Month: November 2016

  • மந்திர ப்ரதிஷ்டை நிறைவும், தைலாபிஷேக ஆரம்பமும்

    தன்வந்திரி பீடத்தில் 14ம் ஆண்டு மகா மந்திர ப்ரதிஷ்டை நிறைவு பெற்றது

    dsc_0565

    வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 28ம் தேதி பக்தர்கள் ப்ரார்த்தனையுடன் தங்கள் கைப்பட எழுதிய தன்வந்திரி மகா மந்திரங்களை அவ்வப்போது ப்ரதிஷ்டை செய்யப்படும் விக்ரஹத்தின் கீழ் வைத்து மஹா மந்திரங்கள் எழுதியவர்களின் நலனுக்காக சிறப்பு பூஜையும், யாகமும் நடைபெற்று வந்தது.

    இந்த ஆண்டு விரைவில் ப்ரதிண்டை செய்யப்படவுள்ள மந்திர ஸ்தூபியின் கீழ் வைத்து 14வது ஆண்டு மஹா மந்திர ப்ரதிஷ்டை வைபவம் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ப்ரார்த்தனை செய்தனர்.

    தன்வந்திரி பீடத்தில் 13ம் ஆண்டு தைலாபிஷேகம் துவங்கியது…

    dsc_0438

    ஒவ்வொரு வருடமும் மூலவர் தன்வந்திரி பகவானுக்கு நவம்பர் 28 முதல் டிசம்பர் 13 வரை தைலாபிஷேகம் எனும் வைபவம் உலக மக்களின் உடற்பிணி உளப்பிணி நீங்க நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று மூலவருக்கு ஆந்திர மாநிலம் விஜயவாடா சைவ ஷேத்திர பீடாதிபதி ஸ்வாமி சிவ ஸ்வாமி அவர்கள் தைலாபிஷகத்தை துவக்கி வைத்து சிறப்பித்தனர்.

    தைலாபிஷேகத்தின் பலன்

    இந்த வைபவத்தில் பங்கேற்பவர்களுக்கு சனி தசை, சனி புக்தி, ஏழரை சனி, அஷ்டம சனி போன்ற சனி கிரகத்தினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி ஆயுள் ஆரோக்யம் பெற வழிவகை கிடைக்கும். மேலும் நவக்கிரஹங்களால் ஏற்படும் தடைகள் நீங்கி நன்மைகள் பெற வாய்ப்புகள் கிட்டும். மருத்துவ ரீதியான தோஷங்களும் நீங்க செய்யும். மேலும் பல நன்மைகள் கீழ்கண்டவாறு அமையும்.

    dsc_0433

    நினைக்கின்ற காரியம் நிறைவேறும், குடும்பம் நலம் பெறும், ஆயுள், புத்திர விருத்தி ஏற்படும், வாழ்க்கை சுகமாகவும் சுவையாகவும் அமையும், எட்டுவித செல்வம் கிடைக்கும், நோய்கள் நீங்கும், பாபங்கள் நீங்கும், உடல் நலம் பெறும், வாழ்வு இன்பமயமாகும், பயிர்கள் செழிக்கும், ராஜபோக வாழ்வு கிட்டும், வசீகரம் ஆகிய பலன் தரும், மற்றும் பயம் நீக்கவும் செய்கிறது, சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது. அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும். ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்து கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் கிடைக்க வழி செய்கிறது. செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும். இதில் மக்னீசியம் இருப்பதால், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த தைலாபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருள்பெற வேண்டுகிறோம். இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    161130 - Tvamewa -wcolor-lores
    161130 – Tvamewa -wcolor-lores

    ”சிரித்தமுகம், வெண்ணை பொரித்தமுகம், கன்றைத்
    தரித்தமுகம்(REF.keeshavs previous drawing), அன்னை திருஷ்டி -நெரித்தமுகம்:
    ஆமோகம் கொண்டடியில் ஆழ்ந்து கிடப்போரை
    மாமேகம் காக்கும் மரபு”….கிரேசி மோகன்….!

    அன்னை யசோதை பாலகிருஷ்ணனுக்கு ”கங்கி”பசுவின்
    வாலால் திருஷ்டி சுத்தி போடுவாளாம்(டோங்ரே மஹராஜ் பாகவதம்)….!

    Share
  • பொதுவுடைமை போற்றிய புரட்சியாளர்!

    -மேகலா இராமமூர்த்தி

    1959-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் 8-ஆம் நாள் அது. அழகிய சிறிய தீவான கியூபாவின் தலைநகர் ஹவானாவில் தன் சக தோழர்களோடு நுழைந்த அந்த இளம் புரட்சியாளன், கியூபாவில் அப்போது ஆட்சியிலிருந்த முதலாளித்துவ ஆதரவாளனும், எதேச்சாதிகாரியும், அமெரிக்காவின் கைக்கூலியுமான ஃபுல்கென்சியோ படிஸ்டாவை (Fulgencio Batista) வீழ்த்தி, அவனை ஆட்சிக்கட்டிலிலிருந்து தூக்கியெறிந்தான். அவ்வெற்றியை அடைவதற்கு அப்புரட்சியாளன் சந்தித்த போர்க்களங்கள்தாம் எத்தனை!

    fidelcheguveraதோளோடு தோள் நின்று போரிட்ட பொதுவுடைமைத் தோழர்கள் பலரை அந்த விடுதலை வேள்விக்கு அவன் தாரை வார்த்திருந்தான். படிஸ்டா அரசுக்கு எதிரான அந்த அறப்போரில் தொடர் தோல்விகளைச் சந்தித்துவந்த அவ்வீரன், அர்ஜென்டினாவின் பொதுவுடைமைப் புரட்சியாளரும், மார்க்சிய – லெனினியச் சிந்தனையாளருமான தோழர் சேகு வேராவோடு (Che Guevara – An Argentine Marxist revolutionary, Physician and a Guerrilla leader) இணைந்து கொரில்லாப் போர்முறையைக் கற்றுத்தேர்ந்தான். அப்போர்முறையைப் பயன்படுத்திப் பட்டிஸ்டாவுக்கு எதிரான போரில் வெற்றிக்கனியை  எட்டிப்பறித்தான் அவன்!

    எதேச்சாதிகாரி படிஸ்டா வீழ்ந்தான்; தலைநகர் ஹவானாவில் தன்முன் ஆர்வத்தோடு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களின்முன் வெற்றிஉரை நிகழ்த்தினான் அந்த மாவீரன். எதேச்சாதிகாரம் எமலோகம் அனுப்பப்பட்டு அமைதி மீண்டதன் அடையாளமாக வெண்புறாக்கள் வானில் பறக்கவிடப்பட்டன. பறந்துசென்ற புறாக்களில் ஒன்று திரும்பவந்து அந்த வெற்றிவீரனின் தோளில் அமர, அதனைக்கண்ட மக்கள்கூட்டம் எழுச்சிகொண்டு ’ஃபிடல், ஃபிடல்’ என்று விண்ணதிர வெற்றி முழக்கமிட்டது. ஆம், முதலாளித்துவத்திலிருந்து கியூபாவை மீட்டு, தொழிலாளர்களின் நலம்பேணும் பொதுவுடைமையை அங்கே மலரச்செய்த ஃபிடல் காஸ்ட்ரோதான் அந்தப் புரட்சியாளன்!

    1926-ஆம் ஆண்டு ஆகஸ்டு 13-ஆம் தேதி வசதியானfidelyoung கரும்பு விவசாயி ஏஞ்சல் காஸ்ட்ரோவுக்கு மகனாகப் பிறந்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. ’ஃபிடல்’ என்ற சொல்லுக்கு ’நம்பிக்கை’ என்றும் ’காஸ்ட்ரோ’ என்ற சொல்லுக்குக் ’கோட்டை’ என்றும் பொருளாம். பொதுவுடைமை எனும் நல்ல நம்பிக்கையை – உயர்கொள்கையைக் கட்டிக்காக்கும் கோட்டையாக இப்பிள்ளை பின்னாளில் திகழப்போகிறான் என்பது பிள்ளைக்குப் பெயர்வைத்தபோது ஃபிடலின் தந்தைக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. (சிலருக்கு அமையும் பெயர்ப்பொருத்தம் பிரமிக்கவைப்பதாய் இருக்கின்றது!).

    கியூபாவின் தலைநகர் ஹவானாவிலுள்ள பல்கலைக்கழகத்தில் (University of Havana) சட்டம் படித்த ஃபிடல், இளைஞராய் இருந்தபோதே மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் போன்றோரின் பொதுவுடைமைத் தத்துவங்களால் கவரப்பட்டு அவற்றையே தம் வாழ்வின் லட்சியங்களாய்க் கொண்டவர்.

    கியூபாவின் தலைமை அமைச்சராய் (Prime Minister) பிப்ரவரி 16, 1959-இல் பதவியேற்ற அவர், உழவர்களுக்கான முதல் சீர்திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து ஒவ்வொரு விவசாயியும் அதிகபட்சம் 993 ஏக்கர் நிலத்தை மட்டுமே தன் உடைமையாகக் கொண்டிருக்கவேண்டும் என்ற விதியை நடைமுறைப்படுத்தினார். அத்தோடு, கியூபாவில் அயல்நாட்டார் நிலங்களை வாங்குவதற்கும் தடை விதித்தார். மார்க்சியவாதிகளையே தம் அரசாங்கத்தின் அனைத்து உயர்பதவிகளிலும் முக்கியப் பொறுப்புக்களிலும் நியமித்தார்.

    ’கண்ணுடையர் என்பவர் கற்றோர்’ எனும் வள்ளுவத்திற்கிணங்க, கல்விச்சாலைகளை அதிக அளவில் நாடெங்கும் ஏற்படுத்தி, மக்களின் அறிவுக்கண்களைத் திறந்தார். மருத்துவச்சேவையை அனைவருக்கும் இலவசமாக்கி மக்களை நோயற்ற வாழ்வு வாழச் செய்தார்.

    ஃபிடலின் ஆட்சியும் மாட்சியும் கியூபாவுக்கு அருகிலிருந்த முதலாளித்துவ வல்லரசு நாடான அமெரிக்காவுக்குக் கடும் அதிருப்தியைத் தந்தது. அவரை ஒழித்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில்  கியூபாவின் தெற்கிலுள்ள பன்றிகள் குடா (The Bay of Pigs) எனும் கடற்பகுதியில் படையெடுப்பை (The Bay of Pigs Invasion) நடத்தியது. அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியின் ஆட்சியின்போது, அமெரிக்க உளவுத்துறையின் (CIA – Central Intelligence Agency) திட்டமிடல் மற்றும் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்ட அப்படையெடுப்பில் கலகக்காரர்கள் சுமார் 1400 பேர் கலந்துகொண்டனர். ஆனால், கியூப வீரர்களின் தாக்குதலைச் சமாளிக்கமுடியாமல்  மண்ணைக் கவ்வினர் அக் கலகக்காரர்கள். மாபெரும் வெற்றியை கியூபா பெற்றது. கென்னடி தலைமையிலான அமெரிக்க அரசுக்கு அது பெருத்த அவமானத்தைத் தந்தது எனில் மிகையில்லை.

    ’எங்கள் சாம்ராஜியத்தில் ஆதவன் என்றுமே மறைவதில்லை’ என்று மார்தட்டிக்கொண்டு, தருக்கோடும் செருக்கோடும் உலகையே அடக்கியாண்ட இங்கிலாந்துகூட பின்னாளில் அமெரிக்காவின் அடிவருடியாக மாறிவிட்டநிலையில்,  அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவின் அளவுகூட இல்லாத கியூபா, அமெரிக்காவைக் கண்டு சற்றும் அஞ்சவில்லை. ஒருவரல்ல… இருவரல்ல… பதினொரு அமெரிக்க அதிபர்களைத் தன் ஆட்சிகாலத்தில் சந்தித்துவிட்டார் ஃபிடல்; ஒருவரால்கூட அவரை ஆட்டவோ அசைக்கவோ முடியவில்லை என்பது வியத்தகு வரலாற்றுச் சாதனையே!

    முதலாளித்துவ அமெரிக்காவோடு பகைமைfedelmandela பாராட்டினாலும், (அன்றைய) சோவியத் யூனியனுடனும், இலத்தீன் அமெரிக்க நாடுகளோடும், இடதுசாரிச் சிந்தனைகள் கொண்ட பிற நாடுகளோடும் தோழமையைப் பேணினார் ஃபிடல். ஆங்கிலக் காலனி ஆதிக்கத்தின் இரும்புப் பிடியிலிருந்து தென்ஆப்பிரிக்க நாடுகள் மீண்டுவரப் பேருதவி புரிந்தார் அவர். அந்நாடுகளுக்குக் கியூபாவிலிருந்து மருத்துவர்களையும் செவிலியர்களையும் அனுப்பி அம்மக்களின் நலன் காத்ததால் ஆப்பிரிக்காவின் நாயகனாக ஃபிடல் கொண்டாடப்பட்ட காலமும் உண்டு. அதனாலன்றோ தென்னாப்பிரிக்கக் கருப்பினத் தலைவரும், அதன் அதிபருமான நெல்சன் மண்டேலா தன்னுடைய 27 ஆண்டுகாலச் சிறைவாசத்தை முடித்தவுடன் கியூபாவின் தலைநகர் ஹவானாவுக்கு வந்து ஃபிடலை ஆரத்தழுவித் தன் நன்றியறிதலை வெளிப்படுத்தினார்.

    fidel_castroindraநம் இந்தியத் திருநாட்டோடும் நல்ல நட்புறவு கொண்டிருந்தார் ஃபிடல். அணிசேரா நாடுகளின் அமைப்பில் (NAM – Non Aligned Movement) உறுப்பினராய் இருந்த இந்தியாவின் பண்டித நேருவும், கியூபாவின் ஃபிடலும் நியூயார்க் நகரில் முதன்முதலில் சந்தித்தபோது வேர்விட்ட நட்பு அது. பின்னர், நேருவின் மகளார் இந்திராவின் காலத்தில் மேலும் பலப்பட்டது. அன்னை இந்திராவைத் தன் உடன்பிறப்பாகவே எண்ணி அன்புபாராட்டினார் ஃபிடல்.  

    பிரதம மந்திரியாகவும் பின்னர் அதிபராகவும் ஐம்பதாண்டுகளுக்கு மேல் கியூபாவைக் கட்டிக்காத்த ஃபிடலின் உடல்நிலை 2006ஆம் ஆண்டின் மத்தியில் (July 2006) சீர்கெடத் தொடங்கிற்று. தம் பெருங்குடலில் ஏற்பட்ட குருதிப்பெருக்கை நிறுத்த அவர் அறுவைசிகிச்சை மேற்கொள்ளவேண்டியதாயிற்று.

    ஃபிடலின் நிலைகண்டு மகிழ்ந்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ், ”மிகவும் நல்லவரான ஆண்டவர் ஃபிடலை ஒருநாள் (தம்மிடம்) அழைத்துச் செல்வார்” என்று குத்தலாகச் சொல்ல, அதனையறிந்த கடவுள் மறுப்பாளரான ஃபிடல், “இப்போது எனக்குப் புரிகிறது… புஷ்ஷும் அவரையொத்த பிற அமெரிக்க அதிபர்களும் எனக்கு எதிராக நிகழ்த்திய படுகொலை முயற்சிகளிலிருந்தெல்லாம் நான் எவ்வாறு தப்பிப் பிழைத்தேன் என்று! புஷ் குறிப்பிடும் மிகவும் நல்லவரான அந்த ஆண்டவர்தான் என்னைக் காத்திருக்கின்றார்!” என்று நக்கலாகப் பதிலடி கொடுத்தார். (One day the good Lord will take Fidel Castro away”. Hearing about this, the atheist Castro ironically replied: “Now I understand why I survived Bush’s plans and the plans of other presidents who ordered my assassination: the good Lord protected me). ஃபிடலின் இந்தச் சாதுரியமான பதில் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாய் அப்போது எங்கும் உலா வந்தது. உளவுத்துறையின் (CIA) உதவியோடு  ஃபிடலைக் கொல்ல 638 தடவை அமெரிக்கா முயன்றதாகத் தெரியவருகின்றது.

    முதுமை காரணமாகப் பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு ஆட்படத் தொடங்கிய ஃபிடலால் அரசாங்கப் பணிகளில் முன்புபோல் கவனம் செலுத்தமுடியவில்லை. எனவே, முக்கியப் பொறுப்புக்களை 2008-இல் தன் இளவல் ரௌல் காஸ்ட்ரோவின் வசம் தந்தவர், கட்சிப்பொறுப்புக்கள் அனைத்திலிருந்தும் விலகி, 2011-இல் ஆட்சிப்பொறுப்பை முழுமையாய் ரௌலிடமே ஒப்படைத்தார்.

    கியூபாவின் மெசையாவாக (Messiah – The savior) பலராலும் போற்றப்பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ, மார்க்சியப் பொதுவுடைமைக் கொள்கைகளைப் பரப்பவும், அதனைத் தம் மண்ணில் நிலைக்கச்செய்யவுமே தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். சந்தைப் பொருளாதாரத்தை நயந்து உலகநாடுகள் அனைத்தும் அதன்பின்னே (ஆட்டு) மந்தைகளாய் நின்றபோதும் அதற்கு ஆட்படாமல் விலகியே இருந்தார் அவர். அதன்விளைவாய்க் கியூபாவின் உள்நாட்டுப் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்ததை மறுப்பதற்கில்லை. ஆயினும், கட்டற்ற பொருளாதாரத்தை ஃபிடல் ஆதரிக்கவில்லை. இதனால் சொந்தநாட்டு மக்களின் வெறுப்புக்கும், விமரிசனத்துக்கும் அவர் ஆளாகவேண்டிய சூழலும் உருவானது. அப்போதும் தன்னுடைய கம்யூனிசக் கொள்கைகளைக் கைவிடாத லட்சியவாதியாகவே அவர் வாழ்ந்தார்.

    இவ்வாறு, தூய கம்யூனிசத்தையே தன் உயிர்மூச்சாகக்
    கொண்டு பொதுவுடைமை வானில் சுடர்விட்ட அந்தMOSCOW, RUSSIA - NOVEMBER 26, 2016: Flowers at the Cuban Embassy in Moscow in memory of Cuba's revolutionary leader and former president Fidel Castro. Castro died aged 90 on November 25, 2016. Artyom Geodakyan/TASS (Photo by Artyom GeodakyanTASS via Getty Images) விடிவெள்ளி, சென்ற வெள்ளியன்று (நவம்பர் 25, 2016) மறைந்தது. ’கம்யூனிசத்தின் கடைசிமூச்சு நின்றுவிட்டது’ என்று முதலாளித்துவ ஆதரவாளர்கள் ஃபிடலின் மரணத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடிவருகின்றனர்.

    இச்சூழலில், ஃபிடலின் கம்யூனிசக் கொள்கைகள் குறித்து அவர்நாட்டு மக்களின் மனநிலை என்ன என்று ஆராய்வது(ம்) அவசியமாகின்றது.

    fideland-redஃபிடலின் தொடக்க காலப் போராட்ட வாழ்வையும், கம்யூனிசத்தை அவர் அரும்பாடுபட்டு வளர்த்த பாங்கையும் அறிந்த கியூபாவின் சென்ற தலைமுறையினர் இன்னமும் அவரைப் போற்றுதலுக்குரிய பொதுவுடைமைவாதியாகவே பார்க்கின்றனர். ஆனால், தகவல் தொழில்நுட்ப யுகத்தின் அசுரப்பிடியில் சிக்கியிருக்கும் இன்றைய இளந்தலைமுறையினரோ நாட்டின் முன்னேற்றத்திற்கும், தகவல்தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் கம்யூனிசம் பெரும் இடையூறாய் இருப்பதாகவே எண்ணுகின்றனர்.

    இளைஞர்களின் ஆதரவில்லாத கொள்கையும், தலைவரும் வெற்றிபெறுவது அரிது. ஆகவே, ஃபிடலின் மறைவு கம்யூனிசத்தின் நிலையை இன்று கவலைக்கிடமாகவே மாற்றியுள்ளது.

    கம்யூனிசத்துக்கு எதிரான இளைஞர்களின் மனநிலை மாறவேண்டும்; ஓடப்பரையும் உயரப்பரையும் ஒப்பப்பராய் மாற்றும் சிவப்புச் சித்தாந்தத்தை அவர்கள் மீண்டும் வெற்றியோடு வலம் வரச்செய்யவேண்டும் என்பதே அவற்றின்மீது உவப்புக் கொண்ட மக்களின் அவா.

    வருங்காலம் இதற்கான விடை சொல்லும்!

    *********

    References:

    http://opinion.inquirer.net/87678/cuba-si-yanqui-no

    https://en.wikipedia.org/wiki/Fidel_Castro

    தமிழ் இந்து – http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/article9391560.ece?ref=sliderNews

    http://learning.blogs.nytimes.com/2012/04/17/april-17-1961-the-bay-of-pigs-invasion-against-castro/

     

     

     

    Share
  • தீபம்

    கார்த்திகைத் தீபம் வரபோகிறது. கவிஞர் கவிஞர் எஸ்.ஆர்.ஜி சுந்தரம் எம்.ஏ எட்டு சுடர் விடும் தீபங்களை ஏற்றியிருக்கிறார். படித்து ரசியுங்கள்.

    உமாஸ்ரீ

     

    அன்றைய பாரத விடுதலைக்கே

    அனைத்தியு மிழந்த அமரர்க்கு

    அஞ்சலியா யேற்றுவோம் ஒருதீபம் !

     

    பாரத எல்லைப் பாதகரைப்

    பதராய் விரட்டும் படைகட்குப்

    பணிவா யேற்றுவோம் ஒருதீபம் !

     

    பாரதம் போற்றிய பண்பாட்டில்

    பாதை யமைத்து வாழ்வோர்க்குப்

    பக்தியா யேற்றுவோம் ஒருதீபம் !

     

    இலஞ்ச பொன்னும் இழுக்கினுக்கே

    இலக்கா காநல் தூயோர்க்கு

    இனிதா யேற்றுவோம் ஒருதீபம் !

     

    முதியோர் பணியில் முகஞ்சுளியா

    முதிர்ந்த ஞான முற்றோர்க்கு

    முத்தா யேற்றுவோம் ஒருதீபம் !

     

    ஊன முற்ற உயிர்களெலாம்

    உயர்ந்து வாழ உழைப்போர்க்கு

    உவந்தே யேற்றுவோம் ஒருதீபம் !

     

    மானுட வாழ்வு மாண்புறவே

    முத்தமிழ் இலக்கியம் முனைவோர்க்கு

    மறவா தேற்றுவோம் ஒருதீபம் !

     

    தேச நலமே தம்பணியெனும்

    தேசப் பற்றுடைத் தூயோர்க்கு

    தினமு யேற்றுவோம் ஒருதீபம் !

    Share
  • வானம்பாடி

    க. பாலசுப்ரமணியன்

     senseofagoosetop

     

    நீரைத்தேடி..

    நிலத்தைத்தேடி ..

    நிழலைத்தேடி….

    வானம்பாடி !

     

    உணவைத்தேடி

    உறவைத்தேடி

    ஊரைத்தேடி

    வானம்பாடி !

     

    வில்லின் அம்பாய்

    வானில் கோலங்கள்

    விண்ணும் மயங்கும்

    மண்ணும் வியக்கும்

    நாளையைத் தேடி

    இன்றே பயணம் ..

     

    வீடுகள் தாண்டி

    நாடுகள் தாண்டி

    உலகின் மொழியாய்

    ஒன்றே குரலாய்

    அன்பைப் பகிர்ந்திட

    அரங்கங்கள் தேடி..

    வானில் பறக்கும்

    வானம்பாடி !

     

    காற்றும் மழையும்

    காலையில் வந்தால்

    மாலையில் மறையும்

    கலங்கியே நின்றால்

    காலங்கள் தோற்கும்

    கடமைகள் முடிக்க

    கலங்கிட மறுக்கும் 

     

    சிறகுகள் திறந்ததும்

    சிதறிடும் துயரங்கள்

    சிந்தனை ஒன்றிட

    சீரிய பயணம்

     

    வானில் பறக்கையில்  

    வீடும் ஒன்று,

    வாசமும் ஒன்று ;

    ராகங்கள் ஒன்று

    கானங்கள் ஒன்று

     

    வாழ்க்கை ஓட்டத்தை

    வாழ்ந்தே காட்டும்

    வாழ்ந்தே  காட்டும்

    வானம்பாடி !

    Share
  • ஒரு ‘ஈ’ யின் விலை 3300 ரூபாய்!

    -தமிழ்த்தேனீ

    சார்லி சாப்ளின் நகைச்சுவை மன்னர்.  அவருடைய  நடிப்பு நம்மை வயிறுகுலுங்கச் சிரிக்கவைக்கும்.  அப்படிப்பட்ட  சார்லி சாப்ளினும்   அவருடைய நண்பர் ஒருவரும்  ஒரு உணவு விடுதியில் உணவு அருந்திக் கொண்டிருந்தனர்.   அங்கே  ஈக்களின் தொந்தரவு அதிகமாக இருக்கவே  அவர் கையில் Bee Swatter   என்னும்   ஈ அடிக்கும் கருவி ஒன்று அந்த உணவு விடுதியின் நடத்துனரால் கொடுக்கப்பட்டது. வரும்போது  அந்தக் கருவியால் ஈயை  அடித்துவிடலாம், ஒரு ஈ பறந்து சார்லி சாப்ளினின்  அருகில் வந்து அவரைத் தொந்தரவு செய்துவிட்டு பறந்து சென்றது; அப்போது அவரால் அந்த ஈயை அடிக்க முடியவில்லை.  மறு முறை  ஒரு ஈ வந்து அவர் அருகில் பறந்து கொண்டிருந்தது. சார்லி சாப்ளின் அந்த ஈயை அடிக்காமல் இருக்கவே  பக்கத்தில் இருந்த நண்பர்  அந்த ஈயை அடியுங்களேன் என்றார், அதற்கு  அப்போது என்னை தொந்தரவு செய்த ஈ இதல்ல என்றார்.

    பொதுவாக  ஈக்களின் தொந்தரவு அதிகமிருக்கும் இடங்களில் பினாயில் என்னும் திரவத்தைப் பத்து ரூபாய் கொடுத்து வாங்கி, அந்தத் திரவத்தை  தண்ணீரில் கலந்து  துடைத்தாலே ஈக்கள் அங்கே வராது சற்று நேரத்துக்கு, ஈக்களுக்கு பினாயிலின் வாடை பிடிப்பதில்லை. ஆகவே பல ஈக்களை விரட்ட பத்து ரூபாய் செலவு செய்தால் போதும்.  ஆனால் ஒரு ஈயைக் கண்டுபிடிக்க  எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று  அனுபவப்பட்டவர்களுக்குத்தான்  தெரியும்,      ஒரு எலியைப் பிடிக்க இருபது ரூபாய் கொடுத்து ஒரு எலிப்பொறி வாங்கி வைத்து மேலும் அந்த எலியை அந்தப் பொறிக்குள் இழுக்க  மேலும் ஐந்து ரூபாயை செலவழித்து ஒரு மணக்கும் மசால்வடையையும்  வாங்கி அந்த பொறிக்குள்ளே இருக்கும் கம்பியில் லாவகமாகச் சொருகி வைக்க வேண்டும். அந்த மசால் வடையின் வாசனையை நுகர்ந்து அந்த எலி அதனால் கவரப்பட்டு  எலிப்பொறிக்குள் வந்து அந்த மசால் வடையை வாயால் கவ்வ முயலும்போது அந்த கம்பி  நெகிழ்ந்து எலிப்பொறியின் வாயை அடைத்துவிடும், எலியும் பொறியில் மாட்டிக்கொள்ளும்.

    ஆனால் இப்படிப்பட்ட  எந்த வலையினுள்ளும் மாட்டிக்கொள்ளாமல் லாவகமாகப் பறந்து சென்றுவிடும் ஈக்களையும் கொசுவையும் பிடிப்பதரிது.   அதுவும் நமக்கு  ஆராய்ச்சிக்காக  ஒரு ஈ அல்லது கொசு வேண்டும் என்றால் அதைப் பிடிப்பது மிகவும் கடினம்.   இவையெல்லாம் ஒரு புறமிருக்க ஒரு ஈ யினால்  எனக்கு ஏற்பட்ட உபத்ரவம் சொல்லி முடியாது. அந்த ஈயைத் தள்ளவும் முடியாமல், வைத்துக்கொள்ளவும் முடியாமல் நான் பட்ட அவதிகள் அதிகம். ஆனாலும் அந்த ஈ திடீரென்று ஒரு நாள் காணாமல் போனபோது என்னால் எந்த வேலையையும் செய்ய முடியாமல் நான் பட்ட அவதி இருக்கிறதே அதுவும் மிகக் கொடுமை.  ஆனால் அந்த ஈ இல்லாமல் வேலை செய்வது மிகவும் கடினம் என்று உணர்ந்து அந்த ஈ யை எப்படியும் மீண்டும் அடைந்தே தீருவது  என்னும் முடிவுக்கு நான் தள்ளப்பட்டேன், அதனால்  பல இடங்களில், அலைந்து அந்த ஒற்றை ஈயைக் கண்டுபிடிக்க  என்னுடைய நான்கு சக்கர வாகனத்தில் பல இடங்களுக்கு  அலைந்ததில் எரிபொருள் செலவு கிட்டத்தட்ட  500.00 ரூபாய்.

    அப்படித் தேடிக்கொண்டிருக்கும்போது  ஒருவர்  அந்த குறிப்பிட்ட ஈ இருக்கும் பலகை ஒன்று இருக்கிறது. அந்த ஒற்றை ஈ இருக்கும் ஒரு சிறிய பலகையை அதை வாங்கிக்கொள்ளுங்கள் உங்கள் பிரச்சனை தீரும் என்றார்; சரி வேறு வழியில்லை… அந்தப் பலகையையே வாங்கிவிடலாம் என்று முடிவெடுத்து  நண்பர் கூறிய  கடையை அணுகினேன்.  அந்தக் கடையில் அந்த ஈ  என்ன தயாரிப்பு, எந்த  நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது  என்று கேட்டார்கள், அப்போதுதான்  எனக்கு நினைவு வந்தது அந்த ஈ உள்ள பலகையை பொருத்த வேண்டிய கருவியை எடுத்துக்கொண்டு போகாமல் நான் சென்றது, சரி என்று வீட்டுக்கு வந்து  அந்தக் கருவியை கையோடு எடுத்துக்கொண்டு போய் அந்தக் கடையில் காண்பித்தேன். அந்தக் கருவியைப் பார்தவுடன் ஓ இதுவா சற்றே இருங்கள்  என்று கூறிவிட்டு ஐந்து ஆறு பேர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு. கடைசியாக  ஒருவரிடம் அந்த ஈ உள்ள பலகை இருப்பதாகவும்  ஆனால் அவர் 2800.00 ரூபாய் கேட்கிறார் என்றார் அந்தக் கடைக்காரர்; என்ன செய்வது  வாங்கித்தான் தீரவேண்டும், வேறு வழியில்லை சரி என்று கூறி 2800.00 ரூபாயை அவரிடம் அளித்து  அந்த ஈ உள்ள பலகையை வாங்கிப் பொருத்தினேன்.

    ஆமாம் என்னுடைய  எச் பி காம்பாக் மடிக்கணிணியில் இருந்த  E வெகு நாட்களாக அடிக்கடி வெளியே வந்து விழுந்து கொண்டே இருந்தது, அந்த ஈ(E) தனியாகக்  கிடைத்திருந்தால்  ஒரு நூறு ரூபாய்க்குள் முடித்திருக்கலாம், அந்த தனி  ஈ (E) வாங்கிப் பொருத்த தேடி அலைந்து ,  கடைசியில் முடியாமல் போய் அந்த E யும் இருக்கும் தட்டச்சு பலகையை வாங்கிப் பொருத்தினேன்.

    அதற்கு ஆன செலவு  மொத்தம் 3300 ரூபாய்கள்.

    ”தீயினால் சுட்ட புண் உள்ளாறும்
    ஆறாதே ஈயினால் பட்ட வடு”

     

     

     

    Share
  • களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் (KALARI HERITAGE&CHARITABLE TRUST)

    மு. ஹரிகிருஷ்ணன

    அன்புடையீர் வணக்கம்

    கூத்து நமது மரபுக்கலை .ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானதும் பழமையானதும் மட்டுமல்ல தனித்ததோர் பண்பாட்டு அடையாளமும் கூட .மீள்வதற்கு அரிய வறுமையில் உழன்று வாழ நேர்ந்தாலும் நிலை பிறழாது நிகழ்த்துதல் வழி ஒப்பற்ற கலைகளை பற்றி உயிர் கொடுத்து வளர்த்து வருகிறார்கள் நம் சகோதரர்கள் .

    இவ்வரசியல் பூதலத்தில் தொல்கலைஞர்கள் வாழ்வாதாரம் உயரும்படியான பொருளாதார சூழலை உருவாக்குவது உரிய அங்கீகாரம் வழங்குவது அவர்களை இனங்கண்டு பாராட்டுவது ஊக்குவிப்பது சமதையான வாய்ப்பளிப்பது மேலும் இவற்றின் மூலம் கலைகளை மீட்டெடுப்பதுடன் அதன் தொன்மம் மாறாது பாரம்பரியம் வழுவாது எதிர்கால சந்ததிகளிடம் அவற்றை கையளிக்கும் கடமையும் நமக்கிருக்கிறது .

    மேற்சென்ன களப்பணிகளில் கடந்த 10 ஆண்டு காலங்களாக முனைப்புடன் செயல்பட்டு வரும்களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் நிகழ்த்து கலைஞர்களை எழுத்துக்கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக மக்கள் கலையிலக்கிய விழாவை எதிர் வரும்2017 ஜனவரி மாதம் முதல் நாள் சேலம் மாவட்டம் , மேட்டூர் வட்டம் , ஏர்வாடி கிராமத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறது . ஆகவே தாங்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்

    இப்படிக்கு,

    மு. ஹரிகிருஷ்ணன்,
    ஆசிரியர் -மணல்வீடு.

    (நிகழ்வு நிரல் மாற்றத்திற்கு உட்பட்டது )

    களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்
    (KALARI HERITAGE&CHARITABLE TRUST )

    நிகழ்த்தும் மக்கள் கலையிலக்கிய விழா
    இடம்-ஏர்வாடி,குட்டப்பட்டி- அஞ்சல்,மேட்டூர்-வட்டம், சேலம்-மாவட்டம்-636453
    நாள் -01-01-2017

    அமர்வு-1- பிற்பகல்-3-00 மணி

    களரி கூட்டல்..தில்லையம்பல நடராஜர் நாடக சபா-அம்மாபேட்டை

    அமர்வு-2- பிற்பகல் 3-30 மணி

    மணல்வீடு இலக்கிய வட்டம் வழங்கும் எழுத்தாளர்
    கு .அழகிரிசாமி இலக்கிய விருது

    பெறுபவர் -எழுத்தாளர் -ஷோபா சக்தி

    படைப்பும் படைப்பாளரும் -லக்ஷுமி மணிவண்ணன்

    மணல்வீடு இலக்கிய வட்டம் வழங்கும் எழுத்தாளர்
    ராஜம் கிருஷ்ணன் இலக்கிய விருது

    பெறுபவர் -எழுத்தாளர் -பெருந்தேவி

    படைப்பும் படைப்பாளரும் -க .பஞ்சாங்கம்

    அமர்வு-3 பிற்பகல் 4 மணி

    நூல் வெளியீடு

    அங்குசம் – கவிதைப் பிரதி- தவசிக்கருப்புசாமி

    இசையோடு வாழ்பவன் -கவிதைப் பிரதி-சு ,வெங்குட்டுவன்

    எறவானம் -கவிதைப் பிரதி-வினையன்

    அமர்வு -4-மாலை 5 மணிக்கு – கலைஞர் பெருமக்களுக்கு விருது -பரிசு-பாராட்டு -கௌரவிப்பு

    கூத்துக்கலைஞர்- அமரர் க.ராஜு நினைவு விருது பெறுபவர்

    இளவல் -சீனிவாசன் – கூத்துக்கலைஞர் -கோழிக்காட்டானூர்

    அமரர் துரைசாமி வாத்தியார் நினைவு விருது

    முனுசாமி -மிருதங்கக்கலைஞர் -பள்ளிப்பட்டி

    தேவநாதன் -மிருதங்கக்கலைஞர்-சீராகாப்பாடி

    அமரர் குரும்பனூர் காளி வாத்தியார் நினைவு விருது
    .
    தங்கவேல் -கூத்துக்கலைஞர் -துத்திபாளையம்

    செல்லமுத்து – கூத்துக்கலைஞர்- மோர்பாளையம்

    கணேசன் – கூத்துக்கலைஞர்-மாணிக்கம்பட்டி

    அர்ச்சுனன் -கூத்துக்கலைஞர் -தானாபதியூர்

    வீரப்பன் -கூத்துக்கலைஞர் -சிகரல அள்ளி

    அமரர் சடையன் வாத்தியார் நினைவு விருது

    செல்லப்பன் -கூத்துக்கலைஞர் –அம்மாபேட்டை

    நிகழ்வில்

    நவீன ஓவியம் -படைப்புலகு-நிகழ் கலை மற்றும் நாடக ஆளுமைகள்

    நிகழ்வு தொகுப்பு
    நறுமுகை -வெய்யில்
    நன்றியுரை-மு.ஹரிகிருஷ்ணன்
    ——————————————————————————–
    அமர்வு-5-மாலை -7-00மணி
    பரதன் பாதுகா பட்டாபிஷேகம் -தோல்பதுமைக் கூத்து
    வழங்குபவர்-கணேசன் -அம்மாபேட்டை
    உதவி-ரமேஷ்-அம்மாபேட்டை
    மிருதங்கம்-நடராஜன்-அம்மாபேட்டை
    முகவீணை -குமார்-மணியாரன் கொட்டாய்
    ஹார்மோனியம் – தருமன்-அம்மாபேட்டை
    ———————————————————————————
    8 மணிக்கு-இரவு உணவு

    அமர்வு-6 இரவு-9-00 மணி
    பாரதத்தில் பதிமூன்றாம் நாள் யுத்தம் -கூத்து
    தில்லையம்பல நடராஜர் நாடக சபா-அம்மாபேட்டை

    சிறப்பு செய்வோர்

    பெருமைக்குரிய வாத்தியார்கள் -மதிப்பிற்குரிய படைப்பாளர்கள்

    நிகழ்விடம்

    சேலம் -மேட்டூர் பிரதான சாலையில் பொட்டனேரி நிறுத்தத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது

    தொடர்புக்கு
    இர.தனபால்
    அறங்காவலர்
    9677520060
    9894605371

    நிகழ்ச்சி ஏற்பாடு
    களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்
    (KALARI HERITAGE&CHARITABLE TRUST)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    161129 -Yogacharya -wcolor-lores

    ”ஆச்சரியன் ஆவுக்கு, ஆச்சார்யன் அர்ஜுனர்க்கு,
    பூச்சொறிந்து வானவர் போற்றியுடல் -கூச்செரிந்து
    பார்க்கின்ற யோகீஸர் பாற்கடல்சே டன்வளர்
    ஆர்க்கின்ற ஆழியவர் அன்பு’’….கிரேசி மோகன்….!

    ஆர்க்கின்ற ஆழி -சத்தமிடும் கடல்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    161128-Vraj diary - lores
    161128-Vraj diary – lores

    ”சினம்மிகுந்த மாமன் சிறைபிறந்து ஆயர்
    இனம்புகுந்து வாழ்ந்த இடையன் -மணம்குவிந்த
    மண்ணணைநீர் மேகத்து வண்ணனை மாற்றான்தாய்க்
    கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….!

    Share
  • கையாலாகாதவனாகிப்போனேன்! – 2

    ஒரு அரிசோனன்

    2.  மூக்குக்கண்ணாடி

     எனக்கு ஒன்பது வயதிலேயே கிட்டப்பார்வை வந்துவிட்டதால் மூக்குக்கண்ணாடி போடநேர்ந்தது. வகுப்பில் கரும்பலகையில் ஆசிரியர் எழுதுவது முதல் பெஞ்ச்சில் உட்கார்ந்தும் மங்கலாகத் தெரிந்ததால், பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாணவனைப் பார்த்து எழுத்த்துவங்கினேன்.  அவன் முதலில் அதை அனுமதித்தபோதிலும், தேர்வுகளில் என்னைப் பார்த்து அவன் எழுத நான் அனுமதிக்காததால், அதற்குமேல் எனக்கும் அனுமதி மறுத்துவிட்டான்.  தேர்வுவேறு, மற்றசமயம்வேறு என்று நான் பலவாறு எடுத்துரைத்தும் அவன் காதில் அந்த நியாயம் ஏற்வில்லை.

    அதுவும் நல்லதற்கே என்று பின்னால்தான் தெரிந்தது.  இல்லாவிட்டால் அதிகமான கிட்டப்பார்வை மிகவும் மோசமாகியிருக்கும்.

    அனுமதி மறுக்கப்பட்டதால், வேறுவழியின்றி, முதல்பெஞ்சிலிருந்து இறங்கித் தரையில் அமர்ந்து கரும்பலகையைப் பார்த்து எழுதத் துவங்கியபோதுதான் ஆசிரியர் என்னவென்று விசாரித்தார்.

    “அவன் பொட்டைக்கண்ணு சார்; அவனுக்குக் கண்ணு சரியாகத் தெரியாது!” என்று எனக்கு அனுமதிமறுத்த மாணவன் ஒரு பெரிய உண்மையை முதன்முதலில் கண்டுபிடித்து அறிவிப்பதுபோல — ஆசிரியருக்கு மட்டுமன்றி, வகுப்பிற்கும் உரத்தகுரலில் அறிவித்தான்.

    அன்றிலிருந்து சில ஆண்டுகள் ’பொட்டைக்கண்ணன்’ என்ற பட்டப்பெயர், நான் மூக்குக்கண்ணாடி அணிந்து சரியான பார்வையைப் பெற்றும்கூட என்னைத் தொடர்ந்துவந்தது.

    என் தாய்வழிப்பாட்டனாரை நன்கறிந்த எனது ஆசிரியர் என் கண்களைப்பற்றிய உண்மையைத்[!] தெரிவித்ததும், மதுரைக்கு அழைத்துச்சென்று — ஏனெனில் காரைக்குடியில் அப்பொழுது சிறந்த கண்மருத்துவர் இல்லை– கண்களைச் சோதித்துக் கண்ணாடி வாங்கித்தந்தார்கள்.

    கண்ணாடியைத் தேவையின்றிக் கழட்டக்கூடாது என்ற மருத்துவரின் பரிந்துரை என் நெஞ்சில் ஆழமாக்ப் பதிந்திருந்ததால், எனது மூக்குக்கண்ணாடி ஒருவகையில் எனக்குக் கவசகுண்டலமாகிவிட்டதென்றால் மிகையில்லை.

    வகுப்பிலேயே கண்ணாடியணிந்த மாணவன் நான் ஒருவன் என்பதால், நான் பலவிதச் சோதனைகளுக்குள்ளாக நேர்ந்தது. உடன்பயிலும் நண்பர்கள் என் பார்வையைச் சோதிக்கவேண்டி, கண்ணாடியுடனும், அது இல்லாமலும், அவர்கள் சுட்டும் கைவிரல்கள் எத்தனை என்ற பரிசோதனைக்கு ஆளாக்கப்பட்டேன். அலுத்துவிட்டபடியால் அவற்றை மறுத்த எனக்கு, ‘சோடாபுட்டி’, ‘கோலிசோடா,’ ‘நாலுகண்ணன்’ போன்ற கௌரவப்பட்டங்களும் தாராளமாக வழங்கப்பட்டன.

    கண்ணாடியைக் கழட்டக்கூடாது என்ற சூழ்நிலை ஏற்பட்டதால், விளையாட்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டியிருந்தது.  அதனால் விளையாட்டு பிரியடுகளில் பாடப்புத்தகத்தைப் படித்துப் பொழுதுபோக்கியதால், தேர்வில் மதிப்பெண்கள் உயர்ந்தன என்பது ஒரு நல்ல பக்கவிளைவு.

    இப்படியிருக்கையில் சிவகங்கையை அடுத்த சோழபுரத்தில் எனது ஒன்றுவிட்ட மாமனின் திருமணம் நடந்ததால், மூன்று நாள்கள் அங்கு செல்லவேண்டிவந்தது ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்தது. யாரும் என்னைப் பட்டப்பெயர் சொல்லி அழைக்கமாட்டார்களென்ற மகிழ்வுடன், என் வயதொத்த எனது உறவுச் சிறார்களையும் சத்திக்கலாமென்ற மகிழ்வும் சேர்ந்துகொண்டது.

    முதல் நாளே திருமண நிகழ்ச்சிகள் ‘போர’டித்துவிட்டன.  கைக்கெட்டும் கூந்தல்பனை இலைகளைக் கிழித்து ஊதல் செய்து விளையாடுவதும், அதில் விமானம் செய்து மகிழ்வதற்கும், எங்கள் மாமா அதட்டல்போட்டு முற்றுவைத்தார்.  அத்தோடுநில்லாமல், எங்கள் கையிலிருந்த ஊதலையும், விமாங்களையும் பறித்துக் கிழித்தும் எறிந்துவிட்டார்.  பெரியவராயிற்றே!  எதிர்த்துப்பேசவியலாத ஒரு கையாலாகாத்தனம்.  அதுமட்டுமல்ல, எதிர்த்துப்பேசினால் கன்னத்தில் அறைவிழும், அதைத் தவிர்க்கவேண்டும் என்ற புத்திசாலித்தனமும்கூட…

    எனவே, என்னசெய்யலாம் என்று அலைந்து திரிந்துகொண்டிருந்த நானும், என் மாமன் மகனும் திருமணமண்டபத்திற்கு அருகாமையில், சிவகங்கையிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையோரத்தில் இருக்கும் சுமைதாங்கியில் ஏறி அமர்ந்து, இரண்டுபக்கமும் செல்லும் பஸ்களை எண்ணிக்கொண்டிருந்தோம்.

    அப்பொழுது ஒரு மூதாட்டியும், என் வயதொத்த ஒரு சிறுவனும், ஒரு ஆட்டுக்குட்டியுடன் அங்குவந்து நின்றனர்.

    எங்களைப் பார்த்த அச்சிறுவன் விடுவிடென்று சுமைதாங்கியில் ஏறி, என்னருகில் அமர்ந்துகொண்டான்.

    “எலே, முனிசாமி, பார்த்துடா;  கண்ணுதெரியாமக் காலைவச்சு விளுந்துடாதடா.” என்று கரிசனத்துடன் கூறினாள்.

    எனக்குத் திக்கென்றது.  என்னருகில் அமர்ந்த சிறுவனை ஏற இறங்கப் பார்த்தேன்.

    வழியவழிய எண்ணெய்தடவி வாரப்பட்ட சுருட்டைமயிர்; அதிகப்படியான எண்ணெய் நெற்றியில் இறங்கி புருவத்தைத் தொட்டு நின்றதோடுமட்டுமல்லாமல், அவன் பூசியிருந்த திருநீற்றையும் கருப்பாக்கியிருந்தது.  பெரிய கண்கள்; வெள்ளைவெளேரென்ற விழியின் நடுவில் பளிச்சிடும் கருவிழி…

    இவனுக்கா கண் தெரியவில்லை?!

    முனுசாமி என் கண்ணாடியைக் கூர்ந்து கவனித்தான்.

    அவன் மட்டுமல்ல, அந்த மூதாட்டியும் கவனித்தாள் என்பது இருவரும் ஒரே சமயத்தில், “ஏன் தம்பி, உனக்கு அதுக்குள்ள வெள்ளெழுத்து வந்துடுச்சா?  கண்ணாடி போட்டிருக்கியே?” இருவரும் கேட்ட கேள்வியிலிருந்து தெரிந்தது.

    சிறிது தயங்கிய நான், ‘வெள்ளெழுத்து இல்லை.  தூரத்திலே இருக்கறது மங்கலாத் தெரியும், அதனாலே கண்ணாடி போட்டிருக்கேன்,” என்று பதில் சொன்னேன்.

    ஏதோவொரு அதிசயத்தைக் கண்டதுபோல என் கண்ணாடியையே உற்றுநோக்கினான், முனுசாமி.

    “எனக்கும் தூரத்தில இருக்கறது மங்கலாத்தான் தெரியுது.  இந்தக் கண்ணாடியைப் போட்டுக்கிட்டா நல்லாக் கண்ணு தெரியுமா?”

    முனுசாமியின் குரலில் ஏக்கம், நம்பிக்கை, வியப்பு கலந்திருந்தன.

    “ஆமாம், தெரியும்,” என்று சுருக்கமாகப் பதிலளித்தேன் நான்.  பள்ளி நண்பர்களின் ஏச்சுக்கும், எள்ளலுக்கும் பாத்திரமாகிவந்தபடியால், எனது கிட்டப்பார்வையைப்பற்றி அதிகம் பேசவிரும்புவதில்லை நான்.

    சிறிதுநேரம் ஒன்றுமே பேசாமல் முனுசாமி தன்னுடன் வந்த மூதாட்டியையும், என் கண்ணாடியையும் பார்த்துக்கொண்டே இருந்தான்.

    மிகவும் தணிந்த குரலில், “எனக்கு கண்ணு நல்லாத் தெரிஞ்சா எப்படி இருக்குமிண்டே தெரியாது.  உன்னோட கண்ணாடிய ஒரு நிமிசம் போட்டுப் பாக்கலாமா?” என்று கேட்டான்.

    எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.

    என்னையும் அறியாமல் என் கைகள் கண்ணாடியைக் கழட்டச் சென்றன.

    “வேண்டாம்.  கண்ணாடியைக் கழட்டக்கூடாதுன்னு வீட்டிலே சொல்லியிருக்காங்க இல்லையா?  எனக்கே நீ ஒருதடவைகூட..” என்று எச்சரித்த எனது மாமன்மகனையும் பொருட்படுத்தாது என் கண்ணாடியை முனுசாமியிடம் நீட்டினேன்.  என்னையுமறியாமல் அவன் எனக்கு மிகவும் நெருங்கிவந்துவிட்டதைப்போன்ற ஒரு நேச உணர்வு..

    ஏதோவொரு மாயக்கண்ணாடியை வாங்குவதுபோன்ற எதிர்பார்ப்புடன், மிகவும் கவனமாக என்னிடமிருந்து மூக்குக்கண்ணாடியை வாங்கி, மெல்ல அதை அணிந்துகொண்டான் முனுசாமி.

    அவன் தலை நாலாபக்கமும் சுழன்றது.

    வாயெல்லாம் பல்லாக அவன் முகம் மலர்ந்தது.

    “ஆயா, கண்ணு நல்லாத் தெரியுது ஆயா!  ஒம் மூஞ்சிலே இவ்வளோ சுருக்கம் இருக்குன்னு இப்பத்தான் பாக்குறேன்.”  இதுவரை கண்டிராத மூதாட்டியின் முதுமையைக் கண்டதில் அவனுக்கு அவ்வளவு பரவசம்!

    “கோயில் கோவரத்திலே எத்தன பொம்மைக இருக்கு, ஆயா!  இதுவர அதுக இருக்குன்னுகூட எனக்குத் தெரியல.  இது மாயக்கண்ணாடிதான், ஆயா!”

    அவனது மகிழ்ச்சி என்னையும் தொற்றிக்கொண்டது.

    “வேறென்ன தெரியுது?  கண்ணாடி இல்லாம எனக்கு இப்ப கோபுர பொம்மைகள் தெரியலே!”  என்று என் நிலைமையை அவர்களுக்கு அறிவித்து மகிழ்ந்தேன்.  என் இயலாமையை வெளியிடுவதில், அதைத் தயக்கமில்லாமல் பகிர்ந்துகொள்வதில் – அதைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு ஜீவனிடம் பகிர்ந்துகொள்வதில் கிடைத்த அந்த நிம்மதி, அந்த மகிழ்ச்சியை எண்ணும்போது இப்பொழுதும் இனிக்கிறது.

    “நெசமாவா சொல்லுறே, முனுசாமி?  இந்தக் கண்ணாடியைப் போட்டுக்கிட்டா, ஒனக்குக் கண்ணு நல்லாத் தெரியுதா?!”

    மூதாட்டி பெரிய சொத்து கிடைத்துவிட்டமாதிரி மகிழ்ந்தாள்.

    சிறிது நேரம் கழித்து, “முனுசாமி, இந்தத் தம்பிகிட்டே கண்ணாடியத் திருப்பிக் கொடுத்துடு.” என்று கட்டளை பிறக்கவே, மனமேயில்லாமல் என்னிடம் கண்ணாடியைத் திருப்பிக் கொடுத்தான் முனுசாமி.

    “இப்ப பழையபடியே ஆயிடுச்சு, ஆயா.  ஒம் முகத்துலே இருக்கற சுருக்கமும் தெரியல், கோயில் கோவரத்திலெ இருக்கற பொம்மகளும் தெரியலே.  எல்லாம் மாயமா மறஞ்சுபோச்சு.  இது மாயக்கண்ணாடிதான், ஆயா!  எனக்கு இந்தமாதிரி ஒரு கண்ணாடிய வாங்கிக் கொடு, ஆயா!”

    முனுசாமியின் குரலில் ஏக்கம் இருந்தது.

    “தம்பி, கொஞ்சம் கீளே எறங்கி வாரியா!” என்று என்னை அழைத்தாள் மூதாட்டி.

    மூவரும் சுமைதாங்கியைவிட்டுக் கீழிறங்கினோம்.

    three-kids

    “என்ன ஆயா?”  முனுசாமியின் ஆயா எனக்கும் ஆயா ஆகிவிட்டிருந்தாள்.

    “தம்பி, நீ இந்த ஊரா?”

    “இல்லை, ஆயா.  காரைக்குடி.”

    “இந்தப்பக்கம் எப்பிடி?”

    “எங்க சின்னமாமாவுக்குக் கல்யாணம்.  அதோ அந்த மண்டபத்திலதான் நடக்குது.  அதுக்குத்தான் நாங்க வந்தோம்.  என் பெரியமாமா மகனையும் அந்த ‘நாமி’ல் சேர்த்துக்கொண்டேன்.”

    “நாங்க நாலுகோட்டையிலேந்து வந்திருக்கோம்.”

    இது முனுசாமி.  நாலுகோட்டைக்குச் சோழபுரத்திலிருந்து சில மைல்கள் செல்லவேண்டும்.  எனது தந்தைவழிப்பாட்டியின் ஊர் அது என்று பின்னர் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    “ஏந்தம்பி, இந்தக் கண்ணாடியைக் காரக்குடிலே வாங்கினியா?”

    “இல்லே, ஆயா.  மதுரைலே வாங்கினது.”

    “சிவசங்கை [சிவகங்கை] வரிச்சியூர் வளியா, பஸ் அங்கு போகுமிண்டு கேள்விப்பட்டிருக்கிறேன்.  மருதை போனதேயில்லை.” மூதாட்டி ஒரு ஏக்கத்துடன் இயம்பினாள்.

    “நான் சிவசங்கை போனதே இல்லை. நாலுகோட்டைவிட்டா, சோளவரம் — சோளவரம் விட்டா, நாலுகோட்டை.  அவ்வளவுதான்.”  முனுசாமி யாரும் கேட்காமலேயே அறிவித்தான்.

    “மருதையில எந்தக் கடயில தம்பி கண்ணாடிய வாங்கினே?”

    “முதல்ல கண்டாக்டர்கிட்ட கண்ணைச் சோதனைசெய்யனும்.  அதுக்கப்பறம் அவர் எப்படிப்பட்ட கண்ணாடிபோடனும்னு ஒரு சீட்டிலே எழுதிக்கொடுப்பார்.  அதை வாங்கிக்கிட்டுப்போயி, மூக்குக்கண்ணாடிக் கடையிலே கொடுத்து, கண்ணாடி வாங்கணும், ஆயா,” என்று நான் சொன்னதும், மூதாட்டியின் முகம் தொங்கிவிட்டது.

    “இதெல்லாம் நான் எப்பிடிச் செய்யமுடியும் தம்பி?  ஒரே ஒரு தபா நான் சிவசங்கை போயிருக்கேன்.  அவ்வளவுதான். அதுவும், பஸ்சிலே அடிபட்டுச் செத்த இவன் அப்பன், ஆயி பொணத்த எரிச்சுட்டுவர காஞ்சிரங்காடு வரைக்கும்தான்.  நானாவது, இவனைக் கூட்டிக்கிட்டு மருதை போகறதாவது..?”

    ஆற்றாமையில் அலுத்துக்கொண்டாள் அந்த மூதாட்டி.

    “ஆயா, இந்தக் கண்ணாடிதான் எனக்கு நல்லாத் தெரியுதே!  இத்த நம்ம வாங்கிக்கிட்டா, இந்தத்தம்பி வேற கண்ணாடி வாங்கிக்கலாமில்லே!”

    ஒரு எதிர்ப்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும், மூதாட்டியைக் கேட்டான் முனுசாமி.

    “நீபாட்டு கேட்டுப்புட்டேடா, நாம் எத்தைக் கொடுத்து தம்பிகிட்டே கண்ணாடியைக் கெக்குறது?”

    “அதுதான் நம்மகிட்ட இந்த ஆட்டுக்குட்டி இருக்குதுல்ல, ஆயா.  இத்தக் கொடுத்துட்டாப் போகுது…”

    இழுத்தான் முனுசாமி.

    “நீ சொல்லறது நல்லா இருக்குடா.  இந்தத் தம்பியைப் பார்த்தா சைவச்சாப்பாடு சாப்புடறவக மாதிரியில்ல இருக்கு.  இவுக ஆட்டுக்குட்டிய வச்சுக்கிட்டு என்ன செய்வாக?  கிடேரிக் கன்னுக்குட்டினாலும், பெரிசானதுக்கப்பறம் இவுகளுக்கு உவயோகப்படும்.  அத்தவிடு, சாயபு கொஞ்சநேரத்துல இத்த வாங்கிக்க வந்துடுவாருல்ல…” என்று பதிலுக்கு இழுத்தாள் மூதாட்டி.

    “சாயபுகிட்ட பணத்த வாங்கி இவுக கையிலே கொடுத்துட்டு, கண்ணாடிய வாங்கிக்கலாமில்ல..”  நப்பாசை விடவில்லை முனுச்சாமிக்கு.

    நான் எனது கண்ணாடியைக் கொடுக்கச் சம்மதித்துவிட்டதுபோலவும், அதை எப்படி பைசல்செய்வது என்பதுதான் பிரச்சினை என்பதுபோல இருந்தது அவர்கள் பேச்சு.

    என் மாமன்மகன் இப்பேச்சை இரசிக்கவில்லை என்பதுபோல, “வாடா, போகலாம்.  நம்மைத் தேடுவாங்க.’’ என்று என் கையைப்பற்றி இழுத்தான்.

    எனக்கோ இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை ஏற்பட்டது.  பாவம், முனுசாமி, நான் என் கண்ணாடியைத் தராவிட்டால் பார்வை இல்லாமலல்லவா கஷ்டப்படுவான்?  காலாகாலத்தில் கண்ணாடி போடாவிட்டால் பார்வை மோசமாகும் என்றல்லவா டாக்டர்வேறு சொல்லியிருந்தார்.  அதனால்தானே எனக்கு உடனே கண்ணாடி போட்டார்கள்!  நானாவது வேறு கண்ணாடி வாங்கிக்கொள்ளலாம்.  சீட்டு இருக்கிறது.  ஆனால், முனுசாமி…?

    என் நண்பர்கள் என்னைச் செய்த பழிப்புச்சொற்கள் அனைத்தும் என் காதில் தாமாகவே ஒலித்தன.  பாவம், முனுசாமியை மற்றவர்கள் எப்ப்டிப் பழிக்கிறார்களோ?

    இதற்குள் எனது பெரியமாமா ஒரு பக்கத்திலிருந்தும், லுங்கியும் தொப்பியும் அணிந்த ஒரு சாயபு இன்னொரு பக்கத்திலிருந்தும் வந்துசேர்ந்தார்கள்.

    “சாயபு, இந்த ஆட்டுக்குட்டிக்கான பணத்தத் தர்றீகளா, இந்தத் தம்பிக்குக் குடுக்கணும்..” முனுசாமியின் குரலில் அவசரம் இருந்தது.

    சாயபுவோ புரியாமல் விழித்தவாறு மூதாட்டியைப் பார்த்தார்.

    “என்னடா விவகாரம்?  இவங்க உனக்கு எதுக்குப் பணம் தரேன்னு சொல்லறாங்க?” என் மாமாவின் குரலில் அதட்டல் இருந்தது.

    “வாங்க ஐயா.” என்று என் மாமாவை வாயெல்லாம் பல்லாக வரவேற்ற முனுசாமி, “தம்பியோட மூக்குக்கண்ணாடிய நான் வாங்கிக்கப்போறேன்.  அதுக்கு காசு கொடுக்கணுமில்ல? எங்க ஆட்டுக்குட்டிய தம்பிக்குக் கொடுக்க முடியாதுல்ல.  சாயபுதானே ஆட்டுக்குட்டிய வாங்கிகப்போறாரு. அதான் அவருகிட்ட காசைக் கேக்குறன்.” என்று உற்சாகமாக் என் மாமாவுக்கு விளக்கினான்.

    என் மாமாவின் புருவங்கள் உயர்ந்தன.

    “என்னடா இது?  கல்யாணத்துக்கு வந்தோம், தின்னோம், போனோம்னு இருக்காமக் கண்ணாடிய விக்கறேன்னு இது என்னடா கூத்து?  கண்ணாடியக் கொடுத்துட்டு நீ என்னடா கம்பை ஊணிக்கிண்டா போகப்போறே?”

    என் மாமா என்னைப் பார்த்துக் கத்தினார்.  அவருக்குக் கோபம்வந்தால் என்ன பேசுகிறோம், யார் மனம் புண்படுகிறது என்றே பார்க்கமாட்டார்.

    அவர் சொற்கள் என்னைச் சுட்டன. என் மனம் முனுசாமிக்காக உருகியது.  அவரை எதிர்த்துப்பேசத் திராணியின்றி நின்றேன்.

    சாயபு என் மாமாவைச் சமாதானப்படுத்தும்விதமாகப் பேசினார்.

    “நீங்க அமைதியா இருங்க, ஐயா.  இந்தக் கிளவி எனக்குப் பணம் தரணும்.  அதுக்குத்தான் இந்த ஆட்டுக்குட்டியக் கொடுத்து கடனைத்தீர்க்க வந்திருக்கு.  நல்ல , மானஸ்தமான பொம்பளைங்க ஐயா இது.  ஆனா அதிர்ஷ்டம்கெட்டது.  போன வருசம்தான் இதோட புள்ளையும், மருமகளும் சிவேங்கைச் சந்தைக்குப் போறபோது அவங்க மாட்டுவண்டிமேல பஸ்மோதி செத்துப்போனாங்க.  அப்ப வாங்கின கடன்.  மாசாமாசம் கொஞ்சம்கொஞ்சமா கடனைத் தீர்த்துக்கிட்டு வருது.   கடைசித் தவணையாத்தான் இந்த ஆட்டுக்குட்டியக் கொண்டுவந்திருக்கு.  என் மகளுக்கு நிக்கா வச்சுருக்கோம்.  அதுக்கு கறிபோட்டு விருந்து வைக்கணுமில்ல.  அதுதான்.  சரிங்க, வர்றேன்.”

    ஆட்டுக்குட்டியை இழுத்துக்கொண்டு சென்றார் அந்த சாயபு.

    முனுசாமியின் கண்பார்வையின் தீர்வையும் அவர் இழுத்துக்கொண்டு செல்லவதுபோலடத்தான் எனக்குப் பட்டது.  தான் பலியாகப் போவதை அறியாமல், அவர் பையிலிருந்து வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் முருங்கைக் கீரையைத் தின்றுகொண்டே அவர் பின்னால் சென்றது ஆட்டுக்குட்டி.

    நானும் அந்த ஆட்டுக்குட்டியைப்போல, முனுசாமியைத் திரும்பித்திரும்பிப் பார்த்துவாறே  என் கையாலாகாத்தனத்தை நொந்துகொண்டு என் மாமாவைத் தொடர்ந்து சென்றேன்.

    முனுசாமிக்கு என்னவாயிற்று, அவன் கிட்டப்பார்வைக்குக் கண்ணாடி போட்டுக்கொண்டானா, அல்லது பார்வை மிகவும் மோசமாகித் தவிக்கிறானா என்ற எண்ணம் அவ்வப்போது என்னுள் எழுங்கால் — அவனுக்கு எந்த உதவியும் செய்யாதுபோன என் கையாலாத்தனத்தை எண்ணியெண்ணி  என் நெஞ்சு கனத்து வலிக்கிறது.

    [கையாலாகாத்தனம் தொடரும்]

    மறுபகிர்வு நன்றி: தாரகை இணைய இதழ்

    Share
  • சிறு நெருப்பின் பெருந்துளி !

    ஃபிடல் காஸ்ட்ரோ

    unnamed
    எஸ் வி வேணுகோபாலன்

    கொடுங்கோலன் பாடிஸ்டாவை
    உறக்கம் தொலைக்கச்செய்து
    இறுதி மோதலில் வீழ்த்தவும் செய்தவனே

    மனிதகுல விடுதலைக்கான வேலைகள்
    கூடிக் கொண்டிருக்கவே செய்தது உனக்கு

    உலகளாவிய புரட்சிகர இதயங்களுக்கு
    நம்பிக்கைக் குருதி பாய்ச்சிக் கொண்டிருந்தாய்

    ஏகாதிபத்தியத்தின் கனவுகளில் ஊடுருவிக்
    கலகம் விளைவித்துக் கொண்டிருந்தாய்

    உன் அடிச்சுவடுகளை அந்நாளில்
    தொடர்ந்து வந்து கொண்டிருந்தவர்கள்
    புரட்சி வேட்கை கொண்டோர் மட்டுமன்று
    தீர்த்துக் கட்டத் துடித்த சதிகார சக்திகளும்தான் !

    இளமையில் புகட்டப்பட்டிருந்த
    விவிலியம்* விரவிய இலக்கிய மொழியில் (*விவிலியம் = பைபிள்)
    மதங்களுக்கு அப்பாற்பட்ட தத்துவம் விரிந்தது

    ஆயுதங்களற்ற வேளைகளிலும்
    பேச்சுகளின் வீச்சில்
    நடுங்கி ஓடின எதிர்ப்புரட்சிக் கும்பல்கள்

    பொதுவுடைமையின் சாத்திய சாட்சியமாகிய
    கியூப மண்ணில்
    அடுத்தடுத்த தலைமுறை குழந்தைகள் கைகளிலும்
    புரட்சியின் பூங்கொத்துகள்

    சந்தைப் பொருளாதாரத்தின்
    சத்தங்களுக்கு இடையே
    நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மனித உணர்வுகளை
    அன்பின் பேரூற்றால் தளிர்க்கச் செய்யும்
    எதிர்கால நம்பிக்கைக்கு
    எக்காலத்திற்குமான
    சிறு நெருப்பின் பெருந்துளி நீ!

    நவம்பர் புரட்சியின் நூற்றாண்டில்
    அமைதி பெறுகிறது
    ஒட்டுமொத்த உயிர்களுக்காகவும் துடித்த
    உன் உன்னத இதயம் !
    உற்ற தோழன் சே குவேராவை
    மீண்டும் நினைவிலேந்தி வழியனுப்புகிறது
    உலகம் இருவரையும்!

    உலகம் யாவிலும் உன் பெயரால்
    சுடர்ந்தெரியும் மெழுகு தீபங்களிலிருந்து
    பரவும் வெளிச்சம்
    சுரண்டல் இருளை ஒருநாள்
    முற்றாகத் துடைத்தெறியும்.

    Share
  • படக்கவிதைப் போட்டி (88)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    15209208_1161598513894346_1432022109_n
    24942309n07_rயெஸ்மெக் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 03.12.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • பா.ராஜசேகர் கவிதை

    பா.ராஜசேகர்  

    மாடியிலிருந்து
    கால்வாய்வரை
    நீர்தேங்காமல் வழிவிட்டேன்.
    மாநகராட்சி அதிகாரிகள்
    கால்வாயிலிருந்து ஆறுவரை
    சுத்தம் செய்தார்கள்.
    பிறகு ஆற்றைதூர்வாரி
    கடலுக்கு வழிவிட்டார்கள்.
    இப்போது
    மழைபெய்து கடல் வயிறு
    நிரம்பிக்கொண்டிருக்கிறது.
    இனிமேல்தான்
    நான் கடல்நீரில்
    பயிர்விதைத்து அறுவடைக்கு
    முயற்சிக்கவேண்டும்.

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (32)

    நிர்மலா ராகவன்

    போட்டி பொறாமை ஏன்?

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-1-1
    `வகுப்பில் முதலாவதாக வரவேண்டும்! உன்னை யாரும் முந்த விடாதே!’

    பள்ளிக்கூட நாட்களில் அனேக குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர் அளிக்கும் அறிவுரை. அதற்கு முன்னரே, குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், `உன் தம்பி பார், எவ்வளவு சமர்த்தாக இருக்கிறான்! நீயும் இருக்கிறாயே, அசடு!’ என்றெல்லாம் பேசி, அந்த அறியாப் பருவத்திலேயே போட்டி மனப்பான்மையை விதைத்து விடுகிறார்கள்.

    `நானும் ஏன் தம்பிமாதிரி இல்லை?’ என்ற ஏக்கமானது தான் ஏதோ விதத்தில் மட்டமானவன் என்ற எண்ணத்தை நிலைக்கச் செய்துவிடுகிறது. தன்னைவிட அம்மாவின் மதிப்பில் உயர்ந்திருக்கும் தம்பிமேல் பொறாமை வருகிறது. அவனுடன் போட்டி போட்டு எப்படியாவது அவனை வீழ்த்த நினக்கிறான். தெரியாத்தனமாக விதைக்கப்பட்ட இக்குணம் ஒருவனுடன் சேர்ந்து வளர்கிறது.

    கதை: தம்பி வேண்டாம்

    இடைநிலைப்பள்ளியில் என்னுடன் படித்த ஒரு பெண் தன்னை யாரும் எந்த விதத்திலும் மிஞ்சிவிடக்கூடாது, எல்லாப் பரீட்சைகளிலும் தான்தான் வகுப்பில் முதலாக வரவேண்டும் என்ற துடிப்பு மிக்கவளாக இருந்தாள். தப்பித் தவறி நான் முதலாவதாக வந்துவிட்டால், ஒரு மாதம் என்னுடன் பேசமாட்டாள்!

    சிறு வயதிலேயே அப்பெண்ணை பாட்டி வீட்டில் விட்டுவிட்டு, அவளுடைய தம்பியைத் தம்முடன் வைத்துக்கொண்டார்கள் பெற்றோர். தந்தைக்கு அடிக்கடி வேலை மாற்றம், அதனால்தான் இந்த ஏற்பாடு என்பதை அவளுக்குப் புரியவைக்கவில்லை. பெற்றோருக்கு உகந்த பிள்ளையாய் பிறந்துவிட்ட தம்பிமேல் பொறாமை கிளர்ந்தது.

    இக்குணம் வெறியாகவே மாறி, அவள் அமைதியாகவோ, மகிழ்ச்சியாகவோ இருக்க முடியாதபடி செய்துவிட்டது. `தோல்வி’ என்றாலே பயம் என்ற நிலையில், படிப்பில், குடும்ப வாழ்க்கையில், உத்தியோகத்தில், பிறரை வென்றால்தான் மகிழ்ச்சி என்று பழகிக்கொண்டுவிட்டாள். `நான் எல்லோரையும்விடச் சிறப்பாக இருக்கிறேன், பார்த்தீர்களா?’ என்ற தற்பெருமை கூடியது.

    அவள் பெரிய படிப்புப் படித்து, பெரிய உத்தியோகத்திலும் அமர்ந்தாள். அதன்பின்னரும், கணவருடன் ஒத்துப்போகாமல், பிரிந்து வாழ, `இவளுக்கு யாருடனும் ஒத்துப்போக முடியவில்லை. ஏன்தான் இப்படி எல்லாருடனும் சண்டை போடுகிறாளோ!’ என்று அவளுடைய தாய் வருத்தத்துடன் என் தாயிடம் தெரிவித்தாள்.

    பிறருடைய ஒத்துழைப்பு ஒருவர் முன்னுக்கு வருவதற்கு அவசியம் தேவை. இது புரியாது, அல்லது ஒப்பாது, போட்டி மனப்பான்மைக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களுக்குத் தனிமைதான் நிலையானது.

    பிறரிடம் அனுசரணையாக நடந்துகொள்ள வேண்டுமென்றால் அவர்கள் எக்காலத்திலும் தம்மை மிஞ்ச மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும் இவர்களுக்கு. மற்ற எல்லோரிடமும் காட்டம்தான்.

    எவ்வளவு பட்டங்கள் வாங்கினால்தான் என்ன! உண்மையான கல்வி என்பது போட்டி மனப்பான்மை நீங்கியபின்தான் என்கிறார் ஒரு தத்துவஞானி.

    ஒருவர் நல்லவிதமாக வளர்வதற்கு முதலில் பெற்றோரின் அன்பும் வழிகாட்டலும் தேவை. பிறகு, ஆசிரியர்களின் கனிவு. `எனக்குத் தெரிந்ததை எல்லாம் உனக்குச் சொல்லித்தர மாட்டேன்!’ என்றிருக்கும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் போட்டிபோடும் அற்பங்கள் என்பேன்.

    சிலரது போட்டி மனப்பான்மை தம்மைவிடச் சிறப்பாக இருக்கும் பிறர்மேல் பொறாமையாக வெளிப்படும்.

    கதை: மகனால் தாய்க்கு வந்த சோதனை

    ஆசிரியர்களின் பொது அறையில் ஓய்வாக இருக்கும்போது நாங்கள் எங்கள் குடும்ப விவகாரங்களை அலசிக்கொண்டிருப்போம். என்னுடைய சக ஆசிரியை மிஸஸ் ஃபூ நான் சாதாரணமாக ஏதாவது என் குழந்தைகளைப்பற்றிப் பேசினால்கூட பொறாமையுடன் வெறித்தது எனக்குக் குழப்பத்தை விளைவித்தது.

    நாலைந்து வருடங்களுக்குப்பின், தானே என்னிடம் அவளுடைய மகனுக்கு ஆடிசம் என்ற நோய் என்று தெரிவித்தாள். `முன்பெல்லாம் எங்கள் வீட்டுக்கு யாராவது வந்தால், அவர்களைப்போல் அப்படியே நடித்துக் காட்டுவான்,’ என்று சற்று பெருமையுடன் கூற ஆரம்பித்தவள், `இப்போது அதுவும் மறந்துவிட்டது!’ என்றாள் சோகமாக.

    பிறருடைய கண்களைப் பார்த்துப் பேசாது, தானே ஏதேதோ பேசிக்கொண்டு, `நெருப்பு சுடும்’ என்று பலமுறை கூறினாலும் புரிந்துகொள்ள முடியாத தன் மகனைப்பற்றி தானும் எதுவும் பேசமுடியவில்லையே என்ற வருத்தம் அவளுக்கு என்று புரிந்துகொண்டேன்.

    `எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆயிற்று?’ என்று கேட்டாள் என்னை.

    `எல்லாருடைய வாழ்க்கையிலும் ஏதோ இருக்கத்தான் செய்கிறது. உன் மகன் அவனைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறான்? நாம் எந்த ஜன்மத்திலோ செய்த பாபச் சுமையை இப்படி ஒரு பிறவி எடுத்துக் கழிக்கிறோம்,’ என்றுவிட்டு, நம் புத்திசாலித்தனத்தை வெளிக்காட்டிக் கொள்கிறோமோ என்று வெட்கி, `இது நான் எங்கோ படித்தது,’ என்று சப்பைக்கட்டு கட்டினேன்.

    `ஓ! இது எனக்கான தண்டனை! அப்படித்தானே?’ என்றாள், சற்றுத் தெளிவுடன். அதன்பின் என்னுடன் போட்டி கிடையாது. உற்ற தோழிகளானோம்.

    கதை: பேச்சில் போட்டி

    கடந்த ஆண்டு கோலாலம்பூரிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நான் உரையாற்றியபோது, என் எழுத்துலக அனுபவங்களை நகைச்சுவையுடன் பகிர்ந்துகொண்டிருந்தேன். அதுதான் தலைப்பு: என் எழுத்துலக அனுபவங்கள்.

    முடிந்ததும், `எவ்வளவு உற்சாகமாகப் பேசினாங்க! இன்னொரு கைதட்டல் குடுங்க,’ என்று அவையிலிருந்த ஒரு பெண்மணி கூற, அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

    சற்றுப்பொறுத்து நான் சிலருடன் உணவருந்திக் கொண்டிருந்தபோது, உரையாற்றிய இன்னொரு பெண்மணி என்னைத் தேடி வந்தாள். “என்ன, நிர்மலா! சும்மா சிரிச்சுச் சிரிச்சுப் பேசிட்டீங்களே! FACTS இல்லே!” என்றாள். இவள் பல வருடங்களாக எதற்காகவாவது என்னைத் தாக்கி வருபவள்.

    அழகிலோ, அறிவிலோ, தைரியத்திலோ, அல்லது செல்வத்திலோ, பொதுவாக ஏதாவது ஒரு விதத்தில் பிறரைவிடக் குறைந்திருக்கிறோமே என்றெண்ணி மறுகுபவர்கள் அந்த விஷயத்தில் தம்மைவிட உயர்ந்திருக்கிறார்கள் என்று நினைப்பவர்கள்மேல் பொறாமை கொள்கிறார்கள். அவர்களுடன் போட்டி போடும் அளவுக்குத் திறமையோ, தைரியமோ இல்லாவிட்டாலும், அவர்களைச் சற்றேனும் கீழே இறக்க முயற்சிக்கிறார்கள்.

    இது புரிந்திருந்ததால், “உங்களிடம், `எத்தனை தன்னம்பிக்கை உங்களுக்கு!’ என்று யாராவது பாராட்டினார்களா? ஆட்டோகிராஃப் கேட்டார்களா? `எங்களுடன் போட்டோ எடுத்துக்கறீங்களா?’ என்று வந்து, வந்து கேட்டார்களா? இதெல்லாம் எனக்கு நடந்தது!” என்றேன், அமைதியான குரலில்.
    அத்தாக்குதலைச் சற்றும் எதிர்பாராது, `நேரமாயிடுச்சு!’ என்று ஓடியேவிட்டாள்!

    என் திறமையில் நானே சந்தேகம் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் பேசியது புரிந்ததால்தான் பதிலடி கொடுத்தேன். இது திமிரில்லை. தற்காப்பு.

    தன்னம்பிக்கை என்பது..

    ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ திறமை ஒளிந்திருக்கிறது. அதைப் புரிந்துகொண்டு, அதையே பலமாக்கிக்கொண்டால் பிறருடன் போட்டி போடத் தோன்றாது. பிறர் தன்னைப்பற்றிக் குற்றமாகப் பேசுவதையும் அலட்சியம் செய்ய முடியும்.

    இத்தன்மை ஒருவரது உடல் மொழியிலேயே தெரியும். முதுகெலும்பும் தலையும் நிமிர்ந்திருக்கும். `அவனுக்கு முதுகெலும்பே கிடையாது!’ என்று கோழைகளை வர்ணிப்பது இதனால்தான்.

    பலவீனமே பலமாய்

    தன்னம்பிக்கை என்பது கர்வப்படுவதிலோ, பெருமை பேசுதலிலோ இல்லை. தன் பலத்தைப் புரிந்து, பலவீனத்தையும் தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்ளுதல்.

    உதாரணம்: மாணவர்கள் அடங்காது, வகுப்பில் இரைச்சல் போட்டால் ஆசிரியை தானும் அவர்களுக்கு ஏற்றாற்போல் இரைந்து பாடம் நடத்தாது, குரலை இன்னும் அடக்கிக்கொள்கிறாள்.

    `கேட்கவில்லை!’ என்று அலறுபவர்களிடம், `உங்களுக்குப் பாடம் கற்க வேண்டுமென்றால் கவனியுங்கள்!’ என்று கூறினால் பலனிருக்கும். அடிவாங்கியவர்கள்போல் மௌனமாகிவிடுவார்கள்.
    இது என் அனுபவத்தில் கண்ட உண்மை.

    தொடருவோம்

    Share
  • பா.ராஜசேகர் கவிதை

     பா.ராஜசேகர் 

    சுள்ளிக்கொம்பு
    உடைச்சு தருவேன்
    சுண்டைக்காயும்
    பறிச்சுதருவேன்
    விறகு அடுப்பில 
    தோசைக் கல்லைவைப்பா
    வெங்காயத்தையெடுத்து
    எண்ணையில் நனைச்சு
    தேய்ச்சுக் கொடுத்து
    மொறுமொறுத் தோசை
    சுடச்சுட சுட்டுத்தருவா
    சுண்டக்க குழம்பும்
    ஊற்றித்தருவா
    சுவையும்மணமும் சேத்துதருவா
    அம்மா
    முன்பொருகாலம்

    Share