குறளின் கதிர்களாய்…(493)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(493)
பொய்யாமை யன்ன புகழில்லை யெய்யாமை
யெல்லா வறமும் தரும்.
– திருக்குறள் – 296 (வாய்மை)
புதுக் கவிதையில்…
பொய்சொல்லாமல் இருப்பதுபோல்
ஒருவனுக்குப்
புகழ்தருவது வேறில்லை,
அது
அவன் அறியாமலே
அறங்கள் அனைத்தையும்
அள்ளிக் கொடுக்கும்…!
குறும்பாவில்…
பொய்பேசாமல் இருப்பது போல
புகழ்தருவது வேறிலை மனிதனுக்கு, அவனறியாமலே
அறமெலாம் அவனுக்கது கொடுக்குமே…!
மரபுக் கவிதையில்…
பொல்லாப் பொய்யைப் பேசாமல்
புவியில் வாழ்தல் போலவொரு
நல்ல புகழைத் தரத்தக்க
நற்பண் பதுதான் வேறில்லை,
எல்லா அறமும் அவன்பெறவே
என்றும் அவனே அறியாதே
வல்ல வாய்மை யதுவேதான்
வந்து வழியைத் தந்திடுமே…!
லிமரைக்கூ…
பொய்பேசா திருப்பது போலும்
புகழ்தருவது வேறிலை ஒருவனுக்கு, அவனறியாதே
அறமெலாம் அளித்திடும் மேலும்…!
கிராமிய பாணியில்…
சொல்லாத சொல்லாத
பொய்யே சொல்லாத..
எப்பவும்
பொய்யே பேசாம இருக்கதுபோல
ஒருத்தனுக்குப் புகழத்தாறது
வேற எதுவுமில்ல,
அதுவே அவனுக்கு
அவனறியாமலே நல்ல
அறத்தயெல்லாம் குடுத்திடுமே..
அதால,
சொல்லாத சொல்லாத
பொய்யே சொல்லாத…!