குறளின் கதிர்களாய்…(44)
-செண்பக ஜெகதீசன்
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து. (திருக்குறள்-490: காலமறிதல்)
புதுக் கவிதையில்…
காலமறிந்து
கடமையாற்று…
உறுமீன் வரும்வரையில்
பொறுமையாயிருந்து,
உற்ற தருணம் வரும்போது
மீனைக்
கொத்தி எடுத்திடும்
கொக்கு போலிரு…!
குறும்பாவில்…
காலம் வரும்வரைக் காத்திரு
கொக்கு போல,
கடமையாற்று அது கொத்துவதுபோல…!
மரபுக் கவிதையில்…
உரிய தருணம் வரும்வரையில்
ஓய்வாய் நின்றே காத்திருந்து,
பெரிய மீனாய் வந்ததுமே
பற்றிடக் கொத்தும் கொக்கினைப்போல்,
அரிய உலக வாழ்வதிலே
அவசரம் ஏதும் கொள்ளாமல்,
தெரிந்தே உரிய தருணமதில்
தொடங்கிடு, செயல்படு வென்றிடவே…!
லிமரைக்கூ…
பொறுமையாயிருந்து தக்கதருணத்தில் கொத்தும் கொக்கு,
காலமறிந்து செயல்படாமல்
கடமையாற்றித் தோல்வியடைந்தால் நீயொரு மக்கு…!
கிராமிய பாணியில்…
காத்திருக்குது காத்திருக்குது
கொக்குத்தான் காத்திருக்குது,
ஒத்தக்காலுல காத்திருக்குது
கொத்தாமத்தான் காத்திருக்குது..
நல்லமீனு வரும்போது
நழுவாமத்தான் கொத்திடுமே…
கொக்கப்பாத்து தெரிஞ்சிக்க
காலம்பாத்து நடந்துக்க,
நல்ல
காலம்பாத்து நடந்துக்க…
காத்திருக்குது காத்திருக்குது
கொக்குத்தான் காத்திருக்குது…!
மிகவும் வித்தியசமான பாணியில் புனைந்த இக்கவிதையை மிகவும் ரசித்தேன்
வாழ்த்துகள்
குறளின் கதிர்களை ரசித்து வாழ்த்திய
விசாலம் அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி…!
குறும்பாவில் வெளியான விளக்கவுரை இன்னுமொரு குறளாகவே தெரிகிறது.பாராட்டுக்கள்.
பாராட்டிச் சிறப்பித்த அன்பு நண்பர்
அமீர் அவர்களுக்கு மிக்க நன்றி…!