Year: 2024

  • பர்வீன் சுல்தானா, எழுத்தாளர் இல்லையா?

    பர்வீன் சுல்தானா, எழுத்தாளர் இல்லையா?

    அண்ணாகண்ணன்

    பர்வீன் சுல்தானா பேச்சாளர் தான்; அவர் எழுத்தாளரே இல்லை எனச் சிலர் எழுதியுள்ளதைப் பார்த்தேன். இவை அவர் எழுதியுள்ள ஆய்வு நூல்கள்:

    1. இஸ்லாமிய இனக்குழு மக்களின் வாழ்வியல் சடங்குகள் முதற் பதிப்பு(செப்டம்பர் 2004)
    2. படைப்போர் இலக்கியங்களில் போர் நெறிமுறைகளும் கதைமாந்தர்களும் இரண்டாம் பதிப்பு(2007)
    3. அந்திரயவனி படைப்போர் ஆய்வும் மூலமும் இரண்டாம் பதிப்பு(2007)
    4. காசீம் படைப்போரும் காசீம் படைவெட்டும் இரண்டாம் பதிப்பு(2007)
    5. இசுலாமிய படைப்போர் இலக்கியம் சமூக-சமயப் பண்பாட்டுக் கூறுகள் இரண்டாம் பதிப்பு(2007)

    இளவழகன் பதிப்பகம், சுமன் வெளியீடு, தி பார்க்கர் ஆகியவை இவற்றை வெளியிட்டுள்ளன.

    நன்றி: விருபா.காம்

    அண்மையில் ஆ.இரா.வேங்கடாசலபதிக்குச் சாகித்திய அக்காதெமி விருது அளித்தபோதும் இத்தகைய எதிர்வினைகள் எழுந்தன. ஆய்வு நூலுக்கு விருதா? அபுனைவுக்கு அக்காதெமி விருதா? என்றெல்லாம் கேட்டிருந்தார்கள்.

    எழுத்தாளருக்குத் தெளிவான வரையறைகள், எல்லைகள் கிடையாது. ஒரு புத்தகம் எழுதினாலும் ஒரு சிறுகதை எழுதினாலும் ஒரு கவிதை எழுதினாலும் அவர்களும் எழுத்தாளர்களே. உரையை எழுத்தாக்கினால் வாய்மொழிப் பாடகர்களும் கதைசொல்லிகளும் கூட எழுத்தாளர்கள் ஆகிவிடலாம். உள்ளடக்கம் தான் முக்கியமே தவிர, அவர் அதைக் கையால் எழுதினாரா, வாயால் சொன்னாரா என்பது கிடையாது. மகாபாரதமே சொல்லச் சொல்ல எழுதியது என்பர்.

    பர்வீன் சுல்தானா எந்த வகையில் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதைத் தேர்வுக் குழுவினர் விளக்க வேண்டும் எனக் கேட்கலாம். அவர் எழுத்தாளரே கிடையாது என்பது அறிவுப்பூர்வமான வாதம் கிடையாது.

    Share
  • திருவாசக முற்றோதல்

    திருவாசக முற்றோதல்

    முனைவர் மு. பழனியப்பன்,
    தமிழ்த்துறைத் தலைவர்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    திருவாடானை

    மாணிக்கவாசகர் இறை அனுபவத்தில்  எழுதிய திருப்பனுவல் திருவாசகம். உலகப் பற்றுகளின் ஈர்ப்பில் சுவைத்து மகிழ்ந்து கிடக்கும் ஆன்மாக்களை, அப்பற்றில் இருந்து விடுவித்து,  சிவனைப் போற்றிட, எண்ணிட, துதித்திட, நெஞ்சமதில் ஏத்திட, அவனையே அடைந்திடச் செய்யும் அருள்வாசகம் திருவாசகம் ஆகும். திருவாசகம் மனிதர் ஒவ்வொருவரும் பாடத்தகுந்த அருள் நூல்.  குழுவாக முற்றோதல் செய்வதற்கும் உரிய நூல். ஒரே நாளில் இறைவன் கழலை இறைஞ்சிடக் கிடைத்த நன்னூல். படிப்பவரும், கேட்பவரும் பொருளோடு உணர்பவரும் முக்தி என்னும் நிறைநிலையை அடையச் செய்யும் பெருவழியைக் காட்டுவது திருவாசகம் ஆகும்.

    திருவாசக முற்றோதலை முதலில் நிகழ்த்தியவர் மாணிக்கவாசகரே!

    மாணிக்கவாசகர் தாம் இருந்த இடங்களின் சூழுலுக்கு ஏற்ப, பற்பல பாடல்களை அவ்வப்போது பாடி உருகுகிறார்.  அவர் பாடிய பாடல்கள் அனைத்தையும் ஒருசேர சொல்ல, கேட்க ஒரு வாய்ப்பும் அமைகிறது. மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் இருந்தபோது, அந்தணர் ஒருவர் அவரிடத்தில் வந்து அவர் பாடிய அத்தனைப் பாடல்களையும் பாடச் சொல்லிக் கேட்கிறார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க மாணிக்கவாசகர் தாம் பாடிய பாடல்களைப் பாடுகிறார். அவற்றைக் கேட்டு அவ்வந்தணர் ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறார்.

    திருவாசகத்தை மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல எழுதிக்  கொண்ட அந்த அந்தணர் ”பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்று  கேட்கிறார்   மாணிக்கவாசகர் அப்போது புதிதாக திருக்கோவையார் பாடுகிறார். அதனையும் அந்தணர் எழுதிக் கொண்டார். பின்பு அவர் மறைந்து போனார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அடுத்த நாள், அந்த ஓலைச் சுவடிகள் அனைத்தும் தில்லைச் சிற்றம்பலத்தில்  நடராசப் பெருமான் சன்னதியின் திருப்படியில் இருப்பதை  தில்லை வாழ் அந்தணர்கள் கண்டனர்.  சிற்றம்பலமுடையான் திருவடியில் ஒரு சுவடி உள்ளது என்று அனைவருக்கும் அவ்வதிசயத்தைச் சொல்லினர். அனைவரும் பார்த்திருக்க ஓலைகள் பிரித்துப் படிக்கப்பெற்றன.  அவ்வோலையின் நிறைவில் ”திருவாதவூரார் சொற்படி திருச்சிற்றம்பலமுடையான்” என்று  ஒப்பம் இடப்பெற்று ஓலைச்சுவடிகள் நிறைவு செய்யப்பெற்றிருந்தன.

    திருவாதவூரரைக் கண்டடைந்து, இச்செய்தியைத் தில்லை வாழ் அந்தணர்கள் தெரிவித்தனர். அவரும் கோயில் வர இச்சுவடிப் பாடல்கள் உணர்த்தும் பொருள் யாது என்று கேட்டனர். அதற்கு மாணிக்கவாசக சுவாமிகள்  இப்பாடல்கள் அனைத்திற்கும் பொருள் ஆடல் கூத்த பிரானாகிய நடராசப் பெருமானே” எனக் காட்டினார்.  திருவாசகத்தின் பொருள் நடராசப் பெருமான் என்பது அறியத்தக்கது.

    மேலும் சில நாள்களில் இவ்வோலைச் சுவடிகள் யாது காரணத்தாலோ தில்லையில் உள்ள நீர்நிலை ஒன்றில் இடப்பெற்று அவை அம்பலத்தாடியார் மடத்து அன்பர்களிடத்தில் கிடைத்தது. அவர்கள் அங்கு வைத்து அச்சுவடிகளைப் பாராயணம் செய்து வந்தனர். அவர்களை அங்கிருக்க விடாது காலச் சூழல் விரட்ட  புதுச்சேரிக்கு அவ்வோலைகட்டுடன் அவர்கள் வந்து சேர்கிறார்கள். புதுச்சேரியின் செட்டித் தெருவில் அம்பத்தடையார் மடத்தில்  திருச்சிற்றம்பலமுடையான் எழுதிய திருவாசகச் சுவடிகள் உள்ளன. இது ஒரு வரலாறு.

    இவ்வரலாற்றின் வழியாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி திருவாசகம் முதன் முதலாக முற்றோதுதலாக மாணிக்கவாசகராலேயே செய்யப் பெற்றது என்பதுதான். எனவே முதல் திருவாசக முற்றோதலைத் தொடங்கியவர் மாணிக்கவாசகரே ஆகின்றார். மாணிக்க வாசகர்  சொல்லச் சொல்ல இறைவன் எழுதிய நிலையில்  அதுவே முதல் முற்றோதல் ஆகின்றது.

