சேசாத்திரி ஸ்ரீதரன்

உடலில் உயிர் என்னும் இயக்கம் இருந்தால் தான் இந்த உலகில் ஒருவருடைய பெயர், அறிவு, சொத்து, சொந்தம், அதிகாரம் எல்லாம் அவருக்கு உரியதாக இருக்கும். அந்த விலை மதிக்க முடியாத உயிர் ஒட்டியிருந்த கூட்டை விட்டுப் போனால் உடலோடு எல்லாம் போய்விடும். உலகுடனான அவரது உடம்பியல் தொடர்பு (physical relationship) முற்றாக அற்றுப் போகும். அத்தகு உயிரை சிலர் தாமே தம் விருப்பில் தமது தலைவன் உடல்நலம் தேற வேண்டியும், தலைவனுக்கு போரில் வெற்றி கிட்ட வேண்டியும், மேற்கொள்ளப்பட்ட  ஒரு செயலில் தடை நீங்கி அச்செயல் நல்லமுறையில் நடந்தேறவும் தெய்வத்திடம் நோந்து வேண்டிக் கொண்டு அந்த வேண்டுதல் நிறைவேறுகையில் தம் தலையை வெட்டி தம் நோற்றலை நிறைவேற்றினர். இதற்கு தூங்கு தலை, நவகண்டம் என்று பெயர். தலையை வெட்டும் போது சிலருக்கு உடனே உயிர் போகும் அப்போது தலை உடலோடு ஒட்டித் தொங்கிக் கொண்டிருக்கும் என்பதை வைத்து இப்படி அழைத்திருக்கலாம். இத்தகு தலை அறுப்பு காளி, துர்க்கை கோவில் முன்பாகவே பெரும்பாலும் நடந்தன. இப்படி தலையை அறுத்துக் கொண்டு உயிர் துறப்பவர் செயலை மெச்சி அவரது குடும்பத்திற்கு போரில் இறக்கும் வீரருக்கு ஒப்பாகக் கருதி நெய்த்தோர்பட்டி நிலம் தானமாக வழங்கப்பட்டது. போரில் இறப்பதும் தலைவன் நலம், வெற்றி வேண்டி உயிர் பலி கொடுப்பதும் ஒன்று தான் என்ற கருத்து நிலவியதால் இந்த உயிர் பலி மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம். இப்படி இறந்தோர் பெரும்பாலும் கீழ்நிலைப் படைவீரர் அல்லது எளியோர் என்பதை கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. நெல்லூர் மாவட்டம் கூடூர் வட்டம் மல்லாம் கிராமத்தில் கம்ப வர்மனுடைய 20 ஆம் ஆட்சி ஆண்டில் 883 இல் ஒக்கொண்ட நாகன் ஒக்க திந்தன் என்ற பறை அடிப்பவன் நவகண்டமாக தன் தலையை அறுத்து துர்க்கைக்கு படையலிட்டான். அவன் குடும்பத்தவருக்கு ஊரார் தொறுப்பட்டி கொடுத்தார்கள். 10 ஆம் நூற்றாண்டில் விருதுநகர் துலுக்கர்பட்டி அருகில் உள்ள மன்னார்கோட்டை சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டு தன் தலைவன் தன்மசெட்டி நலம் பெற வேண்டி கோன் என்பவன் நோன்பு நோற்று தன் தலையை அரிந்து கொண்டு உயிர் பலி கொடுத்தான் என்கிறது.

யோக சித்தர்கள் தமது யோக வலிமையால் உடலை ஒன்பது கூராகப் பிய்த்து மரத்தில் தொங்கவிடுவது, அங்கும் இங்கும் சிதற விட்டிருப்பது போன்ற யோகப் பயிற்சியில் ஈடுபட்டு பின் பிய்த்த உடலை தம் யோக வலிமையால் ஒன்று சேர்ப்பர். இது தான் உண்மையான நவ கண்டம். ஆனால் வீரர் நோன்பிருந்து தலை அரிந்து பலியிடல் அதனினும் மாறுபட்டது. ஆயினும் பொருத்தமின்றி அதையும் நவகண்டம் என்றே குறிப்பிட்டனர். பெண்கள் இவ்வாறு தலை அறுத்து வேண்டுதல் நிறைவேற்றியதாக சிற்பமோ அல்லது கல்வெட்டோ இல்லை. இது ஆடவர் மட்டுமே மேற்கொண்ட சடங்காகத் தெரிகிறது. தமிழகத்தில் பல தலைவெட்டுச் சிற்பங்கள் கல்வெட்டு ஏதும் இன்றி சிற்பமாக மட்டுமே உள்ளன. மிகச் சில சிற்பங்களில் மட்டுமே கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கீழே அந்த கல்வெட்டுகள் விளக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் பெண்ணையாற்றின் வடபுறம் அரக்கண்ட நல்லூர் ஒப்பிலாமணி ஈசுவரர் கோயில் நாட்டிய மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ள 12 வரிக் கல்வெட்டு
  1. கோமாற பன்மர் திருபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தர 
  2. பாண்டிய தேவர்க்கு யாண்டு பத்தாவது இந்தத் திருமண்டப
  3. ம் தட்டோடு இட்ட இதுக்கு இவ்வாண்டை திருவைகாசித் திருநாளில் 
  4. இவூர் தேவரடியாரில் பொந்நாண்டை மகன் இளவெண் 
  5. மதிசூடினான் தலைஅரிந்து கொள்ளுகெயில் இவனுக்கு உதிரப்பட்
  6. டியாக எல்லைக் காலில் தென்னகோன் தரங்குழி குரம்பில் 
  7. சண்டேசுர நாயனார்கு கொடுத்தருளின குழி ஐநூறும், இப்பற்றில்
  8.  நாட்டவர் இவூரில் குடிப்பற்றில் குடுத்த குழி ஐநூறும் ஆககுழி ஆயிர
  9. மும் சந்திராதித்தவரை இவன் வழி உள்ளவர் அனுபவித்துக்  
  10. கொள்ளக் கடவார்கள். பன்மாகேசுரலக்சை. 
  11. இதுக்கு இலங்கணம் சொன்னவன்
  12.  தாய்க்குத் தானே மணவாளன். 

தட்டோடு – இடிந்ததால், அழிந்து சேதமாதல்; குரம்பு – வரப்பு, எல்லை, அணை; காலில் – காட்டில், வயலில்; உத்திரப்பட்டி – உயிர் பலிக்கு ஈடாக கொடுக்கும் நிலம்; பன் மாகேசுவரர் – சிவனடியார் கூட்டம்; இலங்கனம் – இடர் 

விளக்கம் : சட வர்ம சுந்தர பாண்டியனின் 10 ஆவது ஆட்சி ஆண்டில் 1260 இல் இந்த ஆடல் திருமண்டபம் கட்டுகையில் ஒரு பகுதி இடிந்து சேதமானது. அதை மீண்டும் உண்டாக்க இந்த ஆண்டு வைகாசி நன்னாளில் இந்த ஊர் தேவரடியாள் பொந்நாண்டையின் மகன் இள வெண்மதிசூடி என்பவன் தடையேதும் இன்றி மண்டபப் பணி முடிவடைய வேண்டிக் கொண்டு தன் தலையை அறுத்து உயிர் பாலி கொடுத்தான். இதற்கு உதிரப்பட்டியாக எல்லைக் காட்டில் தென்னகோன் பண்பட்ட விளைநில வரப்பில் சண்டேசுவர நாயனாருக்கு நன்கொடையாக வந்த ஐநூறு குழி நிலமும் இந்த பற்றில் வாழும் சித்திரமேழி நாட்டவர் இவ்வூரில் குடியிருப்பு நிலத்தில் கொடுத்த ஐநூறு குழி நிலமும் ஆக மொத்தம் ஆயிரம் குழி நிலம் சந்திர சூரியன் நிலைக்கின்ற காலம் வரை இவன் வழிவந்தோர் அனுபவித்துக் கொள்ளட்டும் என்று நிலதானம் வழங்கினர். இதை சிவனடியார்க் கூட்டம் காப்பதாக. இதை இடராக்கி குறை கூறுபவன் தன் தாய்க்கு தானே கணவன் ஆனவன்.

கோவில் தேரடியார்கள் மற்றவர் போலவே மணந்து பிள்ளை பெற்று குடும்பம் கொண்டிருந்தனர் என்பதை இக்கல்வெட்டால் அறிய முடிகிறது. 12 ஆம் நூற்றாண்டு முதல் கல்வெட்டின் இறுதியில் இவ்வாறு கொச்சையாகத்  திட்டும் வழக்கம் பதிவேறியது.    

பார்வை நூல்: கல்வெட்டுக் கலை, பக் 139, பொ இராசேந்திரன் & சொ சாந்தலிங்கம்

வேலூர் மாவட்டம் வாலாசாப்பேட்டை வட்டம் திருமலைச்சேரி பொன்னியம்மன் கோயில் எதிரில் உள்ள 5 வரிக் கல்வெட்டு

  1. தூங்குதலை குடு
  2. த்தாந் வீரசோழ
  3. னை கல் செய்வி
  4. த்தார் நல்லூர் நம்
  5. பி 

தூங்குதலை – தொங்குகின்ற தலை என்ற தலைவெட்டு நேர்த்திக் கடன் 

விளக்கம் : வேந்தன் பெயரோ காலக் குறிப்போ இல்லாத கல்வெட்டு. வீரசோழன் என்ற வீரன் தன் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் தன் தலையை வெட்டி வைத்தான். அவன் நினைவைப் போற்றும் வண்ணம் இக்கல் நட்டுவித்தன் நல்லூர் நம்பி என்ற தலைவன்.

பார்வை நூல்: ஆவணம் 24, 2013, பக். 53

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவாலங்காடு இரயில் நிலையம் அருகில் உள்ள பாகசாலை மூலஸ்தான ஈசுவரர் கோயில் கற்பலகையில் உள்ள 13 வரிக் கல்வெட்டு

  1.  யாண்டு இருபத்தேழாவது க
  2. ந்நர தேவற்கு பாசாலி கிழவ[ந்)
  3. நாகன் சேந்தமானுக் கு
  4. ன்றில்
  5.  _ _ _ வென்று பிடாரிக்கு இவர் பி[ள்]
  6. ளை கையிலாந் மகந் சரதேவன் தலை 
  7. த[ந்]தான். இவனுக்கு அர்ச்சனா போக
  8. மாக மு
  9. ற்குண்டில் ஆட்புளிக் கழுவலின் கீழை குண்
  10. டில் நிலம் அரைக்கால் இவ்வரைக்
  11. கால்
  12.  நிலம்
  13.  இதுவே.    

கிழவன் – ஊர்த்தலைவன்; மகன் – கீழ் நிலைப்  போர் வீரன், soldier; அர்ச்சனா போகம் – கோயில் பூசை செலவிற்கு விடும் நிலம்; கழுவில் – மழைநீர் வடிந்தோடும் நிலம்; குண்டில் – சிறு வயல் 

விளக்கம் : இராட்டிரகூடன் மூன்றாம் கிருஷ்ணனின் 27 ஆம் ஆட்சி ஆண்டில், கி.பி. 966 இல் இன்றைய பாகசாலையான அன்றைய பாசாலியின் ஊர்க் கிழவன் நாகன் சேந்தமான் குன்றில் நடந்த போரில் வென்றதால் தன் வேண்டுதலை நிறைவேற்ற இவரது பிள்ளை கயிலானின் படைஆள் சரதேவன் என்பவன் துர்க்கைக்கு தன் தலையை வெட்டி பலி கொடுத்தான். இவன் சார்பாக அம்மனுக்கு பூசை நடத்தும் செலவிற்கு முற்குண்டில் ஆட்புளி மழைநீர் வடிநிலத்தின் கிழக்கு சிறு வயலில் உள்ள நிலத்தில் அரைக்கால் அளவு ஒதுக்கப்பட்டது. இந்த அரைக்கால் நிலம் இதுவென்று கல்வெட்டு உள்ள நிலத்தை குறிக்கிறது.  

பார்வை நூல்: ஆவணம் 15, 2004, பக். 14

அரியலூர் மாவட்டம் பெரிய திருக்கோணம் மகாமண்டப வடக்குச்சுவர் படிக்கையில் உள்ள 4 வரிக்  கல்வெட்டு

  1. ஸ்வஸ்திஸ்ரீ திருபவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜேந்திர சோழதேவற்கு யாண்டு 18 வது மேஷ நாயற்று அபரபக்ஷத்து துவாதஸியும் புதன் கிழமையும் பெற்ற சதையத்து நாள் விக்கிரம சோழ வளநாட்டு மண்ணை கொண்ட சோழ வளநாட்டு மதுராந்தகபுரத்து நகரத்தோம். எம்மூர் உடையார் ஸ்ரீ 
  2. மதுராந்தக ஈஸ்வரமுடையார்க்கு இறையிலி செய்து குடுத்த பரிசாவது இந்நாயனார் சித்திரைத் திருநாள் திருவெழுச்சியும் உய்யவாடுவர் எழுந்தளிப் புறப்பட்டருளினவாறே இக்கோயிற் தேவரடியாரில் ஆவுடை நாச்சி மகன் பஞ்சணேசுவரன் தலை அரிந்து கொள்கையில் இவனும் இக்கோயில் தானத்தாரும் இ _ _ _ யக் கூனை 
  3. திரு _ _ _ நாயனார் ஸந்தி அமுது செய்தருளவும் என்று இவர்கள் கையில் கொள்கையில் நாம் இசைந்து நம்மூர் மூன்றாங் கட்டளை இராஜராஜ வதிக்கு கிழக்கு சோழகேரளன் வாய்காலுக்கு வடக்கு மூன்றாங் கண்ணாற்று மூன்றாஞ் சதிரத்து தெற்கடைய நிலம் 5 வில் கிழக்கடையவும் 15 மை 
  4. _ _  _ _ _ இந்நாயனார்க்கு முன்னாள் திருநாமத்து இறுப்புக் காணியாக குடுத்த நிலம் வ ப மி இந்நிலம் ஆறுமாக்காணியும் (பஞ்சோபாதியும்) _ _ _ _ த்துக்கு இந்நாள் முதல் ஸந்த்ராதித்தவற் இறையிலி செய்து குடுத்தோம் மதுராந்தகபுரத்து நகரத்தோம். 

பரிசு – ஏற்பாடு; திருவெழுச்சி – திருவிழா; உய்யவாடுவார் ( உய்ய + ஆடுவார்) – காலைத்தூக்கி ஆடும் இறைவன்; வதி – வடிகால்; கண்ணாறு – பாசன வாய்க்கால்; சதிரம் – நான்கு சமபக்கம் கொண்ட நிலம்; இறுப்பு – செலுத்துகை, ஆவண ஓலை;

விளக்கம் : மூன்றாம் இராசேந்திரச் சோழனின் 18 ஆவது ஆட்சி ஆண்டு கி.பி. 1264 இல் மேழ ராசியான தேய்பிறை 12 ஆம் நாள் புதன் கிழமை அன்று சதய நட்சத்திரம் கூடிய நாளில் விக்கிரம சோழ வளநாட்டு மண்ணைக் கொண்ட சோழ வளநாட்டு மதுராந்தகபுரத்து நகரத்தவர் சொல்வது. “எமது ஊர் ஈசர் மதுராந்தக ஈசுவரருக்கு இறையிலி நன்கொடை ஏற்பாடு செய்து கொடுத்தது யாதெனில் இந்த இறைவர் சித்திரைத் திருநாள் திருவிழாவில் உய்ய ஆடுவார் எழுந்தருளி உலா புறப்பட்டபடி இருக்கையில் இக்கோவிலின் தேவரடியார் ஆவுடை நாச்சியின் மகன் பஞ்சணேசுவரன்தன் தலை வெட்டி பலி கொடுத்ததனால் இவனும்  இக்கோவில் பொறுப்பாளரும் இறையிலியாகத் திருமதுராந்தக ஈசுவரர் சந்தி அமுது செய்தருள்வதற்காக இவர்கள் கையில் வாங்கிக்கொள்ளும் போது நகரத்தவர் நாம் விரும்பி நம்மூரில் மூன்றாம் கட்டளையில் அமைந்த இராஜராஜ வடிகாலுக்கு கிழக்கே சோழகேரளன் வாய்க்காலுக்கு வடக்கில் மூன்றாம் பாசன வாய்க்காலுக்கு மூன்றாம் சதிரத்தில் இருந்து தெற்கே செல்ல நிலம் 5க்கு கிழக்கை அடைந்ததும் 15 _ _ _  இந்த இறைவற்கு முன்னாளிலே ஆவண ஓலைக் காணியாக கொடுத்த நிலம் _ _ இந்த நிலம் ஆறு மாக்காணியும் _ _ _ இந்நாள் முதலாக சந்திராதித்த காலம் வரை இறையிலியாக செய்து கொடுத்தோம் இந்த மதுராந்தகபுரத்து நகரத்தார். கல்வெட்டு ஆங்காங்கே சிதைந்துள்ளதால் நிலம் குறித்து தெளிவாகச் செய்தியை அறிய முடியவில்லை.

பார்வை நூல்: அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், தொகுதி I, பக் 242 ஆசிரியர்: இல. தியாகராஜன்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் வட்டம்  மல்லல் சிதைந்த நவகண்ட கல்வெட்டு

  1.  ஸ்வஸ்தி ஸ்ரீ கொலோத்து 
  2. ங்க சோழ தேவர்க்கு யா 
  3. ண்டு 11 ஆவது வடிந் 
  4. _ உதாரனான கொலோத் 
  5. துங்க சோழ மூவரைய 
  6. னுக்கு வியாதி தொற்ற 
  7. _ தூங்குதலை நோத்த  
  8. _ தூங்குதலை குடுத் _ 
  9. _ அம்பலக் கூத்த _ 
  10. _ சாத்தி குடுத்த ந
  11. _ _ _ து குழிச் செய்ய _ _ _     

சாத்தி – நினைந்து; நோத்த – நோன்பு மேற்கொண்ட

விளக்கம் : முதல் குலோத்துங்க சோழனின் 11 ஆம் ஆட்சி ஆண்டு 1081 இல் தரும சிந்தனை உள்ள குலோத்துங்க சோழ மூவரையன் என்ற தலைவன் நோயில் வீழ்ந்தான். அவன் குணமானால் தன் தலையை வெட்டி உயிர் பலி தருவதாக வேண்டிக் கொண்டான் அவனது ஏவலன் அம்பலக் கூத்தன். அவ்வண்ணமே நோய் தீர்ந்ததால் தன் தலையை வெட்டிக் கொடுத்த அவனது நினைவைப் போற்றி அவன் குடும்பத்தவருக்கு நத்தப்பட்டி நிலம் தரப்பட்டது. எவ்வளவு குழி என்று அறிய முடியாத படி கல்வெட்டு சிதைத்து விட்டது.

பார்வை நூல்: திரு சரவண மணியன் வலைப் பதிவு

வேலூர் மாவட்டம் வாலாசாப்பேட்டை வட்டம் சோளிங்கர் அருகே உள்ள மோட்டூர் கிராமம் திருவாத்தம்மன் கோவிலுக்கு எதிரே நட்டுள்ள பலகைக் கல்லில் உள்ள 5 வரிக் கல்வெட்டு

  1. தொண்டைமான் 
  2. மகன் கங்கவிக்
  3. கரன் _ _ _  க்காவளோ
  4. ன் தலை யரிந்தா
  5. ன் 

மகன் – கீழ்நிலைப் படை வீரன் 

விளக்கம் : 12-13 நூற்றாண்டு கல்வெட்டு. ஆசனமிட்டு அமர்ந்து தலையில் கொண்டையுடன் உள்ள வீரன் தன் கழுத்திற்கு நேரே இரு கைகளால் கத்தியை பிடித்து கத்தியால் கழுத்தை அழுத்துவது போல சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தொண்டைமானிடம் கீழ்நிலைப் போர் வீரனாக இருந்த கங்கவிக்கரன்  என்னும் காவலோன் தலையை அறுத்துக் கொண்டான் என்று உள்ளது. இவன் தொண்டைமானுக்காக உயிர் பலி கொடுத்துள்ளான் என்று தெரிகிறது.

பார்வை நூல்: ஆவணம் 24, 2013, பக். 57

வேலூர் மாவட்டம் வாலாசாப்பேட்டை வட்டம் சோளிங்கர் அருகே உள்ள மோட்டூர் கிராமம் திருவாத்தம்மன் கோவிலுக்கு எதிரே நட்டுள்ள பலகைக் கல்லில் உள்ள 2 வரிக் கல்வெட்டு

  1. பரி விருதுக்காற 
  2. ன் கணவதி 

பரி – குதிரை, பற்று; விருது – நோன்பு, வீரன்; 

விளக்கம் : மேலுள்ள சிற்பத்திற்கு அருகே உள்ள இன்னொரு தலைவெட்டு கல்வெட்டுச் சிற்பம். பற்றினால் நோன்பு நோற்றவன் அல்லது குதிரை வீரன் கணபதி என்பவன் இரு கைகளால் கத்தியை பிடித்து கழுத்தில் கத்தியை வைத்து தலையை அறுத்துக் கொள்வது போல சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த வீரன் விரும்பி நோன்பு நோற்று தலை அரிந்து கொண்டுள்ளான். யார் பொருட்டு என்ற குறிப்பு இல்லை.  

பார்வை நூல்: ஆவணம் 24, 2013, பக். 58

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் வட்டம் மடப்புரம் கிராமம் அடைக்கலம் காத்த ஐயனார் கோவில் காளியம்மன் கோவில். இதில் ஐயனார் கோவில் வாயில் இருபுறமும் கல்வெட்டு காணப்படுகின்றன.

வலப்புறம் இரண்டு வரிக் கல்வெட்டு

  1. தூங்குதலை  குடுத்தான் 
  2. சித்திர சரிதன் 

விளக்கம் : 10 ஆம் நூற்றாண்டு தமிழ் எழுத்து கல்வெட்டு. வீரன் ஒருவன் இடது காலை மண்டியிட்டு வலது முழங் காலைத் தரையில் வைத்து இடக் கையால் தன் குடுமியை பிடித்து வலக் கையில் பிடித்துள்ள கத்தியால் தன் தலையை கொய்வதாக சிற்பம் உள்ளது. இதில் சித்திர சரிதன் தன் தலையை அரிந்து தன்னை பலி கொடுத்தான். காரணம் எதற்கு என்ற குறிப்பு இல்லை.

இடப்புறம் இரு வரிக் கல்வெட்டு
  1. தூங்கு தலை குடுத்தான் _ _ _ 
  2. வல்லபன் 
விளக்கம் : 8 ஆம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு. வீரன் ஒருவன் வலது காலை மண்டியிட்டு இடது முழங் காலை தரையில் வைத்து இடக் கையால் தன் குடுமியை பிடித்து வலக் கையில் பிடித்துள்ள கத்தியால் தன் தலையை கொய்வதாக சிற்பம் வடிக்கப் பட்டுள்ளது. வல்லபன் என்பவன் தன் தலையை தானே கொய்து தன்னை பலி கொடுத்துள்ளான். எதற்காக தலை அரிந்தான் என்று குறிப்பிடவில்லை.
பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 21, 1984, பக். 1 – 3, த நா தொ து வெளியீடு

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.