அண்ணாகண்ணன்

தமிழக – கேரள எல்லையில், ராமக்கல்மேடு என்ற கிராமத்தில் உள்ள குறவன் – குறத்தி சிலையை அமுதா ஹரிஹரன் படம் எடுத்தார். அதை நமது படக் கவிதைப் போட்டிக்குச் சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்தார். இந்தப் பொருள் பொதிந்த படத்துக்கு வல்லமை அன்பர்கள், நயமான கவிதைகளைப் படைத்துள்ளனர்.

Amutha Hariharan's photo of Kuravan Kurathi Statue

சிலையாய் அமர்ந்துள்ள இணையர், எதிரே பசுமை போர்த்திய மலைத் தொடர், மேலே வெண் மேகம் தவழும் நீல வானம் என ஒரு வளமான காட்சி, திறமான படைப்புகளுக்குச் சரியான தீனி. இருவர் ஏன் சிலையாக அமர்ந்துள்ளனர் என்ற தேடல், விதவிதமான கற்பனைகளைத் தூண்டி விட்டுள்ளது. இதற்கு ஜெயபாரதனும் எஸ்.பழனிச்சாமியும் ஜெயஸ்ரீ ஷங்கரும் புனிதா கணேசனும் வடித்த பின்கதைகள் நன்று. இவை, காவியமாக விரித்துரைக்கும் வாய்ப்பினைக் கொண்டவை.

ஊடும் பாவுமாக விரவிச் செல்லும் இந்த வண்ண வரிகளுள் சில, சட்டென்று என்னை ஈர்த்தன.

கலை தவழும் மலை
மலை தழுவும் முகில்
இவற்றோடு
காதல் தலைவி தலைவனாய்
நீயும் நானும்!

எனக் கிரேஸ் பிரதிபாவும்

மெல்ல கேசம் வருடும்
மேகக் காதலனின் காதில்
கிசுகிசுக்கிறாளோ –
மரகதப் பட்டுடுத்திய
மலை மங்கை?

எனத் தமிழ் முகிலும்

அன்பு நிறைந்த ஏகாந்த பூமியிது
ஆசைக் கண்கள் தாலாட்டிய பூமியிது
காலச் சுழற்சி, காதல் மலர்ச்சி
பிறவிகள் வேண்டும்

என ஜெயஸ்ரீ ஷங்கரும்

நீலவான் நிலத்தை நோக்க
நிலம்நாணி வானை நோக்க
காலனே நீயும் எம்மை
கணக்கினில் கொள்ளும் முன்னம்
ஞாலமே வியக்கும் வண்ணம்
நாமிங்கு சிலைகள் ஆனோம்!

என ஜெயராம சர்மாவும்

கனிவுறு காதலில் கல்லானோம்
இனியொரு பிறவியில் இணைவோமா?
அந்த வானமும் இந்த பூமியும் போலே
எந்த போழ்திலும் சேர்ந்தேயிருப்போமா?

எனப் புனிதா கணேசனும்

ஊனுயிராய் உலவிக் கலக்கும்
ஊன்றுகோல்! அன்பு ஊற்று!
உன்னதம்! காதல் இறைமை!
இத்தேடல் பிரபஞ்ச மயக்கம்!
இவ்வாடல் உலக இயக்கம்!

எனப் பா.வானதி வேதா. இலங்காதிலகமும்

நிலையா உலகில் நிலைபெறவே
நினைவுச் சின்ன நிலையானார்,
கலையே ஈதெனப் பார்த்தாலும்
காதல் சிலையெனச் சேர்த்தாலும்,
விலையெனச் சொல்ல ஏதுமில்லை
வென்றே நிற்கும் காலத்தையே…!

எனச் செண்பக ஜெகதீசனும்

இவர்கள்
எதுவும் இல்லாதிருந்தபோது
எல்லாமும் பெற்றிருந்தனர்
எல்லாமும் கிடைத்தபோது
எதையோ இழந்து நிற்கின்றனர்!

எனக் கொ.வை அரங்கநாதனும் தீட்டிய வரிகள், என் ரசனைக்கு விருந்து படைத்தன.

எனினும் ஒரு முழுமையான கவிதை என்ற அளவில் பார்க்கிற போது, சங்கர் சுப்பிரமணியனின் இந்தக் கவிதை என்னைப் பெரிதும் கவர்ந்தது.

இதுவரை
அறிந்திராத மொழியும்
தீண்டலில் கரையும்
புரியாத உணர்வுகளும் என
பக்கமிருப்பிலே
தூரமாகி போகிறது
நாம் காணும் உலகம்

மின்னும் நட்சத்திரம்
காற்றினில் தவழ்ந்து வந்து
நம்மை தழுவும் இசை
உருகும் பனி
பச்சை புல்வெளி
பார்த்த பரவசம் என
மீளா கணங்களில்
முன்னம் விரியுது
இதுவரை நாம்
பார்த்திராத உலகம்

நாம் கற்சிலையான
தருணத்திலும்
தீராத நம் பேச்சினில்
கிளர்ந்தெழும் உணர்வுகளால்
கலைத்து போகிறது
கடந்து போகும் மேகமும்
சுற்றி வரும் சூரியனும்

இதில் ஒற்றுப் பிழைகள், ஒருமை / பன்மைப் பிழை, தட்டுப் பிழை (கலைத்து / களைத்து), நிறுத்தற்குறியின்மை ஆகியன இருந்தும் இதன் கவித்துவம், தனித்துவமானது. கற்சிலையான பிறகும் தீராத பேச்சு எது? பேசுவது வாயா, விழியா, விரலா, மனமா, ஆன்மாவா என விரிப்பது ஒரு நிலை என்றால், அந்தப் பேச்சினால் கிளர்ந்தெழும் உணர்வுகள், சுற்றி வரும் சூரியனையும் கடந்த போகும் மேகத்தையும் களைப்படையச் செய்கின்றன எனில் அதன் விரிவும் தீவிரமும் சலியாத அன்பும் அலாதியான இன்பமும் சொல்லில் வடிக்க இயலாதவை. தகுதி மிக்க இந்தக் கவிதைக்காகச் சங்கர் சுப்பிரமணியன் அவர்களை இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கிறேன்.

ஏற்க மறுத்தாரோ ஏங்கிட வைத்தாரோ
தோற்க மனமின்றி தோழமையாய் – வீற்றிருப்பீர்
கற்சிலையாய் குன்றின்மேல், காலங் கனிந்துவரும்
வற்றிடா அன்பே மருந்து

எனக் காதலை ஏற்கும் வரை கற்சிலையாய்க் காத்திருக்கும் இணையரைப் படைத்த சியாமளா ராஜசேகர் அவர்களை இந்த வாரத்தின் குறிப்பிடத்தக்க கவிஞராகத் தேர்ந்தெடுக்கிறேன்.

சங்கர் சுப்பிரமணியன், சியாமளா ராஜசேகர் ஆகியோருக்கு எனது பாராட்டுகள். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “படக் கவிதைப் போட்டி – 5இன் முடிவுகள்

 1. வெற்றி பெற்ற   சங்கர் சுப்ரமணியன் ,சியாமளா ராஜசேகர் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்–சரஸ்வதி ராசேந்திரன்

 2. என் மதிப்பிற்குரிய அண்ணா கண்ணன் அவர்களிடம் பாராட்டு என்பது எனக்கு கிடைத்தற்கறியா வெகுமதியாகத்தான் தோன்றுகிறது . அதுவும் வல்லமையில் நடந்தது எனக்கு இன்னும் மகிழ்ச்சியான சம்பவம் .நன்றிகள் வல்லமை குழுவின் ஆசிரியர் குழுவுக்கும் அண்ணா கண்ணன் அவர்களும் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும்

 3. இவ்வாரத்தின் சிறந்த கவிஞர்கள்,
  பாராட்டுக்குரிய சங்கர் சுப்பிரமணியன், சியாமளா ராஜசேகர் ஆகியோருக்கும்,
  பாராட்டு பெற்றோருக்கும் வாழ்ததுக்கள்..
  என் கவிதையையும் குறிப்பிட்ட அண்ணா கண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி…!

 4. கவிஞர்கள் சங்கர் சுப்ரமணியன் மற்றும் சியாமளா இராஜசேகர் இருவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

  எனது கவிதையையும் இங்கு குறிப்பிட்டு கூறிய ஆசிரியர் அண்ணா கண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

 5. நீலவான் நிலத்தை நோக்க
  நிலம்நாணி வானை நோக்க
  காலனே நீயும் எம்மை
  கணக்கினில் கொள்ளும் முன்னம்
  ஞாலமே வியக்கும் வண்ணம்
  நாமிங்கு சிலைகள் ஆனோம்!

      இந்தக்கவிதயினை நயந்து அதனைப் பாராட்டியமைக்கும்
  அண்ணா கண்ணன் அவர்களுக்கு எனது மனமுவந்த நன்றியை
  நவில்கின்றேன்.
     எம். ஜெயராமசர்மா.

 6. வல்லமையில் என் முதல் படைப்பே பாராட்டு பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி ! வாழ்த்து சொன்ன அனைவருக்கும் மனமார்ந்த நன்றி ! திரு. அண்ணா கண்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.