குறளின் கதிர்களாய்…(508)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(508)
அடுக்கி வரினு மழிவிலா னுற்ற
விடுக்க ணிடுக்கண் படும்.
– திருக்குறள் – 625 (இடுக்கண் அழியாமை)
புதுக் கவிதையில்…
அடுக்கடுக்காய்த் துன்பம்
அடுத்தடுத்து வந்தபோதும்,
அதற்காக
அச்சம் சிறிதும்
அடையாத ஒருவனை
அடுத்துவந்த துன்பம்
துன்புற்றே பட்டழியும்…!
குறும்பாவில்…
அடுத்தடுத்துத் துன்பம் வந்தபோதும்
அதற்காகச் சிறிதும் கலங்காதவன் பெற்ற
துன்பமது துன்புற்றே அழிந்திடும்…!
மரபுக் கவிதையில்…
அடுக்காய்த் துன்பம் வாழ்வினிலே
அடுக்கி வந்தே அமுக்கிடினும்
நடுங்கிப் பயத்தில் நலிவுறாமல்
நல்ல முறையில் வாழ்கின்ற
மிடுக்கா யுள்ள ஒருவன்தன்
மீது மோதும் துன்பமதும்
கெடுக்க வியலா நிலையெய்திக்
கெட்டே அழிந்து போய்விடுமே…!
லிமரைக்கூ…
துன்பம் வரினும் அடுக்கி,
அதற்குச் சிறிதும் அஞ்சிடான் முன்னே
அத்துன்பமே வீழ்ந்தழியும் தடுக்கி…!
கிராமிய பாணியில்…
தொயரப்படாத தொயரப்படாத,
தொயரப்படாத வாழ்க்கயில
துன்பம் வந்தா தொயரப்படாத..
அடுக்கடுக்காத் துன்பம்
அடுத்தடுத்து வந்தாலும்,
அதப்பாத்து
கொஞ்சமும் பயப்படதவங்கிட்ட
வந்த துன்பமும்
துன்பப்பட்டே
அழிஞ்சி ஒழிஞ்சி போவுமே..
அதால
தொயரப்படாத தொயரப்படாத,
தொயரப்படாத வாழ்க்கயில
துன்பம் வந்தா தொயரப்படாத…!