முனைவர்.நா.தீபா சரவணன்
உதவிப்பேராசிரியர்
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

ஏதோ பெயர் எழுதப்பட்ட பட்டணம். பனிக்காலப் படலங்கள். என்னுடைய பழையகம்பளி குளிரைத் தாங்க போதுமானதாக இருக்கவில்லை. வெயிலோ வெளிரிய ஒரு பிரகாசமாய் இருந்தது.

எதிரிலிருந்து  மக்கள், கூட்டமாக வருவதை நான் பார்த்தேன். கூட்டத்தின் மௌனம் என்னை ஆச்சரியப்படுத்தியது. நான் வெளியில் இறங்கி  நின்றேன்.

நாலு பேர் சேர்ந்து சுமக்கக் கூடிய மூன்று சின்னச்சின்ன சவப்பெட்டிகள் எனக்கு முன்பு மெதுவாக நகர்ந்தன.

சவப்பெட்டிகளுக்கு வெண்மை நிறம். மேல் பாகத்தில் சிலுவைச் சின்னங்கள். சவப்பெட்டிகளுக்குப் பின்னால் நடப்பவர்கள் சிலர் அமைதியாக அழுதுகொண்டு வந்தார்கள். அனைவரும் கடந்து சென்ற பிறகு நான் வெளியில் நடுவில் சென்று நின்று இறுதி யாத்திரைக்கு நேராகப்  பார்த்தேன். மூன்று குழந்தைகள் இறந்திருக்கின்றனர் என்பதல்லாமல் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

‘மரணத்தின் சாவி யாருடைய கையில்?’

ஒரு பெருமூச்சுவிட்டபடி நான் பயணத்தைத் தொடர சிந்தித்துக் கொண்டிருந்தபோதுதான் தளர்வோடு வருகின்ற  ஊனமுற்ற ஒரு வயதானவர் என் கண்களில் பட்டார்.  நிறம் மங்கியதும் பல இடங்களில் கிழிந்ததுமாக இருந்தது அவர் அணிந்திருந்த கோட்டும்,  கழுத்தில் சுற்றப்பட்ட மப்ளரும், தலையில் தொப்பியும் மிகப் பழையதாக இருந்தது. தொப்பியினால் மறைக்கப்படாமல் தலையின் இருபக்கங்களிலும் நரைத்த முடிகள் எழுந்து நின்றன.

‘அவங்க ரொம்ப தூரம் போயிட்டாங்களா ‘ தளர்ந்த ஒரு பார்வையுடன் கிதைத்துக்கொண்டு அவர் கேட்டார்.

இறுதி ஊர்வலம் ஒரு வளைவு திரும்பி மரங்களுக்கு அப்புறம் மறைந்திருந்தது.

‘இதோ அங்கதான் போயிருப்பாங்க. மரக்கூட்டங்களுக்கு நேராக கைநீட்டி நான் கூறினேன்.

மரங்களுக்குமேல் ஒளி கிரணங்களைப் பரப்புகின்ற வானம் மேகமாய் காட்சி அளித்தது.

அவர் மறுபடியும் இழுத்து இழுத்து நடக்கத் தொடங்கினார்.

‘நில்லுங்க. யாரு செத்தாங்கணு எங்கிட்ட தயவுசெய்து சொல்லுங்க நான் ஆவலோடு கேட்டேன்.’

அவர் நின்றார் .

‘நீங்க பாக்கலையா ?’

‘பார்த்தே. ஆனா என்ன நடந்துச்சுன்னு எனக்கு புடிபடல’

திடீரென்று அவருடைய முகபாவம் மாறியது.

‘எங்களோட மூணு குழந்தைங்களையும் அவங்க கொண்ணுட்டாங்க’ அவர் தடுமாற்றத்துடன் கூறினார்.

‘யாரு……..? ஓர் அடி முன்னால வெச்சே

‘அப்போ உங்களுக்கு ஒண்ணும் தெரியாது ….இல்லையா?’

‘நான் கொஞ்ச நேரம் முன்னாடிதா இந்த மக்கள் கூட்டத்தில வந்தே.’

‘நீங்க யாரு’ அவர் என்னை  மேலும் கீழும் பார்த்தார்.

நான்  தயங்கினேன். உடனே கூறுவதற்கான தெளிவானதொரு பதில் எங்கிட்ட இல்ல. அப்படி நிற்கும்போது என் காதுகளில் கடல் ஆரவாரித்தது. பிறகு  பாலைவனத்தில் காற்று வீசி அடிக்கின்ற சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் மலைவாசிகளான செந்நாய்கள் ஊளை இடுவது கேட்டது.

‘உம் பார்த்தா நீயும் எங்க வம்சத்தில் பட்டவன்தானு  தோணுது.’ வயதானவர் கூறினார்.

‘அவருடைய வம்சம் என்னவென்று நான் விசாரிக்கல. அவரு அத விளக்கவும் தயாரா இல்ல.’

‘தூங்கிகிட்டு இருந்த நம்மளோட மூணு குழந்தைங்களை அவனுக பெட்ரோல்  குண்டெறிந்து  கொன்றது, தீயில் வெந்து எரிந்து  குழந்தைங்க மூணுபேரும் சவப்பெட்டில தூங்கிடுவாங்கன்னு அவங்க நினைக்க வேண்டாம். பெட்ரோல் குண்டு நம்மகிட்டயும் இருக்கே. அவங்க பக்கம் குழந்தைங்களும்.’

உணர்ச்சிவசப்பட்டதால் அவரின் முகம் இறுகியது.

மூச்சு வாங்கிக்கொண்டு கழுத்தில் சொடுக்கு எடுத்தார். எனக்கு எதுவும் கேட்கவோ சொல்லவோ இடம் தராமல் அவர் முன்னோக்கி நடந்தார்.

நான் கருணையோடு செய்வதறியாமல் அசைவின்றி அவரைப் பார்த்தேன். ஓரங்களில் மரங்கள் சலனமின்றி நின்றன, மரத்துண்டுகளில் கூர்மையான மஞ்சள் துண்டுகள்.

வயதானவர் தளர்ச்சியோடு   நடந்தார். நான் அதுக்குமேல அங்க நிக்கல. பாதையில் பலத்தக் காற்று வீசியது. இடையிடையே என் பார்வை வானத்தின் தூய்மையில்  நீண்டு சென்றது. பாதையோரங்களில் தானாக வளர்ந்த செடிகள் சின்னச்சின்ன நீல வர்ணப் பூக்களுடன் நின்று கொண்டிருந்தன. அவைக் காற்றில் மெல்ல அசைந்தன. வழியில் உளளச் சின்ன வண்ணத்துப்பூச்சிகள் சில செடிகளை வலம் வைத்துப் பறந்து கொண்டிருந்தன.

காது உள்ளவன் கேட்கிறான். நான் ஆர்வத்தோடு திரும்பிப்பார்த்தேன். எனக்குப் பின்னால் வேற்று மொழியின் சத்தம் கேட்டது.  பாரம்பரிய உடையணிந்து நான்கு புரோகிதர்களின் தலைமையில் ஏதோ காரியத்தை சொல்லி சக்தமான எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு பெண்களும் குழந்தைகளும் உட்பட நிறைய பேர் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் மிகவும் கோபத்துடன் காணப்பட்டனர். புரோகிதர் ஒருவருடைய கழுத்தின் நரம்புகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற பயத்தை ஏற்படுத்தியது. உயர் இரத்த அழுத்தம் காரணமாக இருக்கலாம். அவருடைய முகம் சிவந்தும், கண்கள் முன்னுக்குத்தள்ளியும் இருந்தன.

பாதை இழந்தவனாக நான் ஒதுங்கி நிற்க, கோபத்தோடு வந்தக் கூட்டம், கடந்து சென்றது. ஆரவாரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. பிறகு கேட்காமலானது.

‘ஹா நீ என்ன இங்கே இருக்கிறே குந்தம் விழுங்கின மாதிரி கரகரத்த ஒரு சத்தம் என் காதுகளில் விழுந்தன.

திரும்பிப் பார்த்தபோது நான் என்னவென்று தெரியாமல் திகைத்தேன்.கைலி  மடக்கிக் கட்டி, கையில் ஒரு பீடியுடன் ஒருவன் எனக்கு நேராக நொண்டிநொண்டி வந்தான். அவரையே தான் நான் கல்லறைக்குப் போறவழில பார்த்தேன். ஒரு சந்தேகமும் இல்லை. அவரேதான். ஆனால் தோற்றமும் மொழியும் முற்றிலும் வேறு. சட்டையின் மேல் பாகத்தில் இரண்டு பட்டன்கள் போடாததால் அவருடைய பரந்த மார்பு, நிறைந்த ரோமங்களோடு வெளியில் தெரிந்தது.

‘தேவாலயத்திற்கு  எதிர்ப்பு அறிவிக்கப் போறத நீ பாக்கலையா? உன்னுடைய இரத்தம் கொதிக்கலையா? இல்ல நீ எங்கக் கூட்டத்தச் சேர்ந்தவன் தானே அவர் என்னை முழுசாக அளந்தார்.

மீண்டும் நான் அவரின் முன்பு தயங்கி நின்றேன்.  மீண்டும் என் காதுகளில் கடல் ஆர்ப்பரிக்கவும், காற்று வீசவும். செந்நாய்கள் ஊளையிடவும் செய்தன.

‘சீக்கிரமா போகணும் இல்லைனா  அவனுக தேவாலயத்தில் புகுந்திடுவாங்க. நிறைய போலீஸ்காரங்கள இறக்கி இருக்காங்கன்னு செய்தி. இறக்கட்டும் எத்தன போலீஸ்காரங்க இருந்தாலும் அந்தக் கழுதைகளை இன்னைக்கு தேவாலயத்திற்குள்ள ஏற விடமாட்டோம். அது நிச்சயம்.’ அவர் ஆவேசத்துடன் கூறினார்.

பீடியில் தீ அணைந்திருந்தது. அவர் சட்டை பாக்கெட்டில் இருந்து தீப்பெட்டி வெளியில் எடுத்தார்.

‘போக விடணுமா?’

‘வேண்டாம்’ நான் கூறினேன்.

உதடுகளைக் குவித்து முகத்தை ஏதோ ஒரு வார்த்தைக் கூறுவது போலாக்கி அவர் பீடி பத்த வைத்தார் .அவருடைய மூக்கு துவாரங்கள் இரண்டும் சிம்னிக் குழாய்களாக மாறி கடும் மணத்தைக் காற்றில் கலரச்செய்தது. கஞ்சா……

திடீர்னு நான் அதிர்ச்சியானேன்.  நான் ஆச்சர்யத்தோடு வயதானவரின் முகத்தைப் பார்த்தேன். அவருடையக் கண்களில் பிரகாசம் பரவியிருந்தது.

‘வெடிவைக்கத் தொடங்கிட்டாங்க.  இனி நல்லா இருக்கும். நான் வீட்டுக்குப் போறேன்.’ அவர் திரும்பி நடந்தார்.

நொண்டியாக இருந்தாலும் நம்ப முடியாத வேகத்தில் அவர் பாதுகாப்பான தூரத்திற்கு அகன்றார்.

நான் இறந்தவனைப் போல நின்றேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.