இரண்டறி கள்வி!
-மேகலா இராமமூர்த்தி
பிறரின் உடைமைகளைக் களவுசெய்பவனைத் திருடன், கள்வன், கள்ளன் என்ற சொற்களால் நாம் குறிப்பிடுவது வழக்கம். மனித வாழ்வுக்குப் பயன்படும் வெளிப்புற உடைமைகளை மட்டுமல்லாது மனிதரின் அகத்துடைமையான உள்ளத்தைத் திருடிச் செல்பவனைக் குறிக்கவும் நம் புலவர்கள் ’கள்வன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதை இலக்கியங்கள் நமக்கு அறியத்தருகின்றன.
”பல பொய்களைப் பேசவல்ல இந்தக் கள்வனின் பணிவான மொழிகள் அல்லவா என் பெண்மையை உடைக்கும் படையாக இருக்கின்றன!” என்று தலைவனின் பண்பு குறித்து எண்ணிப் பார்க்கும் தலைவி அவனைக் ‘கள்வன்’ என்று தனக்குள் செல்லமாய் அழைப்பதைத் திருக்குறளில் காண்கின்றோம்.
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை. (குறள்: 1258)
வள்ளுவத் தலைவி தலைவனைப் ’பன்மாய கள்வன்’ என்றழைத்ததுபோல், தேவாரத்தில் திருஞானசம்பந்தர், தோடுடைய செவியனாய் வெண்ணிற மதிசூடி, சுடலைப் பொடிபூசிக் காளை வாகனத்தில் கம்பீரமாய்க் காட்சிநல்கும் சிவபெருமானைத் தம் ’உள்ளங்கவர் கள்வன்’ என்றழைக்கின்றார்.
”தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்” (சம்பந்தர் தேவாரம்)
ஆண்பாற்சொல்லான திருடனுக்குத் ’திருடி’ என்பதனையும், கள்வன்/கள்ளன் ஆகிய சொற்களுக்குக் ’கள்ளி’ என்பதனையும் நாம் பெண்பாற் சொற்களாய்ப் பயன்படுத்தி வருகின்றோம்.
”அடிபோடிக் கள்ளி…சப்பாத்திக் கள்ளி” என்று தன் காதலியைப் பார்த்துப் பாடுகின்றான் இருபதாம் நூற்றாண்டுத் திரைக்காதலன் ஒருவன்.
ஆனால், பண்டைத் தமிழிலக்கிய நூல்களில் ’கள்வி’ என்பதே கள்வனுக்கான பெண்பாற் சொல்லாகக் கையாளப்பட்டிருக்கின்றது. ’கள்ளி’ என்பது வறண்ட பாலைநிலத்துச் செடியைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
சான்றுகள்:
கள்ளி போகிய களரியம் பறந்தலை (புறம்: 225, 237, 245)
கள்ளியம் காட்ட புள்ளியம் பொறிக்கலை (அகம் – 97)
இனி, கள்வி எனும் சொல்லாடல் தமிழிலக்கிய நூல்களில் பயின்றுவந்துள்ள பான்மையைக் காண்போம்.
”கள்வி” என்ற சொல்லைத் தம்முடைய குறுந்தொகைப் பாடலில் பயன்படுத்திச் சுவையான காதல் நிகழ்வொன்றைக் காட்சிப்படுத்துகின்றார் பெரும்புலவர் கபிலர்.
குறிஞ்சிநிலத் தலைவன் அவன்; இரவுநேரத்தில் யாருக்கும் தெரியாமல் தலைவியைச் சந்தித்துச் செல்பவன். தலைவியின் சாமர்த்தியத்தை வியந்து அவன் தனக்குள் எண்ணிப்பார்ப்பதாய் அமைந்த பாடலிது.
இரண்டறி கள்விநம் காத லோளே
முரண்கொள் துப்பிற் செவ்வேல் மலையன்
முள்ளூர்க் கான நாற வந்து
நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள்
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச்
சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி
அமரா முகத்த ளாகித்
தமரோ ரன்னள் வைகறை யானே. (குறுந்: 312 – கபிலர்)
”நம் காதலி, இருவேறு விதமான நடத்தையை அறிந்த கள்வி. இருள்செறிந்த இரவில், எப்பகையையும் எதிர்க்கும் வலிமையும் செவ்வேலையுமுடைய மலையமான் திருமுடிக்காரியின் முள்ளூர் மலைக்காட்டின் நறுமணத்தைப்போல் மணம்வீசும்படி வந்து, நம்மோடு மனம் ஒன்றினாள்; விடியற்காலத்திலோ, அவள் கூந்தலில் இரவு நான் சூட்டியிருந்த பலவகையான மலர்களையும் உதிர்த்துவிட்டு மயிர்ச்சாந்து பூசிக் கோதிய மணமுள்ள கூந்தலில் எண்ணெய் தடவி, என்னை அறியாதவள் போன்ற மாறுபட்ட முகத்துடன், தன் உறவினர்களோடு ஒன்றியிருக்கின்றாள்.”
அதுசரி…விடியற்காலையில் தலைவி அவள் வீட்டில் வேறுவிதமான ஒப்பனையோடு இருப்பது தலைவனுக்கு எப்படித் தெரியும்?
இரவில் வருவது போதாதென்று ஒருநாள் விடியற்காலையிலும் விருந்தினன்போல் தலைவி வீட்டுக்குச் சென்றிருக்கின்றான் தலைவன். அப்போது அவள் கூந்தலில் முதல்நாள் இரவு அவன் சூட்டிய மலர்கள் இல்லை; வீட்டிலுள்ளோர்க்குத் தெரியாமல் அவற்றை உதிர்த்துவிட்டு, வாசனைத்தைலம் பூசிக் கூந்தலை வாரிக்கொண்டிருந்த அவள், இவனை யார் என்றே தெரியாதவள்போல் நடந்துகொண்டிருக்கின்றாள். அவள் சாமர்த்தியத்தைக் கண்டு அதிசயித்த தலைவன், ”அடேயப்பா! இவள் எனக்கும் தன் வீட்டார்க்கும் ஏற்றவகையில் நடந்துகொள்ளும் இரண்டறி கள்விதான்!” என்று தனக்குள் எண்ணிக்கொண்டான்.
தலைவி இருவேறு விதமாக – இடத்துக்குத் தக்கபடி நடந்துகொள்ளும் சாமர்த்தியம் உடையவளாக இருந்தாலும், அவளால் நெடுங்காலம் களவொழுக்கத்தை மறைக்கமுடியாது. எனவே, விரைவில் அவளைத் திருமணம் செய்துகொள்வதுதான் சிறந்தது என்ற எண்ணமும் தலைவனுக்குள் எழுந்தது.
குறுந்தொகையைப் போலவே, நல்லந்துவனார் இயற்றிய பரிபாடலின் 20ஆம் பாடலிலும் ’கள்வி’ என்ற சொல்லைக் காணமுடிகின்றது. இங்கும் இச்சொல் இடம்பெற்றிருக்கும் பின்னணி சுவையானது.
கார்காலம் தொடங்கிற்று. வையையில் புதுப்புனல் பாய்ந்து வந்துகொண்டிருந்தது; பல்வேறு மணமலர்களையும் அள்ளிக்கொண்டுவந்த அந்தப் புதுவெள்ளத்தில் ஆடுவதற்கு மதுரையின் மக்கள்வெள்ளம் ஆர்வத்தோடு புறப்பட்டது. அதிகாலையிலேயே எழுந்து வையைத்துறைக்கு வந்தவர்கள் நீராடி மகிழ்ந்தனர். வையையில் நீராட இடமில்லாதோர் கரையில் நின்றிருந்தனர். அவர்களுள் தலைவன், தலைவி, அவளின் தோழியரும் அடக்கம். கரையில் நின்றிருந்த அத்தோழியர் அங்கே நின்றிருந்த பிற பெண்களின் அணிமணிகளை ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருந்தனர். பெண்களுக்கு எப்போதும் அடுத்தவர்களின் அணிகலன்களை நோட்டம் விடுவதில் அலாதி நாட்டந்தானே?
அங்கே நின்றிருந்த பரத்தையொருத்தி தலைவியின் ஆரத்தையும் வளையையும் அணிந்திருந்ததைக் கண்ட தலைவியின் தோழியர் திடுக்கிட்டனர்; அவள் நம் தலைவனோடு தொடர்புடைய பரத்தையோ எனும் எண்ணத்தோடு அவளைக் கூர்ந்துநோக்கினர்.
தலைவி அருகில் ’நல்ல பிள்ளை’போல் நின்றிருந்த தலைவன், தான் தலைவியின் நகைகளை அவளுக்குத் தெரியாமல் எடுத்துப் பரத்தைக்குத் தந்த விசயம் இப்போது தலைவியின் தோழியருக்குத் தெரிந்துவிட்டதை அறிந்து நாணினான். தலைவியின் தோழியர் தன்னை உற்றுநோக்குவதைக் கண்ட பரத்தை அவ்விடத்தைவிட்டு வேகமாக நகரத் தொடங்கினாள்.
தோழியர் விடுவரா? அவர்களும் பரத்தையைப் பின்தொடர்ந்து போனார்கள்; நடந்து களைத்த அவள் ஒருகட்டத்தில் நடப்பதை நிறுத்திவிட்டு, ”ஏன் என்னைப் பின்தொடர்கிறீர்கள்?” என்று தோழியரைப் பார்த்துச் சினத்தோடு கேட்டாள். தோழியர் பின்னே வந்துகொண்டிருந்த தலைவி, பரத்தையின் வினாவைக் கேட்டுத் திகைத்து நின்றாள். அப்போது தோழியருள் ஒருத்தி, ”விரும்புதற்குரிய காம இன்பத்தை மாயப் பொய்மொழிகளோடு சொல்லி ஆடவரை மயக்கும் விலைமகளே! பெண்மையை அனைவர்க்கும் உரித்தாக்கும் துணைவனற்ற பொதுமகளே! ஐம்புல உணர்ச்சியைப் பெறும் காமுகராகிய பன்றிகள் நுகர்கின்ற தொட்டியே” என்று பரத்தையைப் பலவாறு திட்டினாள்.
…அமர்காமம்
மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக்கணிகை
பெண்மைப் பொதுமைப் பிணையிலி ஐம்புலத்தைத்
துற்றுவ துற்றுந் துணையிதழ் வாய்த்தொட்டி!
தோழி தன்னை ஏசுவதைக் கண்ட பரத்தை, தானும் தலைவியைத் தூற்றத் தொடங்கவே, அங்கிருந்த முதுபெண்டிர் தலைவியது கற்பின் சிறப்பைப் பரத்தைக்கு எடுத்துரைத்து அவளை வணங்குவாயாக என்று கூறினர்; அதுகேட்ட பரத்தை, தலைவனின் காதலியருள் ஒருத்தியை இன்னொருத்தி வணங்குவது (தலைவியையும் தன்னையும் ஒத்த தன்மையராகக் கருதிச் சொல்கிறாள்) பெருமை தராது என்று மறுத்துவிட்டாள்.
அப்போது தலைவி பரத்தையைப் பார்த்து, “உன் பெருமையை இங்கே பேசுவதற்குமுன் என் தந்தை எனக்குச் செய்து இட்ட வளையும் ஆரமும் உன்னிடத்துக் களவினால் வரவில்லையென்றால் அவற்றை உனக்குத் தந்தவனைக் காட்டிவிட்டு உன் பெருமையைப் பேசிக்கொள்!” என்றாள்.
எந்தை எனக்கீத்த இடுவளை ஆரப்பூண்
வந்தவழி நின்பால் மாயக் களவன்றேல்
தந்தானைத் தந்தே தருக்கு
உடனே பரத்தை, “மோசிமல்லிகை மாலையணிந்தவளே! உனக்கு அன்பனாகிய தலைவன் என் அன்புக்கும் உரியவன்; என்னிடத்தில் இன்பம் பெறுவதற்கு விலையாக இவ்வளையையும் ஆரத்தையும் அவன் தந்தான்; இவையல்லாமல் உன் காலிலுள்ள சிலம்புகளையும்கூட நாளை கழற்றித் தருவான்; அதனால் அவன்தான் கள்வன்; நான் கள்வியல்லேன்; அவனைத் தொடர்வாயாக!” என்றாள் செருக்கோடு.
மாலை அணிய விலைதந்தான் மாதர்நின்
கால சிலம்பு கழற்றுவான் சால
அதிரலங் கண்ணிநீ அன்பனெற்கு அன்பன்
கதுவாய் அவன்கள்வன் கள்விநா னல்லேன்
பொதுமகளிரிடம் இன்பம் துய்ப்பதற்கு விலையாகக் கட்டிய மனைவியின் நகைகளையே அவளுக்குத் தெரியாமல் களவாடிச் செல்லும் கணவனின் செயலையும், தன் பரத்தமைக்கு நாணாது செருக்கோடு எதிர்வாதம் செய்யும் பெண்ணையும் காட்சிப்படுத்துவதோடல்லாமல் கணவன் எப்படியிருந்தாலும் அவனை ஏற்றுக்கொண்டு வாழ்வதே கற்புடைய பெண்ணுக்கு அழகு என்று முதுமகளிர் தலைவிக்கு அறிவுரை கூறுகின்ற பகுதியும் இப்பாடலில் உண்டு. ஆடவரின் ஒழுக்கக்கேட்டைப் பெரிய குறைபாடாக எண்ணாத அன்றைய சமூகத்தின் உளப்பாங்கு இக்காலப் பெண்டிர்க்கு அதிர்ச்சி தருகின்ற ஒன்றே!
அடுத்து, கலித்தொகையின் முல்லைக்கலிப் பாடலொன்றில் (கலி.108) தலைவன் தன் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட தலைவியைப் பார்த்து, ”இள மாங்காயை வகிர்ந்ததுபோன்ற கண்ணினால் என் நெஞ்சத்தைக் களமாகக்கொண்டு ஆளும் கள்வியல்லவா நீ?” என்று கேட்கின்றான்.
”இளமாங்காய் போழ்ந்தன்ன கண்ணினால் என்னெஞ்சம்
களமாக்கொண்டு ஆண்டாயோர் கள்வியை அல்லையோ?” (கலி: 108 – நல்லுருத்திரனார்)
இவையல்லாமல்,
நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி (மணிமேகலை – 18/21)
நெஞ்சமும் நிறையும் நீல நெடுங்கணால் கவர்ந்த கள்வி (சீவக சிந்தாமணி – 4/1024)
நன்பொறை நெஞ்சில் இல்லாக் கள்வியை நச்சி…(கம்பராமாயணம்: ஆரண்ய:6/61)
கள்வியோ கைவளை கொள்வது தக்கதே (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்: 1658)
எனப் பிற இலக்கிய நூல்களிலும் ’கள்வி’ எனும் சொல்லைக் காணமுடிகின்றது.
இவற்றின் வாயிலாக, கள்வனுக்குப் பெண்பாலாய் இலக்கியங்கள் நீண்டகாலம் பயன்படுத்தியது கள்வி எனும் சொல்லே என்பதும், காலப்போக்கில் ’கள்வி’ பெற்றிருந்த இடத்தைக் ’கள்ளி’ கவர்ந்துகொண்டு கள்வியைக் காணாமற்போன சொற்களின் பட்டியலில் சேர்த்துவிட்டது என்பதும் தெளிவாய்ப் புலனாகின்றது. கள்ளிக்கு இணையாக மீண்டும் நாம் கள்வியைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதன் வாயிலாக அச்சொல்லுக்கு மறுவாழ்வு கொடுக்கலாம்.
*****
கட்டுரைக்கு உதவியவை:
1. திருக்குறள் தெளிவுரை – டாக்டர் மு. வரதராசனார்.
2. தேவாரம் முதல் திருமுறை – முனைவர் தண்டபாணி தேசிகர் எழுதிய விசேடவுரையும், வித்துவான் திரு. வி.சா. குருசாமி தேசிகர் அவர்கள் எழுதிய பொழிப்புரையும்.
3. குறுந்தொகை மூலமும் பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார் உரையும்.
4. பரிபாடல் மூலமும் பரிமேலழகர் உரையும்.
5. கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்.
6. சீவக சிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்.
7. மணிமேகலை மூலமும் ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரையும்.
8. https://www.dravidaveda.org/?cat=697
9. கம்பராமாயணம் – கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.