சேசாத்திரி ஸ்ரீதரன்

ஒரு அரசன் தனது ஆட்சி தன்னை விட்டுப் போகாமல் இருக்கத் தன் சுற்றம், நட்பு ஆகியோரைக் கொண்டு ஒரு பாதுகாப்பு வளையம் / அரண்   அமைத்திருப்பான். இந்த வட்டத்துள் வருவோர் மட்டுமே படைத் தலைவர்களாக அமைச்சர்களாக தூதுவர்களாக கருவூலக் காப்பாளர்களாக இன்னும் பிற பதவிகளில் அமர்த்தப்படுவர். அப்போது தான் மன்னவனின் படையும், செல்வமும் (கூழ்), குடிகளும் (நாடும்) அவனுடையதாக இருக்கும். அல்லாவிடில் அவன் உடனே அரசாட்சியை இழந்து விடுவான்.

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு  (குறள் 381; இறைமாட்சி)

ஒரு மன்னன் ஆளும் நாட்டின் பரப்பு எத்தகு விரிந்ததாக இருந்தாலும் மன்னன் விடுக்கும் செய்தி அவனது கீழ்நிலைச் சேவகர், பணியாளருக்கு உடனடியாகச் சென்றடைய வேண்டும். அதே போல நாட்டின் மூலை முடுக்குகளில் நடந்தேறும் நிகழ்வுகள் குறித்த செய்தி மன்னனின் காதுகளுக்கும், கவனத்திற்கும் விரைந்து எட்ட வேண்டும். இந்த பின்னல்வலை (network) சீராக நடைபெற்றால் தான் அவன் ஆட்சிக்கு கேடு ஏதும் வராது. இதில் எங்கேனும் சுணக்கம், தொய்வு ஏற்படுமானால் அது சீரற்ற ஆட்சியாகவே கருதப்படும். இப்படி மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் செய்தியைப் பரிமாற நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் ஆங்காங்கே இவர்கள் கூடிப் பேசுவதற்கு என்று இடங்கள் ஏற்படுத்தப்பட்டதற்கு சான்றாக சில ஊர் பெயர்கள் உள்ளன. இதற்கு “கூடல்” என்று பெயர். மதுரைக்கு கூடல் என்று ஒரு பெயர் உண்டு. கூடல் என்றால் சங்கம், சங்கமம் ஆகும். கல்வெட்டுகளில் கூடல் என்று குறிக்கப்பட்ட இவ்விடங்கள் இன்று கூடலூர் எனப்படுகின்றன. கருநாடகம் அசன் மாவட்டத்தில் காவேரி ஆற்றுக்கு வடக்கே ஆறகலகூடு 7000 என்ற ஊரை வெற்றிப் பரிசாக முதலாம்இராசராசன் பஞ்சவன் மாராயன் என்ற படைத்தலைவனுக்கு ஈந்தான். இங்கும் கூடு என்பது ஆறு அகன்ற இடத்தில் 7000 பேர் கூடுவதைக் குறிக்கிறது. தகடூர் > தகு + அடு + ஊர். தகு என்றால் பொருந்து, கூடு என்று பொருள். அடு என்றால் செய்கை. இதாவது கூடிச் செயற்படும் இடம் (assembling point). கல்வெட்டில் இடம்பெறும் மிலட்டூர், மிலட்டுநிலை, மிழலைநாடு ஆகிய பெயர்கள் சேரும் இடம், தங்கும் இடம், திரளும் நாடு எனும் பொருள் கொண்டவை.

மில் என்றால் பொருந்துதல், சந்தித்தல், நெருங்குதல் என்ற கருத்துடையது. தமிழில் கணவனைக் குறிக்க மிணாளன் என்ற சொல்லும் மனைவியைக் குறிக்க மிணாட்டி என்ற சொல்லு கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இது மில் > மிள் > மிண் என்று சொல்லாய்வில் விரியும். இன்றும் இந்தி மொழியில் மிலானா என்ற சொல் பொருந்துதல், கூடுதல் என்ற பொருளில் பயன்பாட்டில் உள்ளது. இடத்தைப் போலவே மக்கள் கூடிச் செயற்படுவதற்கும் மில் என்ற வேரைக் கொண்டு மில் + ஆடு = மிலாடு என்ற சொல் மலையமான்களால் கூட்டப்படும் சங்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. மில் > மல் > மண்டு என்றால் நிறைதல் ஆகும். இந்த மிலாடு > மலாடு என்றும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. மலாடு என்பதும் பொருந்துதல், கூடுதல் கருத்து கொண்டதே. ஒரு அரசனின் செய்தியை கீழ்நிலைக்கு கொண்டு சேர்க்கவும் கீழ்நிலை நடப்புகளை மேலே கொண்டு சேர்க்கவும் நம்பிக்கைக்குரிய ஆள்கள் தேவை. இதற்கு ஏதோ ஒரு இன உணர்வு அடிப்படையாக அமைகிறது. இந்த மிலாடர்கள் மலையமான்களின் கோத்திரத்தவராக இருந்துள்ளனர். இந்த ஆள்கள் அவ்வப்போது கூடி ஆலோசித்து செயற்பட்ட செய்தி இரண்டாம் இராசராசனின் 11 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 1161 இல் கள்ளக்குறிச்சி வட்டம் வலஞ்சுரம் பசுபதீஸ்வரர் கோயிலில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்றில் 79 நாட்டு மிலாடு (சங்கம்) என்று குறிப்பிடுகிறது. இந்த மிலாட்டில் தருமபுரி, வேலூர், ஈரோடு, தஞ்சை பகுதி நாட்டு மிலாடர்களும் கலந்து கொண்டுள்ளனர் (பார்க்க ஆவணம் 11, பக்.32). இந்த பகுதிகள் அனைத்துமே மலையமான் நாடு அல்ல என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பின் எப்படி மிலாடு என்பது மலைநாட்டைக் குறிக்கும்? ஆனால் மலைநாடு என்பதையே மிலாடு, மலாடு என்று திரித்து கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளதாக Ephigraphia Indica வில் தவறாக குறித்துவிட்டனர். இதே தவறான கருத்தை அகராதிகளிலும் ஏற்றியுள்ளனர். இதனால பெரும் சர்ச்சை உண்டாகிறது. எனவே கல்வெட்டுச் சான்றுகளுடன் மிலாடு, மலாடு என்பது மலைநாடு அல்ல அது சங்கத்தை, சங்கமத்தை தான் குறிக்கிறது என்று காட்டுவதே இந்த கல்வெட்டு விளக்கத்தின் நோக்கம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் வீரணம் என்ற ஊரில் உள்ள 23 வரி நடுகல் கல்வெட்டு

 1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிசைய கம்ப போத்தரையர்க்கு யாண்டு பதினாலாவது
 2. வாண கோவரையர் வயிர மேகனார் வாண கோப்பாடி, மலா
 3. டு, மிலாடைப் பாடியுஞ் சோழ நாட்டு காவேரியின்
 4. வடகரை எல்லாமாளா நின்ற காலத்து வேணாட்டு முன்னூ
 5. று மெயின நாடை
 6. ந்நூறும் ஆண்
 7. ட நந்தி பெருமா
 8. னார் மகன் அக்கழி
 9. மல்லனார் மேற்
 10. கோவலூர் நாட்டு
 11. வென்னாமுஞ் சா
 12. த்தனூரும் ஆளா
 13. நிற்கப் பங்கள
 14. நாட்டுடைய மாதே
 15. வர் படை சாத்த
 16. னூர் எறிய வே
 17. ன்னாட்டு நி
 18. ன்று சென்று பி
 19. ன்பு சென்று
 20. பிணங்கி வே
 21. னாட்டல்லை
 22. க் காராச்சங்க
 23. ன்ப் பட்டான் கல்

 எறிய – அழிக்க; பட்டான் – வீர சாவடைந்தான்; கல் – நினைவுக் கல்

விளக்கம்: பல்லவன் கம்ப வர்மனின் 14 ஆவது ஆட்சி ஆண்டில் 877 இல் வாணகோவரையர் வயிரமேக வாண அரசன் தென் பெண்ணையின்  வடக்கே திருமுனைப்பாடி, செங்கம் முதலான வாணகோப்பாடி நாட்டையும், திருக்கோவிலூர் – உளுந்தூர் பேட்டையை உள்ளடக்கிய மலாடு நாட்டையும், பெரம்பலூர் – சேலம் ஆத்தூர், வாழைப்பாடி ஆகியவற்றை உள்ளடக்கிய மிலாடு நாட்டுப் பாடியையும், சோழநாட்டின் காவேரி வடகரையான அரியலூரையும் ஒன்று சேர ஆண்டு வந்த காலத்தில் வேணாடு முந்நூற்றையும் (செங்கம்), எயில் நாடு ஐந்நூற்றையும் (கிருஷ்ணகிரி) ஆண்ட நந்திப் பெருமகன் போரில் இறந்துவிட அவரது ஆட்சிப் பகுதி சுருங்கி அவரது மகன் அக்கழிமல்லன் மேற்கு கோவலூர் நாட்டின் வெண்ணத்தையும் சாத்தனூரையும் ஆளும் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது வேலூர் பக்கம் உள்ள பங்கள நாட்டை ஆளுகின்ற மாதேவரின் படை சாத்தனூரைத் தாக்கி அழிக்க வெண்ணத்தையில் இருந்து சென்று பகைவரைத் துரத்தி பின்பு சென்று சண்டையிட்டு வெண்ணத்தை எல்லையில் வீரச்சாவடைந்தான் காரச் சங்கன் என்ற வீரன். அவன் நினைவில் நிறுத்திய கல் இது.

வயிர மேக வாணரைசர் நான்கு நாட்டுப் பகுதிகளையும் ஒருங்கே ஆண்ட குறிப்பை வைத்துப் பார்க்கும் போது அவர் வேந்தர் என்று கருதப்படுவதற்கு ஈடாக ஒரு பெரு நிலப் பகுதியையே ஆண்டுள்ளார் என்று தெரிகின்றது. இந்நாடுகளை அவரது முன்னோர்கள் போரில் வென்று அந்த ஆட்சியாளர்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது. இவரது மகள் தான் செம்பியன் மாதேவியான கண்டராதித்த சோழன் மனைவி. இக்கல்வெட்டில் மிலாடு என்று தனியாகவும் மலாடு என்று தனியாகவும் குறிக்கப்பட்டுள்ளது காண்க. அவை இருவேறு நாடுகள் என்று தெளிவாகிறது. எனவே வடக்கே இருந்த கன்னட வாணர் மலையமான்களை வென்று தம் நாட்டின் ஆட்சிப் பரப்பை தெற்கே விரித்துள்ளனர் என்று ஊகிக்க முடிகிறது. இந்த இரண்டு சொல்லாட்சியால் மிலாடு > மலாடு என்பன மலைநாடு என்பதன் திரிப்படைந்த சொல்  என்ற வாதம் தகர்ந்து போகின்றது. மல் > மண்டுதல் என்றால் திரளுதல், நெருக்குதல், நிரம்புதல் என்ற சேர்க்கைக் கருத்து கொண்டது. மில் > மிணாளன், மிணாட்டி என்பவை கூடுகைக் கருத்தில் கணவன் மனைவியை குறிப்பவை என்பதை நோக்கினால் மிலாடு என்ற சொல்லும் சங்கம், கூடிச் செயற்படுவது ஆகிய பொருள்களை உடையது என்று விளங்கும்.

பார்வை நூல்: நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும், ச. கிருஷ்ணமூர்த்தி, பக். 212; செங்கம் நடுகற்கள் 46 -1971

சேலம் வாழப்பாடி வட்டம் பேளூர் கிராமம் தான்தோன்றீஸ்வரர் வெளிப்புற கல்லில் வெட்டிய 21 வரிக் கல்வெட்டு

 1. ஸ்வஸ்தி ஸ்ரீ
 2. வீரபாண்டிய
 3. ன் றலை கொண்
 4. ட கோப் பரகேசரி
 5. பன்மற்கு யாண்டு 3
 6. ஆவது பார்க்கவ கோ
 7. த்ரத்து மிலாடுடையா
 8. ன் அகலங்கன் ம
 9. லையராதித்தனான செ
 10. ம்பியன் மிலாடுடை
 11. யானேன் துறிவி நா
 12. ட்டுராளிகளை ஊராளித்திறை
 13. நாற்கழஞ்சே காலே கொ
 14. ள்வதாக பூவிலை செய்
 15. து குடுத்தேன் செம்பி
 16. யன் மிலாடுடையா
 17. னேன்.
 18. இது மா
 19. ற்றுவான்
 20. ஏழா நரக
 21. ம் புகுவான்.

கோத்திரத்து – கோத்திரத்தாரின்; மிலாடு – சங்கம், சங்கமம், assembly, association, federation; மலையர் ஆதித்தன்– மலையர்குலத் தலைவன்; ஊராளிகள் – ஊர், கிராம  நாட்டாமை செய்வோர்; பூ விலை – நில வரி; திறை – கப்பம், tribute

விளக்கம்: ஆதித்த கரிகாலனின் மூன்றாம் ஆட்சி ஆண்டு 969 இல் வெட்டப்பட்ட கல்வெட்டு இது. பார்க்கவ கோத்திரத்தாரது சங்கத்தின் தலைமை உடையவனான அகலங்கன் மலையராதித்தனான செம்பியன் மிலாடுடையன் சொல்வது யாதெனில் “துறவி நாட்டின் கிராம  ஊராட்சி செய்வோர் ஊராளிகள் செலுத்த வேண்டிய வரியாக நான்கு கழஞ்சே கால் கொடுத்தல் போதும் என்று நில வரி நிர்ணயம் செய்தேன் செம்பியன் மிலாடுடையானேன்” என்று ஆணையிடுகிறான். இதை மாற்றிக் கெடுப்பவன் ஏழாம் நரகத்திற்கு போவான். ஒரு நாட்டுப் பிரிவில் 10 – 15 கிராமங்கள் மேல் இருக்கும். அங்குள்ள வரித் திரட்டுவோரைத்தான் இவன் ஊராளிகள் என்கிறான்.

ஆதித்த கரிகாலனின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் 968 இல் இந்த செம்பியன் மிலாடுடையான் திருக்கோவலூர் கீழுர் வீரட்டானமுடைய ஈசன் கோவிலுக்கு இரண்டு நொந்தா விளக்கு எரிக்க 192 ஆடுகள் கொடுத்த செய்தி தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 7 எண்: 900 இல் இடம் பெற்றுள்ளது. அதிலும் மிலாடுடையார் அகளங்கன் மலையராதித்தனாகிய செம்பியன் மிலாடுடையார் என்று குறிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் மிலாடுடையார் என்பது சங்கத் தலைவன் என்பதையும் பெயருக்கு பின்னுள்ள மிலாடுடையார் சோழன், சேரன், பாண்டியன் போல பட்டப் பெயராகவும் ஆளப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகள் “மிலாடு” என்பது மலைநாடு அல்ல அது சாதி சங்கம் தான் என்பதற்கு போதுமான ஆதாரமாக உள்ளன. இல்லாவிடில் பார்க்கவ கோத்திரத்தை மிலாடிற்கு முன் ஏன் குறிப்பிட வேண்டும்? பார்க்கவ கோத்திரத்தில் உட்பட்ட மலையமான்கள் மிலாட குலத்தவர் எனப்பட்டனர்.

பார்வை நூல்: சேலம் நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுகள், எண்: 289, பக். 228, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு.

திருக்கோவிலூர் திரிவிக்கிரம பெருமாள் கோவில் 9 வரிக் கல்வெட்டு

 1. ஸ்வஸ்திஸ்ரீ நரஸிம்ஹ வன்ம நிர்பதி ஸ்ரீ கோவலூரே பஜன் வாஸம் விஸ்வ ஜகன்நிவாஸ வபுஷ ஸ்ரீ வாமனஸ்ய கரோத் ஸைலம் ஸும்பித ஸாதகும்ப விலஸத் கும்பம் ம
 2. ஹா மண்டபம் பிரகாரம் பரமாலிகா விலஸிதம் முக்தாமயீஞ் ச ப்ரபாம் கோயில் ஸ்ரீ வைஷ்ணவர் ரக்ஷை. ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் மருவிய செங்கோல் வளரத் தன் திருத்தமையனொடும் போ
 3. ய் இரட்டப்பாடி ஏழரையிலக்கமுங் கொண்டு கொல்லாபுரத்து ஜயஸ்தம்ப நாட்டி மீண்டு போந்து பேராற்றங்கரைக் கொப்பத்து ஆஹவமல்லனை யஞ்சுவித்து ஆங்கவன் ஆனையும் குதிரையும் பெ
 4. ண்டிர் பண்டாரமுங் கைக்கொண்டு விஜயாபிஷேகஞ்  செய்து வீரசிம்ஹாசனத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பன்மரான உடையார் ஸ்ரீ இராஜேந்திர  தேவர்க்கு யாண்டு ஆறாவது மிலாடான ஜனநாத வளநாட்டுக் குறு
 5. க்கைக் கூற்றத்துப் பிரமதேயம் திருக்கோவலூரான ஸ்ரீ மதுராந்தக சதுர்வேதி மங்கலத்துத் திருவிடைக்கழி ஆழ்வார் ஸ்ரீ விமானம் முன்பு இட்டிகைப் படையாய்ப் பலகைப் பிளந்தமை கண்டு பார்க்கவ வம்ஸத்து மிலாடு உடை
 6. யார் இரணகேசரி இராமரான நரசிங்கவன்மர் கோயிலை இழிச்சிக் கருங்கல்லை கொண்டு ஸ்ரீ விமானமும் மண்டபமும் எடுப்பித்துப் பூரண பொற்குடம் அஞ்சு வைப்பித்துத் திருச்சுற்று மாளிகையும் முன்பில் மண்டப
 7. மும் எடுப்பித்து முத்துப் பந்தலுங் கொடுத்து முன்பு கல்வெட்டுப்படியுள்ள நிமந்தங்கள் எல்லாம் இந்த ஸ்ரீ விமானத்தே கல்லும் வெட்டுவித்தார் நரசிங்க வன்மர் என்று அபிஷேகம் பண்
 8. ணி முடிகவித்து மிலாடு இரண்டாயிரம் பூமியும் ஆண்ட மிலாடுடையார் நரசிங்க வன்மர். நரசிங்கவன்மர் சந்திராதித்தவல் எரிக்க வைத்த திருநுந்தா விளக்கு இரண்டு. இவ
 9. ற்றுக்கு விளக்கு எரிக்க குடுத்த சாவாமூவாப் பெரும் பசு அறுபத்து நாலு. இவற்றால் நிசதம் விளக்கு இரண்டினிற்கு நெய் உறி. இப்பரிசுக் கைக்கொண்டு _ _

நிர்பதி > நரபதி – மக்கள் தலைவன்; பஜன் – வணங்கத்தக்க; படை – கல் அடுக்கு; இரணகேசரி – போர்க்களச் சிங்கம்; இழிச்சி – இடித்து வீழ்த்தி; நிவந்தம் – பூசைத் திட்டம்; அபிஷேகம் – மஞ்ச நீராட்டு; நிசதம் – ஏற்பாட்டு அளவு;

விளக்கம்: தொடக்க வரி சமசுகிருத சுலோகத்தில் உள்ளது. மனிதர் தலைவன் நரசிம்ம வர்மரான மன்னவர்க்கு நன்மங்கலம் சிறக்கட்டும். திருக்கோவலூரில் வணங்கத்தக்க வீடு இது. பேராளாவிய அண்டத்தோன் வாழும் அழகுடையது. வாமனரால் உருவாக்கம உடையது. விரும்பி செய்த கலசம் ஒளிரும் கலசம் மகா மண்டபம் திருச்சுற்று பிரமிப்பான அற்புதமான முத்தால் ஆன ஒளிரும் கோயில். இதை வைணவர் பாதுகாக்க வேண்டும்.

இரண்டாம் இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியை குறிப்பிட்டு அவனது 6 ஆம் ஆட்சி ஆண்டில் 1056 இல் குறுக்கைக் கூற்றத்து பிரம்மதேயம் திருக்கோவலூர் என்னும் மதுராந்தக சதுர்வேதி மங்கலத்து உலகளந்த பெருமாளின் கோவில் விமானம் முன்பு செங்கல் அடுக்கிய கட்டடமாக இருந்தது. அதன் மேல்தட்டு பிளந்து இருந்ததைப் பார்த்த பார்க்கவ வமிசத்தாரின் சங்கத்தை (மிலாடு) உடைய, இதாவது தன் தலைமையில் கட்டுப்படுத்துகின்ற இரணகேசரி இராமன் என்னும் நரசிங்க வர்மன் அந்த செங்கல் கோவிலை இடித்து வீழ்த்தி கருங்கல்லைக் கொண்டு திருவிமானமும் மண்டபமும் எழுப்பி பூரண பொற்குடம் ஐந்தும் வைத்து திருச்சுற்றுப் பிரகாரமும் முன்னே மண்டபமும் கட்டி அதற்கு முத்துப் பந்தலும் செய்து கொடுத்து கோவில் இடிப்பிற்கு முன் இருந்த கல்வெட்டுகளின்படி பூசைத் திட்டம் அத்தனையும் செய்வித்து. இந்த விமானத்தின் கீழ் கல்வெட்டுவித்தார் நரசிங்க வர்மர். அங்கே அவருக்கு மஞ்ச நீராட்டி மணிமுடி கவித்து மிலாடு என்னும் சங்க உறுப்பினர் 2,000 பேருடைய கவனிப்பில் உள்ள நிலத்தை ஆண்டவர் மிலாடுடையார் நரசிங்க வர்மர். இதோடு நரசிங்க வர்மர் சந்திர சூரியர் உள்ள கால அளவும் எரிப்பதற்காக இரண்டு நுந்தா விளக்குகளை கொடுத்தார். இவற்றை எரிக்க அவர் கொடுத்த சாவாமூவாப் பெரும் பசுக்கள் 64 ஆகும். இதற்கு ஏற்படுத்திய இரண்டு விளக்குகளின் நெய்க்கு அளவு உறி அளவு ஆகும். இந்த திட்டத்தை கையில் ஏற்று என்பதோடு கல்வெட்டு செய்தி நின்றுவிட்டது. 2000 பூமியும் ஆண்ட என்ற சொற்றொடர் நரசிம்ம வர்மன் இறந்த பின் அவன் வெட்டிய முதற் கல்வெட்டை அகற்றி இரண்டாம் முறையாக விரிவாக இக்கல்வெட்டை கோபுரத்தின் கீழ் வெட்டி இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

சி.வை. சதாசிவ பண்டாரத்தார் கூறுவது போல இங்கு மிலாடு 2,000 என்பதை நிலத்தின் அளவாகக் கொள்வது தவறு. ஏனெனில் மிலாடு என்னும் சங்கத்தில் வேலூர் வரையான 79 நாடுகளைச் சேர்ந்தவர் அடங்குவர். 79 நாடு என்பது தொண்டை மண்டலத்தின் 79 நாடுகளை குறிப்பதாக அவரே கூறுகிறார். தொண்டைநாடு முழுவதும் மலைநாடு அல்ல அதன் மேற்கில் தான் கிழக்கு தொடர்ச்சி மலைகள் உள்ளன கிழக்கில் அல்ல என்பதை ஈண்டு கவனத்தில் கொள்க. எனவே மிலாடுடையான் என்பது மலைநாடுடையான் என்று பொருள்படாது மாறாக சங்கத் தலைவன் என்றே பொருள்படும் என்று உணர்க. இதனால் பல்லவர் ஆட்சி வீழ்ச்சிக்குப் பின் தொண்டை மண்டல ஆட்சிப் பொறுப்பை சோழர் மலையமான்களிடம் வழங்கி இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது.

பார்வை நூல்: கல்வெட்டுகள் கூறும் உண்மைகள், பக். 12, தி. வை. சதாசிவம் பண்டாரத்தார் & Epigraphia Indica Vol 7, pg 145, K; Areip 123 of 1900

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பெரிய நசலூர் கிராமம் மங்கைமுத்தாயி அம்மன் கோயில் கொற்றவை சிலையின் எருமைத்தலையின் வலப்புறம் உள்ள 6 வரிக் கல்வெட்டு

 1. ஸ்ரீ மு
 2. க்கு
 3. ல மல
 4. யமான்
 5. சாதன் ஸ்ரீ
 6.  _ _

முக்குலம் – மூன்று பட்டமுடைய சாதி

விளக்கம்:  இக்கல்வெட்டு பல்லவர் ஆட்சி குலைந்த 9 ஆம் நூற்றாண்டு காலத்தது என்று கணிக்கப்பட்டுள்ளது. “முக்குல மலயமான்” என்பது பார்க்கவ கோத்திரத்தாரான மலையர் என்னும் நயினார், சுருதிமான் என்னும் மூப்பனார், நந்தமர் என்னும் உடையார் ஆகிய 3 சாதிமாருக்கு தலைவனான சா(த்)தன் என்று பொருள்படும். இவன் இந்த கொற்றவையை வணங்கியுள்ளான் அல்லது சிலையை நிறுவினான் என்று கொள்ளலாம். பெரிய நசலூரில் கிடைத்த 3 கல்வெட்டுகளில் இதுவும் ஒன்று என்று நாளேட்டு செய்தி கூறினாலும் மற்ற இரண்டு கல்வெட்டுகளை அச்சேற்றிய ஆவணம் இதழ் வெளியீட்டார் இதை அச்சிடாமல் விட்டுவிட்டனர். மிலாடு என்ற மேட்டுக்குடி பார்க்கவ சாதி சங்கமத்திற்கு இது ஒரு அருமையான சான்றாகும்.

பார்வை நூல்: 12 ஏப்ரல் 2019 நாளேடுகளில் வெளியான செய்தி

தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோவிலூர் புற ஊரான கீழுர் வீரட்டானேஸ்வரர் கோவில் தென் சுவரில் உள்ள 6 வரிக் கல்வெட்டு

 1. ஸ்வஸ்திஸ்ரீ காந்தளூர்சாலை கலமறுத்த கோவிராஜராஜகேசரி(ய்) பந்மக்கி யாண்டு 11 ஆவது மலா
 2. ட்டு குறுக்கைக் கூற்றத்து திருக்கோவலூர் திருவீரட்டான(ம்)முடையாற்கு மிலாடு உடையான் இராமன் நாட்டடிகள் வைத்த நொந்தா வி
 3. ளக்கு ஒன்றுக்கும் திருவுண்ணாழிகை ஸபையார் வஸம் சந்த்ராதித்தவல் விளக்கெரிப்பதற்க்கு குடு
 4. த்த பொன் பன்னிரு கழஞ்சு. பன்மாஹேஸ்வர ரக்ஷை. இறைவ நரும்பாக்கமெல்லைக் கற்குட்டம்
 5. முறைசேர் கோவல் முழைசுனை பிறைநுதலாய் வெண்மாறங்கெல்லை மேல்பால் கறடி வடா
 6. வாறு கீழ்பால் கண்ணத்தம்பாடியாங் காண்.

நாட்டடிகள் – நாட்டரசன்; திருவுண்ணாழிகை சபையோர் – கருவறை பிராமணர்; கற்குட்டம் – கருங்கல் குளம்; முறைசேர் – வகையாய் அமைந்த,

விளக்கம்: இராசராச சோழனின் 11 ஆம் ஆட்சி ஆண்டு 996 இல் மலாட்டில் அடங்கிய குறிக்கைக் கூற்றத்து திருக்கோவலூர் வீரட்டானமுடைய ஈஸ்வரருக்கு மிலாடு என்னும் சங்கம் உடையான் இராமன் என்னும் நாட்டரசன் வைத்த ஒரு நுந்தா விளக்கிற்கு கருவறை பணி செய்யும் பிராமணரிடம் சந்திர சூரியர் நிலைக்கும் காலத்தளவும் விளக்கு எரிப்பதற்காக கொடுத்த பொன்னின் அளவு 12 கழஞ்சு. இதற்கு  சிவனடியார் கூட்டத்தினர் பாதுகாப்பு தரவேண்டும். அடுத்து பாடல் வரியில் இறைவனுக்கு அரும்பாக்கம் எல்லையில் கருங்கல் குளமும் வகையாய் அமைந்த கோவலூரில் குகை நீரூற்றும் பிறை நெற்றிபோல ஓடும் வெள்ளை நீரை எல்லையாகவும் மேற்கே கரடி வட ஆறும்  கிழக்கே கண்ணத்தம்பாடி இருப்பதையும் காண்க என்று கோவிலின் எல்லை கூறுகிறது. கல்வெட்டு செய்திக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை. திருக்கோவலூர் பகுதியை மிலாடு என்று குறிக்காமல் மலாடு என்று குறிப்பதை நோக்குக. ஆனால் சங்கம் என்று வரும்போது மிலாடு என்று குறிப்பதை நோக்குக.

கல்வெட்டு எழுதறிஞர் ச. கிருஷ்ணமூர்த்தி கல்வெட்டு எழுதும் சிற்பிகள் மிலாடு என்பதை மலாடு என்று தவறாக கொட்டி இருக்கலாம் என்று கருதுகிறார். ஆனால் ஏதோ ஒரு கல்வெட்டில் அத்தகு பிழை நேரலாம் பல கல்வெட்டுகளில் சில நூற்றாண்டுகளாக மலாடு என்று குறிக்கப்படுவதை பிழை என்று கொள்ள முடியாது. மிலாடு என்னும் சங்க உறுப்பினர் கண்காணித்து வாழும் நாடு என்ற அடிப்படையில் நாட்டிற்கும் மிலாடு என்றே குறித்துள்ளனர். ஏதோ வேறுபாடு காட்ட வேண்டும் என்று கருதியே மலாடு என்று குறிக்கத் தலைப்பட்டுள்ளனர் என்று தோன்றுகிறது. மலையமான் நாடு என்பதே மலாடு என்று சிதைத்து குறிக்கப்படுவதாக கூறுவதை சொல்லாய்வின்படி ஏற்பதற்கு இல்லை. கம்ப வர்மன் காலத்திற்கும் முந்தையதாக நடுகற்களில் இனிமேல் மிலாடு, மலாடு குறிப்பு புதிதாக கண்டுபிடிக்கப்பட்டால் இதில் புதிய திசை கிட்டும்.

பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 7 எண்:  857 (AR N0  230 – 1902) பக். 431

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் சித்தலிங்கமடம் வியாக்ரபாதீஸ்வரர் கோயில் முன்மண்டப வடக்கு சுவர் 4 வரிக் கல்வெட்டு

 1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிராஜகேசரி ப
 2. ந்மற்க்கு யாண்டு மூன்றாவது திருப்புலிப் பகவர்க்கு மிலாடுடையார் நாட்டா
 3. ன் சித்தவடவநேன் ஆட்டால் வைத்த திரு நந்தாவிளக்கு ஒன்று. ஒன்றும்
 4. பந்மாஹேஸ்வர ரக்ஷை.

நாட்டான் – அரசன்;

விளக்கம்: இது 10 நூற்றாண்டுக் கல்வெட்டு. கோவிராஜகேசரி பன்மரின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் சித்தலிங்க மடத்தில் வீற்றிருக்கும் வியாக்கிரபாதர் என்னும் திருப்புலிப் பகவர்க்கு மிலாடு என்னும் சங்க முடையாரின் நாட்டரசன் சித்தவடவன் ஆடு கொடுத்து வைத்த திருநுந்தா விளக்கு ஒன்று. அந்த ஒரு விளக்கும் சிவனடியார் கூட்டத்தினர் காக்க வேண்டும். எத்தனை ஆடு கொடுக்கப்பட்டது என்ற குறிப்பு இல்லை.

பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி 14 இல் விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி 1, பக். 109, த நா தொ து வெளியீடு

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் சித்தலிங்கமடம் வியாக்ரபாதீஸ்வரர் கோயில் முன்மண்டப கிழக்குச் சுவர் 1 வரிக் கல்வெட்டு

 1. ஸ்வஸ்திஸ்ரீ மதுரைகொண்ட கோப்பரகேசரி பந்மர்க்கு திரு நந்தா விளக்கு இரண்டுக்கு இவ்வூர் சிவ ப்ராஹ்மணர் பக்கல் குடுத்த பொன் பதிந்_ _ க்கு சந்திவிளக்கு இரண்டிநால் நிறை நூற்றுப்பலம். நூற்றுப்பலமும் இவை மலாடுடையான் நாட்டான் சித்த வடவநேன். இரண்டும் ஊனமுந் தேய்வும் நீக்க குடுத்த பொன் கழஞ்சுங் குடுத்தேன். இது பந்மாகேஸ்வர ரக்ஷை.

ஊனமும் தேய்வும் – வளைவு ஓட்டை ஆகிய குறையும் தேய்வும்

விளக்கம்: முதற் பராந்தகனின் 7 ஆம் ஆட்சி ஆண்டு 913-14 கல்வெட்டு என்று குறிக்கிறது இந்நூல். ஏதோ தட்டச்சு பிழையால் கல்வெட்டு பாடத்தில் ஆண்டு விடுபட்டு போய் உள்ளது. திருநுந்தா விளக்கு இரண்டு எரிக்க இந்த கோவில் சிவபிராமணரிடம் கொடுத்த பொன் பதின் _ _ . சந்திவிளக்கு இரண்டிற்கு நிறை நூறு பலம் கொடுத்தார் மலாடுடையான் நாட்டரசன் சித்த வடவன். இந்த நுந்தா விளக்கு, சந்தி விளக்கு ஆகியவற்றில் எதிர்காலத்தில் ஏற்படும் குறையும் தேய்வும் நீக்க கழஞ்சு பொன் கொடுத்தேன் என்கிறான் இந்த மலையமான். இதை சிவனடியார் திருக்கூட்டம் காக்க வேண்டும் என்கிறான்.

மேலுள்ள கல்வெட்டுகளில் நாட்டான், நாட்டடிகள் ஆகிய சொல்லாட்சிகள் ஆய்விற்கு உரியன. இவற்றின் பொருள் நாடு ஆள்பவன் என்பதே. மிலாடுடையான் / மலாடுடையான்  என்பதற்கு மலைநாடுடையான் என்பதே பொருள் என்றால் பின்பு  நாட்டான் என்று தனியாகக் குறிப்பது எதைக் குறிக்கிறது? நாட்டான் என்பதும் நாட்டரசன் என்பதைத் தானே குறிக்கிறது? இலக்கணப் பொருட்பாட்டின்படி மிலாடு, நாடு இரண்டும் அடுத்தடுத்து வந்தால் ஒரே பொருள் தர முடியாது. அப்படி தருவது பிழை ஆகும். ஆதலால் இங்கு தெள்ளத் தெளிவாக மிலாடு / மலாடு என்பதற்கு சாதிச் சங்கம் என்று பொருள் கொண்டால் தான் நாட்டான் என்பதன் பொருள் இந்த சாதி சங்கத்தவர் வாழும் நாட்டிற்கு அரசன் என்று தெளிவாகப் பொருள் கொள்ள முடியும் அன்றோ?

ஆக கடந்த 150 ஆண்டுகளாகத் தமிழகத்தில் தலித்தியம், திராவிடவியம், கம்யூனிசம் என்ற பெயரால் அரசியல் மேடையிலும் எழுத்திலும் புராண இந்து மதம் தான் சாதியை உருவாக்கியது. மத சுயநலவாதிகள், பிராமணர்கள் தான் சாதியை உருவாக்கி சமூகத்தை பலவாகக் கூறுபோட்டு ஆட்சி செய்து சுரண்டிக் கொழுத்தனர் என்ற பொய்யுரை இடிந்து தரைமட்டம் ஆகிவிட்டது அன்றோ? உண்மையில் தம் அரசாட்சி நலன் கருதி சாதி சங்கத்தை உருவாக்கி நாடாண்டவர் மன்னர்களே, மலையமான்களே என்று இக்கல்வெட்டுகளால் புரிகின்றது அன்றோ?  தட்டிக்கேட்பார் இல்லாவிடின் யாரும் எதையும் உரைக்கலாம் மக்கள் முட்டாள்கள் என்பது தானே இவர்கள் மனநிலை.

பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி 14 இல் விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி 1, பக். 160, த நா தொ து வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாமநல்லூர் பக்தஜனேஸ்வர சிவன் கோவில் 4 வரிக் கல்வெட்டு

 1. ஸ்வஸ்திஸ்ரீ. ஸ்ரீ கன்னரதேவற்க்கு யாண்டு பதினேழாவது முனைப்பாடித் திருநாவலூர்த் திருதொண்டீஸ்வரத்து மஹாதேவர்க்கு ஸ்வஸ்தி சுக்ரான்வய உதயாசல ஆதித்ய சக்திநாத சிம்ஹத்வஜ சிகி மகரலாஞ்சன மலையகுலோ
 2. த்பவ மலையகுல சூளாமணி ஸ்ரீமத் நரசிம்ஹ வர்ம; மிலாடுடைய நாட்டான் சித்தவடவனாகிய நரசிம்ம வன்மன் வைத்த நொந்தா விளக்கொன்றினுக்கு வைத்த பொன் பதின் கழஞ்சு. இப்பொன் பதின் பழஞ்சுங் கொண்டு வெண்
 3. ணைநல்லூர் நாட்டுச் செவலை சபையோமும் ஊரோமும் ஆட்டு நூற்று நாழி நெய் கொண்டு வந்து மாதேவியாலை சந்த்ராதித்யவல் அட்டுவோம் ஆனோம் செவலை சபை ஊரோம். ஈழ விளக்கு ஒன்று. இது பன்மாகேஸ்வர
 4. ரக்ஷை

சபை – கோவில் அலுவலர்

விளக்கம்: இராட்டிரகூட வேந்தன் மூன்றாம் கிருஷ்ணனின் 17 ஆம் ஆட்சி ஆண்டு 956 இல் திருமுனைப்பாடித் திருநாவலூர் திருத்தொண்டீஸ்வரர் கோவில் ஈசுவரனுக்கு. நன்மங்கலம் உண்டாகுக! பிருகுவின் மகனான சுக்கிராச்சாரியாரின் வழிவந்தவனும் கிழக்குமலைச் சூரியனும் ஆற்றலுடைய சிவனும் சிங்கக் கொடியோனும் முடியில் மயிலும் மகரமும் குறியீடாகக் கொண்டவனும் மலையர்குலத்தில் தோன்றிய மலையர்குல முடிமணியானவனும் புகழ்மிக்கவனுமான நரசிம்ம வர்மன் என்று சமசுகிருதத்தில் கீர்த்தி பாடுகிறது.

சங்கமுடைய (மிலாடு) நாட்டரசன் சித்தவடவனாகிய நரசிம்ம வர்மன் வைத்த நுந்தா விளக்கு ஒன்றுக்கு கொடுத்த பொன் 10 கழஞ்சை வெண்ணைநல்லூர் நாட்டின் செவலை ஊரவர் வாங்கிக் கொண்டனர். ஆண்டுக்கு ஆட்டின் நெய் நூறு நாழி அளவு கொண்டு வந்து மாதேவி ஆலயத்தில் கொடுப்போம் செவலை ஊரவரோம் என்று உறுதி கூறினர். இவர்கள் இடையர் என்று தெரிகிறது. மன்னன் ஈழ விளக்கு ஒன்றும் கொடுத்தான். இந்த இரு விளக்கு எரிப்பும் சிவனடியார் கூட்டத்தாரின் பாதுகாப்பு என்று முடிகிறது. இங்கு மிலாடுடைய நாட்டான் என்று பிரித்து காட்டி இருப்பது மிலாட்டை மலைநாட்டான் என்ற பொருளில் குறிப்பதல்ல அல்ல என்பது தெளிவு. அது சங்கமுடைய நாட்டரசன் என்று பொருள்படும்.

முதற் பராந்தகன் காலத்து சித்தவடவனும் இந்த நரசிம்ம வர்ம சித்தவடவனும் ஒரே ஆள் அல்ல. பிருகு ரிஷி என்ற பார்கவருடைய மகன் சுக்கிராச்சாரி தான் அசுரர்களின் ஆசான் (குரு) ஆவான். அசுரர்கள் என்போர் ஈரானின் அசீரிய நாட்டு மக்கள் ஆவர். எனவே அசுரர் இருந்த நாட்டில் சுக்கிரன் இருந்து வழிகாட்டியதால் அவன் ஈரான் நாட்டினன் என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை. அப்படியானால் மலையமான்கள் ஈரானில் இருந்து வந்தோர் என்று கொள்ளலாமா? இதற்கு விடை கூற கைபர், போலன் இந்தியாவிற்கு திறந்த வாசல் என்பவரைத் தான் கூப்பிட வேண்டும்.

பார்வை நூல்: Epigraphia Indica Vol 7, pg 135, C; Areip 362 of 1902

கள்ளக்குறிச்சி வட்டம் சித்தலூர் மணிமுத்தாற்றில் உள்ள சிறிய பாறையில் பொறிக்கப்பட்டுள்ள 7 வரிக் கல்வெட்டு

 1. (கோ)விராசகேசரி பன்மற்கு யாண்டு 3 ஆவது மிலாடு
 2. _ _ வேடபுரத்து பொன்னாலமந்தாளுக்கு உத்தம சோழ மிலாடுடையார்
 3. க்கு கலனை செய்கின்ற கலனை யேர் பொன்னாலமந்தாளுக்கு நொந்தா
 4. விளக்கு ஒன்றுக்கு வைத்த ஆடு தொண்ணூற்றாறாடும் சாவாமூவாப் பேராடு
 5. ம் நிசதி உழக்கு நெய்யால் நிசதி ஒரு நொந்தா விளக்கு எரிக்கக் கடவேன் இ
 6. ப்பிடாரி கோயிலுடை கால்வனெழுவானாகிய _ _ _ ச கான
 7. _ _ _ பேருவச்சனேன். இது பன்மாஹேஸ்வர ரக்ஷை

கலனை – சேணம், saddle; நிசதி – ஏற்பாட்டின்படி; பிடாரி – துர்க்கை; உவச்சன் – பூசகன்; பொன்னால – மேனியை சுற்றிலும் மஞ்சள் பூசிய; மந்தாள் – கருத்தவள்; மிலாடுடையர் – சங்கத் தலைவர்;

விளக்கம்: முதலாம் இராசராச சோழனுக்கு 3 ஆம் ஆட்சி ஆண்டில் 988 இல் மிலாடில் அடங்கிய வேடபுரத்து மஞ்சள் பூசிய கருத்த அம்மனுக்கு உத்தம சோழ மிலாடுடையாருக்கு குதிரைச் சேணம் செய்கின்றவன் குதிரைச் சேணத்தில் ஏற்றுகின்றவன் (பெயர் குறிப்பு இல்லை) மஞ்சள் பூசிய இந்த கருத்த அம்மனுக்கு ஒரு நுந்தா விளக்கு எரிக்க கொடுத்த ஆடு 96 ஆடும் சாவாத முதியாத இளம் ஆடுகளாகும். இதற்கு ஏற்பாட்டின்படி உழக்கு நெய் கொண்டு ஏற்பாட்டின்படி நுந்தாவிளக்கு எரிப்பேன் இந்த பிடாரி கோவிலின் கால்வனெழுவானாகிய  _ _  கான _ _ _ பேர் உவச்சன் என்று உறுதி கூறுகிறான் பூசகன். இதை சிவனடியார் கூட்டத்தவர் பாதுகாக்க வேண்டும் என்று முடிகிறது.

உத்தம சோழ மிலாடன் தன் குதிரைச் சேவகனை அனுப்பி இந்த நுந்தா விளக்கு தந்துள்ளான் என்று புரிந்து கொள்ள முடிகிறது. இங்கே கல்வெட்டில் மிலாடு என்பது வேடபுரத்தின் முன் வருவதால் இங்கு மிலாடு என்பது நாட்டின் பெயராகவும் குறிக்கப்படுகிறது. இப்படி சில கல்வெட்டுகளில் இச்சொல் ஆளப்படுகிறது. இது 79 நாட்டு மிலாடு இதாவது, சங்கத்தின் உறுப்பு நாடு என்று கொள்ளலாம்.

இந்த உத்தம சோழன் பற்றிய கல்வெட்டு குறிப்பு எலவானாசூர் சிவன் கோவில் பற்றிய “வரலாற்று வடிவங்கள்” என்ற தமது நூலில் புலவர் சு. குப்புசாமி கொடுத்துள்ள 80 கல்வெட்டுகளில் முதல் கல்வெட்டாக கோபுர வாயிலில் உள்ள கற்பலகையில் வெட்டப்பட்டுள்ளது, பக்கம் 85 இல் இடம்பெறுகிறது. இது இராசராச சோழனுக்கு 7 ஆம் ஆட்சி ஆண்டில் 992 இல் உத்தம சோழனுடைய 15 ஆம் ஆட்சி ஆண்டில் 977இல் இறையானூர் கோவில் அலுவலருக்கு இராம தேவன் சித்தவடவன் என்னும் விக்கிரம சோழ மிலாடுடையார் செம்பியன் மாதேவி சதுப்பேதி மங்கலத்தை உருவாக்கினான் என்கிறது. அதே நேரம் சித்தவடவன் அகம்படனான உத்தம சோழ மிலாடுடையான் உருவாக்கிய அரண் கலக்கி சதுர்வேதி மங்கலம் என்ற இரண்டு சதுர்வேதி மங்கலமும் உடையார் செம்பியன் மாதேவியார்க்கும் அவள் மகன் வேந்தன் உத்தம சோழ தேவனுக்கும் என்பதோடு கல்வெட்டு உடைந்து  விட்டது. மேலும் செய்தியை அறிய முடியவில்லை. இந்த இரு சித்தவடவனும் மன்னன் உத்தம சோழனுடைய பிள்ளைகளாக இருத்தல் வேண்டும். இதே நூலில் 3 ஆம் கல்வெட்டாக பக். 88-90 இல் இடம்பெறும் 24 வரிக் கல்வெட்டு இதே கோவிலின் முதல் பிரகாரத்தின் வடக்கு சுவரில் வெட்டப்பட்டுள்ளது. அது சோழ கேரளன் என்று குறிப்பிட்டு முதல்  இராசேந்திரனின் 3 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி.1015 இல் இக்கல்வெட்டில் மலாடுடையார் பார்க்கவ கோத்திரத்து பராந்தகந் இயாதவ வீமநாந உத்தம சோழ மலாடுடையார் என்ற பெயரில் நிவந்தம் செய்த செய்தி உள்ளது. இங்கே மலாடுடையார் என்று முதலில் குறிப்பிட்டுவிட்டு மீண்டும் உத்தம சோழ மிலாடுடையார் என்று ஏன் வரவேண்டும்? இரண்டு இடத்திலும் இதன் மாறுபட்ட பொருள் என்ன? இந்த யாதவ வீமன் பிடாரிக்கு விளக்கு எரித்த கல்வெட்டில் வரும் உத்தம சோழ மிலாடுடையானாக இருக்க வேண்டும். ஏனெனில் அவன் பெயரில் கண்டராதித்தன், உத்தமன் ஆகிய சமகால சோழ வேந்தர் பெயர்கள் இடம் பெறுகின்றன. அப்படியாகின் இவன் 977 – 1015 வரை 38 ஆண்டுகள் ஆண்டுகள் ஆட்சி புரிந்து உள்ளான் எனத் தெரிகிறது.

பார்வை நூல்: ஆவணம் இதழ் 2, 1992 பக். 19

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெள்ளுவாடி கிராமம் வெள்ளாற்றங்கரை ஓரம் உள்ள முனியப்ப கோயில் அருகே உள்ள கொல்லையில் உள்ள கற்பலகையில் உள்ள 12 வரிக் கல்வெட்டு

 1. ஸ்ரீமத் பூமி தேவி புத்தி(ர) சித்
 2. திர மேழி சாசனம்ப
 3. டிக்கு வச்ச நியாய பரிபா(லன)
 4. ப் பிள்ளையார்க்கு நியாய(த்)
 5. தோம் நாம் வைச்சுக் குடுத்த
 6. தன்மத்துக்கு அழிவு செய்
 7. தாருண்டாகில் எழுபத்தொ
 8. ன்பது நாட்டுக்கும் பதிநெட்
 9. டிராச்சியத்தில் வளைஞய(ரோ)
 10. மும் குதிரை னாயக குத்
 11. துல் ஆளை வெட்டுதல்
 12. தானா நில

நியாயத்தோம் – தீர்ப்பு கூறுவோர்;

விளக்கம்: 12-13 நூற்றாண்டினதாக இக்கல்வெட்டு இருக்கலாம். வேந்தன் பெயர், ஆட்சி ஆண்டுக் குறிப்பு ஏதும்  இல்லை. இதில் சித்திரமேழி, பெரிய நாட்டார், 18 விஷய வணிகக் குழுவினரின் குறியீடுகள் செதுக்கப்பட்டுள்ளன. ஆதலின் இது அவர்கள் தொடர்பானது.

பூதேவி மக்களான சித்திரமேழி சாதியர் சாசனத்தின்படி நியாயம் வழங்கும் பிள்ளையாருக்கு தீர்ப்பு கூறும் நியாயதோர் வைத்து கொடுத்த நில தான அறத்திற்கு எவரேனும் அழிவு செய்ய முற்பட்டால் 79 நாட்டுக்கு சாதி சங்கத்தாருக்கும் 18 இராச்சியத்தை சேர்ந்த வளைஞர் என்னும் ஆயிரத்து ஐந்நூற்றுவ வணிகருக்கும் செய்த கேடாகக் கருதி அத்தகையோரை குதிரைப்படைத் தளபதி குத்தியும் வாளால் வெட்டியும் பிள்ளையாருக்கு கொடுத்த இந்த தான நிலத்தை நிலைநிறுத்த வேண்டும் என்கிறது கல்வெட்டு. சித்திரமேழியாரும் திசை ஆயிரத்து ஐந்நூற்றுவரும் ஒரே இன மக்கள் என்பதற்கு இது சான்று.

வாலிகண்டபுரம் இரண்டாம் இராசராசன் 11 ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு 1161 இல் இன்றைய உடையார்களான நந்தமர்களை சித்திரமேழிப் பெரிய நாடான யாதவர் குலத் தலைவரான நத்தமக்கள் என்கிறது. எனவே 79 நாட்டார், சித்திரமேழி பெரியார் நாட்டார் ஆகியோர் ஒரே மக்களே ஆவர். இந்த சித்திரமேழியர் பற்றிய கல்வெட்டுகள் விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய இடங்களில் அதிகமாக கிடைக்கின்றன. இவை மலையமான்களின் மிலாட்டுப் பகுதி என்பதை நினைவில்  கொள்ள வேண்டும். உலகின் எந்த நாடானாலும் நியாயம், நியதி (rule), ஏற்பாடு, அறம் எதுவாயினும் ஆயுத வலுவால் தான் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன, நிலைநிறுத்தப் படுகின்றன. இன்று வரை இதுவே பொது நடைமுறையாக உள்ளது. அதை தான் மேலுள்ள கல்வெட்டும் வெளிப்படுத்துகிறது. அதில் தவறு ஏதும் இல்லை. தவறு எது என்றால் பழைய நூல்கள் சமசுகிருதத்தில் தான் உள்ளன அந்த சமசுகிருதத்தை பிராமணர் அறிந்தவர் என்ற ஒரே காரணத்தை முன் வைத்து சாதியும், வர்ணாசிரமும் பிராமணரால் தான் உருவாக்கி நடைமுறைப் படுத்தப்பட்டன என்ற கருத்து சிந்திக்கக் கூடிய மக்களை முட்டாள் ஆக்கும் பொய்யே ஆகும். ஆயுதம் ஏந்தாத பிராமணர் தம் பாதுகாப்பிற்கே அடுத்தவரை சார்ந்திருக்க வேண்டிய நிலையில் அரசர்தம் ஆயுதத்தால் நிலைநிறுத்தப்பட்ட சாதி, வருணாசிரம நியதியை அவர்கள் தான் செய்தனர்; சாதிக்கு ஒரு நீதி வருணத்திற்கு ஒரு நீதி என்று ஏற்படுத்தினர் என்பது அறிவிற்கு ஏற்புடையதன்று. தமிழனின் 150 ஆண்டு கால முட்டாள் தனத்தை நீக்கி அறிவொளி ஊட்டுவது இது போன்ற கல்வெட்டுகளே.

பார்வை நூல்: பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், இல. தியாகராஜன், பக். 263 – 265

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் சிவன் கோவில் மகாமண்டப கிழக்கு சுவரில் உள்ள 11 வரிக் கல்வெட்டு

 1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்  சக்கரவத்திகள் இராசராச தேவற்கு
 2. யாண்டு 11 வது வடகரை வன்நாட்டு
 3. வாலீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயிலில் இடங்கை தொண்ணூற்றெ
 4. ட்டுக் கலனையும் நிறைவற நிறைந்து குறைவறக் கூடிக் கல்வெட்டினபடி
 5. யாவது பல மண்டலங்களில் பிராமணரும் ஆரியரும் சித்திரமேழிப் பெரிய
 6. னாடான யாதவகுலத் தலைவரான நத்தமக்களும் சதிரமுடித் தலைவரான மலை
 7. யமான்களும் காயாங்குடிக் கண்ணுடை அந்தணரும் சம்புவர் குலபதிப் பன்னா
 8. ட்டாரும் பதினெண் விஷயத்து வாணிய நகரங்களும் பொற் கோயிற் கைக்கோ
 9. ளரும் யிடங்கை தொண்ணூற்றெட்டுக் கலனைகளுக்கும் ஒருவற்கு வந்த நன்மைத் தீமை
 10. அனைவற்கும் ஆவதாகவும். யிப்படி விலங்கினோமாகில் மாறு சாதிக்குங் கீழ் சாதிக்
 11. கும் தாழ்வு செய்தோ மிதனை யிப்படி ஒரு காலாவதும் யிருகாலாவதும் முக்காலாவதும் (முற்றுப் பெறவில்லை)

கலனை – கூட்டு உறுப்பு சாதி; கண் – பாதுகாவலர், caretaker

விளக்கம்: இரண்டாம் இராசராச சோழனின் 11 ஆம் ஆட்சி ஆண்டு 1161 இல் வெட்டிய கல்வெட்டு இது. வடகரை வன்நாட்டின் வாலீஸ்வரமுடைய இறைவன் திருக்கோவிலில் இடங்கைப் பிரிவைச் சேர்ந்த 98 கூட்டு உறுப்பு சாதியாரும் நிறைந்து கூடி கல்வெட்டிய காரணமாவது பல மண்டலங்களில் வாழும் பிராமணரும், ஆரியர் என்னும் வெள்ளாளரும், சித்திரமேழிப் பெரிய நாடான இயாதவக் குலத் தலைவரான நந்தமர்களும், சதிரமுடித் தலைவரான மலையமான்களும், காசாங்குடியினர் குடும்பத்தை பாதுகாக்கிற அந்தணரும் (துறவி),  சம்புவர் குலபதியான பன்னாட்டார் என்னும் வன்னியரும், பதினெண் விஷயத்து வாணிய நகரங்களும், பொற்கோயிற் கூரையை காக்கும் கைக்கோளரும் உள்ளிட்ட இடங்கை 98 கூட்டு உறுப்பு சாதிகளும் மேற்கொண்ட உறுதிமொழியாவது யாதெனில் இதன் எந்த ஒரு சாதிக்கும் வரும் நன்மை தீமை அனைத்து சாதிகளுக்கும் பொதுவாக வந்ததாகக்  கொள்வோம். இந்த ஒற்றுமை உணர்வில் இருந்து விலகினோமாயின் வேற்று சாதிக்கும் கீழ் சாதிக்கும் தாழ்வு செய்தோம் என்று ஆகும். இதை இப்படியாக ஒரு தடவையோ, இரு தடவையோ, மூன்று தடவையோ (முற்றுப்பெறவில்லை)

இதில் இடம்பெறும் யாதவ குல நந்த மக்கள் என்னும் உடையார், மலையமான்கள் (நயினார்) மிலாட்டை விட மிகப் பெரிய ஒரு சாதி சங்க வட்டத்தை உருவாக்குகின்றனர் என்று தெரிகின்றது. இதே போல இரண்டாம் இராசராசனின் 11 ஆம் ஆட்சி ஆண்டு 1161 இல் 79 நாட்டு பார்க்கவ கோத்திரத்து மலையமான்களும், நந்தமர்களும் இடங்கைப் பிரிவில் சேர்ந்த இன்னொரு கல்வெட்டு கள்ளக்குறிச்சி வட்டம் திருவலஞ்சுரம் பசுபதீஸ்வர் கோவிலில் உள்ளது. (பார்க்க ஆவணம் 11, பக். 32)

பார்வை நூல்: பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், இல. தியாகராஜன், பக். 231- 232

தென்னார்க்காடு மாவட்டம், திட்டைக்குடி வட்டம் சுகாசின பெருமாள் கோவில் மேற்கு சுவரில் உள்ள 9 வரிக் கல்வெட்டு

 1.  ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவனச் சக்ரவத்திகள் ஸ்ரீ ராஜாதிராஜ தேவற்கு யாண்டு 4 வது ஸிம்ஹ நாயற்று பூர்வ்வ பக்ஷத்து த்ரயோதஸியும் திங்கள் கிழமையும் பெற்ற சதயத்து நாள் ஸ்ரீமற் பூமிபுத்ரஸ்ய சதுர்வ்வண்ணஸ்ய
 2. குலோற்பவம் ஸர்வ்வ லோகஹிதார்த்தாய சித்ர மேளஸ்ய ஸாஸனம். எழுபத்தொன்பது நாட்டு உத்தமநீதி உயர்பெரும்கீத்தி முத்தமிழ்மாலை மும்மையும் நிறைந்த சித்திரமேழிப் பெரிய நாட்டோமும் நான்கு தி
 3. சை பதினெண்பூமி தேசி திசை விளங்கு திசை ஆயிரத்தை ஞூற்றுவரோமும் வடகரை விருதராஜ பயங்கர வளநாட்டு மேற்காநாட்டு ப்ரஹ்மதேயம் திட்டை குடியான திருச்சிற்றம்பல சதுரவ்வேதி மங்கலத்து
 4. திருமேலைக் கோயிலான எழுபத்தொன்பது நாட்டு விண்ணகர் எம்பெருமான் திருமுற்றத்து நாநூற்றுவன் திருமண்டபத்திலே நிறைவற நிறைன்து குறைவறக் கூடி இருன்து இத்திருமுற்றத்திலே ஸ்ரீ பூமிப் பிராட்டியை
 5. எழுன்தருளிவித்து மேழித் தோரணமும் சாத்தி நாட்டுக்கும் நகரத்துக்கும் தர்ம்மமான இவ் வெம்பெருமாநுக்கு அமுதுபடி சாத்துப்படிகளுக்கும் திருப்பணிகளுக்கும் திருநாள்
 6. தேவைகளுக்கும் உடலாக வைத்துக் குடுத்தபடி ஆட்டைக்கு ஏரால் பதக்கு நெல்லும் ஆளால் குறுணி நெல்லும் மாலை கட்டி பரிமாறுவார் ஆளுக்கு ஐஞ்சு காசும் இடக் கடவர்களாகவும்
 7. நங்கீழ் பணிமக்கள் ஆட்டைக்கு இரண்டு காசு இடக் கடவர்களாகவும் நம் ஊர் கோபாலர் குடியால் ஆட்டைக்கு நாநாழி நெய்யளக்கக் கடவர்களாகவும் இப்படி வைத்துக் குடுத்தமையி
 8. ல் இது தண்டுவாருக்கு புக்க ஊரில் வெள்ளை அரிசி தூணிப் பதக்கும் பூரிஅரிசி கலமும் ஐம்பது பாக்கும் வெற்றிலைபற்று இரண்டும் உப்பு நாநாழியும் மிளகு உரியும் எள்ளெண்ணெய் நாழியும் குடு
 9. க்கவும். இப்படி இவை தண்டுமிடத்து வெண்கலம் பறித்தும் மட்கலம் தகத்தும் கொள்ளக் கடவர்களாகவும். இத்திருமுற்றத்து திருவிடையாட்டங்கள் அழி பிழை அந்நியாயம் செய்தார் நாட் (எஞ்சியவை  சுவற்றில்  மறைந்துள்ளன)

சிம்ம நாயற்று – ஆவணி மாதம்; ஸ்ரீமத் – புகழ்மிக்க; சாத்துபடி – பூ, மாலை முதலிய சாற்றுவது; உடலாக – மூலதனமாக; தண்டு – வாங்கு, collect; திருமுற்றம் – கோவில் வளாகம்;

விளக்கம்: இரண்டாம் இராதிராஜனின் 4 ஆம் ஆட்சி ஆண்டு 1170 இல் ஆவணி மாதம் முதல் பாதி வளர்பிறை 13 ஆம் நாளில் திங்கட் கிழமை அன்று சதய நட்சத்திரம் கூடிய நன்நாளில் “புகழ்மிக்க பூமி மக்களின் நால்வருணத்து குலத்தில் பிறந்து உலக நன்மைக்கும் பொருட் தேவைக்கும் இயங்குகின்ற சித்திரமேழியர் கல்வெட்டு ஆவணம் இது” என்று மெய்கீர்த்தி பாடுகிறது. பார்க்கவ கோத்திரத்து 79 நாட்டவரின் உயர்ந்த நீதியும், உயர் பெருங் கீர்த்தியும், முத்தமிழ் மாலை என்ற மூன்று சிறப்பும் நிறைந்த சித்திர மேழிப் பெரிய நாட்டவரும் நான்கு திசைகளிலும் பயணித்து 18 பூமி தேசி திசை அறிந்த திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினரும் வடகரை விருதராஜ பயங்கர வளநாட்டு மேற்காநாட்டின் பிரம்மதேயமான திட்டைகுடி திருச்சிற்றம்பல சதுர்வேதி மங்கலத்தின் திருமேலைக் கோயிலான 79 நாட்டவரின் திருமால் கோவிலில் எம்பெருமான் திருமுற்றத்தில் நாநூற்றுவன் திருமண்டபத்தில் நிறைந்து கூடி இந்த திருமுற்றத்தில் பூமா தேவியின் சிலையை எழுந்தருளிவித்து அங்கே கலப்பைத் தோரணமும் கட்டி நாட்டிற்கும் நகரத்திற்கும் அறமான இந்த எம்பெருமானுக்கு அன்றாட அமுதுபடிக்கும் பூ, மாலை அலங்காரத்திற்கும் தெய்வத் திருப்பணிகளுக்கும் உற்சவ தேவைகளுக்கும் மூலதனமாக இருப்பதற்கு என்று செய்து கொடுத்த ஏற்பாட்டின்படி ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஏருக்கு பதக்கு நெல், ஆளுக்கு குறுணி நெல் என்ற மேனியில் கொடுப்போம். மாலை கட்டித் தருபவர் ஆள் ஒருவருக்கு 5 காசும் கொடுக்க வேண்டும். நம் கீழே பணி மக்களாக வேலை செய்பவரும் ஆண்டு ஒன்றுக்கு 2 காசும் கொடுக்க வேண்டும். நமது ஊர் இடையர் குடும்பம் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு நான்கு நாழி அளவு நெய் கொடுக்க வேண்டும். இப்படி ஏற்பாடு செய்து கொடுத்தமையில் இதை வசூலிப்பவருக்கு புக்க ஊரில் வெள்ளை அரிசி தூணிப் பதக்கு அளவும், பூரி அரிசி கலம் அளவும், 50 பாக்கும், வெற்றிலைப் பற்று இரண்டும், உப்பு 4 நாழி அளவும், மிளகு உரி அளவும், எண்ணெய் நாழி அளவும் கொடுக்க வேண்டும். இவ்வாறு வசூலிக்கின்ற போது வெண்கலத்தைப் பிடித்தும் பானையை தகர்த்தும் வாங்கிட வேண்டும். இது என்ன மூட நம்பிக்கையோ தெரியவில்லை!! வெண்கலம் செல்வத்தின் குறியீடு மட்கலம் ஏழ்மையின் குறியீடு. இந்த திருமுற்றத்தில் அழிபிழைகள் அநியாயங்கள் செய்தவர் நாட்டில் என்ற அளவில் கல்வெட்டு சுவற்றில் மறைந்த உள்ளதால் மேலும் ஏதும் அறிந்து கொள்ள முடியவில்லை.

சித்திர மேழியர், வணிகர் திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், இடையர் ஆகியோர் உபயமாகப் பொருள் கொடுக்க வேண்டும் என்ற இந்த உடன்பாட்டை கூர்ந்து கவனித்தால் இம்மூவரும் பார்க்கவ கோத்திரத்தார் என்று புரிகிறது. இதை 79 நாட்டவர் விண்ணகர் என்னும் சொல்லாட்சி உறுதிப்படுத்துகிறது. தொடக்கத்தில் ஆடு, மாடு மேய்த்தும் பின்பு நாகரீக வளர்ச்சியில் உழவுத் தொழிலை மேற்கொண்டும் அதன்பின்பு தம் விளைபொருளை விற்க வணிகத் தொழிலையும் ஏற்றுள்ளனர். இன உணர்வு இல்லாவிடில் யாரும் இவ்வாறான உடன்படிக்கைக்கு உடன்படமாட்டார் என்பது தெளிவு. இன உணர்வால் அன்றி மதத்தால், பிராமணரால் சாதியை உருவாக்க முடியாது என்பதை திராவிட அரசியல் மறைக்கின்றது. உண்மையை விடுத்து பொய் உரைக்கின்றது. மதத்தை, பிராமணரை அழித்துவிட்டால் எல்லாம் சரி ஆகிவிடும் என்று வெறுப்பை பரப்புகின்றது. அறிவு மயக்கமுற்ற தமிழர் தான் இதில் தெளிவடைய வேண்டும். மதமோ பிராமணரோ கால்நடை மேய்த்த நத்தமக்களை உழவில் ஈடுபடச் சொல்லவில்லை. அப்படி உழவிற்கு மாறியவரை மதமோ பிராமணரோ வணிகத்தில் ஈடுபட அறிவுறுத்தவில்லை. இந்த தொழில் மாற்றம் நாகரிக வளர்ச்சியால் உண்டானது. அற்றை நாளில் சாதியே உந்து விசையாக (driving force) இருந்தது என்பதை இக் கல்வெட்டு தெளிவாக்குகிறது. மேலும் இது ஒரு சாதி ஆணைக் கல்வெட்டு. ஊர்ச் சாதிமார் அத்தனை பேரும் இதற்கு கட்டுப்பட்டவர்.

பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8, எண் 291 (A.R. No 21 of 1903)

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் பழங்கூர் ஏரி பழைய மதகின் தூண் ஒன்றில் உள்ள 11 வரிக் கல்வெட்டு

 1. ஸ்வஸ்திஸ்ரீ இ
 2. த் தூம்பு திட்
 3. டிட்டு வெ
 4. ன்றான். இது
 5. இடுவித்தா
 6. ன் மலையந்
 7. மலையநாந
 8. குலோத்து
 9. ங்க சோழக்
 10. கோவலராஜ
 11. ன்

தூம்பு – மதகு; திட்டு – மேடு; வெல் – மேம்படுத்து, இடுவி  – செய்வி, கோவலராஜன் – திருக்கோவிலூர் அரசன்.

விளக்கம்: இது 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு. இங்கு மலையமான் குலோத்துங்க சோழன் என்று பெயர் கொண்டுள்ளான். முதல், இரண்டாம், மூன்றாம் குலோத்துங்க சோழர் மூவரும் 12 ஆம் நூற்றாண்டினர் எனவே இவன் 12 ஆம் நூற்றாண்டினன் என்று கொள்ளலாம். இந்த மதகும் கரைமேடும் மேம்பட செய்வித்தான் மலையர்குடி மலையமானான குலோத்துங்க சோழ திருக்கோவிலூர் அரசன். இங்கு மிலாடு – மலாடு ஆகிய சொற்கள் தவிர்க்கப்பட்டு மலையன் என்று குறித்திருப்பது இவருக்கு மிலாடு என்னும் சங்கத்தை கூட்டும் பொறுப்பு இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. மலையமான்கள் வெவ்வேறு பிரிவாக ஆண்டதும் இதற்கு காரணம் ஆகலாம். கோவல என்றால் இடையன் என்று பொருள். கோவலூர் பின்னீடு கோவிலூர் என்று தவறாக வழங்குகிறது. எனவே கோவலராசன் என்றால் இடையர்க்கு அரசன் என்பதே நேர் பொருள். இயாதவ வீமன் உத்தம சோழன் என்ற பெயரில் இருந்து இது தெளிவாகிறது. தொடக்கத்தில் மலையமான்கள் இடையராக இருந்து பின்பு மருத நில மக்களாகி அதன் பின் அந்த மருதநில மக்களே சித்திரமேழிப் பெருநாட்டு வணிகராகவும் உருவெடுத்துள்ளனர் என்று தெரிகின்றது. மேலும் கிளியூர் மலையமான்கள் காலம் முதல் மிலாடுடையான் என்ற சொல் கல்வெட்டில் அவர் பெயருடன் இடம்பெறுவதில்லை என்பதை நோக்க மிலாடு கூட்டும் உரிமையை சோழ வேந்தனால் மலையமான்கள் இழந்திருப்பரோ என்று எண்ணம் எழுகிறது. எனவே இந்த கல்வெட்டும் மிலாடு > மலாடு என்பது மலைநாடு என்பதன் திரிபு என்பதை நொறுக்குகிறது.

பார்வை நூல்: ஆவணம் இதழ் 1, பக். 26,

தென்னார்க்காடு மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் உள்ள ம. புடவூர் திருவனந்தீசுவரர் கோயில் மகாமண்டப வடசுவர் மேற்குப் பக்க முப்பட்டைக் குமுதப் பகுதியில் உள்ள 3 வரிக் கல்வெட்டு

 1. ஸ்வஸ்திஸ்ரீ திருபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ இராசாதிராச தேவற்க்கு யாண்டு 8 ஆவது இருங்கோளப்பாடி நாட்டு வேட்ப்பூருடையான் பெரியான் திருவனான இராசராச  மிலாட
 2. குலராயனேன் மிலாடாகிய செனனாத வளநாட்டுக் கீழ்நரையூர் கூற்றத்துப் புடவூரில் நான் எழுந்தருளிவித்த உடையார் திருவனந்தீச்வரமுடைய நாயநார் திருநாமத்துக்
 3. காணி ஆக நான் காணியாக நீர்வார்த்துக் குடுத்தேன் வேட்ப்பூருடையான் பெரியாந் திருவனான இராசராச மிலாடகுலராயனேன்

திருநாமத்துக் காணி – கடவுள் பெயரில் நில உரிமை

விளக்கம்: இரண்டாம் இராசாதிராச சோழனின் 8 ஆம் ஆட்சி ஆண்டில் 1174 இல் இருங்கோளப்பாடி நாட்டின் வேட்ப்பூரில் வாழும் பெரியான் திருவனான இராசராச மிலாடகுலராயன் மலையமான்களின் ஆட்சிப்பகுதி மிலாடாகிய செனனாத வளநாட்டின் கீழ்நரையூர் கூற்றத்தில் அடங்கிய புடவூரில் நான் எழுந்தருளுவித்த இறைவன் திருவநந்தீஸ்வர நாயனாருக்கு அவர் பெயரில் நீர்வார்த்து காணி கொடை கொடுத்தேன் வேட்பூர் வாழ் பெரியான் திருவனான இராசராச மிலாடகுலராயன் என்கிறான். இங்கு மிலாடகுலம் என்பது பார்க்கவகுலம், மலையர்குலம் என்று பொருள்படும். இவன் மலையர் நாட்டில் வாழாதவன் ஆயினும் மலையர்நாட்டில் ஒரு கோவில் கட்டுவித்து அதில் லிங்கத்தை நிறுத்து உள்ளான். இவன் அரசன் அல்லன் ஆயினும் மலையர் குடியில் பிறந்தவன் என்று தெரிகின்றது. இப்படி மிலாடு என்ற சொல் பலவாறாக பயன்படுத்தப் பட்டுள்ளது. மேலும் மலையமான்கள் மன்னர் என்ற நிலைக்கும் கீழே அரையர், கிழார் நிலையிலும் ஆண்டுள்ளனர். காட்டாக,  வாலிகண்டபுரம் வன்நாடு என்னும் சிறு நாட்டுப் பகுதியில் அடங்கியது. முதற் பராந்தகன் காலத்தில் அவனது 4 ஆம் ஆட்சி ஆண்டில் 911 இல் வீரசோழ மிலாடுடையான் என்று ஒருவன் ஆண்டுள்ளான். இவன் மனைவியானவள் வன்னாடுடையார் அக்கோப்புகழறையார் மகளார் நாட்டடிகளார் வைத்த விளக்கிற்கு பொன் 7 கழஞ்சு கொடுத்துள்ளாள் என்கிறது வாலிகண்டபுரம் கல்வெட்டு. இவள் தந்தை அக்கோப்புகழறையார் ஒரு கிழார் நிலை ஆட்சியாளர். எனில் வீரசோழ மிலாடுடையான் கிழான் அல்லது அரையன் என்று புரியும். இதே காலகட்டத்தில் மன்னனாக சித்தவடவன் என்பவன் பராந்தகனின் 7 ஆம் ஆட்சி ஆண்டில் 914 இல் ஆண்டுள்ளான்.

பார்வை நூல்: ஆவணம் 3, 1993, பக். 2

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *