வாயல் முறுவல்!
-மேகலா இராமமூர்த்தி
நமக்குச் சிரிப்பே வரவில்லையென்றாலும்கூடச் சிரித்தாக வேண்டிய சூழல் சில நேரங்களில் ஏற்பட்டுவிடும். நமக்குப் பிடிக்காதவர்களைக் காணும்போது, நம் துன்பத்தைப் பிறரறியாமல் மறைத்துக்கொள்ள முற்படும்போது, நமக்கு வேண்டியவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துசெல்ல விழையும்போது என இந்தப் பொய்ச்சிரிப்பை உதிர்க்கவேண்டிய சூழல்களுக்கு நம் வாழ்வில் பஞ்சமில்லை. இந்தப் பொய்ச்சிரிப்புக்கு – போலிப்புன்னகைக்குத் தமிழிலக்கியம் அழகானதொரு பெயரைச் சூட்டியிருக்கின்றது; அதுதான் ’வாயல் முறுவல்.’
இங்கே ’வாய்’ என்பது நாம் சாப்பிடப் பயன்படுத்தும் உறுப்பை (mouth) குறிக்கவில்லை. ’வாய்’ என்ற சொல்லுக்கு ’உறுப்பு’ என்பதல்லாமல், ’உண்மை’ (truth) என்ற பொருளும் உண்டு. வாய்மை என்ற பெயர்ச்சொல்லே ’வாய்’ என்ற வேர்ச்சொல்லிருந்து தோன்றியதுதான். அதனால்தான் வாயல் (வாய் + அல்) முறுவல் என்பது உண்மையற்ற போலிப்புன்னகை எனும் பொருளைக் குறித்தது.
இனி, வாயல் முறுவல் எனும் சொல் நம் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள இரண்டு சூழல்களைக் காண்போம்.
முதலாவதாக நாம் காணவிருப்பது வாயல் முறுவல் சிந்திய அகநானூற்றுப் பெண்ணொருத்தியை. அவள் ஏன் வாயல் முறுவல் சிந்தினாள்? பிறகு என்ன நடந்தது? என்பவற்றை அறிந்துகொள்வோம், வாருங்கள்!
தலைவன், தலைவி, மழலை மிழற்றும் இளம்புதல்வன் என மூவர் கொண்ட அன்பான குடும்பமது. விருந்தினரைப் பேணுவது, சுற்றத்தினரைப் போற்றுவது, வறியவர்க்கு உதவுவது என்று பயனுள்ள வகையில் தமது பொருள்களைப் செலவழித்துவந்தனர் தலைவனும் தலைவியும். ஒருகட்டத்தில் இனி மீண்டும் பொருள்தேடி வந்தால்தான் மற்றவரைப் பேணமுடியும் என்ற நிலை ஏற்படவே பொருள்தேட வெளியூர்க்குச் செல்ல விழைந்தான் தலைவன். ஆனால், தன்மீது அளவுகடந்த அன்பும் அக்கறையும் கொண்ட தலைவியிடம் அதனைச் சொல்வதற்குத் தயங்கினான். காரணம், அவன் பொருள் தேடுவதற்காக நெடும்பயணம் மேற்கொள்ளவிருந்த வழி, கொடிய பாலைவழி; அவ்வழியில் பதுங்கியிருக்கும் ஆறலை கள்வர், அவ்வழி வருவோர் போவோரையெல்லாம் கொன்று அவர்தம் உடைமைகளைப் பறித்துக்கொள்ளும் இயல்புடையோர்; இதனைத் தலைவி அறிந்திருந்தாள்; அதனால் அந்த ஆபத்தான வழியில் தான் பயணம் மேற்கொள்ள அவள் உடன்படமாட்டாள் என்ற எண்ணந்தான் தலைவனைத் தயங்கவைத்தது.
சில நாட்களாகத் தலைவனின் முகத்தில் கலக்கமும் குழப்பமும் தெரிவதைத் தலைவி கவனித்தாள்; அதுபற்றி அறிய, ”ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்? என்னிடம் எதையோ மறைப்பதுபோல் தெரிகிறதே? என்று தலைவனைக் கேட்டாள்; இனியும் தன் உள்ளத்தில் உள்ளதை அவளிடம் மறைப்பது முறையில்லை என்று கருதிய தலைவன், ”கண்ணே! நம் சுற்றத்தையும் நம்மை நாடிவரும் விருந்தையும் நன்முறையில் புரப்பது நம் கடனல்லவா? அதற்குத் தேவையான பொருளைத் தேடச்செல்வது குறித்துச் சிந்திக்கின்றேன்” என்றான்.
அதைக்கேட்ட தலைவி வருத்தமுற்றாள். ”அன்பரே! சுற்றமும் விருந்தும் புரக்கப்பட வேண்டியவையே; அதற்காக என்னைப் பிரிந்து, காய்ந்த ஓமை மரங்களையுடையதும், நெல்லியினது பளிங்குபோன்ற காய்கள், உயர்ந்த பெரிய பாறைகளில் சிறுவர்கள் விளையாடுவதற்குச் சேர்த்து வைத்திருக்கும் வட்டுக்களைப்போல உதிர்ந்து கிடப்பதும், ஞாயிற்றின் கதிர்கள் காயும் பக்க மலைகளில், பகுத்துவைத்தது போலிருக்கும் கூரிய கற்கள் வழிச்செல்வாரின் விரல்நுனியைச் சிதைப்பதுமான காட்டுவழியைக் கடந்துசெல்ல எண்ணுவீராயின் அஃது அறமன்று! நாம் எளிய வாழ்க்கை வாழ்வோம்; நம்மால் இயன்ற அளவிற்குப் பிறர்க்கு உதவுவோம்” என்றாள் அவனிடம்.
”சரி”யென்றான் தலைவன். ஆனால், தன் சுற்றத்தார் வறுமையில் வாடுவதைக் கண்ட அவன் மனம் மீண்டும் நெகிழத்தொடங்கியது. ”மனைவியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு வீட்டிலேயே உட்கார்ந்திருந்தால் பிறர் துன்பத்தைக் களையமுடியாது; அவ்வாறிருப்பது என் ஆண்மைக்கு அழகா? வினைதானே ஆடவர்க்கு உயிர்?” என்று சிந்திக்கலானான்.
”பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை; உதவி வேண்டிவந்தோர்க்கு உதவும் வாய்ப்பும் இல்லை” என்பதை உணர்ந்த தலைவன் தலைவியிடம், “கண்மணி கலங்காதே! நான் தேவையான பொருளைத் தேடிக்கொண்டு விரைந்து மீண்டுவிடுவேன்; நீ நம் புதல்வனோடு சிறிதுகாலம் பொறுத்திரு!” என்றான். அவன் மனவுறுதி அறிந்த தலைவியும் அதற்குச் ”சரி”யென்று சம்மதித்தாள்.
பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினான் தலைவன். புறப்படும் நாளும் வந்தது. புறப்படுவதற்குமுன் தலைவியிடம் விடைபெறுவதற்காக அவளை அன்போடு அழைத்தான்; அவளோ அவன் அன்பை ஏற்றுக்கொள்ளாதவள்போல் மாறுபட்ட முகத்தோடு, தயங்கித் தயங்கி நிலத்தில் அழுந்த அடிவைத்து மெல்ல நடந்து அவனருகே வந்தாள்; அவன் அழைப்புக்கு மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. ”சில நாட்களுக்கு முன்பே நான் பயணப்படப்போவதை இவளிடம் தெரிவித்து அதற்குச் சம்மதமும் பெற்றபின்பு, இன்று ஏன் இவள் இவ்வாறு நடந்துகொள்கின்றாள்?” என்று திகைத்தபடி தலைவன் அவளைப் பார்த்தபோது, தன்னுடைய கூரிய பற்கள் வெளிப்படுமாறு உண்மையில்லாப் புன்னகை (வாயல் முறுவல்) ஒன்றை உதிர்த்தாள் தலைவி. அவள் தன் மனத்தில் கருதியதைத் தலைவன் உணருவதற்கு முன்பே சித்திரப்பாவைபோல் நின்று, முகத்தால் ஒரு குறிப்புக் காட்டினாள். ”என்னைப் பிரிந்து செல்லாதீர்கள்; அஃது அறமன்று” என்று தன்னிடம் அவள் முன்பு சொன்னதையே அவளுடைய முகக்குறிப்பு மீண்டும் உணர்த்துவதாகத் தலைவனுக்குத் தோன்றியது.
(தலைவனருகே நின்றிருந்த) தலைவியின் கண்களில் அப்போது நீர் துளிர்க்கவே, அதனை மறைக்கும் வகையில் சிறிதே தலைகவிழ்ந்தாள்; தன் மார்பில் ஒடுங்கியிருந்த புதல்வனைக் கொஞ்சுவதுபோல் அவன் தலையிலிருந்த செங்கழுநீர் மாலையை மோந்தாள்; மோந்த அளவில் அவள் மூச்சின் வெப்பத்தால் செந்நிறமான அம்மலர் தன்னிறமிழந்தது; அதனைக் கண்டான் தலைவன். ”அடடா! நான் அருகிலிருக்கும்போதே இத்தனை மனத்துயர் அடைந்து அதை மறைக்க முற்படுகின்றாளே, நான் பிரிந்துசென்றால் இவள் என்ன ஆவாள்? பிழைத்திருக்க மாட்டாளே!” என்று சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தான். அதுதான் தன் பயணத்தை நிறுத்துவது எனும் முடிவு.
தலைவியின் கோணத்திலிருந்து இதனைப் பார்க்கும்போது, அவள் ஏற்கனவே தலைவனின் பயணத்திற்கு இசைவு தெரிவித்துவிட்டபடியால் அதனைத் தடுத்து நிறுத்துவது அவள் நோக்கமன்று; எனினும், அவனைப் பிரிந்துவாழும் துயர வாழ்க்கை; அவன் பயணப்படப்போகும் ஆபத்தான பாலைவழி; இப்போது செல்பவன் எப்போது திரும்புவானோ எனும் ஐயம்… இவ்வாறு ஆயிரம் எண்ணங்களும் கவலைகளும் அவள் மனத்தில் சூறாவளியெனச் சுழன்றடித்ததால் தன் உணர்ச்சிகளை மறைக்க அவள் எவ்வளவோ முயன்றும் முடியாமல் அது கண்ணீராகவும் வெப்பப் பெருமூச்சாகவும் வெளிப்பட்டுப் புதல்வனின் தலையிலிருந்த பூவை வாடச்செய்து, அவள் மனநிலையைத் தலைவனுக்குணர்த்தி அவனது பயணத்தையும் தடைப்படுத்திவிட்டது.
தலைவன் தலைவி இல்லத்தில் நடந்த இந்நிகழ்வை, அவர்களின் உளநிலைகள் துல்லியமாய் வெளிப்படும் வகையில் காட்சிப்படுத்தி, தலைவனின் பெருந்தன்மையை எண்ணி நாம் உருகவும், தலைவியின் அவலநிலையை நினைத்து நாம் மறுகவும் வைத்துவிடுகின்றார் அரச புலவரும், பாலைத்திணை பாடுவதில் வல்லவருமான பாலை பாடிய பெருங்கடுங்கோ. அவரின் எழுத்தாணி தீட்டிய இனிய அப்பாடலை இனிக் காண்போம்.
அளிநிலை பொறாஅது அமரிய முகத்தள்
விளிநிலை கொள்ளாள் தமியள் மென்மெல
நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக்
குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற
வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள்
கண்ணியது உணரா அளவை ஒண்ணுதல்
வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன்
முளிந்த ஓமை முதையலங் காட்டுப்
பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி
மோட்டிரும் பாறை ஈட்டுவட் டேய்ப்ப
உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன்
மாய்த்தபோல மழுகுநுனை தோற்றிப்
பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல்
விரல்நுதி சிதைக்கும் நிரைநிலை அதர
பரல்முரம் பாகிய பயமில் கானம்
இறப்ப எண்ணுதி ராயின் அறத்தாறு
அன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன வாக என்னுநள் போல
முன்னம் காட்டி முகத்தின் உரையா
ஓவச் செய்தியின் ஒன்றுநினைந் தொற்றி
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு
ஆகத் தொடுக்கிய புதல்வன் புன்தலைத்
தூநீர் பயந்த துணையமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை மாமலர்
மணியுரு இழந்த அணியழி தோற்றம்
கண்டே கடிந்தனம் செலவே ஒண்தொடி
உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள் மாதோ பிரிதும்நாம் எனினே. (அகம்: 5 – பாலை பாடிய பெருங்கடுங்கோ)
வாயல் முறுவல் எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ள மற்றொரு சூழலை அடுத்துக் காண்போம்.
இங்கேயும் பெண்ணொருத்தி வாயல் முறுவல் சிந்துகின்றாள். எப்போது? தன்னைப் பிரிந்துசென்ற கணவனை எண்ணிக் கலங்கியிருந்த வேளையில் தன்னைக் காணவந்த மாமன் மாமியிடத்து. பின்னர்க் கணவனோடு மீண்டும் இணைந்த சூழலில் அந்நிகழ்வு குறித்து அவளே அவனிடம் விளக்கவும் செய்கின்றாள். அவள் வாய்மொழியை நாமும் அருகிருந்து கேட்போம். அதற்கு முன்பாக அப்பெண் யாரென்பதை நாம் அறியவேண்டாமா? அவள் வேறு யாருமல்லள்! ”கற்புக் கடம்பூண்ட தெய்வம்” என்று கவுந்தியடிகள் எனும் சமணப் பெண்துறவியால் பாராட்டப்பெற்ற கண்ணகியே அப்பெண்.
பொருள்தேடும் பொருட்டுப் புகாரைவிட்டு மதுரைக்குச் சென்றான் கோவலன் கண்ணகியையும் உடனழைத்துக்கொண்டு. அங்கே அவர்கள் மாதரி எனும் இடைக்குல முதுமகள் தந்த மனையில் தங்கினர். நீண்ட காலத்திற்குப் பிறகு தன் கையால் சமைத்து அருமைக் கணவனுக்கு அமுதுபடைத்தாள் பாவை கண்ணகி. அவளின் அடக்கத்தையும் பண்பையும் கண்டு உள்ளம் உருகிய கோவலன், அவளை அருகழைத்துத் தான்செய்த தவறுகளுக்காக அவளிடம் வருந்தி மன்னிப்புக் கேட்டான். அதுவரை அவனைக் கண்டித்து ஏதும் பேசாத கண்ணகி அப்போது முதன்முறையாக அவனுடைய பிழைகளைச் சுட்டிக்காட்டும் வகையில்,
”ஐய! நீர் சான்றோர் போற்றாத ஒழுக்கத்தைப் புரிந்ததனால் அறவோர்க்கு உணவளித்தல், செந்தண்மை பூண்ட அந்தணரை ஓம்புதல், துறவிகளை எதிர்கொண்டழைத்துப் போற்றுதல், பண்டைக் காலந்தொட்டு இல்லறத்தார்க்குரிய கடமையாகச் சொல்லப்பட்ட விருந்தினரைப் பேணுதல் முதலிய செயல்களையெல்லாம் யான் செய்ய இயலாமல் போய்விட்டது. அப்போது, என்னைக் காணத் தங்களுடைய பெருமைக்குரிய அன்னையும், பெரும் புகழுக்குரிய தந்தையும் வந்தனர்; என்னோடு நீங்களில்லாததால் ஏற்பட்ட வெறுப்பு நீங்கியவளாக இருந்த என்னை அன்புமொழிகளால் அவர்கள் பாராட்ட, என் மனத்துன்பமும் மெய்வருத்தமும் புலப்படும் வகையில் நான் செய்த பொய்ந்நகைக்கு (வாயல் முறுவல்) அவர்கள் வருந்தினர்” என்றாள்.
”அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும்
பெருமகள் தன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள்
மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன்
முந்தை நில்லா முனிவிகந் தனனா
அற்புளம் சிறந்தாங்கு அருண்மொழி அளைஇ
எற்பா ராட்ட யானகத்து ஒளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலுமென்
வாயல் முறுவற்கவர் உள்ளகம் வருந்தப்
போற்றா ஒழுக்கம் புரிந்தீர்…” (சிலப்: கொலைக்களக் காதை – 71-81)
ஈண்டு, அகநானூற்றுத் தலைவி, தலைவனுக்குப் பயணவழியில் நேரிடக்கூடிய துன்பங்களுக்காக முன்கூட்டியே அஞ்சி, அவன் பயணத்தைத் தொடங்க நினைத்து அவளிடம் விடை வேண்டியபோது வாயல் முறுவல் புரிந்தாள்; சிலப்பதிகாரத் தலைவியான கண்ணகியோ, தலைவன் (கோவலன்) தன்னைப் பிரிந்ததால் ஏற்பட்ட மனவருத்தத்தை மாமன் மாமியிடம் மறைத்திடும் பொருட்டு வாயல் முறுவல் புரிந்தாள் என்று அறிகின்றோம்.
பொய்ச்சிரிப்பு, போலிப்புன்னகை எனும் சொற்களைக் காட்டிலும், அதனை எதிர்மறை வாய்பாட்டில் உணர்த்தும், ’வாயல் முறுவல்’ எனும் சொல் நம் தமிழரின் நனிநாகரிகத்தை – நயத்தகு பண்பாட்டைத் தெற்றெனப் புலப்படுத்துகின்றது. இச்சொல்லின் பயன்பாட்டினை நாம் நன்கு புரிந்துகொள்ளும் வகையில் தம் பாட்டில் கையாண்டிருக்கும் பெரும்புலமையோர்க்கு நம் பாராட்டு உரித்தாகட்டும்.
*****
கட்டுரைக்கு உதவியவை:
1.அகநானூறு – நாவலர் திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளை இவர்களால் எழுதப்பட்ட பதவுரை விளக்கவுரையுடன் பாகனேரி வெ பெரி பழ மு காசிவிசுவநாதன் செட்டியாரால் வெளியிடப்பட்டது.
2.சிலப்பதிகார மூலமும் பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார் உரையும்.
வணக்கம்!
‘ஓவச் செய்தி’ என்னும் தொடரால் பெருமை பெற்றிருந்த இந்தப் பாடலில் பயின்று வந்துள்ள மற்றொரு தொடரான வாயல் முறுவல் என்பதைச் சிலம்பின் வரியோடு பொருத்திக் காட்டியது சிறப்பு.
கட்டுரையின் இறுதியில் கூறுகின்றபடி வாயல் முறுவலும் பொய்ச்சிரிப்பும் போலிச் சிரிப்பும் ஒன்றல்ல என்பது கடடுரையாசிரியர்க்குத் தெரியாததன்று.
வாயல் முறுவல் என்பது வாயொடு பொருந்தாதது. அது வஞ்சகமான மறைப்பு அன்று. நம் வருத்தம் கண்டு பிறர் வருந்தக் கூடாதே என்னும் மாண்பு.
ஆனால் பொய்ச்சிரிப்பும் போலிச்சிரிப்பும் இன்றையச் சமுதாயத்திற்கே உரியது. சிரிப்பதற்குக் காரணம் இல்லாத இடத்தும்; சிரிப்பதுபோல் நடிப்பது. சுருங்கச் சொன்னால் சிரிப்பதற்காகவே சிரிப்பது.
முன்னது உண்மை. பெருந்தன்மை. பின்னது வஞ்சகம். ஏமாற்றுவது.
எனவே வாயல் முறுவல் வேறு. பொய்ச்சிரிப்பு வேறு.
கட்டுரையாளர்க்கு வாழ்த்துக்கள்
மாறா அன்புடன்
ச.சுப்பிரமணியன்