கே. ரவி

இப்பொழுதெல்லாம் கவிஞன் என்று ஒருவன் தன்னைச் சொல்லிக் கொண்டால், மரபுக் கவிதைகள் எழுதும் கவிஞனா, இல்லை, புதுக்கவிதைகள் எழுதும் கவிஞனா என்ற கேள்வி உடனே கேட்கப்படுகிறது. பெரிய விவாதங்களைத் தவிர்த்து எளிமையாகச் சொல்வதென்றால், தமிழ் யாப்பிலக்கண நூல்களில் சொல்லப்படும் செய்யுள் வகைகளில் எழுதப்படும் கவிதைகள் மரபுக் கவிதைகள் எனவும், அப்படியின்றி எந்த யாப்பிலக்கணக் கட்டுப்பாடுகளுக்கும் அடங்காமல், கிட்டத்தட்ட உரைநடை வடிவில் எழுதப்படும் வெளிப்பாடுகள் புதுக்கவிதைகள் எனவும் பொதுவாகக் குறிக்கப் படுகின்றன.

நான், சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்ந்த போது சரியாகத் தமிழ் எழுதக் கூடத் தெரியாமல் இருந்த கதையையும், ஆனால் எட்டாம் வகுப்பில் நுழையும் போது தமிழில் கவிதை எழுதுபவனாக மாறிவிட்ட ரசவாதம் பற்றியும் முன்பே அளந்து கொட்டிவிட்டேன். ஏறக்குறைய மூன்று மாதங்களில் அப்படியொரு மாற்றம் ஏற்படும் வண்ணம் என் நாவில் தேன்பிலிற்றிய தேவதை யாரோ, தெரியவில்லை. எல்லாம் பராசக்திதானே!

எட்டாம் வகுப்பில் நுழையும் போது கவிஞனாக மட்டுமன்றித் தமிழ் இலக்கணம் ஓரளவு படித்த புலவனாகவும் மாறியிருந்தேன். திரு.கிருஷ்ணராமானுஜம் பிள்ளை என்ற ஆசிரியர் எங்களுக்குத் தமிழ் இலக்கணம் பயிற்றுவித்தார். அவரிடம் பயின்ற போது, இலக்கணத்தின் அடிப்படைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டேன். இலக்கணம் என்பது என்றைக்குமே மாறா விதிகளின் தொகுப்பு இல்லை, காலத்துக்கு ஏற்ப, மக்கள் பேசும் மொழிக்கு ஏற்ப, எழுதும் நடைக்கு ஏற்ப, அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும் விதிகளின் தொகுப்பே என்பதைப் புரிந்து கொண்டேன். இலக்கண விதி ஒவ்வொன்றின் பின்னணியிலும் அந்த விதிக்கான காரணம், அல்லது, தேவை மறைந்திருப்பதை விளங்கிக் கொண்டேன். அந்த விதிகள், மக்கள் மொழியிலிருந்தும், படைப்பாளிகளின் எழுத்துகளில் இருந்தும் தேர்வு செய்யப் பட்டுத் தொகுக்கப் படும் உண்மையை அறிந்து கொண்டேன். இந்த அடிப்படைக் கருத்துகளை என் ஆசிரியர் கிருஷ்ணராமானுஜம் பிள்ளை என் நெஞ்சில் ஆழமாகப் பதித்ததால், கல்லூரி சென்ற பிறகு, தமிழ்க்கடல் என்றே போற்றப்படும் ஒரு மிகப் பெரிய தமிழ்ப் பேராசிரியரிடமே தமிழ் இலக்கணம் பற்றி எதிர் கருத்துச் சொல்லும் அளவுக்குத் துணிந்தேன்.

