Featuredஇலக்கியம்கட்டுரைகள்

லீ குவான் யூ

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

இலங்கைத் தமிழரின் இடரைப் புரிந்த உலகத் தலைவர்களுள், 30 ஆண்டுகள் சிங்கப்பூர் தலைமை அமைச்சராக இருந்த லீ குவான் யூ முதலிடம் வகிக்கிறார்.

asg1
சிங்கப்பூரில் பிறந்த மூன்றாவது தலைமுறைச் சீனரான அவர் சிங்கப்பூர் வாழ் இலங்கைத் தமிழர்களுடன் நல்லுறவுகளைப் பேணியவர். சிங்கப்பூரின் மக்கள் செயல் கட்சியைத் (PAP) தொடங்கிய காலத்தில் அவரது உற்ற நண்பர் மலேசியாவில் பிறந்த இரண்டாவது தலைமுறை யாழ்ப்பாணத்தவர் ச. இராசரத்தினம்.

இலங்கைத் தமிழர், படித்தோர், கடுமையாக உழைப்போர், பெரிதும் ஏமாற்றார், வெளிப்படையாகப் பேசுவோர், அடையாளங்களைக் கைவிடாதோர் என்ற கருத்து மலேசியவிலும் சிங்கப்பூரிலும் வாழும் சீனரின் கருத்து. லீ குவான் யூ சீனர், எனவே விதிவிலக்கானவரல்லர்.

இலங்கைத் தமிழரை எந்தக் கொம்பனாலும் அடக்கி, அழித்துவிட முடியாது என லீ குவான் யூ தன் கடைசிக்காலம் வரை சொல்லிக்கொண்டிருந்தார்.

asg

குடிமகன் ஒருவருக்குத் தேர்தலில் ஒரு வாக்கு என்ற முறை இலங்கையில் இனச்சிக்கலை வளர்த்தது. பெரும்பான்மையான 80 இலட்சம் சிங்களவர் சிறுபான்மையினரான 20 இலட்சம் தமிழரை எப்பொழுதும் இத்தகைய வாக்களிப்பு முறையால் ஓரங்கட்டுவர். சிங்களத்தை ஆட்சிமொழியாக்கித் ஆட்சியில் தமிழரின் பங்களிப்பைத் தடுத்த சிங்களவர், மதச்சார்பற்ற நிலையை மாற்றிப் புத்த மதத்துக்கு அரசில் முன்னுரிமை கொடுத்தனர். இந்துக்களான தமிழர் இந்த நிலையை ஏற்க மறுத்தனர். இந்தக் கொடுமைகள் தமிழர்களைத் தம் நாட்டிலேயே அந்நியர்களாக்கின. வளர்ச்சிக்குரிய நாடாகிய இலங்கை வீழ்ச்சியை நோக்கிப் போவதை நான் பார்த்துக்கொண்டே இருந்து வருகிறேன் என, நினைவலைகள் என்ற தன் நூலில் குறிப்பிட்டுள்ளார் லீ குவான் யூ. Excerpts from: “From Third World To First – The Singapore Story: 1965-2000” “Memoirs of Lee Kuan Yew” (October 2000)

asg2

சிங்களத் தலைவர்களோடு ஒப்பிடுகையில், சிங்கப்பூரைப் பிரித்துக் கொடுத்துத் தனிநாடாக்கிய துங்கு அப்துல் இரகுமான் அரசியலில் கில்லாடி எனப் பாராட்டியவர் லீ குவான் யூ.

1956இல் இலங்கைக்கு முதன்முகலாக வந்த லீ குவான் யூ, சிங்கப்பூரை விட இலங்கை பன்மடங்கு வளமாக இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் அரசியல் தலைமையின் சீர்கேட்டால் இலங்கை பாழடைந்ததைக் கண்டு பிற்காலத்தில் வருந்தினார்.

செயவர்த்தானாவிடம் பலமுறை பேசினேன். தமிழருக்குச் சுயாட்சி வழங்குமாறு கேட்டேன். பிரேமதாசாவிடமும் இதைப் பலமுறை கூறியிருக்கிறேன்.

இந்தியப் படையைத் திருப்பி அனுப்பிய தவறைச் செய்த பிரமதாசா, தமிழ்ப் பகுதிகளுக்குச் சுயாட்சி கொடுக்க மறுத்தார். இதனால் தமிழர் விடுதலைக் கூட்டணி வலுவிழந்தது. விடுதலைப் புலிகளை வளர்த்தவர் பிரேமதாசா. அவரே தற்கொலைப்படைத் தாக்குதலில் உயிரிழந்தார்.

விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதால் இலங்கையில் தமிழர் சிக்கலைத் தீர்ரதுவிட்டதாக இராசபட்சா நம்புகிறார். மற்றவர்களும் அவ்வாறே நம்பவேண்டும் எனக் கருதுகிறார். இலங்கைத் தமிழரை அடக்கி ஒடுக்கமுடியும் என நான் நம்பவில்லை. அவர்களது உரிமைப் போரை அவர்கள் கைவிடவே மாட்டார்கள். இராசபட்சாவின் உரைகளைப் படித்திருக்கிறேன். அவர் சிங்களத் தீவிரவாதி. அவரது அந்த மன நிலையை என்னால் மாற்ற முடியாது என 2010இல் தொம் பிளேடர் என்ற அமெரிக்க ஊடகருக்குக் கூறினார். Conversations with Lee Kuan Yew (2010), by Tom Plate, an American columnist, published by Marshall Cavendish on Giants Of Asia.

அவரவர் செயல்களின் விளைவுகளை அவரவரே அநுபவிப்பார். இலங்கைத் தீவு வளமான நிலப்பகுதி. ஆங்கிலேயரின் ஆட்சியில் செல்வந்த நாடாக இருந்த தீவு. சிங்களவர்களின் கொடுமை நோக்கும் தலைமையால் வளம் குன்றி, வலிவு நீங்கி, இழிவும் வறுமையும் மேலோங்கிய நாடாகியுள்ளதே எனப் பலரிடம் வீ குவான் யூ வருத்தப்பட்டிருக்கிறார்.

1950 தொடக்கம் இந்தியாவில் அரசியலமைப்பு அட்டவணை மொழிகளுள் தமிழ் ஒன்று. இலங்கையில்
1988க்குப் பின்னர் தமிழும் ஆட்சி மொழி. உம் விகுதியை நோக்குக. வேறெந்த நாட்டிலும் தமிழுக்கு அரச ஏற்பு நிலை இல்லை.

ஆனால் சிங்கப்பூரில் 1965 தொடக்கம் நான்கு தேசிய மொழிகளுள் தமிழ் ஒன்று. நடைமுறை மொழி தமிழ். அரசின் செயல் மொழி ஆங்கிலமானாலும் தமிழர் தமிழில் தொடர்பு கொண்டு தமிழிலேயே அரசிடமிருந்து பதிலைப் பெறலாம். கல்வியில் வணிகத்தில் அறிவிப்புகளில், நாடாளுமன்றத்தில் ஏனையமூன்று மொழிகளுக்குச் (சீனம், மலாய், ஆங்கிலம்) சமமான இடத்தில் தமிழ்.

திறமைக்கே முதலிடம். இனத்துக்கோ, மதத்துக்கோ, மொழிக்கோ முன்னுரிமை இல்லை. திறமையான தமிழர் பலர் சிங்கப்பூர் அமைச்சரவையில் தொடர்ந்து உறுப்பினராக உள்ளனர்.

சின்னத்தம்பி இராசரத்தினம் (1915–2006) துணைப் பிரதமர், வெளிநாட்டமைச்சர், பண்பாட்டமைச்சர், மூத்த அமைச்சர். 1952இல் முதன் முதலாக லீ குவான் யூவைச் சந்திக்கிறார் இராசரத்தினம். இறுதிக் காலம் வரை சிங்கப்பூரைக் கட்டியெழுப்பிவதில் இருவரும் இணைந்து பணி புரிகின்றனர்.

சுப்பையா தனபாலன் (1937– ) வணிக, தொழில்வள, தேசிய வளர்ச்சி அமைச்சர், வெளிநாட்டமைச்சர்அமைச்சர், பிரதமருக்கான தன் வாரிச என லீ குவான் யூ அறிவித்தும் ஏற்க மறுத்த தமிழர்.

சண்முகம் செயக்குமார் (1939– ) தேசியப் பாதுகாப்பு, சட்டம், தொழிலாளர், உள்நாடு, வெளிநாடு அமைச்சர். ஐநா பிரதிநிதி.
தர்மன் சண்முகரத்தினம், துணைப் பிரதமர், கல்வி, நிதி அமைச்சர்.

விவியன் பாலகிருட்டிணன், சமூக வளர்ச்சி, இளைஞர், விளையாட்டு அமைச்சர்
க. சண்முகம், சட்ட மற்றும் வெளிநாடு அமைச்சர்.

ச. ஈசுவரன், பிரதமர் அவுவலகம் மற்றும் உள்நாடு அமைச்சர்.
பாலாசி சதாசிவன், வெளிநாடு இணை அமைச்சர்
பெஞ்சமின் செயரத்தினம், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்.
நாதன், குடியரசுத் தலைவர்
குமாரசுவாமி, நாடாளுமன்ற அவைத் தலைவர்.
இவ்வாறாக, லீ குவான் யூ கட்டியெழுப்பிய சிங்கப்பூர், தமிழுக்குத் தேசிய நிலை கொடுத்த முதல் அரசு. திறமையுள்ள தமிழர் பிரதமராகலாம் என வாய்ப்பளித்த நாடு. ஏராளமான தமிழர்களைத் திறமைக்காககப் போற்றிய நாடு. ஈழத் தமிழரின் நிலை உணர்ந்து பேசிய லீ குவான் யூவைத் தந்த நாடு.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க