இலை விளக்கியது
இசைக்கவி ரமணன்
அந்த இலைக்குத் தெரிந்திருக்காது
மீண்டும் அந்தக் கிளையில் ஏறித்
தன்வகுப்புத் தோழிகளுடன் அமர்ந்து
சளசளக்க முடியாதென்று
தெரிந்திருந்தால், ஒரு
சித்தனுக்கு விசிறுவதற்காகச்
சென்றுகொண்டிருந்த தென்றலைச்
சீழ்க்கையடித்து நிறுத்தி, ஓர்
அரசகுமாரியின் ஒய்யாரத்தோடு
அப்படி சாவகாசமாய் இறங்கியிருக்காது
இறந்து, கொஞ்ச நேரம் பிடிக்கிறது
இறந்துவிட்டது புரிவதற்கு
இறங்கவில்லை
இறக்கிவிடப்பட்டோம் என்பது
கறுப்புச் சாலை சுட்டபின்புதான்
உறுத்தியது இலைக்கு
உயரே இருக்கும் தோழிகள்
ஒருத்தரும் இதைக் கவனிக்காமல்
ஒருத்தி இருந்த நினைப்பே இல்லாமல்
ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
உறவு உணர்வு நினைவு எல்லாம்
ஒரேயடியாய் முட்டியபோதும்
உடம்பில்லை
உலகில் இருந்தது
உலகம் இருக்க
உலகம் இன்றி
உதிர்ந்து போனது
உலகில்
கிளை தரித்த இலையை
விதி வரித்துக்கொண்டது
மனதும் உயிரும் முழுக்க முழுக்க ஒரு
முனையில் குவியும் மரணத் தருணம்தான்
விதியின் துவக்கம் என்று
விளக்கியது விழுந்த இலை
சலனமற்ற கிளையில்
சளசளத்துக் கொண்டிருக்கின்றன இலைகள்
அடிமரத்தில் முதுகு சொறிந்துகொண்டு
அவசரமாக எங்கோ சென்றது தெரு நாய்
28.10.2014 / செவ்வாய் / 22.06
அன்பு ரமணன் ஜி கவிதையின் ஒவ்வொரு வரியும் வாழ்க்கையின் அனித்தியத்தைச் சொல்வது போல் எனக்குத்தோன்றியது ‘உடம்லில்லை
உலகில் இருந்தது ,உலகம் இருக்க ,உலகமின்றி உதிர்ந்து போனது உலகில் ‘ என்ற வரிகள் மிகவும் அழகான வரிகள் உங்களை நினைத்தாலே மிகவும் பெருமையாக இருக்கிறது
நன்றி அம்மா!