Arv11968-69, விவேகானந்தா கல்லூரியில், புகுமுக வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதெல்லாம் அப்படியோர் வகுப்பு இருந்ததாம், அதற்கு ஆங்கிலத்தில் பி.யூ.சி. என்று பெயராம்! அப்போது நான் எழுதிய இலக்கணக் குறிப்பு ஒன்றைத் தவறு என்று சொல்லி என் தமிழாசிரியர் அதற்கு மதிப்பெண் தரவில்லை. நான் அவரிடம் வாதம் செய்தும் பயனில்லை. வகுப்பு முடிந்ததும் அந்த விடைத்தாளை எடுத்துக் கொண்டு தமிழ்த்துறைத் தலைவர், தமிழ்க்கடல் என்று குறிப்பிட்டேனே, பேராசிரியர் ஜகன்னாதாச்சாரியாரிடம் சென்றேன். நான் விடுவதாக இல்லை. அது வெறும் வகுப்புத் தேர்வுதான், பொதுத் தேர்வு இல்லை. ஆனால், அந்தக் குறிப்புத் தவறென்றால் அது எனக்கு இழுக்கு இல்லை, எனக்குத் தமிழ் இலக்கணம் சொல்லித் தந்த கிருஷ்ணராமானுஜம் பிள்ளைக்கு இழுக்கு என்றுணர்ந்து விடாப்பிடியாக ஜகன்னாதாச்சாரியார் வரும் வரை காத்திருந்தேன். அவர் வந்ததும் விடைத்தாளை அவரிடம் தந்து விளக்கினேன். ” ஏந்தெழில் இராமன்” என்ற சொற்றொடரில் முதற்சொல்லுக்கு இலக்கணக் குறிப்பு வரைக என்ற கேள்விக்கு, முன்பின்னாகத் தொக்க இரண்டாம் வேற்றுமைத் தொகை என்று நான் எழுதியதை ஆசிரியர் தவறு என்று அடித்து விட்டு அது வினைத்தொகை என்று கூறி எனக்கு மதிப்பெண் தர மறுத்துவிட்ட விவரத்தை அவரிடம் சொன்னேன். “அட, விடுப்பா! பத்துக்கு இரண்டு மதிப்பெண் போனால் போகட்டும்” என்றார் அவர். நான் விடவில்லை. மதிப்பெண் முக்கியம் இல்லை சார், எனக்குத் தமிழ் சொல்லித் தந்த ஆசானின் மதிப்புப் பிரச்சினை இது என்று நான் சொன்னதும், பலே, இங்கே கொண்டா என்று என் விடைத்தாளை வாங்கிச் சற்று நேரம் பார்த்துவிட்டு, “நீ சொல்வதை ஒப்புக் கொள்ள முடியவில்லையே. ‘ஏந்தெழில்’ என்பது வினைத்தொகை தானே. அத்துடன் தமிழ் இலக்கணத்தில் முன்பின்னாகத் தொக்க இரண்டாம் வேற்றுமைத் தொகை கிடையாதே!” என்று அவர் சமாதானம் செய்ய முயலும் போது, கல்லூரி முதல்வரிடம் இருந்து அவசர அழைப்பு வரவே, அவர் சென்று விட்டார். நான் ஏமாற்றத்துடன் திரும்பி விட்டேன். அன்று மாலை வகுப்புகள் முடிந்ததும் ஒருவன் வந்து என்னை ஜகன்னாதாச்சாரியார் அழைப்பதாகத் தெரிவித்தான். விடைத்தாளுடன் ஓடினேன். மீண்டும் அதை வாங்கிப் பார்த்து விட்டு, நீ இப்படிக் குறிப்பு வரைந்ததற்குக் காரணம் சொல்லு என்றார். நான் சொன்னேன்: ஏந்திய எழில், ஏந்தும் எழில், ஏந்தப் போகும் எழில் என்று பொருள் கொண்டால் அது வினைத்தொகை. ஆனால் அதை அப்படிப் பொருள் கொள்ள என் மனம் இடம்தரவில்லை. எழிலை ஏந்துகின்ற இராமன் என்றுதான் பொருள் கொள்ளத் தோன்றுகிறது. எழிலை ஏந்துகின்ற என்பது முன்பின்னாகவும், இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ” மறைந்தும் இருப்பதால் ‘ஏந்தெழில்’ என்பதை முன்பின்னாகத் தொக்க இரண்டாம் வேற்றுமைத் தொகை என்று எழுதினேன், ஏந்து இராமன் என்றிருந்தால் அதை வினைத்தொகை என்று போட்டிருப்பேன் என்று நீண்ட பிரசங்கம் செய்தேன். ஒரு நிமிடம் யோசித்து விட்டு, “முன்பின்னாகத் தொக்க இரண்டாம் வேற்றுமைத் தொகை என ஒன்று இலக்கணத்தில் இல்லையே!” என்று அவர் கேட்டார். அதற்கு நான் இலக்கியத்தில் இருக்கிறதே என்றேன். சரி, இந்தத் தொடர் கம்பராமாயணத்தில் வருகிறது. இதே போல் வேறு இலக்கியத்தில் எங்காவது உண்டா என்று கேட்டார். உடனே சொன்னேன், பெரிய புராணத்தில் “ஏந்துபூம் பந்தர்” என்ற சொற்றொடர் வருகிறதே என்று. ஜகன்னாதாச்சாரியார் என் விடைத்தாளில் தம் கைப்பட என் இலக்கணக் குறிப்புக்கு முழுமதிப்பெண் போட்டுக் கொடுத்த்து விட்டு, மறுநாள் என் வகுப்புக்கு வந்து இது பற்றிச் சொல்லிப் பாராட்டி ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டுச் சென்ற நிகழ்ச்சியை நான் மறக்க முடியுமா?

கிட்டத்தட்ட ஜகந்நாதாச்சாரியார் சாயலில் ‘தமிழ் ப்ரொபஸர் தாத்தாச்சாரியார்’ என்ற தலைப்பிட்டுப் பல்லாண்டுகளுக்கு முன் நண்பன் சு.ரவி வரைந்த ஒரு கோட்டோவியத்தை இங்கே பார்த்து ரசிக்கலாம்.

arv

இன்னொரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். நாலைந்து ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஒரு கடிதத்தில், ‘மாக்கவிஞன் பாரதி’ என்றுநான் எழுதியிருந்ததைப் படித்து விட்டு நான் மிகவும் மதிக்கும் ஒரு நண்பர், ‘மாகவி’ என்பதுதான் சரி, மாக்கவி என்று நான் எழுதியது தவறு என்று சொன்னதாக நண்பர் சுப்பு என்னிடம் சொன்னதும் அந்த நண்பரையே தொலைபேசியில் அழைத்து, அப்படி எழுதும் துணிவைக் கவிச்சக்கரவர்த்தியே எனக்குத் தந்தான் என்று சொல்லிவிட்டு, கம்பராமாயணத்தில் வரும், “தெய்வ மாக்கவி மாட்சி தெரிக்கவே” என்ற வரியை நினைவு படுத்தினேன். அவரும் சமாதானம் அடைந்தார் என்று நினைக்கிறேன்.

ஆண்டுதோறும், பாரதி பிறந்தநாளை ஒட்டி வானவில் பண்பாட்டு மையம் நடத்தும் விழாவை, “பாரதித் திருவிழா” என்றே எழுதி வந்தேன். பெயர்ச்சொல்லுக்குப் பிறகு ஒற்று மிகாது என்று பல புலவர்கள் எடுத்துரைத்தும் நான் மாற்றிக் கொள்ளவில்லை. இலக்கணத்தை விடவும் த்வனியில் அதிக ஈடுபாடு கொண்டதாலோ என்னவோ எனக்கு பாரதித் திருவிழா என்று சொல்லும் போது கிடைக்கும் உணர்ச்சி, ‘பாரதி திருவிழா’ என்றால் கிடைக்கவில்லை என்று தோன்றியது. மேலும், கந்தனுடைய புராணம் கந்த புராணம் என்று இருந்தாலும், கந்தனாகிய கடவுள் என்பதைக் கந்தக் கடவுள் என்றுதானே சொல்கிறோம். அது போல், இந்த விழாவை பாரதியுடைய விழா என்பதைக் காட்டிலும், பாரதியாகிய திருவிழா, அதாவது, பாரதியையே ஒரு திருவிழாவாகக் கொண்டாடும் வைபவம் என்று கொண்டால் அதை பாரதித் திருவிழா என்றுதானே சொல்ல வேண்டும்! சிவக்கொழுந்து, ராமச்சந்திரன், கிருஷ்ணப் பிரேமி, என்ற சொற்றொடர்களை என்ன சொல்வது? ஒரு வேளை ஈறுகெட்டு, அதாவது, கடைசி எழுத்து மறைந்து வருவதால், ஒற்று மிகலாம் என்பார்களோ? அப்படியானால், ‘சக்திக் கனல்’ என்பதற்கு என்ன சமாதானம்? ‘கண்ணகி காப்பியம்’ என்பது சரி. ஆனால், ‘கண்ணகித் தெய்வம்’ என்பதுதானே சரி! அப்படித் தானே ‘பாரதித் திருவிழா’? நானே என் மனத்துக்குள் வாதங்களை அடுக்கி வைத்திருந்தேன். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன், நான் பெரிதும் மதிக்கும் ஒரு கவிஞர், சிந்தனையாளர், குலோத்துங்கன் என்ற முனைவர் வா.செ.குழந்தைசாமி, தம் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல், இந்தப் பிரச்சினை குறித்து இரண்டு பக்கங்களுக்கு எனக்கு ஒரு கடிதம் எழுதி மாற்றச் சொன்னதும் மறுபேச்சுப் பேசாமல், “பாரதி திருவிழா” என்று மாற்றி விட்டேன். இலக்கணத்தை விட, த்வனியை விட, நட்பும், நாகரிகமும், பெரியோரை மதித்தலும் முக்கியம் இல்லையா? ‘மானுட யாத்திரை’ என்ற அரிய காப்பியம் வடித்த அந்த மாபெரும் புலவர் சொல்லை என்னால் தட்ட முடியவில்லை.

