குறளின் கதிர்களாய்…(509)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(509)
பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோ
ரெழுபது கோடி தலை.
– திருக்குறள் – 639 (அமைச்சு)
புதுக் கவிதையில்…
அருகில் இருந்தே
அரசனுக்குத்
தவறான வழிகளைக் காட்டி
அவன் பெயருக்குப்
பழுதுண்டாக்க எண்ணும்
அமைச்சனை விட
எழுபது கோடிப்
பகைவர்
பக்கத்தில் இருந்தாலும்,
அவர்கள்
நல்லவராவரே…!
குறும்பாவில்…
அருகிருந்து தவவறான வழிகாட்டி
அரசர் புகழைக் கெடுக்கும் அமைச்சனைவிட
எழுபதுகோடிப் பகைவர் மேலே…!
மரபுக் கவிதையில்…
அருகே யிருந்தே அல்வழியை
அரசர் தமக்கே உரைத்தவர்தம்
பெருமை தனையே கெடுக்கின்ற
பேதை அமைச்சன் தனைவிடவும்
வருத்தும் கோடி எழுபதாக
வந்தே எதிர்க்கும் வயவரெலாம்
உருவில் பகைவர் தானெனினும்
உண்மை நெறியில் உயர்ந்தோரே…!
லிமரைக்கூ…
பழிவர அரசர் பாலே
வழிகாட்டிப் பக்கமிருக்கும் தீயமைச்சனைவிடப் பகைவர்
எழுபது கோடியும் மேலே…!
கிராமிய பாணியில்…
இருக்கணும் இருக்கணும்
நல்லவனா இருக்கணும்,
ராசாவுக்கு மந்திரி
ரெம்ப நல்லவனா இருக்கணும்..
ராசாவோட
பக்கத்தில இருந்துக்கிட்டே
அவரோட பேருக்குப
பழுது வாறமாதிரி
வழிகாட்டுற
கேடுகெட்ட மந்திரியவெடவும்,
எதுத்து நிக்கிற
எழுவது கோடிப் பகயாளியும்
எவ்வுளவோ ஒசத்திதான்..
அதால
இருக்கணும் இருக்கணும்
நல்லவனா இருக்கணும்,
ராசாவுக்கு மந்திரி
ரெம்ப நல்லவனா இருக்கணும்…!