இன்னம்பூரான்

சமுதாயமும், நீயும், நானும், அவரும்

f956a23c-4711-4df9-ae1a-e4d27c8b84a4

‘உலகெங்கும் காணக்கிடைக்கும் இன்னல்களுக்கு தீர்வு காணமுடியவில்லையே; அவற்றின் சீற்றத்தைக் குறைக்கவும் கூட முடியவில்லையே’ என்று அங்கலாய்க்கும் தென்னாப்பிரிக்க சிந்தனையாளர் டாக்டர் தேவி ரஜப் அவர்கள் இளைய சமுதாயம் வீண் சிந்தனைகளிலும், காழ்ப்புணர்ச்சியிலும் காலம் கடத்துவதை கண்டு வருந்துகிறார். அது, சமூக விரோதிகளின் நாசகார பன்முகங்களை கண்டுகொள்ளாததால் விளையும் அவலங்களை தடுப்பதை, குலைக்கிறது என்கிறார் (Confluence: Feb 2016). அத்தருணம் ஒரு ஹிந்து மெய்யறிஞர், ‘இந்த மதமோ, அந்த மதமோ, எந்த மதமாயினும், (நாத்திகத்தின் பல உட்பிரிவுகள் உட்பட) அதன் விசுவாசிகள் தங்கள் நம்பிக்கை மட்டுமே உண்மை என்று அடித்துக் கூறுவதால் அபாயம் ஏற்பட்டுவிடுமே என்று அஞ்சுகிறார். அவர் விடுத்த எச்சரிக்கை: மனிதம், சுதந்திர உலகம் ஆகியவற்றை காப்பாற்ற, எந்த விதமான மதாபிமானத்தையும் புறக்கணிக்காமல், ’ அப்பா! இதற்கு கடவுளின் துணை நாடாதே (Not in God’s name!) என்றதை வழிமொழிகிறார்.

உலகசமுதாயம் பெரிது; கணக்கற்ற வாழ்வியல்கள். சற்றே சிறியதான தேசாபிமான சமுதாயமும் அப்படித்தான் என்றாலும், நாட்டுப்பற்று ஒரு தொப்பிள் கொடி. இந்தியா இதற்குரிய உதாரணம். அதன் பல பகுதிகள்- அருணாச்சல பிரதேசத்திலிருந்து ஆண்டிப்பட்டி வரை- இமாலயத்திலிருந்து திருவிதாங்கூர் வரை, தனது தனித்துவ சமுதாய பண்புகளையும், இந்திய கலாச்சாரத்தை போற்றும் வகையிலும் இயங்கி வருகின்றன. மனித இனம் என்பதால் முரண்களுக்கு பஞ்சம் இல்லை.

உலகெங்கும் சமுதாய அநீதிகள் காலம் காலமாக கோலோச்சுவதும், அவை தோன்றி மறைவதும் கண்கூடு. ஆனால், மேல்மட்டம் கண்களை மூடிக்கொள்வார்கள். ஆஃப்ரிக்க நாடுகளில் பெண்கள் தாழ்த்தப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், பழங்குடி சண்டைகளும் காணக்கிடைக்கின்றன. நான் பட்டியலிட்ட அவலங்கள் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏகபோக உரிமையல்ல. நான் மற்ற மாநிலங்களிலும் கண்டிருக்கிறேன். டில்லியின் மேல்மட்டத்தில், தலைக்கூத்தல், (முதியவர்களை 26 வகைகளில் ஒன்றில் கொன்று விடுவது) பெண்சிசுவதை, கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்து ஆகிய நான்கு அவலங்களும், மற்றும் பல சமூகவிரோதங்களும் பரவலாகத்தான் இருந்தன, இருக்கின்றன. சொத்து களவாடவேண்டி, செல்வந்தர்கள் வீடுகளில் தலைக்கூத்தல் மாதிரி முதியவர்கள் குறி வைக்கப்பட்டது உண்டு. உசிலம்பட்டி சிசுக்கொலையை விட, டில்லியில் அதிகம். 1965 -1990களில் ரயிலில் வந்தால், இருபக்கமும் செக்ஸ் டெட்டர்மினிஷன் விளம்பரங்கள் . மெத்தப்படித்த கொலைகார டாக்டர்கள் தான், சட்டத்தை அவமதித்து, இன்றைக்கும் சேலத்தில் கூட சிசு வதை செய்திருக்கிறார்கள், அரசு விளம்பரங்கள் அலறும் போதும். இத்தனைக்கும் ஏற்கனவே தண்டிக்கப்பட்டவர்கள். சில மாநிலங்களில் கந்துவட்டி கொடுக்கமுடியமால் தற்கொலைகள் இன்று கூட நடக்கின்றன. தமிழ் நாட்டில் ஒரு பிரபல செல்வந்தர் கூட தற்கொலை செய்து கொஞ்சம் பழைய செய்தி. பீஹார், உத்தர் பிரதேஷ் கட்டப்பஞ்சாயத்துக்கள் உயிர்க்கொல்லிகள். ஒடிஷாவின் நெற்களஞ்சியமான காலகண்டியில் ஏழை வயிற்றில் மண்.

நான் பாலபருவத்தில் கண்டு கலங்கிய வறுமையின் பூதாகாரம் யாருக்கும் புரியவில்லை. அரைப்பட்டினியில் ஐம்பது நாட்களாவது வதங்கியவர்களுக்குத் தான் அதன் வலி புரியும். நான், சொந்த அனுபவத்தாலும், நாடு முழுதிலும் பணி புரிந்திருந்ததாலும், கிராமங்களுக்கு அடிக்கடி செல்லவேண்டி இருந்ததாலும், இவற்றை அறிவேன்.

இந்தியாவில் ஒரு புரட்சி வந்தே தீரும் என்று, இந்தப் பின்னணியில் பலதடவை எழுதியிருக்கிறேன். எனது ஆசானாகிய தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களும், நானும் பல கோணங்களில் மார்க்சிஸ்ட் தான். இதை படித்த பின் புரியும்.

‘…புரையோடிப்போன சமூகத்தை மொத்தமாய் புரட்டிப்போடுவதற்குப்பெயர் தான் புரட்சி…83 ஆயிரம் சதுரமைல் பரப்பளவு கொண்ட ஹைதராபாத் சமஸ்தானத்தில் மூன்று மாவட்டங்களின் நிலம் பத்துப்பதினைந்து சுவான்தார்களுக்குச் சொந்தம். விஷ்ணுப்பூர் தேஷ்முக்: 40 ஆயிரம் ஏக்கர்: சூர்யாபேட் தேஷ்முக்: 20 ஆயிரம்: கல்லூர் தேஷ்முக் ஒரு லக்ஷம்…இந்த பண்ணையாளர்கள் விவசாயத்தொழிலாளிகளை நாயினும் கேவலமாக நடத்தினர். கூலியே இல்லாமல் வேலை கட்டாயம். ஐந்து பேருக்குக் கொடுக்கும் கூலி ஒரு ஆள் சாப்பிடக்கூட காணாது. கூலி கேட்டால் கடன். மன்னிக்கவும் குட்டி வட்டி, கந்து வட்டி; பல்லக்குத்தூக்க வேண்டும்; குதிரை வண்டி முன்னால் ஓடவேண்டும்; சமையல், சலவை, நாவிதம் எல்லாம் இலவசம். பண்ணையாருக்கு கால் அமுக்கி விடவேண்டும்; விருப்ப நாயகிகள் தரவேண்டும், மனைவிகளை…அதில் பந்தாட்டம் உண்டு. வரதக்ஷிணையில் அடிமைப்பெண் உண்டு. (கொஞ்சம் சுருக்கினேன், பெரும்பாலோர் இத்தகைய கசப்பு செய்திகளை படிக்கமாட்டார்களே என்று.) (ஆதாரம்: ஜூனியர் விகடன்: 3.2.16)

மேற்படி மனித உதாசீனங்கள் தஞ்சை டெல்டாவில்- வாண்டையார், வடபாதி மங்கலம், சாம்பசிவ அய்யர் (கொஞ்சம் நல்லவர் என்பார்கள் விவசாயிகள்), குருதி வெள்ளம் எல்லாவற்றிலும் உண்டு. நான் வாழ்ந்த மதுரை பக்கத்திலும் உண்டு, கொஞ்சம் டிஃஃபெரண்ட் பார்முலா. சொன்னால் பொல்லாப்பு. சாதியை சாடுகிறான் என்பார்கள். ஆனாலும் ஏழைக்கு சாவு மணி தான். ஏன் தலைக்கூத்தல் நடக்காது? முதலாளியை கொல்லமுடியாது. அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் போட ஒரு சோறு இல்லை. பொட்டுத்துணி இல்லை. பசங்க வள வள. எல்லாம் பட்டினி, அழுகை. மருத்துவம் கேள்விப்படாத உண்டு. ஏழ்மை இல்லை; வறுமை இல்லை; வரட்சி இல்லை; இல்லாமை, ஐயா.

எழுபது வருடங்களுக்கு முன்னால் நான் கண்ட அவலங்கள் இன்றும் நடக்கின்றன, தமிழ்நாட்டில், நடத்தப்படுகின்றன. சமுதாயத்தின் விரோதி சமுதாயம் தான். அதையெல்லாம் விட்டு விட்டு…இதற்கு மேல் எழுத இன்று சக்தியில்லை.
-#-
சித்திரத்துக்கு நன்றி:
http://fscomps.fotosearch.com/compc/CSP/CSP017/k20722685.jpg

இன்னம்பூரான்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *