image (10)

சேசாத்திரி ஸ்ரீதரன்

இந்திய மதங்கள் யாவும் தந்திர யோகத்தை அடிப்டையாகக் கொண்டவையே. ஆசீவகம், புத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்கள் தந்திர யோகிகளால் தோற்றுவிக்கப் பட்டவையே. தந்திர யோகத்தை மேற்கொண்ட வேத வேள்வியரே பின்னாளில் பிராமணர் எனப்பட்டனர். பிராமணர் தோற்றுவித்தது தான் இந்த பிச்சை எடுத்து வாழும் துறவு வாழ்க்கை முறை. பிராமணரிடம் இருந்து தான் இந்த பிச்சைத் துறவு நெறியை ஆசீவக, சமண, புத்த நெறிகள் ஏற்றுக்கொண்டன. தந்திர யோகம் தனிமனித ஒழுக்கத்தை பெரிதும்  வற்புறுத்துகிறது. பிரம்மச்சரியம், கள் உண்ணாமை, புலால் மறுப்பு ஆகியன தந்திர யோகத்தின் அடிப்படை ஒழுக்கமாகும். 2,600 ஆண்டுகள் முன்பு சமணம் வட இந்தியாவில் தோன்றியது என்ற போதும் இம்மதம் வணிகரிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றதால் தென்னகத்தில் மௌரியர் ஆட்சிக்கு முன்பேயே பரவியிருந்தது என்பதற்கு “யாற்றூர் செங்காயபனுக்கு தாவனூர் பின்அன் கூற்றன் அறுத்த அதிட்டானம் ” என்ற புகளூர் தமிழி கல்வெட்டே சான்றாகின்றது. வணிகப் படைகளின் எண்ணிக்கை குறைந்ததால் தமிழ் வேந்தர் ஆட்சி வீழ்ந்த பின் தமிழகத்தில் சமணம் சரிந்து மறைவுற்று இன்று சிறு வடிவாக மட்டுமே காணப்படுகிறது. கல்விப் புலத்திலும் இலக்கியப் புலத்திலும் சமணம் தமிழகத்தில் பெருந் தொண்டாற்றியதற்கு கல்வெட்டுச் சான்றுகளும் இலக்கியச் சான்றுகளும் உள்ளன. ஆனால் தமிழகத்தில் புத்த மதத்திற்கு அரச ஆதரவோ வணிகர் ஆதரவோ பெரிதாகக் கிட்டாததால் தமிழகத்தில் அதன் பரவல் மிக குறைவாகவே இருந்தது. எனவே சமணம் போல் அல்லாமல் அரிதாகவே புத்த மதக் கல்வெட்டுகள் தமிழகத்தில் காணப்படுகின்றன. எனினும் வரலாற்றைத் தவறான போக்கில் நடத்தும் வகையில் இலக்கியம் குறிப்பிடும் “முக்கோல் பகவர்” என்பது புத்த மதத் துறவிகளைத் தான் குறிப்பதாக தமிழில் குறு நூலே வெளியிட்டுள்ளனர். ஏதோ புத்தம் தமிழகத்தில் எல்லா இடத்திலும் பரவலாகப் பரவி இருந்தது போலவும் பின்னர் புத்த மக்களை ஊருக்கு வெளியே துரத்தி ஒதுக்கியது போலவும் காட்ட முயல்கின்றனர். மதமே இல்லாத போது எப்படி ஊருக்கு வெளியே துரத்தி இருக்க முடியும்? புத்தத் துறவு நெறிப்படி ஒருவர் தாமே சமைத்த உணவை உட்கொள்ளக் கூடாது பிறர் சமைத்த உணவைத் தான் பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்பதே. பின் எப்படி “முக்கோல் பகவர்” என்பதை புத்த துறவி என்று கொள்ள முடியும். இதற்கு முரணாக முதுமையில் யோக தந்திரத்தைப் பின்பற்றி வாழ்ந்த அந்தணர் / பிராமணர் அரிசி, பருப்பு, காய் போன்றவற்றைப் பிச்சையாகப் பெற்று தாமே சமைத்து உண்டனர். இதனால் வெங்காயம், பூண்டு போன்ற துறவுக்கு ஒவ்வாத பொருளை தவிர்க்க இயலும். புத்த துறவிகள் பிறர் சமையலில் வெங்காயம், பூண்டு இவற்றை தவிர்க்க முடியாது. எனவே முக்கோல் பகவர் என்பது பிராமணரைக் குறிப்பதே. இங்கு கீழே சில சமணக் கல்வெட்டுகள் விளக்கப்பட்டுள்ள்ளன. ஈற்றாக ஒரு புத்தக் கல்வெட்டும்  விளக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் வட்டம் ஆலந்தூரில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோவில் நுழைவாயிலில் உள்ள 3 வரி கற்பலகைக் கல்வெட்டு

  1. ஸ்ரீ கோவிசைய கம்ப விக்கிரம வர்மற்கு யாண்டைந்தாவதின் சித்திரை முதலாகப் புலியூர்க் கோட்டத்து மாங்காடு நாட்டு மாங்காட்டு திருவராந்தானத்துக்கு [ஆர்க்]  
  2. காட்டுக் கூற்றத்து பரிபண்டத்துறை பரிசை கிழார் அமர்நிலையார் மகளார் இப்பள்ளி உடைய அநந்தவீரக் குரவர் மாணாக்கியார் கு _ _ _ அடிகள் திருவமுதுக்கு வைத்த நெல்லறுபதின் 
  3. [குறுணி] முந்நாழி நெல்லால் விக்கட்டுவோமானோம். அவிச்சொரியுந்தால் முப்பதின் பலத்தாவிட்டார். இதுக்கு முட்டாமைச் _ _ _ _  

அராந்தானம் – சமண பள்ளி, அருகன் (ஸ்)தானம்; பரிபண்டத்துறை – வரிக் கருவூலம்; பரிசை – காவல்; திருவமுது – படையல், நைவேத்தியம்; விக்கட்டு – பகுத்து; நாழி – காற்படி; அவிச்சொரி – சோறு வைத்தல்; பலம் – 35 கிராம் நிறை; முட்டாமை – நில்லாமை

விளக்கம் : இக்கல்வெட்டு கம்ப விக்கிரம பல்லவனுக்கு 5 ஆம் ஆட்சி ஆண்டு 874 இல் வெட்டப்பட்டது. சித்திரை மாத தொடக்கம் முதலே புலியூர் கோட்டத்தில் அடங்கிய மாங்காடு நாட்டின் மாங்காட்டு ஊரில் அமைந்த அருகன் கோவிலுக்கு  தஞ்சையின் கண்டியூருக்கு அருகே அமைந்த ஆர்க்காட்டு கூற்றத்தின் வரிக் கருவூலக் காவல் தலைவர் அமர்நிலையாரின் மகளும் இந்த சமண கோவிலின் அனந்தவீரக் குரவரின் மாணவியுமான கு_ _ _ அடிகள் கோவில் திருவமுத்துக்கு கொடுத்த நெல் அறுபது குறுணியை மூன்று காற்படியாகப் பிரித்து சோறு வடிக்கையில் முப்பது பலமாக அளவிட்டு வடிக்கச் சொன்னார். இது இடைநில்லாமல் பார்த்துக் கொள்வோம் என்று உறுதி கூறினர் கோவிலார்.

