-மேகலா இராமமூர்த்தி

1959-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் 8-ஆம் நாள் அது. அழகிய சிறிய தீவான கியூபாவின் தலைநகர் ஹவானாவில் தன் சக தோழர்களோடு நுழைந்த அந்த இளம் புரட்சியாளன், கியூபாவில் அப்போது ஆட்சியிலிருந்த முதலாளித்துவ ஆதரவாளனும், எதேச்சாதிகாரியும், அமெரிக்காவின் கைக்கூலியுமான ஃபுல்கென்சியோ படிஸ்டாவை (Fulgencio Batista) வீழ்த்தி, அவனை ஆட்சிக்கட்டிலிலிருந்து தூக்கியெறிந்தான். அவ்வெற்றியை அடைவதற்கு அப்புரட்சியாளன் சந்தித்த போர்க்களங்கள்தாம் எத்தனை!

fidelcheguveraதோளோடு தோள் நின்று போரிட்ட பொதுவுடைமைத் தோழர்கள் பலரை அந்த விடுதலை வேள்விக்கு அவன் தாரை வார்த்திருந்தான். படிஸ்டா அரசுக்கு எதிரான அந்த அறப்போரில் தொடர் தோல்விகளைச் சந்தித்துவந்த அவ்வீரன், அர்ஜென்டினாவின் பொதுவுடைமைப் புரட்சியாளரும், மார்க்சிய – லெனினியச் சிந்தனையாளருமான தோழர் சேகு வேராவோடு (Che Guevara – An Argentine Marxist revolutionary, Physician and a Guerrilla leader) இணைந்து கொரில்லாப் போர்முறையைக் கற்றுத்தேர்ந்தான். அப்போர்முறையைப் பயன்படுத்திப் பட்டிஸ்டாவுக்கு எதிரான போரில் வெற்றிக்கனியை  எட்டிப்பறித்தான் அவன்!

எதேச்சாதிகாரி படிஸ்டா வீழ்ந்தான்; தலைநகர் ஹவானாவில் தன்முன் ஆர்வத்தோடு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களின்முன் வெற்றிஉரை நிகழ்த்தினான் அந்த மாவீரன். எதேச்சாதிகாரம் எமலோகம் அனுப்பப்பட்டு அமைதி மீண்டதன் அடையாளமாக வெண்புறாக்கள் வானில் பறக்கவிடப்பட்டன. பறந்துசென்ற புறாக்களில் ஒன்று திரும்பவந்து அந்த வெற்றிவீரனின் தோளில் அமர, அதனைக்கண்ட மக்கள்கூட்டம் எழுச்சிகொண்டு ’ஃபிடல், ஃபிடல்’ என்று விண்ணதிர வெற்றி முழக்கமிட்டது. ஆம், முதலாளித்துவத்திலிருந்து கியூபாவை மீட்டு, தொழிலாளர்களின் நலம்பேணும் பொதுவுடைமையை அங்கே மலரச்செய்த ஃபிடல் காஸ்ட்ரோதான் அந்தப் புரட்சியாளன்!

1926-ஆம் ஆண்டு ஆகஸ்டு 13-ஆம் தேதி வசதியானfidelyoung கரும்பு விவசாயி ஏஞ்சல் காஸ்ட்ரோவுக்கு மகனாகப் பிறந்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. ’ஃபிடல்’ என்ற சொல்லுக்கு ’நம்பிக்கை’ என்றும் ’காஸ்ட்ரோ’ என்ற சொல்லுக்குக் ’கோட்டை’ என்றும் பொருளாம். பொதுவுடைமை எனும் நல்ல நம்பிக்கையை – உயர்கொள்கையைக் கட்டிக்காக்கும் கோட்டையாக இப்பிள்ளை பின்னாளில் திகழப்போகிறான் என்பது பிள்ளைக்குப் பெயர்வைத்தபோது ஃபிடலின் தந்தைக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. (சிலருக்கு அமையும் பெயர்ப்பொருத்தம் பிரமிக்கவைப்பதாய் இருக்கின்றது!).

கியூபாவின் தலைநகர் ஹவானாவிலுள்ள பல்கலைக்கழகத்தில் (University of Havana) சட்டம் படித்த ஃபிடல், இளைஞராய் இருந்தபோதே மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் போன்றோரின் பொதுவுடைமைத் தத்துவங்களால் கவரப்பட்டு அவற்றையே தம் வாழ்வின் லட்சியங்களாய்க் கொண்டவர்.

கியூபாவின் தலைமை அமைச்சராய் (Prime Minister) பிப்ரவரி 16, 1959-இல் பதவியேற்ற அவர், உழவர்களுக்கான முதல் சீர்திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து ஒவ்வொரு விவசாயியும் அதிகபட்சம் 993 ஏக்கர் நிலத்தை மட்டுமே தன் உடைமையாகக் கொண்டிருக்கவேண்டும் என்ற விதியை நடைமுறைப்படுத்தினார். அத்தோடு, கியூபாவில் அயல்நாட்டார் நிலங்களை வாங்குவதற்கும் தடை விதித்தார். மார்க்சியவாதிகளையே தம் அரசாங்கத்தின் அனைத்து உயர்பதவிகளிலும் முக்கியப் பொறுப்புக்களிலும் நியமித்தார்.

’கண்ணுடையர் என்பவர் கற்றோர்’ எனும் வள்ளுவத்திற்கிணங்க, கல்விச்சாலைகளை அதிக அளவில் நாடெங்கும் ஏற்படுத்தி, மக்களின் அறிவுக்கண்களைத் திறந்தார். மருத்துவச்சேவையை அனைவருக்கும் இலவசமாக்கி மக்களை நோயற்ற வாழ்வு வாழச் செய்தார்.

ஃபிடலின் ஆட்சியும் மாட்சியும் கியூபாவுக்கு அருகிலிருந்த முதலாளித்துவ வல்லரசு நாடான அமெரிக்காவுக்குக் கடும் அதிருப்தியைத் தந்தது. அவரை ஒழித்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில்  கியூபாவின் தெற்கிலுள்ள பன்றிகள் குடா (The Bay of Pigs) எனும் கடற்பகுதியில் படையெடுப்பை (The Bay of Pigs Invasion) நடத்தியது. அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியின் ஆட்சியின்போது, அமெரிக்க உளவுத்துறையின் (CIA – Central Intelligence Agency) திட்டமிடல் மற்றும் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்ட அப்படையெடுப்பில் கலகக்காரர்கள் சுமார் 1400 பேர் கலந்துகொண்டனர். ஆனால், கியூப வீரர்களின் தாக்குதலைச் சமாளிக்கமுடியாமல்  மண்ணைக் கவ்வினர் அக் கலகக்காரர்கள். மாபெரும் வெற்றியை கியூபா பெற்றது. கென்னடி தலைமையிலான அமெரிக்க அரசுக்கு அது பெருத்த அவமானத்தைத் தந்தது எனில் மிகையில்லை.

’எங்கள் சாம்ராஜியத்தில் ஆதவன் என்றுமே மறைவதில்லை’ என்று மார்தட்டிக்கொண்டு, தருக்கோடும் செருக்கோடும் உலகையே அடக்கியாண்ட இங்கிலாந்துகூட பின்னாளில் அமெரிக்காவின் அடிவருடியாக மாறிவிட்டநிலையில்,  அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவின் அளவுகூட இல்லாத கியூபா, அமெரிக்காவைக் கண்டு சற்றும் அஞ்சவில்லை. ஒருவரல்ல… இருவரல்ல… பதினொரு அமெரிக்க அதிபர்களைத் தன் ஆட்சிகாலத்தில் சந்தித்துவிட்டார் ஃபிடல்; ஒருவரால்கூட அவரை ஆட்டவோ அசைக்கவோ முடியவில்லை என்பது வியத்தகு வரலாற்றுச் சாதனையே!

முதலாளித்துவ அமெரிக்காவோடு பகைமைfedelmandela பாராட்டினாலும், (அன்றைய) சோவியத் யூனியனுடனும், இலத்தீன் அமெரிக்க நாடுகளோடும், இடதுசாரிச் சிந்தனைகள் கொண்ட பிற நாடுகளோடும் தோழமையைப் பேணினார் ஃபிடல். ஆங்கிலக் காலனி ஆதிக்கத்தின் இரும்புப் பிடியிலிருந்து தென்ஆப்பிரிக்க நாடுகள் மீண்டுவரப் பேருதவி புரிந்தார் அவர். அந்நாடுகளுக்குக் கியூபாவிலிருந்து மருத்துவர்களையும் செவிலியர்களையும் அனுப்பி அம்மக்களின் நலன் காத்ததால் ஆப்பிரிக்காவின் நாயகனாக ஃபிடல் கொண்டாடப்பட்ட காலமும் உண்டு. அதனாலன்றோ தென்னாப்பிரிக்கக் கருப்பினத் தலைவரும், அதன் அதிபருமான நெல்சன் மண்டேலா தன்னுடைய 27 ஆண்டுகாலச் சிறைவாசத்தை முடித்தவுடன் கியூபாவின் தலைநகர் ஹவானாவுக்கு வந்து ஃபிடலை ஆரத்தழுவித் தன் நன்றியறிதலை வெளிப்படுத்தினார்.

