்படு[ம் பொருள்களில்]தலில் சிறிதும் விருப்பபடுவதில்லையோ;  ஸ்வபனம் கஞ்சன ந பஸ்யதி – கனவுகள் சிறிதும் காண்பதில்லையோ;  தது – அது;  ஸுஷுப்தம் – ஆழ்உறக்கநிலை [ஸுஷுப்தம் ஆகிறது];  ப்ராக்ஞ: – அறிவாளியான [ஆத்மன்];  ஸுஷுப்தஸ்தா2ன – ஆழ்உறக்கநிலையில்;  ஏகீபூ4த: – ஒன்றாகவே [எதிலிருந்தும் வேறுபடாமல்] இருக்கிறான்;  ப்ரக்ஞானக4ன ஏவ; – [அனைத்து] அறிவின் குவியலாகவே;  ஆநந்த3மய: ஹி – ஆனந்தத்தின் உருவமாகவே;  ஆனன்த3பு4க் – மகிழ்ச்சியைத் துய்ப்பவனாக;: சேதோமுக2: – அறிவையையே முகமாகவும்கொண்டு [கனவுக்கும் நினைவுக்கும் பாலமாக/கதவாக]; த்ரீதீய பாத3 மூன்றாம் பகுதியாகிறான்.

விளக்கம்:  இந்தச் செய்யுளில் ஆழ்உறக்கநிலை, அல்லது ஸுஷுப்தி விவரிக்கப்படுகிறது.  மனிதன் உறங்கும்போது இருவிதமான உறக்கநிலைகளில் இருக்கிறானென்று அறிவியல் சொல்லுகிறது. கனவுகளுடன் கூடிய உறக்கத்தை REM (Rapid Eye Movement) sleep என்றும், கனவுகளில்லா உறக்கத்தை NREM (Non-Rapid Eye Movement) sleep என்றும் உறக்க வல்லுனர்கள் பிரித்திருக்கிறார்கள்.

மேலும், கனவில்லா உறக்கத்தில் எண்ணங்கள், நினைவுகள் இருக்கின்றன, ஆனால் அவை சிதறல்களாக இருக்கின்றன என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  இதையே மாண்டூக்ய உபநிஷத்து அறிவின் குவியல் என்று குறிப்பிடுகிறது.

அதுமட்டுமா, ஆழ்ந்த உறக்கத்தில் உடல் தன்னை பண்டை நிலைமைக்குத் திரும்பக்கொணர்கிறது என்றும் அறிவியல் கூறுகிறது.  கட்டற்ற மகிழ்ச்சி நிலையில் இருக்கும்போது உடல்நலம் தேறுகிறது என்பதை நாம் அறிவோம்.  ஆகவே, ஆழ்ந்த உறக்கத்தில் ஆனந்தமாக இருக்கும்பொது உடல் அன்றாடம் ஏற்படும் தேய்மானத்தைச் சரிசெய்கிறது.

இன்னும் ஒன்று —  ஆழ்உறக்க நிலையிலிருக்கும்போது ஆணவம் [ego] மறைகிறது.  அங்கு ஐம்புலன்களின், ஐயுறுப்புகளின் தொடர்பும் தாற்காலிகமாக விட்டுபோகிறது.  அங்கு நாம் மறைந்துவிடுகிறோம் — நமது பெயர், நமது உள்ளறிவு, நமது விருப்புவெறுப்புகள், பகை, நட்பு, உறவுகள், சமயம், சாதி, மொழி, நாடு ஏழை செல்வந்தர் என்ற நினைப்பு, வலிந்தவர், மெலிந்தவர் என்ற இறுமாப்பு, ஆண், பெண் என்ற உணர்வு, — இவை எல்லாமே மறைந்துதான்போய்விடுகின்றன.  அப்படிப்பட்ட நிலையில் ஏகீபூ4த”மாக, ஒன்றிப்போன நிலையில் இருக்கிறோம் என்பதே உண்மை.

நமது துயர்கள், இடுக்கண்கள், தேவையற்ற பூசல்கள் நாம் விழித்திருக்கும்போதும், கனவுகாணும்போதும்தானே உண்டாகின்றன!  தூங்குபவருக்கு அது ஏது!

அந்தநிலையில் நாம் துய்ப்பது ஆனந்த – மட்டற்ற மகிழ்ச்சி நிலைதானே!

dreamless sleep

ஆத்மனின் மூன்றாம் பகுதி சேதோமுகன் என்றும் சொல்லப்படுகிறது. ஆத்மனின் இப்பகுதியை நம் மனத்தின் விழிப்புநிலை — விழித்திருக்கும்போது நாம் பெறும் பட்டறிவாகத் தோன்றும் அனுபவங்கள் – இவைதான் விழிப்புக்கும் கனவுநிலைக்கும் இடையே உள்ள கதவு என்றும் அறியலாம்.

மேலும் இந்நிலையில் இருக்கும் ஆத்மனை ஏன் சிறந்த அறிவாளி என்று கூறவேண்டும்?

விழித்திருக்கும் நிலையிலும், கனவுலகில் இருக்கும் நிலையிலும் ஆத்மனின் அறிவு மாறுபாட்டை உடையதாகவே இருக்கிறது.  அதாவது விருப்பு-வெறுப்புகள், பகை, நட்பு, உறவுகள், சமயம், சாதி, மொழி, நாடு, ஏழை-செல்வந்தர், உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற நினைப்பு, வலிந்தவர், மெலிந்தவர் என்ற இறுமாப்பு, ஆண், பெண் என்ற உணர்வு, இவை எல்லாமே இருக்கின்றன.

ஸுஷுப்தி [ஆழ்உறக்க] நிலையில் இருக்கும்போது இந்த அறிவுக்கு எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லை.  எல்லாமே ஒன்றுதான். ஆக அறிவு அறிவாகவே, மாறுபாடுகள் இன்றி, வெளிஉலக அனுபவங்களால் ஏற்பட கலப்பு இல்லாமல் தூய அறிவாகவே உள்ளது. இப்படி இருக்கும் ஆத்மனை அறிவாளி என்றே மாண்டூக்ய உபநிஷத்து அறிவிக்கிறது.

இப்படி ஆழ்உறக்க நிலையில் இருக்கும் இந்த ஆத்மன் யார்?

அடுத்த செய்யுளில் விளக்கம் கிடைக்கிறது…

 MU 6

ஏஷ ஸர்வேஸ்வர: ஏஷ ஸர்வக்ஞ எஷோஅந்தர்யாம்யேஷ யோனி: ஸர்வஸ்ய பிரப4வாப்யயௌ ஹி பூ4தானாம்.                                                                                               — 6

இவர் எல்லாவற்றிற்கும் இறைவன், இவர் அனைத்தையும் அறிந்தவர், அனைத்துக்கும் இவர் உள்ளில் இருப்பவர், உண்டானது, உண்டானவைக்கும், அழிபவைக்கும்   இவரே மூலத்தானம் – 6

பதவுரை: ஏஷ – இவரே;  ஸர்வேஸ்வர:அனைத்துக்கும் இறைவன்;  ஏஷ – இவரே;  ஸர்வக்ஞ: – அனைத்தும் அறிந்தவர்;  ஏஷ – இவரே;  அந்தர்யாமி – உள்ளே இருந்து இயக்குபவர்;  ஏஷ – இவரே;  ஸர்வஸ்ய யோனி: – அனைத்துக்கும் உற்பத்தித்தானம்;  பூ4தானாம் – உயிரினங்களுக்கேல்லாமே பிரபவ அப்யயௌ ஹி – தோற்றமும் முடிவுமாகவே [இருக்கிறார்].

விளக்கம்:  ஆழ்உறக்கநிலையில் இருக்கும் ஆத்மனின் சிறப்பியல்புகள் இச்செய்யுளில் விளக்கப்படுகின்றன.  இவர் அனைத்துக்கும் இறைவன், இவர் அனைத்தையும் அறிந்தவர், அனைத்துக்கும் பிறப்பிடமாக இருக்கிறார், அதுபட்டுமன்றி, அனைத்துயிர்களின் தோற்றமும், முடிவுமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும் ஆத்மன் — அசைவின்றி, , தூய அறிவாக, எண்ணங்களின் குவியலாக இருக்கும் ஆத்மன், மேற்சொன்ன தொழில்களை எப்படிச் செய்ய இயலும் என்ற கேள்வி பிறப்பது நியாயம்தானே!

நமக்குத் தெரிந்தவரை, ஜீவாத்மாவும் – உயிர்களுக்குள், உடலுக்குள் இருந்து நம்மை ஆட்டிவைக்கும் ஆத்மா என்று நம்மால் உணரப்படும் ஒன்றும் — இறைவனும் [பரமாத்வாவும்] வெவ்வேறு என்றே எண்ணுகிறோம்.  இந்த உபநிஷத்தைப் பொறுத்தவரை யாவும் ஒன்றே!  ஒரே சத்தியமான ஒன்றேதான் இறைவன்.  அந்த இறைவனின் ஒரு பகுதியே ஆத்மன்.  அந்த ஆத்மனின் ஒரு பகுதியே —  மூன்றாம் நிலையில் இருக்கும் ப்ராக்ஞனே பரம்பொருளான இறைவனின் ஒரு பகுதி என்று மாண்டூக்ய உபநிஷத்து உரைக்கிறது. ஏனெனில் அனைத்துமே பரம்பொருள் என்று இரண்டாம் செய்யுளில் சொல்லப்பட்டது.

அப்படியானால், உயிர்கள் [ஜீவாத்மா] அனைத்துமே இறைவனிடமிருந்து பிரித்தறிய இயலாதவை ஆகின்றன

அது எப்படி இயலும்?

கடலில் இருக்கும் நீரில் ஒரு திவளையைத் தனியாகப் பிரித்தேடுத்தாலும், அதைக்கூறுபோட்டு ஒரு நீரணுவாகப் பிரித்தாலும், அது அக்கடலின் ஒரு பகுதியே!

எனவே, மாபெரும் கடலை இறைவன் என்றால், அக்கடலான இறைவனின் [பரம்பொருள் – பரப்பிரம்மம்] பிரிவுகளே ஹிரண்யகர்ப்பன் என்று அழைக்கப்படும் கனவு நிலையில் இருக்கும் அத்மனின் ஒரு பகுதியும், விராட் என்று சொல்லப்படும் நனவு நிலையில் இயங்கும் ஆத்மனின் ஒரு கூறும் ஆவார்கள்.

இந்த ஈசனே அனைத்துக்கும் முதன்மையானவன்.  இவன் எங்கும் எதிலும் நிறைந்திருக்கிறான்.  இவன் அறியாததொன்றும் இல்லை;  இவன் எல்லா உணர்வும்களையும் கடந்து —  இருமை நிலைகளைக் கடந்து [இன்பம்-துன்பம்; மகிழ்வு-துயரம்; இனிமை-கடுமை] ஆனந்தநிலையில் லயித்திருக்கிறான்.

இதிலிருந்து  நாம் இன்னொன்றையும் அறிந்துகொள்ளவேண்டி இருக்கிறது.  இறையறிவு பொருள்களை அறிவதால் ஏற்படுவதல்ல;  உணர்ந்து அறிவதால் ஏற்படுவதல்ல;  எந்தவொரு அறிவும், உணர்வும் அனைத்தறிவு ஆகாது.

நாம் வெளியுலகில் இருக்கும் எதை அறிந்து உணர்ந்தாலும், அவற்றின் தன்மையை அறிந்துகொண்டாலும், அவற்றின் மீது எப்பொழுதும் முழுக்க முழுக்க கட்டுப்பாட்டைச் செலுத்த இயலாது.

“அறிவு சக்தி” என்று சொல்லப்பட்டாலும், அது சக்தி ஆகாது.   வெளி அறிவு – நமது ஐம்புலன்களினாலும் அறியப்படும் அறிவு —  நமது ஐயுணர்வுகளினாலும் அறியப்படும் அறிவு முழுச் சக்தியையும் நமக்கு வழங்குவதே இல்லை.

உயிர்கள் விழித்திருக்கும் நிலையில் இருக்கும்போது அதன் அறிவு ஐம்புலன்களினால் கிடைக்கும் ஒன்றே!  இறைவனின் அறிவு உள்ளுணர்வாகும்.   எனவேதான் அவர் கடவுள் —  உள்ளத்தைக் கடந்தவர் என்று உள்ளப்படுகிறார்.

இறைவனிடமிருந்துதான் அனைத்தும் தோன்றுகின்றன;  அவனுல்லேதான் அனைத்தும் அடங்குகின்றன.

அவனின் சக்தியில் ஒருசிறு பங்கே நமக்குக் கிடைக்கிறது.  அதைத்தான் நாம் நனவுலகிலும், கனவுலகிலும் கையாளுகிறோம்.

ஆழ்உறக்கநிலையில் அப்பரம்பொருளுடன் ஒன்றிவிடுகிறோம்.

அப்பொழுது நமக்கு எதுவும் தேவைப்படுவது இல்லை.  அளவிட இயலாத ஆனந்த நிலையில் இருக்கிறோம்.

அந்த ஆழ்ந்த உறக்க நிலையில் கிடைக்கும் ஆனந்தத்தை ஆயிரம்கோடி பொற்காசுகளாலும் அடைய இயலாது.  உறக்கம் வராமல் விழித்திருக்க நம்மால் இயலுமா?  ஆயிரம் கோடி பொற்காசுகள் தருகிறேன், ஒரு ஆண்டு உறங்காமல் இரு என்றால் இருக்க இயலுமா?  அந்த ஆழ் உறக்க நிலையில் நாம் இறைவனுடன் ஒன்றுகிறோம்.  இறைவனாகவே ஆகிவிடுகிறோம்…

[வளரும்]

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மாண்டூக்கிய உபநிஷத்து — எளிய விளக்கம் – 2

  1. aiyyunarvu eithiyak kannum  payanintre 
    meiyunarvu illaa  thavarkku. 
    this thirukkural aptly  applies to your explanation 
    thanks pulavar ramamoorthy ramachandran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *