-கே. ரவி

அணையாத சுடரேற்றுவேன் – நெஞ்சில்
அலைமோதும் சொற்களை அக்கினியில் தோய்த்துத் தீக்
கணையாக உருமாற்றுவேன் – இமைக்கும்
கணத்திலிப் பேரண்டம் உருவான மையத்தில்
அணையாத சுடரேற்றுவேன்!

விண்மீன்கள் சிறுதுளிகளாய் – வான                             flame-symbol
விளிம்புக்கு விரைந்தோடிப் போய்விழுந் தேசிதற
எண்ணற்ற உயிர்க்குலங்கள் – வாழும்
விண்மீன்களாய் என்றும் ஒளிசிந்திக் களிகொள்ள
அணையாத சுடரேற்றுவேன்!

பொய்சூழும் நெஞ்சங்களைத் – துளைத்துப்
போகின்ற ஒளியுலகில் இல்லையே என்றமொழி
பொய்யாகிப் போய்மறைய – எந்தப்
பொல்லாங்கும் இல்லாமல் எல்லாரு மேமகிழ
அணையாத சுடரேற்றுவேன்!

மாயை விரித்த வலையோ – ஜனன
மரணத்தி லேசுழலும் புரியாத மர்மமோ
தீயை உமிழும் சொற்கள் – பட்டுத்
தீப்பற்றி எரியட்டும் சூழ்ச்சிகள் முறியட்டும்
அணையாத சுடரேற்றுவேன்!

சொற்களைத் தோய்தெடுக்கக் – கோடி
சூரியப் பிழம்பொன்று தேடிச் சென்றேன் – அன்று
கற்பிலே கனல்விளைத்த – தெய்வக்
கண்ணகித் தாயிடம் வேண்டி நின்றேன் – இருட்
பட்டினிப் பாழ்க்குகையில் – கிடந்து
பதறுமோர் ஏழையின் கண்ணீர்த் துளியிலொரு
சிட்டிகை எடுத்து வைத்தாள் – அதில்
சீறிப் புறப்படும் தீயில்சொல் தோய்த்தெடுத்(து)
அணையாத சுடரேற்றுவேன் – இந்த
அகிலமெல்லாம் உண்மை ஒளிகூட்டுவேன்!
அனைவர்க்கும் ஒருநீதியே – என்ற
அருளாட்சி மலரநான் அறைகூவியே
அணையாத சுடரேற்றுவேன்!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அணையாத சுடரேற்றுவேன்!

  1. இந்தக் கவிதைக்காக ஒருமுறை தங்களை நமஸ்காரம் செய்ய வேண்டும். அந்த அளவிற்கு அணல் புகுத்திய கவிதை! சபாஷ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *