நிர்மலா ராகவன்

போட்டி பொறாமை ஏன்?

%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-1-1
`வகுப்பில் முதலாவதாக வரவேண்டும்! உன்னை யாரும் முந்த விடாதே!’

பள்ளிக்கூட நாட்களில் அனேக குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர் அளிக்கும் அறிவுரை. அதற்கு முன்னரே, குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், `உன் தம்பி பார், எவ்வளவு சமர்த்தாக இருக்கிறான்! நீயும் இருக்கிறாயே, அசடு!’ என்றெல்லாம் பேசி, அந்த அறியாப் பருவத்திலேயே போட்டி மனப்பான்மையை விதைத்து விடுகிறார்கள்.

`நானும் ஏன் தம்பிமாதிரி இல்லை?’ என்ற ஏக்கமானது தான் ஏதோ விதத்தில் மட்டமானவன் என்ற எண்ணத்தை நிலைக்கச் செய்துவிடுகிறது. தன்னைவிட அம்மாவின் மதிப்பில் உயர்ந்திருக்கும் தம்பிமேல் பொறாமை வருகிறது. அவனுடன் போட்டி போட்டு எப்படியாவது அவனை வீழ்த்த நினக்கிறான். தெரியாத்தனமாக விதைக்கப்பட்ட இக்குணம் ஒருவனுடன் சேர்ந்து வளர்கிறது.

கதை: தம்பி வேண்டாம்

இடைநிலைப்பள்ளியில் என்னுடன் படித்த ஒரு பெண் தன்னை யாரும் எந்த விதத்திலும் மிஞ்சிவிடக்கூடாது, எல்லாப் பரீட்சைகளிலும் தான்தான் வகுப்பில் முதலாக வரவேண்டும் என்ற துடிப்பு மிக்கவளாக இருந்தாள். தப்பித் தவறி நான் முதலாவதாக வந்துவிட்டால், ஒரு மாதம் என்னுடன் பேசமாட்டாள்!

சிறு வயதிலேயே அப்பெண்ணை பாட்டி வீட்டில் விட்டுவிட்டு, அவளுடைய தம்பியைத் தம்முடன் வைத்துக்கொண்டார்கள் பெற்றோர். தந்தைக்கு அடிக்கடி வேலை மாற்றம், அதனால்தான் இந்த ஏற்பாடு என்பதை அவளுக்குப் புரியவைக்கவில்லை. பெற்றோருக்கு உகந்த பிள்ளையாய் பிறந்துவிட்ட தம்பிமேல் பொறாமை கிளர்ந்தது.

இக்குணம் வெறியாகவே மாறி, அவள் அமைதியாகவோ, மகிழ்ச்சியாகவோ இருக்க முடியாதபடி செய்துவிட்டது. `தோல்வி’ என்றாலே பயம் என்ற நிலையில், படிப்பில், குடும்ப வாழ்க்கையில், உத்தியோகத்தில், பிறரை வென்றால்தான் மகிழ்ச்சி என்று பழகிக்கொண்டுவிட்டாள். `நான் எல்லோரையும்விடச் சிறப்பாக இருக்கிறேன், பார்த்தீர்களா?’ என்ற தற்பெருமை கூடியது.

அவள் பெரிய படிப்புப் படித்து, பெரிய உத்தியோகத்திலும் அமர்ந்தாள். அதன்பின்னரும், கணவருடன் ஒத்துப்போகாமல், பிரிந்து வாழ, `இவளுக்கு யாருடனும் ஒத்துப்போக முடியவில்லை. ஏன்தான் இப்படி எல்லாருடனும் சண்டை போடுகிறாளோ!’ என்று அவளுடைய தாய் வருத்தத்துடன் என் தாயிடம் தெரிவித்தாள்.

பிறருடைய ஒத்துழைப்பு ஒருவர் முன்னுக்கு வருவதற்கு அவசியம் தேவை. இது புரியாது, அல்லது ஒப்பாது, போட்டி மனப்பான்மைக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களுக்குத் தனிமைதான் நிலையானது.

பிறரிடம் அனுசரணையாக நடந்துகொள்ள வேண்டுமென்றால் அவர்கள் எக்காலத்திலும் தம்மை மிஞ்ச மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும் இவர்களுக்கு. மற்ற எல்லோரிடமும் காட்டம்தான்.

எவ்வளவு பட்டங்கள் வாங்கினால்தான் என்ன! உண்மையான கல்வி என்பது போட்டி மனப்பான்மை நீங்கியபின்தான் என்கிறார் ஒரு தத்துவஞானி.

ஒருவர் நல்லவிதமாக வளர்வதற்கு முதலில் பெற்றோரின் அன்பும் வழிகாட்டலும் தேவை. பிறகு, ஆசிரியர்களின் கனிவு. `எனக்குத் தெரிந்ததை எல்லாம் உனக்குச் சொல்லித்தர மாட்டேன்!’ என்றிருக்கும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் போட்டிபோடும் அற்பங்கள் என்பேன்.

சிலரது போட்டி மனப்பான்மை தம்மைவிடச் சிறப்பாக இருக்கும் பிறர்மேல் பொறாமையாக வெளிப்படும்.

கதை: மகனால் தாய்க்கு வந்த சோதனை

ஆசிரியர்களின் பொது அறையில் ஓய்வாக இருக்கும்போது நாங்கள் எங்கள் குடும்ப விவகாரங்களை அலசிக்கொண்டிருப்போம். என்னுடைய சக ஆசிரியை மிஸஸ் ஃபூ நான் சாதாரணமாக ஏதாவது என் குழந்தைகளைப்பற்றிப் பேசினால்கூட பொறாமையுடன் வெறித்தது எனக்குக் குழப்பத்தை விளைவித்தது.

நாலைந்து வருடங்களுக்குப்பின், தானே என்னிடம் அவளுடைய மகனுக்கு ஆடிசம் என்ற நோய் என்று தெரிவித்தாள். `முன்பெல்லாம் எங்கள் வீட்டுக்கு யாராவது வந்தால், அவர்களைப்போல் அப்படியே நடித்துக் காட்டுவான்,’ என்று சற்று பெருமையுடன் கூற ஆரம்பித்தவள், `இப்போது அதுவும் மறந்துவிட்டது!’ என்றாள் சோகமாக.

பிறருடைய கண்களைப் பார்த்துப் பேசாது, தானே ஏதேதோ பேசிக்கொண்டு, `நெருப்பு சுடும்’ என்று பலமுறை கூறினாலும் புரிந்துகொள்ள முடியாத தன் மகனைப்பற்றி தானும் எதுவும் பேசமுடியவில்லையே என்ற வருத்தம் அவளுக்கு என்று புரிந்துகொண்டேன்.

`எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆயிற்று?’ என்று கேட்டாள் என்னை.

`எல்லாருடைய வாழ்க்கையிலும் ஏதோ இருக்கத்தான் செய்கிறது. உன் மகன் அவனைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறான்? நாம் எந்த ஜன்மத்திலோ செய்த பாபச் சுமையை இப்படி ஒரு பிறவி எடுத்துக் கழிக்கிறோம்,’ என்றுவிட்டு, நம் புத்திசாலித்தனத்தை வெளிக்காட்டிக் கொள்கிறோமோ என்று வெட்கி, `இது நான் எங்கோ படித்தது,’ என்று சப்பைக்கட்டு கட்டினேன்.

`ஓ! இது எனக்கான தண்டனை! அப்படித்தானே?’ என்றாள், சற்றுத் தெளிவுடன். அதன்பின் என்னுடன் போட்டி கிடையாது. உற்ற தோழிகளானோம்.

கதை: பேச்சில் போட்டி

கடந்த ஆண்டு கோலாலம்பூரிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நான் உரையாற்றியபோது, என் எழுத்துலக அனுபவங்களை நகைச்சுவையுடன் பகிர்ந்துகொண்டிருந்தேன். அதுதான் தலைப்பு: என் எழுத்துலக அனுபவங்கள்.

