-தமிழ்த்தேனீ

சார்லி சாப்ளின் நகைச்சுவை மன்னர்.  அவருடைய  நடிப்பு நம்மை வயிறுகுலுங்கச் சிரிக்கவைக்கும்.  அப்படிப்பட்ட  சார்லி சாப்ளினும்   அவருடைய நண்பர் ஒருவரும்  ஒரு உணவு விடுதியில் உணவு அருந்திக் கொண்டிருந்தனர்.   அங்கே  ஈக்களின் தொந்தரவு அதிகமாக இருக்கவே  அவர் கையில் Bee Swatter   என்னும்   ஈ அடிக்கும் கருவி ஒன்று அந்த உணவு விடுதியின் நடத்துனரால் கொடுக்கப்பட்டது. வரும்போது  அந்தக் கருவியால் ஈயை  அடித்துவிடலாம், ஒரு ஈ பறந்து சார்லி சாப்ளினின்  அருகில் வந்து அவரைத் தொந்தரவு செய்துவிட்டு பறந்து சென்றது; அப்போது அவரால் அந்த ஈயை அடிக்க முடியவில்லை.  மறு முறை  ஒரு ஈ வந்து அவர் அருகில் பறந்து கொண்டிருந்தது. சார்லி சாப்ளின் அந்த ஈயை அடிக்காமல் இருக்கவே  பக்கத்தில் இருந்த நண்பர்  அந்த ஈயை அடியுங்களேன் என்றார், அதற்கு  அப்போது என்னை தொந்தரவு செய்த ஈ இதல்ல என்றார்.

பொதுவாக  ஈக்களின் தொந்தரவு அதிகமிருக்கும் இடங்களில் பினாயில் என்னும் திரவத்தைப் பத்து ரூபாய் கொடுத்து வாங்கி, அந்தத் திரவத்தை  தண்ணீரில் கலந்து  துடைத்தாலே ஈக்கள் அங்கே வராது சற்று நேரத்துக்கு, ஈக்களுக்கு பினாயிலின் வாடை பிடிப்பதில்லை. ஆகவே பல ஈக்களை விரட்ட பத்து ரூபாய் செலவு செய்தால் போதும்.  ஆனால் ஒரு ஈயைக் கண்டுபிடிக்க  எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று  அனுபவப்பட்டவர்களுக்குத்தான்  தெரியும்,      ஒரு எலியைப் பிடிக்க இருபது ரூபாய் கொடுத்து ஒரு எலிப்பொறி வாங்கி வைத்து மேலும் அந்த எலியை அந்தப் பொறிக்குள் இழுக்க  மேலும் ஐந்து ரூபாயை செலவழித்து ஒரு மணக்கும் மசால்வடையையும்  வாங்கி அந்த பொறிக்குள்ளே இருக்கும் கம்பியில் லாவகமாகச் சொருகி வைக்க வேண்டும். அந்த மசால் வடையின் வாசனையை நுகர்ந்து அந்த எலி அதனால் கவரப்பட்டு  எலிப்பொறிக்குள் வந்து அந்த மசால் வடையை வாயால் கவ்வ முயலும்போது அந்த கம்பி  நெகிழ்ந்து எலிப்பொறியின் வாயை அடைத்துவிடும், எலியும் பொறியில் மாட்டிக்கொள்ளும்.

