குறளின் கதிர்களாய்…(488)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(488)
பல்லார் முனியப் பயனில சொல்லுவா
னெல்லாரு மெள்ளப் படும்.
–திருக்குறள் – 191 (பயனில சொல்லாமை)
புதுக் கவிதையில்…
அறிவுடையோர் பலரும் கேட்டு
அதிக வெறுப்படையும்படி
பயனில்லாத சொற்களைப்
பேசுகின்றவன்
எல்லோராலும் இகழப்படுவான்…!
குறும்பாவில்…
கேட்டவர் பலரும் வெறுக்கும்படி
பயனற்ற சொற்களை மட்டும் பேசுபவன்
எல்லோராலும் அதனால் இகழப்படுவான்…!
மரபுக் கவிதையில்…
அறிவு கொண்டோர் பல்லோரும்
அதனைக் கேட்டு வெறுப்புறவே
நெறியே யில்லா வகையினிலே
நேர்மை ஏது மில்லாமல்
சிறிதும் பயனே யில்லாத
சீரே யற்ற சொற்களையே
அறிந்தும் பேசும் ஒருவனைத்தான்
அகில மாந்தர் இகழ்வாரே…!
லிமரைக்கூ…
கேட்கும் அறிவுடையார் பல்லோரும்
வெறுப்புறவே பயனற்ற சொற்களையே பேசுபவனை
இகழ்வர் உலகோர் எல்லோரும்…!
கிராமிய பாணியில்…
பேசவேண்டாம் பேசவேண்டாம்
பொறுபில்லாம பேசவேண்டாம்,
பயனேயில்லாத சொல்லயெல்லாம்
யாருகிட்டயும் பேசவேண்டாம்..
அறிவுள்ளவங்க பலரும் கேட்டு
அதிகமா வெறுப்படயும்படி
அளவில்லாம பயனே இல்லாத
சொல்லயே பேசுறவன் ஒலகத்தில
எல்லாராலுமே இகழப்படுவான்..
அதால
பேசவேண்டாம் பேசவேண்டாம்
பொறுபில்லாம பேசவேண்டாம்,
பயனேயில்லாத சொல்லயெல்லாம்
யாருகிட்டயும் பேசவேண்டாம்…!