க. பாலசுப்பிரமணியன்

 

பூவுக்குள் வாசம் தேடிப் புவியெல்லாம் வளைத்தேன்

புன்னகையின் பொருள் தேடி நாளெல்லாம் விழித்தேன்  !!

பூங்காற்றில் புலன் தொலைத்துப் பொசுக்கிடும் உறவில் துடித்தேன்,

பொல்லாத மனத்திற்குள் பொழுதெல்லாம் நடித்தேன்!!

 

பொருள் நாடி, புகழ்  நாடி

பூவையர்தம் உளம் நாடி,

கானல் நீராய் எதையெதையோ நாடி

கனவுக் கானகத்தில் காலத்தை தொலைத்தேன்!!

 

தேடுதலும், நாடுதலும், வாழ்வின் வாடுதலோ?

கூட்டுதலும் கழிப்பதுவும் பொய்மையைப் போற்றுதலோ?

அன்பைப் பெருக்குதலும், பண்பை வகுப்பதுவும்

வாழ்வில் மேன்மையை நாடுதலோ?

 

இருப்பது இருப்பதாய் இருப்பதுவே

அமைதிக்குச் சான்றிதழோ?

இல்லாத இருப்பையே இமைகளுக்குள்

சுமப்பதுவே சோகத்தின் முன்னுரையோ?

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.