புலியூர் என்பது இன்று சென்னைக் கோடம்பாக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இன்றைய மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் அருகில் இந்த சமண பள்ளி இருந்திருக்கலாம். தஞ்சை ஆர்க்காட்டை சேர்ந்த கருவூலக் காவல்தலைவர் மகள் பெயர் சிதைந்துள்ளது. அடிகள் என்பது துறவாட்டி என்று பொருள்படுகிறது. இவள் தஞ்சை சோழ நாட்டில் இருந்து பல்லவரின் தொண்டை நாட்டில் அமைந்த மாங்காட்டிற்கு வந்து அனந்தவீரரிடம் சமண சித்தாந்தத்தை கற்றுள்ளாள். பின் அங்கேயே துறவாட்டியாகி கோவிலின் அன்றாட படையலுக்கு 60 குறுணி நெல் வழங்கியுள்ளாள் என்பதும் அதன் அன்றாட படையல் அளவு 30 பலம் என்பதும் வட்டியாக கணக்கிடப்பட்டதாகத் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இல்லாவிடில் இடைநில்லாமல் என்ற சொற் பயன்பாடு இங்கு பொருள் தராது. இந்த மாங்காட்டுக் கல்வெட்டு சமண கோவில் சிதிலமடைந்த பின் பிற்காலத்தில் அங்கிருந்து கொண்டு வரப்பட்டு ஆலந்தூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் அடிக் கல்லாக இடப்பட்டுள்ளது.

பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 63, சூலை 2004, பக். 7

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் உள்ள பந்தல்குடி கிராமத்தில் திர்த்தங்கரர் சிற்ப பீடத்தின் மீது பொறிக்கப்பட்டுள்ள 6 வரிக் கல்வெட்டு

  1. ஸ்ரீ இராசராச தேவர்க்கு யாண்டு இருபத்திரண்டாவது வெண்பு னாட்டு நா
  2. லூ ரவிசேரி பள்ளிக்கு இவ்வூர் மாறஞ்சடையன் மகன் சங்கையன் ம
  3. கன் சங்கையஞ் சடையன் மகள் சடைய நற்சக்கி(யை) இந்நாட்டு “வெண்புரை திணை
  4.  வழுவிலி மகன் வழுவிலி சாத்தன்” பெற்ற சடைய நற்சக்கி மகன் சாத்
  5. தம் புகழ் மகன் புகழ் சடையேன் எம் மூத்தப்பன் வழுவிலி சாத்த
  6. னையும் எம் மூத்தம்மை சடையன் நற் சக்கியையுஞ் சாத்தி இட்ட கற்திருமேனி  

திணை – ஒழுக்கம், நெறி, நோன்பு, விரதம்; வழுவிலி – பிழறாத; வெண்புரை – வெள்ளைப்பிறை, மூத்தப்பன் – கொள்ளுப் பாட்டன்

விளக்கம் : முதலாம் இராசராசனின் 22 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 1007 இல் வெண்பு நாட்டில் அடங்கிய நாலூ ரவிசேரியில் உள்ள சமண பள்ளிக்கு இந்த ஊரில் வாழும் மாறஞ்சடையன் மகன் சடைய சங்கனுடைய மகன் சங்கை சடையனான பேரனின் மகள் சடைய நற்சக்கியை மணந்த இந்த நாட்டின் வெள்ளைப்பிறை நோன்பு பிறழாதவன் என்பதைக் குறிக்க “வெண்புரை திணை வழுவிலி எனப்படுவானின் மகன் வழுவிலி சாத்தன் பெற்றெடுத்த சடைய நற்சக்கியின் மகன் சாத்தன்புகழ் என்பானின் மகன் புகழ்சடையன்  எனும் நான் எமது கொள்ளுத் தாத்தா வழுவிலி சாத்தனையும் அவர் மனைவியான எமது கொள்ளுப் பாட்டி  நற்சக்கியையும் நினைவில் இருத்தி இந்த தீர்த்தங்கரர் சிலையை வடிப்பித்து நிறுத்தினேன் என்கிறான்.

இதில் கொள்ளுப்பேரன் புகழ் சடையன் தனக்கு முன்பு வாழ்ந்த மூன்று தலைமுறையை குறிப்பிடும் முன் தன் கொள்ளுப் பாட்டிக்கு முற்பட்ட புகழ்மிக்க மூன்று தலைமுறையை குறிப்பிடுகிறான். கொள்ளுப் பாட்டியின் வம்சம் பாண்டியர் வழிவந்தாற்  போலத் தெரிகிறது. ஆக இக்கல்வெட்டில் ஏழு தலைமுறைப் பெயர்கள் குறிக்கப்படுகின்றன. Chaumasi chaudas – ஆடிப் பௌர்ணமி முதல் கார்த்திகை பௌர்ணமி வரை கடைபிடிக்கப்படும் நான்கு மாத விரத காலம் (சாதுர்மாஸ்ய விரதம்) சமணரும் சிறப்பானது. இதைத்தான் இக்கல்வெட்டு “வெண்புரை விரதம் பிறழாத” என்று குறிக்கிறதோ? தெரியவில்லை.

பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 96, 2015, பக். 3

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் வேடல் ஆண்டார்மடம் 21 வரிக்கல்வெட்டு

  1.   ஸ்வஸ்திஸ்ரீ கோவிராச கேசரி பர்ம[ர்]க்கு யாண்டு பதிநாலாவது சி 
  2.  ங்கபுர நாட்டுக் கீழ்வழி விடால் மாதேவி ஆராந்தி மங்கல 
  3.    முடைய குணகீர்த்தி படாரார்வழி  மாணாக்கியார் கனகவீர[க்  கு]ரத்தி 
  4.   யாரையும் மவர்வழி மாணாக்கியாரையும் தாபிஸி[க]ள் நாநூற்றுவர்க்கும் 
  5. கொள்ளாதமையில் இக்[கோயி]ற் பிள்ளைகளைந் நூற்றுவர்க்கும் வழி இலாருங் 
  6.   காத்தூட்டுவோமானோம். எங்களு[டை]ய ஸ்வரக்ஷை. இது இரஷிப்பாரடி நி[லை எ]ங்கள் 
  7. [த]லைமேலன மாதேவி அராந்[தி] மங்கலமுடைய  [கன]கவீரக் குரத்தியார்  
  8. த் தங்க _ _ ர் மகளாதனமையில் _ _  _ 
  9.  முக்கியருமிது [கா]ப்பர் அவர்கள் ஸ்வரக்ஷை. இதனை இரக்ஷிப்பார 
  10.  டிநி[லை] என் தலைமேலன  
  11.   _ _ _ டறுங்  காழாறு[ம்] மு  
  12. தலாகிய மாதேவி ஆ 
  13.  ராந்தி மங்கலமுடைய 
  14.  கநக வீரக் குரத்தியார் தங் 
  15. கள் மகளாராதிநமையில்  
  16.  இதுவெல்லாந் தங்  
  17. கள் காவல். இதனை தீங்  
  18. கு நினைத்தாந் கங்கை இடைக் குமரி இடை
  19.  எழு நூற்று காதமுஞ்ச செய்த பாவ  
  20. ங் கொள்வார். காவலனுக்கு [பிழை]த்தா 
  21. ராவார்  

கொள்ளா – ஏற்காதமை, ஒவ்வாமை; படாரர் – துறவி, கோயில் அதிகாரி;-   குரத்தி – ஆசிரியை ; தாபிசி – தவசிகள்; ஊட்டு – சோறளி; காழார் – யானைப்படை வீரர்; பிழைத்தார் – குற்றம் செய்தவர்.

விளக்கம் : முதலாம் ஆதித்த சோழனின் 14 ஆம் ஆட்சி ஆண்டு 885 இல் விடால் எனப்பட்ட இன்றைய வேடலில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது. சிங்கபுரநாட்டின் கிழக்கு வழியில் அமைந்த விடால் ஊரான ஆராந்த மங்கலமுடைய சமண பள்ளித் துறவி குணகீர்த்தியிடம் பாடம் பயின்ற மாணாக்கியான கனகவீர குரத்தி என்ற ஆசிரியையும் அவரிடம் பாடம் பயிலும் மாணவிகளையும் தவமியற்றும் துறவியர் 400 பேருக்கும் ஒவ்வாமையால் இந்த சமண பள்ளியில் பயிலும் அந்த பெண் பிள்ளைகள் ஐநூற்றுவரையும் அங்கிருந்து வெளியேற்றி விடுகின்றனர். அதனால் போக்கிடம் இன்றி தவித்த இவர்களுக்கு இடமளித்து சோறு கொடுத்தோம் என்கின்றனர் இந்த ஊரார். இது நாங்கள் தரும் பாதுகாப்பு என்கின்றனர். இதை காப்பவர் பாதம் எமது தலைமேல் ஏற்போம் என்றும் மாதேவி ஆராந்தி மங்கலமுடைய சமண பள்ளியின் கனகவீரக் குரத்தியார் தமது மகளானபடியால் _ _ _ ஊர் முக்கியரும் இதை காக்க வேண்டும் என்கின்றனர். இது அவர்களின் நற்காப்பு ஆகும் என்கின்றனர். இதனைக் காப்பவரின் அடிப்பாதம் எனது தலைமேல் இடக் கடவது _ _ _ , யானைப்படை வீரர் முதலாகிய ஆராந்த மங்கலம் வாழ்வோர்க்கு சொல்வது யாதெனில் கனகவீரக் குரத்தியார் உமக்கு மகளென ஆவதால் இது உமது காவலாகும். இதற்கு கேடு நினைப்பார் கங்கைக்கும் குமரிக்கும் இடையே 700 காத நிலப்பரப்பில் வாழ்வார் செய்யும் பாவங்களை அடைவர். அரசனுக்கு குற்றம் இழைத்தவராவார்.

இதில் 500 மாணாக்கியர் என்பது துறவிகள் அல்லாத வெவ்வேறு சமூக பிரிவில் அடங்கிய மாணவியர் என்று கொள்ளலாம். குரத்தியரில் மணவாழ்வு கொண்டோரும் துறவாட்டியாக இருப்பாரும் உண்டு என்பதற்கு கழுமலைக் கல்வெட்டு எண்: 336 “இவன் மணவாட்டி சேந்தன் குரத்தி (ஏற்படுத்திய) திருமேனி”  என்பது ஓர் அரிய சான்று ஆகும். இந்த மாணவிகளின் வாழ்க்கை நெறி தம் துறவு நெறிக்கு ஏற்புடையதல்ல என்பதால் 400 துறவிகள் இவர்களைச் சமணப் பள்ளியில் இருந்து வெளியேற்றி விட்டனர் போலும். ஊராரிடம் தஞ்சம் புகுந்த இவர்களுக்கு ஊரார் அடைக்கலம் அளித்தனர் என்றே கொள்ளலாம். மேலும் இந்த மாணவிகள் அண்டை அயல் கிராமங்களில் வாழ்பவராக இருத்தல் வேண்டும். இல்லாவிடில் இத்தனை பேருக்கும் கிராமத்தாரால் அன்றாடம் சோறிட முடியாது. இது பெண் கல்வி அந்நாளில் மக்களால் ஊக்குவிக்கப்பட்டதற்கு அடையாளம். பெண்கள் வேதம் கற்கலாகாது என்று தான் சொல்லப்பட்டதே ஒழிய உலகியல் கல்வி கற்க தடை ஏதும் இருந்தது இல்லை என்பதால் மத வேற்றுமை பாராமல் பெண்கள் சமண பள்ளிகளில் சேர்ந்து கல்வி கற்றுள்ளனர். எனவே பண்டு சமூகத்தில் பெண் கல்வி சமணத்தால் ஓரளவு ஊக்குவிக்கப்பட்டு பரவியிருந்தது என்பது தெரிகிறது. ஆனால் தென்னிந்திய சமூக நிலையை தமது நாட் குறிப்பில் எழுதிய ஆங்கிலேயர் நடன மகளிரான தேவரடியாரைத் தவிர்த்து பிற பெண்கள் எவரும் கல்வி கற்கவில்லை என்ற குறிப்பு இசுலாமிய படையெடுப்பிற்கு பின் வந்த ஆட்சியாளரின் தவறான முடிவினால் பெண் கல்வி தடைபட்டிருக்க வேண்டும் என்றே எண்ண முடிகிறது. அரசியல் மேடையிலும் எழுதிலும் சொல்வது போல பெண் கல்வித் தடைக்கு இந்து மதமோ பிராமணரோ காரணம் அல்ல என்பதற்கு இக்கல்வெட்டு முகாமையான சான்றாகின்றது.

பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 3 ல் பகுதி 3 & 4 பக். 224 – 225

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வட்டம் மதுரை – திண்டுக்கல் சாலையில் அமைந்த ஊர் வடுக்கப்பட்டி 17 வரிக் கல்வெட்டு.

  1.  ஸ்வஸ்திஸ்ரீ பாகனூர்க் கூற்ற 
  2. த்து மானசித்தநல்லூராயின மா  
  3. லைக் குளத்து தான சாலையும் குளமும் அத்தா 
  4. ணிகள் பேராயி(ன)மை(யி)லி வ்வூர்க்கு மி 
  5. வ்வறத்துக்கு தீயார் நமக்குப் பகைவ்வரா(ய்) 
  6. யுங் கூலிச் சேவகரொருவர் நிற்கிலு மிவ் 
  7. வறத்துக்கு வருங் குற்றங் காப்பதாகவும் 
  8. பெருநிரவி யிரு நங்கைய் வாசனை கொள்ள 
  9. எல்க்கை வாசனை கொண்டு கல்லு நாட்டி 
  10. நப் பெருவாரியன் வேம்பன் வயிரி 
  11. (யும் தி)கையாயிரத்து அறுகை வாணிகன் 
  12. (மாணிக்) கூ(த்தனுமெ) திகைவாரியன் யிர 
  13. சாழனும் திகை வாரியன் கட்டாணை ராமனும் 
  14. ஆச்சவீர அத்தாணிகள் முனிவர் சி 
  15.  ம்புளு கலிக்கோட்டை விடங்கனும் 
  16.  அவர்கள் இது காளிப் 
  17. பேடு 

வாசனை – நல்ஆதரவு, அருள்; அத்தாணி – அரச ஆதரவு பெற்ற வணிகர் குழு; அறுகை – அறுந்த கை; வாரியன் – மேற்பார்வையாளன்; பேடு – அச்சம்

விளக்கம் : இது 11 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு. பாகனூர் கூற்றத்தில் அடங்கிய மானசித்த நல்லூர் என்னும் மாலைக்குளத்தின் தானசாலையையும் அதன் நீர் வழங்கும் குளத்தையும் அத்தாணிகள் என்ற வணிகக் குழுவினரின் தம் பெயரை வைத்து, இந்த ஊருக்கும் இந்த அறத்திற்கும் கேடு செய்பவர் நமக்கும் பகைவராக கருதப்படுவார் என்று அறிவிக்கின்றனர். கூலிச் சேவகர் ஒருவர் நிலையாக நின்று இந்த அறச்சாலையில் ஏற்படும் குற்றத்தை தடுத்துக் காக்க ஏற்படுத்தப்பட்டார். பெருநிரவி எனும் வணிகர் கூட்டத்தின் இரண்டு பெண் தெய்வங்கள் (அம்மன்) நல்ஆதரவும் அருளும் கொண்டும் எல்லை தெய்வத்தின் (அம்மன்) நல்ஆதரவும் அருளும் கொண்டும் எல்லைக் கல் நாட்டியோர் பெரிய மேற்பார்வையாளன் வேம்பன் வயிரியும், திசைஆயிரத்து அறுபட்ட கை உடைய வாணியன் மாணிக்க கூத்தனும், திசைஆயிரத்து மேற்பார்வையாளன் வீர சோழனும், திசை ஆயிரத்து மேற் பார்வையாளன் கட்டாணை இராமனும், திசை ஆயிரத்து வீரர்கள் அரச ஆதரவு வணிகரான அத்தாணிகள், சமண முனிவர் சிம்புளுவின் ஆதரவு பெற்ற கலிக்கோட்டை விடங்கனும் ஆவர் என்று ஆறு வணிகரின் பெயர்கள் குறிக்கப்படுகின்றன. அவர்களுடைய அச்சம் தரும் காளியும் காவலுக்கு நிறுத்தப்பட்டது.

சமணரில் பெரும்பாலார் வணிகர் என்பதற்கு வணிகரின் இந்த சமணக் கொடையே சான்று. தமிழ் வேந்தராட்சி நீங்கி அயலவர் ஆட்சியில் தமிழ் வணிகர் கீழ்நிலை எய்தியதால் வணிகர் ஆதரவு குன்றி சமண சமயம் தமிழகத்தில் ஒழிந்தது.

பார்வை நூல்: பாண்டிய நாட்டில் சமணம் பக். 446

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் ஆலத்தூர் யாளிக் கல் 8 வரி வட்டெழுத்துக் கல்வெட்டு

  1. ஸ்வஸ்தி ஸ்ரீ சிந்தரையன் மகளார் நம்
  2. பிராட்டியார் வானவன் மாதே
  3. வியார் சிற்றாச்சர் வடிக்க மணவா
  4. ட்டி _ _ _ ந்து தவப்பட்டு ஆலந்தூர
  5. டிகள் பள்ளி ஆளாநின்ற காலத்து வீர சங்
  6. காதப் பெரும்பள்ளி என்று பெருமாநடிக
  7. ள் நாமத்திலே உள்ளோசஞ்யுஞ் செயிவித்து பு
  8. துக்குவித்தார்   

சிற்றாச்சர் – சின்னம்மை, சித்தி; தவப்பட்டு – தவமியற்றி; பெருமானடிகள் – வேந்தன்; சஞ்யு –  ஒலிக்கும் மணி

விளக்கம் : இக்கல்வெட்டு கொடும்பாளூர் இளவரசியும் முதலாம் இராசராசனின் பட்டத்து அரசியுமான வானவன் மாதேவியை குறிப்பதால் இது 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு எனத் தெரிகிறது. சிந்தரையன் மகளும் இளவரசியும் ஆன, வேந்தன் இராசராச சோழனின் பட்டத்து அரசி வானவன் மாதேவிக்கு சித்தியுமான வடிக்க மணவாட்டி இங்கு வந்து தவம் செய்த சமண பள்ளியை, ஆலந்தூர் அடிகள் இந்த சமண பள்ளியின் அதிகாரியாக இருக்கின்ற போது இச் சமண பள்ளியைப் புதுப்பித்து மனவெழுச்சி தரும் ஒரு மணியும் செய்வித்து அதற்கு வீர சங்காதப் பெரும் பள்ளி என்று தன் கணவனான வேந்தனின் (கொங்கு சோழன் வீரசோழ பராந்தகன்) பெயரை சூட்டுவித்தாள். இதன் மூலம் கொங்கு சோழருக்கும் தஞ்சை சோழருக்கும் உள்ள உறவு வெளிப்படுகிறது.

சிந்து தேச அரசன் தெற்கே யாத்திரை வந்த போதோ அல்லது வடிக்க மணவாட்டியின் பாட்டன் வீட்டார் வடக்கே யாத்திரை சென்ற போதோ வானவன் மாதேவியின் பாட்டியை மணந்துள்ளான் என்று கொள்ளலாம். இதன் மூலம் வானவன் மாதேவியின் பாட்டன் சிந்து தேச அரசன் என்று தெரிகிறது. அரச குடும்பத்தவர் இப்படி இனம், மொழி, பண்பாடு கடந்து இன்னொரு அரச குடும்பத்துடன் உறவு கொள்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இதில் வேடிக்கை என்ன என்றால் இந்த தமிழக அரச குடும்பத்தவர் ஆரிய வெண் தோலும் குருதியும் உள்ளவர் என்ற போதும் இந்த நிலவுடைமை ஆண்ட பரம்பரை மார்தட்டிகளை மட்டும் ஏனோ ஆரியர் என்று அடையாளப் படுத்தாமல் ஏமாளியான கருத்த பார்ப்பானை மட்டும் ஆரியனாக அடையாளப்படுத்துவதானது தமிழரை முட்டாள் ஆக்கும் உத்தி ஆகும். தமிழர் தான் இந்த முட்டாள் தனத்தை உதறித் தள்ள வேண்டும். இக்கல்வெட்டால் இராசராசன் வேந்தனாக பட்டம் சூட்டப்படும் முன்பே அவன் பட்டத்து அரசி வானவன் மாதேவி இங்கு சிறப்பு அடையாளமாக குறிக்கப்படுகிறாள் என்றால் இராசராசன் புகழ் வேந்தனாகும் முன்பே தென்னகத்தில் விரிந்து பரவி இருந்தது என்று தானே பொருள்?

பார்வை நூல்: கொங்கு நாட்டுச் சமணக் கல்வெட்டுகள், புலவர் செ இராசு, பக். 253

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் ஆலத்தூர் சமண பள்ளி முன் மண்டப நிலையில் உள்ள 9 வரி வட்டெழுத்துக் கல்வெட்டு

  1. ஸ்வஸ்தி  ஸ்ரீ கோநாட்டானேன் வீ
  2. ரசோழப் பெருமானடிகளுக்குத் திரு
  3. வெழுத்திட்டுச் செல்லாநின்ற யாண்டு முப்
  4. பத்தேழாவது ஆனித் திங்கள் முதல் _ _ 
  5. ஆலந்தூர் வீரசங்காதப் பெரும்பள்ளியில் 
  6. இவ்வருக தேவர் _ _ _ வயிற்று 
  7. நிலன் _ _ நாலெல்லை ஆக 
  8.  _ _ _ _ _ 
  9. வழி ஏழச்சம் ஒழியாமல் அறுவான்.

செல்லாநின்ற – நடப்பாண்டு, current year; பெருமானடிகள் – வேந்தர்; திருவெழுத்திட்டு – முடிசூடி; வயிற்று – உணவு; ஏழு அச்சம் – ஏழு தலைமுறை; ஒழியாமல் – தங்காமல்

விளக்கம் : கொங்கு சோழன் வீரசோழ பராந்தகனுக்கு  முடிசூட்டி 37 ஆம் ஆண்டு (கிபி 979) ஆகையால் ஆனி  மாதம் முதலாக ஆலந்தூரில் உள்ள வீரசங்காதப்  பெரும்பள்ளியாம் இந்த சமண கோவில் அருகருக்கு அன்றாடம் அமுதூட்ட  கோநாட்டவனால் நிலக்கொடை வழங்கப்பட்டு அதன் நான்கு எல்லையாக கை _ _ _ _ _ _ என்று எல்லை குறிப்பிட்ட இடம் சிதைந்து விட்டது. இந்த ஏற்பாட்டை அழிப்பவன் வழியினர் ஏழு தலைமுறைக்கு தங்காமல் அழிந்து போவான். ஒரு தலைமுறை அழிந்தாலே அடுத்த தலைமுறை தொடராது பின் எப்படி ஏழு தலைமுறை செல்லுமோ? புரியவில்லை.

இதற்கு மேலுள்ள வடிக்க மணவாட்டி கல்வெட்டின் காலத்தை கணிக்க இக்கல்வெட்டு பெரிதும் உதவுகிறது. இக்கல்வெட்டில் அவள் குறிப்பிடும் வீரசங்காதப் பெரும்புள்ளி என்ற பெயர் இடம் பெறுவதால் 979 க்கு முன் அக்கல்வெட்டு வெட்டப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. 980 தோடு வீரசோழன் பராந்தகன் ஆட்சி முடிந்து விடுவதால் இவனது உடல்நலம் தேற வேண்டி நோன்பு இருந்து இக்கோவிலை புதுப்பித்துள்ளாள் வடிக்க மணவாட்டி என்று கொள்ள முடிகிறது.

பார்வை நூல்: கொங்கு நாட்டுச் சமணக் கல்வெட்டுகள், புலவர் செ இராசு, பக். 253

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் ஐவர்மலை (ஐயம் பாளையம்) குகைத்தளத்தின் மேல் உள்ள 7 வரி வட்டெழுத்துக் கல்வெட்டு

  1. சகரையாண்டு எழுநூற்றுத் தொண்ணூற்றிரண்டு
  2. போந்தன. வரகுணற்கு யாண்டு எட்டு. குணவீரக் கு
  3. ரவடிகள் மாணாக்கர் காழத்து சாந்திவீரக் 
  4. குரவர், திருவயிரை பாரீஸ்வ படாரரையு மியக்
  5. கி அவ்வைகளையும் புதுக்கி இரண்டுக்கு முட்
  6. டாவவியு மோரடிகளுக்கு சோறாக அமைந்தன 
  7. பொன் ஐந்நூற்றைந்து காணம் 

அவ்வு – கூடும் இடம், assembly hall; போந்தன – போயின; காழத்து – மியான்மர் நாட்டு; முட்டாவ – முடிதல்; அவி – அவை, மாண்டபம்; ஓராடி – சேர்ந்து உழைப்பவர், உழைப்பாளர்.

விளக்கம் : சக ஆண்டு 870 கழிய இரண்டாம் வரகுணவர்மப் பாண்டியனுக்கு 8 ஆம் ஆட்சி ஆண்டில் 870 இல் குணவீரக் குவரடிகளின் மாணவரான மியான்மர் நாட்டைச் சேர்ந்த சாந்திவீரக் குரவரையும் திருவயிரையின் பாரீஸ்வ கோயில் அதிகாரியையும் இணைத்து இயக்கி இங்கத்து பழுதுபட்ட கூடங்களை புதுப்பித்து அவை இரண்டையும் கட்டி முடிக்கவும் கூடம் கட்டும் உழைப்பாளிகளுக்கு சோறிடவும் மொத்தம்  505 காணம் பொன் முதலிடப்பட்டது என்று கணக்கு காட்டப்பட்டுள்ளது.

சமண அற நூல்களைக் கற்க பர்மாவில் இருந்தும் மாணவர் தமிழகம் வந்தது இதன் மூலம் தெரிகின்றது. கல்வெட்டில் வரகுண பாண்டியன் ஆட்சி ஆண்டும் சக ஆண்டும் ஒருங்கே குறிக்கப்பட்டது காலக் கணிப்பிற்கு பெரிதும் உதவுகின்றது. பாண்டியர் ஆட்சி கொங்கில் சில காலம் இருந்துள்ளதால் கொங்கில் அது சமண பரவலுக்கு [பெரிதும் ஆதரவாயிற்று என்று கொள்ளலாம்.

பார்வை நூல்: கொங்கு நாட்டுச் சமணக் கல்வெட்டுகள், புலவர் செ இராசு, பக். 253

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் சாத்தமங்கலம் ஊரில் சந்திரசுவாமி கோயில் அருகே உள்ள பெருமாள் பாறை என்னும் இடத்தில் உள்ள 8 வரிக்  கல்வெட்டு

  1. ஸ்வஸ்திஸ்ரீ கம்ப பன்மற்கு யாண்
  2. டாறாவது காடகதிரையர் ம
  3. ணவாட்டி மாதவி யித்திருக்கோ
  4. யில் புதுக்கி முகமண்டக மெ
  5. டுப்பித்து பாழி புதுக்கி யக்
  6. கா படாரி திருக்கோயில் லெடு
  7. ப்பித்து இப்பள்ளிக்கு கிட்ட 
  8. பெரு மணி ஒன்று ஊட்டு(வி)த்தாள் 

பாழி – சமண முனிவர் தங்கும் இடம்; படாரி – அம்மன்; கிட்ட – செம்பு; ஊட்டு – விருந்து

விளக்கம் : பல்லவன் கம்ப வர்மனின் 6 ஆவது ஆட்சி ஆண்டு 875 இல் காடகதிரையர் என்ற வணிகருக்கு மனைவியான மாதவி என்பவள் இந்த சமணத் திருக்கோவிலை புதுப்பித்து அதில் முக மண்டபம் கட்டியும், சமண முனிவர் தங்கும் இடத்தைப்  புதுப்பித்தும், யக்ஷிக்கு புதிதாக ஒரு கோயில் கட்டியும், இந்த சமண கோவிலுக்கு செம்பினால் ஆன பெரிய மணி ஒன்றைக் கட்டியும் மக்களுக்கு விருந்து கொடுத்தாள்.

காடகதிரையர் என்ற சொல் இவர் காட்டுவழியில் வரித் தண்டல் உரிமை பெற்ற வணிகப் படைத்தலைவர் என்று விளங்குகிறது. திருவண்ணாமலை மாவட்டம் சிறந்த சமணர் ஊர்களை கொண்ட மாவட்டம் என்பதற்கு இங்கு அமைந்த சமண தளங்களே சான்று. இதற்கு இந்த மாவட்டம் அதிகமாக சமணத்தை பின்பற்றிய கங்கர், நுளம்பர், வாணர் படையெடுப்பிற்கு ஆட்பட்டதே காரணம் எனலாம்.

பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி 13, அதில் திருவண்ணாமலை மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி 2, பக். 104 த நா தொ து வெளியீடு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் கழுகுமலைப் பேரூராட்சி கழுகுமலை வேட்டுவன் கோவில் 7 வரிக் கல்வெட்டு.

  1. ஸ்ரீ திரும[லை]க்  
  2. குறத்திகள் 
  3. மாணாக்கன் ஏ
  4. னாதி குத்த
  5. னஞ் சாத்திச்  
  6. செய்வித்த ப
  7. டிமம் 

ஏனாதி – வில்வீரர் படைத்தலைவன்; படிமம் – கற்சிலை; குரத்தி – ஆசிரியை

விளக்கம் : திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் உள்ள திருமலையின் சமண பள்ளியைச் சேர்ந்த ஆசிரியைகளிடம் பாடம் பயின்ற மாணாக்கன் ஏனாதி குப்தன் என்பவன் தன் முன்னோரை நினைந்து செய்வித்த தீர்த்தங்கரர் சிற்பம் இது.

இவனது ஊர் திருமலை என்று கொள்ளும்படியாக இவன் இளவயதில் இங்கத்து ஆசிரியைகளிடம் பாடம் பெற்றுள்ளான். ஆசிரியைகள் ஆண் மாணவருக்கும் பாடம் புகட்டியுள்ளனர் என்பது இதனால் தெரிகிறது. இவனது இயற்பெயர் குறிக்கப்படவில்லை. குப்தன் என்பது வணிகருக்குள்ள வர்ணப் பட்டம் ஆகும். அதன் தமிழ் வடிவம் தான் குத்தன். அதே நேரம் இவன் விற்படைத் தலைவனாகவும் இருந்துள்ளான் என்பது ஏனாதி பட்டத்தால் விளங்குகிறது. இக்கல்வெட்டு சமணத்திற்கு வணிகரே ஆதரவளித்தனர் என்பதற்கு பெருஞ் சான்றாகிறது. ஏனெனில் மகாவீரரும் இதே வணிகர் குலத்தில் பிறந்த படைக் குடும்பத்தவர் என்பதே ஆகும். சமணத்தின் விரிந்த பரவல் சாதி உணர்வாலேயே ஏற்பட்டது. வணிகர் பலர் சமணத்தைக்  கைவிட்டதால் பிற்காலத்தில் சமணம் தமிழகத்தில் வீழ்ந்தது.

பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 5 பக் 129 எண்:370

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் கழுகுமலைப் பேரூராட்சி கழுகுமலை வேட்டுவன் கோவில் 7 வரிக் கல்வெட்டு.

  1.  ஸ்ரீ திருநேற்சுறத்து அரைம
  2. லை ஆழ்வாற்குத் திருப்ப
  3. ணி செய்கிற பட்டன் சுந்தர
  4. னான நேற்சுறநாட்டுப் பெ
  5. ருங் கொல்லனுக்கு கரு
  6. ஞ்செய் கால் சந்த்ராதித்த[வல்]
  7. நிற்கச் சேத்து      

அரை – நடு; ஆழ்வார் – தீர்த்தங்கரர்; கருஞ்செய் – குடைந்து செய்த; கால் – அடிப்பாகம், basement; சேத்து – செய்தான்

விளக்கம் : திருநேர்சுரம் என்ற கழுகுமலையின் நடுமலையில் தீர்த்தங்கரருக்கு பூசை செய்யும் சமண பிராமணன் சந்திர சூரியர் நிலைக்கும் காலம் வரையில் நிலைக்கும்படியாக சுந்தரன் என்ற பெயருடைய நேற்சுரநாட்டின் பெருங் கொல்லனிடம் (சிற்பி) கருங்கல்லைக் குடைந்து அடித்தளம் செதுக்கச் செய்தான்.

காலம் குறிப்பிடாத கழுமலைச் சமணக் குடைவறைக் கோவில் கல்வெட்டுகளிலேயே இது பழமையானதாக இருக்கலாம். ஏனெனில் இது அடித்தளம் அமைத்ததை பற்றிக் குறிக்கிறது. ஒரு கோவிலுக்கு அடித்தளமே முதலாகும். பிற பின்னர் தான் ஏற்படும்.

பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 5 பக் 127 எண்: 357

வேலூர் மாவட்டம் வேலூர் வட்டம் சின்னபாலம் பாக்கம் சரக்குமலை உச்சியின் குகை மேற்கூரையில் செவ்வகக் கட்டத்தில் வெட்டியுள்ள 6 வரிக் கல்வெட்டு.

  1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிசைய நிருபதுங்கு 
  2. ற்கு யாண்டு பத்தொன்பதாவது பெ
  3. ரிய பெண்ணாகடத்து ஸிம்ஹ நந்தி படாரர்
  4. க்கு பங்கள நாடுடையார் கொடுக்கர் வீரத்
  5. தொழிலர் பேராற் பங்கள நாடுடையார்த் த
  6. (ள)கள் சிறிய நங்கையார் செய்வித்த ஸ்ரீ கோயில்  

கொடுக்கன் – மகன்; வீரத்தொழிலர் – சத்திரியர்; நங்கை – அம்மையார்; தளகள் – தளவாட வீரர்கள்

விளக்கம் : பல்லவன் நிருபதுங்க வர்மனின் 19 ஆம்  ஆட்சி ஆண்டு 888 இல் பெரிய பெண்ணாகடத்தின் சமண கோயில் அதிகாரி சிம்மநந்திக்கு பங்காளநாடு ஆளும் அரையன் மகனும் சத்திரியரும் ஆனவர் பெயரால் பங்கள நாட்டின் படை தளத் தலைவர் நினைவில் சிறிய அன்னை கட்டுவித்த திருக்கோவில் இது. இந்த பெண்ணாகடம் சித்தூர் அருகில் இருந்திருக்கலாம்.

பார்வை நூல்: ஆவணம் இதழ் 7, 1996, பக். 17-18

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் திருமலையில் சுவரோவியம் தீட்டிய குகைக்கு இடப்புற முல்லா பாறையில் வெட்டி உள்ள 8 வரிக் கல்வெட்டு

  1. ஸ்வஸ்திஸ்ரீ கச்சியும் தஞ்சையங்கொண்ட ஸ்ரீ கன்
  2. னர தேவர்க்கு யாண்டு பத்தொன்பதாவது 
  3. கன்னரதேவ ப்ரித்வி கங்கரயர் தேவியார் கங்க மாதேவி 
  4. யார் கன்மி பொக்கிலிரு பிரிதியங்கரையர் மண
  5. வாட்டியார் பெற்றாள் நங்கையார் வை
  6. காவூர்த் திருமலை யக்ஷ படாரர்க்
  7. குத் துஞ்சா விளக்கொன்று சந்தி
  8. ராதித்தருள்ளவளவும் வைத்தார். 

பொக்கு – கருவூலம்; கன்மி – அனுக்கர், attendar;

விளக்கம் : காஞ்சியையும் தஞ்சையையும் கைப்பற்றிய இராட்டிரகூட வேந்தன் மூன்றாம் கிருஷ்ணனான கன்னரதேவனின் 19 ஆம் ஆட்சி ஆண்டு 953 இல் திருவண்ணாமலையை ஆண்டு கொண்டிருந்த மன்னர் கன்னரதேவ (கிருஷ்ணதேவ) பிரிதிவி கங்கரையரின் பட்டத்து அரசியான கங்க மாதேவியாரின் சார்பாக அவளது அனுக்கியான கருவூலக் காப்பாளராக இருக்கும் பிரிதியங்கரையருடைய மனைவியான பெற்றாள் நங்கை என்பவள் இந்த வைகாவூரில் உள்ள திருமலை யக்ஷ படாரர் சிலை முன்பாக அணையா விளக்கு ஒன்றை சந்திர சூரியர் உள்ள காலத்தளவும் எரியும்படி வைத்தாள்.

இராட்டிரகூடன் கன்னரதேவனின் மேலாண்மையை ஏற்றதால் திருவண்ணாமலை மன்னன் பிரிதிவி கங்கரையன் தன் பெயர் முன்பாக கிருஷ்ணன் என்ற வேந்தன் பெயரை இணைத்துக் கொண்டான் என்று தெரிகிறது. அரசியின் அனுக்கி பிரிதியங்கரையன் மனைவி என்பதில் இருந்து இருவரும் ஏதோ வகையில் உறவினர் என்று புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் தான் பிரிதியங்கரயன் கருவூலக் காப்பாளனாக இருக்க முடிந்தது. முக்கிய பதவிகளில் அரச குடும்பத்தவரே அந்நாளில் அமர்த்தப்பட்டனர் என்பதற்கு இது சான்றாகிறது.

பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 23, எண் 65, பக். 41

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் திருமூர்த்திமலை பாறையில் உள்ள 12 வரிக் கல்வெட்டு

  1.  பரிதாபி வருடம் கார்த்திகை மாதம் 1 தி இம்முப்பட்டத்துக் கணக்காண்ட
  2. எத்துலப்ப னாயக்கரவர்கள் நாளையில் போட்ட கல்வெட்டு. அமணே சுர சுவாமியுட 
  3. பூமி அமண சமுத்திரஞ் சீர்மையில் யாதாமொருத்தன் துரைத்தனத்துக்கு வந்தா 
  4.  லும் அவருட பெண்பிள்ளை கலியாணஞ் செய்தால் அந்தப் பிள்ளைக்கு 
  5.  நால் பொன்னுக்குள்ளாக கடமை போதவும் மாடுகள் சீதனங்குடுக்கவும் யிந்த தலத்துக் 
  6. கு முறையாருக்குப் பிள்ளை குடுத்துத் தலத்திலேயும் யிருந்தால் நாலுபேர் துரைமக்கள் வைத் 
  7.  த மானியம் விட்டு நடப்பிக்கவும், இதுக்கு மிகை யாதாமொருவன் பிள்ளைப் பிரியத்துக்கு எத்தா 
  8. யுடமை போட்டாலுங் கோபாதமத்தனை பூமி சீதனங் குடுத்தாலுமவன் கங்கைக் கரையிலே 
  9. காராம் பசுவை கொண்ண தோஷத்திலே போவான். அதிகாரத்தில் சிறிது திரவியமெச்சாக
  10.  ச் சம்பாதிச்ச பாகத்திலேயுங் கூட அ_ _ செய்து தானதர்மஞ் செய்து தீர்க்கமா 
  11. ய் நடந்துகொண்டவனுக்குக் காசியில் தீர்த்தமாடின பலன் உண்டு. யி_ _  ப்படி மே 
  12. னி கண்டிருந்து மீதி நடப்பிக்க இராமே _ _ த்தமனுக்கு 

பட்டம் – நாற்றங்கால் பகுதி, ஆட்சி; கணக்கு – ஒழுங்கு சீல ஏற்பாடு, system; கடமை – மாப்பிள்ளை வீட்டார் மணப் பெண் வீட்டாருக்கு கொடுக்கும் வரதட்சணை; நாளை – வரும் காலம்; சீர்மை – நாட்டுப்பகுதி; துரை – வரி அதிகாரி; முறையார் – உறவினர், சொந்தம்

விளக்கம் : இது பரிதாபி ஆண்டு கார்த்திகை மாதம் 1 நாள் 1792 இல் வெட்டப்பட்ட கல்வெட்டு. எத்துலப்ப நாயக்கர் என்ற பெயர் இவரை தெலுங்கர் என்று சுட்டுகிறது. இவர் தளி பாளையக்காரர் குடும்பத்தவர் ஆவார். இந்த மூன்று பாசன நிலப்பகுதியின் ஒழுக்க சீலத்தை ஆள்கின்ற எத்துலப்ப நாயக்கர் எதிர்காலத்தில் நடந்துகொள்ள வேண்டி நிறுத்திய ஒழுக்கக் கல்வெட்டு. இது அமணேசுவர சுவாமியின் (அருகன்) நிலப்பகுதி எனவே இங்கு அநியாயம் நடக்கக் கூடாது. இந்த அமணசமுத்திர நாட்டுப் பகுதியில் எவரேனும் ஒருவன் வரி அதிகாரி பதவிக்கு வந்தால் அவருடைய பெண் பிள்ளைக்குக் கலியாணம் செய்யும் போது மாப்பிளை வீட்டாரிடம் அந்த பெண்ணுக்கு நான்கு பொன்னுக்கும் குறைவாகத் தான் வரசட்சணை வாங்க வேண்டும். பெண் வீட்டாருக்கு மாடுகளையும் சீதனமாகக் கொடுக்கலாம். இந்த தலத்திலேயே வாழும் உறவினருக்குப் வரி அதிகாரி பெண் கொடுத்து அவர்கள் இந்த தலத்திலேயே வாழ்ந்தால் நான்கு பேருக்கு வரி அதிகாரியின் ஆள்கள் மானியம் கொடுத்து நடந்துகொள்ள வேண்டும். இதற்கு மேலாக எவரேனும் ஒருவன் பெண் பிள்ளையை மணம் செய்து கொடுத்துப் பிரிவதற்கு எவ்வளவு வரதட்சணை போட்டாலும் இதாவது, பசுவின் குளம்படி அளவு நிலத்தைக் கூட வரதட்சணையாக பெற்றாலும் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை கொள்வான். அதிகாரத்தில் சற்றே கூடுதலாக பொருள் அதிகமாக சம்பாதித்தாலும் அந்த அதிக உபரி பணத்தை தான தர்மம் செய்து நேரிய வழியில் நடந்து கொண்டவனுக்கு காசியில் குளித்த பயன் உண்டாகும். இப்படியாக மேற்படி உள்ளபடி நடக்கச் செய்வது இராமே _ _ த்தமனுக்கு கடமை ஆகிறது.

வேலூர் விரிஞ்சிபுரத்து படைவீட்டு பிராமணர்கள் பெண் வீட்டாருக்கு கன்யாசுல்கம் என்ற வரதட்சணை கொடுக்க முடியாமல் தம் மகனுக்கு திருமணம் நடத்த முடியாமல் துன்புற்ற போது அதற்கு எதிராக ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதே போன்றே இந்த அமணசமுத்திரத்தில் வரி அதிகாரிகள் வீட்டில் பெண் எடுத்தவர்கள் வரதட்சணை கொடுமைக்கு ஆளாகி எத்துலப்ப நாயக்கரிடம் முறையிட அந்த வரதட்சணைக் கொடுமைக்கு அவர் வரம்பிட்டுப் பிறப்பித்த ஆணைக் கல்வெட்டே இது. எத்துலப்பர் ஒரு உண்மையான ஆட்சியாளராக தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளார் என்று தான் கூற வேண்டும். உள்நாட்டு ஆட்சி நீங்குவதற்கு முன் உள்நாட்டு ஆட்சியாளரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு என்ற வகையில் இது சிறப்பானது. 1801 க்கு பின் ஆங்கிலேயர் இவருள்ளிட்ட சில பாளையக்காரர் பாளையங்களை ஒழித்து தமது பிரிட்டிசு ஆட்சியை முழுமையாகத் தமிழகத்தில் நிறுவினர் என்று ஆவணச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

பார்வை நூல்: கொங்கு நாட்டுச் சமணக் கல்வெட்டுகள், புலவர் செ இராசு, பக். 260

கோயம்பத்தூர் மாவட்டம் அவிநாசி வட்டம் ஆலத்தூர் சமணப் பள்ளி கருவறை நிலைக்காலில் உள்ள 12 வரி தமிழ் எழுத்துக் கல்வெட்டு

  1. பொங்கல் 
  2. லூர் வண்ணா 
  3. ன் நீலஞ் 
  4. செல்லன் 
  5. மணவாட்டி 
  6. காவஞ் சாத்தி 
  7. யையும் ம
  8. கள் செல்ல ப 
  9. ணத்தியை 
  10. யும் சாத்தி 
  11. நாட்டுவித்த 
  12. ல் நிலை  

சாத்தி – நினைவில் கொண்டு பெயரிட்டு

விளக்கம் : இதன் காலம் குறிக்கப்படவில்லை எனினும் தமிழ் எழுத்தில் உள்ளதால் சோழர் ஆட்சி ஏற்பட்ட காலத்தது என்று கொள்ளலாம். இது வணிகர் அல்லதா எளியோர் சமணத்தை பின்பற்றியதற்கு அடையாளமாக உள்ள கல்வெட்டு. பொங்கலூரில் வாழும் வண்ணான் நீலன் செல்லன் என்பவன் இறந்த தன் மனைவி காவன் சாத்தியையும் மகள் செல்லப் பணத்தியையும் நினைவில் வைத்து நிறுத்திய கல் வாயில் நிலை என்று உள்ளது.

வணிகரின் வீரதாவளத்தில் துணி துவைத்திருந்தால் அந்த சமண வணிகரின் தொடர்பால் வண்ணார் சமண சமயத்தை தழுவி இருக்கலாம் என்பதில் வியப்பு ஒன்றும் இல்லை.

பார்வை நூல்: கொங்கு நாட்டுச் சமணக் கல்வெட்டுகள், புலவர் செ இராசு, பக். 256

திருச்சி மாவட்டம் பொன்மலை கீழ்க்குறிச்சி பௌத்தப்பள்ளி கல்வெட்டு

ஸ்வஸ்திஸ்ரீ வீரத்தாவளத்தில் பௌத்தப் பள்ளிக்கு இந்த செந்தாமரைக் கண்ணநல்லூர் முதலடங்க இறையிலியான பள்ளிச் சந்தம். 

வீரதாவளம் – வணிகப்படை வீரர் ஓய்வாக தங்கும் ஊர்; பள்ளிச் சந்தம் – பௌத்தப் பள்ளிக்கு வழங்கும் கொடை

விளக்கம் : இந்த கல்வெட்டு அருகே 11 ஆம் நூற்றாண்டு புத்தர் சிற்பம் ஒன்று பத்மாசனத்தில் அமர்ந்து தியான நிலையில் தலை இழந்து காணப்படுகிறது. வணிகரின் படை ஆள்கள் ஓய்விற்கு தங்கும் இடமான இந்த செந்தாமரைக் கண்ணநல்லூர் என்னும் கீழ்க்குறிச்சியில் அமைந்த பௌத்த பள்ளிக்கு இவ்வூரின் பொருள் வரியையும் சேர்த்து இறையிலியாக பள்ளிக்கொடை வழங்கினர் வணிகர் என்கிறது இக் கல்வெட்டு.

இக்கல்வெட்டின் மூலம் தென்னகத்தில் காலூன்றாத புத்த மதம் வணிகரின் ஆதரவால் சில இடங்களில் தலை தூக்கி நின்றது என்பது விளங்குகிறது. இது ஒரு அரிதான புத்த மதக் கல்வெட்டு. சில வட நாட்டு வணிகரோ அல்லது ஈழ வணிகரோ இங்கு வந்து தங்குவதால் அவரோடு நல்லுறவு பேணும் எண்ணத்தில் இங்கு புத்தர் கோவிலை வணிகர் கட்டி இருக்கலாம்.

பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 57, 2002, பக். 15

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.