இலக்கியம்கட்டுரைகள்

இடைவெளி தேவையா?

-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

grandparentsமுதியவர்களை இளையவர்கள் தமக்கு முட்டுக்கட்டைகள் என்று எண்ணுகிறார்கள். அவர்களுக்கு அவசரம்; இவர்களுக்கு ஆறுதல். அவசரம் என்பது சிந்திக்க விடாது. எதையும் ஆறுதலாக எடுக்கும் பொழுது பல தெளிவுகள் ஏற்பட வாய்ப்புண்டு அல்லவா? இதனை இளமை ஏற்க மறுக்கிறது. இதைப்பார்க்க முதுமை மறுகுகிறது. எடுத்ததற்கெல்லாம் ஏதாவது சொல்லியபடியே இருக்கிறார்களே என எரிச்சல்படுகிறார்கள் இளையவர்கள். அவர்கள் அப்படிச் சொல்வதற்குக் காரணம் அவர்களுக்கு முன்பு கிடைத்த பாடமாகும். தமக்கு ஏற்பட்ட கசப்புகள், மனச்சங்கடங்கள், மீண்டும் இளையவர்களுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்னும் நல்ல எண்ணமே இதற்கான காரணமாக இருக்கிறது எனலாம்.

பாட்டிகள், தாத்தாக்கள் எல்லாம் பிள்ளைகளுக்கு நல்ல கதைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவார்கள். அந்தக் கதைகளில் அருமையான பயனுள்ள செய்திகள் எல்லாம் உள்ளே இருக்கும். அவையாவும் வாழ்க் கையில் பிரச்சினைகள் வரும் பொழுது தீர்வு காண்பதற்கு உதவி நிற்கும் தன்மை வாய்ந்தனவாகும். எனவே பாட்டி தாத்தாவை ஒதுக்கிவிடுவது என்பது முறையற்ற செயலேயாகும்.

ஒளவை பாட்டிதான்…ஆனால் அவரை ஒதுக்கினோமா? அவரின் “அறஞ்செய விரும்பு“ தொடர்தரும் அருங்கருத்துக்கள் எமக்கெல்லாம் அரணாக இருக்கிறதல்லவா?

பாட்டி வைத்தியம் பலவித பக்குவத்தை அளிப்பதையும் பார்க்கிறோம் அல்லவா? குழந்தைகள் அழும்; ஏன் அழுகின்றன என்று சில வேளைகளில் கண்டுபிடிக்கவே முடியாது போய்விடும். வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் விக்கி விறைத்துவிடுவார்கள். அங்கு ஒரு பாட்டி இருந்தால்…அவருக்கு அதற்கான காரணமும் தெரியும். அதற்கான பரிகாரமும் தெரியும். பாட்டியின் பக்குவத்தால் பதறித் துடித்த குழந்தை பக்குவமாவதுடன் சிரித்து விளையாடவும் தொடங்கிவிடும். வீட்டில் உள்ளவர்களும் ஆறுதல்பட்டு நிற்பர்.

இரவில் தயிர் சாப்பிடக்கூடாது. இரவில் கீரை சாப்பிடக்கூடாது என்று முதியவர்கள் எச்சரிப்பார்கள். அதனை இளையோர் கிண்டல் பண்ணி அவர்களின் எச்சரிக்கையையும் புறந்தள்ளி விட்டுச் சாப்பிடுவார்கள். அதன் பின்பு அவர்கள் அவஸ்தைப்படும் பொழுதுதான் முதியோரின் எச்சரிக்கை பற்றி உணர்ந்து கொள்ளுவார்கள்.

முதியவர்கள் சொல்லுவது அத்தனையும் மூடப்பழக்கம் என்றும், தேவையற்றன என்றும் எண்ணுவதே இளையவர் வழக்கமாகி விட்டது. அதனால் அவர்கள் எதைச் சொன்னாலும் காரண காரியம் பாராது உடனே ஒதுக்கித்தள்ளி விடுவதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டார்கள்.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க