2024 ஒரு பின்னோக்கிய பார்வை
சக்தி சக்திதாசன்
லண்டன்
2024 எனும் உலகளாவிய நிகழ்வுகள் நிறைந்த ஒரு வருடம் அவசரமாக ஓடி இன்று அதன் அந்தத்தில் வந்து நிற்கிறது.
இவ்வருடப் பயணத்தில் நாம் கடந்து வந்த பயணத்தில் நடந்து வந்த பாதையைச் சற்று திரும்பிப் பார்க்கும் வேளையிது.
இன்றைய உலகின் மாற்றங்கள் உலகின் அமைதியை நோக்கிப் போகிறதா ? அன்றி பதட்டமான ஒரு சுழலுக்கு : ச் செல்கின்றதா ? என்பது ஒரு கேள்விக்குறியாகத் தொங்கிக் கொண்டேயிருக்கிறது.
இவ்வருடம் உலகின் கேந்திர முக்கியத்துவம் கொண்ட நாடுகளின் தேர்தல்களை உள்ளடக்கிய ஒரு வருடமாக அமைந்திருந்தது.
உலகப் பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய மேற்குலக நாடுகள் என கணிக்கப்படும் அமேரிக்கா , இங்கிலாந்து போன்ற நாடுகள் தேர்தல்களை எதிர்கொண்டன.
அதே போன்று தென்கிழக்கு ஆசிய துணைக் கண்டத்தின் கேந்திர முக்கியத்துவம் நிறைந்த இந்தியாவும் தேர்தலை எதிர் கொண்டது.
மேற்குறிப்பிட்ட நாடுகளின் அரசியல், பொருளாதார உதவிகளில் தங்கியிருந்த சிறீலங்காவும் தனது தேர்தலை எதிர்கொண்டது.
2024 யூலை மாதம் 4 ம் தேதி ஐக்கிய இராச்சியம் தனது தேர்தலை எதிர்கொண்டது.
பொருளாதார வீழ்ச்சி , வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பு என்பவற்றின் தாக்கங்களின் பிரதிபலிப்பாக 14 வருடங்கள் அரசாட்சியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வியடைந்தது.
மேற்குலக நாடுகளில் முதலாவது இந்தியப் பின்னனியைக் கொண்ட ஆசியப் பிரதமர் எனும் சாதனை படைத்த ரிஷி சுனாக் அவரது தலைமையின் கீழியங்கிய கன்சர்வேடிவ் கட்சியின் தேர்தல் படுதோல்வியைச் சந்தித்தார்.
இராமர் பதினான்கு வருடங்கள் கானக வாழ்க்கையை மேற்கொண்டது போல 14 வருடங்கள் எதிர்க்கட்சி ஸ்தானத்தில் அரசியல் கானகத்தில் சிக்கிய லேபர் கட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றது.
இத்தேர்தலில் தொழிற்கட்சி அடைந்த வெற்றி அவர்களால் பெறப்பட்டதா ? இல்லை அரசிலிருந்த கன்சர்வேடிவ் கட்சியின் மீது மக்கள் கொண்ட அதிருப்தியின் வெளிப்பாடா எனும் வாதம் இன்றும் அரசியல் அவதானிகள் மத்தியில் கேள்வியாகவே இருக்கிறது.
பிரதமராக பதிவியேற்ற கியர் ஸ்டாமர் இந்தப் 14 வருட அரசியல் கானஜ வரலாற்றில் தொழிற்கட்சி கண்ட மூன்றாவது தலைவராவார்.
ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் போக்கில் மாற்றத்தைக் கொண்டு வருவேன் எனும் உறுதியுடன் பதவிக்கு வந்த கியர் ஸ்டாமரின் நடவடிக்கைகள் மக்களுக்கு மாற்றத்தை விட ஏ”மாற்றத்தையே” கொடுத்திருக்கிறது போன்றதொரு தோற்றத்தையே கொடுத்திருக்கிறது.
மக்கள் என்னை விரும்ப வேண்டும் என்பதல்ல என் நோக்கம் , நாட்டினை வளப்படுத்துவதற்கு ஏற்ற அத்திவாரத்தைப் போடுவதே முக்கியம்.
இப்போது எனது கொள்கைகளை மதிப்பீடு செய்யாதீர்கள் நான் எடுக்கும் இந்த அடிப்படை மாற்றங்களின் மீது நாம் எழுப்பப்போகும் உறுதியான வளம் பலனளிக்கும் போது என்னை மதிப்பீடு செய்யுங்கள் என்கிறார் கியர் ஸ்டாமர்.
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.
அடுத்து இந்தியத் தேர்தல் வந்தது. பிரதமர் மோடிக்கு இணையான எதிர்கட்சிகள் இல்லை பிரதமர் மோடியின் பா.ஜா.கா அமோக வெற்றியீட்டப் போகிறது எனும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் தேர்தலின் முடிவு பிரதமர் மோடியின் கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருந்தாலும் தனியாக அரசமைக்கும் அதிகாரத்தை இழந்து கூட்டரசாங்கம் அமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கட்சி தி.மு.க அமோக வெற்றியீட்டி அவரின் செல்வாக்கை நிரூபித்தது.
உலக அரங்கில் இன்றைய பாரதம் மிக முக்கியமான ஒரு இடத்தை வகிக்கிறது.
இந்தியாவின் இந்த ஸ்தானத்தின் தாக்கங்களை இனிவரும் ஆண்டுதான் வெளிக்கொணரும்.
பொருகாதாரச் சிக்கல்களுக்குள் அழுந்தி அக சர்வதேச நாடுகளின் உதவியுடன் நிமிர்ந்த சிறீலங்காவின் தேர்தல் முடிவுகள் அனைவருக்குமே அதிர்ச்சி அளித்தன.
அரசமைக்கும் சந்தர்ப்பமே அற்ற கட்சி எனும் அபிப்பிராயதிற்குள்ளான ஜே.வி.பி ஏனைய இதர இடதுசாரக் கொள்கைக் கட்சிகளுடன் சேர்ந்தமைத்த தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளரான 56 வயதே ஆன அனுர குமார தேசநாயக்கா அமோஜ வெற்றியீட்டி சிறீலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதியாகப் பதவியேற்றார்.
அதைத்தொடர்ந்து நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி அமோக வெற்றியீட்டி அறுதிப் பெரும்பான்மையுடன் அரசமைத்தது .
இதிலே குறிப்பிட வேண்டிய விடயம் இலங்கையின் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆறு பாராளுமன்ற அங்கத்தினரில் மூவர் அரசாங்கக் கட்சியான என்.பி.பி ஐச் சேர்ந்தவர்கள் என்பதுவே.
முதன்முறையாகத் தமிழ் மக்கள் பழைய தமிழ் அரசிதல்வாதிகள் மீது நம்பிக்கையிழந்து புதிய ஐனாதிபதி தமக்கான தீர்வுகளைத் தருவார் என்று எதிர்பார்க்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பொதுவாகவே இலங்கைத் தீவின் மக்களின் மனோநிலையில் ஒரு மாற்றம் தென்படுகிறது.
ஊழலை ஒழிப்பேன் எனும் கோஷத்தை முன்வைத்த அநுர குமார திசநாயக்கவின் அரசியல் மாற்றம் எனும்.வாதத்தை ஏற்று மக்கள் புதியதோர் இளம் தலைமுறையினரிடம் பொறுப்பை ஒப்படைத்திருப்பது போல் தெரிகிறது.
இது தமிழர் பிரதேசங்களிலும் எதிரொலித்திருப்பதுதான் ஆச்சரியம்.
அருச்சுனா இராமநாதன் எனும் ஒரு சுனாமி தமிழர் பிரதேசங்களினுள் புகுந்து ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவது போல் தெரிகிறது.
இம்மாற்றம் நேர்மறையானதா ? எதிர்மறையானதா ? என்பதை எதிர்வரும் வருடம் தான் க வேண்டும்.
இங்கும் பொறுமைதான் எமக்குத் தேவைப்படுகிறது.
புதிய அரசின் செயற்பாடுகளின் போக்கை அவதானிப்பது ஒன்றே இப்போதைக்கு செய்யக்கூடியது.
அடுத்து வந்ததோ மிகப்பெரிய மாற்றம். ஆம் அமெரிக்க நாட்டின் ஐனாதிபதிக்கான தேர்தலின் முடிவு பலருக்கு வித்தியாச உணர்வுகளுடனான அதிர்ச்சியை அளித்திருக்கின்றது.
ஐனநாயகக் கட்சியின் வேட்பாளர் தற்போதைய ஐனாதிபதி ஜோ பைடன் மீண்டும் தேர்தலில் குதிக்கிறேன் என்று ஆரம்பித்தார்.
அவருக்கெதிராக சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக சர்ச்சைக்குரிய ட்ரம்ப் அவர்கள் போட்டியில் இறங்கினார்.
இருவர்களுக்குமிடையிலான முதலாவது தொலைக்காட்சி நேரடி விவாதத்தில் ஜோ பைடன் சறுக்க அவரின் உதவி ஐனாதிபதியான இந்தியப் பின்னனியைக் கொண்ட கமலா ஹரிஸ் போட்டியில் இறங்கினார்.
மிகவும் இறுக்கமான யார் வெல்லுவார்கள் என்று கணிக்க முடியாத தேர்தல் என்று சொல்லப்பட்ட தேர்தல் முடிவுகள் ட்ரம்பிற்கு அதீத வெற்றியைக் கொடுத்தது.
விளைவு !
வருகின்ற ஐனவரி 20ம் தேதி ட்ரம்ப் அவர்கள் அமேரிக்க நாட்டின் 48 வது ஐனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
ஐனாதிபதியாஜ ட்ரம்ப் பதவியேற்பது பலரின் வயிற்றில் புளியைக் கரைப்பதாகவும், சிலருக்கு சர்க்கரையை வாயில் போட்டதாகவும் உணர்வுகளைக் கொடுத்திருக்கின்றது.
ரஸ்ய நாட்டின் அதிபர் , சீன நாட்டின் அதிபர், வட கொரிய நாட்டின் அதிபர் ஆகியோருக்கு ட்ரம்ப் வருகை ஆறுதலைதளிக்கும்.
ஏனைய பல நாடுகள் இவரது அரசியல் வருகையை மிகவும் எச்சரிக்கையுடன் அணுகுகின்றன.
தனது தேர்தல் பிரசாரங்களில் வேளைக்கு வேளை பல முரணட்ட கருத்துகளை முன் வைத்தவர் ட்ரம்ப்.
பதிவிக் கதிரையில் அமர்ந்ததும் எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகிறார் என்பது 2025 இல் தான் வெளிச்சமாகும்.
நிறவேற்று துவேஷத்துக்கு தூபமிடுபவர் ட்ரம்ப் எனும் கருத்து பலரின் மத்தியில் நிலவுகிறது.
தனது அரசமைப்பில் ஆறு இந்தியப் பின்னனி கொண்டவர்களுக்கு இடமளித்திருப்பது இவர் மீதான மேற்கூறிய விமர்சனத்தை கேள்விக்குறியாக்குகிறது.
வெளிநாட்டவர் அமேரிக்க நாட்டில் குடியேறுவதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை தனது முக்கித கொள்கையாகக் கொண்டுள்ள இவரின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை 2025 வெளுக்க வைக்குமா ?
பொறுத்திருந்துதான் பார்ப்போமே !
இந்த உலகத்தின் சுழற்சியில் எத்தனையோ மாற்றங்கள் ?
காலநிலை மாற்றங்கள் , இயந்திர முறை மாற்றங்கள், கலாச்சார மாற்றங்கள் என அவசரமான துரிதகதியில் இம்மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.
காலநிலை மாற்றங்களுக்கு மனிதராகிய நாம் இயற்கைச் சீரழிவை மேற்கொள்ளுவதே காரணம் என்றொரு விஞ்ஞான அறிக்கை கூறுகிறது.
ஆனால் இல்லை இது இயற்கையாகவே இப்பூமியின் சுழற்சியால் ஏற்படுவது இதற்கு மனிதரின் நடவடிக்கைகள் காரணமில்லை என்பது ஒரு சாராரின் வாதம்.
எது எப்படியிருப்பினும் நாம் வாழும் சூழலின் காலநிலை மாறனடைந்திருக்கிறது என்பது நாம் கண்கூடாகக் காணும் உண்மை.
இதனை எப்படிக் கையாளுவது என்பதற்காக வருடாவருடம் சர்வதேச நாடுகள் கூடி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கான உடன்படிக்கைகளை ஏற்படுத்துகின்றன.
இம்மாற்றங்ககைத் தடுக்கும் முயற்சி சரியான திசையில் செல்கிறதா என்பது சந்தேகமே !
கடந்த வருடத்தின் தேர்தல்களை ஒருபுறம் தள்ளுவோம் , காலநிலை மாறங்களைக்கூட ஒருபுறம் தள்ளுவோம் ஆனால் நாகரீக உலகு என்று சொல்லிக் கொள்ளும் நாம் வெறும் மண்ணாசைக்காக ஆயிரமாயிரம் உயிர்களைக் காசு கொள்ளும் செயல் பக இடங்களில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
ஊக்ரேன் ரஸ்யா ஐரோப்பிய சூழலில் கொன்றொழிக்கும் உயிர்கள் .
மத்திய கிழக்கு நாடுகளில் பாலஸ்தீனிய மக்களின் உரிமைக்கான போராட்டமும் அதனை அடக்குகிறோம் எனும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களும் அபகுதியைத் தீராத புகை.மண்டலத்தினுள் அமிழ்த்திக் கொண்டிருக்கின்றன.
உயிரிழந்து, வீடிழந்து , நாடிழந்து துடித்துக் கொண்டிருக்கும் மக்களின் அழுகுரல் ஒருபுறமும், கைதிகளாக பாகஸ்தினியர்களின் உரிமைப்போர் எனும் பார்வையில், அரபு தீவிரவாத அமைப்புகள் கடத்திச் சென்றவர்களின் நிலையறியாமல் ஓலமிடுவோர் ஒருபுறமுமாக காணும் அவலக் காட்சிகள்.
உயிரழிவைத் தடுக்க ஏதாவது நடவடிக்கைகள் எடுப்பார்களா என சர்வதேச சமூகத்தை எதிர்பார்த்து ஏமாறும் ஒரு நிலை.
இந்தக் கட்டத்தில் தான் தான் பதவியேற்று 24 மணி நேரத்தில் போர்களை நிறுத்துவேன் என்று சூளுரைத்த ட்ரம்பின் தேர்தல் வெற்றி எவ்வகை மாறத்தைக் கொண்டு வரப் போகிறது என்று சமாதானத்தை விரும்பும் அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.
இதற்கான தீர்வையும் 2025 தனக்குள் புதைத்து வைத்திருக்கிறதோ ?
இங்கிலாந்திலே 50 வருடங்களை எட்டிப்பிடிக்கப் போகும் எனக்கு இங்கிலாந்து அரச குடும்பத்தினர் ஏதோ உறவினர்களைப் போல தென்படுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஐக்கிய இராச்சியத்தின் அரசரான சார்ள்ஸ் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்வில் பல அதிமுக்கிய பிரச்சனைகள் தோன்றின.
அரசரான சார்ள்ஸ் அவர்கள் புரஸ்ட்ரேட் கான்சர் வியாதியால் தாக்கப்பட்டார்.
தெய்வாதீனமாக அவருக்கு தகுந்த சமயத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் குணமடைந்து வருகிறார். இன்பமும் சிகிச்சை முடிவடையவில்லை.
அதேநேரம் அரசரின் மருமகளும் முடிக்குரிய இளவரசருமான வில்லியம் அவர்களின் மனைவி கத்தரீன் வயிறு சம்மந்தப்பட்ட புற்றுநோயால் தாக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார். தற்போது அவரது சிகிச்சைகள் நிறைவுற்றதாகக் கூறப்படுகிறது.
எப்போதும் அதிக அளவில் சர்ச்சைகளுக்குள் அகப்பட்டுக் கொள்பவர் அரசரின் தம்பி இளவரசர் அண்ட்ரூ.
சர்ச்சைகள் அனைத்தையும் ஓரளவு கடந்து விட்டார் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் கிறிஸ்துமஸ் சமயத்தில் புது சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டார்.
இவருடன் நெருக்கமாகப் பழகி வந்த ஒரு சீன செல்வந்தர் சீன அரசாங்கத்துக்காக உளவு பார்பவர் என்று இங்கிலாந்தின் இரகசிய உளவுத்துறை கண்டுபிடித்தது.
இத்தகைய நஅர் ஒருவரை இங்கிலாந்தின் அரச பரம்பரையின் இரகசியங்களுக்கு அண்மையில் நடமாடக் காரணமாயிருந்தார் என்று அவர்மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இவருக்கூடாக முன்னைய பிரதமர்களாக இருந்த டேவிட் கமரன், திரேஸா மே போன்றோருக்கு நெருக்கமாக இந்தச் சீன நபர் நடமாடியுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.
பொதுவாகவே 2924 இங்கிலாந்துக்கு அரசியல், பொருளாதாரம் , மக்களின் வாழ்வாதாரம் என்பனவற்றில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
மாற்றத்தை எதிர்பார்த்தோ அன்றி அரசின் மீதிருந்த அதிருப்தியின் காரணமாகவோ மக்கள் அதிகப் பெருபான்மை வாக்களித்து லேபர் கட்சியை அரசில் அமர்த்தியிருக்கிறார்கள் .
ஆனால் பதவியில் அமர்ந்து முதலாவது பட்ஜெட்டிலேயே ஓய்வூதியக்காரர்களின் சலூகைகள் மீது கையை வைத்து கடும் எதிர்ப்புள்ளாகியிருக்கிறார்கள்.
தாம் எதிர்பார்க்காத அளவில் பொருளாதாரச் சிக்கல்களை முந்தைய அரசாங்கம் கையளித்த காரணமே தாம் இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தது எனது அவர்களது விளக்கம்.
இதற்கான உண்மைகளும் , இவர்களின் நடவடிக்கைகளின் தாக்கத்தையும் 2025 இல் காண முடியும் என்பதே கேள்வி.
எனது பின்புல நாடான சிறீலங்காவில் எனது சோதரர்களின் நீண்டகால உரிமைகளுக்கான ஓலத்தை பல எதிர்பார்ப்புகளுடன் பதவிக்கு வந்த அநுர அரசு தீர்த்து வைக்குமா என்பதும் 2025க்கே வெளிச்சம்.
எதிர்பார்ப்புகளோ ஓராயிரம் ஏமாற்றமா? இல்லை திருப்தியா விடைகாண அவலுடன் நுழைவோம் 2025க்குள் வாருங்கள்.