அக்டோபர்  27, 2014

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு  திரு. வெ. திவாகர் அவர்கள்

V. Dhivakar

இந்த மாதம் அக்டோபர் 11, 2014 அன்று 195 கி.மீ. வேகத்தில் வீசிய ‘ஹூட் ஹூட்’ புயல், ஆந்திர மாநிலத்தின் துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தில் கரையைக் கடந்து நகரை சூறையாடியதுடனல்லாமல் அதன் காரணமாக ஆறு பேர் உயிரிழக்கவும் நேரிட்டது. இவ்வாறு அடுத்த வீட்டு ஆந்திராவை அலங்கோலமாக்கிய புயலை, விசாகையில் வசிக்கும் திரு. திவாகர் அவர்கள் அந்தப் பேரிடரிலும் தனது சிரமத்தைப் பொருட்படுத்தாது தொகுத்து வழங்கிய மேன்மையான செயலைப்பாராட்டி அவரை வல்லமையாளர் என அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பெருமை அடைகிறோம்.

நாடகக் கலைஞரும், எழுத்தாளருமான திரு. திவாகரை அறியாத வல்லமை வாசகர்களே இருக்க வழியில்லை. வல்லமை வாசகர்களுடன் தனது படைப்புகளைப் பகிர்ந்து கொள்வதுடன், இந்த “வல்லமையாளர் விருது” வழங்கிப் பாராட்டும் பொறுப்பையும் ஏற்று ஒரு நூறு வல்லமையாளர்களைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டி மகிழ்ந்தவரே அவர்தான். அடுத்தவர்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் செயலை மேற்கொண்ட சிறந்த வல்லமையாளர்களில் ஒருவரான திவாகர், அப்பணியின் காரணமாகவே காலந்தாழ்த்தி இப்பொழுது வல்லமையாளராகப் பாராட்டப்படும் ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.

விசாகப்பட்டினத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் திவாகர் ஆந்திராவைக் குறிப்பிடும் பொழுது அடுத்தவீடு என்றே குறிப்பிடுவார். “அடுத்த வீடு – நம் தமிழகத்தின் அடுத்த வீடு இந்த ஆந்திரதேசம்தானே.. ஆந்திரதேசத்தில் என்னுடைய அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்…” என்று ஆந்திர அனுபவங்களை “அடுத்தவீடு” என்ற வலைப்பூவில் பதிவு செய்து வருகிறார். தமிழ்மக்களுக்கு ஒரு நேர்முக வர்ணனையாளர் போன்று ஆந்திர செய்திகளை ஆறு ஆண்டுகளாகப் பகிர்ந்து வந்திருக்கிறார் திவாகர்.

“ஆந்திரப்பிரதேசம் ஆத்திரப்பிரதேசமாக மாறியது ஏனோ” என்று ஆந்திரம்-தெலுங்கான பிரிவினைக்கு முன்னிருந்தே ஆந்திரா தெலுங்கானா சர்ச்சைகளை “அடுத்த வீட்டு ஆந்திராவை இப்போது ரணகளமாக்கும் தெலுங்கானா பிரச்னை” எனக் கடந்த ஐந்தாண்டுகளாகப் பதிவு செய்து வந்திருக்கிறார். மார்கழியில் ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் திருப்பாவை தமிழில் ஒலிப்பது, ஆந்திர மாநிலக் கோயில்கள், திருப்பதி பிரசாதம் – பங்கு விற்பனை, காளஹத்தி கோயில் தலைவாசல் கோபுரம் சுக்கு நூறாக இடிந்து விழுந்த காட்சி, தெலுங்கு எழுத்தாளர்கள் பற்றி, ஆந்திர உணவு, விசாகப்பட்டின தமிழ்ச்சங்க நடவடிக்கைகள் எனப் பல தகவல்களை இதுவரை பகிர்ந்து வந்திருக்கிறார். அவ்வாறு இதுவரை பதிவு செய்து வந்த அவரது அனைத்து அடுத்த வீட்டுப் பதிவுகளையும் ஒப்பிடும்பொழுது ஹூட் ஹூட் புயலினால் ஏற்பட்ட அழிவை விவரிப்பது அவருக்கு மிகவும் வேதனை தரும் நிகழ்வாக இருந்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இருப்பினும் தனது நேரடி அனுபவங்களை அவருடைய அடுத்த வீட்டில் ஏற்பட்ட அலங்கோலங்களை” “ஹூட் ஹூட் புயலின் தாண்டவம் – ஒரு நேரடி அனுபவம்”   என்று தமிழ் வெப்துனியா செய்தித் தளத்திலும், கூகுள் தமிழ்க் குழுமங்களிலும் அவர் பகிர்ந்து கொண்டது தொழில்முறை செய்தியாளர்களையும் பின்னுக்குத் தள்ளிய செயலாகும்.

மிகச் சிறந்த எழுத்தாளரான திவாகரை பலர் வரலாற்று புதினங்கள் எழுதுபவராகவும் நன்கறிவர். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் வரலாற்றுப் புதினம் “வம்சதாரா” இவர் எழுதிய முதல் வரலாற்று நூல். தொடர்ந்து, சென்னை பழனியப்பா பிரதர்ஸ் பதிகப்பகத்தினரால் வெளியிடப்பட்ட “திருமலைத் திருடன்” என்ற பதினொன்றாம் நூற்றாண்டு சம்பந்தப்பட்ட வரலாற்றுப் புதினம், மதராசபட்டினத்தில் குண்டு வீசிய எம்டன் கப்பல் நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு “எஸ். எம். எஸ் எம்டன் 22-09-1914”  என்ற வரலாற்று நூல், “விசித்திர சித்தன்”, “தேவன் நூறு”, “நம்ம ஆழ்வார் நம்மாழ்வார்”, “ஆனந்த விநாயகர்” என்ற தெலுங்கில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட நூல், சோழ மன்னன் குலோத்துங்கனின் காலக் கதையான “அம்ருதா” என்ற சமீபத்திய வரலாற்று நூல் வரை பலநூல்களை வெளியிட்டுள்ளார்.

V. Dhivakar3

திவாகரின் தமிழ்ப்பணி இலக்கியபபடைப்புகள் என்ற வட்டத்தில் அடங்கியதல்ல. அவர் தேவாரத்தை தெலுங்கில் மொழிபெயர்க்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். விசாகப்பட்டினத்தின் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகவும் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொண்டாற்றி வருகிறார். அங்கு தமிழ்ச்சங்கத்தில் வள்ளுவர் சிலை நிறுவிய பணியிலும் பெரும் பங்காற்றினார். “வெளியூரில் தமிழ்ச்சங்கம் வைத்து அதை சரியாக வளர்ப்பது எப்படி ?…..இப்படி யாராவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல நான் உடனே பள்ளி மாணவன் கையை தூக்குவது போல தூக்கி விடுவேன்” என்று நகைச்சுவையாக தனது தமிழ்ச்சங்க பணிகள் பற்றியும் குறிப்பிடுகிறார் திவாகர்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு ஆய்வுக்கட்டுரை வாசிக்க அழைப்பு வந்த பொழுது இவர் வாசித்ததமிழும் இந்திய தமிழ்ச்சங்கங்களும் என்ற ஆய்வுக்கட்டுரை நல்ல பல ஆலோசனைகளை முன் வைத்தது. அக்கட்டுரையின் முக்கியக் கருத்துகள் சுருக்கமாக கீழே வழங்கப்பட்டுள்ளது:

[…]

இன்று இந்திய மாநிலங்களின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தமிழ்ச்சங்கங்கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. தமிழ்ச்சங்கங்களின் தலையாயப்பணி நிச்சயமாக தமிழைப் பேணிப்பாதுகாப்பதில்தான் இருக்கவேண்டும். இதனை இங்கே தயங்காது ஏன் கூறுகிறேன் என்றால் பல தமிழ்ச்சங்கங்களின் தற்போதைய நிலையை நன்கு அறிந்தவன் நான். அந்த தமிழ்ச்சங்கங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமானால் திரைப்படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளோ, பிரபலங்களின் பாடல் கச்சேரிகளோ அல்லது கூத்தாட்டங்களும், குதியாட்டங்களும் நிறைந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகளோ நடத்தப்படவேண்டிய காலகட்டத்தில் உள்ளனர் சங்க நிர்வாகிகள். தமிழ் மக்களுக்கு எழுச்சி ஊட்டும் நிகழ்ச்சிகள் கேளிக்கை நிகழ்ச்சிகள் மட்டுமே என்ற சூழ்நிலை உள்ள காலகட்டமிது. அதனால் இந்தக் கேளிக்கை நிகழ்ச்சிகள் அனைத்தும் அதிக அளவில் நடத்தப்படுகிறது. இந்தக் கேளிக்கை நிகழ்ச்சிகளை ஒரேயடியாகக் குறைக்காமல் மெல்ல மெல்ல நம் மக்களுக்குத் தமிழில் ஆர்வம் காட்டும் விஷயங்களாக நிகழ்ச்சிகளை அவர்கள் முன் எடுத்துச் செல்லவேண்டும்.

V. Dhivakar2
[…]
இந்தத் தமிழ்ச்சங்கங்களுக்குத் தாயக தமிழகத்தில் அரசு தகுந்த அங்கீகாரம் அளிக்கவேண்டும். தாயகத் தமிழகத்தில் தமிழ்ச்சங்க ஆணையம் ஒன்று நிறுவப்படவேண்டும். இந்த ஆணையத்தின் கீழ் ஆங்காங்கே பதிவுசெய்யப்பட்ட தமிழ்ச்சங்கங்கள் அங்கத்தினராகி தமிழக அரசின் உதவியோடு செயல்படும்போது, அதுவும் தமிழுக்காக செயல்படும்போது நம் தமிழன்னை நம்மை எப்போதும் வாழ்த்திக் கொண்டே இருப்பாள்.
[ http://www.aduththaveedu.blogspot.com/2010/06/blog-post.html ]

கவியரங்கில் பங்கு கொண்டு கவிதை வாசிக்கும் திவாகர் ஒரு கவிஞரும் கூட, பிடுங்கப்பட்ட எனது பல் என்னைப் பார்த்து முறையிட்டுக் கேட்ட கேள்விதான் இது என்று விளக்கமுறைத்து “பிரிவு நிரந்தரமே” என்று இவர் வழங்கிய இவரது கவிதையில் ஒரு பகுதி …

ஒன்றா இரண்டா
ஐம்பது வருட பந்தம்
உன்னோடு என் உறவு
இனியும் வேண்டுமோ

எப்படியெல்லாம் இருந்தோம்
எண்ணிப்பார்க்கிறேன் நான்
அழுகை வருகிறது எனக்கு
அன்பான அந்தக் காலகட்டம்

பல்லின் முழு முறையிடலையும் (முழுக்கவிதையும்) இங்கு காணலாம் – http://www.vamsadhara.blogspot.com/2009_03_18_archive.html

இந்த நகைச்சுவைக் கவிதையைப் போன்றே, இவரது தொலைபேசி உரையாடல் வழி நிகழ்வுகளை விவரிக்கும் நகைச்சுவைக் கதைகளும் திவாகரின் எழுத்தின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டும். வரலாற்று நூல், வலைப்பதிவுகள், நகைச்சுவை, கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், தமிழ்ச்சங்கப் பணிகள் என தமிழுக்கு இவர் ஆற்றிவரும் பங்களிப்புகள் தொடரட்டும் என வாழ்த்தி வல்லமைக் குழுவினர் எங்களுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. திரு திவாகர் அவர்களின் பணிகளையும், எழுத்துக்களையும் சிறப்பாகத் தொகுத்தளித்திருப்பதைக் காண மிக்க மகிழ்ச்சி. அவருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளகிறேன்.
    அவருடைய தமிழகம் கடந்த தமிழ்ச் சங்கங்களின் ஈடுபாட்டிற்கு ஒரு காட்டு. நான் அண்மையில் கல்கத்தா சென்றிருந்ததைக் குழுமத்தில் கண்ட திரு திவாகர் அங்குள்ள பாரதி தமிழ்ச் சங்கப் பொறுப்பாளார் திரு நக்கீரர் அவர்களுக்குத் தொலைபேசியில் குழும நண்பர், தமிழ் ஆர்வலர் திரு வினைதீர்த்தான் கல்கத்தா வந்திருக்கிறார்; அவரை அங்கு உரையாற்றச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். ஏற்கனவே எனக்கு அறிமுகமான திரு நக்கீரரும் மற்ற பொறுப்பாளார்களும் மாதக் கூட்டத்திற்குத் தலைமையேற்று உரையாற்ற வாய்ப்பளித்து மகிழ்ந்தார்கள். சங்கச் செயல்களில் திரு திவாகரின் ஈடுபாட்டை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்கள்.
    நண்பரின் நற்பணி தொடர வேண்டிக்கொள்கிறேன்.
    அன்புடன்
    சொ.வினைதீர்த்தான். 

  2.  வல்லமையாளராக தேர்தெடுக்கப்பட்ட வல்லமை திவாகர்  அவர்களுக்கு பாராட்டுக்கள் .மேன் மேலும் எழுத்துப் பணியில் சிறக்க வாழ்த்துக்கள்.

  3. திரு.திவாகர் அவர்களின் மேன்மையான தமிழ்த் தொண்டு குறித்த அருமையான பகிர்தலுக்கு நன்றிகள் பல. இத்தனை சிறப்புகள் இருந்தாலும் எளிமையாகப் பழகுவதிலும் இனியவர். அவருடைய பணிகள் மென்மேலும் சிறக்க இறைவன் அருளட்டும். வல்லமையாளர் திவாகர் ஜி அவர்களுக்குப் பாராட்டுகளும் வணக்கங்களும்.

  4. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!!
    உங்களோடு என்னையும் வல்லமையாளராக சேர்த்துக் கொண்டதற்கு நன்றி தேமொழி!!

  5. திரு திவாகர் அவர்களின் பல்வேறு தமிழ்ச்தொண்டு குறித்த செய்திகளை அறிந்து கொண்டேன்.  வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு திவாகர் அவர்களுக்குப்பாராட்டுக்கள்!  அவரது தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.