எட்டுக்குள்ள உலகம் இல்லை, வைரமுத்து!
அண்ணாகண்ணன்
பாட்ஷா படத்தில் வைரமுத்து எழுதிய ரா ரா ரா ராமையா என்ற பாடலை வானொலியில் ஒலிபரப்பினார்கள். அதில், எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா, நான் புட்டுப் புட்டு வைக்கப் போறேன் பாரையா என்று தொடங்கி, இப்படி வளர்ந்தது.
முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
நீ ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல
மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
நீ நாலாம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல
ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
நீ ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல
ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமில்லை
நீ எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்லை
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ
இதைக் கேட்டதும் காலத்திற்கு ஒவ்வாத ஒரு பாடல் (outdated) என்றே முதலில் தோன்றியது.
இந்தப் பாடலை எழுதிய வைரமுத்துக்கு இப்போது 71 வயது. இசையமைத்த தேவாவுக்கு 73 வயது. பாடிய எஸ்.பி.பி. 2020இல் மறைந்தபோது அவருக்கு 74 வயது. நடித்த ரஜினிக்கு இப்போது 73 வயது. இவர்கள் அனைவரும் 64 வயது கடந்தவர்கள். ரஜினி இப்போதும் நாயகனாக நடித்து வருகிறார்.
முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல என்பது எவ்வளவு தவறானது என்பதை லப்பர் பந்து படமே சொல்லிவிடும்.
ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல என்பது என்ன கணக்கு? 16 வயதில் பதினொன்றாம் வகுப்பே முடித்திருப்பார்கள். இதன் பிறகே கல்லூரிப் படிப்பு, மேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு. இவற்றைக் கருத்திலேயே கொள்ளாமல், 16 வயதிற்குள் கல்லாதது கல்வியுமல்ல என எப்படிச் சொல்ல முடியும்?
மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல என்பதும் இக்காலத்துக்குப் பொருந்தாது. இந்த 24 வயது கடந்து, இன்னும் சரியான வேலை கிடைக்காமல், வரன் கிடைக்காமல், 30, 40, 50 வயது கடந்தும் திருமணம் ஆகாமல் இருப்போர் பல இலட்சம் பேர். இந்த 24க்குப் பிறகு திருமணம் செய்தவர்கள், இன்னும் காத்திருப்பவர்கள் இந்த வரிகளைக் கேட்கும்போது எத்தகைய எரிச்சலுக்கும் வேதனைக்கும் உள்ளாவார்கள் என்பதை வைரமுத்து உணரவே இல்லையா?
நாலாம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல என்பதும் சரியில்லை. முந்தைய வரியில் பார்த்தது போல், திருமணமே தள்ளிப் போகும் போது, பிள்ளைப் பேறும் தள்ளிப் போவது இயல்பே. இதற்கு வேறு பல காரணிகளும் உண்டு. பெருகி வரும் கருவாக்க மருத்துவமனைகளும் இதை உணர்த்துகின்றன. இவை எல்லாவற்றையும் விட, 32 வயதுக்குப் பிறகும் பிள்ளை பெறாதவர்களைக் குற்ற உணர்விலும் தவிப்பிலும் இந்த வரி தள்ளும் என்பதை வைரமுத்து ஏன் உணரவில்லை?
ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல என்பது இன்று எத்தனைப் பேருக்குப் பொருந்தும்? சரியான வேலை கிடைக்காமல், விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில், குடும்பத் தேவைகளை நிறைவேற்ற ஒவ்வொரு நாளும் போராடும் கோடிக்கணக்கானோரைப் பார்த்தே இதைச் சொல்கிறார். 40 வயதுக்குள் எல்லாச் செல்வங்களையும் சேர்க்க வேண்டும் என்று. இதைக் கபிலன் வைரமுத்து சொல்ல முடியுமா? வங்கிக் கடன், வங்கியல்லாத கடன் என்று வாங்கி, ஆயுள் முழுக்கக் கடனைத் துரத்தும் நண்பர்கள், இதைக் கனவிலேனும் காண முடியுமா என்பது ஐயமே.
ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல என்பது எத்தனைப் பேருக்கு வாய்க்கும்? 48 வயதுக்குள் உலகம் சுற்ற முடியுமா? ஒருநாள் வேலைக்குச் செல்லவில்லை என்றால் அன்றைக்கு வருமானம் இருக்காது என்ற நிலையில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமையிலும் உழைப்பவர்கள் இருக்கிறார்கள். சற்றே கூடுதலாகத் தூங்கவோ, ஓய்வெடுக்கவோ முடியாதவர்கள் இருக்கிறார்கள். பிள்ளைகளைப் படிக்க வைக்க, நல்ல நிலைக்குக் கொண்டு வர, தங்கள் ஆசைகளைத் தியாகம் செய்தவர்கள் ஏராளம். இந்நிலையில் உல்லாசமாக உலகம் சுற்ற, வைரமுத்துவாக, ரஜினியாக எல்லோரும் பிறக்க முடியாதே.
ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமில்லை என்பது யாருக்கு? 54 வயதில் ஓய்வு பெறலாம் என்பதும் கனவே. அரசுப் பணியில் இருப்பவர்களுக்கே 58 வயது, 60 வயது ஓய்வு பெறும் வயதாக இருக்கிறது. முன்கூட்டியே விருப்ப ஓய்வு பெற்றுச் சிலர் வரலாம். தனியார் துறையில் உடல் ஒத்துழைக்கும் வரை உழைக்கலாம். முறைசாராப் பணியாளர்கள் அனைவருக்கும் ஆயுளின் கடைசி நாள் வரைக்கும் ஓய்வே கிடையாது. எல்லாக் கடமைகளையும் முன்னரே முடித்தால் தானே நாம் விரும்பும் வகையில் ஓய்வு பெற முடியும்? இதற்கான வாய்ப்பு, எல்லோருக்கும் ஒரே மாதிரியாகவா கிடைக்கிறது? பிறகு, விதிகளை மட்டும் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக ஏன் வைக்க வேண்டும்? இதில் பொது விதிகளைக் கட்டமைப்பது, கோடிக் கணக்கானவருக்கு மன அழுத்தத்தையும் தோல்வி மனப்பான்மையையும் உண்டாக்கும். எழுத்தாளர்களும் கவிஞர்களும் நம் எழுத்தின் தாக்கம் எத்தகையதாக இருக்கும் எனப் பல கோணங்களில் கவனித்து எழுத வேண்டும். ஊக்கம் ஊட்ட வேண்டிய பாடல், துக்கம் ஊட்டுவது, நவீன வாழ்வின் அவலம்.