குறளின் கதிர்களாய்…(494)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(494)
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
– திருக்குறள் – 311 (இன்னா செய்யாமை)
புதுக்கவிதையில்…
சிறப்பைத் தந்திடும்
செல்வம் பெருமளவில்
பெறுவதாக இருந்தாலும்,
பிறர்க்குத் தீமை செய்யாதிருக்கும்
பெருந்தன்மையே
மனதினில்
மாசற்றவர்களின் கொள்கையாகும்…!
குறும்பாவில்…
சிறப்புடைச் செல்வம் பெறுவதானாலும்
பிறர்க்குத் தீங்கு செய்யாமல் இருப்பதுவே
மனதில் மாசற்றோர் கொள்கையாம்…!
மரபுக் கவிதையில்…
பிறர்க்குத் தீமை செய்வதாலே
பெரிதாய் வந்து சேர்கின்ற
சிறப்பு மிக்கச் செல்வத்தைச்
சிறிதும் விரும்பி ஏற்காமல்
பிறர்க்குத் தீங்கு செய்யாமை
பேணிக் காக்கும் பெருந்தன்மை
உறவாய்க் கொள்வர் கொள்கையாக
உளத்தில் மாசே யிலாதவரே…!
லிமரைக்கூ…
பெறுவதாயினும் செல்வமெலாம் சேர்த்து,
பிறர்க்குத் தீங்கேதும் செய்யார் மனமாசற்றோர்
அதைத்தம் கொள்கையாய்ப் பார்த்து…!
கிராமிய பாணியில்…
செய்யாத செய்யாத
கெடுதல் செய்யாத,
அடுத்தவர் நோகக்
கெடுதல் செய்யாத..
காசுபணம் கணக்கில்லாமக்
கெடைக்கிறதா இருந்தாலும்
அத விரும்பாம
அடுத்தவங்களுக்குக்
கெடுதல் செய்யாம இருக்கிறதே
மனசு சுத்தமா
உள்ளவங்களோட
கொள்கயா இருக்கும்..
அதால
செய்யாத செய்யாத
கெடுதல் செய்யாத,
அடுத்தவர் நோகக்
கெடுதல் செய்யாத…!