நந்தன் திரை விமர்சனம்
அண்ணாகண்ணன்
நந்தன் திரைப்படத்தை அமேசான் பிரைமில் பார்த்தேன். வணங்கான்குடி என்ற ஊராட்சியின் தலைவர் பதவியை மேல்சாதித் தலைவர் ஒருவரே மீண்டும் மீண்டும் வகிக்கிறார். அந்தத் தொகுதியை ரிசர்வ் தொகுதியாக அறிவித்த பிறகு, தாழ்த்தப்பட்ட ஒருவரே அந்தப் பதவியை வகிக்க முடியும் என்ற நிலை உருவாகிறது. தன் தீவிர விசுவாசியை அந்தப் பதவியில் நிறுத்தி ஜெயிக்க வைக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதைத் திரைப்படம் துணிவாக முன்வைக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்கள் படும் அவலங்களை, அவர்கள் சந்திக்கும் கொடுமைகளை, தனித் தனிச் சுடுகாடு இருப்பதை, அடிமைகளாக நடத்தப்படுவதை நெஞ்சை அறுக்கும் வகையில் காட்டியிருக்கிறார்கள். இன்னும் இப்படியெல்லாம் நடக்கிறதா எனக் கேட்பவர்களின் கையைப் பிடித்துக் கூட்டிச் சென்று காட்டத் தயார் என அவர் திரையில் காட்டியது, வலிமையான வாக்கியம்.
திரைப்படம் முடிந்த பிறகு, ஊராட்சித் தலைவர்கள் பலரும் திரையில் தோன்றி, தங்கள் அனுபவத்தைச் சொல்வது, அழுத்தமாக உள்ளது. இந்தப் படத்தின் எழுத்து, இயக்கம், தயாரிப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்று வெளிக்கொணர்ந்த இரா.சரவணன், பெரும் பாராட்டு உரியவர்.
காலத்துக்கும் நீங்க எங்க காலுக்குக் கீழ தான்டா என்ற ஆதிக்கவாதிகளின் குரல் ஒலிக்கும்போது, (தாழ்த்தப்பட்ட) நாயகர்களின் செருப்பின் அடிப்பாகம், திரை முழுவதும் வருமாறு காட்டியிருப்பது, இயக்குநரின் முத்திரை.
அதிகாரத்துக்கு வா. அதுதான் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வு என்று சொன்னார் அண்ணல் அம்பேத்கர். அதிகாரத்துக்கு வந்தாலும் இங்கே பல பேரால நிமிரக் கூட முடியலை.
இது, படத்தில் இடம்பெறும் ஒரு வசனம். இதுவே படத்தின் சாரமாகவும் இருக்கிறது.
ஆதிக்க சாதித் தலைவராக நடித்துள்ள பாலாஜி சக்திவேலும் அவரது விசுவாசியாக அம்பேத்குமார் என்ற பாத்திரத்தில் நடித்துள்ள சசிகுமாரும் வட்டார வளர்ச்சி அலுவலராக நடித்துள்ள சமுத்திரக்கனியும் தத்ரூபமாக நடித்துள்ளார்கள்.
சசிகுமாரை நிர்வாணப்படுத்தி, அடித்து உதைத்துவிட்டு வரும் பாலாஜி சக்திவேலை அவர் அம்மா ஒரு கேள்வி கேட்கிறார். அவன் பலத்துக்கு உன்னை அடிக்கிறதுக்கு என்னேரம் ஆகும்? என்ற அவரது கேள்வி, முக்கியமானது. உடல் வலிமையை முன்னிறுத்தி, வன்முறையைத் தூண்டும் வகையில் படத்தைக் கொண்டு செல்லாமல், ஜனநாயக ரீதியில் படத்தை நகர்த்திய இயக்குநருக்குப் பாராட்டுகள். மகாத்மா காந்தி, இந்த வழிமுறையையே பின்பற்றினார்.
அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதையே மிகப் பெரிய இலக்காகக் கட்டமைக்கிறார்கள். அதுவே எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வு என்பது எத்தகைய மாயை என்பதையும் படத்தில் காட்டுகிறார்கள். அப்படியானால் எது தீர்வு என்பதை இன்னும் வெளிப்படையாக, தெளிவாக, அழுத்தமாகச் சொல்ல வேண்டும்.
ஊரை விட்டு விரட்டப்பட்ட பிறகு, மகனுடைய கேள்விக்கு, சசிகுமாரின் மனைவி பதில் சொல்கிறார். நமக்குன்னு ஒரு வீடு இருந்திருந்தா யார் நம்மைத் துரத்தியிருக்க முடியும்? ஒரு குழி இடத்தைச் சம்பாரிக்கலேன்னா இப்படி ஊர் ஊரா ஓடிக்கிட்டே தான் இருக்கணும்.
நிலத்துக்கு, வீட்டுக்குச் சொந்தக்காரர்களாக ஆனால், நம்மைத் துரத்த முடியாது என்பது ஒரு தெளிவான செய்தி. தாழ்த்தப்பட்டவர்கள், பொருளாதார வலிமை அடைந்து, நில உரிமை பெற வேண்டும். அத்துடன், கூட்டாக நின்று அரசியல் வலிமை பெற வேண்டும்.
ஆனால், எதிர்த்துக் கேள்வி கேட்பவனை லாரியை ஏற்றிக் கொல்லும்போது என்ன செய்வது? சமூக மதிப்பைப் பெறுவதற்கு என்ன செய்வது? உரிமை மறுக்கப்படும்போது என்ன செய்வது? அச்சுறுத்தப்படும்போது என்ன செய்வது? ஏமாற்றப்படும்போது என்ன செய்வது? ஒரே சமுதாய மக்களிடம் பிளவு ஏற்படுத்தி, அவர்களின் வாக்கு வலிமையைப் பிரிக்கும்போது என்ன செய்வது? யாரின் பின்னால் அணி திரள்வது? எந்தக் கூட்டணியில் நிற்பது? எந்தக் கோரிக்கைகளை முன்வைப்பது? யார் நமக்கு நன்மை செய்வார்? இந்தக் கேள்விகள் ஓயப் போவதில்லை. நம் தேடலும் தான்.