fidel_castroindraநம் இந்தியத் திருநாட்டோடும் நல்ல நட்புறவு கொண்டிருந்தார் ஃபிடல். அணிசேரா நாடுகளின் அமைப்பில் (NAM – Non Aligned Movement) உறுப்பினராய் இருந்த இந்தியாவின் பண்டித நேருவும், கியூபாவின் ஃபிடலும் நியூயார்க் நகரில் முதன்முதலில் சந்தித்தபோது வேர்விட்ட நட்பு அது. பின்னர், நேருவின் மகளார் இந்திராவின் காலத்தில் மேலும் பலப்பட்டது. அன்னை இந்திராவைத் தன் உடன்பிறப்பாகவே எண்ணி அன்புபாராட்டினார் ஃபிடல்.  

பிரதம மந்திரியாகவும் பின்னர் அதிபராகவும் ஐம்பதாண்டுகளுக்கு மேல் கியூபாவைக் கட்டிக்காத்த ஃபிடலின் உடல்நிலை 2006ஆம் ஆண்டின் மத்தியில் (July 2006) சீர்கெடத் தொடங்கிற்று. தம் பெருங்குடலில் ஏற்பட்ட குருதிப்பெருக்கை நிறுத்த அவர் அறுவைசிகிச்சை மேற்கொள்ளவேண்டியதாயிற்று.

ஃபிடலின் நிலைகண்டு மகிழ்ந்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ், ”மிகவும் நல்லவரான ஆண்டவர் ஃபிடலை ஒருநாள் (தம்மிடம்) அழைத்துச் செல்வார்” என்று குத்தலாகச் சொல்ல, அதனையறிந்த கடவுள் மறுப்பாளரான ஃபிடல், “இப்போது எனக்குப் புரிகிறது… புஷ்ஷும் அவரையொத்த பிற அமெரிக்க அதிபர்களும் எனக்கு எதிராக நிகழ்த்திய படுகொலை முயற்சிகளிலிருந்தெல்லாம் நான் எவ்வாறு தப்பிப் பிழைத்தேன் என்று! புஷ் குறிப்பிடும் மிகவும் நல்லவரான அந்த ஆண்டவர்தான் என்னைக் காத்திருக்கின்றார்!” என்று நக்கலாகப் பதிலடி கொடுத்தார். (One day the good Lord will take Fidel Castro away”. Hearing about this, the atheist Castro ironically replied: “Now I understand why I survived Bush’s plans and the plans of other presidents who ordered my assassination: the good Lord protected me). ஃபிடலின் இந்தச் சாதுரியமான பதில் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாய் அப்போது எங்கும் உலா வந்தது. உளவுத்துறையின் (CIA) உதவியோடு  ஃபிடலைக் கொல்ல 638 தடவை அமெரிக்கா முயன்றதாகத் தெரியவருகின்றது.

முதுமை காரணமாகப் பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு ஆட்படத் தொடங்கிய ஃபிடலால் அரசாங்கப் பணிகளில் முன்புபோல் கவனம் செலுத்தமுடியவில்லை. எனவே, முக்கியப் பொறுப்புக்களை 2008-இல் தன் இளவல் ரௌல் காஸ்ட்ரோவின் வசம் தந்தவர், கட்சிப்பொறுப்புக்கள் அனைத்திலிருந்தும் விலகி, 2011-இல் ஆட்சிப்பொறுப்பை முழுமையாய் ரௌலிடமே ஒப்படைத்தார்.

கியூபாவின் மெசையாவாக (Messiah – The savior) பலராலும் போற்றப்பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ, மார்க்சியப் பொதுவுடைமைக் கொள்கைகளைப் பரப்பவும், அதனைத் தம் மண்ணில் நிலைக்கச்செய்யவுமே தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். சந்தைப் பொருளாதாரத்தை நயந்து உலகநாடுகள் அனைத்தும் அதன்பின்னே (ஆட்டு) மந்தைகளாய் நின்றபோதும் அதற்கு ஆட்படாமல் விலகியே இருந்தார் அவர். அதன்விளைவாய்க் கியூபாவின் உள்நாட்டுப் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்ததை மறுப்பதற்கில்லை. ஆயினும், கட்டற்ற பொருளாதாரத்தை ஃபிடல் ஆதரிக்கவில்லை. இதனால் சொந்தநாட்டு மக்களின் வெறுப்புக்கும், விமரிசனத்துக்கும் அவர் ஆளாகவேண்டிய சூழலும் உருவானது. அப்போதும் தன்னுடைய கம்யூனிசக் கொள்கைகளைக் கைவிடாத லட்சியவாதியாகவே அவர் வாழ்ந்தார்.

இவ்வாறு, தூய கம்யூனிசத்தையே தன் உயிர்மூச்சாகக்
கொண்டு பொதுவுடைமை வானில் சுடர்விட்ட அந்தMOSCOW, RUSSIA - NOVEMBER 26, 2016: Flowers at the Cuban Embassy in Moscow in memory of Cuba's revolutionary leader and former president Fidel Castro. Castro died aged 90 on November 25, 2016. Artyom Geodakyan/TASS (Photo by Artyom GeodakyanTASS via Getty Images) விடிவெள்ளி, சென்ற வெள்ளியன்று (நவம்பர் 25, 2016) மறைந்தது. ’கம்யூனிசத்தின் கடைசிமூச்சு நின்றுவிட்டது’ என்று முதலாளித்துவ ஆதரவாளர்கள் ஃபிடலின் மரணத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடிவருகின்றனர்.

இச்சூழலில், ஃபிடலின் கம்யூனிசக் கொள்கைகள் குறித்து அவர்நாட்டு மக்களின் மனநிலை என்ன என்று ஆராய்வது(ம்) அவசியமாகின்றது.

fideland-redஃபிடலின் தொடக்க காலப் போராட்ட வாழ்வையும், கம்யூனிசத்தை அவர் அரும்பாடுபட்டு வளர்த்த பாங்கையும் அறிந்த கியூபாவின் சென்ற தலைமுறையினர் இன்னமும் அவரைப் போற்றுதலுக்குரிய பொதுவுடைமைவாதியாகவே பார்க்கின்றனர். ஆனால், தகவல் தொழில்நுட்ப யுகத்தின் அசுரப்பிடியில் சிக்கியிருக்கும் இன்றைய இளந்தலைமுறையினரோ நாட்டின் முன்னேற்றத்திற்கும், தகவல்தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் கம்யூனிசம் பெரும் இடையூறாய் இருப்பதாகவே எண்ணுகின்றனர்.

இளைஞர்களின் ஆதரவில்லாத கொள்கையும், தலைவரும் வெற்றிபெறுவது அரிது. ஆகவே, ஃபிடலின் மறைவு கம்யூனிசத்தின் நிலையை இன்று கவலைக்கிடமாகவே மாற்றியுள்ளது.

கம்யூனிசத்துக்கு எதிரான இளைஞர்களின் மனநிலை மாறவேண்டும்; ஓடப்பரையும் உயரப்பரையும் ஒப்பப்பராய் மாற்றும் சிவப்புச் சித்தாந்தத்தை அவர்கள் மீண்டும் வெற்றியோடு வலம் வரச்செய்யவேண்டும் என்பதே அவற்றின்மீது உவப்புக் கொண்ட மக்களின் அவா.

வருங்காலம் இதற்கான விடை சொல்லும்!

*********

References:

http://opinion.inquirer.net/87678/cuba-si-yanqui-no

https://en.wikipedia.org/wiki/Fidel_Castro

தமிழ் இந்து – http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/article9391560.ece?ref=sliderNews

http://learning.blogs.nytimes.com/2012/04/17/april-17-1961-the-bay-of-pigs-invasion-against-castro/

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பொதுவுடைமை போற்றிய புரட்சியாளர்!

 1. கட்டுரை ஒரு தலை பட்சமாக எழுதப்பட்டுள்ளது. படித்தவரை க்யூபாவில் இருந்து வரும் சுதந்திரமின்மையை, ஏழ்மையைப் பற்றி கட்டுரையில் ஒன்றுமில்லை. இருந்துவிட்டு போகட்டும். கட்டுரை எழுத்தாளர் வசிப்பது முதலாளித்தத்துவ அமேரிக்க கூட்டு நாடுகளில் என நினைக்கிறேன். ஃபிடல் கேஸ்றோவின் விசிறியாக இருந்து கொண்டு ஏன் அங்கு போய் வசிக்க கூடாது..? – எழுத்தாளரின் கொள்கை பற்றுதலுக்கு பொருத்தமாக இருக்குமே..? -எழுத்தில் மட்டும்தான் பொதுவுடைமை காம்யூனிச – காம்யூனிஸ்ட் தலைவர்கள் விசிறி என்றால், பேச ஏதுமில்லை.
  தகவலுக்கு:
  http://www.faithwire.com/2016/11/28/heres-a-handy-list-of-atrocities-for-everyone-glorifying-fidel-castro-today/
  http://www.crimeandconsequences.com/crimblog/2016/11/the-many-crimes-of-fidel-castr.html

 2. வாசன் ஐயா,

  வணக்கம். 

  என் கட்டுரை குறித்த தங்கள் கருத்துரைக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

  ஆம், நான் கம்யூனிசத்தின் விசிறிதான்! விசுவாசிதான்! அந்த அடிப்படையிலேயே கம்யூனிசம் எனும் அரிய சித்தாந்தத்தை ஆதரித்து வளர்த்த சோவியத் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளெல்லாம் அதனை அநாதைக் குழந்தையாய்க் கைவிட்டுவிட்ட நிலையில் கடைசிவரை அதனிடம் அன்புபாராட்டிய ஃபிடல் காஸ்ட்ரோவைப் போற்றிக் கட்டுரை வரைந்தேன். அதற்காக அவர் ’உலகமகா உத்தமர்’ என்றோ யாருக்குமே கெடுதல்செய்யாத ’கருணாமூர்த்தி’ என்றோ என் கட்டுரையில் நான் எங்குமே குறிப்பிடவில்லை!

  கியூபாவின் ஏழ்மை குறித்து நான் ஒன்றுமே குறிப்பிடவில்லை என்று குறைப்பட்டிருக்கிறீர்கள். 

  ஃபிடலின் கம்யூனிசக் கோட்பாடுகளால் கியூபாவின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்தது; அதனை அவர்நாட்டு மக்களே விரும்பவில்லை என்று நான் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளதைத் தாங்கள் கவனிக்கவில்லை  போலிருக்கிறது. 

  இன்னொன்றையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். கட்டற்ற சுதந்திரத்தோடும், ஆடம்பர வசதிகளோடும் வாழ்வதற்கு ஏற்ற கொள்கையன்று கம்யூனிசம்! சுயக் கட்டுப்பாடும், தன்னலத் தியாகமும், ’எல்லார்க்கும் எல்லாம்’ எனும் பரந்தநோக்குமே கம்யூனிசத்தின் வாழ்வியல் நெறிகள் எனும்போது அக்கொள்கையைப் பின்பற்றும் நாடும், மக்களும் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும். அது தவிர்க்க இயலாதது.

  ஐயா, நான் அமெரிக்காவில் வசித்தால் அமெரிக்காவின் முதலாளித்துவத்தைத் தான் ஆதரிக்கவேண்டும்; கம்யூனிசத்தை ஆதரித்தால் உடனே கியூபாவுக்குப் போய்விடவேண்டும் என்ற தங்கள் வாதம் வேடிக்கையானது!  🙂

  எனக்கு ஒருகொள்கை பிடித்திருக்கிறது என்றால் அதனை ஆதரித்து நான் எங்கிருந்து வேண்டுமானாலும் எழுதலாம்; பரப்புரை செய்யலாம்! அது தனிமனிதக் கருத்துச் சுதந்திரம்! அதற்கு யாரும் தடைபோட முடியாது!

  ஏன்…இந்தியாவில்கூடத்தான் பண்டித நேரு தொடங்கி தோழர் ஜீவா வரை எண்ணற்றோர் கம்யூனிசத்தையும் மார்க்சியத்தையும் உச்சிமேல் வைத்துக் கொண்டாடினார்கள். அதன் கொள்கைகளை நாடெங்கும் பரப்புரை செய்தார்கள். அவர்களை யாரும் நீங்கள் ஏன் கம்யூனிசமும் சோஷலிசமும் பேசிக்கொண்டு இந்தியாவில் இருக்கிறீர்கள்? கார்ல்மார்க்ஸ் பிறந்த ஜெர்மனிக்கோ, கம்யூனிசத்தை வளர்த்தெடுத்த சோவியத் யூனியனுக்கோ, அல்லது சீனாவுக்கோ போய் வசிக்கவில்லை… பேச்சிலும் எழுத்திலும்தான் உங்கள் வீரமா? என்று (நீங்கள் என்னைக் கேட்டதுபோல்) கேட்கவில்லை!

  (ஃபிடலைக் குறித்து மேலதிகத் தகவல்கள் அறிந்துகொள்ளச் சுட்டிகள் கொடுத்து உதவியதற்கு நன்றி!)

  அன்புடன்,
  மேகலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *