ஒரு அரிசோனன்

என் கண்ணைப் பறித்தன அந்த பளபளக்கும் வான்நீலத் தாவணியும், கருநீலப் பட்டுப்பாவாடையும்.  அவற்றை அணிந்துவந்த அழகுதேவதை என் கண்களையும், கருத்தையும் தன்பால் கட்டிக் கவர்ந்திழுத்தாள்.  உடனே, என் கால்கள் தாமாகவே நின்றுபோயின.

“டேய், கண்ணா, ஏண்டா சடன் பிரேக் போடறே?  இப்பவே பந்தி ஃபுல் ஆகறமாதிரி இருக்கு.  நீபாட்டு பராக்குப் பார்த்துக்கிட்டு நின்னா, சாப்பாட்டுக்கு ரெண்டாம் பந்திக்குக் காத்திருக்கவேண்டியதுதான்!” என்று என்னை இழுத்தான் என் வயதொத்த என் சின்னமாமன் ராஜு.

“நீ போய் உக்கார்ந்து, எனக்கும் உன்பக்கத்துலே இடம் போட்டுடேண்டா, ராஜு!” என்று அவனை அனுப்பமுயன்றேன்.  ஒரே வயதொத்தவர்கள் என்பதால் ‘வாடா, போடா,’தான்;  மாமன், மருகன் என்ற பேதம் மறைந்து நட்பு நிறைந்துநின்றதே அதற்குக் காரணம்.

“இங்கெ என்ன வெட்டிமுறிக்கற வேலை உனக்கு இருக்கு, கல்யாணச் சாப்பாட்டை ஒருகை பார்க்கறதைவிட?  சரி, இடம்போட்டுத் தொலைக்கறேன்.  நீ உன்னோட வெட்டிமுறிக்கற வேலையை முடிச்சுட்டே வந்துதொலை!” என்று பலவிதமான, எழுதக்கூடாத வார்த்தைகளால் என்னை அர்ச்சனை செய்து, எனக்கு ஆசிவழங்கியவாறே செல்லத்துவங்கியவனை மறுகணமே பின்தொடர்ந்தேன், “ராஜூ,  நில்லுடா, நானும் வரேன்,” என்றவாறே.

என் நீலத்தேரும் பந்தியைநோக்கி நகர ஆரம்பித்ததே அதற்குக் காரணம்.

அந்தத் தேர் அசைந்து அசைந்து செல்வதைப் பார்த்ததும் என் நினைவுக்கு வந்தது, சில நாள்கள்முன்பு தமிழாசிரியர் நடத்திய கவிதைகளின் வரிகள்தான்!

“இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்புளிக்க, வட்டில் சுமந்து மருங்கசைய…”

அத்துடன், அம்பிகாபதி படத்தில் வந்த,

“சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே அசையக் குழை ஊசலாடத் துவர்கொள் செவ்வாய்
நற்றேன் ஒழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேர் இருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே!”

என்ற பாடலையும் என் உதடுகள் தானாகவே முணுமுணுத்தன.

என்னைத் திரும்பிப்பார்த்த என் மாமன் ராஜு, “உனக்கு அரணைப் புத்திடா, கண்ணா!  சித்தம்போக்கு சிவன்போக்குடா உனக்கு!  ஒழுங்கா சாப்பிட வந்துதொலை!  சமையல் வாசனை மூக்கைத் துளைக்குது.  வெங்காய சாம்பார் மணம் என்னை அப்பிடியே தூக்குது!” என்று உண்ணவிருக்கும் திருமணவிருந்தையே எண்ணி மகிழ்ந்தவாறே முன்சென்றான்.

எனது பாடல் அவன் காதுகளில் விழவேயில்லை.  பசியினால் அவனது காதுகள் அடைத்துப்போயினவா, அல்லது, “வயிற்றுக் குணவு இல்லாதபோது செவிக்கும் சிறிது ஈயப்படும்” என்ற அவனது சித்தாந்தமா என்று நானறியேன்.

அந்த நீலத்தேரின் நடையழகை, துவளும் இடையழமை இரசித்தவாறே நடந்தேன்.

அழகு, அழகு கொள்ளையழகு.  மனதிற்குள்ளும், உடலுக்குள்ளும் ஏதோ ஓர் இனம்புரியாத கிளர்ச்சி.  அவள் நடக்க நடக்க, நெளிந்தாடும் பாம்பையொத்த குஞ்சலம் வைத்த பின்னல் என்னைக் கட்டியிழுதத்தைச் சொல்லவா, பக்கவாட்டில் அசையும் பின்னழகில் நான் கிறங்கி அதற்கேற்ப என் தலையை என்னையும் அறியாமல் ஆட்டி மகிழ்ந்ததைச் சொல்லவா, அலையலையாக வளைந்திருந்த கருங்குழலில் என் இரும்பு மனம் பழுக்கச் சிவந்து வளைந்ததைச் சொல்லவா?  என் மனம் என்னை விட்டுவிட்டு அவளுடன் நடைபயின்றது.

கருங்குழலி என்பது ஆகுபெயர் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை” என்று தமிழாசிரியர் கற்பித்த இலக்கணம் நினைக்காமலே என் நினைவுக்கு வந்து, இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டான அழகி இவள் என்ற எண்ணத்தை என் மனதில் இழையோடவிட்டது.

அப்பொழுது எதிர்பாராவண்ணம் திரும்பிய நீலத்தேர் தன் முத்துப்பற்கள் தெரிய புன்னகை செய்தாள்.  நான் அங்கேயே ஏன் மயங்கிவிழவில்லை என்று எனக்கே தெரியவில்லை.

நடுவில் சீரான, நேர்கோடான வகிடு, அதிலிருந்து இருபுறமும் வளைந்துவளைந்து செல்லும் கரிய கேசம் காதுகளைப் பாதி மூடியவண்ணம் பின்சென்று மறைந்தது.  மணிபதித்த நெற்றிச்சுட்டி, காதில் குண்டலங்கள் அவள் திரும்பியதால் ஆடிய ஆட்டத்தை இன்னும் நிறுத்தவில்லை.  அந்த ஆட்டத்தில் நான் அக்குண்டலங்களோடு ஊஞ்சலாடினேன்.

சாயமே இல்லாமல் இலேசாகச் சிவந்திருந்த உதடுகளில் உள்ள ஈரப்பசையில் என் உள்ளம் அட்டையாக ஒட்டிக்கொண்டது.  இயற்கையாகவே சிவந்திருக்கும் உதடுகளை முதன்முறையாக அப்பொழுதுதான் பார்த்தேன்.  அதுவரை – உதடுகள் கடவுளால் உருவாக்கப்பட்டதற்குக் காரணம் – மண்டையோடுமாதிரி நமது பற்கள் மாதிரி வெளியே தெரியாமலிருக்கவும், பேசுவதற்காகவும், உண்ணுவதற்காகவும், நமது வாயைத் திறக்கவும், மூடவும் — அதற்குமேல் அவற்றைப்பற்றி சிந்திக்கவும் தேவையில்லாத உறுப்புகள் அவை என்பதைத்தவிர வேறெந்த எண்ணமும், என்னைப்பொருத்தவரை என் மனதில் தோன்றியதில்லை.

ஆனால், முகத்திற்கு அழகுசேர்க்கும் — கண்களுக்கு இணையான — அவள் கண்களைப்பற்றி அடுத்தபடி சொல்லுகிறேன் – உள்ளத்தைக் கவ்வியிழுக்கும் உறுப்பு என்ற எண்ணம் முதன்முறையாக என்னிடம் எழுந்தது.

அவள் என்னைப் பார்த்துத்தான் புன்னைகை செய்கிறாள், உடனே அவளருகில் செல்வோம் என்ற எனது ஆர்வத்திற்கு அணைபோட்டேன்.  அடுத்தகணம் அப்புன்னைகை எனக்கல்ல, என்னைத்தாண்டி ஓடி அவளருகில் சென்று அவள் தோளில் உரிமையுடன் கையைப்போட்டுக்கொண்ட அவளது தோழிக்குத்தான் என்றறிந்ததும், என் உற்சாகம் ஈரப்பட்டாசாகப் பிசுபிசுத்தது.

உடனே என்னையும் அறியாமல் ஒருவிதமான பொறாமை உணர்வும் தோன்றுவதை என்னால் தடுக்கமுடியவில்லை.

“சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை,” என்று எப்பொழுதும் என்னை உயர்த்திப்பேசும் என் பாட்டியின் சொற்கள் என்மனதில் ஆழமாகப் பதிந்திருந்தாலும், பெண்ணாகப் பிறந்திருந்தால், அந்த நீலத்தேரின் அருகில் சென்று பேசியிருக்கலாமே, அதிலும், அவளின் தோழியாகப் பிறந்திருந்தால், அவளின் தோளில் உரிமையாகக் கையைப்போட்டு, அவளுடன் சென்றிருக்கலாமே என்ற பொறாமைகலந்த நப்பாசை ஒருகணநேரம் என்னுள் தோன்றுவதையும் என்னால் தடுக்க இயலவில்லை.

“இங்கே உட்காரலாமாடா, கண்ணா?  இங்கேதான் முதல்ல பரிமாறுவாங்க.  எதுவும் விட்டுப்போகாம கிடைக்கும். என்ன, சரியா நான் சொல்றது?” என்று தனது உணவுப்பந்தி நுணுக்கத்தை எடுத்துக்காட்ட முயன்றான் என் மாமன் ராஜு.

“இருடா ராஜு, இங்கே வேண்டாம்.” என்று என்னையும் அறியாமல் என்னிடமிருந்து பதில் வந்ததும், என்னை வியப்புடன் பார்த்தான் ராஜு.

“என்னடா ஆச்சு கண்ணா, உனக்கு?  பித்துப் பிடிச்சுடுச்சா?  இந்த இடத்துக்கு என்ன குறைச்சலாம்? கொஞ்சநேரமா உன் போக்கு சரியாவே இல்லே!” என்று தன் அதிருப்தியைக் தெரிவித்துக்கொண்டான்.

“அங்கே வாடா, போகலாம்,” என்று நீலத்தேர் — வேண்டாம், நீலக்குயில் என்று சொல்லலாமே இனிமேல் – அவள் உட்கார்ந்த இடத்தைநோக்கி விரைந்தேன்.  அவளும், அவள் தோழியும் அமர்ந்த இடத்திற்கு எதிரில் அமர்ந்தேன், அங்கு அமரமுற்பட்ட ஒரு முதியவரை முந்தித் தள்ளிக்கொண்டு.

“ஏண்டாப்பா தம்பி, நான்தான் இங்கே உட்கார வரேன்னு பார்த்தும், சினிமாக் கொட்டகைக்கு டிக்கெட் வாங்கப்போறவன்மாதிரி இடிச்சுதள்ளிண்டு உட்காரறியே?” என்று முதியவர் கேட்டது என் காதில் விழவேயில்லை.  அந்த நீலக்குயில்தான் என்னில் நிறைந்திருந்தாள்.

“வரவர இந்தக்காலப் பசங்களுக்கு மரியாதை மட்டு எதுவும் இல்லாமப்போச்சு!” என்று குறைப்பட்டுக்கொண்டவாறே நகர்ந்தார் அம்முதியவர்.

என்னை என் நீலத்தேரின், நீலக்குயிலின், நீலாயதாட்சி தேவியின் தரிசனத்திலிருந்து தடுத்தது ஓருருவம்.  அதை என் இடதுகையால் விலக்க முற்பட்டேன்.

பட்டென்று என்முதுகில் ஒரு அடி விழுந்தது.  நிமிர்ந்துபார்த்தேன்.  என் மாமன் ராஜு.

“உன்னை நம்பி வந்தால் நீ சுப்பிரமணியசாமி மயில்வாகனத்தில் உக்கார்ந்தமாதிரி இங்கேவந்து உக்காந்திருக்கே!  எங்கேயும் இடமில்லே, நகருடா கொஞ்சம்,” என்றபடி என்னை தம் பிடித்து நகர்த்தி, தானும் என்னருகில் அமர்ந்தான்.  அதையும் நான் உணரவேயில்லை. என் மனதைக் கவர்ந்த தேவியின் தரிசனத்தில் மீண்டும் ஆழ்ந்தேன்.

அவள் தன் தோழியுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.  எதையோ சொல்லிவிட்டு, மறுதலிப்பதுபோலத் தலையை இங்குமங்கும் ஆட்டினாள்.  உதட்டைச் சுழித்துக்கொண்டாள்.  அப்பொழுது அவள் காதில் சுழன்றாடிய குண்டலங்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டேன், நான் அவளது குண்டலங்களாக இல்லாதுபோனேனே என்று.

அவளது கண்கள் – ஆகா, பால்கிண்ணத்தில் நீந்தும் கருவண்டுகளாக அவளது கருவிழிகள் இங்குமங்கும் அலைந்தன.  ஒருதரம் பார்த்தாலேபோதும், உடனே பார்த்தவரைத் தன்னிடம் ஈர்த்துக்கொண்டுவிடும் அகண்ட கருவிழிகள்! அவ்விழிகளைப் பார்த்து அக்கடைக்கண் அமுதைத் தவிர வேறு எதுவும் வேண்டாம் என்று எண்ணச்செய்யும் கருணைததும்பும் விழிகள்.

அப்படிப்பட்ட அவ்விழிகள், அவளையே அள்ளிப்பருகிக்கொண்டிருக்கும் என்மேல் வந்து ஒருகணம் நிலைத்தன.  அதில் ஒரு சிறுபகுதிநேரம் என் கண்களுடன் கலந்தன.  அப்பொழுது அக்கண்களில் தெரிந்தது நாணமா, அன்பா, பாசமா, எதிர்பாரா திடுக்கிட்ட உணர்வா – அந்த அரைக்கண நேரம் எனக்கு ஆயிரம் யுகங்களாக — அசையாமல் நின்றுவிட்ட காலத்தின் இறுதியாகவே என்னால் உணரப்பட்டது.  அந்த அரைக்கணம் என்வாழ்விலேயே மறக்க இயலாத அரைக்கணம்; என் நினைவைவிட்டே அகலாத அரைக்கணம்; என்றென்றும் என்னைவிட்டு நீங்காத அரைக்கணம்; என் துன்பம், இன்பம், கோபம், தாபம், மகிழ்வு, இகழ்வு இவையனைத்தையும் மறக்கடித்துப் பேரின்பத்தில் ஆழ்த்தி முழுகடிக்கும் அரைக்கணம்.

அவளது இதழ்கள் பிரிந்து மலர்ந்தன.  உடனே நாணத்தில் அவள் தலைகவிழ்ந்தாள்.

நான் இன்பவெள்ளத்தில் திளைத்துத் திக்குமுக்காடினேன்.

சுர்ரென்று புறங்கையில் சூடுவைத்ததைப் போன்ற உணர்வு என்னை துன்பக்கரையில் கொண்டுசேர்த்தது.

“ஏண்டா, கண்ணா!  இலையைக் கவனிக்காமல் என்ன பார்வை, இங்குமங்கும்?  இப்பவே, மனசை அலையவிட்டால், நீ எங்கே படிச்சு உருப்படறது?  கொதிக்கற சாம்பாரைக் கையில் ஊத்தினாலும் திரும்பாம என்ன பார்வை?  இலையைக் கவனிடா!  உன்னை வைத்து பாப்பா [என் அம்மா] எத்தனையோ மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறாள், அதை மண்கோட்டையாக்கிவிடாதே!” என்று எரிந்துவிழுந்தார். என் மூத்த மாமா முத்துராமலிங்கம்.  உறவினர் திருமணம் என்பதால், பரிமாறும் பொறுப்பையும் தானாக இழுத்துப் போட்டுக்கொண்டவர், தன்னைமறந்த என் நிலைமையைக் கவனித்திருக்கிறார்.

திடுக்கிட்டு சுய உணர்வுக்கு வந்தேன்.  என் இனிய கனவை – பேரின்ப அனுபவத்தை –வித்தியாசமான என் முதல் உணர்வை – ஒருபெண்ணிடம் லயித்த எனது முதன்முதல் கன்னிக்காதல் உணர்வைக் கலைத்துவிட்ட பெரியமாமா அடுத்த இலைக்குமுன் அமர்ந்திருந்த என் சின்னமாமன் ராஜுவுக்கு பரிவுடன் சாம்பாரிலிருந்து காய்கறித்துண்டங்களை எடுத்துப்போட்டுக்கொண்டிருந்தார்.

அதற்குமேல் எனக்கு உணவில் கவனம் செல்லவில்லை.  எழுந்துவிட்டேன்.

அப்பொழுது அவள் என்னைப் பார்த்த பார்வை —  ஏன் எழுந்தாய் என்பது போலும் இருந்தது, இல்லாமலும் இருந்தது.  அந்த ஒருகணத்தில் “நானிருக்கப் பயமேன்?” என்று அருள்புரியும் தேவியின் கடைக்கண் பார்வையைபோலவும் இருந்தது.

“ஏண்டா கண்ணா, எழுந்திட்டே?” என்று வினவிய என் சின்னமாமனிடம், “பசி தீந்து போயிட்டதுடா, ராஜு.  இனிமே எதுவும் வேணும்னு தோணலே!”  என்று என் நீலத்தேரை, நீலக்குயிலை, நீலாயதாட்சித் தேவியைத் திரும்பிப்பார்க்காமல் நடந்தேன்.

உள்ளம் கனத்தது.  அவளைத் திரும்பிப்பார்க்க என்மனதில் திராணியில்லை.  அவளது உருவம் என் நெஞ்சில் கற்சிற்பமாக காலம்காலத்திற்கும் அழியாதவண்ணம் செதுக்கப்பட்டதைமட்டுமே என்னால் உணரமுடிந்தது.  அவளை என் இறுதிமூச்சு உள்ளவரை மறக்கமுடியாது என்பதும் தெரிந்தது.  அதுவொரு சுகமான அனுபவமாகவும், என்னைப்பொருத்தமட்டில் ஒருகணத்தில் உலகையே புறட்டிப்போடவைத்த புத்துணர்ச்சியாகவும் இருந்தது.

காதல் பக்தியாகப் பரவசமெடுத்தது.

ஆண்டுகள் பல கழிந்துவிட்டன.  எத்தனையோ அழகிகளைக் கண்டுவிட்டேன்.  அவர்களின் முகம் என் நினைவில் இருப்பதில்லை.  அந்த நீலத்தேரின், நீலக்குயிலின், நீலாயதாட்சியின் – அவள் பெயர்கூட எனக்குத் தெரியாது — அதற்குப்பிறகு அவளை என்வாழ்வில் நான் சந்திக்கவும் இல்லை.  ஆயினும், ஒருசில நிமிடங்களே பார்த்த அவளது முகம், அவளது  திருவுருவம் காதல் ஓவியமாக, காதல்தெய்வமாக, அருள்பாலிக்கும் தேவியாக என் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்கிறது.  அவளைப் பார்த்த நிகழ்வு என்னைப்பொருத்தவரையில் ஒரு தேவிதரிசனமாகவே நெஞ்சில் குடியிருக்கிறது — அவள் என்னுள், என் உயிரில், என் உணர்வில் ஒன்றிவிட்டாள்.  அவளைக் காண முடியவில்லையே என்ற ஏக்கம் என்னுள் எப்போதும் தோன்றியதே இல்லை.  ஏனெனில், என்னைப் பார்த்துப் புன்னகைசெய்த அரைக்கணத்தில் — என் கண்ணோடு கலந்த அந்த அரைக்கணத்தில் என்னுடன் ஒன்றாகிவிட்டாள்.

என்னுடன், என்னுள்ளே இருப்பவளை நான் ஏன் வேறு இடத்தில் தேடவேண்டும்?

நான் மனம்தளரும்போதெல்லாம் அவள் என்னுள் இருந்து என்னைத் தேற்றுகிறாள்.  என் மனவலிமை குன்றி நான் தடுமாறும் சமயத்தில் ஊன்றுகோலாக உருவெடுக்கிறாள்.  என்றுமே நான் தனிமையை உணராதவண்ணம் என் வாழ்க்கைத்தோழியாக வடிவெடுக்கிறாள்.  என் தாய் இறந்தவுடன் எனது தாயாகவேமாறி என்றும் தாயன்பு செலுத்துகிறாள்.

சுருங்கச் சொன்னால் அவள் எனக்கு ஒரு தெய்வமாகவே தென்படுகிறாள்.

அவள் எங்கு இருக்கிறாளோ எனக்குத் தெரியவில்லை.  அரைக்கணத்தில் என்னுள் ஒரு நிறைவை நிலைநிறுத்திய அவள் சென்றவிடமெல்லாம் சிறப்பித்துவருவாள் என்றே எனக்குத் தோன்றுகிறது.

என் காதல்தெய்வத்திற்கு, என் தேவிக்கு என் வணக்கங்கள்!

***   ***   ***

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *