வாசம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)
மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
மொழி : மலையாளம்
தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்
முனைவர்.நா.தீபா சரவணன்
உதவிப்பேராசிரியர்
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை
பரந்துநீண்ட வழியோரங்களில் கறுப்புநிறக் கொம்புகளும், கரும்பச்சை இலைகளும், மண்ணிற்கு மேல் நிறைய வேர்களுமாக பல வருடம் பழமையான ஒரு பைன் மரம். அதற்குக்கீழ் சென்று நின்றால் அதிசயமான ஏதோ ஒன்று நம்மை வந்து தொடுவது போலத் தோன்றும். பழைய கதைகளில் வருகின்ற கைகள் விரித்து நிற்கின்ற ஒரு பூதத்தை இரவு நேரங்களில் அது நினைவுபடுத்தும். நிசப்தமான இரவுகளில் ஒவ்வொரு பைன் மரங்களின் இலைகள் கொழிந்து விழும்போதும் பெரிய ஒரு முழக்கத்தைக் கேட்கலாம்.
இலட்சுமிக்குட்டி பைன் மரத்திற்குக் கீழே, முகத்தைத் தொங்கபோட்டுக்கொண்டு உட்காந்திருந்தாள். எண்ணெய் பசையில்லாத பறந்து கிடந்த முடி, கெட்டியான பருத்தித் துணியில் பாவாடையும் ஜாக்கெட்டும். கை மணிக்கெட்டுகளில் ஒவ்வொரு கறுப்பு வளையல் கழுத்தில் எப்போதோ மந்திரித்துக் கட்டிய கறுப்பு நிறக்கயிறு.
வழியில் நின்று கொண்டிருந்த இலட்சுமிக்குட்டிக்கு நேராக பெருங்காற்று தூசிகள் கிளப்பிக்கொண்டு வீசின. தூசி வலைக்குள் அகப்பட்ட அவள் விடாமல் இருமினாள்.
சில நேரங்களில் கரியிலைகளோடு மேற்குக்காற்றும் வீசியது. இலைகள் மட்டுமல்ல தொட்டாச்சிணுங்கி பூக்களும், எருக்கஞ்செடி பூக்களும் மேற்குக் காற்றில் கலந்திருக்கும். அவையில் சில இலட்சுமிக்குட்டியின் ஆடையிலும், செம்பட்டை முடிகளிலும் ஒட்டிப் பிடித்திருக்கும். அவள் அசையவில்லை. சில வேளைகளில் அவள் மீது பைன் மரத்தின் இலைகள் கொழிந்து விழும்.
குயவர்களின் குடிசைகள் அங்கிருந்து வெகு தொலைவிலில்லை. குடிசைகளுக்கிடையில் சக்கரங்கள், வெயிலில் காய்வதற்காக வைக்கப்பட்ட மண்பானைகள், சேற்றின் சின்ன சின்ன கூமாரங்கள். அதற்குப்பின்னால் நதிவரை சதுப்பு வயல்கள். இலட்சுமிக்குட்டி சதுப்பு வயல்களில் நண்டும், மீனும் தேடி அலைவதுண்டு. எப்போதும் தனியாக காக்கைகளுடனும், நாரைகளுடனும், பருந்துகளுடனும் பேசிக்கொண்டு அவள் நடப்பாள். ஆற்று வழியாக சங்குகளை நுரைத்து நகர்கின்ற படகுகளுக்கு நேராக அவள் சத்தமிடுவாள். நதியோரங்களில் வளர்ந்த புதர்களிலிருந்து பூக்களைப் பறித்து முடிக்குள் திருகுவாள். அப்படி அலைந்து திரியக்கூடாதுனு பாத்திரங்களை எடுத்திட்டுக் கிளம்பும்போதெல்லாம் அம்மாளு அவகிட்ட சொல்லுவாள்.
“ நான் எங்கேயும் போக மாட்டே’ சாணிபோட்டு மெழுகப்பட்டத் திண்ணையிலிருந்து அவள் சொல்லுவா.
அம்மாளு பக்கத்து குடிசையில் பாட்டியம்மாகிட்ட அவமேல எப்பவுமே ஒரு கவனம் வேணும்னு சொல்லிட்டே இருப்பா. பத்து, பதினேழு வயசானாலும் புத்தி சுவாதீனம் குறைவு. பாட்டிம்மா தன்னோட ரெண்டு கண்களும் அவ மேல தா இருக்கும்னு உறுதியளிப்பா. ஆனா பாட்டிம்மாவுக்கு தூரப்பார்வை மிகக்குறைவு. அதோடு எப்பப் பார்த்தாலும் தூங்கிட்டுதா இருப்பாங்க.
பாட்டிம்மாவெ எப்படி தன் வசப்படுத்தணும்னு இலட்சுமிக்குட்டிக்கு நல்லாத் தெரியும். நண்டு சுட்டுக்கொடுத்தா போதும்.
தீக்கனலில் போட்டு நண்டு சுட்டெடுக்கற வாசம் கேட்டா பாட்டிம்மாவுக்கு பொறுமை இருக்காது. தொண்ணூறு வயசு முடிஞ்சுது இப்போதும் நண்டு மேலயும் மீன்மேலயும் உள்ள விருப்பம் தீரவே இல்ல.
சுட்டெடுக்கப்பட்ட நண்டின் ஓடுகளை அடர்த்தியெடுக்கும்போது போது, பாட்டிம்மாவுக்கு பழைய நாட்கள் ஞாபகத்துக்கு வரும். சதுப்பு நிலங்களிலும், ஆற்றோரங்களிலும் அலைந்து திரிந்து பாட்டியம்மாவும் நிறைய நண்டுகளை பிடித்ததுண்டு. ஒரு தடவ பெரிய ஒரு நண்டு கைத்தலத்தில் இறுக்கின வலி தொண்ணூறு வயசாகியும் போகல. நண்டு ஓட்டையிட்ட கைத்தலத்தை நீட்டிப்பிடித்துக் கொண்டு, சதுப்பு வயல்கள் தாண்டி குடிசைக்கு கொடுங்காற்றின் வேகத்திற்கு ஓடி வந்தாள். நினைத்துப்பார்த்தா சிரிக்காம இருக்க முடியாது அந்த நண்டோட ருசியோ அதுவும் இப்போ வர மறக்க முடியாது அடிக்கடி இலட்சுமி தா அத ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தாள்.
அம்மாளுக்கும் பொக்கனுக்கும் லட்சுமி ஒரே மகளல்ல. அவளுக்குக் கீழே அஞ்சு பேரு. மூணு பேரு பக்கத்துல இருக்குற எல்.பி ஸ்கூலுக்கு போறாங்க. ரெண்டு பேரு ஹைஸ்கூலுக்கும். அவங்கெல்லாம் காலையில போனா சாயங்காலந்தா திரும்ப வருவாங்க. அவங்க போறதுக்கு முன்னாடியே அப்பாவும், அம்மாவும் தூக்குப்போசி எடுத்துட்டு போயிடுவாங்க. தினமும் சந்தையும் இருக்கு.
இலட்சுமிக்குட்டி அவங்ககூட போகமாட்டா அவளுக்கு விருப்பம் சதுப்பு வெளிகளில சுற்றி நடப்பதில்தான் மூளை வளர்ச்சி அடையாத பொண்ணு. அப்படி நடக்கலாமா? மூள வளர்ச்சி அடையலேன்னாலும் பதிமூணு வயசில் அவள் ருதுவாகியிருந்தாள்.
‘ருதுவானப் பெண் அவள்’ அம்மாளு , பொக்கங்கிட்ட அடிக்கடி சொல்லுவா.
அவன் ஆற்றோரத்திற்குப் போய் கல்யாணியின் காய்ச்சின சாராயம் குடித்துவிட்டு வந்த நேரம் என்றால் அது கேட்டா போதும் கோபம் வரும்.
‘நீதானே பெத்த?’
மூளை வளர்ச்சி இல்லாத ஒரு மகளை பெத்ததுக்கு அவன் அம்மாளுவுக்கு ஒருபோதும் மன்னிப்பு அளிக்கத் தயாராகவில்லை
‘நான் பெத்ததா? அது சரி அப்போ உங்களுக்கு இதுல பங்கில்லையா?’
அம்மாளு எதிர்த்து கூறுவாள்,
‘பங்கு……….. த்தூ……..’
அம்மாளு ஆவேசமாக நெருங்குவா அடுப்படில இருக்கற நேரம்பார்த்து கலகம் தொடங்கினாங்கன்னா கையில ஒரு விறகு கொள்ளியோ, கரண்டியோ இருக்கும்.
“ம்ஹூம் என்ன?’
‘பல தடவ சொன்ன விஷயந்தான்’
இலட்சுமிக்குட்டி அவனோடதல்ல.’
‘வேற யாரோடது?’
அது அவனுக்குத் தெரியாது சந்தைக்கும், திருவிழாவுக்கும் போறவதானே அம்மாளு. பல ஆம்பளகளோட அவ பழகுவதுண்டு.
‘சொல்லு யாருடையது?’
‘அது உனக்குத் தானே தெரியும்.’
‘என்னோட நீலிபகவதி தாயே’
உள்ளம் கலங்கியுள்ள அந்த பேரொலியில் குயவக் குடிசைகள் அலறும். ஆனா பொக்கனுக்கு ஒரு அசைவும் இருக்காது.
‘நீலியார் பகவதி உண்மை அறியாதவள் அல்லவே.!’ பூசப்படாத மண் சுவரில் சாய்ந்து உட்கார்ந்து அவன் புகை விடுவான். மாரிலடித்து அழுகின்ற அம்மாளுவை ஆறுதல்படுத்த பக்கத்து வீட்டுப் பெண்கள் அதற்குள் பாய்ந்து வந்திருப்பார்கள். பாட்டிம்மா பக்கத்துக் குடிசையில முன்னாடி உட்காந்து பொக்கனை சத்தமாக குத்தம் சொல்லிக் கொண்டிருப்பா.
என்ன பார்க்கிறோம் என்ன கேட்கிறோம் என்று உணராமலே இலட்சுமிக்குட்டி.
அவ தலைல களிமண்ணுனு பொக்கன் சொல்லுவா.
‘எடுத்து சட்டியும் பானையும் செஞ்சுக்கோ’ பாட்டிம்மா நல்ல சூடான பதிலடி கொடுப்பா.
‘நேத்தும் நண்டோ மீனோ கொண்டு வந்திருப்பா’
‘போடா ஒனக்குத் தெரியாது. அவ புத்திசாலி பொண்ணுதா’
‘ம்ஹும்’
‘அஞ்சாம் வகுப்பு வர படிச்சவதானே அவ’
‘பள்ளிக்கூடத்துக்கு அனுப்பற வேலய நா செஞ்சிட்டே அவ ஏதாவது படிச்சாளா?’
‘ரெண்டாங்கிளாஸ்ல படிச்ச பாட்டு அவ நேத்துக்கூட எங்கிட்ட பாடி காமிச்சா என்ன ஒரு ஞாபக சக்தி.’
சேற்று வயல்களில் நண்டும் மீனும் நீந்தற சத்தம் அப்போது பொக்கனுக்குக் கேட்க முடிந்தது. இலட்சுமிக்குட்டி அப்போதுவரை ஒரு துண்டு கிள்ளித் திங்க கூட அவ அப்பாவுக்குக் கொண்டு வந்ததில்ல. அந்த அழுத்தம் அவருக்குள்ளும் இருந்தது. எதுக்குக் கொண்டு வரணும்? அப்பா அல்லவே!’ வேண்டாம் எனக்கொன்னும் கேட்க வேண்டா நான்தா அவளோட அப்பா அல்லவே. அவன் மரணித்த நிர்விகார எண்ணங்களுக்குள் கடந்து போவான். மெதுமெதுவாக இருள் வந்து குயவர் குடிசைகளை மூடும். புணருகின்றவர்களின் முக்கல், முனகல் தவிர வேறொன்றும் கேட்பதற்கில்லை. அப்படி ஓர் இரவு விடிந்தபோது இலட்சுமிக்குட்டி மாசமாய் இருப்பது அம்மாளுவுக்குத் தெரிய வந்தது. இலட்சுமிக்குட்டிப் பாயில் படுத்திருந்தாள். அவளுடைய அடி வயிறு கனமானதாக இருந்ததை அம்மாளு அறிந்து கொண்டாள். சந்தேகம் தீர்க்க அம்மாளு அவளுடைய அடிவயிற்றில் தொட்டுப் பார்த்தாள். அடுத்த நொடி நீலியார்பகவதி அம்மாளை சத்தமாகக் கூப்பிட்டு விட்டாள். நாக தேவதைகளை அழைத்தாள். குயவக்குடிசைகள் பதைபதைத்து உணர்ந்தன.
அதற்குள் அம்மாளு இலட்சுமிக்குட்டியை வாசலுக்கு இழுத்துத் தள்ளியிருந்தாள்.
“எனக்குத் தெரியாது………. எனக்குத் தெரி யாது’ இலட்சுமிக்குட்டி அழுது கொண்டு சொன்னாள்.
‘பொழுது விடியல. அதுக்கு முன்னாடியே தொடங்கியாச்சு.’ பாட்டிம்மா, தடி கையில் எடுப்பதற்கு முன்பாக அம்மாளுவைப் புலம்பினாள். ‘இப்படி இருப்பாங்களா ஒரு அம்மா, இந்தப் பொண்ணையும் அவ வயித்துல சுமந்தவ தானே!, நொந்து பெத்தவ தானே!, முலையூட்டினவதானே!, அப்படி பலதையும் புலம்பிக் கொண்டு பாட்டிம்மா தடி ஊன்றிக்கொண்டு வெளியில் இறங்கினாள்.
பொக்கணும், அம்மாளுவும் பேய் பிடிச்சவங்க மாதிரி ஆடித் தள்ளனாங்க இலட்சுமிக்குட்டி தரையில் கிடந்துத் துடித்தாள்.
ஓடிவந்த குயவர் பொக்கனப்பிடித்துத் தள்ள முயற்சித்தார்கள். குயத்திகள் அம்மாளுவையும் தள்ளினார்கள். பாட்டிம்மா குனிந்து உட்கார்ந்து இலட்சுமிக்குட்டியைத் தன்னோடு சேர்த்து அணைத்தாள்.
‘கொஞ்சம் அடங்கு அவ செத்துருவா”
‘சாகட்டும்’
‘வேண்டாம் இப்படி ஒரு மூதேவிய இங்கே’
‘என்ன தப்பு செய்தா இவ?’
‘அவளோட வயித்துலப் பாருங்க.’
பார்வைக் குறைபாடுடையக் கண்களால் பாட்டிம்மா இலட்சுமிக்குட்டியைப் பார்த்தாள். நடுங்குகின்ற வலது கை அவளுடைய வயிற்றின் மேல் பாகமாய் நகர்ந்தது. வயிறு கனமுடையாதத்தான் இருக்கிறது என்று பாட்டிம்மாவுக்கும் தோன்றியது.
“மகளே எங்கிட்ட சொல்லு யாரு? பாட்டிம்மா கேட்டாள்
‘நெசமாவே எனக்குத் தெரியாது பாட்டி……….மா’
விதும்புதலுக்கிடையில் இலட்சுமிக்குட்டி சொன்னாள்.
பாட்டிம்மாவுக்கும் கோபம் வந்தது.
‘அப்புறம் உனக்குத் தெரியாமலா?. உனக்குத் தெரியாமத்தா ஒரு ஆம்பள உன் மேல படுப்பானா?”
இலட்சுமிக்குட்டி குழம்பினா. பாட்டிம்மா அவளோட ரெண்டு தோள்களையும் பிடித்தாள்.
‘அவ ஒங்கிட்ட சொல்லி இருப்பா யார்கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு, சொன்னா கொன்னுடுவேன்னு இல்லயா?’
‘இல்ல’
‘பணம் கொடுத்தானா ஒனக்கு?’
‘இல்ல’
‘ எப்படி இருப்பா அவ ‘
இலட்சுமிக்குட்டியோட நினைவுக்கு ஒரு வாசம் அப்போதுதான் கடந்து வந்தது. ஒரு தேகத்தின் வாசம். அது அந்த நிமிடமே கொடூரமானது. இலட்சுமிக்குட்டி அந்த வாசத்தை உட்கொள்ள மூக்குகளை விரித்துக்கொண்டு அங்கும் இங்கும் முகத்தை நீட்டினாள்.
‘என்னடி புள்ள பாட்டிம்மா அவளுடைய செய்கைகளைப் பார்த்துட்டு அதிர்ச்சிக்கு ஆளானாள்.
‘ஒரு வாசம்…………….’ அவள் சொன்னாள்.
தன்னுடைய திடுக்கத்தை சுற்றிலும் வேடிக்கைப்பார்த்து நிற்கின்றவர்களுக்கு நேராகப் பார்த்தாள். அம்மாளு சாப வார்த்தைகளுடன் இலட்சுமிக்குட்டியைப் பிடித்து உயர்த்தினாள். அவள் நகர்ந்தாள். கருநொச்சிகளுக்கிடையிலிருந்து அம்மாளு அவளை உதறித் தள்ளினாள்.
‘போ எங்கேயாவது போ…….. நாசமாப் போனவளே இலட்சுமிக்குட்டி குப்புற அடிச்சு விழுந்தாள். அம்மாளு அழுது கொண்டே பின்னாடி நகர்ந்தாள். இலட்சுமிக்குட்டி மெதுவாக எழுந்தாள். வேறு யாரும் அங்கு செல்லவில்லை. பாட்டிம்மாவும் அசையவில்லை.
‘அந்த வாசம்……… எனக்கு நல்ல உறுதியாத்தெரியும். பைன்மரங்களுக்குக் கீழே நடக்கும்போது இலட்சுமிக்குட்டி தனக்குத்தானே புலம்பினாள்.
பைன்மரத்திலிருந்து இலைகள் கொழிந்து விழுந்தன. அகன்ற பாதை வழியாக ஒருவன் நடந்து வந்தான்.
இலட்சுமிக்குட்டி சிரமத்தோடு எழுந்து அவனுக்கு நேராக நடந்தாள். அவள் தன்னுடைய தேகத்தை முகர்ந்த போது அவனுடைய முகம் வெளிரியது.