காரன் / காரி வேர்ச்சொல்
அண்ணாகண்ணன்
புல்வந்தி என்ற மராத்தித் திரைப்படத்தைப் பார்த்தேன். படத்தைப் பற்றிப் பிறகு எழுதுகிறேன். இதில் கலைஞர் என்பதைக் கலாகார் என அழைக்கிறார்கள். இதில் கலை என்பதை நாம் நன்கறிவோம். இதன் இரண்டாம் பகுதியான கார் என்பதை ஆராய்ந்தேன்.
வடமொழியிலும் இந்தியிலும் கார் என்பது, ஒன்றைச் செய்பவரைக் குறிக்கிறது. கலை செய்பவர், கலாகார். இப்படியே சித்திரக்கார், சங்கீத்கார், சில்ப்கார், நாடக்கார், கிரந்த்கார், இதிஹாஸ்கார் எனப் பெருவழக்காக உள்ளது. இந்தக் கார் என்பது பாலி, பெர்சியன், உருது, மராத்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகளிலும் பயன்பாட்டில் இருக்கிறது.
தமிழில் உள்ள வேலைக்காரன், வேலைக்காரி, கரகாட்டக்காரன், ஆட்டக்காரி, வண்டிக்காரன், பாட்டுக்காரன், கொள்ளைக்காரன், சூனியக்காரி, ஆட்டோக்காரன், மேளக்காரன்… என ஒரு வேலையைச் செய்பவர்களைக் காரன் / காரி என அழைக்கிறோம். இதே போல் வீட்டுக்காரன், வீட்டுக்காரி, மூளைக்காரன், பொய்க்காரி, பூக்காரி, சொந்தக்காரன், சொந்தக்காரி என ஒன்றை உடையவர்களையும் இவ்வாறு அழைக்கிறோம். மேலும், இந்திக்காரன், சிந்திக்காரி, மதுரைக்காரன் என ஒரு மொழியை, இடத்தை, நாட்டைச் சேர்ந்தவர்களையும் இவ்வாறு அழைக்கிறோம்.
இவற்றைத் தூய தமிழ் என யாரும் நினைத்துக்கொள்ள வேண்டாம். இந்தக் கார், காரா (சம்ஸ்காரா), காரம் (உபகாரம்), காரன், காரமு போன்றவை பல மொழிகளிலும் நிறைந்துள்ளன. ஒரு மொழி தெரியாமலே அதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்பது இந்த வேர்ச்சொற்களின் முதல் ஆதாயம்.