    திருவாசகம் ஓதும் முறை

    பன்னிரு திருமுறைகளையும் பண் அடிப்படைடியில் ஓதுவார்களே தமிழகத்தில் பாடி  வந்துள்ளனர். குறிப்பாக இராசராசன் காலத்தில்  பெருமளவில் ஓதுவார்கள் நியமிக்கப்பெற்று பன்னிரு திருமுறை ஓதும் முறைமை இருந்துள்ளது. தற்காலத்திலும் ஓதுவார்கள் உரிய பண்ணிசைப்படி திருமுறைகளை ஓதி வருகின்றனர். பஞ்ச புராணம் பாடும் நடைமுறையும் உள்ளது. பஞ்சபுராணம் என்பது  ஐந்து பாடல்களைப் பாடுதல் ஆகும். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகியவற்றில் இருந்து ஏதேனும் ஒரு பாடலை பாடும் முறைமை பஞ்ச புராணம் பாடுதல் என்றழைக்கப்படுகிறது,

    திருமுறைகளை ஓதுவார்கள் ஓதுவதில் பல நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.  திருமுறைகளைப் பாடுபவர்கள் நீராடி , தூய ஆடை உடுத்தி, திருநீறு அணிந்து  பண் அடைவுடன் இறைவன் முன் ஓதுதல் வேண்டும். சிவ தீட்சை பெற்றிருக்க வேண்டும் என்பதும் இதில் அடங்கும்.  திருமுறை ஓதத் தொடங்கும்போதும் நிறைவு செய்யும்போதும் திருச்சிற்றம்பலம் என்று  சொல்லுதல் வேண்டும். திருமுறை நூல்களுக்கு பட்டு சாத்தி அர்ச்சனை வழிபாடு முதலியன செய்து பாடுதல் வேண்டும். திருமுறை நூல்களை ஆண்டவனாகவே எண்ணுதல் வேண்டும்.

    திருவாசகத்தைப் பாடுவதற்கு பண் உறுதி செய்யப்படவில்லை.  திருவெம்பாவைப் பாடல்களை மார்கழி மாதத்தில் நாள்தோறும் பாடும் முறைமை ஓதுவார்களிடத்திலும், மக்களிடத்திலும் ஏற்பட்டன. இதுவே திருவாசக முற்றோதல் மக்களைச் சென்றடைந்ததற்கான முதல்படியாகும் மார்கழி மாதத்தில் மட்டுமே பாவை நோன்பாக திருவெம்பாவை அதிகாலையில் பாடப்படவேண்டும். மற்ற நாள்களில் திருவெம்பாவையைப் பாடும் போது  அதில் இடம்பெறும்  எம்பாவாய்   மேலும்  சைவ அமைப்புகள் குறிப்பாக  என்ற சொல்லை வெளிப்பட பாடுதல் கூடாது என்பது மரபு.

    பன்னிரு திருமுறை மன்றங்கள் போன்ற அமைப்பின திருமுறை முற்றோதலைச் செய்விக்கத் தொடங்கின.  தேவாரப் பாடல்களை எளிமையாக மக்கள் பண்ணில் பாடி வழக்கிற்குக் கொண்டுவந்தவர்  தருமபுரம் சுவாமிநாதன். இவர் பன்னிரு திருமுறைகள் அனைத்தையும்  பாடி நிலைத்தவர் ஆவார். இவர் வழியில் பன்னிரு திருமுறைகள் எளிய மக்களைச் சென்றடைந்தன. எளிய மக்களும் திருமுறைகளைப் பாராயணம் செய்ய வந்தனர்.

    மனன முறை என்றொரு முறையும் திருமுறைகளுக்கு உண்டு. மனப்பாடம் செய்தல் போல பாடல்களைப் படிக்கும் முறை. முற்றோதலில் படிக்கவும் செய்யலாம். பண்ணுடன் பாடவும் செய்யலாம். அவரவர் ராகத்திற்கு ஏற்ப இசைவித்தும் கொள்ளலாம் என்ற நடைமுறை மக்களிடத்தில் தற்போது நிகழ்ந்து வருகின்றது.

    முற்றோதல் செய்யும் முறை

    திருவாசகத்தை முற்றோதல் செய்கின்ற போது திருவாசகத்தை மட்டும் படிக்காமல் திருவாசகத்திற்கு முன்னும் பின்னுமான திருமுறைகளை இணைத்துப் பாடுதல் வேண்டும். கடவுளைத் துதிக்கும் நடைமுறைகளைச் செவ்வனே செய்து, கணபதி வணக்கம், திருவிளக்கு வணக்கம், நால்வர் துதி, சந்தானாச்சாரியர்கள் துதி, பொது விண்ணப்பம், அடியார் விண்ணப்பம்,  ஏழு திருமுறைகளில் இருந்து  ஒவ்வொரு பதிகத்திற்கும் உரிய முதல், நிறைவுப் பாடல்கள் ஆகியன பாடப்பட வேண்டும்.  இதன்பின் திருவாசகப் பகுதிகள் முழுவதும் பாடப்பட வேண்டும். அதன்பின் திருக்கோவையார், ஒன்பதாம் திருமுறை , பத்தாம் திருமுறை, பதினோராம் திருமுறை, பன்னிரண்டாம் திருமுறை ஆகியவற்றில் இருந்து  ஒரு ஒரு பாடல்கள் பாடப்பட வேண்டும். இதன்பின் இறைவிக்கான பாடல் அபிராமி அந்தாதி போன்றவற்றில் இருந்து பாடலாம். இதன்பின் திருப்புகழ் இசைக்கப்பட வேண்டும். பின் வான்முகில் வழாது பெய்க என்ற  வாழ்த்துப் பாடல் பாடப்பெற்று   அன்னம் பாலித்து, அதற்கான தேவாரம் பாடி, தீபமேற்றித் துதித்து வழிபட்டு முற்றோதலை நிறைவு செய்யவேண்டும்.

    முற்றோதலில் பங்கு பெறும் அன்பர்கள் முற்றோதலிலேயே முழுக் கவனத்துடன் செயல்பட வேண்டும். பசி, தூக்கம், ஆசை , அலைப்புறுதல் மறந்து  ஒரே நினைவாய்ப் பாட வேண்டும். கொடுப்பனவற்றை வாங்கவதற்காகவும், உண்பதற்காகவும் நேரம் கழிகையில் திருவாசகத்தின் முழுமையைப் பாட முடியாதவர்களாக ஆகிவிடுகின்றோம். எனவே அதிகாலை தொடங்கி  விரதமாக இருந்து திருவாசகம் முற்றோதலை நடத்துவது சிறப்பு.

    திருவாசகம் முற்றோதல் செய்தவர்கள்

    வள்ளல் பெருமான் திருவாசகம் முற்றோதலை தன் மணநாளில் மனைவிக்கு முன்னர் நிகழ்த்தினார் என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டிய முக்கியமான முற்றோதல் நிகழ்ச்சியாகும்.

    வான்கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
    நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
    தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
    ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

    என்று வள்ளல்பெருமான் தான் கலந்து திருவாசகத்தைப் பாடி மகிழ்ந்துள்ளார். கரும்புச் சாறு, தேன், பால், செழுங்கனிகள்  எல்லாவற்றின் சுவையை ஒன்றாக்கினால் எவ்வகை இனிப்பு கிடைக்குமோ அத்தகயை இனிப்பினைச் சுவைக்கத் தருவது திருவாசகம் என்கிறார் வள்ளல் பெருமான்.

    ரமண மகரிஷி தன் தாயின் நிறைவுப் பகுதியில் திருவாசகத்தைப் பாடிக் கொண்டிருந்தார். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் நிறைவுக் காலத்தில் உ.வே.சாமிநாதர் திருவாசகம் பாடிக்கொண்டிருந்தார். உ.வே.சாவின் நிறைவுக் காலத்தும் திருவாசகம் பாடப்பெற்றது. ஆன்மாவைக் கடைத்தேற்றும் வண்ணமாக அதன் நிறைவுக் கட்டத்தில் திருவாசகம் பாடப்படுவது மறுமை கொள்ள வைக்காது என்பதே இதன் உட்பொருளாகும். எனினும்  வாழ்வின் நிறைவில் பாடப்படுவது திருவாசகம் என்ற எண்ணம் தமிழகத்தில் ஒருகாலத்தில் இருந்தது. தற்போது மணிவிழா,மணவிழா, திருவிழாக்களில் திருவாசகம் முற்றோதல் இசைக்கப்படுவது அது மங்கலம் நிறைந்த நன்னூல் என்பதைக் காட்டுவதாக உள்ளது.

    தூண்டல்கள்

    திருவாசகத்தை முற்றோதல் செய்யவேண்டும் என்று மாணிக்கவாசகரே கருதியுள்ளார்.

    பாடவேண்டும் நான் போற்றி! நின்னையே
    பாடி,நைந்து நைந்து, உருகி, நெக்கு நெக்கு,
    ஆட வேண்டும், நான் போற்றி! அம்பலத்து
    ஆடும் நின் கழல், போது நாயினேன்
    கூட வேண்டும் நான், போற்றி! இப்புழுக்
    கூடு நீக்க எனைப் போற்றி! பொய்யெலாம்
    வீட வேண்டும் நான் போற்றி! வீடு தந்து
    அருளு போற்றி! நின் மெய்யர் மெய்யனே! (திருச்சதகம்  பா. எ 100)

    என்று மாணிக்கவாசகர் சிவபிரான் புகழைப் பாடி ஆடிக் கூடி வீடு பெற  விரும்புகிறார். இதனைப் படிப்போரும் கேட்போரும் பாடி ஆடி சிவனை நாடி நிற்கின்றனர்.

    திருவா சகம் இங்கு ஒருகால் ஓதிற்
    கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள்
    தொடுமணற் கேணியிற் சுரந்துநீர்ப் பாய
    மெய்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி
    அன்பர் ஆகுநர் அன்றி
    மன்பதை உலகில் மற்றையர் இலரே

    என்று நால்வர் நான்மணி மாலையில் சிவப்பிரகாச சுவாமிகள்  திருவாசகம் படிக்கும்போது ஏற்படும் மன, உடல் மாற்றங்களைக் குறிப்பிட்டுத் திருவாசகத்தை முற்றோதல் செய்யத் தூண்டுகிறார்.  கருங்கல் மனமும் திருவாசகம் படித்தால் கேட்டால் அதன் கடினத் தன்மையில் இருந்து கரைய ஆரம்பிக்கும். மேலும்  உடலில் மயிற்கூச்சரிப்பு ஏற்பட்டு விதிர் விதிர்ப்படையும்.  இவையெல்லாம் திருவாசகத்தினால் உடலும் மனமும் பெறும் மாற்றங்களாகும்.

