பிரபஞ்ச ரகசியங்களைக் கட்டவிழ்த்த கணித மேதை
ஸ்ரீ காளீஸ்வரர்
பிரபஞ்சத்தின் ஆயுள் காலத்தோடு ஒப்பிடும்போது, மனிதர்களும் இன்ன பிற உயிரினங்களும் வினாடிப் பொழுதில் வந்து செல்லும் வழிப்போக்கர்கள் தான். ஆனால், இந்த வழிப்போக்கர்களில் சிலர் மட்டுமே, பிரபஞ்ச வரலாற்றில் நீங்காத இடத்தை முத்திரையாய்ப் பதிவு செய்து விடுகின்றனர்.
1887ஆம் ஆண்டு எளிமையான குடும்பத்தில் ஈரோடு மாவட்டத்தில் பிறந்த குழந்தை தான், இன்றளவும் கணித உலகம் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு ஆச்சரியங்களை ஏற்படுத்திச் சென்றிருக்கிறார்.
ஸ்ரீனிவாச ராமானுஜம் தன் 15ஆவது வயதில் Synopsis of Elementary Results in Pure and Applied Mathematics (1886- G.S.Carr) எனும் கணிதப் புத்தகத்தைப் படித்தார். அடிப்படையான கணிதச் சூத்திரங்களை மட்டுமே விளக்கப் பயன்படும் புத்தகம் என்பதால், உள்ளார்ந்த கணிதப் பார்வை (proof), மேற்கண்ட புத்தகத்தில் இடம்பெறவில்லை.
இதனால் ராமானுஜம், தனக்கெனக் கணிதத் தேற்றங்களை உருவாக்கத் தொடங்கினார். இங்கிருந்து தான், கணித மேதையின் ஆய்வுப் பயணம், அதிகாரப்பூர்வமாய் உதயமாகிறது.
இன்றைக்கும் கூடப் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் சென்று, உலகறிந்த கணித மேதை ஒருவரைக் குறிப்பிடுங்கள்! என்று சொன்னால் அனைத்து மாணவர்களுக்கும் பரிச்சயமான ஒரே பெயர் ஸ்ரீனிவாச ராமானுஜம் மட்டுமே.
இந்த அளவிற்கு, கல்விச் சமூகத்தில் தன் பெயரை நாட்டி இருக்கும் ராமானுஜம், தன்னுடைய தினசரி வாழ்க்கை நடத்துவதற்குப் பணம் இல்லாமலும், கிழிந்த ஆடைகளை அணிந்துகொண்டு வேலை தேடிக்கொண்டும் இருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.
தன்னுடைய கல்லூரிப் படிப்பைப் பச்சையப்பன் கல்லூரியில் தொடங்கிய ராமானுஜம், கணிதம் தவிர்த்த, இன்ன பிற பாடங்களில் தேர்ச்சி வாய்ப்பைப் பெற முடியவில்லை என்பது, வரலாறு கூறாத உண்மை.
கணிதத்தின் மீது இருந்த ஆர்வத்தால், எப்போதும் கணிதம் குறித்தே சிந்தித்துக்கொண்டிருந்த ராமானுஜத்திற்குப் பின்னாளில் வாய்ப்புகளும் சீராக அமைந்தன.
ராமானுஜம், 1910ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் துணை ஆட்சியராக இருந்த ராமசாமி ஐயரைச் சந்தித்தார்.
பின்னாளில், இந்தச் சந்திப்புக் குறித்து நினைவுகூர்ந்த ராமசாமி ஐயர் “ஒரு இளைஞன் தன்னுடைய கைகளில் அளப்பரிய கணிதவியல் தேற்றங்களை உள்ளடக்கிய நோட்டுப் புத்தகத்தை வைத்திருந்தார். வருவாய்த் துறையில் இருந்த பற்றாக்குறைகளையும் கடந்து, அவருக்கு உதவ வேண்டும் எனும் எண்ணம் ஏற்பட்டது” எனும்படி தெரிவித்திருக்கிறார்.
அதன் பின்பு, 1915ஆம் ஆண்டு ஸ்ரீனிவாச ராமானுஜம் இங்கிலாந்து சென்றார். அங்கே பல்வேறு கணிதவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். சிறந்த கணித மேதையான ஜி.ஹெச்.ஹார்டி அவர்களுடன் நட்பு பாராட்டினார். இவை அனைத்துமே வரலாற்றின் பக்கங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
ராமானுஜத்தின் வரலாற்றில், மேலும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுவது, வாகனப் பதிவு எண்:1729.
காச நோயால் பாதிக்கப்பட்டு, இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ராமானுஜத்தை நலம் விசாரிக்கச் சென்ற ஜி ஹெச் ஹார்டி, பின்னாளில் பகிர்ந்துகொண்ட சுவாரசியமான நிகழ்வு தான் இது.
“ராமானுஜத்தைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்று இருந்தேன். அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தேன்! அவரோ, கணிதவியல் தேற்றங்கள் குறித்தே அப்போதும் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது, நான் பயணித்து வந்த டாக்ஸி காரின் பதிவு எண் 1729 என்று தெரிவித்தேன். உடனே ராமானுஜம் இந்த எண்ணில் இருக்கும் விசேஷம் உங்களுக்குத் தெரியுமா என்று என்னிடம் கேட்டார்.
வழக்கம் போல இருக்கக் கூடிய ஒரு சாதாரண 4 இலக்கு எண் தான் என ராமானுஜத்திடம் சொன்னேன்.
ஆனால் அதற்கு ராமானுஜம் அளித்த விளக்கம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதை இரு வெவ்வேறு வழிகளில் இரு கனங்களின் கூட்டுத் தொகையாக எழுதலாம் என்றார். அதற்கான வழிமுறையினையும் உடனுக்குடன் எடுத்துரைத்தார் (12^3 + 1^3 = 1729)”
காச நோயின் தீவிரம் அதிகமானது. ராமானுஜத்தின் உடல்நிலை மெல்ல மெல்ல நலிவுறத் தொடங்கியது. பிரபஞ்ச வரலாற்றில், அதன் ரகசியங்களைக் கட்டவிழ்த்து விடக் கூடிய ஆற்றல் படைத்த கணித உலகின் மேதை, தன்னுடைய பணிகளைப் பாதியில் விட்டபடியே, ஏப்ரல் 26ஆம் தேதி 1920ஆம் ஆண்டு பிரபஞ்ச ஆற்றலோடு கலந்தார்.
ராமானுஜம் நிறைவு செய்யாமல் வைத்திருந்த கணிதத் தேற்றங்களை, பின்னாளில் உலகின் ஆகச் சிறந்த கணித நிபுணர்களும் நிரூபிக்க முயன்றனர். இன்னும் கூட, சில தேற்றங்களை நிரூபிக்கும் முயற்சியைத் தொடர்கின்றனர்.
மனிதன், தன்னுடைய வாழ்நாளில் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தின் ஒட்டுமொத்த வடிவம்தான் சீனிவாச ராமானுஜம். அவர் கணித மேதை மட்டுமில்லை, இந்தப் பிரபஞ்சம் நமக்குப் பரிசளித்த மாற்றுச் சிந்தனைவாதி.
கணித மேதை ராமானுஜத்தின் பிறந்த நாள், 2012ஆம் ஆண்டு முதல், தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை, அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார்.
பிரபஞ்ச கணித மேதை சீனிவாச ராமானுஜம் உதயமாகி, இன்றோடு 137 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவரது புகழ் என்றும் ஓங்கி நிலைத்திருக்கும்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர்,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
நாகர்கோவில் -02.
தொடர்புக்கு : srikaleeswarar@myyahoo.com
Nice words