சச்சி – 84 | மறவன்புலவு க. சச்சிதானந்தன் நீடூழி வாழ்க!
அண்ணாகண்ணன்
உலகத் தமிழர், தமிழறிஞர், பதிப்பகச் செம்மல், திருமுறைச் செல்வர், அன்பிற் சிறந்த சான்றோர் மறவன்புலவு க. சச்சிதானந்தன், கார்த்திகை மாதம், மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர். நட்சத்திரப்படி அவருக்கு, 15.12.2024 அன்று 84ஆவது பிறந்த நாள்.
நுண்மாண் நுழைபுலம் மிக்க ஈழத் தமிழறிஞர்; ஐ.நா. உணவு – வேளாண் கழக முன்னாள் ஆலோசகர்; இலங்கையில் சிவசேனை அமைப்பை நிறுவியவர்; காந்தளகம் பதிப்பகத் தலைவர்; தனித்துவம் மிக்க தமிழ்நூல்.காம், தேவாரம்.ஆர்க் தளங்களின் நிறுவனர் – வழிகாட்டி – காப்பாளர்; தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்குத் தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கிட முக்கிய காரணர்களுள் ஒருவர்… எனப் பற்பல பெருமைகளுக்கு உரியவர், நம் சச்சிதானந்தன்.
ஆஸ்திரேலியாவில் பொங்கல் திருநாள் அன்று சச்சியை உரையாற்ற அழைத்தார்கள். புலம்பெயர் இளையோர் நிறைந்த அந்த அவையில் இவர் ஆற்றிய உரையின் தலைப்பு: The Photosynthesis Day என்பதாகும். இத்தகைய அறிவியல் கண்ணோட்டம் கொண்டவர், இவர்.
ஒளி அச்சுக் கோப்பு, நிலவரை என்ற கலைச் சொற்களைப் புதிய பொருளுடன் அறிமுகப்படுத்தியவர்; 60 நாடுகளுக்கும் மேல் பயணித்தவர்; இலங்கை அரசியல் நிகழ்வுகளின் நோக்கர்; சேது சமுத்திரத் திட்டம் என்கிற தமிழன் கால்வாய்த் திட்டத்தைப் பல முனைகளுக்கும் எடுத்துச் சென்ற கடலியல் வல்லுநர்; தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்துத் தொடங்குவதற்கு அடிகோலியவர்.
தமிழில் காசோலைகளை எழுதி, அதை ஏற்காத வங்கிகளுடன் சட்டப்பூர்வ – தனி நபர்ப் போராட்டங்களை நடத்தியவர். தமிழால் அனைத்தும் முடியும் என்பதை நிலைநாட்டும் வண்ணம் செயலாற்றி வருகிறார். தமிழையும் சைவத்தையும் தம் இரு கண்களாகக் கொண்டவர்.
எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகுவதில் இவர், சிறந்த முன்மாதிரி. புதிய சிந்தனைகள், ஆக்கப்பூர்வ செயல்திட்டங்கள், பொருள் செறிந்த நுணுக்கமான மொழி நடை… ஆகியவற்றுடன் மகத்தான ஆளுமையாக நம் முன் நிற்கிறார். செய்யும் அனைத்தையும் செவ்வனே செய்யும் ஐயாவின் ஆற்றலைத் தமிழுலகம் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும்,
தமிழுக்காக அளப்பரிய தொண்டாற்றும் சச்சி ஐயா, நீடூழி வாழ்க!