ஆனால் இப்படிப்பட்ட  எந்த வலையினுள்ளும் மாட்டிக்கொள்ளாமல் லாவகமாகப் பறந்து சென்றுவிடும் ஈக்களையும் கொசுவையும் பிடிப்பதரிது.   அதுவும் நமக்கு  ஆராய்ச்சிக்காக  ஒரு ஈ அல்லது கொசு வேண்டும் என்றால் அதைப் பிடிப்பது மிகவும் கடினம்.   இவையெல்லாம் ஒரு புறமிருக்க ஒரு ஈ யினால்  எனக்கு ஏற்பட்ட உபத்ரவம் சொல்லி முடியாது. அந்த ஈயைத் தள்ளவும் முடியாமல், வைத்துக்கொள்ளவும் முடியாமல் நான் பட்ட அவதிகள் அதிகம். ஆனாலும் அந்த ஈ திடீரென்று ஒரு நாள் காணாமல் போனபோது என்னால் எந்த வேலையையும் செய்ய முடியாமல் நான் பட்ட அவதி இருக்கிறதே அதுவும் மிகக் கொடுமை.  ஆனால் அந்த ஈ இல்லாமல் வேலை செய்வது மிகவும் கடினம் என்று உணர்ந்து அந்த ஈ யை எப்படியும் மீண்டும் அடைந்தே தீருவது  என்னும் முடிவுக்கு நான் தள்ளப்பட்டேன், அதனால்  பல இடங்களில், அலைந்து அந்த ஒற்றை ஈயைக் கண்டுபிடிக்க  என்னுடைய நான்கு சக்கர வாகனத்தில் பல இடங்களுக்கு  அலைந்ததில் எரிபொருள் செலவு கிட்டத்தட்ட  500.00 ரூபாய்.

அப்படித் தேடிக்கொண்டிருக்கும்போது  ஒருவர்  அந்த குறிப்பிட்ட ஈ இருக்கும் பலகை ஒன்று இருக்கிறது. அந்த ஒற்றை ஈ இருக்கும் ஒரு சிறிய பலகையை அதை வாங்கிக்கொள்ளுங்கள் உங்கள் பிரச்சனை தீரும் என்றார்; சரி வேறு வழியில்லை… அந்தப் பலகையையே வாங்கிவிடலாம் என்று முடிவெடுத்து  நண்பர் கூறிய  கடையை அணுகினேன்.  அந்தக் கடையில் அந்த ஈ  என்ன தயாரிப்பு, எந்த  நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது  என்று கேட்டார்கள், அப்போதுதான்  எனக்கு நினைவு வந்தது அந்த ஈ உள்ள பலகையை பொருத்த வேண்டிய கருவியை எடுத்துக்கொண்டு போகாமல் நான் சென்றது, சரி என்று வீட்டுக்கு வந்து  அந்தக் கருவியை கையோடு எடுத்துக்கொண்டு போய் அந்தக் கடையில் காண்பித்தேன். அந்தக் கருவியைப் பார்தவுடன் ஓ இதுவா சற்றே இருங்கள்  என்று கூறிவிட்டு ஐந்து ஆறு பேர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு. கடைசியாக  ஒருவரிடம் அந்த ஈ உள்ள பலகை இருப்பதாகவும்  ஆனால் அவர் 2800.00 ரூபாய் கேட்கிறார் என்றார் அந்தக் கடைக்காரர்; என்ன செய்வது  வாங்கித்தான் தீரவேண்டும், வேறு வழியில்லை சரி என்று கூறி 2800.00 ரூபாயை அவரிடம் அளித்து  அந்த ஈ உள்ள பலகையை வாங்கிப் பொருத்தினேன்.

ஆமாம் என்னுடைய  எச் பி காம்பாக் மடிக்கணிணியில் இருந்த  E வெகு நாட்களாக அடிக்கடி வெளியே வந்து விழுந்து கொண்டே இருந்தது, அந்த ஈ(E) தனியாகக்  கிடைத்திருந்தால்  ஒரு நூறு ரூபாய்க்குள் முடித்திருக்கலாம், அந்த தனி  ஈ (E) வாங்கிப் பொருத்த தேடி அலைந்து ,  கடைசியில் முடியாமல் போய் அந்த E யும் இருக்கும் தட்டச்சு பலகையை வாங்கிப் பொருத்தினேன்.

அதற்கு ஆன செலவு  மொத்தம் 3300 ரூபாய்கள்.

”தீயினால் சுட்ட புண் உள்ளாறும்
ஆறாதே ஈயினால் பட்ட வடு”

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *