குறளின் கதிர்களாய்…(510)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(510)
பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை.
– திருக்குறள் – 657 (வினைத் தூய்மை)
புதுக் கவிதையில்…
பழியைத் தந்திடும்
இழிதொழில் செய்து
ஈட்டும் செல்வத்தைவிட,
தீவினை ஏதும் செய்யாமல்
வினைத் தூய்மையுடன்
செயல்பட்டுச்
சான்றோர் பெற்றிடும்
வறுமை
மிக உயர்ந்ததே…!
குறும்பாவில்…
இழிதொழில் செய்து பழியுடன்
ஈட்டும் செல்வத்தைவிட சான்றோர் நல்வினையாற்றி
பெற்றிடும் வறுமை உயர்ந்ததே…!
மரபுக் கவிதையில்…
நீங்காப் பழியைச் சுமந்தேதான்
நீசச் செயல்கள் செய்வதனால்
ஓங்கிச் சேரும் செல்வத்தால்
ஒருவன் வாழ்வில் ஈட்டுகின்ற
வீங்கும் ஆக்க மதனைவிட
வினையின் தூய்மை யதனாலே
வாங்கும் வறுமை சான்றோர்க்கு
வாய்க்கும் உயர்வே ஆகிடுமே…!
லிமரைக்கூ…
தீயன தீராப்பழியைத் தாங்கி
செய்வதால்வரும் செல்வத்தைவிட நற்செயல்தரும் வறுமையால்
சான்றோரின் புகழ்வளரும் ஓங்கி…!
கிராமிய பாணியில்…
செம்மயா இருக்கணும் செம்மயா இருக்கணும்
செய்யிற செயலு
வாழ்கயில செம்மயா இருக்கணும்..
பழிபாவம் தருற
கேடான செயலச் செய்து
சேக்கிற செல்வத்தவிட
ஒருத்தருக்கும் கேடு தராத
நல்லதச் செய்றதல
நல்லவங்களுக்கு வருற
வறுமயும் ஒசத்திதான்..
அதால
செம்மயா இருக்கணும் செம்மயா இருக்கணும்
செய்யிற செயலு
வாழ்கயில செம்மயா இருக்கணும்…!