விசாலம்.

நான் சிருங்கேரி போவதாக இருக்கிறேன் என்று என் தோழிகளிடம் சொன்னவுடனேயே “கண்டிப்பாகக் கட்டில் துர்க்கையைப்பார்த்து வா” என்றும் “சுப்பிரமண்யாவைப் பார்த்து வேண்டினால் வியாதிகள் எல்லாம் போய்விடும்” என்றும் பலர் பல கோயில்களைச் சொன்னார்கள். நாங்கள் மங்களூர் போய் இறங்கியவுடன் நாங்கள் அமர்த்திக்கொண்ட டாக்ஸி ஓட்டுனரும் வரிசையாக பார்க்க வேண்டிய தலங்களை மிக அழகாக விளக்கினார். இதை நம்பியே வாழ்வதால் எல்லாம் அவர் மனதில் பாடமாகிவிட்டது போலும்.

நாங்களும் முதலில் துர்க்கையம்மனைப்பார்த்து வணங்கியப்பின் பல கோயில்களைப் பார்த்து முடித்தோம் ஒரு வாரம் தங்கியதால் எல்லாம் நிதானமாக, களைப்பில்லாமல் பார்க்க முடிந்தது. கந்தசஷ்டிக்காக நான் பார்த்துப் பரவசமடைந்த “ஸ்ரீ சுப்பிரமண்யா” கோயில் மட்டும் இங்கு எழுதுகிறேன்.

அருள்மிகு குக்கி சுப்ரமண்யா திருக்கோயில்

Kukhi Subramanya
நாங்கள் முதலில் சென்றது குமாரதாரா நதி. அங்கிருந்து மேற்கே பார்க்க குமாரபர்வதம் தெரிந்தது. அதைப்பார்த்துகொண்டே இருக்க ஒரு பத்து நிமிடத்திற்குள் கருமேகம் வந்து அதை மறைக்க குமார பர்வதம் ஒளிந்துக்கொண்டு விடுகிறது. மேகம் கலைய திரும்பவும் சிகரம் தெரிகிறது, மலை உச்சிக்குப்போக பாதை ஒன்றும் தென்படவில்லை. ஒரு சிலர் தங்கள் சாகாசத்திறமையைக் காட்ட (adventure) போய் வருகிறார்கள்.

Kukhi Subramanya3அப்படி போய் வந்த இரு வாலிபர்களைக் கண்டு “மேலே பார்க்க என்ன இருக்கிறது ?” என்று கேட்டேன்.

“மேலே குமார தாரா நதியும், தர்ப்பணா நதியும் உற்பத்தி ஆகின்றது, தவிர மலை உச்சியில் குமரனின் இரு பாதங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.”

“வேறு என்ன பார்த்தீர்கள்?”

“இங்குதான் ஷண்முக லிங்கம் கிடைக்கிறது. அதில் ஆறு பட்டைகள் இருக்கின்றன. இதுவே ஆறுமுகங்களாக வருகின்றன. இந்த லிங்கம் அளவில் மிகச்சிறியதாக இருக்கிறது. முழுப்பயிறு போன்ற அளவில் தான் இருக்கிறது இதையே பூஜையில் சாலிக்கிராமம் போல் வைத்துக்கொண்டு பூஜையும் செய்கின்றனர்.”

அவர்கள் சொன்னதைக் கேட்டவுடன் அந்த ஷண்முகலிங்கத்தை நானும் பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் யார் மலை உச்சிக்கு ஏறுவது என்று ஆசையை அடக்கிக்கொண்டேன். அங்கிருந்து வரும் இரு நதிகளும் சுப்பிரமண்யா தலத்தைச்சுற்றி ஓடுவது குமரனை பிரதட்சிணம் செய்வது போல் தோன்றியது. சுப்பிரமண்யா க்ஷேத்திரத்தில் பல தங்கும் விடுதிகள் இருக்கின்றன. அங்கு வந்த கூட்டத்தில் பலர் முண்டு உடுத்திய கேரள மக்களாகவும், பலர் கன்னட மக்களாகவும் இருந்தனர். பலருக்கு இது குலதெய்வக்கோயிலாக இருந்தது. இங்கு வந்து நதியில் ஸ்னானம் செய்து, மொட்டை அடித்துக்கொண்டு மாவிளக்கும் ஏற்றி வைத்துப் பூஜிக்கின்றனர். ஆலயம் நம் தமிழ் நாட்டு ஆலயம் போல் பெரிய கோபுரத்துடன் இருக்கும் என்று நினைத்து தான் சென்றேன். ஆனால் கோபுரம் அங்கு இல்லை. சாதாரண ஓட்டு வீடு போலத்தான் அந்தக்கோயில் இருந்தது.

