கவிப்பேரரசு வைரமுத்து இப்படி எழுதலாமா?
அண்ணாகண்ணன்
அண்ணாமலை படத்தில், வைரமுத்து எழுதிய ‘வந்தேன்டா பால்காரன், பசு மாட்டைப் பத்திப் பாடப் போறேன்’ என்ற பாடலை நேற்று வானொலியில் ஒலிபரப்பினார்கள்.
புல்லு கொடுத்தா
பாலு கொடுக்கும் உன்னால
முடியாது தம்பி
இது என்ன வகையான ஒப்பீடு? பசு என்பது பெண். எனவே பால் கொடுக்கிறது. ஆனால், உன்னால முடியாது தம்பி என ஆணிடம் எதற்குச் சொல்கிறார்? காளை மாடு கூடத்தான் புல்லு சாப்பிட்டுப் பால் கொடுக்காது. மனிதரிலும் பிள்ளை பெற்ற பெண், பால் கொடுக்கக் கூடியவர்தான். புல் போன்று சில கீரைகளை, ஏன் அருகல்புல் சாற்றைக் குடித்துக்கூட அவரால் பால் கொடுக்க முடியும். எதற்காக ஏடாகூடமாக ஒப்பிட்டிருக்கிறார்?
சாணம் விழுந்தா உரம் பாரு
எருவை எரிச்சா திருநீறு
உனக்கு என்ன வரலாறு
உண்மை சொன்னா தகராறு
சாணம் மட்டுமில்லை, மனித மலமும் உரம் தான். அதைக் கொண்டு மின்சாரமே தயாரிக்கிறார்கள். மாட்டைப் புகழ்வதற்காக, மனிதனைத் தாழ்த்தலாமா? மனிதனின் எழுச்சிமிகு முன்னேற்றத்தை அவனது வரலாற்றைப் படித்தாலே புரியுமே.
அட மீன் செத்தா கருவாடு
நீ செத்தா வெறும்கூடு
கண்ணதாசன் சொன்னதுங்க
பசு இருந்தாலும் பாலாகும்
செத்தாலும் தோலாகும்
நான் கண்டு சொன்னதுங்க
மீன் செத்தா கருவாடு. ஆனால், மனிதன் செத்தால் வெறும்கூடு இல்லை. மனித உடலின் ஒவ்வொரு பகுதியும் உரம் தான். மேலும் மனிதன் இறந்தால் அவனது உறுப்புகள் பலவற்றைத் தானமாக அளிக்க முடியும். மேலும் மருத்துவ ஆராய்ச்சிக்காக, அவன் உடலையே தானமாக வழங்க முடியும். கண்ணதாசன் இதைப் புரிந்துகொண்டாரா தெரியவில்லை.
பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும் என்பதில் என்ன பெருமை? மிகவும் பொருள்வயமான கண்ணோட்டம் இது. யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். ஆட்டுக்கும் இவ்வாறு பயன் இருக்கும். மனிதன் இறந்தாலும் வேறு வகையில் இத்தகைய பயன் உண்டு. அதனால் தான் அநாதைப் பிணங்களையும் திருடும் கூட்டம் இருக்கிறது.
அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம்
ஆயுள் வளர்க்கும் ஆட்டுப் பாலுங்க
அண்ணாமலை நான் குடுப்பதெல்லாம்
அன்பு வளர்க்கும் மாட்டுப் பாலுங்க
ஆட்டுப்பால் ஆயுள் வளர்க்கிறது, மாட்டுப்பால் அன்பு வளர்க்கிறது என்கிறார். ஏன், ஆட்டுப்பால் அன்பு வளர்க்காதா? மாட்டுப்பால் ஆயுள் வளர்க்காதா? இதே பாடலில், அட பாதி புள்ள பொறக்குதப்பா பசும்பால தாய் பாலா நம்பி என்று வருகிறது. பச்சிளங்குழந்தைக்குத் தாய்ப்பாலே முதன்மை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள். தாய்ப்பால் சுரக்காத நிலையிலேயே செறிவூட்டிய பால்மாவும் பசும்பாலும் கொடுக்கிறார்கள். மிகக் குறைந்த அளவிலேயே இது நிகழ்கிறது. குழந்தை பிறந்து 6 மாதம் முதல் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகே பசும்பால். முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பாலே ஆதாரம். எனவே பாதி குழந்தைகள், பசும்பாலை நம்பிப் பிறப்பதாகச் சொல்வதும் சரியில்லை. ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகே பசும்பாலை நாடுகிறார்கள்.
பசுவைத் தெய்வமாக வணங்குவது, தமிழர் வழக்கம். கோமாதா என்றே அழைப்பார்கள். பசுவின் உடலில் தெய்வங்களும் தேவர்களும் வாழ்வதாகக் கருதுவோர் உண்டு. இவற்றை எல்லாம் தவிர்த்தாலும் பசு தன் கன்றுக்காகச் சுரக்கும் பாலையே மனிதனும் கறந்து குடிக்கிறான். எனவே, பசுவும் நம் தாய், நாமெல்லாம் அதன் கன்றுகளே என்றாவது சொல்லியிருக்கலாம்.
பால்காரர் தான் வளர்க்கும் மாடுகளைப் பற்றிப் பெருமையாகச் சொல்ல, வேறு ஏதும் இல்லையா? அதன் பால், சாணம், திருநீறு, செத்த பிறகு தோல் – இந்தப் பயன்களைத் தான் வைரமுத்து மீண்டும் மீண்டும் சொல்கிறார். இது வியாபாரியின் கண்ணோட்டம். கன்றுக்காக இரங்கி, தன் இரத்தத்தைப் பாலாக்கி அருளும் பசு, வெறும் வியாபாரப் பொருளாகி நிற்கிறது. வியாபாரிகள் இப்படி எழுதலாம். கவிப்பேரரசு வைரமுத்து இப்படி எழுதலாமா?