ரவி வர்மாவின் ஓவியம்

கவிஜி.

“இது ஒரு வகை மன நோயா..?” என்றெல்லாம் யோசிக்க நேரமில்லை.

ரவி வர்மா வேக வேகமாக கிளம்பிக் கொண்டிருந்தான். தோள் வரை புரண்டு நீண்ட தலை முடியை காற்றின் விரல்களில் தவழ விட்டு, இளைஞர்களுக்கே உண்டான மோட்டார் பைக்கில் அதிவேகமாய் போகத் தொடங்கினான்.

“பகலில் காணும் இடங்களை இரவில் கண்டால் எப்படி இருக்கும்?” என்பது ரவி வர்மாவின் ஆர்வம்… ஆசை… திரில்…

வெறும் ஆர்வத்தோடு ஒரு போதும் அவன் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்வதில்லை. இன்பம் பேரின்பமாக ஆகும் வரை, துன்பம் பேரிடர் தந்து புரட்டும் வரை, எதையும் அவன் விடுவதில்லை. விடிய விடிய வானம் நோக்கி விழி விரித்துக் கிடக்கும் தொடுவானத்துக்காரன். வண்ணத்துப் பூச்சியின் வாசலெங்கும் தானே ஒரு ‘வெளி’ யாக கிடக்கும் வகையின் வேற்று உருவம். மழை வரும் நாளில் மனம் திறந்து கிடப்பவன். மழை வராத நாளிலும் மனம் திறந்தே கிடப்பதுதான் ரவி வர்மாவின் வேண்டுதல்.

பகலில் தேடிக் கண்டுபிடித்த ஒன்றோ? அல்லது பகலே தேடிக் கண்டு பிடித்த ஒன்றோ?

விட்ட இடத்தில் வந்து நிற்கும் வேகம் கொண்டவன். இரவின் மடியில் ஈரம் சுமப்பவன். ஈரம் சொட்டச் சொட்ட, துளிகளின் வழிகளை உயிர் தீண்டத் தீண்ட, உரக்க கத்தி சாகவே வேண்டும் என தற்கொலைகளின் தொடர்பற்று, மீண்டும் பகலில் தொலைந்த இடத்திற்கே சென்று தன் உயிர் காத்துக் கொள்ள துடிக்கும் இரவின் மௌனம், அவனது பயணம்….

அந்த வகையில் இன்று பகலில் சென்று வந்த கோவை குற்றாலத்திற்குத்தான், உயிர் தேடி இந்த இரவில் சென்று கொண்டிருக்கிறான். கோடையின் பின்புறம் செல்வது போல, வியர்வையும் வெப்பமும் தன்னை உலர்த்திக் கொண்டேயிருக்க, எதிர்க்காற்றில் ஏகாந்தம் தேடி இலை மறை காயாய் புன்னகைத்தே பயணிக்கிறான்…

“சாலையின் பயணங்கள் தீர்வதேயில்லை… சாலை முடிந்த பின்னும்”

திடும்மென உதிர்ந்த வரிகளை ஆல்கஹால் பதியாத மூளை ஒன்றில் பதிந்து கொண்டான். பேரூர் சாலை. எதிரே இருக்கும் மலை குடைந்து போவது போலொரு காட்சி. பாரதியின் பார்வையில் காட்சிப்பிழை. அதற்குள்ளும் துளிர்க்கும் நம்பிக்கை என்று திறந்து கிடந்த பட்டன்களை தாண்டி கழுத்தின் வழியே முதுகு தொட்ட தென்றல் கழுத்தைப் பிடித்து, வயிறு கிள்ளி, கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருந்தது.

ரவி வர்மாவின் கூர் பார்வையும், பார் கூர்மையும்…. காடும் மழையும், காட்சிப் பொருளல்ல, ஆட்சி பொருள். திமிர்களின் தேவலோகம். பசுமைகளின் பெருத்த உடலில் பேரின்பம் தீண்டத் தீண்ட திகட்டுவதேயில்லை. உலகம் மெல்ல மெல்ல தனது கடைசி பெட்டியை கழற்றி விட்டுக் கொள்வது போல, நாகரீக நகர சாலை, அவனை உதிர்த்துக் கொண்டேயிருக்க, உள்ளுக்குள் உருளும் காட்டாற்றின் நிர்வாணத்தை கறுமையாக்கி, அவன் மட்டும் காணும் கண்கள் பெற்றவனாய், அதிசயக் கூட்டு முயற்சியின் புதிய சிறகோடு, செக் போஸ்ட்க்கு பின்னால் இருந்த ஒற்றையடிப் பாதையில் காட்டின் கற்பில் பாதங்களைப் பதிக்கத் தொடங்கினான்.
பிடித்தவன் பதித்தால் வளரும் கற்பாய், இலை அசைத்து தலையாட்டியது மரம், ஆம், ரவி வர்மா மரங்களின் காதலன்.

தூரத்தில் தன்னை குறுக்கி, கற்பு காக்க சுவரோடு ஒட்டி உட்காரும் கதாநாயகி போல, மரத்தடியில் பதுங்கி கிடந்தது ரவி வர்மாவின் மோட்டார் பைக்.

ஹோ ……வென இரையும் வெள்ளிக் கம்பிகளின் தொடர்ச்சி, அருவியாய் முத்துப் பற்கள் சிரிக்க, வெண்ணிலவின் ஒற்றைக் கால் தவம், காதலின் பெருங்கோபம் அல்லது பெருங்காட்டின் முகப்பு வெளிச்சமென தாறுமாறான சிந்தனைகளை சிக்கி முக்கி இரவின் விரல்களில் சொடுக்கெடுத்துக் கொண்டிருப்பதாக முகம் மலர்ந்தான்.

“இரவு சும்மா வருமா?”…….

அவன் கண்கள் சிரித்தது. இதோ மலையேறி, எட்டி குதித்தால் பிடித்து விடலாம் போல இந்த வானம். பகல் என்ற ஆடை துறந்து இரவென்னும் நிர்வாணம் பூட்டிக் கொள்ளும் வானம் வெட்கம் துறந்த விழிகளை தன்னெங்கிலும் வாழ விடுகிறது. வாழ்ந்தும் விடுகிறது. கோடை மழை போல வாடைக் காற்று ஜாடையின் அர்த்தம் உயிர் கரையும் நொடிகளில் ஆடை கனமானது அவனுக்கு.

அந்த வானமும் இந்த பூமியும் அற்புதங்களின் சாட்சி. சாட்சிகளின் நீள்வட்டப் பாதையிலிருந்து ஒரு பெண்ணின் முணங்கல் சத்தம் வர, முகத்தில் கிடந்த முடிக் கற்றைகளை லாவகமாகக் கோர்த்து பின்னோக்கி சரித்தான். அருவியின் இரைச்சலை ‘ம்யுட்’ செய்தான். அவன் சொன்னால் அது கேட்கும். இரவுக் காதலன் இணுங்கினாலும் இலைகளில் கவிதை உதிரும் என்பது அருவியின் போதனை.

இப்போது நன்றாகக் கேட்டது. ஆம்… அது ஒரு பெண்ணின் அழும் குரல். முணங்களாக மட்டுமே வெளி வர முடிந்த சிறகுகளின் ரத்தக் கசிவு என்பதை உணர்ந்த நொடியில், யானையின் பதிப்பாக ஓசையின்றி, சருகு தீண்டா சபலம் தாண்டி முன்னோக்கி கடந்தான். நடந்தான் என்பது சரியில்லை என்பதால் கடந்தான்.

கை கால் கட்டப்பட்டு, உடல் முழுக்க நடுக்கம் சுமந்து, வெள்ளுடையில் ஒருத்தி வியர்க்க விறுவிறுக்க அந்த மரத்தடியில் கிடந்த காட்சி ரவி வர்மாவின் மூளைக்குள் மின்னலை வெட்டச் செய்தது. ஓடியவன் அருகில் அமர்ந்து அவளைத் தட்டி எழுப்பினான்.

அரை மயக்கத்தில் கிடந்த அவள் இன்னும் வேகமாக உடல் உதறி, தலை ஆட்டி, வாய்க்குள் இருந்த துணியுடன் கட்டப்பட்ட கட்டோடு புரண்டு மயங்கினாள். பக்கத்தில் அமர்ந்தவாறே, சுற்றும் முற்றும் பார்த்தான். ஒன்றுமே புரியவில்லை. மனதுக்குள் பல கேள்விகள் இரவுகளை திறந்து விட்டுக் கொண்டேயிருந்தது. அருவியின் இரைச்சல் மீண்டும் கேட்கத் தொடங்கியது.