    திருவா சகமெனும் பெருநீர் ஒழுகி
    ஓதுவார் மனமெனும் ஒண்குளம் புகுந்து
    நாவெனு மதகில் நடந்து கேட்போர்
    செவியெனு மடையின் செவ்விதின் செல்லா
    உளமெனு நிலம்புக ஊன்றிய அன்பாம்
    வித்திற் சிவமெனு மென்முளை தோன்றி 10
    வளர்ந்து கருணை மலர்ந்து
    விளங்குறு முத்தி மெய்ப்பயன் தருமே

    என்பதும் நால்வர் நான்மணி மாலையில் இடம்பெறும் மற்றொரு பாடல் ஆகும்.  திருவாசகம் என்னும் பெரு நீர்  பாடுபவர்தம் மனம் என்னும் குளம் புகுந்து நிறைவிக்கும்.  மேலும் பாடுபவர்தம் நாக்கு என்னும் மதகில்நடந்து கேட்போர் செவிகள் எனும் மடைகளில் தேங்கி  அவர்களின் உள்ளம் என்னும் நிலத்தைச் சென்று சேரும். அதன்பின் அன்பு என்னும்  சிவ வித்தினை விதைத்து, மென் முறை வரச் செய்து கருணை என்னும் மலர் தந்து முக்தி என்னும் பயன் கனியைத் தந்து நிற்கும் என்றும் பாடுகிறார் சிவப்பிரகாசர்.

    திருவார் பெருந்துறைச் செழுமலர்க் குருந்தின்
    நிழல்வாய் உண்ட நிகரில்லா னந்தத்
    தேன்தேக் கெறியுஞ் செய்யமா ணிக்க
    வாசகன் புகன்ற மதுர வாசகம்
    யாவரும் ஓதும் இயற்கைக் காதலிற்
    பொற்கலம் நிகர்க்கும் பூசுரர் நான்மறை
    மட்கல நிகர்க்கும் மதுர வாசகம்
    ஓதின் முத்தி உறுபயன்
    வேதம் ஓதின் மெய்பயன் அறமே.

    என்ற சிவப்பிரகாசர் பாடல் யாவரும் ஓதும் இயல்பினை உடையது திருவாசகம்  என்று குறிப்பிடுகிறது. மேலும் அது மதுர வாசகம், பொன் கலம் போன்றது என்று அதன் உயர்வை அளக்கின்றது. மற்ற வாசகங்கள்  வேதம் உட்பட அனைத்தும் மண்கலம் போன்றன.  ஓதினால் முக்தி உறுதி என்றும் உரைக்கின்றது.

    இவ்வகையில் திருவாசகம் முற்றோதல் பால் பாகுபாடு இல்லாமல், தூய்மைச் சைவ நெறி உடைய அனைவரும் பாடலாம் என்று மக்கள் மையமாக திருவாசக முற்றோதல் விளங்குகிறது.  பாடுவது கடினம். படிப்பது எளிது. இனிது என்ற அடிப்படையில்  மக்கள் சங்கம் அனைத்தும் பாடும் படியான அருள் கருணை இக்காலத்தில் நமக்குத் திருவாசக முற்றோதல் மூலம் கிடைக்கின்றது. அதனை சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து, நன்முறையில் செய்து முக்தி பெறுவோம்.

    Share
  • பிரபஞ்ச ரகசியங்களைக் கட்டவிழ்த்த கணித மேதை

    பிரபஞ்ச ரகசியங்களைக் கட்டவிழ்த்த கணித மேதை

    ஸ்ரீ காளீஸ்வரர்

    பிரபஞ்சத்தின் ஆயுள் காலத்தோடு ஒப்பிடும்போது, மனிதர்களும் இன்ன பிற உயிரினங்களும் வினாடிப் பொழுதில் வந்து செல்லும் வழிப்போக்கர்கள் தான். ஆனால், இந்த வழிப்போக்கர்களில் சிலர் மட்டுமே, பிரபஞ்ச வரலாற்றில் நீங்காத இடத்தை முத்திரையாய்ப் பதிவு செய்து விடுகின்றனர்.

    1887ஆம் ஆண்டு எளிமையான குடும்பத்தில் ஈரோடு மாவட்டத்தில் பிறந்த குழந்தை தான், இன்றளவும் கணித உலகம் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு ஆச்சரியங்களை ஏற்படுத்திச் சென்றிருக்கிறார்.

    ஸ்ரீனிவாச ராமானுஜம் தன் 15ஆவது வயதில் Synopsis of Elementary Results in Pure and Applied Mathematics (1886- G.S.Carr) எனும் கணிதப் புத்தகத்தைப் படித்தார். அடிப்படையான கணிதச் சூத்திரங்களை மட்டுமே விளக்கப் பயன்படும் புத்தகம் என்பதால், உள்ளார்ந்த கணிதப் பார்வை (proof), மேற்கண்ட புத்தகத்தில் இடம்பெறவில்லை.

    இதனால் ராமானுஜம், தனக்கெனக் கணிதத் தேற்றங்களை உருவாக்கத் தொடங்கினார். இங்கிருந்து தான், கணித மேதையின் ஆய்வுப் பயணம், அதிகாரப்பூர்வமாய் உதயமாகிறது.

    இன்றைக்கும் கூடப் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் சென்று, உலகறிந்த கணித மேதை ஒருவரைக் குறிப்பிடுங்கள்! என்று சொன்னால் அனைத்து மாணவர்களுக்கும் பரிச்சயமான ஒரே பெயர் ஸ்ரீனிவாச ராமானுஜம் மட்டுமே.

    இந்த அளவிற்கு, கல்விச் சமூகத்தில் தன் பெயரை நாட்டி இருக்கும் ராமானுஜம், தன்னுடைய தினசரி வாழ்க்கை நடத்துவதற்குப் பணம் இல்லாமலும், கிழிந்த ஆடைகளை அணிந்துகொண்டு வேலை தேடிக்கொண்டும் இருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

    தன்னுடைய கல்லூரிப் படிப்பைப் பச்சையப்பன் கல்லூரியில் தொடங்கிய ராமானுஜம், கணிதம் தவிர்த்த, இன்ன பிற பாடங்களில் தேர்ச்சி வாய்ப்பைப் பெற முடியவில்லை என்பது, வரலாறு கூறாத உண்மை.

    கணிதத்தின் மீது இருந்த ஆர்வத்தால், எப்போதும் கணிதம் குறித்தே சிந்தித்துக்கொண்டிருந்த ராமானுஜத்திற்குப் பின்னாளில் வாய்ப்புகளும் சீராக அமைந்தன.

    ராமானுஜம், 1910ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் துணை ஆட்சியராக இருந்த ராமசாமி ஐயரைச் சந்தித்தார்.

    பின்னாளில், இந்தச் சந்திப்புக் குறித்து நினைவுகூர்ந்த ராமசாமி ஐயர் “ஒரு இளைஞன் தன்னுடைய கைகளில் அளப்பரிய கணிதவியல் தேற்றங்களை உள்ளடக்கிய நோட்டுப் புத்தகத்தை வைத்திருந்தார். வருவாய்த் துறையில் இருந்த பற்றாக்குறைகளையும் கடந்து, அவருக்கு உதவ வேண்டும் எனும் எண்ணம் ஏற்பட்டது” எனும்படி தெரிவித்திருக்கிறார்.

    அதன் பின்பு, 1915ஆம் ஆண்டு ஸ்ரீனிவாச ராமானுஜம் இங்கிலாந்து சென்றார். அங்கே பல்வேறு கணிதவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். சிறந்த கணித மேதையான ஜி.ஹெச்.ஹார்டி அவர்களுடன் நட்பு பாராட்டினார். இவை அனைத்துமே வரலாற்றின் பக்கங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

    ராமானுஜத்தின் வரலாற்றில், மேலும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுவது, வாகனப் பதிவு எண்:1729.

    காச நோயால் பாதிக்கப்பட்டு, இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ராமானுஜத்தை நலம் விசாரிக்கச் சென்ற ஜி ஹெச் ஹார்டி, பின்னாளில் பகிர்ந்துகொண்ட சுவாரசியமான நிகழ்வு தான் இது.

    “ராமானுஜத்தைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்று இருந்தேன். அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தேன்! அவரோ, கணிதவியல் தேற்றங்கள் குறித்தே அப்போதும் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது, நான் பயணித்து வந்த டாக்ஸி காரின் பதிவு எண் 1729 என்று தெரிவித்தேன். உடனே ராமானுஜம் இந்த எண்ணில் இருக்கும் விசேஷம் உங்களுக்குத் தெரியுமா என்று என்னிடம் கேட்டார்.

    வழக்கம் போல இருக்கக் கூடிய ஒரு சாதாரண 4 இலக்கு எண் தான் என ராமானுஜத்திடம் சொன்னேன்.
    ஆனால் அதற்கு ராமானுஜம் அளித்த விளக்கம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதை இரு வெவ்வேறு வழிகளில் இரு கனங்களின் கூட்டுத் தொகையாக எழுதலாம் என்றார். அதற்கான வழிமுறையினையும் உடனுக்குடன் எடுத்துரைத்தார் (12^3 + 1^3 = 1729)”

    காச நோயின் தீவிரம் அதிகமானது. ராமானுஜத்தின் உடல்நிலை மெல்ல மெல்ல நலிவுறத் தொடங்கியது. பிரபஞ்ச வரலாற்றில், அதன் ரகசியங்களைக் கட்டவிழ்த்து விடக் கூடிய ஆற்றல் படைத்த கணித உலகின் மேதை, தன்னுடைய பணிகளைப் பாதியில் விட்டபடியே, ஏப்ரல் 26ஆம் தேதி 1920ஆம் ஆண்டு பிரபஞ்ச ஆற்றலோடு கலந்தார்.

    ராமானுஜம் நிறைவு செய்யாமல் வைத்திருந்த கணிதத் தேற்றங்களை, பின்னாளில் உலகின் ஆகச் சிறந்த கணித நிபுணர்களும் நிரூபிக்க முயன்றனர். இன்னும் கூட, சில தேற்றங்களை நிரூபிக்கும் முயற்சியைத் தொடர்கின்றனர்.

    மனிதன், தன்னுடைய வாழ்நாளில் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தின் ஒட்டுமொத்த வடிவம்தான் சீனிவாச ராமானுஜம். அவர் கணித மேதை மட்டுமில்லை, இந்தப் பிரபஞ்சம் நமக்குப் பரிசளித்த மாற்றுச் சிந்தனைவாதி.

    கணித மேதை ராமானுஜத்தின் பிறந்த நாள், 2012ஆம் ஆண்டு முதல், தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை, அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார்.

    பிரபஞ்ச கணித மேதை சீனிவாச ராமானுஜம் உதயமாகி, இன்றோடு 137 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவரது புகழ் என்றும் ஓங்கி நிலைத்திருக்கும்.

     

    கட்டுரையாளர்:-
    ஸ்ரீ காளீஸ்வரர்,
    இளங்கலை இயற்பியல் மாணவர்,
    நாகர்கோவில் -02.
    தொடர்புக்கு : srikaleeswarar@myyahoo.com

    Share
  • அதிர்ச்சியில் ஆழ்த்திய அஷ்வின் ஓய்வு

    அதிர்ச்சியில் ஆழ்த்திய அஷ்வின் ஓய்வு

    ஸ்ரீ காளீஸ்வரர்

    2013ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என அழைக்கப்பட்ட, சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேற்கிந்திய தீவுகள் அணி உடனான, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இறுதியாகப் பங்கேற்று இருந்தார் சச்சின் டெண்டுல்கர்.

    முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அதிகப்படியான விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பார்க்காத வகையில் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் அந்தப் போட்டியில் சதம் விளாசினார்.

    அன்று முதல் தான், அஷ்வின் எனும் கிரிக்கெட் வீரரின் மானசீக ரசிகனாக மாறினேன். ரவிசந்திரன் அஷ்வின், களத்தில் எப்போதும் ஆக்ரோஷமான விளையாட்டு வீரராகவே நின்றார்.

    2014ஆம் ஆண்டு, இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டி, நியூசிலாந்தில் நடைபெற்றது.

    முதலில் நடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருந்ததால், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தான் தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பைத் தக்கவைக்க முடியும் எனும் நிலையும் இருந்தது.

    ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் இழந்துவிட்ட நிலையில், களத்தில் இருந்தது அஸ்வினும் ரவீந்திர ஜடேஜாவும் தான்.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் அன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய அஷ்வின்,  65 ரன்கள் விளாசி இருந்தார். இறுதியில், ஜடேஜாவின் முயற்சியால் அந்தப் போட்டி சமநிலையில் (tie) முடிந்தது.

    அந்தப் போட்டியைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அப்பொழுது வெறும் பத்து வயது தான்.

    இந்தியா போன்ற பரந்து விரிந்து 140 கோடி மக்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு தேசத்தில், இந்தியக் கிரிக்கெட் அணியில் 11 வீரர்கள் மட்டுமே களத்தில் இடம் பெற முடியும்.

    அதிலும், தமிழ்நாட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியில் நீடித்த இடம் பிடித்த வீரர்கள் மிக மிகச் சிலரே. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் போன்ற வீரர்களுக்குப் பிறகு, தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த இந்திய கிரிக்கெட் வீரராக அஷ்வின் புகழ் பெற்றார்.

    540க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஏழாவது வீரர் என்னும் சாதனையோடு தன்னுடைய ஓய்வு முடிவை, 2024 டிசம்பர் 18ஆம் தேதி அறிவித்திருக்கிறார். இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், ஷ்வின் ஓய்வு அறிவிப்பு, கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரும், மகேந்திர சிங் தோனியும் மட்டும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் இல்லை. கிரிக்கெட் விளையாட்டு என்பதையும் கடந்து, இந்திய ரசிகர்களின் உணர்வாகவே மாறி இருக்கிறது. இந்த உணர்வுப்பூர்வமான பந்தத்தின் வரலாற்றில், நிச்சயமாக அஷ்வின் நீடித்திருப்பார்! நிலைத்திருப்பார்!

    Share
  • ஜாகிர் உசேன்!

    ஜாகிர் உசேன்!

    பக்க வாத்தியத்தை முக்கிய வாத்தியமாய் முழங்கிய
    பக்கா வாத்தியக்காரன்!

    தபலாவின் மையத்தில் மட்டுமா நீ வாசித்தாய்?
    தபலாவையே மையத்தில் வைத்து வாசித்தாய்!

    இசை காதுகளுக்கானது என்பர்
    உனது இசையோ
    கண்களுக்கும் ஆனது

    தபலாவில்
    உன் விரல்கள் ஆடும் நடனம்
    ஒரு பேரருவியின் முத்தம்!

    அதிலிருந்து பெருகும் இசை
    ஒரு ஜீவ நதியாய் ஓடிக்கொண்டே இருக்கும்!

    – அண்ணாகண்ணன்

    #zakir #zakirhussain

    Share
  • சச்சி – 84  | மறவன்புலவு க. சச்சிதானந்தன் நீடூழி வாழ்க!

    சச்சி – 84 | மறவன்புலவு க. சச்சிதானந்தன் நீடூழி வாழ்க!

    அண்ணாகண்ணன்

    உலகத் தமிழர், தமிழறிஞர், பதிப்பகச் செம்மல், திருமுறைச் செல்வர், அன்பிற் சிறந்த சான்றோர் மறவன்புலவு க. சச்சிதானந்தன், கார்த்திகை மாதம், மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர். நட்சத்திரப்படி அவருக்கு, 15.12.2024 அன்று 84ஆவது பிறந்த நாள்.

    நுண்மாண் நுழைபுலம் மிக்க ஈழத் தமிழறிஞர்; ஐ.நா. உணவு – வேளாண் கழக முன்னாள் ஆலோசகர்; இலங்கையில் சிவசேனை அமைப்பை நிறுவியவர்; காந்தளகம் பதிப்பகத் தலைவர்; தனித்துவம் மிக்க தமிழ்நூல்.காம், தேவாரம்.ஆர்க் தளங்களின் நிறுவனர் – வழிகாட்டி – காப்பாளர்; தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்குத் தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கிட முக்கிய காரணர்களுள் ஒருவர்… எனப் பற்பல பெருமைகளுக்கு உரியவர், நம் சச்சிதானந்தன்.

    ஆஸ்திரேலியாவில் பொங்கல் திருநாள் அன்று சச்சியை உரையாற்ற அழைத்தார்கள். புலம்பெயர் இளையோர் நிறைந்த அந்த அவையில் இவர் ஆற்றிய உரையின் தலைப்பு: The Photosynthesis Day என்பதாகும். இத்தகைய அறிவியல் கண்ணோட்டம் கொண்டவர், இவர்.

    ஒளி அச்சுக் கோப்பு, நிலவரை என்ற கலைச் சொற்களைப் புதிய பொருளுடன் அறிமுகப்படுத்தியவர்; 60 நாடுகளுக்கும் மேல் பயணித்தவர்; இலங்கை அரசியல் நிகழ்வுகளின் நோக்கர்; சேது சமுத்திரத் திட்டம் என்கிற தமிழன் கால்வாய்த் திட்டத்தைப் பல முனைகளுக்கும் எடுத்துச் சென்ற கடலியல் வல்லுநர்; தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்துத் தொடங்குவதற்கு அடிகோலியவர்.

    தமிழில் காசோலைகளை எழுதி, அதை ஏற்காத வங்கிகளுடன் சட்டப்பூர்வ – தனி நபர்ப் போராட்டங்களை நடத்தியவர். தமிழால் அனைத்தும் முடியும் என்பதை நிலைநாட்டும் வண்ணம் செயலாற்றி வருகிறார். தமிழையும் சைவத்தையும் தம் இரு கண்களாகக் கொண்டவர்.

    எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகுவதில் இவர், சிறந்த முன்மாதிரி. புதிய சிந்தனைகள், ஆக்கப்பூர்வ செயல்திட்டங்கள், பொருள் செறிந்த நுணுக்கமான மொழி நடை… ஆகியவற்றுடன் மகத்தான ஆளுமையாக நம் முன் நிற்கிறார். செய்யும் அனைத்தையும் செவ்வனே செய்யும் ஐயாவின் ஆற்றலைத் தமிழுலகம் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும்,

    தமிழுக்காக அளப்பரிய தொண்டாற்றும் சச்சி ஐயா, நீடூழி வாழ்க!

    Share
  • புஷ்பா – லக்கி பாஸ்கர் – மட்கா

    புஷ்பா – லக்கி பாஸ்கர் – மட்கா

    அண்ணாகண்ணன்

    புஷ்பா படத்தில் நாயகன், செம்மரங்களை வெட்டிக் கடத்திக் கோடிகளைக் குவிக்கிறான். மட்கா படத்தில் நாயகன், சூதாட்டத்தின் மூலம் பெரும் பணம் குவித்து, துபாய்க்குத் தப்பிச் செல்கிறான். லக்கி பாஸ்கரில் நாயகன், பங்குச் சந்தையில் பணம் குவித்து, அமெரிக்காவில் செட்டில் ஆகிறான்.

    இவை மூன்றும் தெலுங்குப் படங்கள். ஒரே காலத்தில் வெளிவந்தவை. இவற்றில் குற்றவாளிகளே நாயகர்கள். குற்றங்களில் படிப்படியாக முன்னேறி, கோடிகளைக் குவிக்கிறார்கள். தந்திரமாகத் தப்பிச் செல்கிறார்கள். இவர்களுடன் ஒத்துழைத்தவர்களும் பணம் குவிக்கிறார்கள். எதிர்த்தவர்கள் அழிக்கப்படுகிறார்கள். குறுக்குவழியில் வேகமாக ஜெயிக்கலாம். தண்டனையிலிருந்து தப்பித்தும் விடலாம் என அழுத்தமாகக் காட்டப்பட்டுள்ளது.

    இவை இந்திய மொழிகள் பலவற்றில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. கோடிக்கணக்கானவர்கள் பார்த்துள்ளார்கள். இவற்றைப் பார்ப்பவர்கள் மனத்தில் இவை என்ன சிந்தனையை விதைக்கும்?

    #pushpa #pushpa2 #luckybaskhar #matka

    Share
  • குறளின் கதிர்களாய்…(510)

    குறளின் கதிர்களாய்…(510)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(510)

    பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர்
    கழிநல் குரவே தலை.

    – திருக்குறள் – 657 (வினைத் தூய்மை)

    புதுக் கவிதையில்…

    பழியைத் தந்திடும்
    இழிதொழில் செய்து
    ஈட்டும் செல்வத்தைவிட,
    தீவினை ஏதும் செய்யாமல்
    வினைத் தூய்மையுடன்
    செயல்பட்டுச்
    சான்றோர் பெற்றிடும்
    வறுமை
    மிக உயர்ந்ததே…!

    குறும்பாவில்…

    இழிதொழில் செய்து பழியுடன்
    ஈட்டும் செல்வத்தைவிட சான்றோர் நல்வினையாற்றி
    பெற்றிடும் வறுமை உயர்ந்ததே…!

    மரபுக் கவிதையில்…

    நீங்காப் பழியைச் சுமந்தேதான்
    நீசச் செயல்கள் செய்வதனால்
    ஓங்கிச் சேரும் செல்வத்தால்
    ஒருவன் வாழ்வில் ஈட்டுகின்ற
    வீங்கும் ஆக்க மதனைவிட
    வினையின் தூய்மை யதனாலே
    வாங்கும் வறுமை சான்றோர்க்கு
    வாய்க்கும் உயர்வே ஆகிடுமே…!

    லிமரைக்கூ…

    தீயன தீராப்பழியைத் தாங்கி
    செய்வதால்வரும் செல்வத்தைவிட நற்செயல்தரும் வறுமையால்
    சான்றோரின் புகழ்வளரும் ஓங்கி…!

    கிராமிய பாணியில்…

    செம்மயா இருக்கணும் செம்மயா இருக்கணும்
    செய்யிற செயலு
    வாழ்கயில செம்மயா இருக்கணும்..

    பழிபாவம் தருற
    கேடான செயலச் செய்து
    சேக்கிற செல்வத்தவிட
    ஒருத்தருக்கும் கேடு தராத
    நல்லதச் செய்றதல
    நல்லவங்களுக்கு வருற
    வறுமயும் ஒசத்திதான்..

    அதால
    செம்மயா இருக்கணும் செம்மயா இருக்கணும்
    செய்யிற செயலு
    வாழ்கயில செம்மயா இருக்கணும்…!

    Share
  • காரன் / காரி வேர்ச்சொல்

    காரன் / காரி வேர்ச்சொல்

    அண்ணாகண்ணன்
    புல்வந்தி என்ற மராத்தித் திரைப்படத்தைப் பார்த்தேன். படத்தைப் பற்றிப் பிறகு எழுதுகிறேன். இதில் கலைஞர் என்பதைக் கலாகார் என அழைக்கிறார்கள். இதில் கலை என்பதை நாம் நன்கறிவோம். இதன் இரண்டாம் பகுதியான கார் என்பதை ஆராய்ந்தேன்.
    வடமொழியிலும் இந்தியிலும் கார் என்பது, ஒன்றைச் செய்பவரைக் குறிக்கிறது. கலை செய்பவர், கலாகார். இப்படியே சித்திரக்கார், சங்கீத்கார், சில்ப்கார், நாடக்கார், கிரந்த்கார், இதிஹாஸ்கார் எனப் பெருவழக்காக உள்ளது. இந்தக் கார் என்பது பாலி, பெர்சியன், உருது, மராத்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகளிலும் பயன்பாட்டில் இருக்கிறது.
    தமிழில் உள்ள வேலைக்காரன், வேலைக்காரி, கரகாட்டக்காரன், ஆட்டக்காரி, வண்டிக்காரன், பாட்டுக்காரன், கொள்ளைக்காரன், சூனியக்காரி, ஆட்டோக்காரன், மேளக்காரன்… என ஒரு வேலையைச் செய்பவர்களைக் காரன் / காரி என அழைக்கிறோம். இதே போல் வீட்டுக்காரன், வீட்டுக்காரி, மூளைக்காரன், பொய்க்காரி, பூக்காரி, சொந்தக்காரன், சொந்தக்காரி என ஒன்றை உடையவர்களையும் இவ்வாறு அழைக்கிறோம். மேலும், இந்திக்காரன், சிந்திக்காரி, மதுரைக்காரன் என ஒரு மொழியை, இடத்தை, நாட்டைச் சேர்ந்தவர்களையும் இவ்வாறு அழைக்கிறோம்.
    இவற்றைத் தூய தமிழ் என யாரும் நினைத்துக்கொள்ள வேண்டாம். இந்தக் கார், காரா (சம்ஸ்காரா), காரம் (உபகாரம்), காரன், காரமு போன்றவை பல மொழிகளிலும் நிறைந்துள்ளன. ஒரு மொழி தெரியாமலே அதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்பது இந்த வேர்ச்சொற்களின் முதல் ஆதாயம்.
    Share
  • The other side of Luz is sad soaked and dark

    The other side of Luz is sad soaked and dark

    Baskar Seshadri

    What a transformation is this? Decades back this luz junction was a free place with no traffic and was not dense. Even there were no shops on the pavements and it was even free to walk on the pavement close to Nehru News Mart. This was a Major Bus Route even those days with many routes plied through this Junction on all the four sides. interestingly the idea of One-way traffic did not catch up those days. Later when the commercial market developed in a bigger way this area had become congested in spite of the fact that the roads were too wider on all the sides. Most of the Prominent points vanished in late eighties which Includes Parthaas. Sawaan Restaurant, Shanthi VIhar, an elite club with bar, Ganapathi Medicals, and recently Bombay Halwa House few Years. Who can forget the mail van of Postal department that reaches Luz Amrutanjan at seven thirty sharp in the evening? Who can forget the crowded matinee Shows of Kamadhenu, Hot chai of Select and Chilled Juice of Himalayas?

    Now the whole of Luz had changed totally in all aspects and after the roads are shut the area is now totally under the control of CMRL.

    Two days ago, when i had been there i had a chat with Field staff of Metro Rail who told that the old Roundata Point and Police cabin area will be the Luz Metro Station. Three years or slightly more the reality will be happened. This station in its full form may be ready in 2028.

    But for all these many residents, Commercial establishments in and around this area have lost their Livelihood Luz. How can this sufferings be compensated to all those. The other side of Luz is Dark and sad soaked.

    Share
  • இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது பெற்ற அபராஜிதன் நாவல்

    இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது பெற்ற அபராஜிதன் நாவல்

    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் உயரிய இலக்கிய விருதான ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’ விழா 27.11.2024 அன்று கொழும்பு, அலரி மாளிகையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழிபெயர்ப்பு நாவல்களில் சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’ எம். ரிஷான் ஷெரீப் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ‘அபராஜிதன்’ நாவலுக்கு வழங்கப்பட்டது.

    அத்தோடு திராவிடியன் ஸ்டாக் பதிப்பகம் வெளியிட்ட மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்பான ‘அரேபியப் பெண்களின் கதைகள்’ மற்றும் எதிர் வெளியீடு பதிப்பகம் வெளியிட்ட மொழிபெயர்ப்பு சுயசரிதை நூலான ‘ஊழின் அடிமையாக வேட்கை தணிக்கும் பெண்ணின் கதை’ ஆகிய எம். ரிஷான் ஷெரீப்பின் ஏனைய இரண்டு நூல்களும் வெவ்வேறு பிரிவுகளில் சாகித்திய விருதுக்கான இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Share
  • சிலப்பதிகாரம் காட்டிநிற்கும் புரட்சிச் சிந்தனைகள்

    சிலப்பதிகாரம் காட்டிநிற்கும் புரட்சிச் சிந்தனைகள்

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    சிலம்பின் சிறப்பு

    சிலப்பதிகாரத்தை ஏன் படிக்க வேண்டும்? சிலப்பதிகாரத்தில் அப்படி என்னதான் பொதிந்து கிடக்கிறது! சிலப்பதிகாரத்தைவிட வேறு காப்பியங்கள் தமிழில் சிறந்து விளங்கவில்லையா? என்றெல்லாம் எம க்குமுன்னே பல ஐயங்கள் வந்து நிற்கும். சிலப்பதிகாரத்தைப் பற்றிய சிறப்பும் அதன் சிந்தனைகருத் துக்களும் சரியான முறையில் எம்மிடம் புகுந்துவிடுமானால் இப்படியான ஐயம் எழுவதற்கே இடமில் லாமல் போய்விடும் என்பது எனது மனக்கருத்தாகும். தமிழில் வந்த முதல்காப்பியமாக சிலப்பதிகாரமே விளங்குகிறது.

    இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்,  மூன்றையும் கொண்ட முதல் தமிழ் காப்பியம் என்னும் பெருமையையும் கொண்டு நிற்கிறது. சேர, சோழ, பாண்டிய, நாடுகளான முத்தமிழ் நாட்டினையும் முழுமைபெறச் செய்த காப்பியமாகவும் அமைந்திருக்கிறது.இலக்கிய உன்னதத்தை வெளிப்படுத்தும் காப்பியமாகவும் இருக்கிறது.

    தமிழர்களின் பன்முகப்பட்ட சமூகப் பண்பாட்டினைக்  காட்டி நிற்கும் காப்பியமாகவும் திகழ்கிறது. வாழ்வியல் நெறிகள், வழிபாட்டு முறைகள், கலைகள், அரசுமுறைகள், நீதி நிர்வாகம், பெண்களின் சமுதாய நிலை, என்று பலவற்றைக் காட்டி நிற்கும் காப்பியமாக சிலப்பதிகாரம் திகழ்கிறது எனலாம். இக்காப்பியத்தை புரட்சிக் காப்பியம், குடிமக்கள் காப்பியம், சமுதாயக் காப்பியம், வரலாற்றுக் காப்பியம், தேசியக் காப்பியம், நாடகம் காப்பியம் என்றெல்லாம் பன்முகப் பார்வையில் நின்றும் பாராட்டப்படும் நிலையும் காணப்படுகிறது. இதனால் காலத்தை வென்று நிற்கும் காப்பியமாக சிலப்பதிகாரம் இருக்கி றது என்பது மறுத்துவிட முடியாத உண்மையெனலாம்.

    இதனால் அன்றோ தேசியக்கவி பாரதி “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம்” என்று விதந்தோதி நின்றார் போலும்! பாரதியின் வாக்கு எத்தனை வலிமையும் பெறுமதியுமானது என்பதிலிருந்தே சிலப்பின் சிறப்புப் புலனாகி நிற்கிறதல்லவா! சிலப்பதிகாரம் தமிழ் தேசியக் காப்பி யம். சிலப்பதிகாரம் தமிழின் சொத்தாக நிற்கும் காப்பியம். சிலம்பைப் படித்தால் சிந்தனை வளரும்! சிலம்பை நினைத்தால் பெருமிதம் நிலைக்கும்!

    சிலம்பின்  புதுப்பாதை

    நாட்டையோ, சாதியையோ, சமயத்தையோ, சிக்கலுக்குள் புகாவண்ணம்  நடுநிலையினைப்  பேணி க்காத்து உண்மை ஒளி விளங்கும் வகையில் சிலம்பு மலர்ந்திருக்கிறது. வேற்றுமை பாராட்டும் பாங் கினை சிலம்பு தவிர்த்தே நிற்கிறது எனலாம். சாதிகளுக்கிடையே வேறுபாடுகள் காணாது ஒத்தும் உறழ்ந்தும் செல்ல வேண்டும் என்பது சிலம்பின் புதுப்பாதை எனலாம். கவுந்தி அடிகள் சாதியையோ குலத்தையோ பாராதவராக சிலம்பில் வருகிறார். இதுவும் சிலம்பின் புதுப்பாதையினையே காட்டுகிறது. காவியங்களின் தலைவனாக பெரும்பாலும் சிலம்பின் காலத்து உலக காவியங்களில் அரசர்களே வந்திருந்த வேளை – அரசர்க்கு அடுத்த நிலையில் இருந்த வணிக குலத்தை சேர்ந்தவரை காவியத்தலை மைக்கு காட்டியதும் சிலம்பின் புதுப்பாதை எனலாம். மூன்றாம் வருணமாகக் கொள்ளப்படும் வணிக குலத்து பெண்ணான கண்ணகியை தெய்வமாக்கி எல்லா வருணத்தாருமே வணங்கும் நிலையினை சிலம்பு உருவாக்கி நிற்பதும் சிலம்பின் புதுப்பாதை என்று எண்ண முடிகிறது அல்லவா! பத்தினித் தெய்வமாக கண்ணகியை வழிபடும் நிலையினை உருவாக்கியமை சங்ககால இலக்கிய மரபில்வந்த கொற்றவை வழிபாட்டின் தொடர்ச்சியே எனலாம். இதனை நோக்கும் பொழுது  கண்ணகியை தேசிய அளவில் தெய்வமாக உருவாக்கும் புதுப்பாதை சிலம்பினால் வருகிறது என்றே எண்ண முடிகிறது. சேர சோழ பாண்டிய நாடுகளுடன் நின்றுவிடாது இலங்கையிலும் இடம்பெறும் நிலைக்கு தேசிய நிலையா க்கிய புதுமை சிலம்பின் புதுமை என்றுதானே பார்க்க முடியும்.  சுவாமி விபுலானநந்த அடிகளாரின் யாழ் நூல் தோற்றத்துக்கு பாதை அமைத்ததும் சிலம்பன்றோ! தமிழிசை இயக்கும் உருவாவதற்கு பாதை வகுத்ததும் சிலம்பேயாகும்.

    சிலம்புக்கு முற்பட்ட காலத்துப் புலவர்கள் கையாளாத  பல புதிய கவிதை வடிவங்களை சிலம்பில் இடம்பெறச் செய்து இளங்கோ புதுப்பாதையை வருங்காலத்து காட்டி நிற்கிறார். அகவலும் வெண்பாவுமே மிகுதியாகக் காணப்பட்டது பழைய இலக்கியத்தில் எனலாம். பிற்காலத்தில் தாழிசை, துறை , விருத்தம் என்னும் பெயரில் செய்யுள் இனங்கள் வளர்ந்ததைக் காண்கிறோம். இவ்வாறான புதிய வடிவங்கள் வருவதற்கு வழிகாட்டிய பெருமையும் சிலம்புக்கே உரித்தாகிவிடுகிறது எனலாம். அக்காலத்தில் வழக்கிலிருந்த நாட்டுப் பாடல்களை உள்வாங்கியே கானல்வரிப் பாடல்களும், ஆய்ச்சியர் குரவைப் பாடல்களும் சிலம்பில் வரப்பண்ணியதும் இளங்கோவின் புதுப்பாதைதனையே காட்டுகிறது என்றும் கொள்ள முடிகிறது. அக்கால நாட்டுப் பாடல்களை மனமிருத்தி அதனூடாகப் பெற்றவற்றை புதிய செய்யுள் வடிவங்கள் ஆக்குவதற்கு முயன்று அதனை காப்பியத்திலும் இடம்பெறும் வண்ணம் செய்தமை நல்லவொரு புதுப்பாதை என்றே எண்ண முடிகிறது எனலாம். இதன் மூலம் தமிழ் இலக்கியத்துக்கு இளங்கோ அடிகள் செய்திருக்கும் தொண்டு மிகவும் பெறுமதி மிக்கதென்றே கொள்ளல் வேண்டும்.

    சங்கால இலக்கிய மரபில் காதலும் வீரமும் அறமும் காட்டப்பட்டிருந்தாலும் கதையாக தொடராக இலக்கியத்தில் இடம்பெறவில்லை என்றே கொள்ள முடிகிறது. சங்ககாலத்தை அண்டிய காலத்தில் முதன் முதலாக  ஒரு தொடராக ஒரு கதையினை வெளியிட்டு அதில் காதல், வீரம், அறம், அத்தனையும் காட்டி தமிழ் இலக்கியத்துக்கே புதுப்பாதை காட்டிய வகையிலும் சிலம்பினை காட்டி நிற்கிறார் இளங்கோ அடிகள் என்பதை எவருமே மறுத்துவிட முடியாது என்பது உண்மை எனலாம். தமிழ் இலக்கியத்துக்கே சிலம்பு  புதுப்பாதையாக அமைந்தமையால் பின்னர் காப்பியங்கள் பல வரவும் வாய்த்தது என்பதும் மனங்கொள்ளத்தக்கதெனலாம். பின்னர் வந்த காப்பியங்கள் வழிநூல் வழிவந்து நூலாகி நிற்கின்றன. ஆனால் வழி நூல்கள் எதுவும் இன்றி தானே மூலநூலாய் தமிழ் இலக்கியப் பாதையில் புதுப்பாதை காட்டி அதன்வழி வந்தபெருமையினை சிலம்பதிகாரம் ஒன்றே பெற்று கொள்கிறது என்பதே சிலம்பின் சிறப்பும் பெருமையும் என்பதில் எள்ளளவும் எந்தவித ஐயமும் இல்லை என்பதையே காட்டி நிற்கிறது எனலாம்.

    அறநூல் என்று சிறப்பிக்கும் நூல்களும் ஏனைய நூல்களும் ஆரம்பிக்கும் வேளை கடவுள் துதியினைப் பாடியே  தொடங்கும் மரபே காணப்பட்ட வேளை அவற்றை யெல்லாம் கருத்தில் கொள்ளாமல் இயற்கையினைப் பாடியே சிலம்பினை தொடக்கி காவிய மரபில் புதுப்பாதையக் காட்டி நிற்கிறார் இளங்கோ அடிகள் எனலாம். இப்பாதை தமிழ் இலக்கியத்தில் முற்றிலும் மாறுபட்ட வேறுபட்ட புதுப்பாதை என்று அறிஞர்களே வியந்து நிற்கிறார்கள்.

         திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
    ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
    மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

    என்று இயற்கையினையே பாடி அதனையே மங்கல வாழ்த்தாக்கி சிலம்பினை ஆரம்பிக்கின்றார் இளங்கோ அடிகள். இஃது முற்றிலும் வித்தியாசமான புதுப்பாதை அல்லவா! பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருப்பதுதான் இறையாகும். ஆகவே அந்த இறையினை இயற்கையில் கண்டு தனது காவியத்தை புதுப்பாதையில் தொடக்கியமை இளங்கோவின் மதி நுட்பத்தை புலப்படுத்தி நிற்கிற தல்லவா!

    சிலம்பின் புரட்சி

    அவதாரங்களையும் அரசர்களையும் ஆளும் வர்க்கத்தையும் கதைக்கு தலைமைதாங்கும் வண்ணமே காப்பியங்கள் வந்திருக்கின்றன. சாதாரண குடிமக்கள் தலைமை என்பது நினைத்துமே பார்க்கமுடியா மரபில் அதனை உடைத்து அவதாரமோ உயர்நிலையோ அல்லாத அதுவும் ஒரு சாதாரண குடிமகளை கதைக்கு தலைமைதாங்க வைத்து மாபெரும் காப்பியத்தை வடிவமைத்த இளங்கோ அடிகளாரின் புரட்சியானது தமிழ் இலக்கியத்தில் நடந்த மிகப்பெரிய புரட்சி என்றே கூறலாம்.

    காப்பியத்தின் பெயரே புரட்சியாகவே மலர்கிறது. கதையின் நாயகியின் பெயராலோ அல்லது நாயகன் பெயராலோ அமையாது ஒரு அணியின் பெயரால் அமையப்பெற்றிருப்பது அடிகளாரின் மற்றொரு புரட்சியாகி நிற்கிறது. காப்பியத்தின் நாயகியான கண்ணகி கற்புத் தெய்வமாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். அந்தத் தெய்வத்தின் திருவடியைக் காண்பதுதான் மிகமிக பொருத்தமாகும். “கண்ணகி காப்பியம்” என்று பெயரிட்டால் அவளது திருமேனிதான் நினைவில் வந்து நிற்கும் என்னும் அச்ச உணர்வினால்  அவள் திருவடியை அலங்கரிக்கும் அணியான சிலம்பின் பெயரை வைத்து அவளின் திருவடி ஒன்றே எல்லோர் நெஞ்சிலும் பதியவேண்டும் என்ற புரட்சிகரமான சிந்தனையினாலேதான் இளங்கோ வடிகள் “சிலப்பதிகாரம்” என்னும் பெயரையே சூட்டி இருக்கிறார். இது காப்பிய வரலாற்றில் எண்ணியே பார்க்கமுடியாப் புரட்சி என்று அறிஞர்கள் விதந்து நிற்கிறார்கள்.

    மக்களின் உள்ளங்களை அறிந்தவர் இளங்கோவடிகள். இவருக்கு முன் இருந்த புலவர்கள் வழியில் செல்லாது அவர்கள் தொடாதவற்றை அவர்களால் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்ட ஆடல் பாடல் களை ஆசையுடன் நோக்கினார். மக்களின் வாழ்வில் பாடப்பட்ட படல்களைப் பற்றியோ அவர்களின் கூத்து வடிவங்களையோ சங்கநூல்களில் கண்டறிய முடியாதிருக்கிறது. ஆனால் இளங்கோவடிகள் அந்தப் பாடல்களின் உரிமையானவர்களின் கலைகளை மதித்தார். அவற்றுக்கு எழுத்து வடிவம் கொடுத்து தனது காப்பியத்தில் இடம்பெறுமாறு செய்தார்.

    கதையில் எங்கெல்லாம் வைக்கமுடியுமோ அங்கெல்லாம் இப்பாடல்கள் வைத்து அழகு படுத்தினார். கடற்கரையில் செம்படவர் பாடும் பாடும் காதல் பாடல்கள், காவிரியாற்றினைப்பற்றி மக்கள் பாடி வந்த பாடல்கள், வேடர்கள் காளியை வழிபட்டுப் பாடும் பாடல்கள், குரவைப் பாடல்கள், திருமாலை, முருகனை, வழிபாடாற்றும் பாடல்கள், அம்மானைப் பாடல்கள், நெல்குற்றும் பாடல்கள், ஊஞ்சலாடு ம்போது பாடும் பாடல்கள், எல்லாவற்றையும் உள்வாங்கி அதன்வழியிலே செய்யுள்களை யாத்து அந் தநாட்டு மக்களே வாயாலே பாடப்படுவதாக காப்பியத்தில் அமைத்து காவிய வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார் இளங்கோவடிகள் எனலாம். இப்புரட்சியால் பழங்கால நாட்டுப்புற வடிவங்களை நாம் இன்று கண்டுகொள்ளுவதற்கு சிலம்புதான் ஆதாரவிளங்கின்றது எனலாம்.

    மூன்று நாடு, மூன்று அரசர், மூன்று கருத்து , மூன்று காண்டம், மூன்று தமிழ், என்று காட்டிய இளங்கோவடிகள் மூன்று பெண்களைக் காட்டி பண்டையகால கற்பொழுக்கத்தை சிலம்பில் காட்டி யமையும் அவரின் ஒரு புரட்சி என்றே கொள்ளமுடிகிறது.

         ” வாயிலோயே வாயிலோயே
    அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து
    இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே ”  என்றும்

          “தேரா மன்னா செப்புவது உடையேன்”  என்றும்

    கண்ணகி என்னும் பெண்ணை துணிவுடன் பேசவைத்து  ஒரு நாட்டின் அரசனையே  எதிர்கொள்ளும் புரட்சியை இளங்கோவடிகள் சிலம்பில் காட்டி நிற்கிறார். பாண்டிய மன்னனிடம் நீதிகேட்டு மன்ன னையே குற்றவாளியாக்கி அதனால் மன்னனும் இறந்து வீழ அதனைப்பார்த்த அரசியும் அவ்விடத்தே உயிர் துறந்து தனது கற்பின் திண்மையைக் காட்டி விடுகிறாள். இதைப்பார்த்த கண்ணகி பாண்டியன் தேவியின் கற்புக்கு தனது கற்பு குறைந்தது அன்று எனக்காட்டும் முகமாக

       “பட்டாங்கு யானும்ஓர் பத்தினியே ஆமாகில்”

    என்று கண்ணகியை உச்சத்துக்கு கொண்டுபோய் மதுரையை எரிப்பதற்கு ஆணையிடுவது கூட இளங்கோவின் நல்லதோர் உத்தியும் ஒரு புரட்சிச் சிந்தனை எனலலாம். கற்புடை பெண்கள் “பெய் என்றால் மழையும் பெய்யும்” என்னும் வள்ளுவத்தின் சிந்தனை இங்கு கண்ணகியின் வாயிலிருந்து வருகின்ற “எரி”  என்னும் சொல்லுக்கு வலுவூட்டி நிற்கிறது என்பதும் நோக்கத்தக்கதே.

    பாடியதில் புரட்சி. பாத்திரங்கள் படைத்ததில் புரட்சி. கருத்துக்களை முன் கொண்டுவந்து வைத்ததில் புரட்சி. தொடங்கியதில் புரட்சி. குழந்தை இல்லாக் காப்பியமாக சிலம்பினைச் செய்ததும் பெரும் புரட்சி என்றே எடுத்துக் கொள்ள வேண்டியும் இருக்கிறது. இவ்வாறு சிலம்பு முழுவதுமே இளங்கோவடிகளின் புரட்சிச் சிந்தனைகளே நிறைந்து பொலிவினை வழங்கி சிலம்பினை உயர்வாக்கி இருக்கிறது எனலாம்.

    எங்களின் சொத்து 

    முத்தமிழும் விரைவிவர எங்களின் தமிழ் சொத்தாக விளங்குவது சிலப்பதிகாரம். கோவலன் ஒரு கோ – அல்லன். அவன் ஒருசாதாரண குடிமகன். கண்ணகியும் கோ- மகள் அல்ல. அவளும் குடிமகளே. குடிமகனையும் குடிமகளையும் சிலப்பின் தலைவன் தலைவியாக்கி முடிமக்கள் காப்பியம் அல்ல குடிமக்கள் காப்பியம் என்று தமிழில் சிலம்பதிகாரம் அமையப் பெற்றிருப்பதே எங்களுக்கு பெரும் பெருமையல்லவா? இதனை எங்கள் சொத்து என்பது மிக மிக பெருமிதமும் அல்லவா! கம்பனையும் வள் ளுவனையும் வியந்த பாரதி நிறைவில் “இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததி ல்லை”  என்று வியந்து நிற்பதும் எமது தமிழுக்கு வாய்த்த பெருமை அல்லவா!தேசிய ஒற்றுமைக்கு சிலப்பதிகாரம் வழிவகுதிருப்பதும் எங்கள் மொழிக்கு வாய்த்த பெருமை அல்லவா? அரசியல் பிழை த்தால் அறம் நிச்சயம் பதில் தந்தே தீரும். கற்பு  என்பது சமூகத்தின் கட்டாயம். கற்புடன் வாழும் பெண்கள் போற்றப்படுவர். அவர்கள் வணங்கும் நிலையிலும் உயருவார்கள் என்பதை எல்லாம் சொல்லி நிற்கும் சிலம்பு எங்கள் மொழியின் பெருஞ் சொத்து அல்லவா! நீதி தவறினால் உயிர்வாழ்தல் கூடாது என்பது எப்பொழுதும் எல்லா நாட்டுக்கும் பொதுவன்றோ! அதைக்காட்டி நிற்கும் சிலம்பு எமக்கு வாய்த்த பெரும் சொத்தல்லவா!

    பரிவும் இடுக்கணும், பாங்குற, நீங்குமின்;
    தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்
    பொய் உரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
    ஊன் ஊண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
    தானம் செய்ம்மின்; தவம் பல தாங்குமின்;
    செய்ந்நன்றி கொல்லன்மின்; தீ நட்பு இகழ்மின்;
    பொய்க் கரி போகல்மின்; பொருள்-மொழி நீங்கல்மின்;
    அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
    பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
    பிறர் மனை அஞ்சுமின்; பிழை உயிர் ஓம்புமின்;
    அற மனை காமின்; அல்லவை கடிமின்;
    கள்ளும், களவும், காமமும், பொய்யும்,
    வெள்ளைக் கோட்டியும், விரகினில், ஒழிமின்
    இளமையும், செல்வமும், யாக்கையும், நிலையா
    உள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது;
    செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடுமின்-
    மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு-என்

    என்று பண்பாட்டின் பல பண்பட்ட தன்மைகளையெல்லாம் எடுத்துரைத்து அறத்தையும் நீதியையும் அனைவரது அகங்களிலும் அமர்ந்துவிடும் வண்ணம் இலக்கியச் சுவையினை அதனூடாக ஊட்டி எமக்கு எமது மொழியில் வாய்த்திருக்கும் மிகப்பெரிய சொத்தாக இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம்  விளங்குகிறது. தமிழுக்குக் கிடைத்த சிலம்பதிகாரம் எனும் சொத்தினை கண்ணுங்கருத்துமாய் காப்பதும் அதன் பெருமகளை உண்மைகளை எடுத்து விளக்குவதும் அதனை உலகெங்கும் பரப்புவதும் ஒவ் வொரு தமிழரதும் தலையாய பொறுப்பாகும்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(509)

    குறளின் கதிர்களாய்…(509)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(509)

    பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோ
    ரெழுபது கோடி தலை.

    – திருக்குறள் – 639 (அமைச்சு)

    புதுக் கவிதையில்…

    அருகில் இருந்தே
    அரசனுக்குத்
    தவறான வழிகளைக் காட்டி
    அவன் பெயருக்குப்
    பழுதுண்டாக்க எண்ணும்
    அமைச்சனை விட
    எழுபது கோடிப்
    பகைவர்
    பக்கத்தில் இருந்தாலும்,
    அவர்கள்
    நல்லவராவரே…!

    குறும்பாவில்…

    அருகிருந்து தவவறான வழிகாட்டி
    அரசர் புகழைக் கெடுக்கும் அமைச்சனைவிட
    எழுபதுகோடிப் பகைவர் மேலே…!

    மரபுக் கவிதையில்…

    அருகே யிருந்தே அல்வழியை
    அரசர் தமக்கே உரைத்தவர்தம்
    பெருமை தனையே கெடுக்கின்ற
    பேதை அமைச்சன் தனைவிடவும்
    வருத்தும் கோடி எழுபதாக
    வந்தே எதிர்க்கும் வயவரெலாம்
    உருவில் பகைவர் தானெனினும்
    உண்மை நெறியில் உயர்ந்தோரே…!

    லிமரைக்கூ…

    பழிவர அரசர் பாலே
    வழிகாட்டிப் பக்கமிருக்கும் தீயமைச்சனைவிடப் பகைவர்
    எழுபது கோடியும் மேலே…!

    கிராமிய பாணியில்…

    இருக்கணும் இருக்கணும்
    நல்லவனா இருக்கணும்,
    ராசாவுக்கு மந்திரி
    ரெம்ப நல்லவனா இருக்கணும்..

    ராசாவோட
    பக்கத்தில இருந்துக்கிட்டே
    அவரோட பேருக்குப
    பழுது வாறமாதிரி
    வழிகாட்டுற
    கேடுகெட்ட மந்திரியவெடவும்,
    எதுத்து நிக்கிற
    எழுவது கோடிப் பகயாளியும்
    எவ்வுளவோ ஒசத்திதான்..

    அதால
    இருக்கணும் இருக்கணும்
    நல்லவனா இருக்கணும்,
    ராசாவுக்கு மந்திரி
    ரெம்ப நல்லவனா இருக்கணும்…!

    Share
  • Annakannan Ideas 58 – Split & Connect Wiring

    Annakannan Ideas 58 – Split & Connect Wiring

    The Jhansi hospital fire incident due to a short circuit has claimed the lives of 10 infants. World over, one of the main reasons for fire accidents is short circuits. How to prevent such incidents in future?

    I like to restructure the wiring style; instead of lengthy wiring, we can make multiple parts & unite them with junction points every 10 meter. The whole wiring unit should be monitored at a central dashboard in the building / premise / campus. The electricity flow, load, pressure, leakage, wire quality… etc should be monitored by the system. Nearby temperature, humidity, wind flow of the wire can also be monitored.

    If we find any abnormal thing in the electric flow, any spark or more heat in any wire, the system should automatically stop electricity to the particular point & isolate it from other junctions. It will stop spreading the fire; save lives & assets. It should also alert the nearby electricity management team & building owner. If we isolate that point, remaining rooms / areas can get electricity. After solving the issue, we can allow electricity in the wire.

    This Split & Connect method can be used in every electrical equipment like fridge, TV, AC, Washing machine, hospital machines, industrial machines. If any issue in any equipment, the electricity should be stopped automatically, along with surrounding 10 meters of junction points. This will stop further damage to the equipment also. We can also use this method in electric cars & two wheelers, in case of any fire.

    What do you think?

    Share
  • குறளின் கதிர்களாய்…(508)

    குறளின் கதிர்களாய்…(508)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(508)

    அடுக்கி வரினு மழிவிலா னுற்ற
    விடுக்க ணிடுக்கண் படும்.

    – திருக்குறள் – 625 (இடுக்கண் அழியாமை)

    புதுக் கவிதையில்…

    அடுக்கடுக்காய்த் துன்பம்
    அடுத்தடுத்து வந்தபோதும்,
    அதற்காக
    அச்சம் சிறிதும்
    அடையாத ஒருவனை
    அடுத்துவந்த துன்பம்
    துன்புற்றே பட்டழியும்…!

    குறும்பாவில்…

    அடுத்தடுத்துத் துன்பம் வந்தபோதும்
    அதற்காகச் சிறிதும் கலங்காதவன் பெற்ற
    துன்பமது துன்புற்றே அழிந்திடும்…!

    மரபுக் கவிதையில்…

    அடுக்காய்த் துன்பம் வாழ்வினிலே
    அடுக்கி வந்தே அமுக்கிடினும்
    நடுங்கிப் பயத்தில் நலிவுறாமல்
    நல்ல முறையில் வாழ்கின்ற
    மிடுக்கா யுள்ள ஒருவன்தன்
    மீது மோதும் துன்பமதும்
    கெடுக்க வியலா நிலையெய்திக்
    கெட்டே அழிந்து போய்விடுமே…!

    லிமரைக்கூ…

    துன்பம் வரினும் அடுக்கி,
    அதற்குச் சிறிதும் அஞ்சிடான் முன்னே
    அத்துன்பமே வீழ்ந்தழியும் தடுக்கி…!

    கிராமிய பாணியில்…

    தொயரப்படாத தொயரப்படாத,
    தொயரப்படாத வாழ்க்கயில
    துன்பம் வந்தா தொயரப்படாத..

    அடுக்கடுக்காத் துன்பம்
    அடுத்தடுத்து வந்தாலும்,
    அதப்பாத்து
    கொஞ்சமும் பயப்படதவங்கிட்ட
    வந்த துன்பமும்
    துன்பப்பட்டே
    அழிஞ்சி ஒழிஞ்சி போவுமே..

    அதால
    தொயரப்படாத தொயரப்படாத,
    தொயரப்படாத வாழ்க்கயில
    துன்பம் வந்தா தொயரப்படாத…!

    Share