Kukhi Subramanya2வாசலில் ஒருவர் எங்களிடம் “இங்கு வந்து தரிசனம் செய்வதற்கு முன் ஆதி சுப்பிரமண்யா என்ற கோயிலுக்குசென்று அவர் அருள் பெற்று வர வேண்டும், அதுதான் முறை” என்று எங்களை அந்தக்கோயிலுக்கு அனுப்பி வைத்தார். அங்கு செல்ல வடக்குப்பக்கமாக ஒரு பத்து நிமிடம் நடக்கவேண்டும். அந்த இடத்தில் தான் முருகன் தனது பிரும்மஹத்தி தோஷம் நீங்க தவம் இருந்ததாகத் தெரிய வந்தது. அங்கு ஒரு பெரிய பாம்புப் புற்று இருந்தது. அதன் அருகில் தான் தர்ப்பணா நதி ஓடுகிறது. ஒரு கண்ணாடியைப் போல் தெளிவான நீராக இருப்பதால் நீரின் கீழே இருக்கும் அழகிய கூழாங்கற்கள், மேலும் பல சிப்பிகள் பளீரென்றுத் தெரிந்தன. இதனால் தானோ இதன் பெயர் தர்ப்பணா என்று வந்ததோ!

வழக்கம் போல் புற்றுக்கு பால் ஊற்றி பலர் பூஜை செய்கின்றனர். குழந்தை பேறு இல்லாதவர் செய்தால் உடனடியாக பலன் கிடைக்கும் என்கின்றனர். இங்கு பூஜை செய்தால் சரும நோய்கள் சரியாகிவிடுகின்றனவாம். தவிர இந்தப்புற்றின் மண்ணை உடலில் தேய்த்துக்கொண்டாலும், கரைத்து நீருடன் உட்கொண்டாலும் வியாதிகள் குணமாகிவிடுகிறதாம். தேள் கடி, பாம்புக்கடி, விஷம் எல்லாம் இதைத் தடவ சரியாகி விடுமாம்.

Kukhi Subramanya4இதேபோல் தான் வைத்தீஸ்வரன் கோயிலின் வைத்தியநநாதசுவாமி ஆலயத்திலும் நோய் தீர மண் உருண்டை கொடுக்கிறார்கள். பாம்பு என்றவுடன் இதுவும் ஞாபகத்திற்கு வந்தது. இந்த இடத்தில் பாம்பு ஒருவரையும் கடித்ததில்லையாம். அப்படியே கடித்தாலும் விஷம் ஏறாதாம். இது மிகவும் ஆச்சரியமான விஷயம்தான்.

ராகு கேது தோஷம் என்றாலே இந்த ஸர்ப்ப பூஜையுடன் பலர் தங்களால் முடிந்த அளவு சர்ப்ப பிரதிமைகள் செய்து வைப்பார்கள். இங்கும் நான் பல நாகப்பிரதிமைகளைக் கண்டேன். தவிர எங்குப்பார்த்தாலும் முகம் பார்க்கும் கண்ணாடிகளும் இருந்தன. அவை எதற்கென்றால் முகத்தில் கட்டிகளோ பருக்களோ ஏற்பட்டால் இது போல் வேண்டிக்கொண்டு வைத்தால் சரியாகிவிடுமாம். முகத்தில் பருக்கள் போக பல கிரீம்கள் தடவும் அவசியம் இங்கு வந்தால் இருக்காது என நினைக்கிறேன். அங்கிருந்து நகர்ந்து வந்தவுடன் ஒரு பிள்ளையார் அமர்ந்து அருள் புரிகிறார் . அவரையும் பார்த்து அருள் பெற்றவுடன் மீண்டும் முதலில் வந்த பெரிய கோயிலுக்கு வந்து சேர்ந்தோம்.

 

 

படங்கள் உதவிக்கு நன்றி: http://temple.dinamalar.com/en/new_en.php?id=99

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *