வழிகாட்டும் அழகு!
சந்தர் சுப்பிரமணியன்
உலகாளும் சேயன், உமையாளின் பாலன்,
.. உறவாடும் நெஞ்சன் அழகன்,
விலகாத இன்னல் விரைந்தோட வாழ்வின்
.. வினைதீர்க்கும் வேலன், அழகன்,
கலையாத காந்தள் கலைமார்பன், கந்தன்,
.. கவின்தெய்வ யானை அமையின்
வலமாரும் வேளின் வரைஆறுங் காண
.. வழிகாட்டும் கீரன் உரையே (1)
(திருமுருகாற்றுப்படை அடிகள் 1-11)
அலைமோதும் ஆழி அதில்வாழும் சூரர்
.. அவரோடு போரில் பொருது
தலைஆறு கொண்ட உருவோடு சூரன்
.. தனையன்று வேல்கொண் டழிக்கும்
நிலைகண்டு பேயும் நிலங்கண்ட சூரர்
.. நிணங்கொண்டு பாடும் விதமாய்
மலர்மேவு மாவின் மரங்கண்டு வீழ்த்தும்
.. மறங்கொண்ட வீரன் குகனே (2)
(திருமுருகாற்றுப்படை அடிகள் 46-60 )
மலர்மாலை வாசம் மணிபேசும் பட்டம்
.. மதயானை கோல நுதலில்;
வலிவான காற்றின் வடிவாக கூற்றம்
.. வரும்போன்ற வேழம் அதன்மேல்
அலங்கார ரூப அழகோடு காதின்
.. அணிதாரை யாகி ஒளிர
வலங்காணும் வேலன் முகம்வானில் நாளும்
.. வலங்காணும் கோல நிலவே (3)
(திருமுருகாற்றுப்படை அடிகள் 78-90 )
உலகுள்ள மாயை ஒழிகின்ற வண்ணம்
.. ஒளியூட்டும் ஒற்றை முகமே
நிலைநல்ல தாக்கும் முகம்வேறு வேத
.. நிலைகாப்பின் காக்கும் முகமே
நிலவன்ன ஞான முகம்வேறு போரில்
.. நிணம்காணும் வேறு முகமே
மலைவள்ளி காணும் முகம்வேறு; வேலன்
.. முகம்ஆறு காண்க தினமும் (4)
(திருமுருகாற்றுப்படை அடிகள் 91-105)
உலகோடும் எல்லோன் உடனோடும் ஆற்றல்
.. உடையோரைக் காக்கும் ஒருகை
நிலையாகி நிற்கும் இடையேறும் ஒன்று;
.. நிலையேகும் ஒன்று தொடையில்;
மலையொத்த மாவின் மதமாளுங் கோலை
.. மனதாகி ஏற்கும் ஒருகை;
வலமாகச் சுற்ற வடிவேலும் காப்பும்
.. வகையென்று கொள்ளும் இருகை (5)
மலர்மாலை ஏந்தும் கரமொன்று; மோன
.. வடிவேற்கும் வண்ணம் மறுகை;
ஒலிஆர்க்கும் நல்ல வளைஒன்று பூணும்;
.. ஒலிசேர்க்கும் ஒன்று மணியால்;
மலைகாடி யாவும் மழைஈயும் ஒன்று;
.. மணமாலை சூட்டும் மறுகை;
பலன்தேடு வோர்க்குப் பயனீயும் வேலன்
.. பன்னிரண்டு கைகள் இவையே (6)
(திருமுருகாற்றுப்படை அடிகள் 107-118)
மலம்யாவும் நீத்த தவஞானி, பக்தி
.. வசமாகிப் பாடும் கலைஞன்,
வலிவான பாம்பை வசமாக்கும் செம்புள்
.. வடிவேற்றம் கொண்ட திருமால்,
உலகேத்தும் ஐயன் உமைநாதன், தேவ
.. உலகோரின் ராசன் எவரும்
மலரோனின் சாபம் மறைந்தேக வேலன்
.. மலையேறி வந்து விழைவார் (7)
(திருமுருகாற்றுப்படை அடிகள் 126-175)
கலைமேவும் மாலை கழுத்தேற நல்ல
.. கவிபாடி வாழ்த்தும் மகளிர்
சிலைபோன்ற வேலன் திருக்கோலம் கண்டு
.. திளைப்பாரெக் குன்றந் தனிலும்;
பலவேறு நாத இசைமீட்டுங் கைகள்
.. பணிவோரின் தேவை அறியும்;
நிலந்தேயும் வண்ணம் துகிலார்ந்த வேலன்
.. நிலைகாணல் என்றும் நலமே (8)
(திருமுருகாற்றுப்படை அடிகள் 201-215)
மலைமீத மைந்த வடிவேலன் கோயில்
.. வலமேகி நிற்கும் குறத்தி
பலிபீடம் தன்னில் மலரெங்கும் தூவிப்
.. பலிதந்த ஆட்டின் குருதி
பலகூடை நெல்லின் மணியோடு சேர்த்துப்
.. படைக்கின்ற போதில் அருவி
ஒலியோடு பாடல் ஒலிகூட்டி வேலன்
.. உளன்நாடி பூசை புரிவாள் (9)
(திருமுருகாற்றுப்படை அடிகள் 218-240)
மலையோளின் மைந்தன், மறுப்போரின் கூற்றன்,
.. வடிவேலன், போரில் பொருநன்,
மலர்கொண்ட மார்பன், மறவீரன், செல்வ
.. மணவாளன், குன்றின் கிழவோன்,
பலநூல்கள் ஆயும் அறிவாளன், மெய்யன்,
.. பலர்போற்றி ஏத்தும் பெருமன்,
அலர்ந்தோர்க்கு வள்ளல், அகல்மார்பன், வேலன்,
.. அவன்வாசல் சென்று தொழுவோம்! (10)
(திருமுருகாற்றுப்படை அடிகள் 257-271)