ஒருமுறை, பகுத்தறிவுப் பாசறை நண்பர்கள் குழுமியிருந்த இடத்தில் போய், நான் கடவுள் பற்றிச் சில கருத்துகள் பேசி விட்டேன். நான் பேசிக் கொண்டிருந்த போதே ஒரு நண்பர் எழுந்து, என்னை மறுத்துக் கருத்துரைத்தார். நான் என் வாதங்களை எடுத்து வைக்க இடம்தராமல் சற்றுக் கடுமையாகப் பேசத் தொடங்கினார். உடனே நான், சரி ஐயா, கடவுள் இல்லை என்று சொன்னால்தான் உங்களுக்குப் பிடிக்கும் என்றால் அப்படியே சொல்லிவிட்டுப் போகிறேன், எனக்குக் கடவுள் இருக்கிறார் என்று சொல்வதை விட நம் நட்பு முக்கியம் என்று சொல்லிவிட்டு, நான் இல்லை என்று சொல்வதால் கடவுள் நிச்சயம் கோவித்துக் கொள்ள மாட்டார் என்றதும் அந்த நண்பரே சிரித்து விட்டார்.

வாதமே தொழிலாக அன்றாடம் செய்து வரும் நான் வாதத்தால் நட்பை இழக்க எப்போதும் உடன்பட்டதில்லை. எனக்குக் கருத்தை விட மனிதர்கள் முக்கியம். பாரதி ஒரு கவிதையில் சொல்கிறானே:

அஞ்சுதலைப் பாம்பென்பான் – அப்பன்

ஆறு தலை என்று மகன் சொல்லிவிட்டால்

நெஞ்சு பிரிந்திடுவார் – பின்பு

நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்

நான் இவ்வளவு பீடிகை போட்டது மரபுக் கவிதை, புதுக் கவிதைப் போராட்டத்துக்குள் செல்வதற்குத்தான். மரபுவழியில் மட்டுமே எழுத வேண்டும் என்ற பிடிவாதத்தால் எப்படி ஒரு கவிதை உயிரற்றுப் போக வாய்ப்புண்டோ, அப்படியே, மரபை மீறித்தான் எழுத வேண்டும் என்ற பிடிவாதத்தாலும் நிகழக் கூடும். கவிதை எப்படி வருகிறதோ, அது எந்த வடிவத்தை ஏற்றுக் கொண்டு வருகிறதோ அதை அப்படியே வரவேற்க முடிந்தாலே போதும். பிறக்கப் போகும் ஒரு குழந்தையின் வடிவம் இப்படியெல்லாம்தான் இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்து, அப்படிக் குழந்தையைப் பெற்றுக் கொள்ளத் தாயால் முடியுமா? ஆனால், குழந்தை பிறந்த பிறகு அதற்குப் பெயர் சூட்டி, ஆடை, அணிகலன்கள் அணிவித்து, அழகு செய்து, பார்த்து ரசிக்க அன்னைக்கு உரிமையும் உண்டு, அது சாத்தியமும் கூட.

யாப்பிலக்கணப் படியே கவிதையொன்று எழுத வேண்டும் என்ற தீர்மானத்தோடு ஒருவன் கவிதை எழுத உட்கார்ந்தால் அந்தக் கவிதையில் உயிர் இருக்குமா?

கொஞ்சம் சந்தம், கொஞ்சம் சரித்திரம், கொஞ்சம் பாலியல் உணர்ச்சி என மூன்றும் கலந்த ஒரு கவிதை வேண்டும் என்று கேட்டதும் கணினி இரண்டு வரிகள் தந்ததாக சுஜாதா ஒரு கதையில் எழுதியிருப்பார்:

கதவைத் திறந்து கவனித்து வந்த ராஜராஜ சோழன்

விதவைக்கு முத்தம் பதினெட்டுத் தந்த ராஜராஜ சோழன்

முயன்று எழுதப்பட்ட கவிதைகள் இப்படித்தான் அமையும். கவிதை எழுதும் போது, அடுத்த வரியில் என்ன சொற்கள் வருமோ என்று தெரியாமல் முதல் வரியில் தொடங்கி, அந்த வரிகள் எங்கே போய் முடியப் போகின்றன என்று புரியாமல் அந்தக் கவிதையின் போக்கில் சென்று, முடிந்த பிறகு அதைப் படித்துப் பார்த்துப் புரிந்து கொள்ள முயன்று, முயன்று, முழுதாகப் புரிந்து கொள்ள முடியாமல் தோற்றுப் போய்க் கொஞ்சம் புரிந்தது விட்டது போல் கற்பித்துக் கொண்டு, மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லி மகிழும் கவிதைகளின் சுகமே தனி. சரிதானே மனோன்மணி! புத்தி சிகாமணியை அவன் போக்கில் விட்டால் கணினி தந்த கவிதை போலத்தான் கவிதைகள் வரும்.

பிறக்கும் குழந்தைக்கு எப்படி வடிவிலும், குணங்களிலும் பெற்றோர்களின் சாயல் இருக்குமோ, அந்த அளவுக்கு நான் எழுதும் கவிதைகளில் என் அறிவு, என் மனம் ஆகியவற்றின் சாயல் இருக்கத்தான் செய்யும். அவ்வளவே! சிகாமணி-மனோன்மணியின் கூட்டுத் தயாரிப்புத்தானே என் கவிதைகள்! அவர்களின் சாயல் என் கவிதைகளுக்கு இருக்கத்தான் செய்யும். ஆனால், என் கவிதைகள் அந்தச் சாயல்களைக் கடந்தவை. சாயல்கள் வெறும் சாயங்களே!

யாப்புக்கு ஒத்து வர வேண்டும் என்ற முயற்சியில் தேவையற்ற சொற்களைப் பெய்வதால்தான் மரபுக் கவிதைகளுக்கு எதிர்ப்பியக்கமாகப் புதுக்கவிதை இயக்கம் மலர்ந்தது. பாரதி வசன நடையில் நல்ல கவிதைகள் எழுதித் தொடக்கி வைத்த பாதையில் பிச்சமூர்த்தியும், சி.சு.செல்லப்பாவும் அடித்தளம் போட்டுக் கட்டிடம் கட்டவும், அதில் வசிக்க குபுகுபுவென்று எத்தனைக் கவிஞர்கள் நீ, நான் என்று போட்டி போட்டுக் கொண்டு வந்து விட்டனர்! தற்போது, புதுக்கவிதை என்பது வெறும் ஒரு வடிவப் புரட்சி இல்லை, அதன் உள்ளடக்கமே தனி என்பதாக அந்தத் துறையை மேலும் வளம் செய்து கொண்டிருக்கும் பலர், கவிக்கோ அப்துல் ரஹ்மான், கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன், கல்யாண்ஜி போன்ற பல நல்ல கவிஞர்கள் இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

“புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற அருமையான நூலைப் படைத்த அமரர் வல்லிக்கண்ணனை நினைத்துக் கொள்கிறேன். எனக்குத் தெரிந்து, ஆண் புகைப்படத்தை அட்டையில் போடுவதே இல்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த குமுதம் பத்திரிகை தன் பிடிவாதத்தைக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தது வல்லிக்கண்ணனின் நூல் சாகித்ய அகதெமியின் பரிசு பெற்ற போதுதான் என்று நினைக்கிறேன். அதற்காகக் குமுதம் நிருபர் பால்யூ அரும்பாடு படவேண்டியிருந்தது. கடைசியில் அவர் முயற்சி வென்றது. குமுதம் தன் பிடிவாதத்தைக் கொஞ்சம் தளர்த்திக் கொண்டது. அதுவும் கொஞ்சம்தான் தளர்த்திக் கொண்டது. ஆம், ஒரு பெண் புகைப்படத்துடன் வல்லிக்கண்ணன் புகைப்படத்தைச் சேர்த்து அட்டையில் போடக் குமுதம் இசைந்தது. பால்யூ, ஒரு வெற்றிப் புன்னகையுடன், வல்லிக்கண்ணனை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து ஷோபனாவை விட்டு அவரைப் பேட்டி காணச் செய்து, இருவர் புகைப்படத்தையும் அடுத்த வாரக் குமுதம் அட்டைப் படத்தில் போடச் செய்தது ஒரு வரலாற்று நிகழ்ச்சி இல்லையா?

Arrv2

அதெல்லாம் இருக்கட்டும், வைதாரையும் வாழ வைப்பவன் என்று இறைவனைச் சொல்வது வழக்கம். எனக்கென்னவோ, கவிதையில் வைதால் மேலும் அருள் செய்வான் இறைவன் என்றே தோன்றுகிறது. இறைவனை விடுங்கள். ஒரு நல்ல கவிதை ரசிகனான மனிதன் அப்படித்தான். ஒரு தமிழாசிரியர், வகுப்புக்கு வந்ததும் நோட்ஸ் கொடுத்து எழுது என்று எங்களைத் தினமும் தொந்தரவு செய்து கொண்டிருந்தார். தாங்கவில்லை சாமீ! ஒருநாள், அவர் வகுப்புகு வரும் முன்பே, கரும்பலகையில் ஒரு குறட்பா எழுதி வைத்து விட்டேன்:

தாராதீர் நோட்ஸெமக்குத் தந்தீரேல் நீரிங்கு

வாராதீர் வன்சொல் பட

அந்த ஆசிரியர் வந்ததும் அதைப் படித்துவிட்டு, யார் எழுதியது என்று கேட்டார். எல்லாரும் மெளனம் சாதித்தோம். சொல்லாவிட்டால் எல்லாருக்கும் தண்டனை கிடைக்கும் என்று அவர் அச்சுறுத்தியதும், நான் எழுந்து நின்றேன். “ஓ! நான் முழுதும் சொல்லும் வரைக் காத்திருக்காமல் எழுந்து நின்று விட்டாயே. சொல்லாவிட்டால் எல்லாருக்கும் தண்டனை கிடைக்கும், சொல்லி விட்டால் எழுதிய மாணவனுக்குப் பாராட்டுக் கிடைக்கும் என்று சொல்ல நினைத்தேன்” என்றார், திரு. ராமமூர்த்தி என்ற அந்த ஆசிரியர். யார் ‘ஏந்தெழில்’ இலக்கணக் குறிப்புக்கு எனக்கு மதிப்பெண் தர மறுத்தாரோ, யாரை மீறிச் சென்று துறைத் தலைவரிடம் நான் மதிப்பெண் பெற்று வந்தேனோ, அதே ராமமூர்த்தி என்ற ஆசிரியர்தான், அவரை விமர்சித்து நான் எழுதிய குறட்பாவை ரசித்துப் பாராட்டினார்.

கவிதை ரசிப்பதற்கே! அதில் சோகம் விளைந்தாலும், வீரம் வெளிப்பட்டாலும், சினமே பொங்கிக் கனன்றாலும், குதூகலம் நிரம்பி வழிந்தாலும், கவிதை ரசிப்பதற்கே!

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காற்று வாங்கப் போனேன்! (44)

  1. அன்புள்ள ரவி அவர்களே!
    உங்களது ’காற்று வாங்கப்போனேன்’ படிக்க நேர்ந்தது. சுவாரஸ்யம் ததும்பும் கவிதை பற்றிய கட்டுரை. ஆசிரியரை மிரட்டிய குறட்பா பிரமாதம். இன்னும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
    நானும் கவிதை வலைப்பூ ஒன்றைத் துவங்கி எழுதிவருகிறேன். கவிதையின் மீதுள்ள தீராக்காதலே காரணம். பார்க்கவும்:http://aekaanthan.wordpress.com
    நன்றிகள் பல.
    -ஏகாந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *