தீர்ப்பு, ஆணைக் கல்வெட்டுகள்

0

சேசாத்திரி ஸ்ரீதரன்

சட்டம் இன்று போல அன்றும் வலியோர் பக்கமே சாய்வதாக இருந்துள்ளது. வேந்தர், மன்னர் நேரடியாக தலையிட்டால் மட்டுமே தீர்ப்பு நேரியதாக இருந்தது. அக்காலத்தே நாடு முழுமைக்கும் ஒரே சட்டம் (codified) என்று எங்குமே இருந்ததில்லை. மேல் சாதி, படைச் சாதி என்றால் தண்டனையில் விலக்குகள் இருந்தன. ஆட் கொலைக்கு ஏதேனும் ஒரு கோவிலில் சந்தி விளக்கு அல்லது நந்தா விளக்கு ஏற்றினால் போதும் என்பதே தண்டனையாக இருந்தது. ஆண் கொல்லப்பட்டால் செல்வர் ஏற்றும் நுந்தா விளக்கு அதுவே பெண் கொல்லப்பட்டால் எளியோர் ஏற்றும் சந்தி விளக்கு என்று ஆண் கொலையை விட பெண் கொலைக்கு குறைந்த தண்டனையாக இருந்தது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் வாணகோப்பாடி நாட்டில் கீழ்க் கொன்றை நாட்டு பள்ளிச்சேரி முடியனூரில் வாழும் அடியநம்பி கோவலராயன் என்ற படைத் தலைவன் (பேரையன்) எய்த அம்பு குறி தவறி தன்னோடு உடன் வந்த வெள்ளாளன் குன்றன் சீருடையானைத் தைத்துக் கொல்ல அதற்கு நீதி வேண்டி பார்க்கவ கோத்திர மலையமார் போலவே தாமும் தமிழகத்தின் 79 நாட்டினரைச் சங்கமாகக் கொண்ட சித்திரமேழி பெரியநாடு என்ற சாதி அமைப்பு கோவலராயனைப் பழி சுமத்தி வற்புறுத்தியதன் காரணமாக கொலைக்குத்  தண்டனையாக இரண்டு நுந்தா விளக்கு எரிக்க 64 பசுக்களை கோவிலுக்கு விட்டான் கோவலராயன்.

ஒரு ஊரில் உள்ளோர் தமக்கு இவ்வாறான சட்டம் வேண்டும் என்று கோரி அதை அணையாக கிழாரிடம்  இருந்தோ அல்லது  அரையரிடம் இருந்தோ ஒப்புதல் பெற்று வந்தனர். அந்த சட்டம் அந்த ஊர் அளவே செல்லுபடியாக இருந்தது. அது பிற இடங்களுக்கு பொருந்தாது. அக்காலத்தே தலை கொய்யும் தண்டனை, கசையடி தண்டனை, தண்டத் தொகை கட்டும் தண்டனை பற்றிய பதிவுகள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. பிராமண ஊர்ச் சபைகள் ஆணை பிறப்பிக்கும் அளவிற்கு தனி அதிகாரம் பெற்றிருந்தன என்பதற்கு குடவோலைக் கல்வெட்டுகள் சான்றாக உள்ளன. அவற்றுள் சில கீழே விளக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பெண்ணேஸ்வரம் மடம் ஈசுவரன் கோவில் தெற்கு திருச்சுற்று பீடத்தில் உள்ள 8 வரிக் கல்வெட்டு

  1. ஸ்ரீ மத் _ _ ஸ்வக்ர  _ _ த்தி போ[சள] ஸ்ரீ  வீரராமநாத தேவரீஸர்க்கு யாண்டு நாற்பத்தொன்றாவது உடையார்  பெண்ணையாண்டார் மட
  2. த்திலும் பெண்ணை நாயனார் தேவதானமான [ஊ]ர்களிலும் ஒரு அதிகாரியாதல், கணக்கர் காரியஞ் செய்வார்களாதல், கூசராதல் ஆரேனு
  3. மொருவர் வந்துவிட்டது விடாம[ல்] சோறு வேண்டுதல் மற்றேதேனுமொரு நலிவுகள் செய்குதல் செய்யாதாருண்டாகில் தாங்களே அவர்களைத் தலை
  4. யை அறுத்துவிடவும். அப்படி செய்திலர்களாதல் தங்கள் தலைகளோடே போகுமென்னும்படி றேயப்புத்த பண்ணி, இதுவே சாதன
  5. மாகக் [கொ]ண்டு ஆங்கு வந்து நலிந்தவர்களைத் தாங்களே ஆஞை பண்ணிக்கொள்ளவும். சீ காரியமாகத் 
  6. தாங்க _ _ த _ _ போதும் போன அமுதுபடிக் குடலாக ஸர்வ மாணியமாகக் குடுத்தோம் அனைத்தாயமும் வி 
  7. ட்டுக் கு _ _. கூசர் உள்ளிட்டார் பையூரிலே இருக்கவும் சொன்னோம். இப்படி_ _ தே இதுக்கு வில
  8. ங்கனம் பன்னினவன் கெங்கைக் கரையில் குராற் பசுவைக் கொன்றான் பாவத்தைக் கொள்வான்     

கூசர் – இராக் காவல் கூக்குரல் இடுவோர்; நலிவு – குற்றம், தீமை, இழிவு; றேயப் புத்தம் – கடும் எச்சரிக்கை; விலங்கனம் – சிக்கல், இடக்கு; ஆஞை – ஆணை

விளக்கம் : போசள வீரராமனாதனின் 41 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 1295 ஆம் ஆண்டு கல்வெட்டு. பெண்ணேசுவரம் மடம் ஈசுவரன் கோவிலிலும் அதன் தேவதான ஊர்களிலும் அதிகாரியாகவோ கணக்கராகவோ இராக்காவல் கூவுநராகவோ இருப்பவர் யாரகிலும் சரி ஊரில் எவரேனும் ஒருவர் வந்து தொடர்ந்து விடாமல் சோறு போடக் கேட்டாலோ அல்லது ஏதேனும் கேடு செய்தாலோ அப்படி கேடு செய்தவரை நீங்களே தலையை அறுத்துக் கொன்று விடுங்கள். அப்படி நீங்கள் செய்யாதவராய் இருந்தால் உமது தலையும் சேர்த்தே கொய்யப்படும் என்று கடுமையாக எச்சரிதோம். இந்த சட்ட ஆவணத்தையே கையேடாகக் கொண்டு அங்கு வந்த கேடர்களை ஆணையிட்டு கொல்க. கோவில் செயற்பாட்டிற்காக போனக அமுதுபடிக்கு மூலமாக இருக்க முழு மானியமாக எல்லா வரிகளையும் விட்டுக் கொடுத்தோம். இராக்காவல் கூச்சலிடுவோர் உட்பட அரச பணியாளர்கள் யாவரும் பையூரிலேயே இருக்க வேண்டும். அதன் எல்லை தாண்டி உள்ளே வர வேண்டாம். இப்படி செய்யாமல் இதற்கு இழிவு உண்டாக்குபவர் கங்கைக் கரையில் குறால் பசுவை கொன்றவன் அடையும் பாவத்தை அடைவார்.

இது வீர இராமநாதன் அரச பணியாளருக்கு நேரடியாக வழங்கிய ஆணையாகத் தெரிகிறது. பையூரிலேயே தங்க வேண்டும் என்றால் ஊரில் தல யாத்திரை வருவோரை எப்படிக் கண்காணிக்க முடியும்? இவருள் எவரேனும் சோறு வேண்டினாலோ, திருடு, கொலை, கற்பழிப்பு செயலில் ஈடுபட்டாலோ எப்படிப் பிடிக்க முடியும்? இதனால் வேந்தன் இராமநாதனுக்கு அரச பணியாளர் நடத்தையில் ஐயம் இருப்பது போலல்லவா இந்த ஆணை உள்ளது. எனினும் இது ஊரார் வேண்டுதலால் இப்படி ஒரு ஆணை வெளியிடப்பட்டிருக்கலாம்.

பார்வை நூல்: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள்  பக். 101 & 102 ஆசிரியர்: தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு

ஈரோடு மாவட்டம் ஈரோடு வட்டம் சாத்தம்பூர் வல்லாள ஈசுவரன் கோயில் அம்மன் சன்னதி நிலைக் கல்லில் பொறிக்கப்பட்ட 13 வரிக் கல்வெட்டு

  1. ஸ்வஸ்தி ஸ்ரீ நன்மங்கலஞ் சிறக்க ஸ்ரீ 
  2. குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 
  3. 9 வது பூந்துறை நாட்டோம். சாத்தனூர்க் 
  4. கெங்களில் அமைவு குடுத்த பரிசாவது 
  5. “எங்களஞ் சாத்தனூரோ டொத்த வூராவ
  6. தாகவும் எங்களொ பாதி சாரிகையும் 
  7. மற்றும் பெறுநவ பெறுவராகவும் 
  8. இவர்களை அழிபிழை அநியாயஞ் செய்தாரை 
  9. வெட்டுதல் குத்துதல் செய்தால் அவனுக்குத் 
  10. தண்டந் தலைவிலை யில்லையாக”. இப்படிக் கமைந் 
  11. திக் கல் வெட்டிக் கொடுத்தோம் நாட்டோஞ்.
  12. சாத்தனூர்க்குளே யழிவு செய்தவன் தன் 
  13. வழியே ழெச்சம்  அறுவான்.        

அமைவு – இருப்பிடம்; பரிசாவது – சலுகை, உரிமை; பாதிசாரிகை – பாதி வரிசை; அழிபிழை – குலைத்து கேடு செய்தல்; எச்சம் – தலைமுறை, பிள்ளை.

விளக்கம் : ஸ்வஸ்த்தி ஸ்ரீ என்பதன் தமிழ் இணையான நன்மங்கலம் சிறக்க என்பதையும் இங்கே குறித்து கல்வெட்டு தொடங்குகிறது. ஏன் இப்படி இரட்டை குறிப்பு தமிழருக்கு? இது அன்று தொட்டு இன்று வரை தொடரும் பிழையாக தமிழரிடம் உள்ளது. முதற் குலோத்துங்க சோழனின் 9 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1079) பூந்துறை நாட்டவரான எங்களுக்கு சாத்தனூரில் இருக்க அனுமதி கொடுத்ததால் அதற்கு பகரமாக நாங்கள் கொடுத்த சலுகை, உரிமை யாதெனில், எங்களுக்கு சாத்தனூர் எமது ஊரோடு ஒத்த ஊர் போல  ஆவதால் எங்களோடு பாதிவரிசையும் அதோடு வேறு என்ன நாங்கள் பெற்றாலும் அதை சாத்தனூராரும்  பெறுவதாகவும், இவருக்குள்ளேயே இவர்களுக்கு குலைவு கேடு, அநியாயம் செய்தாரை வெட்டியும் குத்தியும் கொன்றால் அவருக்கு தலை கொய்யும் தண்டனையை நாம் தரமாட்டோம். இப்படியாக அமைதி உடன்பாட்டுக் கல் வெட்டுவித்தோம் பூந்துறை நாட்டோம். சாத்தனூருள் அழிவை ஏற்படுத்தியவன் தனக்கு பின் ஏழு தலைமுறை இல்லாது ஒழிவானாக.

பூந்துறை நாட்டவர் சாத்தனூராரிடம் புகலிடம் கேட்ட போது தம் ஊர் மக்கள் யாரையும் பூந்துறையார் கொல்லக் கூடாது என்று முன் நிபந்தனை வைத்திருக்கலாம் அதனால் இந்த அமைதி உடன்பாட்டை சாத்தனூராருக்கு பூந்துறைக் குடியேறிகள் தந்துள்ளனர் எனத் தெரிகிறது.

பார்வை நூல்: தேனோலை 1976 பக். 15 ஆசிரியர்: கொடுமுடி சண்முகம்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாசாபாத்து வட்டம் தென்னேரி சிவன்கோயில் கருவறை தென் சுவர் 7 வரிக் கல்வெட்டு

  1. ஸ்வஸ்தி ஸ்ரீ சாலைகலமறுத்த கோவிராஜராஜ கேஸரி பந்மற்க்கி  யாண்டு 11 ஆவது நாள் 220
  2. ஊற்றுக் காட்டுக் கோட்டத்து ஸ்ரீ உத்தம சோழ சதுர் வேதி மங்கலத்து பெருங்குறி ஸபையோம் 
  3. செய்த விவஸ்தையாவது நம்மூரில் ப்ரமஸ்வங் கொண்டாரும் மேல்படு 
  4. குற்றமுடையாரும் நம்மூர் வாரியஞ் செய்யவும் ஸபா மாற்றஞ் சொல்லவும் 
  5. பெறாதாராகவும் இக்குற்றங்களுடையார் வாரியஞ் செய்தாரும் ஸபா மாற்றஞ் சொன்னாரும் 
  6. கணக்கர் இருபாடு காட்டினாரும் திருவாணை மறுத்தார்படும் தண்டப்படுவாராக இப்பரிசு வ்யவஸ்தை 
  7. செய்தோம் பெருங்குறி ஸபையோம். பணியால் திருவிதண்ணகர் ஆசாரியன் என் எழுத்து.       

பெருங்குறி – பிராமண ஊர் சபை கூட்ட உறுபினர்கள்; விவஸ்தை – ஏற்பாடு; ஸ்வங் – கேலி, ஏளனம், போலி; இருபாடு – இருவேறு வகை; பரிசு – வகை, விவரம் திருவாணை – அரசாணை

விளக்கம் : இராசராசனின் 11 ஆவது ஆட்சி ஆண்டில் கி.பி 996, 220 ஆம் நாளில் ஊற்றுக்காட்டின் உத்தம சோழ சதுர்வேதி மங்கலத்தின் பிராமண ஊர் சபைக் கூட்ட உறுப்பினர் செய்த ஏற்பாடு என்னவெனில் “நம்மூரில் பிராமண கேலி புரிவாரும் அதிகுற்றம் புரிந்தவரும் இனி நம்மூர் வாரிய உறுப்பினராக இருந்து செயல் மேற்கொள்ள முடியாது, சபைக்கு மாற்று கருத்து (ஆலோசனை) சொல்லவும் முடியாது. இக் குற்றங்களுடன் வாரியப் பணி செய்தவரும் சபைக்கு மாற்று கருத்து சொன்னவரும் கணக்கு புத்தகத்தில் இருவேறாக பொய்க் கணக்கு எழுதியவர்களும் இனி அரசாணையை மீறியவர் படும் தண்டனையை அனுபவிக்க நேரிடும் வகையில் ஏற்பாடு செய்தோம் பிராமண ஊர் சபை உறுப்பினர்களோம். பணிக் கடமையால் இதை கல்லில் எழுதினேன் திருவிதண்  நகர் ஆசாரி.

இதன் மூலம் பிராமணருள் குற்றம் புரிவோர் உண்டு என்று தெரிகிறது. அதை தக்க முறையில் தடுக்க ஊர் சபையோர் மேற்கொண்ட நடவடிக்கை வரவேற்க தக்கது. குற்றவாளி பிராமணரே ஆனாலும் பிராமணரே அந்த குற்றத்தை தட்டிக் கேட்டு கல்வெட்டி தடை  செய்துள்ளனர்.

பார்வை நூல்: ஆவணம் 25, 2014 பக். 31

தஞ்சாவூர் மாவட்டம் மாயவரம் வட்டம் கீழையூர் வேதபுரீஸ்வரர் கோயில் கருவறை தெற்கு சுவர் 3 வரிக் கல்வெட்டு

  1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் மதுரையும் யீழமும் பாண்டியனை முடித்தலையும் கொண்டருளின ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 20 தாவது வரை திருநாமத்துக் காணியாகக் கொண்ட கொல்லை நிலங்களுக்கும் விளை நிலங்களுக்கும்  தானம் பெற்ற நிலங்களுக்கும்  ப்ரமாணப்படிக்கு கல்வெட்டு [1] இத்தேவற்கு ஏழாவது இஷப நாயற்று  பூர்வபக்ஷத்து சப்த திதியும் செவ்வாய்க் கிழமையும் பெற்ற ஆயில்லிய நாள் வீர ராஜேசந்திர வளநாட்டுத் திருவழந்தூர் நாட்டு ப்ரஹ்ம தேசம் திருவழந்தூர் சபைக்கு சமைஞ்ச ஊர் வாரியம் மண்டையந் பொந்மலை ஆயனும் யவறுன் சற்வதேவன் திருவரங்கமுடையானும் இவ்விருவோம் சபை விலைப் பிரமாணம் ப்ரஸாதஞ் செய்தருளின திருமுகப்படி இவ்வூர் ஏழாவது தரமிடுகிற இடத்து, இவ்வூரில் திம்பாக இருப்பன திரண்டு எற்றச் சுருக்கம் பண்ணி கடமையும் இறாதே இராக் களவிலே வீடுகள் சுட்டும் மஹாயேச்வர வதிஷ்ணமாகச் சில வார்த்தைகளும் சொல்லி இவூர்த் திருக்கதவுடை ஆழ்வார் திருநாள் எழுந்தருளுகிற இடத்து முன்பிலாண்டுகள் செய்து வாராதிருக்கச்சிலே பச்சைக் குருதையாகச்  செய்து திருமங்கை ஆழ்வாரை ஏற்றியும் திருவாய்மொழி  பாடுவாரிலே ஒருவன் மேழியாகச் செய்து கழுத்திலே இட்டு வொள்ளானரைத் திரட்டி மணக்கேடுகளாய் யிருப்பன செய்தார்கள்ளென்றும் மாணக்கயன் நமக்குச் சொன்னவாறே இவ்வூர் கோயில் னுதாரங்களிலும் இப்படி செய்தாரை இருபதிநாயிரம் காசு தென்டமாகக் கொள்ளவும்.  இக்காசு ஒடுக்காதார் ருண்டாகில் இவர்கள் காணியை அசல்பிளந்து சபை விலையாக விற்றுக் காசு ஒடுக்கவும் இப்படி செய்யுமிடத்து நம் செய்தார் உண்டாகில் ப்ராஹ்மணரைச் சுடும்படி _ _ 
  2. கடவதாகவும் இது  சுட்டித் தண்டாளருக்கு பிழையாக கடவுதல்லாதுதாகவும் சொன்னோ. மிவ்வூர்ப் ப்ராஹ்மணரிலும் வெள்ளாளரிலும் கோயில் அனுதாரங்களிலும் மனைக் கேடுகளாகச் செய்தாரைத் தெண்டமாகக் கொள்ளச் சொன்னாக் காசு இருபதினாயிரம் விசையபாலன் நிச்சயித்தபடியே தண்டிவரக் காட்டி வாணாதராயன் அடைப்பான் தண்டலிலே ஒடுக்கப் பண்ணுவதென்று ப்ரஸாதம் செய்தருளின திருமுகம் வந்தமையில் இவ்வூர் கவுணியன் ஸ்ரீ கபாடன் ஸ்ரீ கிருஷ்ணனுடன் பெரியாண்டானும் கலக்கம் பண்ணியும் இராக் களவில் ப்ராஹ்மணந் அரிநாராயணன் அகம் வெந்த யிதுக்குப் பாடிகாப்பரும் சபையாரும் அகத்த பேரில் உள்ளூர் பட்ட பேராகையாலும் இவர்களை உடையார்  விசையபாலரும் சபையாரும் தெண்டமாகக் கொள்ள நிச்சையித்த கவுணியன் ஸ்ரீ கபாடன் ஸ்ரீ கிருஷ்ணனைக் கொள்ள நிச்சையித்த காசு அறுநூறும் ஸ்ரீ கபாடன் பெரியாண்டானைக்  கொள்ள நிச்சையித்த காசு நானூறும் ஆக காசு ஆயிரத்துக்கு வாரம் பின்வாசி, தரவு கூலி, திருமுகச் சம்படம், சிதார்ப்படி, எற்றிக்காசு ஆயிரத்து அறுபதும் இவர்கள் முன்நிந்று  ஒடுக்காமையாலும் இன் நிலத்துக்கு அசலானவர்களை தாங்களும் குறைவராயிருக்கையாலும் மாற்றுக் கொள்வாரிலாமையில் ப்ரஸாதஞ் செய்தருளின திருமுகப்படி காசு ஒடுக்க வேண்டுவதாய் உடையார் திருமடமுடையார் கோயில் ஆதி சண்டேசுரப் பொருளாக இக்கோயில் மாயேசுரக் கண்காணி செய்வார்களுக்கும் சிரிகாரியம் செய்வார்களுக்கும் தேவகன்மி கோயிற் கணக்கனுக்கும் தேவர் குடிமை நாமத்தால் _ _ _ யால் வந்த கடமையும் இறுத்து குடிமையுஞ் செய்யக் கடவதாக விற்று திரிபுவன தேவிவதிக்கு மேற்கு இராஜேந்திர சோழ வாக்காலுக்கு தெற்கு மூன்றாங் கண்ணுற்று மூன்றாஞ் சதிரத்தும் நாலாஞ் சதிரத்தும் ஸபை விலையாக விற்கிற புந்சைத் தோட்டத்துக்கு கீழ்ப்பாற்கெல்லை யழுந்தூர் வாய்க்காலுக்கு மேற்கும் இவ்வாற் _ _ _ க் கதவன் அழகிய மணவாள குளமும் கரைக்குங் _ _ _ 
  3. னும் ஸ்ரீ கபாடன் பெரியாண்டானும் உள்ளிட்டார் விளை நிலத்துக்கு தெற்குமாக இசைந்த பெருநான்கெல்லை உள்நடுவுபட்ட புன்செய்குழி  950 த்துச் சின்நம் இக்குழி தொளாயிரத்து ஐய்ம்பத்துச் சின்னமும் ஸபை விலையாக விலை மதித்த காசு 1060 இக்காசு ஆயிரத்து அறுபது ஆவணக்களிலேயே காட்டெற்றிக் கைச்செலவறக் கொண்டு விற்று ஸபை விலை ப்ரமாணம் பண்ணிக் குடுத்தோம்             

திருநாமத்துக்காணி – இறைவன் பெயரில் கொடையாக தந்த நிலம்;  ப்ரமாணப்படி – ஆவணப்படி; பிரசாதம் –  அரசன் அறிவுறுத்தல்; திருமுகப்படி – அரசானை ஓலைப்படி; திம்பாக – திமிராக; எற்ற சுருக்கம் – உதைத்து சிறுமைப்படுத்தி; களவு – கலகம், புறம்பான செயல், unlawful act; ஒள்ளான் – மறைந்து இருப்பவன்; மாணக்கயன் – மாணவர் தலைவன்; நுதாரம் – நீராடும் துறை; அசல்பிளந்து – விற்றுமாற்றி, transfer; நம் செய் – பூசை செய்; சுடு – துன்புறுத்து, அழி; தண்டாளர் – தண்டிப்போர்; அனுதாரம் – பொறுப்பு; அடைப்பான் தண்டல் – கட்டணச் சாவடி, கருவூலம், pay counter; தரம் – மேல்மதிப்பு; சிதார்படி – சீலைக்காசு; தரவு கூலி – அளப்போன் கூலி; ஏற்றிக்காசு – அடித்தல் காசு; குடிமை – உழுகுடி வரி; வதி – வடிகால்; சின்னம் – துண்டு நிலம், piece of land;

விளக்கம் : மூன்றாம் குலோத்துங்கனின் 20 ஆம் ஆட்சி ஆண்டில் 1198 இல் 20 ஆம் ஆண்டு வரை இறைவன் பெயரில் இருந்த கொல்லை நிலங்கள், விளை நிலங்கள், தான நிலங்கள் ஆவணப்படி இருந்த நிலங்கள் குலோத்துங்கனுக்கு 20 ஆம் ஆண்டு ஏழாம் நாள் இடப ராசி பூர்வ பட்சத்து 7 ஆம் நாள் செவ்வாய்க் கிழமை ஆயில்ய நட்சத்திரம் கூடிய நாளில் வீர ராசேந்திர வளநாட்டுத் திருவழந்தூர் நாட்டின் பிரம்மதேசமான திருவழந்தூர் சபைக்கு அமைந்த ஊர் வாரியத்தார் மண்டையன் பொன்மலை ஆயன், யவறுன் சர்வதேவன் திருவரங்கமுடையான் ஆகிய நாம் இருவரும் ஊர் சபை விலை ஆவணமாக அறிவுறுத்திய ஆணைப்படி இவ்வூரில் ஏழாவது தரத்தில் (நிலப் பிரிவில்) இருக்கின்ற இடத்தில் இவ்வூரில் திமிராக இருக்கின்ற அணி சேர்ந்து கொண்டு உதைத்து சிறுமைப்படுத்தி வரியும் செலுத்தாமல், இரவுக் கலவரத்தில் வீடுகளை எரித்து, மகேஸ்வரரை நிந்திக்கும் வகையில் சில சொற்களை பேசி, இவ்வூரின் திருக்கதவுடை ஆழ்வார் எழுத்தருளுகிற இடத்தில் முன்னை ஆண்டுகள் செய்து வாராதிருக்கையில் இப்போது பச்சைக் குதிரையாக செய்து திருமங்கை ஆழ்வாரை அதில் ஏற்றியும்; திருவாய்மொழி பாடுவோரில் ஒருவன் கலப்பை செய்து தோளில் வைத்து வரும் வேளையில் மறைந்து இருப்பவரை ஒன்று திரட்டி மனக்கேடுகள் செய்தனர் என்று மாணக்கர் தலைவன் நம்மிடம் சொன்னபடியே இவ்வூரின் கோயில் நீராடு துறைகளிலும் இவ்வாறே செய்தவரிடம் இருபதினாயிரம் காசு தண்டத் தொகையாகக் கொள்க. இந்த தண்டத்  தொகையை கட்டாதவர் இருப்பின் இவர்களது விளை நிலத்தை அண்டையாரிடம் விற்று சபை தீர்மானித்த விலையை கட்டுக. இவ்வாறு செய்கின்ற போது அவருள் பூசை செய்யும் பிராமணர் இருந்தால் அந்த பிராமணரை துன்புறுத்தம் மட்டும் செய்யட்டும் அவர் நிலத்தை விற்க வேண்டாம். இதை கருத்தாக குறிப்பிட்டு தண்டாளர் (punisher) இதில் பிழை ஏதும் செய்யாதிருக்க சொன்னோம். இவ்வூர் பிராமணரில் வெள்ளாளரில் கோயில் பொறுப்புள்ளோரின் வீடுகளுக்கு தீ வைத்து கேடு உண்டாக்கினவரையும் தண்டம் கட்டக் சொன்ன காசு இருபதினாயிரத்தை அரசர் விசைய பாலன் தீர்மானித்தபடியே தண்டத் தொகையை திரட்டி வாணாதராயனின் கட்டணக் கருவூலத்தில் கட்டிவிடுவதென்று ஊர்சபை அறிவுறுத்திய ஆணை வந்தபோது இவ்வூர் கவுண்டின்ய கோத்திரத்தான்  ஸ்ரீ கபாடன் ஸ்ரீ கிருஷ்ணனுடன் வெள்ளாளன் பெரியாண்டானும் சேர்ந்து கொண்டு கலவரத்தில் ஈடுபட்டு இரவுக் கலவரத்தில் பிராமணர் அரிநாராயணனின் வீட்டை  தீயில் கொளுத்திய வினைக்கு பாடிகாப்பாளரும் சபையோரும் பொறுப்பு கூற வேண்டிய நிலையில் உள்ளூர் தொடர்பானது என்பதாலும் இவர்களிடம் அரசர் விசையபாலரும் சபையோரும் தண்டத் தொகையாக பெறத் தீர்மானித்த  காசு கவுணியன் ஸ்ரீ கபாடன் ஸ்ரீ கிருஷ்ணனிடம் பெறத் தீர்மானித்த காசு அறுநூறும், ஸ்ரீ கபாடன் பெரியாண்டானிடம் பெற நினைத்த காசு நானூறும் ஆக காசு ஆயிரத்தையும் வாரம் பின்வாசி, அளப்போன் கூலி, திருமுகச் சம்படம் (ஆணை ஓலைக் கட்டணம்), சீலைக் காசு, அடித்தல் காசு என சேர்த்து ஆயிரத்து அறுபதும் இவர்கள் முன்வந்து செலுத்தாமையால் இவர் நிலங்களுக்கு பக்கத்தில் இருப்போர் குறைவாய் இருப்பதாலும் இந்நிலங்களை தம் பெயருக்கு மாற்று கொள்ளவர் இல்லாததாலும் அரசர் அறிவுறுத்திய ஆணையின்படி 20,000 காசு கட்ட வேண்டியுள்ளதால் இறைவன் திருமடமுடையர் கோவில் ஆதிசண்டேசுவரர்க்கு பொருளாக வரும் வரி, இக்கோயில் மாயேசுவர கண்காணி செய்பவர்களுக்கும், கோயில் பணி செய்பவர்களுக்கும், தெய்வப்பணி செய்பவர்களுக்கும், கோயில் கணக்கனுக்கும் கொடுக்கின்ற இறைவனுக்கு உழுகுடி வரிப் பெயரால் வரும் காசு, _ _ _  வந்த  கடமை வரியையும் எடுத்துக் கருவூலத்தில் செலுத்தினோம். குடிகள் மீது வரி திரட்டிக் கொள்ளலாம் என்று விற்ற நிலம் திரிபுவன தேவி வடிகாலுக்கு மேற்கிலும் இராசேந்திர சோழ வாய்க்காலுக்கு தெற்கிலும் மூன்றாங்கண் ஊற்று மூன்றாம் சதிரத்தும் நாலாம் சதிரத்தும் ஊர் சபை விலையாக புஞ்சை தோட்டத்திற்கு கீழ்ப்பகுதி எல்லை அழுந்தூர் வாய்க்காலுக்கு மேற்கிலும் தென் பக்க எல்லை இப்படியாக _ _ _ க்கதவன் அழகிய மணவாள குளமும் கரைக்குங் _ _ _ னும் ஸ்ரீ கபாடன், பெரியாண்டானும் உள்ளிட்டார் விளை நிலத்திற்கு தெற்கில் அமைந்த பெரிய நான்கு எல்லைகுள் நடுவுபட்ட புஞ்செய் குழி 950 த்துச் சின்னம் (குழி தொள்ளாயிரத்து ஐம்பத்து சின்னத்தையும்) ஊர் சபை விலையாக விலை நிர்ணயித்த 1060 காசை அடைக்க ஆவணங்களில் காட்டி எற்றி, எங்களுக்கு கைச் செலவு ஏதும் ஏற்படாமல் விற்று சபையின் தண்ட விலைக்கு ஆவணம் செய்தளித்தோம் என்கின்றனர் ஊர் வாரியத்தார் இருவரும்.

இக்கல்வெட்டு மூலம் குற்றவாளிகள் தண்டம் கட்டாவிடில் அவரது நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என்று தெரிகிறது. நிலம் ஏலம் போகவில்லை என்றாலும் தண்டத் தொகையை கட்டியாக வேண்டிய பொறுப்பால் வருங்காலத்தில் குடிகள் மீது வரியை திரட்டிக் கொள்ளலாம் என்று தீர்மானித்து தற்காலிகமாக கோவிலுக்கு வந்த வருவாயை கொண்டு தண்டத் தொகையை கட்டியுள்ளனர். இது ஏற்புடையது அல்ல. நிலத்தை விற்க முடியாத தமது இயலாமையை அரசருக்கு தெரிவித்து அங்கிருந்து வரும் அறிவுரைப்படி நடந்திருக்க வேண்டும். வீணே ஊழியர் சம்பளத்தை எடுத்துக் கட்டி மக்கள் மேல் இன்னும் வரி விதிப்பது மக்களுக்குத் தான் வரிச் சுமையை அதிகரிக்கும். இப்படி ஊர் சபை நடந்தால் விரைந்து திவாலாகிவிடும். எனினும் கல்வெட்டில் சில இடங்களில் சிதைந்து உள்ளதால் உறுதியான கருத்தை கூற முடியவில்லை.

பார்வை நூல்: ஆவணம் 21, 2010 பக். 35

அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டம் காண்டராதித்தத்தில் உள்ள சொக்கநாதர் கோயில் கருவறை தென் சுவரில் உள்ள 23 வரிக் கல்வெட்டு.

  1. ஸ்வஸ்தி ஸ்ரீ பூமேவுவளர் திருப்பொன் மாது புணர நாமேவு கலைமகள் பெரிதும் சிறப்ப விசைய மாமகள் வெல்புயத் திருப்ப இசையுஞ் செ
  2. ல்வி எண்டிசை வளர நிருபர் வந்திறைஞ்ச நீணில மடந்தையைத் திருமணம் புணர்ந்து திருவளர் திருமாமணி முடி கவித்தென மணிமுடிசூடி மல்லை ஞாலத்துப் பல்லுயிர்க் கெல்லாம் எல்லையில் இன்பம் இயல்பினில் எய்த வெண்குடை நிழற்ற செங்கோ
  3. லோச்சி  வாழி பல்லூழி வாழி நடப்பச் செம்பொன் வீர ஸிங்ஹாதனத்துப் புவந முழுதுடையாளொ
  4. டும் வீற்றிருந்தருளிய  கோவி ராஜகேசரிப் பந்மராந திரிபுவந சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு  யாண்
  5. டு 11 ஆவது வடகரைப் புவநமுழுதுடை வளநாட்டு பொய்கை நாட்டு ப்ரஹ்மதேயம் ஸ்ரீ கண்டராதித்தச் சது
  6. வேதி மங்கலத்து உடையார்  சிவலோகமுடையார் இந்நாடு மணற்குடி நாட்டு கிரந்தங்குடி இருக்கும் வெள்
  7. ளாளந் மாங்குடையாந் நெய்யாடியேந் தியாகஸமித்ரத் தெரிந்த வில்லி(களில்) சொற் மணவாளந் மணவாட்டியைச் சில எற்றாந் சூழ்ச்சிப் புகுந்த
  8.  இடத்து இவள் மேல் லேவ எந் கைப்பட்டு இவளுக்கு மரணம் உண்டாச்சு. உண்டானயிடத்து 
  9. உடையார் காங்கையராயர் பட்டகளை வைச்சுக் கொடி (கூடி) இருந்து வினவி இவன் வெள்ளாளந் ஆதலா(ல்) இவந்னுக்கு வதை இல்லை என்
  10. று பட்டன் விதிக்கவும் இந்நியாயத்தில் உள்ளாக ஸமாதாநத்தால்லு
  11. ம் இத்தேவர் கோயிலில் வைக்க கடவதாந சந்தி விளக்கு 1. இ வி
  12. ளக்கு ஒந்றுக்கும் விட்ட பசு நாலும் இக்கோயிலில் காணி உடை
  13. ய சிவபிராமணந் காச்சபந் திருச்சிற்றம்பல உடையாந் பசி தா
  14. ங்கி கைக்கொண்ட பசு இரண்டும் இக்குடி தழுவக் குழைந்தாந் திருச்சிற்ற
  15. ம்பலம் உடையான் கைக்கொண்ட பசு விரண்டும் ஆக பசு நாலும் கை 
  16. கொண்டு இச்சந்தி விளக்கு னாலுமாக. இவ்வூர் ஸ்ரீ  இந்திராவதாரச் சேரி மணலூர் பாரதாயந்
  17. ஆளவந்தாந் _ _ _ கண்டாந் ப்ராஹ்மணி இச்சேரி புள்ளமங்கலத்து சாவாந்தி 
  18. வெண்காடு தேவந் சிவலோகத்து நாயக நம்பி மகள் அருந்தவஞ் செய்தாள் பக்கலும் இக்
  19. காசு கொண்டு உப(ய)மாக சம்மதித்து எரிக்க கடவோமாக ஸந்தி விளக்கு ஒந்றும் இத்
  20. திருவிளக்கு இரண்டும் யாவர் ஜீவம் சந்திராதித்தவர் எரிக்க கடவோமாக சம்மதித்து இக்கல்லி
  21.  ல் இத்தேவர் கோயிலில் வெட்டி கல்வெட்டிவித்து கொண்டோம் இ(கோயில்க் குச்சியும் அலகும்) கொண்டு படி கட
  22. புக்காக எரிக்க கடவாராக இ வுபயம் கொண்டோம். இக்காசவந் திருச்சிற்றம்பல முடையாந் பசிதாங்கியேந். இவை எழுதிய
  23. படி இவை தழுவக் குழைந்த இசாந திருச்சிற்றம்பல முடையாநேந் இது எந் எழுத்து. இப்படிக்கு இவை பந்மாகேஸ்வர ரக்ஷை. 

எற்றாந் சூழ்ச்சி – அடித்து துணி துவைக்கும் வண்ணார் சூழ்ந்த இடம்; ஏவ – மறைந்து பாய; உடையார் – சிற்றரசர்; பட்டர்கள் – சாஸ்திர பண்டிதர்; வதை – கசையடி; சமாதானம் – அமைதி, சாந்தி    

விளக்கம் : இரண்டாம் குலோத்துங்க சோழனின் மெய்க்கீர்த்தியோடு இக்கல்வெட்டு தொடங்குகிறது. இதில் 3 மூவர் ஏற்றிய 3 சந்தி விளக்கு பற்றிய செய்தி உள்ளது. முதல் சந்தி விளக்கு “குலோத்துங்கனின் 11 ஆம் ஆட்சி ஆண்டில் கி.பி 1144 இல் வடகரைப் புவனமுழுதுடை வளநாட்டு பொய்கை நாட்டு பிரம்மதேசம் ஸ்ரீ  கண்டராதித்த சதுர்வேதி மங்கல இறைவன் சிவலோகமுடையார் கோயில் கொண்ட இந்நாட்டு மணற்குடி நாட்டு கிரந்தங்குடியில் வாழும் வெள்ளாளன் மாங்குடையான் நெய்யாடியான நான் தியாகசமுத்திரத்து வாழும் தெரிந்தெடுத்த வில்லாளியான சொல் மணவாளன் மனைவியை சில அடித்து துணி துவைக்கும் வண்ணார் சூழ்ந்த இடத்திற்கு போன போது கொடிகளில் உலர்த்திய துணிகளின்  மறைவில் இருந்து கொண்டு இவளைக் கட்டி அணைக்க  இவள் மேல் பாயும் போது என் கை பட்டு இவள் அந்த இடத்திலேயே இறந்து போனாள். இறப்பு உண்டான இடத்தின் ஆட்சியாளர் காங்கையராயர் சாஸ்திர பண்டிதர்களை கலந்து பேசி என்ன தண்டனை தரலாம் என்று வினாவிய போது இவன் வெள்ளாளன் (பிள்ளைமார்) என்பதால் இவனுக்கு கசையடி தண்டனை ஏதும் இல்லை என்று சாஸ்திர பண்டிதன் கூற இந்த வழக்கின் தீர்ப்பாக அமைதி ஏற்படுத்தும் வண்ணம் இந்த இறைவன் கோயிலில் ஒரு சந்தி விளக்கு ஏற்றினால் போதும் இந்த விளக்கு அன்றாடம் எரிவதற்குத் தேவையான நெய்க்கு நாலு பசுவை தானம் அளிக்க வேண்டும் என்றனர். அதில் இரண்டு பசுவை இந்த கோவிலில் பணிபுரியும் காணி உரிமை உள்ள சிவபிராமணன் காசியபன் திருச்சிற்றம்பல உடையான் பசிதாங்கியிடமும் இன்னொரு சிவபிராமணன் தழுவக் குழைந்தான் திருச்சிற்றம்பலம் உடையானிடம் மற்ற இரண்டு பசுவும் தரப்பட்டன”. மேலும், இந்த ஊர் இந்திராவதாரச் சேரி மணலூர் பாரதாயன் (பாரத்துவாஜ கோத்திரத்தான்) ஆளவந்தான் _ _  கண்டான் மனைவியிடமும் இந்த சேரியின் புள்ளமங்கலத்து சாவாந்தி (சாவு + அந்தி = சாவந்தி > சவுண்டி) வெண்காடு தேவன் சிவலோகத்து நாயக நம்பியின் மகள் அருந்தவஞ் செய்தாள் சார்பாகவும் காசு பெற்று அதற்கு உபயமாக விளக்கு ஏற்றக் கடவோம் என்று ஒரு சந்தி விளக்கும் ஆக இத் திருவிளக்கு இரண்டும் சந்திராதித்தவர் உள்ள வரை செல்வதாக ஒப்புக் கொண்டு இந்த கல்லில் இந்த இறைவர் கோயிலில் எழுதி கல்வெட்டினோம் இக்கோயிலில் குச்சிச்சியும் அலகும் கொண்டு கருவறை புகும் வண்ணம் படிக் கடப்பில் எரிப்போம் என்று இந்த உபயம் பெற்றுக் கொண்டோம் என்று காசபன் திருச்சிற்றம்பல முடையான் பசிதங்கி சொல்கிறான். இவற்றில் எழுதிய படியே தழுவக் குழைந்தான் ஈசான திருச்சிற்றம்பல முடையான் நடப்பதாக உறுதி கூறுகிறான். இது என் எழுத்து. இப்படிக்கு இவை பன்மாகேசுவரர் பாதுகாப்பதாக.

பண்டு தனியே செல்லும் பெண்களுக்கு பொது வெளியில் பாதுகாப்பு குறைவு என்பதை இக்கல்வெட்டால் அறிய முடிகிறது. தண்டனை என்று வந்தால் சாதிக்கு ஒரு நீதி என்ற முறையே பண்டு நிலவியது என்று தெரிகிறது. கோவிலில் விளக்கு ஏற்றுவதால் குற்றவாளி திருந்தப் போவதில்லை. அதற்கு மாறாக நான்கு அறநூல்களைப் படித்து பாட்டாக ஒப்பிக்க வேண்டும், அதை விளக்க வேண்டும் என்ற தண்டனை குற்றவாளியின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த சிந்தனை அந்நாளில் யாருக்கும் தோன்றவில்லை போலும்.

பார்வை நூல்: அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் தொகுதி I,பக். 114-115 இல. தியாகராஜன்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் திருவாலீசுவரர் கோயில் 4 வரிக் கல்வெட்டு

  1. கோவி ராசகேசரி பன்மற்கி யாண்டு 8 வது வன்னாட்டு வாலிகண்டபுரத்து திருவாலீஸ்வரத்து மாதேவற்க்கு வன்னாட்டுத் திசையாயிரத்தைஞ்ஞூ ற்றுவரோம் கற்கார்டூ
  2. ர் இருக்கும் வளஞ்சியன் ஐயாற்றிகளைக் கிலாச்ச வனமாம்பாடியுடைய வடுகன் சடையனைப் படக் குத்தி பட்ட பலமண்டல வீர வளஞ்சியரைக் சாத்
  3. திய் வைத்த நொந்தா விளக்கு இரண்டு. இவ்விளக்கு இரண்டினால் _ _ _ இப்பொன் பதின்ஐங் கழஞ்சினால் பலிசை நிசதம் நெயெண்ணை  அட்டக் கடவது உரி நாராயத்தா
  4. ல். இவ்விளக்கிரண்டினால் பொன்  மணிக்கிராமத்தார் வசமும் சேனையார் வசமும் சந்திராதித்தவல். இது பந்மாஹேஸ்வர ரக்ஷை. 

கிலாச்ச – கலவரம், மோதல், clash என்ற ஆங்கில சொல்லுக்கு ஊற்று இச்சொல்; பட – விழ, சாக; பட்ட – வீரச்சாவடைந்த; பலிசை – வட்டி; நிசதம் – ஏற்பாடு; அட்டு – ஊற்று; நாராயம் – அளவுப் படி,     

விளக்கம் : இது 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு. வேந்தன் யார் என்று தெளிவாக அறிய முடியவில்லை. ஆனால் அவனது 8 ஆவது ஆட்சி ஆண்டில் வன்னாட்டு வாலிகண்டபுரத்து வாலீசுவரர் கோயில் இறைவருக்கு வன்னாட்டின் திசையாயிரத்து ஐந்நூற்றுவ வணிகக் குழுவினர் கற்காட்டூரில் வாழும் வளஞ்சியன் ஐயாற்றிகள் தன்னை வலுச் சண்டைக்கு இழுத்த வனமாம்பாடியைச் சேர்ந்த வடுகன் சடையனை செத்து விழுமாறு குத்தினான். அதன் பொருட்டும் இன்னும் பல மண்டலங்களில் வீரசாவடைந்த வளைஞ்சியரை நினைவில் நினைந்தும் இரண்டு நுந்தா விளக்கு வைக்க முடிவு செய்தனர். இந்த இரண்டு விளக்கிற்கு தேவைப்படும் நெய்க்கு உரி அளவுப்படியால் நெய் ஊற்ற பதினைங்கழஞ்சு பொன் கொடுத்து அதை வட்டிக்கு விட்டு அதில் வரும் வருவாயில் இருந்து நெய் ஊற்றம் ஏற்பாட்டை செய்தனர். இதற்கு பொன் மணிக்கிராம வணிகரும் சேனை வணிகரும் பொறுப்பாக இருந்து சந்திர சூரியர் உள்ள காலம் வரை தடையின்றி இது செல்வதைக் கவனிக்க வேண்டும். இதை கோயில் பன்மாகேசுவரர் காக்க வேண்டும் என்று கல்வெட்டியுள்ளனர்.

வணிகர் குழு இங்கு தன் செல்வாக்கை செலுத்தி ஐயாற்றிகள் தண்டனை ஏதும் பெறாமல் நுந்தா விளக்கு ஏற்ற ஏற்பாடு செய்துவிட்டது என்று தான் கூற வேண்டும். ஐயாற்றி என்பது இயற்பெயர் அல்ல. அது தலைமை ஏற்று வழி நடத்துவோனைக் குறிக்கிறது.

பார்வை நூல்: பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், பக். 213 ஆசிரியர்: இல. தியாகராஜன்

கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம் திருப்பாதிரிப்புலியூர் பாடலீசுவரர் கோயில் முதல் திருச்சுற்றில் உள்ள முற்றத்தின் அடித் தளத்தில் உள்ள 7 வரிக் கல்வெட்டு

  1. உடையார் திருபாதிரிப்புலியூருடைய நாயனார் கோயில் தேவகன்மி, கோயில் கணக்கர்க்கு சிறுமுறி திருப்பாதிரிப் புலியூர் நத்தமும் விளை நிலமும் புன்செய் நிலமும் இவ்வூர் பிடாகைகளில் திருநாமத்துக் காணியாக அனுபவித்துப் போதுகையில் பெருமாள் விக்கிரம பாண்டிய தேவற்கு மூன்றாவது நாளில் விக்கிரம பாண்டியக் காலிங்கராயர் இக்கோயிலிலே சுப்பிரம(ண்)ணியப் பிள்ளையாரை ஏறியருளப் பண்ணி  இப்பிள்ளையார்க்கு இரண்டு மா நிலம் சண்டேசுரப் பெருவிலை கொண்டு கல்லும் வெட்டின அளவிலே இவ்வூரிலே இருக்கும் பிராமணர் இவ்வூர் எங்கள் ப்ரம்மக்ஷேத்ரம் என்றும் சண்டேசுரப் பெருவிலை  கொள்ளக் கடவதல்ல என்றும், எங்கள் காணி என்று அனுசயம் பண்ணினபடியாலே மாஹேஸ்வரர் திருக்கூட்டமாக இருந்து ஒரு திருமேனி  தீயிலும் விழுந்தபடியாலே பெருமாள் திருமுன்பே 
  2. கேழ்வியாய் [பி]ள்ளை பல்லவராயரையும் பிள்ளை அழகிய மணவாளப் பெருமாளையும் நீங்கள் நாட்டிலே போன அளவிலே இவ்வூர் மருங்கு சூழ்ந்த இடத்து நாட்டாரை அழைத்துக் கேட்டுக் காணி உடைய இவர்களுக்கு விடுவித்துக் குடுப்பதென்று திருவாய்மொழிந் தருளினபடியாலே நாலாவது ஐப்பசி மாதம் ஐஞ்சாந் தியதி சோழகுல வல்லிநல்லூர் அம்பலத்திலே எங்களையும் கூடக் கொண்டு கேட்ட இடத்துப் பிராமணரை உங்கள் காணியானபடிக்குச் சாதனங் காட்டுங்கோ ளென்று சொன்ன இடத்து இந்தப் பிராமணர்  ப்ரம்ம க்ஷேத்ரம் என்று சொல்லுகையாலே உங்கள் ப்ரம்ம க்ஷேத்ரமாகில்  நீங்கள் உழுது இறுக்கை இன்றியே வெள்ளாழர், அளவர், பள்ளிகள், பரம்பர் உட்பட உழுது இறுத்து ஆண்டு மாறி இவர்கள் உடனுங்கூடக் கரைஇட்டு உழுது போந்தபடியாலே காணி ஆ
  3. ட்சி அல்ல என்றும் அனுபோகத்தால் சொல்ல ஒண்ணா தென்றும் நீங்கள் இன்னாள் வரையாக இத்திருக் கோயிலிலே காணிநில முதலாகத் திருநாமத்துக்காணியாக நீங்கள் குடுத்துக் கல்வெட்டிக் கிடப்பதுண்டோ என்று கேட்ட இடத்து இப்படிக்கு ஒரு மூலம் எங்களால் காட்ட ஒண்ணா தென்றும் தன்னில்தான் விற்றும் ஒற்றி வைய்த்தும் போதுவோ மென்றும் இவர்கள் சில சாதனங் காட்டின இடத்து உங்களில் நீங்கள் ஒற்றி வைய்த்தும் விற்றும் செய்தவை ஒன்றல்ல என்றும் இவர்களைக் கேட்(ட்)டு விட்டுக் கோயில் தானத்தாரை அழைத்து  திருநாமத்துக் காணியானபடிக்குச் சாதனங் காட்டுங்கோள் என்று கேட்ட இடத்து இக்காணி என்று சொல்லுகிற பிராமணர் ஆண்டுதோறும் திருநாமத்துக் காணி பேசி நிலக் கூலிக்கும் விதை முதலுக்கும் எதிரடை ஓலை காட்டினபடியாலும் கோப்பெருஞ்சிங்கர் நாளிலும் 
  4. நிலக்கூலி தண்டிப் போந்த படிக்குக் கோயில் பரிமாற்றங் காட்டின படியாலும் பெருமாள் விக்கிர ம பாண்டிய தேவர் இத்திருப்பாதிரிப் புலியூர்  உடலடங்க இறையிலியாக ஐஞ்சாவது நாளில் எழுதின திருமுகத்திலே திருநாமத்துக் காணி படத் திருமுகம் எழுதித் திருவெழுத்துச் சாத்தின இத்திருமுகங் கொண்டு திருவீதி வலமாக இப்பிராமணர் உடனுங்கூட அலங்கரித்துக் கல்லும் வெட்டி இன்னாள் வரையும் அனுபவித்துப் போந்து இருக்க இப்பொழுது சொல்லக் கடவதல்ல  என்று முத[லி]களு[ம்] அருளச்செய்து நாங்களும் சொல்லிவிட்டது “இது திருநாமத்துக் காணி என்னும்படி கேட்டு அற்றுவிட்டபடிக்கு இத்திருக்கோயிலிலே கல்லுவெட்டிக் கொள்வது. இப்படிக்கு இவை திருபுவன மாதேவிச் சறுப்பேதி மங்கலத்துச் சாத்த மங்கலத்துக் குலசேகரப் ப்ரம்ம ராயன் எழுத்து. இப்படிக்கு இவை திட்டைச்சேரி சுந்தரபாண்டியப் ப்ரம்ம 
  5. ராயன் எழுத்து. இப்படி _ _ _     
  6. இப்படிக்கு இவை னந்தி  _ _ _ 
  7. இப்படிக்கு இவை பல்ல_ _ _ _          

பெருமாள் – வேந்தர்; பிடாகை – உட்கிடையூர், backyard hamlet; உடையார் – சிற்றரசர்; மாகேசுவரர் – திருமேனி – தெய்வச்சிலை; திருவாய்மொழி – ஆணை இசைவு; சாதனம் (சாசனம்) – ஆவணம்; இறுக்கை – செல்லுதல், நடத்தல்; கரை – வரப்பு  

விளக்கம் : 13 ஆம் நூற்றாண்டு இறுதியில் அல்லது 14 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் வீர பாண்டியனுக்கு முன் வட தமிழகத்தை ஆண்ட பராக்கிரம பாண்டியன் ஆட்சியில் நிகழ்ந்த நிகழ்வு. திருப்பாதிரிப்  புலியூர் இறைவன் கோவியில் இறை பணியாளர்களுக்கும் கோவில் கணக்கருக்கும் வந்த சிறு முறி (ஓலை). திருப்பாதிரி புலியூர் விளையா நத்த நிலமும், விளைநிலமும், புஞ்சைநிலமும் அதே போல் உட்கிடை ஊர்களில் (பிடாகை)  விளையா  நிலமும், விளைநிலமும், புஞ்சைநிலமும் இறைவன் பெயரில் உரிமையாக (திருநாமத்து காணி) வந்து அனுபவித்து கொண்டிருக்கும் வேளையில் வேந்தர்  விக்கிரமபாண்டிய தேவர்க்கு பட்டம் ஏற்ற மூன்றாவது நாளில் சிற்றரசர் விக்கிரமபாண்டிய காளிங்கராயர் இக்கோவிலில் சுப்பிரமணிய பிள்ளையாரை எழுந்தருளச் செய்து இந்த பிள்ளைக்கு இரண்டு மா அளவு நிலத்தை சண்டேசுவரப் பெரு விலையாக வாங்கி கல்வெட்டு பொறித்த போது இவ்வூரில் வாழும் பிராமணர் இவ்வூர் எமது பிரம்ம சேத்திரம் (பிராமணர் ஊர்) எனவே சண்டேசுவர பெருவிலை வாங்கக் கூடாது இது எமக்கான உரிமை நிலம் என்று தொல்லை செய்த  வேளையில்; அப்போது மாகேசுவரர் (சிவனடியார்கள்) திருக்கூட்டமாக இருந்த நேரத்தில்  ஒரு சாமி சிலை தீயில் விழுந்ததால் அதை அரசர் காலிங்கராயர் திருமுன்பாகச் சொல்ல அவர் பிள்ளை பல்லவராயரையும், பிள்ளை அழகிய மணவாள பெருமாளையும் நீங்கள் நாட்டிலே , ஊரிலே சென்று இந்த ஊரை சூழ்ந்த ஊராரை விசாரித்து காணியுடைய பிராமணர்களுக்கு நிலத்தை விடுவித்து கொடுக்க ஆணைக்கு இசைந்ததால் முடிசூட்டிய  நாலாம் நாளில் ஐப்பசி மாதம் ஐந்தாம் தேதி அன்று சோழகுலவல்லி நல்லூர் நீதிமன்றம் அல்லது கோவிலில் எங்களையும் (பிராமணரையும்) கூட அழைத்து சென்று கேட்ட நேரத்தில் பிராமணர்களே  உங்கள் காணி என்பதற்கு ஆவணங்களை காட்டுங்கள் என்று சொன்ன போது இந்த பிராமணர் இது பிரம்ம சேத்திரம் என்று சொல்லும் போதும் இது உங்கள் பிரம்ம சேத்திரம் என்றால் இதில் நீங்கள் உழாமல் வெள்ளாளர், அளவர், பள்ளிகள், பரம்பர் உட்பட்டோர் உழுது ஆண்டுகள் பல கடந்து இவர்கள் அந் நிலத்திற்கு வரப்பும் அமைத்து உழுது காலம் போனதால் இது உமது நில உரிமை அல்ல, எனவே  அனுபோகத்தால் (by possession) உமது நிலம் என  சொல்ல முடியாது என்று சொல்லி  நீங்கள் இதுநாள்வரை இக்கோவிலில் காணி நிலமாக பெற்ற  இறைவன் பெயரில் நிலங்களாக கொடுத்த கல்வெட்டி ஏதேனும் இருக்கிறதா என்று கேட்ட போது இப்படி ஒரு மூல ஆவணம் எம்மால் காட்ட இயலாது அவரவர் விருப்பப்படி விற்றும் ஒத்தி (அடமானம்) வைத்தும்  போவோமென்று இவர்கள் சில ஆவணம் காட்டிய போது நீங்கள் உங்களுக்குள்ளேயே ஒத்தியும் விற்றும் செய்தவை ஒன்றல்ல என்றும் இவர்களிடம் சொல்லிய  போது கோவில் நிருவாகிகளை அழைத்து இது  திருநாமத்து காணி என்பதற்கு ஆவணம் காட்டுங்கள் என்று கேட்டபோது இக்காணி எமது என்று சொல்லுகிற இப்பிராமணர்  ஆண்டுதோறும் திருநாமத்து காணி  என்று சொல்லி நிலக் கூலிக்கும் விதை முதலுக்கும் எதிரடை (சான்றாக) ஓலை காட்டியதால் காடவப் பல்லவ வேந்தன் கோப்பெருஞ்சிங்கன் காலம் முதலே நிலக்கூலி வாங்கியதற்கு கோவில் பரிமாற்றங்களைக்  (transaction) காட்டியதால் வேந்தர் விக்கிரம பாண்டியத்  தேவர் திருப்பாதிரிப்புலியூர் மூல நிலமும் அடங்க இறையிலியாக தான் முடிசூடிய ஐந்தாவது நாளில் எழுதிய திருமுகத்தில் (அரசாணையில்) இது இறைவன் நிலம் என்று தெளிவாக ஆணையிட்டு கையெழுத்து இட்ட படியால் இத்திருவெழுத்தை இப்பிராமணர் வீதிவலமாக எடுத்துச்சென்று கல்லு வெட்டிக் கொண்டனர். இதை இதுநாள் வரை நீங்கள் அனுபவித்து கொண்டு இருக்க அதை இனி மீண்டும் சொல்லத் தேவை இல்லை என்று முதலிகளும் ஒப்புதல் அளித்து நாங்களும் சொன்னது என்ன என்றால் “இது திருநாமத்துக்காணி  எனும்படி சொல்லக் கேட்டு எமக்கு முழுவதும் கைவந்தபடியாலே ( அற்றுவிட்டபடியாலே > அத்துபடி)  இத்திருக்கோவிலில் அதை கல்வெட்டிக் கொள்ளலாம் என்று ஒப்புதல் அளித்தோம். இப்படிக்கு திருபுவன மாதேவி சருப்பேதி மங்கலத்துச்   சாத்த மங்கலத்துக்  குலசேகர பிரம்மராயன் எழுத்து. இவை திட்டைச்சேரி சுந்தர பாண்டிய பிரம்மராயன் எழுத்து. இப்படிக்கு இவை நந்தி (வர்மன் எழுத்து). இப்படிக்கு இவை பல்ல(வராயன் எழுத்து)

வேந்தர் வெள்ளாளர், பரம்பர், பள்ளி ஆகியோரை tenants under tenants/ sub tenants என்று கருதியதால் பிராமணரே உண்மையான வாடகையாளர் என்று கூறிவிடுகிறார். அதற்கு பிராமணர் கோப்பெருஞ்சிங்கன் காலம் முதலே கட்டிய நில வாடகை விதை முதல் ஆவணங்களை ஏற்றுக்கொள்கிறார்.

பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 7 எண்: 759 பக். 385

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருவிடைமருதூர் கல்வெட்டு

சுபமஸ்து ஸ்வஸ்தி ஸ்ரீமந் மஹா மண்டலேஸ்வர சதுசமுத்திராதிபதி  ஸ்ரீமந் சதாசிவ தேவ மஹாராயர் பிருதுவிராச்சியம் பண்ணியருளா நின்ற சகாத்தம் 1466 ன் மேற்செல்லா நின்ற குரோதி சம்வத்ஸரத்து மீன ஞாயற்றுப் பூருவ பட்சத்து உத்துவாநத் துவாதசியும் சோமவாரமும் பெட்ரா உத்திரட்டாதி நட்சத்திரத்து நாள் வீரப் பிரதாப ஸ்ரீமது மஹா மண்டலேஸ்வர இராமராஜ விட்டல தேவ மகா இராஜர். சோழ மண்டலத்து காவேரி தீரத்து தென்கால் உய்யக்கொண்டசோழ வளநாட்டுத் திரைமூர் நாட்டுத் திருவிடைமருதூர். திருவிடை மருதூருடைய தம்பிரானாற்க்கு தற்மசிலா சாஸனம் பண்ணிக் குடித்தபடி மருதப்பர் திருநாமத்துக் காணியாய் பூறுவம் நடந்த புத்துஆற்றுக்கு வடக்கு ஆவணமும், சிற்றாடியும் இந்த இரண்டு கிறாமமும் பூறுவம்  கோயிற்பற்றாக  நடக்கயிலே அன்னாளிலே பண்டாரா வாடைக்காரர் கட்டிக் கொண்டு பண்டாரவாடை ஆகப் போகையில் இப்பொழுது இது காரியமாக திருவிடை மருதூருடைய தம்பிரானார் திருக்கோயில் தேவகன்மிகளில் திருச்சிற்றம்பல பட்டர் மங்காமந் காத்தார் இன்னயினார் கோயிற் பற்று என்று நமக்கு விண்ணப்பம் செய்து நாம் திருவடி பேரிலே தண்டு வந்த பொழுது  நம்முடனே கூட தெற்கு அனந்தசயனம் வடக்கு முதுகல்லு ஸஹிதமாகத் தண்டுப் பண்ணி பூறுவம் கோயிற்பற்று என்று பலகாலும் நமக்கு விண்ணப்பம் செய்து நாமும் அந்தக் கிறாமங்களிலே மருதப்பர் முத்திரை எல்லைக் கல்லு நிற்கிறது உண்டோ என்று நம்முடைய முத்திரை வாங்கி, இலிங்கயர் மனுஷரையும் தூளி நயினாரையும் நாம் முதுகல்லிலே இருந்து திருச்சிற்றம்பல பட்டர் சொன்னாப் போல எல்லைக் கல்லு நிற்கிறதோ என்று பார்க அனுப்பி வரக்காட்டி விசாரித்து பூருவம் கோயிற்பற்று என்கிறதுக்கு இரண்டு ஊரிலும் கல்லு நிற்குது என்று பார்த்து வந்து நமக்கு விண்ணப்பம் செய்கையில் நாமும் அந்தப் படிக்கு இராயஸமும் வாங்கிக் குடுத்து சங்கிரம புண்ணிய காலத்திலே திருச்சிற்றம்பல பட்டர் கையிலே உதகம் பணிக்கு குடுத்து  நம்முட இராயஸமும் _ _ __.  

தர்ம சிலா சாசனம் – நீதி நிலைநிறுத்தும் கல்வெட்டு; பண்டாரவாடைக்காரர் – வரி தண்டும் கருவூல அதிகாரி; தண்டு – படை,  வருத்தம்; இலிங்கயர் – குறி செதுக்குவோர்; தூளி – குதிரை; இராயசம் – அரசாணை;

விளக்கம்: இக்கல்வெட்டில் இடம்பெறும் இராமராச விட்டல தேவ மகாராயர் கிருஷ்ணதேவராயரின் மருமகனாவார். இவர் சதாசிவராயர் இளமையிலேயே வேந்தராக முடிசூட்டிக் கொண்ட காரணத்தால் அவரது மேற்பார்வையாளராக இருந்து பின்புலத்தில் இருந்தபடி உண்மையாகவே இவரே ஆட்சி செலுத்தியவர் என்பதால் மகாமண்டலேசுவர தேவ மகாராயர் என்று கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார். கி.பி. 1565 இல் தக்காண சுல்தான்களோடு நடந்த தலைக்கோட்டைப் போரில் இவரது தலை கொய்யப்பட்டு வைக்கோல் அடைத்துக் காட்சிப்படுத்தப்பட்டது.

மலபார், கொங்கணம், சோழமண்டலம், உத்கலம் என்ற நான்கு கடற்கரைக்கும் அதிபதியாக சதாசிவ தேவராயர் மண்ணுலகு ஆண்டு அருளுகின்ற சக ஆண்டு 1466 (கி.பி.1544) குரோதி ஆண்டில் மீன ராசி முற்பகுதியில் கார்த்திகை மாத சுக்லபட்ச துவாதசியான   (உத்துவான துவாதசி) திங்கட்கிழமை உத்திரட்டாதி நட்சத்திரம் கூட நாளில் வீரபிராதப மகா மண்டலேசுவரர் இராமராச வித்தல தேவ பேரரசர் சோழமண்டலத்த்தில் அடங்கிய காவேரிக்கரை தென்கரையில் அமைந்த உய்யக்கொண்ட சோழ வளநாட்டு திரைமூர் நாட்டுத் திருவிடைமருதூர். இந்த திருவிடைமருதூருடைய இறைவர்க்கு நீதி நிலைநிறுத்தும் கல்வெட்டு செய்து கொடுத்தது யாதெனில், இறைவன் மருதப்பர் பெயர்க் காணியாக முன்னொரு காலம் புத்து ஆற்றுக்கு வடக்கில் ஆவணம், சிற்றாடி ஆகிய இரு கிராமமும் கோயில் உரிமை நிலமாக இருந்த நிலையில் அக்காலத்தே கருவூல அதிகாரி அவற்றில் இடம் கட்டிக்கொண்டு அவருக்குரியதாக ஆக்கிக் கொண்டார். இப்பொழுது இதன் தொடர்பில் திருவிடைமருதூருடைய இறைவன் கோயில் இறைப்  பணியாளர்களில் ஒருவரான திருச்சிற்றம்பல பட்டர் மங்காமன் காத்தார் இவை இக்கோயில் இறைவன் உரிமை நிலம் என்று என்னிடம் முறைப்பாடு செய்தார். நான் திருவடிகள் நாடான திருவனந்தபுரம் மேல் படைநடத்தி வந்த போது என்னுடனே கூட தெற்கில் உள்ள பத்மநாப சுவாமி கோயில் அனந்தபுரத்தில் இருந்து வடக்கே முதுகல் (குல்பர்கா) வரை தம்மை வருத்திக் கொண்டு  கூடவே வந்து முன்னொரு போது இவை கோயில் உரிமை நிலம் என்று என்னிடம் பலமுறை வேண்டீடு செய்தார். நானும் அந்த கிராமங்களில் மருதீசர் முத்திரை பொறித்த எல்லைக் கல் நிறுத்தப்பட்டுள்ளனவா என்று என்னுடைய முத்திரை பெறும் அதிகாரி, குறி செதுக்குவோர் ஆகியோரையும் குதிரைப்படை தலைவனையும் நான் முதுகல்லில் இருந்தபோது சிற்றம்பல பட்டர் சொன்ன ஊர்களில் எல்லைக் கல் நிறுத்தப்பட்டுள்ளதா என்று பார்த்து வரச்சொல்லி அனுப்பி விசாரித்ததில் முன்னம் அவை கோயில் நிலம் என்பதற்கு சான்றாக இரு ஊர்களிலும் கல் நிறுத்தப்பட்டுள்ளது என்று பார்த்து வந்து எனக்கு வேண்டுகோள் வைத்தமையில் நானும் அதன்படி அரசாணையும் வாங்கிக் கொடுத்தேன். போர் நடக்கும் புண்ணிய காலத்திலே திருச்சிற்றம்பல பட்டர் கைகளில் நீரட்டி என்னுடைய ஆணையையும் கொடுத்தேன் என்ற மட்டில் கல்வெட்டு சிதைந்துள்ளது.

பண்டாரவாடைக்காரர் யார் என்ற பெயர்க் குறிப்பு கல்வெட்டில் இல்லை. இது போல அரசு அதிகாரிகள் பல ஊர்களில் நடந்து கொள்ள வாய்ப்புள்ளது. ஏதோ சிற்றம்பல பட்டரின் விடாமுயற்சி கோயில் நிலம் மீண்டும் கோவிலுக்கே மீண்டது.

பார்வை நூல்: தொல்லியல் புதையல், பக். 54 – 55 ஆசிரியர்: நடன. காசிநாதன் & திருவிடைமருதூர் கல்வெட்டுகள், 1960 பக். 25 – 29, வெளியீடு:ஸ்ரீ மகாலிங்க சுவாமி தேவஸ்தானம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.