கே. ரவி

என்ன, வக்கீல் புத்தியைக் காட்டி விட்டேனோ? கட்சி பேசுவது, சாட்சி சொல்வது என்றெல்லாம் பழக்க தோஷத்தில் எழுதி விட்டேனோ?

சாட்சி சொல்வது என்றதும் என் நினைவில் நிழலாடும் ஒரு நண்பர், ஒரு பிரபல நடிகர். அவர் இப்பொழுது நம்மிடையே இல்லை; ஆனால், தமிழ் மக்கள் நெஞ்சங்களில் எல்லாம் நீங்கா இடம்பெற்று விட்டவர். அவர் என் கட்சிக்காரராகவும் வந்து சேர்ந்தார், 1980-களில். அவருடைய திரையரங்கம் குறித்து ஒரு வழக்கு ஏற்பட்டு, அதில் நான் அவருக்காக வாதாடும் வழக்குரைஞனாகப் பொறுப்பேற்றுக் கொண்டேன். நாலைந்து நாட்கள் அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதியரசர் ஆறுமுகம் முன்னிலையில் சாட்சிக் கூண்டில் நின்று சாட்சி சொன்னார். நீதிமன்றத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நீதியரசரும், அந்த நடிகருடைய நகைச்சுவையான பதில்களைப் பதிவு செய்துகொண்டே, நிதானமாக ரசித்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு பகுதி:

எதிரியின் வக்கீல்: என் கட்சிக்காரர் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்குக் காசோலை வழங்கினாரா?

நடிகர் : வழங்கினார்.

எதிரியின் வக்கீல்: காசோலையை என்ன செய்தீர்கள்?

நடிகர்: வங்கியில் போட்டேன்.

எதிரியின் வக்கீல்: காசோலை, காசாக மாறியதா?

நடிகர்: மாறியது.

எதிரியின் வக்கீல்: பிறகு என்ன செய்தீர்கள்?

நடிகர்: என்ன்ன்ன செய்தேனா? காசைச் செலவழித்தேன்.

நீதிமன்றத்தில் சிரிப்பொலி அடங்கச் சில நிமிடங்கள் ஆயிற்று. நீதியரசரும், ஏன், எதிர்க்கட்சிக்காரரின் வக்கீல், என் இனிய நண்பர், மூத்த வழக்கறிஞர் திரு.ஆர்.கிருஷ்ணசாமி உட்பட எல்லாரும் சிரித்துவிட்டனர். அதுவும், “என்ன்ன்ன செய்தேனா? காசைச் செலவழித்தேன்” என்று திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமியின் பாணியில் நாகேஷ் அவர்கள் நீதிமன்றத்தில் பதில் சொன்னதும் யார்தான் சிரிக்காமல் இருந்திருக்க முடியும்?

nageshநாகேஷ் போன்ற நல்ல நகைச்சுவை உணர்ச்சி மிக்க நடிகரைப் பார்ப்பது அரிது. அத்துடன் அவர் குழந்தை உள்ளம் படைத்தவர். தினமும் வழக்கு நடந்து கொண்டிருந்த காலத்தில், என்னைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று கருதி, மாலை நேரத்தில் என் அலுவலக மேலாளர் திரு.ஹரிஹரன் அவர்கள் வீட்டுக்குச் சென்று, அன்றைய கோர்ட் நடவடிக்கை குறித்துத் தெரிந்துகொள்வதோடு, ஹரியின் அம்மா செய்து தரும் தோசையைச் சாப்பிட்டு விட்டு, மறுநாள் அதுபற்றி என்னிடம் வானளாவப் புகழ்வார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் தினமும் ஒரு முறையாவது என்னைப் பார்ப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒருமுறை ஹைதராபாத்தில் இருந்து அவரும் நானும் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது, தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று சொல்லி ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ என்ற பாடலை விமானத்திலேயே மெல்லிய குரலில் மிக இனிமையாக அவர் பாடியதை நான் மறக்கவே முடியாது. அப்பொழுது அவர் சொன்னார், “ரவி சார்! (என்னை விட வயதில் மிகவும் மூத்த அவர், நான் எவ்வளவு சொல்லியும் அப்படித்தான் என்னை அழைத்தார்). இந்தப் பாடலைக் கேட்கும் போது பாடும் மங்கையின் கனவுக்குள்ளேயே நாம் சென்று விடுகிறோம் இல்லையா”.

அன்று நாகேஷ் சொன்னதை இன்று நினைத்துக்கொள்கிறேன். இன்னொருவரின் கனவுக்குள், அதுவும், அனுபவக் களத்துக்குள் தன் ரசிகர்களை அழைத்துச் செல்லும் சாதனையைக் கவிஞர் கண்ணதாசன் எவ்வளவு சுலபமாகச் செய்து விட்டார்! இந்தப் பாடலாகட்டும், “கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்” என்ற பாடலாகட்டும், அவற்றில் ஒரு மங்கையின் ஏக்கம் மட்டுமா வெளிப்படுகிறது. எந்தப் புருஷோத்தமனின் முன் ஆண்கள், பெண்கள் ஆகிய நாம் அனைவருமே கன்னிப் பெண்களோ, அந்தக் கண்ணனிடம் ஒன்றிவிட வேண்டும் என்ற உயிரின் ஜீவ தாகத்தையன்றோ இந்தப் பாடல்கள் எதிரொலிக்கின்றன!

“எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்” என்ற பாடலைக் கண்ணதாசன் எழுதிய காலத்தில், தமிழகத்தில் அடுக்குமாடிக் கட்டடங்களே இல்லை. அவர் பாடிய எட்டடுக்கு மாளிகை என்பது இந்த எண்சாண் உடம்புதான் சாமி! அதில் சிறைப்பட்டிருக்கும் ஜீவனின் பிரிவுத் துயரத்தையும், பரம்பொருளோடு கூடிவிடத் துடிக்கும் ஏக்கத்தையும் அந்தப் பாடலில் அவர் பிழிந்து தரவில்லையா?

வ.ரா. சொன்னது இப்பத்தான் ஜோராப் புரியுது! சாட்சி சொல்வது வேறு, கட்சி பேசுவது வேறு. நாகேஷ் சொன்னது சாட்சி. கண்ணதாசன் பேசியது கட்சி. கண்ணதாசனுக்கும் கட்சிக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு; ஆனால் அது மாறிக்கொண்டே இருந்த அரசியல் தொடர்பு. அது வேறு கதை.

என் இசையில் எஸ்.பி.பி. பாடி, 1994இல் வெளியான ‘தெய்வ கானாம்ருதம்’ ஒளிப்பேழை வெளியீட்டு விழாவில் நாகேஷ் கலந்துகொண்டார். ‘என் வக்கீல் அழைத்தால் நான் வராமல் இருக்க முடியுமா?’ என்ற கேள்வியோடு பேச்சைத் தொடங்கி நகைச்சுவையோடு பேசினார். அதே விழாவில் கலந்துகொண்டு சுகி சிவம் பேசும் போது, அந்த ஒலிப்பேழையில் இருந்த “கல்மனம் உருகிக் கனிவதும் எக்காலம் அகலாதா இந்த அகலிகையின் சாபம்” என்ற பாடலைக் குறிப்பிட்டு ஒரு கருத்துச் சொன்னார்: இராமன் திருவடி பட்டுச் சாபம் நீங்கி அகலிகை மீண்டும் பெண்ணானதும், இராமன் அவளைத் தாய் என்றே குறிப்பிடுகிறான். அன்னையைப் போன்ற இந்த மங்ககைக்கு எப்படி இந்த நிலை ஏற்பட்டது என்று இராமன் விஸ்வாமித்திர முனிவரிடம் வினவுவதாகக் கம்ப சித்திரம் பேசுகிறது:

அன்னையே அனையாட்கு இங்ஙன் அடுத்தவாறு அருளுக

கெளசல்யா, பத்து மாதம்தான் அவனைக் கருவில் சுமந்தாள். ஆனால், அகல்யா எத்தனை ஆண்டுகள் அவன் வரவுக்காக அவனை நெஞ்சில் சுமந்தாளோ! எனவே, அவளை இராம பிரான் தாயென்றது பொருத்தமே. இதுதான் சிவம் சொன்ன கருத்தின் சாரம். விழாவின் பரபரப்பில் நான் சிவம் பேச்சைச் சரிவர கவனிக்கத் தவறியிருந்தேன். ஆனால், விழா முடிந்த மறுநாள் நாகேஷ் என்னிடம் தொலைபேசியில் சிவம் சொன்ன இந்தக் கருத்தைச் சொல்லி வெகுவாகப் பாராட்டினார். நாகேஷுக்குள் கவிதை ரசனை ஒளிந்திருந்ததை மீண்டும் உணர்த்திய சம்பவம் இது.

Semmangudiஅந்த விழாவில்தான் செம்மங்குடி சீனிவாச மாமா என்னைக் ‘கவிரவி’ என்று அழைத்தார். அன்று முதல் என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவர் அப்படியே அழைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். அமரராகும் வரை, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள், வானவில் பண்பாட்டு மையம் நடத்திய ஒவ்வொரு பாரதி விழாவையும் முன்னின்று நடத்தித் தந்த அந்தப் பெரியவரை என்னால் மறக்கவே முடியாது.

சாட்சி சொல்லியாகி விட்டது, கட்சி பேசியாகி விட்டது. தீர்ப்பு எப்போது சாமி? நல்ல தீர்ப்பு வருமா? இன்றைய கேள்வி இதுதானே!

சரி, நுட்ப உடலானது கனவில் கூடத் திட்ப உடலை நீங்கிப் பறக்கிறது என்று சொன்னேனே, அதில் ஒரு சிறு கவனக் குறிப்பை இணைக்க வேண்டும். கனவில் ஓரளவு ஆழம் அல்லது ஓரளவு உயரத்துக்கு மட்டுமே நுட்ப உடல் போகிறது. அதற்குமேல் தாண்டிப் போக அதனால் முடிவதில்லை. அது, முற்றிலுமாகத் திட்ப உடலை நீங்கிப் போவதில்லை. நீண்ட கயிற்றால் கட்டப்பட்ட நாய் போல் கொஞ்சம் தொலைவுதான் அதன் சுதந்திரம். இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், என்னுடைய தனிப்பட்ட அனுபவக் களத்துக்குள்தான் கனவில் என் நுட்ப உடல் அல்லாடுகிறது. நான் அனுபவித்தே இராத எதையும் அது அங்கே எதிர்கொள்வதில்லை. என் அனுபவக் களத்தில் உள்ள, தொடர்பற்ற இரண்டு அனுபவங்களை வேண்டுமானால் தொடர்பு படுத்தி அது அனுபவிக்கலாமே தவிர, என் அனுபவக் களத்தைக் கடந்து செல்ல அதற்கு உரிமை இல்லை. அதாவது, பெரோலில் (Parole) வெளியாகும் கைதி போலத்தானே ஒழிய, பெய்லில் (Bail), அதாவது, பிணையில் வெளியாகும் கைதி போல இல்லை. மீண்டும் வக்கீல் புத்தி!

ஆனால், கவிதை உதிக்கும் கணத்தில், ஒரு கணம், அது அந்தச் சுதந்திரம் பெறுகிறது. அந்த ஒரே கணத்தில், பல யுகக் கணக்குகளைக் கடந்தும், பல அண்டத் தொலைவுகளைக் கடந்தும் சென்று மீள்கிறது. அப்பொழுதுதான், அது வேறு யுகங்களில், வேறு பரிமாணங்களில் எதிர்ப்படும் அனுபவக் களங்களில் பிரவேசிக்க முடிகிறது.

கொஞ்சம் இயல்பியல் பாடம் படிக்கலாம். அதுவும் ‘க்வாண்டம் ஃப்ஸிக்ஸ்’ (quantum physics) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் துளிநிலை இயல்பியல் பாடம்! அணுக்கருவுக்குள் கருவின் ஈர்ப்புச் சக்தியை மீற முடியாமல் சிறைப்பட்டுச் சுழலும் சிற்றணுத் துகள் ஒன்று, மிகச் சிறிய, அதாவது, கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத அளவு மிகச் சிறிய கால அவகாசத்துக்குக் கடனாக அபார சக்தி பெற்று, அதன் மூலம் கருவின் ஈர்ப்புச் சக்தியில் இருந்து விடுபட்டு, வெளிச்சென்று, திரிந்து விட்டு, அந்த கால அவகாசம் முடிவதற்குள் கடன் வாங்கிய சக்தியைத் திருப்பிக் கொடுத்து விட்டு, கருவின் அமைப்பு வட்டத்துக்குள் வந்து ஒன்றுமே நடக்காதது போல் மீண்டும் சுழன்று கொண்டிருக்குமாம். நான் சொல்லவில்லை தம்பி, விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அது போல், நுட்ப உடல் மிகச் சிறிய கால அவகாசம் ஆன ஒரு கணத்துக்குள் அபார சக்தியைக் கடனாகப் பெற்றுத் தன் பிரக்ஞை வட்டத்தை விட்டு வெளியேகிப் பல யுகங்கள், பல அண்டத் தொலைவுகள் கடந்து சென்று அனுபவங்கள் அள்ளி வந்து மீண்டும் தன் நுட்ப உடலை ஆண்டு கொண்டு உழலும் என்பதை நான் சொல்லவில்லை தம்பி, சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

“ஆளை விடப்பா!”

புத்தி சிகாமணிக்கே தலை சுற்றுகிறது!

“ஒரு கணத்தில் பல யுகங்களா? இது சாத்தியமா?”

அதுதானப்பா மனோவேகம். மனோன்மணிக்குத் தெரியும்.

ஒருமுறை, 1978ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், ரமணன் அப்போது பங்களூரில், (அப்போது அது பங்களூர் தாங்க!) ஹிண்டு பத்திரிகையில் வேலை பார்த்து வந்தான். அவன் அடிக்கடிக் கடிதங்கள் எழுதுவான், அதுவும் நீண்ட கடிதங்கள். எனக்கென்னவோ, கடிதங்கள் எழுதுவது மட்டும் அவ்வளவாகக் கைவரவில்லை. கவிதை எழுதி விடுவேன், ஆனால் கடிதங்கள் எழுதச் சோம்பல் படுவேன். நான் பதில் கடிதம் எழுதாதது பற்றி ரமணன் சற்று வருத்தப்பட்டு எழுதியிருந்தான். பதிலுக்கு நான் எழுதினேன், கடிதம் இல்லை, கவிதை! அதைக் கூடத் தொலைபேசியில்தான் அவனுக்குப் பாடிக் காட்டினேன் என்று ஞாபகம்:

கடிதம் எழுதும் வழக்கம் இல்லை

கவிதை எழுத முடியும் – வெறும்

சேதி கேட்க ஜீவன் இல்லை

தேம்பி அழத் தெரியும் – மனம்

தேம்பி அழத் தெரியும்

முடிவு கூடப் புலப்படாத பாதை யிந்த வாழ்க்கை – இதில்

அன்பு நட்பு காதல் பாசம் அளவி லாத சேர்க்கை

(கடிதம் எழுதும் வழக்கம் இல்லை)

ஒருக ணத்தில் உருவம் எய்தி ஒரு கணத்தில் மறையும் – மனம்

உலகம் என்றும் யுகங்கள் என்றும் உருவகங்கள் புனையும்

(கடிதம் எழுதும் வழக்கம் இல்லை)

வான மிங்கு மழை பொழிந்து வாழ்த்துகின்ற போதும் – இருள்

வடிவ மொன்று மின்னலாய் ஒளி வழங்குகின்ற போதும் – இனிய

கானம் ஒன்று கவிதையாகக் காதில் வந்து மோதும் – உன்

ஞாபகத்தை உறுதி செய்யப் பாடல் ஒன்று போதும்

(கடிதம் எழுதும் வழக்கம் இல்லை)

ஒரு கணம் போதும். மனம், உருவம் எடுக்கவும், உலகம், யுகங்கள் என்று பல உருவகங்கள் புனையவும்!

பாரதி என்ன சொல்கிறான் கேட்கலாம். கண்ணபிரான் தன் சக்கராயுதத்தை எடுப்பது ஒரு கணம்தான்; அடுத்த கணமே, அதாவது, மறுகணமே, உலகத்தில் தர்மம் நிலைநாட்டப்படுமாம்.

“அப்படியா சங்கதி,” சிகாமணி நீட்டி முழக்குகிறான். “ஓ, அதான், அர்ஜுனன் சுபத்திரையை, அதாவது கண்ணனின் தங்கையைக் கடத்தக் கண்ணனிடமே ஐடியா கேட்டப்ப, கன்ணன் ரெண்டு நிமிடம் எடுத்துக்கிட்டாரோ?”

சிகாமணி சிண்டு முடியப் பார்க்கிறான். பாரதி படாரென்று அவன் முதுகில் தட்டி, ” அடே, உன் நிமிடக் கணக்கைக் குப்பையில் போடு. கண்ணன் கணக்கோ கணக் கணக்கு. அதாவது கணங்களால் ஆன கணக்கு, கன ஜோரான கணக்கு. அவனுடைய ஒரு கணத்துக்கும் அடுத்த கணத்துக்கும் நடுவில் இன்னொரு கணம் கிடையாது. இரண்டு கணங்களும் ஒரே கணம்.”

சக்கரத்தை எடுப்ப தொருகணம்

தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்

இக்கணத்தில் இடைக்கணம் ஒன்றுண்டோ

சிகாமணி தலையைப் பிய்த்துக் கொள்கிறான்: இதானே வேணாங்கறேன். 2 = 1. என்னப்பா தப்புக் கணக்குச் சொல்லித் தருகிறாய்!

“தப்புக் கணக்கில்லை தம்பி. தப்பாத கணக்கு. இன்னும் புரியவில்லை என்றால் மேலும் சொல்கிறேன்” என்று சொல்லி விட்டு பாரதி மடமடவென்று கவிதை பொழிகிறான்:

கணம்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்

கணம்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்

கணம்தோறும் நவநவமாம் களிப்புத் தோன்றும்

கருதிடவும் சொல்லிடவும் எளிதோ ஆங்கே

கணம்தோறும் ஒருபுதிய வண்ணம் காட்டிக்

காளிபரா சக்தியவள் களிக்கும் கோலம்

கணம்தோறும் அவள்பிறப்பாள் என்று மேலோர்

கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய்

அப்பா, உண்மையிலேயே தலை சுற்றுகிறதப்பா.

இந்தக் கணங்கள் அடுக்குத் தொடராய் இருந்தாலும், சுபத்திரையைக் கடத்தக் கண்ணன் இரண்டு கணங்கள் எடுத்துக் கொண்டாலும், சரணம் என்று ஒருவன் அவனே கதி என்று வந்து அடைக்கலம் கேட்டுவிட்டால் ஒரே கணத்தில் அவனுக்கு அபயம் அளிப்பவன் கண்ணன். அதையும் பாரதி சொல்கிறான்:

பொன்னவிர் மேனி சுபத்திரை மாதைப் புறங்கொண்டு போவதற்கே – இனி

என்ன வழியென்று கேட்கில் உபாயம் இருகணத்தே உரைப்பான் – அந்தக்

கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக் காணும் வழியொன்றில்லேன் – வந்திங்கு

உன்னை அடைந்தனன் என்னில் உபாயம் ஒருகணத்தே உரைப்பான்

நான் சமீபத்தில், அதாவது இரண்டாண்டுகளுக்கு முன்னால் எழுதிய பாடல் ஒன்று இப்பொழுது நினைவுக்குள் அடியெடுத்து வைக்கிறது!

தோன்றிய பிறகு, வந்து சேர இரண்டு ஆண்டுகளா, எவ்வளவு மெதுவாக வருகிறது?

அப்படிச் சொல்லாதீர்கள். அது வந்த வேகம் அசாத்திய வேகம். தான் தோன்றிய கணத்தையும் அது முந்திக் கொண்டு வந்து விட்டதாம். நான் சொல்லவில்லை. அதுவே சொல்கிறது. பாட்டைக் கேளுங்கள்:

இந்தக் கணம் இன்னும் வரவில்லை – அதை

முந்தி வந்த திந்தப் பாடல்

சந்தம் எதுகை உவமை புலமை

எந்த நகையும் அணிந்துகொள் ளாமல்

முந்தி வந்த திந்தப் பாடல்

வந்த கணத்தை வழியனுப்பி – வர

விருக்கும் கணத்தை வரவேற்கச்

சொந்தக் கணமொன் றில்லாமல் – அதி

சூட்சுமமாய் ஒரு சொப்பனமாய்

முந்தி வந்த திந்தப் பாடல்

அந்தரமோ நிரந்தரமோ – இந்த

அனுபவத் தையென்ன சொல்லுவது

காந்தநிலை ஏகாந்தநிலை – இது

காலத்தை யும்வெற்றி கொள்ளுவது

இந்தக் கணம் என்றும் தொடருவது – பேர்

ஒளியாய் நெஞ்சில் படருவது

சரி தம்பி. இந்தக் கணத்துக்கு இவ்வளவுதான்! அடுத்த கணத்தில் சந்திப்போம்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *