குறளின் கதிர்களாய்…(486)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(486)
அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்றி
னேதம் படுபாக் கறிந்து.
–திருக்குறள் – 164 (அழுக்காறாமை)
புதுக் கவிதையில்…
அடுத்தவர் மீது
அழுக்காறு கொள்வதால்
தமக்கு
இம்மை மறுமை
இரண்டிலும்
இன்னலே வரும் என்பதை
நன்கறிந்த சான்றோர்,
பொறாமை காரணமாக
அறமல்லாத் தீயவற்றை
அடுத்தவர்க்குச் செய்யார்…!
குறும்பாவில்…
பிறர்மீது பொறாமை கொண்டால்
பெருந்துன்பம் தமக்கு வருமென்பதறிந்த சான்றோர்
பொறாமையுடன் பிறர்க்குத் தீங்குசெய்யார்…!
மரபுக் கவிதையில்…
பிறரின் மீது பொறாமையாலே
பெரிய துன்பம் தமக்குவரும்,
மறவா திதனைச் சான்றோரும்
மற்றோர் மீதே அழுக்காறாய்
அறத்தை மறந்த தீச்செயலால்
அடுத்தோர் துன்பம் அடைந்திடவே
மறந்தும் பிறர்குத் தீங்குசெயும்
மடமை தன்னைச் செய்யாரே…!
லிமரைக்கூ…
பொறாமை பிறரின் மீது,
பெருந்துன்பம் தமக்கென அறிந்த சான்றோர்
செய்யார் பிறர்க்குத் தீது…!
கிராமிய பாணியில்…
வேண்டாம் வேண்டாம்
ஒருநாளும் வேண்டாம்
உருப்படாத பொறாம கொணம்,
அறவே வேண்டாம்
அடுத்தவங்க மேல பொறாம..
மத்தவங்க மேல பொறாமகொண்டா
மாறாத துன்பம்
தனக்குத்தான் வருமுண்ணு
நல்லாத் தெரிஞ்ச
பெரியவுங்க பொறாமயால
அடுத்தவங்களுக்குக்
கேடு எதயும்
ஒருநாளும் செய்யமாட்டாங்க..
அதால
வேண்டாம் வேண்டாம்
ஒருநாளும் வேண்டாம்
உருப்படாத பொறாம கொணம்,
அறவே வேண்டாம்
அடுத்தவங்க மேல பொறாம…!