முடிந்ததும், `எவ்வளவு உற்சாகமாகப் பேசினாங்க! இன்னொரு கைதட்டல் குடுங்க,’ என்று அவையிலிருந்த ஒரு பெண்மணி கூற, அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

சற்றுப்பொறுத்து நான் சிலருடன் உணவருந்திக் கொண்டிருந்தபோது, உரையாற்றிய இன்னொரு பெண்மணி என்னைத் தேடி வந்தாள். “என்ன, நிர்மலா! சும்மா சிரிச்சுச் சிரிச்சுப் பேசிட்டீங்களே! FACTS இல்லே!” என்றாள். இவள் பல வருடங்களாக எதற்காகவாவது என்னைத் தாக்கி வருபவள்.

அழகிலோ, அறிவிலோ, தைரியத்திலோ, அல்லது செல்வத்திலோ, பொதுவாக ஏதாவது ஒரு விதத்தில் பிறரைவிடக் குறைந்திருக்கிறோமே என்றெண்ணி மறுகுபவர்கள் அந்த விஷயத்தில் தம்மைவிட உயர்ந்திருக்கிறார்கள் என்று நினைப்பவர்கள்மேல் பொறாமை கொள்கிறார்கள். அவர்களுடன் போட்டி போடும் அளவுக்குத் திறமையோ, தைரியமோ இல்லாவிட்டாலும், அவர்களைச் சற்றேனும் கீழே இறக்க முயற்சிக்கிறார்கள்.

இது புரிந்திருந்ததால், “உங்களிடம், `எத்தனை தன்னம்பிக்கை உங்களுக்கு!’ என்று யாராவது பாராட்டினார்களா? ஆட்டோகிராஃப் கேட்டார்களா? `எங்களுடன் போட்டோ எடுத்துக்கறீங்களா?’ என்று வந்து, வந்து கேட்டார்களா? இதெல்லாம் எனக்கு நடந்தது!” என்றேன், அமைதியான குரலில்.
அத்தாக்குதலைச் சற்றும் எதிர்பாராது, `நேரமாயிடுச்சு!’ என்று ஓடியேவிட்டாள்!

என் திறமையில் நானே சந்தேகம் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் பேசியது புரிந்ததால்தான் பதிலடி கொடுத்தேன். இது திமிரில்லை. தற்காப்பு.

தன்னம்பிக்கை என்பது..

ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ திறமை ஒளிந்திருக்கிறது. அதைப் புரிந்துகொண்டு, அதையே பலமாக்கிக்கொண்டால் பிறருடன் போட்டி போடத் தோன்றாது. பிறர் தன்னைப்பற்றிக் குற்றமாகப் பேசுவதையும் அலட்சியம் செய்ய முடியும்.

இத்தன்மை ஒருவரது உடல் மொழியிலேயே தெரியும். முதுகெலும்பும் தலையும் நிமிர்ந்திருக்கும். `அவனுக்கு முதுகெலும்பே கிடையாது!’ என்று கோழைகளை வர்ணிப்பது இதனால்தான்.

பலவீனமே பலமாய்

தன்னம்பிக்கை என்பது கர்வப்படுவதிலோ, பெருமை பேசுதலிலோ இல்லை. தன் பலத்தைப் புரிந்து, பலவீனத்தையும் தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்ளுதல்.

உதாரணம்: மாணவர்கள் அடங்காது, வகுப்பில் இரைச்சல் போட்டால் ஆசிரியை தானும் அவர்களுக்கு ஏற்றாற்போல் இரைந்து பாடம் நடத்தாது, குரலை இன்னும் அடக்கிக்கொள்கிறாள்.

`கேட்கவில்லை!’ என்று அலறுபவர்களிடம், `உங்களுக்குப் பாடம் கற்க வேண்டுமென்றால் கவனியுங்கள்!’ என்று கூறினால் பலனிருக்கும். அடிவாங்கியவர்கள்போல் மௌனமாகிவிடுவார்கள்.
இது என் அனுபவத்தில் கண்ட உண்மை.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *