(Peer Reviewed) நச்சினார்க்கினியரின் உரைமரபுகள்

0

டாக்டர். வே. விக்னேசு,
தமிழ்  உதவிப்பேராசிரியர்,
பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்641014.
vignesh@psgcas.ac.in

தோற்றுவாய்:

தமிழ்த்திருநாட்டிற்கு வற்றாத வளனாய்க் குன்றாத மணி விளக்காய் வாய்ந்தொளிர்வது தொல்காப்பியம் என்னும் முழுமுதல் இலக்கணப் பெருநூலாம். இந்நூல்  பல்லாயிரம் யாண்டுகட்கு முன்னர் தமிழகத்தில் தோன்றி, யாண்டு பலகடந்தும் வேரூன்றி நிற்பதற்குக் காரணம் உரையாசிரியப்பெருமக்களின் உரைகள் என்னும் கவசத்தால் வழிவழியாகப் போற்றிப் பாதுகாக்கபட்டமையேயாம். இங்ஙனம் அமைந்த தொல்காப்பிய உரைகளுள் உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியரின்  உரைப்போக்கையும் உரைமரபுகளையும் இக்கட்டுரை சுருங்க விளக்க முற்படுகின்றது.

தொல்காப்பிய உரையாசிரியர்கள் :

தொன்மைத் தமிழிலக்கண நூலான தொல்காப்பியத்திற்குக் கிட்டிய பழையவுரைகளுள் இளம்பூரணருரையே பழமையானது; நூல் முழுமைக்கும் கிடைத்துளது. நச்சினார்க்கினியருரை எழுத்து, சொல், பொருளில் முன்னுள்ள அகத்திணை, புறத்திணை, களவு, கற்பு, பொருள் என்னும் ஐந்தியல்களுக்கு மட்டுமே கிடைத்துளது. எஞ்சிய பொருட் பகுதியாகிய மெய்ப்பாடு, உவமம், செய்யுள், மரபு என்னும் நான்கியல்கட்குப் பேராசிரியருரையே கிடைத்துளது. மற்றைய பகுதிகட்குப் பேராசிரியருரை கிடைத்திலது. அன்றியும், நச்சினார்க்கினியருரையும், பேராசிரியருரையும் இயைந்து ஒருவருரையாகத் தொல்காப்பியப் பொருளதிகாரம் முழுமைக்கும் அமைந்துள்ளது. அங்ஙனமே, நடுநின்ற சொல்லதிகாரத்திற்கு முன் சுட்டிய அறுவருரைகள் கிடைத்துள.

தமிழிலக்கிய இலக்கணங்களுள் உரை பலவாக வாய்க்கப்பெற்ற நூல்களுள் தொல்காப்பியமும் ஒன்றாம். தொல்காப்பியரின் உளக்கிடக்கையை உணர்ந்து உலகிற்குணர்த்தச் சான்றோர் பெருமக்கள் பலரும் காலந்தோறும் முயன்றதன் விளைவே தொல்காப்பியத்தின் உரைப்பெருக்கத்திற்குக் காரணமாம். இவ்வகையில், ’தொல்காப்பியமும் சங்க நூல்களும் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்குப் பின் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் கல்வியுலகிற் பரவாதிருந்தன’ என்றும், ’கி.பி. 11-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தொல்காப்பிய இயக்கமும் சங்கவிலக்கிய மறுமலர்ச்சியும் தோன்றின’ என்றும் உரைக்கும் வ. சுப. மாணிக்கனார், தொல்காப்பிய இயக்கம் பற்றியும், தொல்காப்பியக் கல்வி பரவியமை பற்றியும் கூறும் கருத்துக்கள் இவண் நோக்கத்தக்கனவாம். அவர் கூறுமாறு:

இவ்வியக்கத்தின் தலைவர் இளம்பூரணர்; உரையாசிரியர் என்ற கீர்த்தியைத் தமக்கே உரிமை கொண்டவர். நேராப் புகழ்மைப் பேராசிரியரும், ஆனாப் பெருமைச் சேனாவரையரும், மெய்யுரை கண்ட தெய்வச்சிலையாரும், உச்சிமேற்புலவர் நச்சினார்க்கினியரும், சொல்லுரைகண்ட கல்லாடனாரும் இவ்வியக்கத்தின் படையாளர்கள். இப்பேரியக்கம் மூன்று நான்கு நூற்றாண்டுகள் தொல்காப்பியக் கல்வியைக் கற்றாரிடைப் பரப்பியது (தொல்காப்பியக்கடல், ப. 264) என்பது அவர் கருத்தாம்.

இன்னவகையில், தொல்காப்பிய நிலைபேற்றுக்கும், தொல்காப்பியக் கல்வி பரவலுக்கும் உரையாசிரியர்களின் உரைகளும் அன்னோர் மேற்கொண்ட உரைமுறைகளும் பெருங்காரணமாம்.

நச்சினார்க்கினியர்:

தமிழிலக்கிய, இலக்கண நூல்களுக்கு உரையெழுதிய உரையாசிரியர்களுள் மேலோங்கி நிற்பவர் நச்சினார்க்கினியராவர்.

பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும்
ஆரக் குறுந்தொகையுள் ஐந்நான்கும் – சாரத்
திருத்தகு மாமுனிசெய் சீந்தா மணியும்
விருத்திநச்சி னார்க்கினிய மே.

எனவரும் பழம்பாடலானது இவர் உரைகண்ட நூல்களைக் குறிப்பிடுகின்றது. இவற்றுள், குறுந்தொகையுரை கிடைத்திலது.

தொல்காப்பியம் முழுமைக்கும் இவர் காண்டிகையுரை எழுதியுள்ளாராயினும், பொருளதிகாரத்தின், மெய்ப்பாட்டியல், உவமவியல், மரபியல் என்ற இயல்களுக்கு இவர் வரைந்த உரை கிடைத்திலது. தொல்காப்பியம், கலித்தொகை, பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி என்பவற்றிற்கு இவர் வரைந்த உரைகள் சிறப்பிற்குரியன.

இவரின் புலமையை வியந்து “உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்” என்று இலக்கணக்கொத்து ஆசிரியரும், அமிழ்தினும் இனிய தமிழ்மடவரல் செய் அருந்தவத்தின் பெரும்பயனாக அவதரித்து அருளியவர்” என்று உ.வே. சாமிநாதையரும், பன்னூலறிந்த செந்நெறிப்புலவர்” என்று அரசஞ்சண்முகனாரும் “செந்தமிழ் மாமுகில் வள்ளல்” என்று மறைமலையடிகளாரும் புகழ்ந்துரைக்கின்றனர். அன்றியும், தமிழில் நல்ல புலமை அடைய விரும்புவர்கள் நச்சினார்க்கினியருடைய உரைகளில் தோய்ந்தாலன்றிப் புலமை நிரம்பாது என்று கூறுகின்ற அளவிற்கு உரையாசிரியர்களுள் தலைநின்ற சிறப்புக்குரியவர் நச்சினார்க்கினியர்” (தொல். சொல். உரைக்கொத்து- ப.109) என்று பண்டித வித்துவான். தி.வே.கோபாலையரவர்கள் உவந்து போற்றுதலும் ஈண்டுச் சுட்டத்தக்கதாம்.

பாற்கடற் போல பரந்த நன்னெறி…” எனத்தொடங்கும் உரைச் சிறப்புப்பாயிர அகவற்பா, நச்சினார்க்கினியரின் பெருமைகளைப் பறைசாற்றுகிறது. இப்பாயிரத்தால் இவர்தம் வரலாற்றையும் ஒருவாற்றான் அறியவியலுகிறது.

காலமும் சமயமும் :

பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த இவர், மதுரையில் அந்தணர் குலத்தில் பாரத்துவாச கோத்திரத்தில் பிறந்தவர் என்றும், போதகாசிரியராக வாழ்ந்தவர் என்றும், தூய ஞானம் நிறைந்த சிவச்சுடர் என்றும் பாயிரம் இவரைப் போற்றுகிறது.

இவரின் பெயர் சிவபெருமானின் திருப்பெயர்களுள் ஒன்றாம். இவர் சிவபெருமானையே பரம்பொருளாக வழிபட்ட சைவசமயத்தினரென்பது இவரின் பெயராலும் இவர் தம் உரையில் திருவாசகம், திருக்கோவையார் இன்னோரன்ன நூல்களிலிலிருந்து மேற்கோள்களை எடுத்துக்காட்டி இருத்தலானும் அறியவியலுகின்றது. அங்ஙனமே, திருமுருகாற்றுப்படையின் அடிகளைப் பலவிடங்களில் இவர் எடுத்துக்காட்டுவதிலிருந்து அந்நூலில் இவர்க்குள்ள ஈடுபாடு பெரிதெனத் தெரிகிறது.

இவர் சிவநேயச் செல்வராயினும் பிற சமயங்களையும் போற்றும் சமயப்பொறை யுடையராகவே இவர் விளங்கியமை தொல். சிறப்புப்பாயிரவுரை, மொழிமரபு – 13, அகத்திணையியல்- 32, புறத்திணையியல் – 21 என்றின்னவற்றிற்குரிய இவருரையான் புலனாகின்றது.

பல்துறைப் புலமை :

தமிழ் மொழியில் உள்ள பல்வகை நூல்களிலும் மிகுந்த பாண்டித்தியம் உடையவர் இவர். வடமொழியில் காவிய நாடக அலங்காரங்களுக்கு உரைகண்ட திரு. மல்லிநாதசூரி என்னும் புலவரைப் போல் தமிழ்மொழிக்கு வாய்த்தவர் இவர் என்று ஆன்றோர்கள் போற்றுவர்.

தொல்காப்பியவுரை முதலியவற்றில் வேதம், வேதாங்கம் முதலிய பல நூல்களிலிருந்தும் அவற்றின் உரைகளிலிருந்தும் பற்பல அரிய விஷயங்களை ஆங்காங்கு எடுத்துக்காட்டி நன்கு விளக்கிப் போகின்றமையாலும் பிறவாற்றாலும் இவரை வடமொழியிற் பலவகையான கலைகளிலும் மிக்க பயிற்சியுள்ளவரென்று சொல்லுதற்கிடமுண்டு” (சீவகசிந்தாமணி- ப. 33) என்று புகழ்வர் உ.வே. சாமிநாதையரவர்கள்.

பன்னூற் பயிற்சியோடு பல்வேறு கலைகளையும் கற்றுத்தேர்ந்தவர் இவர். இசை, நாடகம், தத்துவம், வானியல், சோதிடம், மருத்துவம், கட்டடக்கலை முதலான கலைகளில் மிகுதிறம் கொண்டவர் என்பதை இவரின் உரைக் குறிப்புக்களிலிருந்து அறியவியலுகிறது.

தமிழ்மொழிப் பற்று :

இவரின் தமிழ்மொழிப் பற்றினை வெளிப்படுத்தும் இடங்களாக,

அகரம் முதல் ஆரியத்திற்கும் ஒக்குமேனும் ஈண்டுத் தமிழெழுத்தே கூறுகின்றார்” “இவை தமிழெழுத்து என்பது அறிவித்தற்குப் பின்னர் வைத்தார்” (நூ.1)

தமிழ்ச் சொல்லெல்லாம் ஒருதலையாகப் பொருளுணர்த்தும்” (பெய.1)

காலம் உலகம் என்பன வடசொல் அன்று” (கிளவி. 58)

என்றின்னவற்றைக் காட்டலாம்.

உரைப்போக்கு :

நச்சினார்க்கினியருரை தெளிவும், விளக்கமும், புலமைநலனும் உடையதாம். சொற்செறிவும் பொருட்செறிவும் மிக்கதும், இலக்கிய இலக்கணத் தோய்வுடையதுமாம்.

இவர்தம் தொல்காப்பிய உரையைப் பொதுவகையில் நோக்குழி, இவருரையமைப்பு, பாயிரவுரை, அதிகாரவுரை, இயல் உரை, நூற்பா உரை என்னும் நான்கு பகுதிகளை உடையதாக அமைந்துள்ளது.

மேற்கோளாக எடுத்துக்காட்டும் நூலின் பெயரையும், நூலாசிரியர் பெயரையும் இவர் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை.

இவர் சிலவிடங்களில் செய்யுட்களை உரைநடையாக எழுதிச்செல்வதுண்டு. உரை வகுக்குங்கால், இவர் முன்னோர்தம் உரைநெறிகளைப் பின்பற்றிடினும்,   நூற்பா கிடந்தாங்கே ஆற்றொழுக்காகப் பொருள் விரித்தலின்றிக் கொண்டுகூட்டிப் பல்வேறிடங்களில் பொருள் கூறியுள்ளார். இதுபற்றி, மறைமலையடிகளார், வ.சுப. மாணிக்கனார், க. வெள்ளைவாரணனார் போன்ற பேராசிரியர்கள் தம் நூல்களில் இவரைக் கடிந்துரைத்துள்ளனர்.

எழுத்ததிகார உரையமைப்பு :

நச்சினார்க்கினியரின் எழுத்ததிகாரவுரை பாயிர உரை, அதிகார உரை, இயல் உரை, நூற்பா உரை என நான்கு பகுதிகளை உடையது.

பாயிர உரையைப் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் என இரு வகையாகப் பிரித்துக்கொண்டு உரை செய்திருக்கின்றார் நச்சினார்க்கினியர். பாயிர உரை இளம்பூரணருரையை ஏற்றதாகும். அதில் இளம்பூரணரின் பெயரை மனமுவந்து குறிப்பிடுகின்றார். பொதுவகையில் இப்பாயிர உரை இவரின் உவமை நலத்தைச் சாற்றுவதாக அமைகின்றது.

பாயிர உரையினையடுத்து அதிகார உரை அமைகிறது. அதிகார உரையும் தனித்துக் கூறப்படவில்லை. முதல் நூற்பாவினை யடுத்தே கூறப்பட்டுள்ளது. இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோவெனின்” என வினாவெழுப்பி அதிகாரத்தில் கூறப்படும் கருத்துக்களைத் தொகுத்து முன்னுரையாகக் கூறுகின்றார்.

எழுத்ததிகார  நூற்பாவுரை கருத்து, பொருள், காட்டு, விளக்கம் என அமைகின்றது, ஆயின், இந்த அமைப்பும் அனைத்து நூற்பாக்களிலும் பின்பற்றப்படவில்லை.

சில நூற்பாக்களில் கருத்துரையையடுத்து, விளக்கவுரையும் அதனையடுத்து எடுத்துக்காட்டும் என முன்னும் பின்னுமாக மாறி அமைந்திருக்கின்றன.

மொழிமரபு 31-ஆம் நூற்பாவுரையில் பொருளுரை முதலிலும், அடுத்துக் கருத்துரையும், அதனையடுத்து எடுத்துக்காட்டும், இறுதியாக விளக்கவுரையும் என்ற  நிலையில் உரையமைப்பு உள்ளது. பொதுவாகக் கருத்துரை தொடக்கமாக அமைவதுண்டு. ஆயின், இந்நூற்பாவில் அம்முறை மாறியுள்ளது.

பெரும்பான்மையாக “இது” அல்லது “இஃது” எனத் தொடங்கி உணர்த்துதல் “நுதலிற்று”  என ஈற்றில் முடித்துக் கருத்துரை கூறுவார். ஆயினும் சில இடங்களில், ‘உணர்த்துகின்றது’, ‘கூறுகின்றது’. ‘கொள்கின்றது’, ‘என்கின்றது’, ‘விளக்குகின்றது’, ‘அகற்றியது’ என்றும் ஈற்றில் முடித்தலும் உண்டு. நூற்பாவில் “இதன் பொருள்” எனக் குறியிட்டுப் பதவுரையாக எழுதுகின்றார்.

பொதுவகையில் நோக்கின். இவரின் எழுத்ததிகார உரையமைப்பானது இளம்பூரணரின் எழுத்ததிகார வுரையமைப்பினை ஒட்டியே செல்கின்றது என்ற அளவில் நிறுத்தி, இனி இவரின் சொல்லதிகார உரையமைப்பினை ஆய்வோம்.

சொல்லதிகார உரையமைப்பு :

சொல்லதிகார நச்சினார்க்கினியருரை அதிகாரவிளக்கம், இயல்விளக்கம், கருத்துரை, பொருளுரை, எடுத்துக்காட்டு, விளக்கம் என்னும் அமைப்பினைக் கொண்டது.

இளம்பூரணர், சேனாவரையர் இவ்விருவரும் சொல்லதிகார உரையில் அதிகார விளக்கத்தைக் கிளவியாக்கத்தின் முதல் நூற்பாவினை அடுத்துக்கூறியதனைப் போன்றே இவரும் கூறியுள்ளார். இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின்” என வினவி அதிகார விளக்கம் தருகின்றார். அதிகார விளக்கத்தில் ஒன்பது இயல்களின் கருத்துக்களையும் தொகுப்புரையாகத் தந்துள்ளார். இயல் பற்றிய விளக்கத்தினை இயலின் முதல் நூற்பாவினை அடுத்து வழங்கியுள்ளார். முதல் இயலுக்குரிய இயல் விளக்கத்தினை மட்டும் அதிகார உரையுனை அடுத்து அமைத்துள்ளார்.

கருத்துரை வழங்குங்கால், எழுத்ததிகாரத்தில் கூறியாங்கே, ‘இது’ அல்லது ‘இஃது’ எனத் தொடங்கிக் கருத்துரை கூறுகின்றார். ஆயினும், நுதலிற்று”  என ஈற்றில் எங்கும் முடித்தாரில்லை. ‘பகுக்கின்றது’, ‘அமைக்கின்றது’, ‘ஆராய்கின்றது’, ‘கூறுகின்றது’, ‘முடிக்கின்றது’ முதலிய சொற்களைக் கொண்டே முடிக்கின்றார்.

சில இடங்களில் தொடர்புடைய நூற்பாவாக இருப்பின்,  ‘இதுவும் அது’ என்று மட்டுமே குறியிட்டு, அந்நூற்பாவிற்குக் கருத்துரை வழங்காது விடுதலுமுண்டு.

நூற்பா உரையினையடுத்து எடுத்துக்காட்டும் அதனையடுத்து மேற்கோள் விளக்கமும் காணப்படுகின்றது. ஆயினும், இவ்வமைப்பு முறையே சொல்லதிகார அனைத்து இயல்களிலும் உள்ளதா எனில், ஒரோவிடங்களில் இவ்வமைப்பு முறை முறையாகப் பின்பற்றப்படவில்லை.

இனி, பொருளதிகார நச்சினார்க்கினியர் உரையமைப்பு பற்றிய ஆய்வினைத் தொடர்வாம்.

பொருளதிகார உரையமைப்பு :

பொருளதிகார நச்சினார்க்கினியருரை அதிகார முன்னுரை, இயல் விளக்கம்,  நூற்பா உரை என்ற மூன்று பகுதிகளை உடையதாக அமைகின்றது.

எழுத்து, சொல் அதிகாரங்களைப் போன்றே பொருளதிகாரத்திற்கும் அதிகார முன்னுரையினைத் தனித்துக் கூறவில்லை. முதல் நூற்பாவினை அடுத்துக் கூறுகின்றார். எழுத்து, சொல் அதிகாரங்களுக்கு அதிகார முன்னுரை கூறுங்கால், இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின்” என்று வினா எழுப்பிக் கூறிய இவர், இவ்வதிகாரத்தில் அங்ஙனம் கூறவில்லை.

நூற்பாவிற்குரிய உரையானது கருத்துரை, பதவுரை, எடுத்துக்காட்டு, விளக்கவுரை, மேற்கோள்களைப் பொருத்திக் காட்டுதல் என்னும் முறையில் அமைந்து செல்கின்றது. ஆயினும், இவ்வமைப்பு முறையே அதிகாரம் முழுவதும் பின்பற்றப்படவில்லை சில இடங்களில் மாறுவதுமுண்டு. களவியலுக்கு இவர் வரைந்துள்ள இயல் விளக்கம் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையானது ‘இது’ அல்லது ‘இஃது’ எனத் தொடங்கி ‘உணர்த்துதல் நுதலிற்று’ என ஈற்றில் முடித்து அமைகிறது.

இவ்வகையில் பொருளதிகார உரையமைப்பானது ஏனைய உரையமைப்பினின்றும் வேறுபட்டு நிற்கிறது.

சிறப்பு உரைநெறி :

அதிகார இயைபு, இயல் இயைபு, நூற்பா இயைபு ஆகியன கூறல். வினாவிடை நெறி,  நூற்பாவை நிலைப்படுத்தல், மிகையினாலும் இலேசினாலும் சொல், சொற்றொடர்களை நிலைப்படுத்தல், நூற்பாவின் இன்றியமையாமையை உறுதிப்படுத்தல், இலக்கணக்குறிப்பு, இலக்கணமுடிபு கூறுதல் இன்னோரன்னவை இவரின் சிறப்பான உரை நெறிகளாகச் சுட்டத்தக்கனவாம்.

மாணாக்கருக்கு உய்த்துணர வைத்தல் :

மாணாக்கருக்கு ஆராய்ச்சியறிவு மிகுதலுக்காக அவர்கள் தம் அறிவைச் செலுத்த வாய்ப்பளித்தல் இளம்பூரணர், சேனாவரையர் ஆகியோர் இயல்பாம். இதனை, மாணாக்கர்க்கு உணர்வு பெருகல் வேண்டி வெளிப்படக் கூறாது உய்த்துணர வைத்தல் அவர்க்கியல்பு” (சொல்.சேனா.நூ.1) எனச் சேனாவரையர் கூறுமாற்றானும், அவ்விருவர் உரைகளானும் அறியவியலுகிறது. ஆயின், நச்சினார்க்கினியரோ, ‘மாணாக்கருக்கு உய்த்துணர்வு இன்று’ என்னும் கருத்தினர். இதனை, மாணாக்கர்க்கு உய்த்துணரும் உணர்வு இன்று” (சொல்.நச்சி.நூ.203) என இவர் கூறியவதனால் அறியவியலும். இதுபற்றியே இவர் எதனையும் விளக்கியே கூறுவார் என்பது ஈண்டுச் சுட்டத்தக்கதாம்.

சிறப்பாக உரை வரையும் நூற்பாக்கள் :

பல்லாற்றானும் சிறப்புடையது இவருரை என்பதை எடுத்துக்காட்டுதற்குப் பல இடங்களைச் சான்றாகக் கூற இயலும். ஆயினும், சுருக்கங்கருதி இவர் சிறப்பாக உரை வரையும் நூற்பா எண்களை மட்டும் ஈண்டுக் குறிப்பிடுவாம்.

அவை : எழுத்ததிகாரம் – மொழி.13, 18, புணர்.38,17 சொல்லதிகாரம் – நூ. 37, 50, 51, 71, 83, 95, 113, 171, 222, 360, 399, 400, 410, 441 பொருளதிகாரம் – அகத்.5,6,8 புறத்.17, களவு.1 முதலியனவாம்.

சொற்பொருள் விளக்கம் :

இவர் நல்கும் சொற்பொருள் விளக்கங்கள் பன்முறையும் படித்தின்புறத்தக்கன. சான்றுக்காகச் சிலவற்றை எடுத்துக்காட்டுதும்.

குடிமை ஆண்மை இளமை…” எனவரும் சொல்லதிகார நூற்பாவிற்கு உரைகூறும் இவர் “குடிமையாவது குடிப்பிறப்பிற்கு ஏற்ற ஒழுக்கம்”, “ஆண்மையாவது ஆளுந்தன்மை”, “இளமையாவது காமச் செவ்வி நிகழ்வதோர் காலம்”, “வன்மையாவது ஒரு தொழிலை வல்லுதல்”, “பெண்ணையாவது கட்புலன் ஆயதோர் அமைதித் தன்மை” என்றெல்லாம் வனப்புற விளக்குகின்றார்.

‘அகம்’ என்பதற்கு இவர் கூறும் விளக்கம் அறிந்து போற்றத்தக்கது. அவ்விளக்கம் வருமாறு:

ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்தது எனக் கூறப்பட முடியாததாய், யாண்டும் உள்ளத்து உணர்வே நுகர்ந்து இன்பம் உறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார்”

என்பது இவரின் நயமான விளக்கம்.

மறுப்பு நலன் :

தமக்கு முன்னுள்ள உரையாசிரியர்களின் கருத்துக்கள் ஏற்புடையதாயின், மனமுவந்து குறிப்பிடும் நச்சினார்க்கினியர், தன் கருத்துக்கு ஒவ்வாத கருத்துக்களாயின் மறுத்துச் செல்கின்றார்.

அவ்வாறு மறுக்கின்ற பொழுது “பொருள் கூறினாரால் உரையாசிரியர் எனின் கூறியது கூறல் ஆம். ஆகலின் அது பொருந்தாது”, “என்றாரால் உரையாசிரியர் எனின் பொருந்தாமை யுணர்க”, “ஈண்டுச் சேனாவரையர் கூறிய பொருட்கு விடையின்மை உணர்க” என்பது போன்று இளம்பூரணர், சேனாவரையர் இருவர் பெயர்களையும் குறிப்பிட்டு மறுத்தலும், மாறுகொளக் கூறல் என்னும் குற்றம் தங்கும்”, “வடசொல்லென மறுக்க”, “ஆசிரியர்க்குக் கருத்தன்மை உணர்க”, “ஆசிரியர்க்கு அங்ஙனம் பொருள் கூறுதல் கருத்தன்மை அறிக”, “அவ்வாறு கூறுதல் பொருளன்மை உணர்க” என்றெல்லாம் அவர்களுடைய பெயர்களைக் குறிப்பிடாமலேயே மறுத்தலும் உண்டு.

இன்னும் சிலவிடங்களில் இளம்பூரணருரையைச் சேனாவரையர் மறுக்கினும், இவர் இளம்பூரணருரையையே தழுவி, சேனாவரையரின்  மறுப்பிற்கு மறுப்பு வழங்காமலும், தாம் ஏற்றுக்கொண்ட இளம்பூரணர் கருத்துக்கள் ஏற்புடையன என்பதற்குக் காரணம் காட்டாமல் போதலும் உண்டு. இன்னும் பல இடங்களில் இளம்பூரணர், சேனாவரையர் ஆகியோர் கூறாத உரைகளை வகுத்தலும் உண்டு.

பேராசிரியர் உரையைப் பெரும்பாலும் ஏற்று உரையெழுதும் இவர், செய்யுளியலில் சில இடங்களில் அவருரையை மறுத்துச் செல்கின்றார்.

இவ்வகையில், நன்மை கண்டவிடத்து ஏற்றுப் போற்றலும், பிழை கண்டவிடத்துக் கடிந்து ஒதுக்கலும் இவரின் மறுப்புநலனாம்.

முடிபுகள் :

இதுகாறுங் கூறியவற்றைத் தொகுத்து நோக்கின்,

  • தொல்காப்பிய நிலைபேற்றுக்கும், தொல்காப்பியக் கல்வி பரவலுக்கும் உரையாசிரியர்களின் உரைகளும் அன்னோர் மேற்கொண்ட உரைமுறைகளும் பெருங்காரணமாம்.
  • அவ்வுரையாசிரியப் பெருமக்களுள் நச்சினார்க்கினியரின் உரைப்போக்கும் அவர் கொண்ட உரைமரபுகளும் தனிச்சிறப்புடையனவாய் இலங்குகின்றன.
  • ஆசிரியர் தொல்காப்பியனாரின் உளக்கிடக்கைப் பலவிடங்களில் இவருரைப்பகுதிகளான் இனிது விளங்குகின்றமையே இவருரைத் திறனின் சால்பினைக் காட்டவல்லதாம்
  • அன்றியும், தொல்காப்பியம் முழுமைக்கும் இவர் காண்டிகையுரை எழுதியுள்ளாராயினும், பொருளதிகாரத்தின், மெய்ப்பாட்டியல், உவமவியல், மரபியல் என்னும் இயல்களுக்கு இவருரைதானும் கிட்டாமற் போயினமை தொல்காப்பிய ஆய்வுலகிற்குப் பேரிழப்பேயாம்.

என்பன இக்கட்டுரையின் முடிபுகளாம்.

துணை நின்ற நூல்கள் :

தொல்காப்பியம், எழுத்ததிகாரம், இளம்பூரணருரை,  (ஞா. தேவநேயப்பாவாணர்  விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1955.

தொல்காப்பியம், எழுத்ததிகாரம், இளம்பூரணருரை,  (அடிகளாசிரியர் பதிப்பு)      காவேரி கலர் அச்சகம், கும்பகோணம், 1969

தொல்காப்பியம், எழுத்ததிகாரம், இளம்பூரணருரை,  (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1969.

தொல்காப்பியம், சொல்லதிகாரம், இளம்பூரணருரை, (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.- 1973.

தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையருரை, (ஞா. தேவநேயப்பாவாணர் மற்றும் ஆ. பூவராகம்பிள்ளை விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. – 1970.

தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையருரை, (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  அண்ணாமலைப் பல்கலைக்கழகம  – 1981.

தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையருரை, சி. கணேசையர் பதிப்பு, வடஇலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், சுன்னாகம், இலங்கை, 1978.

தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியருரை,(கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.- 1962.

தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியருரை, இராமகோவிந்தசாமிப் பிள்ளை பதிப்பு,  சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர், 1997.

தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியருரை,  (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. – 1962.

தொல்காப்பியம், சொல்லதிகாரம், தெய்வச்சிலையாருரை,  கரந்தைத் தமிழ்ச்சங்கப் பதிப்பின் நிழற்படப் பதிப்பு,  தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2010.

தொல்காப்பியம், சொல்லதிகாரம்,  தெய்வச்சிலையாருரை, (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, – 1963.

தொல்காப்பியம், சொல்லதிகாரம், கல்லாடனார் விருத்தியுரையும் பழையவுரையும், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, – 1964.

தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார்,                                  38, பாண்டியன் சந்து, தெப்பக்குளம், திருச்சி.  முதற்பதிப்பு – 1930

தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணருரை, (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.- 1969.

தொல்காப்பியம், பொருளதிகாரம்,  பின்னான்கியல்கள் -பேராசிரியருரை,                   (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் – 1985.

தொல்காப்பியம், பொருளதிகாரம்,  முன்னைந்தியல்கள் – நச்சினார்க்கினியருரை,சி. கணேசையர் பதிப்பு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2007

தொல்காப்பியம், பொருளதிகாரம்,  பின்னான்கியல்கள் -பேராசிரியருரை, சி. கணேசையர் பதிப்பு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2007

தொல்காப்பியம்- உரைவளம், ஆ.சிவலிங்கனார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை

தொல்காப்பியம் – கிளவியாக்கம் – உரைக்கொத்து, தி.வே.கோபாலையர், சரசுவதிமகால் நூலகம் (2007) தொல்காப்பியம் – எழுத்து, சொல், பொருள்

தொல்காப்பியம், ஆராய்ச்சிக் காண்டிகையுரை, பாவலரேறு. ச. பாலசுந்தரனார்- தாமரை வெளியீட்டகம், தஞ்சை,

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நுன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை, வ.சுப. மாணிக்கனார்,  தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் (1989).

மாணிக்கனார், வ,சுப. – தொல்காப்பியக்கடல், தொல்காப்பியத்திறன் மணிவாசகர் பதிப்பகம், சென்னை.


ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

‘நச்சினார்க்கினியரின் உரைமரபுகள்” என்னுந் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளை முழுமையாகக் கருத்திற் கொண்டு செய்யப்படும் மதிப்பீடும் பரிந்துரையும்.

v தமிழ்த்துறையினராலும் தமிழ் அறிஞர்களாலும் திட்டமிட்டு மறைக்கப்பட்டு அல்லது காண மறுக்குந்துறை உரையாசிரியர் கண்ட ‘உரைத்துறை’யாகும். அவ்வுலகத்தின் முடிசூடா மன்னராகிய நச்சினார்க்கினியரைத் தற்கால பேராசிரிய இளைஞர் ஒருவர் அறிமுகம் செய்திருப்பதே பெரிதும் போற்றுதற்கு உரியதாகும்.

v  நச்சினார்க்கினியரின் உரைப்போக்குகள் பற்றிய சில எடுத்துக்காட்டுகளைக் கட்டுரையாசிரியர் தந்திருக்கிறார். அவை நச்சினார்க்கினியரின் உரைப் பேருருவைக் காட்டப் போதுமானதாக அமைந்திருக்கின்றனவா என்பது சிந்திக்க வேண்டியதிருக்கிறது.

v “சேனாவரையரோடு மாறுபட்டு இளம்பூரணரை வழிமொழியும் நச்சர், அதற்கான காரணத்தைச் சொல்லாமல் போய்விடுகிறார்” என்பது கட்டுரையில் ஒரு நுண்ணியம்.

v நச்சினார்க்கினியரின் உரைமரபுகள் எனப் பொதுவான தலைப்பிட்டுத் தொல்காப்பிய உரைகளை மட்டும் கட்டுரைப் பொருளாகக் கொண்டிருப்பது கட்டுரையின் அளவு கருதித் தவிர்க்க இயலாது எனினும் “நச்சினார்க்கினியரின் உரைமரபுகள் (தொல்காப்பியம்)” எனத் தலைப்பிட்டிருக்கலாம்.

v  கட்டுரையின் முதல் நான்கு துணைத்தலைப்புக்கள் நச்சினார்ககினியரை அறிமுகம் செய்திருக்கின்றன. இதனைத் தவிர்த்து அவருடைய உரையாழத்துக்கான சான்றுகளைக் கூடுதலாகக் காட்டியிருக்கலாம்.

v  கட்டுரைகளில் காட்டப்படுபவை நச்சினார்க்கினியத்தில் கண்ட முத்துகள் எனச் சொலல முடியாவிட்டாலும் அவை சிப்பிகள் அல்ல என்று துணிந்து கூறலாம்.

“‘உரையாசிரியர் காலம்’ என்னும் தமிழின் வல்லாண்மைப் பகுதியின்  தனிப்பெரும் தலைவனாக வலம் வந்த மாபெரும் புலமைத் தேக்கம் நச்சினார்க்கினியரை அறிமுகம் செய்துள்ள வகையில் இந்தக் கட்டுரை ஆய்வுக் கூறுகளைக் கொண்டிலது எனினும் ஒரு பொதுக் கட்டுரையாகக் கருதி, வல்லமையில் வெளியிடுகிறோம்”

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.