பர்வீன் சுல்தானா, எழுத்தாளர் இல்லையா?
அண்ணாகண்ணன்
பர்வீன் சுல்தானா பேச்சாளர் தான்; அவர் எழுத்தாளரே இல்லை எனச் சிலர் எழுதியுள்ளதைப் பார்த்தேன். இவை அவர் எழுதியுள்ள ஆய்வு நூல்கள்:
1. இஸ்லாமிய இனக்குழு மக்களின் வாழ்வியல் சடங்குகள் முதற் பதிப்பு(செப்டம்பர் 2004)
2. படைப்போர் இலக்கியங்களில் போர் நெறிமுறைகளும் கதைமாந்தர்களும் இரண்டாம் பதிப்பு(2007)
3. அந்திரயவனி படைப்போர் ஆய்வும் மூலமும் இரண்டாம் பதிப்பு(2007)
4. காசீம் படைப்போரும் காசீம் படைவெட்டும் இரண்டாம் பதிப்பு(2007)
5. இசுலாமிய படைப்போர் இலக்கியம் சமூக-சமயப் பண்பாட்டுக் கூறுகள் இரண்டாம் பதிப்பு(2007)
இளவழகன் பதிப்பகம், சுமன் வெளியீடு, தி பார்க்கர் ஆகியவை இவற்றை வெளியிட்டுள்ளன.
நன்றி: விருபா.காம்
அண்மையில் ஆ.இரா.வேங்கடாசலபதிக்குச் சாகித்திய அக்காதெமி விருது அளித்தபோதும் இத்தகைய எதிர்வினைகள் எழுந்தன. ஆய்வு நூலுக்கு விருதா? அபுனைவுக்கு அக்காதெமி விருதா? என்றெல்லாம் கேட்டிருந்தார்கள்.
எழுத்தாளருக்குத் தெளிவான வரையறைகள், எல்லைகள் கிடையாது. ஒரு புத்தகம் எழுதினாலும் ஒரு சிறுகதை எழுதினாலும் ஒரு கவிதை எழுதினாலும் அவர்களும் எழுத்தாளர்களே. உரையை எழுத்தாக்கினால் வாய்மொழிப் பாடகர்களும் கதைசொல்லிகளும் கூட எழுத்தாளர்கள் ஆகிவிடலாம். உள்ளடக்கம் தான் முக்கியமே தவிர, அவர் அதைக் கையால் எழுதினாரா, வாயால் சொன்னாரா என்பது கிடையாது. மகாபாரதமே சொல்லச் சொல்ல எழுதியது என்பர்.
பர்வீன் சுல்தானா எந்த வகையில் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதைத் தேர்வுக் குழுவினர் விளக்க வேண்டும் எனக் கேட்கலாம். அவர் எழுத்தாளரே கிடையாது என்பது அறிவுப்பூர்வமான வாதம் கிடையாது.