படக்கவிதைப் போட்டி (88)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
யெஸ்மெக் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 03.12.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
துயிலெனும் தூக்கம் –
இறைவன் நமக்களித்த இலவச பரிசு– தூக்கம்
இமைகள் மூடி நமக்குள் நாமே தொலைய கிட்டும் சுகம்
துயிலின் முடிவு விழிப்பா இல்லை
விழிப்பின் முடிவு துயிலா -இது
இயற்கை நமக்கு விடும் விடுகதை
இரண்டும் இருளும் ஒளியுமாய் ஓயாமல்
நம்மைச் சுற்றி உலா வரும் உண்மை
துயில்லில்லா வாழ்வு துயரமே அது போல்
விழிப்பில்லா வாழ்வும் அதி துயரமே
அள்வோடு கொள்ளும் துயிலும் விழிப்பும் கொள்ள
வாழ்வும் வளமாகும் என் நாளுமே
பொய்த் தூக்கம், பெருந்தூக்கம், அரைத்தூக்கம்
ஆழ் நிலைத்தூக்கம் பகல் தூக்கமென பல வகை உண்டு
தூங்காது தூங்கி இருக்கும் நிலையோ
மெய்யடியார்கள் கண்ட கலை..
மானிடர் கொள்வது அறியா துயில் ஆனால்
மாதவன் கொண்டது ஆலிலையில் அறிதுயில்
ஆழ்துயிலில் துளிர் விட்ட அரிய் சிந்தனைகளே
அறிஞர்கள் கண்ட அரும் பெரும் கண்டு பிடிப்புகள்
அறியா பருவம் வரை வந்த ஆழ்ந்த தூக்கம்
பருவம் வர வர பறப்பது ஏனோ
இனி வரம் ஒன்று கேட்கிறேன் இறைவா!
வரும் நாட்களில் குழந்தையைப் போல் தூங்கவே
அனுப்புனர்
ராதா விஸ்வநாதன்
எழுப்பாதே…
பிள்ளை உறங்கட்டும்,
பெரியவர்களே அதை
எழுப்பவேண்டாம்..
பார்க்கவேண்டாம் அது
நீங்கள் படும் பாட்டை-
பணத்துக்காக..
மனிதம் மறந்து
பணத்தை நினைக்கும்
மனது அதற்கு வரவேண்டாம்..
இறப்பு மறந்து
இரக்கமின்றி அதைக்
கறக்கும் வழிகளை அது
காணவேண்டாம்..
சேர்த்த பணத்தை
நன்றாய்ச்
செலவிடாமல்,
மண்ணில் புதைத்து
மண்ணில் புதைவதைக்
கண்ணில் காணவேண்டாம்..
தூயதை மறந்து
தீயதை வளர்க்கும்
பணம்படுத்தும் பாட்டை அது
பார்க்கவே வேண்டாம்..
அதனால்,
பிள்ளை உறங்கட்டும்,
பெரியவர்களே அதை
எழுப்பவேண்டாம்…!
-செண்பக ஜெகதீசன்…