“யாரிவள்? யார் இப்படி கட்டிப் போட்டிருப்பார்கள்? யாருக்காவது தெரிந்தால் தன்னையல்லவா மாட்டி விடுவார்கள். காப்பாற்றலாமா? இப்படி இத்தனைக் கொடூரமாகக் கட்டிப் போட்டிருக்கிறார்களே, யாராக இருக்கும், என்னவாக இருக்கும்?” அவன் மனதுக்குள் போராட்டம்.

“அடக் கடவுளே, இரவைத் தேடி வந்ததிற்கு இது என்ன புது தண்டனை? என்ன செய்ய? விட்டுப் போகவும் மனம் வரவில்லை….” யோசித்துக் கொண்டே அவளின் கட்டுகளையெல்லாம் கலைந்தான். முகத்தில் முத்து முத்தாய் வியர்த்திருந்த துளிகளை உள்ளங்கையால் துடைத்தான்.

பளிசென்ற முகம், அங்கு இரு நிலவு இருப்பதாக கற்பனை விதைத்தது.

“பெண்களே அழகுதான். அதுவும் இந்த பெண் கொள்ளை அழகாக இருக்கிறாள். ஒரு வேளை, பேயாக இருப்பாளோ…..?” கண்கள் மிரண்டது.

கால்களில் கொலுசு மின்னியது,கண்கள் வரை வந்த கவிதை வெற்றுப் பார்வையானது.

“இவள் ஒரு யட்சியைப் போல இருக்கிறாளே?” மனம் தடம் புரண்ட இறகுகளால் வானம் பார்த்தது. சட்டென ஒரு வானம் விளக்கிய முகம் தெளிவாக பாதையும் விதைத்தது.

“இவள் ஒரு மோகினியாகவே இருந்தாலும் இவளைக் காப்பாற்றியே ஆக வேண்டும்….”. முடிவெடுத்த மணித் துளியில் மயங்கி கிடந்த யட்சியை தூக்கி தோளில் போட்டான். யாரோ பின்னாலிருந்து அவன் முதுகில் ஓங்கி உதைத்தார்கள்.

தோளில் கிடந்தவளின் கனமும் சேர, கண நேர தடுமாற்றத்தில் அவளோடு முன்னோக்கி சென்று செடிகளூடே விழுந்தான். சற்று சுதாரித்துக் கொண்டு எழுந்தவனின் முன்னால் நான்கு பேர் கோபங்களின் உச்சமாய் பற்கள் கடித்து நிற்க, ரத்தம் வரும் வரை காத்திருந்து தொட்டுப் பார்த்துப் பின் அடிக்கும் அளவிற்கு பொறுமை இல்லை.

சில பேரை பார்த்து, நிதானமாக அடிக்கவெல்லாம் முடியாது. பார்க்க பார்க்க அடிப்பதை விட, பார்த்தவுடன் அடித்து துவைப்பது, மூன்று வரியில் முழுதும் புரிந்துவிடும் ஹைக்கூ….

மூன்று மூன்று வரியாக நால்வரையும் மாற்றி மாற்றி வெளுத்தெடுத்தான். அடிக்க அடிக்க கோபம் குறையவேயில்லை. எப்படி குறைப்பது? கோபத்தை குறைத்தே ஆக வேண்டும். சட்டென முடிவெடுத்தவனாய் நிலாவின் சாட்சியாய், ஒவ்வொருவனின் காலையும் பற்றி இழுத்து, விழுந்து கொண்டிருக்கும் அருவியில் மலை மேலிருந்து …..தூக்கி… தூக்கி… தூக்கி… தூக்கி வீசினான்.

இரவு மிரண்டது. உடல் சுருண்டு கிடந்த யட்சியை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு, காட்டை விட்டு வேக வேகமாக வெளியேறியவன், நடந்து கொண்டேயிருந்தான்.

“அவனுங்கள புடிச்சு, யாரு என்னன்னு கேட்ருக்கலாமோ?

ச்சே…… ச்சே ….. கோபம் இப்பிடியா உடம்பை மறைக்கும். சரி சரி, சீக்கிரம் காட்டை விட்டு வெளியே போய்டணும்…..”

ரவி வர்மாவின் மனம் அதுவாகவே பேசிக் கொண்டிருக்க, கால்களே சுமையாக, அவளை தூக்கிக் கொண்டே தூங்கிய மௌனத்தோடு விழித்தவன், பாதை மாறி, மலை உச்சியில் போய் திக்கு முக்காடி நின்றான். என்ன ஏது என்று குழம்பிய பார்வையோடு, மயங்கி கிடந்தவளை மெல்ல இறக்கி மலை உச்சி சமவெளியின் சரித்தான், மனதுக்குள் விழுந்த அருவியை அடக்க முடியாமல் தவித்த படியே.

காத்திருந்த கண்கள் திறந்து கொண்டது. முகம் திறந்த சாவிகளாய், உச்சி மலைக் காற்றும், பிச்சிப் பூ வாசமும், உள்ளூர கிறங்கி தவித்த உணர்வுகளை கிள்ளி வைக்கத் தொடங்கியது.

“யாரிவன்?” என்று கூர்ந்து கவனித்து பின் கத்தினாள். காடு முழுக்க எதிரொலித்த யட்சியின் குரலில் சங்கீதம் தேங்கி கிடப்பதாக சட்டென கல் விழுந்த குளமாய், சலனப்பட்ட ரவியின் பார்வையில் வளையம் விரிந்தது. அவள் மீண்டும்… மீண்டும்… மீண்டும்… மீண்டும் கத்தினாள். காற்றின் விரலுக்கு கற்றைக் கூந்தலை தந்தவன், வானம் நுகர்ந்து நின்றான்.

யட்சி மிரட்சியோடு கத்திக் கொண்டே அங்கும் இங்கும் ஓடி, பின் மீண்டும் கத்திக் கூச்சலிட்டு மனம் நடுங்கி, திகைத்து, பயந்து, கீழே விழுந்து, உருண்டு, பின் நிதானிப்பது போல நிதானம் இழந்தவளாய் பரபரத்து, என்ன செய்கிறோம் என்று எதுவும் தெரியாதது போல, அவனை நோக்கியே ஓடி… அவனை பின் புறத்திலிருந்து இறுக கட்டி அணைத்துக் கொண்டாள். அவளின் மார்புக்குள் மாட்டிக் கொண்ட விழிகளின் சிமிட்டலாய் அவளின் இதயத் துடிப்பு. அது தீரா தாகத்தின் ஓடையை வியர்வையாக்கிக் கொண்டே இருந்தது. நெஞ்சைத் துளைத்து வெளியேறும் வித்தை கற்றவளோ! கைகளின் பிடியை மெல்ல தளர்த்தி, மெல்ல மெல்ல திரும்பியவன், விழி நோக்க, இதழ் நோக்க, விரல் கொண்டு கழுத்தெங்கும் உயிர் காக்க, யட்சி நடுங்கிக் கொண்டே இன்னும் இன்னும் நெருங்கி அவன் நெடி நுகர்ந்தாள்.

இரவின் வேலைப்பாடு கசகசத்து நிற்க, செய்வதறியாமல் இருவரும் நேருக்கு நேர் நின்று, விழி மாற்றி தின்று, வானம் பூமி இடம் மாறி வித்தை கற்பதாக விரல் கோர்த்து நிற்கையில், அருவியின் அலறல் அவர்களை கலைத்து விடும் ஓவியமாகவே விழுந்து கொண்டிருந்தது.

எது கனவு… அவளே கனவா…..
எது நிஜம்… அவளே நிஜமா?

கண்களுக்குள் நெல்லிக்கனி சாத்தியமா? நிலவொளியின் இரவில் அவள் புது வண்ணம் பூசி நிற்கிறாள். பூங்காற்றில் ஒரு தேகம் விளைந்தது எப்படி? மெல்லிடை மௌனங்களில் மெய்ம் மறக்க செய்யும், இலைகளில் தங்கிவிட்ட மழைத் துளியென சிலிர்ப்பை உதிர்ப்பவளா? விழி நோக்கின் கூர் வாள். இதழ் நோக்கின் மழை தூறும்.

வேகத் தடைகளில் சிக்கிய வாகனம் ஆடி அசைந்து நின்று நிதானிக்கும் தருணத்தின் நுனி பிடித்து, பட்டமாக பறக்கும் மனதை சற்று நேரம் கடந்தவனோ! அவன் பெருமூச்சில் காடெரிக்கும் மூங்கில் வாசம் கொண்டவனோ…..?

காதலின் உச்சம் மரணம். மரணத்தின் மிச்சம் இந்தக் காதல். தான் யார், நான் யார், யார் யார், யார் யார்? தெரியவில்லை. தெரிய வேண்டாம். பூலோகம் மறைந்து ஒரு புள்ளியாகி நிற்கையில் அதை பொட்டாக்கி வைத்துக் கொள்ள, நெற்றியில் வாழும் காதல். உடலற்று போகும் உயிர் பற்ற, யுத்த கதறல். யுத்தம் நெஞ்சோடு மார் நிற்கும் வித்தை, வித்தை துளைத்து வெளியேறும் சப்தம்.

மூங்கில் வாசிக்கும் காற்றில் புல்லாங்குழல், அவள் குழலானது. பட்டு பட்டு, தொட்டு தொட்டு, உயிர் வாசம் கலந்து, உணர்வாகி நெருங்கி, இமை மூடும் கணத்தில் செத்தாலும் சுகமே. அவன் கொன்றாலும் தகுமே. அவள் என்ற அவனும், அவன் என்ற அவளும், எதுவென்ற எதுவாகவோ, எது வென்ற எதுவாகவோ மறதிகளின் பிரபஞ்சம் போல, பால்வெளி தேசத்து கடுங்குளிராகி, பழங்கதை மறந்த பருவங்களின் பதியலை, தேகம் கலந்த போது, தேகமில்லை அங்கே, தேநீர் சூட்டின் கதகதப்பில், காடெங்கும் சிறகடித்த பறவைகளின் நகல்களாய் இறக்கை முளைத்தார்கள்.

விரல் கோர்த்து விழி கடக்க, விடியல் வந்து இசை வார்த்தது.

கதவு தட்டப்படும் சத்தம் ஆழ் கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பது போல, மூளையைத் தொட்டு தொட்டு ஒளிந்து கொண்டிருந்தது. கிடைத்து விட்ட இரவென சூடேறிக் கிடக்கும் மணல் குன்றுகளிலிருந்து ஒரு யட்சி மேலெழும்பி வந்து காது கடித்த உணர்வில் திடுக்கிட்டு விழித்தெழுந்தான் ரவி வர்மா.

அவனின் கண்கள் சிவந்து கிடந்தன. காடுகளின் வாசம், சுவாசமாகிக் கிடப்பதாக நினைத்துக் கொண்டே கண்கள் கசக்கி, தலை முடி சரி செய்து கொண்டே கதவு திறந்தான்.

காற்றில்லா தேசமோ இது? வெயில் மட்டும் வெள்ளிகளை உதிர்த்துக் கொண்டிருக்க, வியர்த்த முகத்துடன், சிவந்த தேகத்துடன், சிறு புன்னகை இதழில் அடக்கி, குறு நாணம் கண்கள் சுமக்க, கிறுகிறுக்கும் மேடுபள்ள வளைவுகளுடன் வாசல் கொண்ட புது கோலமாய் நின்று கொண்டிருந்தாள் தேவதை போலொரு பெண்ணொருத்தி….

அறைத் தோழன் வெற்றுக் காகிதமாக வெறித்திருக்க, கொட்ட கொட்ட விழிப்பதற்கே, கொக்கின் கால்களின் தவங்களை கருவாக்கிக் கொண்ட கண்கள் கொண்ட அவள், என்ன வீட்டுக்கு வந்தவங்கள, உள்ள கூப்ட மாட்டீங்களா?” என்றாள். குரலில் குறும்பு மிதந்தது. அரும்பு முடிகளில் மேலுதடு, மெல்லிசை மீட்டியது.

“ம்……. கூப்டலாம்…….. ஆனா நீங்க……. ” என்று முணங்கிய ரவிவர்மாவின் மனதுக்குள் மலையளவு தடுமாற்றம்.

சட்டென இனம் கண்டு கொண்ட நினைவுகளில் “இவள் எப்படி இங்கே?” கேள்வி வானம் கொத்திய பறவையின் அழகுகளாகி கீறிட்டது.

“என்னங்க, ஏதோ பேயப் பார்க்கற மாதிரி, பாக்கறீங்க?” என்றாள் அவள். இன்னும் வெட்கச் சிரிப்பை அடக்கவே முயன்று கொண்டிருந்தாள்.

ரவி வர்மா, செய்வதறியாத முகம் ஒன்றை மாட்டிக் கொண்டிருந்தான். அவன் உடல் நடுங்கியது. நடுக்கமே வியர்வையை பிடுங்கியது.

அறைத் தோழன், அருகே வந்தான். “என்னடா? புதுசா பொண்ணு! அதும் வீட்டுக்கே? ம்ம்ம்…… நடத்து நடத்து……..” என்றான் சன்னமான குரலில்.

“யாரடா… இவன் வேற…….” என்று நண்பனை முறைத்து விட்டு, “ஏங்க, உங்கள எனக்கு தெரியல, ஏதாவது அட்ரஸ் மாறி வந்திட்டீங்களா?” என்றான் ரவி வர்மா அப்பாவியாக.

அவன் மனதுக்குள் ஒரு கூடை யோசனை…”இவள் எப்படி நேராக?”

“அடப்பாவி, நைட் முழுக்க காட்டுக்குள்ள கூட இருந்துட்டு இப்போ யார்னா கேக்கற?” அவள் கண்களில் கொப்பளித்த கோபம், நண்பனையும் சேர்த்து எரிக்க முயற்சித்தது.

தலையை பிடித்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். தலைக்குள் அருவியின் பேயாட்டமும், உச்சி மலைக் காற்றின் பதட்டமும், முற்களை பதிப்பதாக தடுமாறினான்.

சுவற்றில் சாய்ந்து, நிலை தடுமாறியவனை சட்டென எட்டிப் பிடித்து அமர வைத்தான் நண்பன்.

“என்னடா நடக்குது? இந்தப் பொண்ணு யார்.? எந்த காட்டுக்குள்ளடா போன? ஒரு நைட் உன்னத் தனியா விட்டுட்டு எங்கயும் போக முடியல. இந்த பகல்ல பாக்கற மேட்டர, நைட்டிலயும் பாக்கற உன் பாழாப் போன பைத்தியகாரத்தனத்த எப்பதான் நிறுத்தப் போறாயோ?

………………………………………………………………………………………

“சொல்லுடா, டென்சன் பண்ணாத, நைட் எங்க போன? இந்தப் பொண்ணு யாரு? சொல்லுடா….”

சரி சரி என்பது போல் பார்த்த ரவி வர்மா தன் நண்பனை அருகில் வருமாறு ஜாடை செய்தான். ஒரு கண்ணில் அந்த பெண்ணும் இருக்கத்தான் செய்தாள். இருந்தும் ஏதோ ரகசியம் பேசுபவன் போல அவன் காதில் பேசத் தொடங்கினான்.

“மச்சான், நைட் நான் எங்கயும் போகலடா… ஆனா……” என இழுத்தான்.

“என்ன ஆனா? அதான் சொல்ல வந்துட்டீல்ல, சொல்லிடு. அப்பத்தான் ஏதாவது முடிவுக்கு வர முடியுண்டா…..” நண்பன் கண்கள் சிவந்தான்.

“சரி, நான் காட்டுக்குள்ள போகல. ஆனா நைட் முழுக்கக் காட்டுக்குள்ள இருந்த மாதிரியும், இந்த பொண்ணக் காப்பாத்தின மாதிரியும் ஒரு கற்பனை எனக்கு வந்துச்சு…..” என்றான் படு சீரியஸாக.

“என்னது கற்பனையா…..? லூசாடா நீ? நைட் முழுக்க கூட இருந்துட்டு, இப்ப கதை, கற்பனை, கனவுன்னு உளர்ற…” என்ற அவள் தலை சுற்றி விழாதது தான் பாக்கி. பூமி தன்னை சுற்றாமல் சூரியனை சுற்றுவது போல் உணர்ந்தாள்.

தலையில் கை வைத்து அமர்ந்தான் தோழன்.

“இதுல யார் லூசு? அனேகமா நாந்தான்னு நினைக்கறேன்…” என அவனாகவே புலம்பினான். அந்த அறையே ஆகாயத்தில் மிதப்பதாக உணர்ந்தான். உணர்வை கலைத்தது ரவியின் சொற்கள்.

“கதையோ கனவோ இல்ல. அது முழுக்க முழுக்க என் கற்பனை. தூங்கும் பொது வருவது கனவு. தூங்குவதற்கு முன் வருவது கற்பனை. கதையில் இரண்டும் வரும்”

“அடிங்……. வாய மூடு வெளக்கெண்ண…. விளக்கம் குடுக்கறாரு” நண்பனை அடக்கிய நண்பன், திரும்பி அந்தப் பெண்ணை சந்தேகத்தோடு பார்த்தான்.

“சத்தியமா நான் சொல்றது உண்மை. இல்லேன்னா இந்த அட்ரெஸ் எனக்கெப்பிடி தெரியும்? எப்படி காட்டுக்குள்ள போனேனே தெரியாத என்னை இவர் காப்பாத்தினது உண்மை. கண்டதும் காதல் வயப்பட்டது உண்மை. இரவோட கவிதையா நாங்க மனம் மாத்திக்கிட்டது உண்மை. பகல்ல பாக்கற இடத்தை நைட்டிலயும் பாக்கற வினோதமான ரசனை அவருக்கு இருக்குனு என்கிட்டே சொன்னது உண்மை. என்னை ஹாஸ்பிட்டல்ல விட்டுட்டு அவசர வேலை இருக்கு வந்தர்ரேன்னு சொல்லிட்டு, ஒரு வேளை லேட் ஆனா வீட்டுக்கு வந்துடுன்னு சொல்லி இந்த வீட்டு முகவரியை இவர் சொன்னது உண்மை. ஆனா, இப்போ கனவு கற்பனைன்னு இவர் ஏன் மாத்தி பேசறார்னு எனக்கு புரியல….”, கிட்டத்தட்ட அழும் முகம் வாய்க்கத் தொடங்கியிருந்தது அவளுக்கு.

ரவி வர்மா புன்னகைத்தான். புன்னகை சிரிப்பானது. சிரிப்பு வெடிச் சத்தமானது.

நண்பன் செய்வதறியாமல் திகைத்தான். இதோ இருக்கிறேன் என்பது போல, வீதி நிறைந்த காற்று வீடெங்கும் விருட்சமானது. உயிர் பிரியும் வழிகளால் இரையத் துவங்கியதாக அவர்களை சுழன்றது.

இருவரையும் மாறி மாறி பார்த்தான் தோழன் .

“ஒரே சம்பவம். இவள் நிஜம் என்கிறாள். இவன் கற்பனை என்கிறான். யாரை நம்புவது? இவள் ஏமாற்று வேலையில் தகவல் திரட்டி வீடு வரை வந்து ஏமாற்றுகிறாளா ? இவன் நிஜங்களையும் கற்பனை என்று நம்பும் மன நிலைக்காரனா?

எது நிஜம்.. எது பொய்…..” தலை சுற்றி விழி பிதுங்கி நின்ற தோழனை, ரவி வர்மாவின் குரல் இன்னும் அதல பாதாளத்திற்கு அருவியாய் அழைத்து செல்லத் தொடங்கியது.

“டேய்….. சத்தியமா இது கற்பனைதான். ஏன்னா, கற்பனைல நடந்த ஒரு விஷயத்தை இந்த பொண்ணு சொல்லல. அதாவது நிஜமா நடந்திருந்தா அதையும் சொல்லிருக்கனணுமில்ல. என் கற்பனை அவளுக்கு தெரியாதுங்கறது தான் உண்மை. அதான் அந்த ஒரு விஷயத்தை இவ சொல்லல. சொல்லவும் முடியாது….”எப்படியும் தான் ஜெயித்து விடப் போகிறோம் என்பதாக சட்டென ஒரு உற்சாக வெளிப்பாடு ரவி வர்மாவிடம் வெளிப்பட்டது.

“மறுபடியும் என்ன சொல்லிக் குழப்ப போறானோ….?” என்பது போல நண்பன் பார்க்க, அவள் மூளை செயல் இழந்தவள் போல ரவி வர்மாவை மலங்க மலங்க விழித்தாள்.

“என்னோட கற்பனையில, நான்தான் இவள கடத்திட்டு போய், காட்டுக்குள்ள கட்டிப் போட்டேன். அப்புறம் நானேதான் இவள காப்பாத்தினேன். காப்பாத்தின பின்னால வழி மாறிப் போறது போல மலை உச்சி போனது உண்மை. அங்க கண நேரத்துல நாங்க காதல்ல விழுந்தது உண்மை. காதலும் இரவும், இவ கடத்தபட்டு கட்டிப் போடப்பட்ட கொடூரத்த கூட மறக்க வைச்சுது. இவ மறந்திட்டா, அது காதலோட சாபக் கேடு. நான் கூட காதல்ல எல்லாம் மறந்தேன். எல்லை கூட மறந்தேன். காதலின் உச்சம் மரணம்னு இவ முனங்கிணப்போதான் என் இலக்கு நியாபகம் வந்துச்சு. இவள மலை உச்சிலிருந்து தூக்கி கீழே வீசி கொன்னேன்.”

……………………………………………………………………………………………….

ஆமா….. கொன்னேன். ஆனா, இவள கொன்னுட்ட மேட்டர இவ இங்க சொல்லவே இல்ல. இதுலேர்ந்தே தெரியல, இது முழுக்க முழுக்க கற்பனைன்னு. ஆனா நிஜம்னு இவ ஏன் குழப்பறாரான்னுதான் தெரியல. யார் என்னனு விசாரிடா. இல்ல போலிஸ்…………….”, புன்னகை மாறாமல் ரவி வர்மா பேசிக் கொண்டே இருக்க…

விரல் சுட்ட நெருப்பாய், செயல்படத் தொடங்கிய மூளை கொண்டவள், விரிந்த கண்களோடு, விபரீதம் உணரத் தொடங்கினாள். உயிரின் கனம் சுமந்து நின்றவள், இப்போதுதான் புரியத் தொடங்கினாள். உடல் என்ற ஒன்றை தான் சுமக்காமல் நிற்பதை. உடல் தழுவிய கைகளில் ஒன்றும் கிடைக்காமல் தடுமாறியவள், தன்னை தூசுகளின் மொத்தம் கடந்து போவதை மிரட்சியோடு கவனித்தாள்.

நண்பன் மயங்கிச் சரிந்தான்.

காதலின் கண்களில் தன் மரணத்தை, தவணை முறையில் நினைவு படுத்தினாள். மரணமே காதில் கிசுகிசுத்தது அவளை. அவள் நேற்றிரவே இல்லாமல் போனதை உணர்ந்த நொடியில், கண்கள் மூடி அமர்ந்திருந்த ரவி வர்மாவின் தலைக்கு மேல், சுவற்றில் காற்றோடு பட படத்துக் கொண்டிருந்த காலண்டர் 2017 என்று வருடத்தை காட்டிக் கொண்டிருந்தது.

அழுது கொண்டும், அரற்றிக் கொண்டும் எதற்காக இந்த மரணம் என்று புலம்பிக் கொண்டும் தூசுகளிடம் ஊர்ந்து கொண்டு திரிந்தவள், மெல்ல கண்கள் அற்று போனாள்.

காலண்டர் பின்னோக்கி படபடக்க 2015- ஜூன் மாதத்தில் ஒரு நாள்…….

அவள், அவனை செருப்பால் அடித்தாள். கல்லூரியே திரண்டு நின்று வேடிக்கை பார்க்க, இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி செருப்பால் அடித்தாள்.

“உன் மூஞ்சியக் கண்ணாடில பாத்திருக்கியா…..யூ….. பா…………. ஆளும், தலயும், ட்ரசும்…… பட்டிக்காட்டுப் பரதேசி….”

திட்டிக் கொண்டே கடந்து விட்டிருந்தாள் அந்த அழகிய அல்ட்ரா மாடர்ன் பெண்.

ஓடி வந்த நண்பன் அவனைத் தூக்கி விட்டு, சமாதானம் செய்து அவள் சுருட்டி வீசிய கடிதத்தில் பதிந்து கிடந்த ஆங்கில வரிகளைப் படித்தான்.

அத்தனை வரிகளின் ஒட்டு மொத்த நோக்கமும் கலவியாகவே இருந்தது.

அடிவாங்கி, அவமானத்தில், கூனி குறுகி, நடுங்கிக் கொண்டே அமர்ந்திருந்த ரவிச்சந்திர மூர்த்தி, தன் நண்பனின் அர்த்தமுள்ள கேள்வியின் பார்வைக்கு கண்கள் கலங்க பதிலலித்தான்.

“நம்ம சீனியர் யட்சிகாதான் லவ் லட்டெர இங்லீஸ்ல எழுதி குடு, அப்பத்தான் சிட்டி புள்ளைங்களுக்கு பிடிக்கும்ணு எழுதி குடுத்தாங்க…..”

குறிப்பு: தன்னை ஒரு கதாநாயகனாக நினைக்கும் போது, யாரிடமாவது சண்டை போடுவது போல நடிப்பது வெற்றி பெற்றவனாக நினைப்பது அவனின் கற்பனையின் மைல் கல்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *